"சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல்.'

வாழ்நாளில் பயனுள்ள சொற்களையே பேசவேண்டும். பயனில்லாத வீண் சொற்கள், வன்சொற்களை எப்பொழுதும் பேசக்கூடாது என்பது இதன்பொருள்.

கண்ணம்பாளையம் கிராமத்தில் கோவிந்தன் என்பவர் கொடிய நோயால் அவதிப்பட்டார். அவரைப் பார்க்க ஆன்மிக குரு ஒருவர் வந்தார். உடலும் மனமும் சோர்ந்துபோயிருந்த கோவிந்தனைக் கண்டதும், "பிரார்த்தனை செய்தால் நலம்பெறுவாய்' என்று கூறி மனமுருக வேண்டினார். கோவிந்தனின் நண்பர்களும் உறவினர்களும் அதில் பங்கேற்றனர். பிரார்த்தனை முடிவில், ""அருள் பேராற்றலின் கருணையால் நோய் குணமாகிவிடும்; இத்தனைப் பேரும் பிரார்த்தனை செய்துள்ளோம்; கவலைப்பட வேண்டாம்'' என நம்பிக்கையூட்டினார் குரு.

Advertisment

vv

அப்போது அங்கிருந்த நரேந்திரன் என்பவன், ""என்ன உளறுகிறீர்? வெறும் வார்த்தைகள் நோயை குணமாக்கிவிடுமா? இப்படிச் சொல்லி ஏமாற்ற முயற்சிக்கவேண்டாம்'' என்று கூறி அலட்சியமாக சிரித்தான். இதைக்கேட்ட குரு, ""இங்கிருப்பவர்களிலேயே மூடன் என்றால்... அது நீதான்...'' என்றார். அதைக்கேட்டு ஆத்திரமடைந்தவன், ""என்னையா முட்டாள் என்கிறீர்? இந்தப் பேச்சுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் சும்மா விடமாட்டேன்'' என்றான்.

நிதானமாகப் புன்னகைத்த குரு, ""முட்டாள், மூடன் என்பவையெல்லாம் வெறும் சொற்கள்தானே... அவற்றால் எப்படி உனக்கு கோபம் ஏற்பட்டது? அந்த சொற்கள் உன்னை மாற்றியதுபோல, நல்ல சொற்கள் நல்லவித மாற்றங் களை உண்டாக்கும் அல்லவா...'' என்றார்.

Advertisment

அதைப் புரிந்துகொண்ட நரேந்திரன் வெட்கித் தலைகுனிந்து குருவிடம் மன்னிப்பு கேட்டான். ""நம் வீரம், கோபதாபம் எல்லாம் மற்றவர்களுக்குப் பயனுள்ளதாய் இருக்கவேண்டும். கடுஞ்சொற்கள், வன்சொற்கள் பேசி தீய சக்திகளை வரவழைக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்'' என்று கூறி வேறொரு விளக்கமும் அளித்தார் குரு.

ரத்தினபுரி நாட்டை சித்ரசேனன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவரது மனைவி மந்தாகினி, மகன் இளமாறனுக்கு வெள்ளிக்கிண்ணத்தில் பால்சோறு ஊட்ட முயன்றாள். குழந்தை உண்ணாமல் அடம்பிடித்து போக்குக் காட்டியபடி ஓடியது. ""நீ உண்ணாவிட்டால் பிரம்மராட்சதனிடம் பிடித்துக் கொடுத்துவிடுவேன்'' என்றாள் தாய்.

vv

அப்போது வானில் துர்தேவதைகள் உலவிக்கொண்டிருந்தன. அவை "ததாஸ்து...' என்றன. அதற்கு "அப்படியே ஆகுக' என்று பொருள். அடுத்த கணம் பிரம்மராட்சதன் குழந்தையைக் கவர்ந்து சென்றான். இதை சற்றும் எதிர்பாராத மகாராணி திடுக்கிட்டு அலறினாள். அனைவரும் ஓடிவந்தனர். குழந்தையுடன் வானில் பறந்துசென்ற ராட்சதனைப் பற்றி மன்னரிடம் தெரிவிக்க, அவர் கவலையில் மூழ்கினார்.

இளவரசனை மீட்டுத் தருபவர்க்கு ஐந்து ஊர்களை ஆளும் மந்திரி பதவி தருவதாக முரசு கொட்டச் செய்தார். நல்லதம்பி என்ற இளைஞன் துணிந்து வந்து ஒரு வாளை மட்டும் பெற்றுக்கொண்டு புறப்பட்டான்.

காட்டு வழியில் ஒரு அதிசயக்காட்சியைக் கண்டான். விறகுகளில் நெருப்பு மூட்டி, அதில் தன் கால்களை வைத்து எரித்துக்கொண்டி ருந்தாள் ஒரு மூதாட்டி. விநோத மாகப் பார்த்த நல்லதம்பியிடம், ""குளிர்தாங்க வில்லை; அதுதான் கால்களை நெருப்பில் போட்டுக்கொண்டிருக்கிறேன்...'' என்றாள்.

நல்லதம்பிக்கு பயம்வர வாளை ஓங்கினான்.

உடனே மூதாட்டி அரக்கியாக மாறி, ""நான் ஒரு பெண்... என்னைக் கொன்றால் பாவம் சேரும்...'' என்றாள். ஆனால் அவன் வாளை வீசி அவளைக் கொன்றான். மறுகணமே, அவன்முன் ஒரு அழகிய கந்தர்வப் பெண் தோன்றி, ""இளைஞனே... உன் செயலுக்கு நன்றி. ஒரு முனிவரின் தவத்தைக் கெடுத்ததால் சாபம் பெற்றேன்; இன்று உன்னால் அது நீங்கியது. உன்னை அந்த பிரம்மராட்சதன் குகைக்கு அழைத்துச்செல்கிறேன்... இதோ, இந்த மந்திர நீரை அவன்மீது தெளித்தால் மயங்கிவிழுவான். அப்போது ஒரு கழுகு பறந்துவரும். அதில்தான் அவனது உயிர் இருக்கிறது. கணமும் தாமதிக்காமல் அதை வாளால் வெட்டிவிடு'' என்று அறிவுரைத்து, குகைக்குள் கொண்டுபோய் விட்டாள்.

அவள் கூறியபடி அரக்கனைக் கொன்று இளவரசனை மீட்டுவந்தான். மன்னரும் மகாராணியும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஐந்து ஊர்களை ஆளும் மந்திரி பதவியை நல்லதம்பி பெற்றான்.

bb

எனவே வீணான சொற்களைப் பேசி, வாழும் நேரத்தை வீணடிக்காமல் எப்போதும் நலம்தரும் சொற்களையே பேசவேண்டும். சாதாரண வார்த்தைகளுக்கே இவ்வளவு வலிமையென்றால் இறைவனைப் பற்றிய மந்திர நாமாவளிக்கு எத்தகைய வலிமை இருக்குமென்று எண்ணிப் பார்க்கவேண்டும்.

அத்தகைய வேத கோஷங்கள் முழங்க, அனுதினமும் ஈஸ்வர நாமம் ஒலித்துக் கொண்டிருக்கும் ஓர் உன்னதமான திருத் தலம்தான் சூலூர் வைத்தியநாத சுவாமி திருக்கோவில்.

இறைவன்: வைத்தியநாதசுவாமி.

இறைவி: தையல்நாயகி.

புராணப் பெயர்: சூரலூர்.

ஊர்: சூலூர், கோவை மாவட்டம்.

தலவிருட்சம்: வேப்பமரம்.

தீர்த்தம்: சங்கு தீர்த்தம்.

சுமார் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்ததும், நொய்யல் நதியின் தென்கரையில் அமைந் துள்ளதும், செவ்வாய் பரிகாரத் தலமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு (நாகை மாவட்டம்) நிகராகப் போற்றப்படுவதும், ராகு- கேது தோஷத்திற்கும் நிவர்த்தி கிட்டுகின்ற பெருமையுடன் விளங்குகின்றது மான தலம்தான் கொங்குநாட்டுச் செவ்வாய்த்தலமான சூலூர் வைத்தியநாத சுவாமி திருக்கோவில்.

இவ்வூர் சூரலூர், சூரனூர், சூரலூர் அரியபிராட்டி நல்லூர், சூரலூர் சுந்தர பாண்டிய நல்லூர், வைத்தியநாதபுரம் என பல பெயர்களைக் கொண்டிருந்தாலும், தற்போது சூலூர் என்றே அழைக்கப்படுகிறது.

"சூரல்' எனும் நாணல் வகையைச் சார்ந்த பிரப்பஞ்செடிகள் மிகுதியாகக் காணப்பட்டதாலும், தட்பவெப்பநிலையை மாற்றி சுழன்றடிக்கும் காற்று (சூரல் காற்று) இப்பகுதியில் முற்காலத்தில் அடிக்கடி ஏற்பட்டதாலும், இப்பகுதி சூரலூர் எனப்பட்டது.

பழங்காலத் தமிழகத்தின் மேற்குப் பகுதியாக விளங்கியதுதான் சேரநாட்டுப் பகுதியான கொங்குநாடு. அப்போது இது 24 பகுதிகளைக் கொண்டதாக இருந்தது. அதில் ஒன்று வாயரைக்கால் நாடு. இன்றைய பல்லடம், பொள்ளாச்சி வடகிழக்கு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இந்நாட்டில் அமைந்த ஊர்தான் சூலூர்.

vv

தல வரலாறு

இருபத்தைந்தாம் தலைமுறையாக உறையூரைத் தலைநகராகக்கொண்டு ஆண்ட சோழர்களில், கலியுகாதி 3530-ல் (இன்று கலியுகாதி 5120) பட்டம் பெற்ற சோழன் ஒழுக்கம் தவறி நடந்தமையால், மண்மாரி பெய்து நாடு முற்றும் அழிந்தது. சோழனும் மடிய, அவனுடைய தேவிகள் சிங்களாம்பாள், சியாமளாம்பாள் ஆகிய இருவரும் கொங்குநாடு சென்று வாழ்ந்தார்கள். பிராமணர் சேரியில் சிங்களாம்பாள் ஒரு பிள்ளையைப் பெற்றாள். சோழநாட்டில் அரசன் இல்லாததால் யானையை ஏவ, அது சிங்களாம்பாள் இருந்த பிராமணர் சேரிக்குச் சென்று அவளுடைய பிள்ளையை வாரி எடுத்துச்சென்றது. அப்பிள்ளைக்கு கரிகாலன் என பெயரிட்டு முடிசூட்டினர். அரசனும் அரசிகள் பெயரால் சிங்காநல்லூர், சியாமளாபுரம் என இரு ஊர்களை அமைத்து அந்தணர்களுக்கு தானம் செய்தான்.

இவ்வாறு கரிகாலன் ஆட்சி செய்யும்போது ஒரு குறிப்பிட்ட சூழலில் பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு அவதிப்பட்டான். அதனால் பித்தவெறிகொண்ட அரசன், அக்கால வழக்குப்படி குறிசொல்லும் குறத்தியைக் கேட்க, அவள் "கொங்குநாட்டில் மக்களைக் குடியேற்றி ஆலயங்களைக்கட்டித் திருப்பணி செய்தால் பித்தம் தொலையும்' என்று கூற, அதன்படி அரசன் பரிவாரங்களுடன் வந்து கொங்குநாட்டில் 36 பெரிய ஆலயங்கள், 360 சிறிய ஆலயங்கள், 32 அணைகளைக் கட்டி திருப்பணி செய்து, பைத்தியம் நீங்கப்பெற்று செங்கோல் செலுத்தினான் என்பது வரலாற்றுச் செய்தி. கரிகாற்சோழன் இங்கு காட்டினை அழித்து சமன்செய்து ஊராக்கும்போது, சுயம்பு மூர்த்தம் ஒன்றைக் கண்டான். அந்த மூர்த் தத்தைப் பிரதிஷ்டை செய்து, வைத்தியலிங்க முடையார் என்ற திருநாமத்தைச் சூட்டி ஆலய கும்பாபிஷேகமும் செய்தான். நொய்யல் நதியோரம் முட்டத்திலிருந்து கரூர்வரை 36 சிவன் கோவில்களைத் திருப்பணி செய்ததாக அறியப்படுகிறது. அவற்றுள் இவ்வாலயமும் ஒன்றாகும். தமிழ்நாடு அரசு 1950-ஆம் ஆண்டு வெளியிட்ட "சோழன் பூர்வபட்டயம்' எனும் நூல் இச்செய்தியை உறுதி செய்கிறது.

இவ்வாறு மிகத் தொன்மை வாய்ந்த வைத்தியலிங்கமுடையார் திருக்கோவில் பிற்காலத்தில் கற்றளிக் கோவிலாக்கப்பட்டு, இறைவி தையல் நாயகியையும், பிற பரிவார மூர்த்தங்களையும் ஸ்தாபித்து, சிவாகம விதிப்படி கும்பாபிஷேகங்கள் பல கண்டு பொலிவுடன் விளங்குகிறது.

சிறப்பம்சங்கள்

=இத்தல ஈசனையும் அம்பிகையையும் வழிபட செவ்வாய், ராகு- கேது தோஷங்கள் நீங்கும்.

=மூன்றாம் வீரசோழன் (கி.பி. 1168-96) ஆட்சிக் காலத்தில் இப்பகுதியிலுள்ள சிவன் கோவில்களில் பூஜை தடைப்பட்டமையால் வரிக்கொடை அளித்துள்ளான் என்பதை, செலக்கரிசல் மாரியம்மன் ஆலயத்தின் முன்புள்ள 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.

=ஈசானியத்தில் அருள்புரியும் கால பைரவர் மிகவும் பிரசித்திபெற்றவர். வைத்திய நாதர் தோன்றிய காலத்தைச் சேர்ந்த மூர்த்தி யாவார். பிரதிமாதம் தேய்பிறை அஷ்டமி வழிபாடும், கார்த்திகை மாத மகா கால பைரவாஷ்டமி யாகமும் சிறப்பாக நடக்கும்.

=சைவ- வைணவ ஒற்றுமைக்கு ஒப்பாக, திருக்கோவில் கொடிமரத்தில் தன்வந்திரி பெருமான் வடக்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பு. வைத்தியநாதரும் தன்வந்திரியும் உடற்பிணி மற்றும் பிறவிப்பிணியை நீக்கும் மருத்துவர்களாவர்.

= இறைவன் அருட்சக்திக்கு உதாரணமாக, 2010-ல் கோவையில் செம்மொழி மாநாடு நடந்த சமயத்தில், சாலை விரிவாக்கப்பட வேண்டி இத்திருக்கோவிலின் சில பகுதிகளை இடிக்க அரசு உத்தேசித்தது. அப்போது வைத்தியநாதப் பெருமான்மீது பற்றுள்ள சில சிவனடியார்கள் பெருமுயற்சியெடுத்து இத்திருக்கோவில் மிகத்தொன்மையானது என நிரூபணம் செய்தனர். அரசு போட்ட கட்டளையை ரத்துசெய்து, ஆண்டவன் அவர்களுக்கு இட்ட கட்டளையின்படி கோவில் அருகேயுள்ள குளக்கரையை பலப்படுத்தி, தனிச்சாலை அமைத்து ஈசன் உறையும் இடத்தைக் காப்பாற்றியது மெய்சிலிலிர்க்க வைக்கும் சம்பவமாகும்.

=திருமணத்தடை நிவர்த்திக்கு, சம்பந்தப்பட்ட ஆண்- பெண் தங்கள் கைகளாலேயே நந்திகேஸ்வரருக்கு நல்லெண்ணெய்க் காப்பிட்டு, மாலை சாற்றி பூஜைகள் மேற்கொள்ளவேண்டும். பின் அந்த மாலையை அணிந்துகொண்டு வைத்தியநாதசுவாமி பூஜையில் கலந்து கொண்டால் தடைவிலகி விரைவில் திருமணம் நடந்தேறும். எனவே இவர் கல்யாண குண நந்திகேஸ்வரர் என அழைக்கப் படுகிறார் என கூறுகிறார் ஆலய தலைமை அர்ச்சகரான சிவாஜல சுந்தர குருக்கள்.

=வைத்தியநாத சுவாமியின் பரம பத்தையான கணபதியம்மாள் கனவில் தோன்றிய ஈசன், "உமது தோட்டத்திலுள்ள தென்னை மரத்தில் இரண்டு கொம்புகளுடன் கூடிய தேங்காய் ஒன்றுள்ளது. அதைப் பறித்துவந்து என் பூஜைக்குக் கொடு' என்றார்.

இக்கனவைக் கண்ட பக்தை விடிந்தவுடன் பணியாளை அழைத்து, குறிப்பிட்ட தென்னை மரத்திலுள்ள தேங்காயைப் பறித்துவரும்படி கூறினார். என்னே ஆச்சரியம்! ஈசன் சொல்லிய படியே அம்மரத்தில் இரு கொம்புகளுடன் முற்றிய தேங்காய் இருந்தது. பொதுவாக தென்னை மரத்தில் காய் முற்றிவிட்டால் தானாகவே விழுந்துவிடும். அவ்வாறில்லாமல் அக்காய் மரத்திலேயே இருந்தது. அதைப் பறித்துக் கொண்டுவந்து பூஜைக் குக் கொடுத்த அற்புத நிகழ்வை மனம் நெகிழ்ந்து கூறினார் ஆலய அர்ச்சகரான சிவாஜல சுப்பிர மணிய குருக்கள்.

=தீராத நோயுள்ளவர்கள் கூட இத்தலத்தில் பூஜித்தபின் நலம் பெற்றோர் ஏராளம். திருப்பூரிலுள்ள வங்கி அலுவலர் ஒருவர் உடல் முழுவதும் சிறுசிறு கட்டிகள் தோன்றி விகாரமாகி அவதிப் பட்டுவந்தார். சிகிச்சை பலன் தரவில்லை. இக்கோவிலிலின் மகத்துவமறிந்து வந்தார்.

அங்காரகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமையன்று அம்பாள்முன் நல்லெண் ணெயை வைத்துப் பூஜித்து, அதை வைத்தியநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்தபின் பிரசாதமாக வழங்கப்பட்டது. அதை முறையாக உட்கொண்டதன் பலனாக ஆறு மாதகாலத்தில் பூரண நலம்பெற்றதாக பூஜை ஸ்தானீகம் சின்னசாமி சிவா தெரிவித்தார்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில், பிரசித்திபெற்ற கோவை தண்டுமாரியம்மன் ஆலய நிர்வாக அதிகாரி யின் கண்காணிப்பில் சிறப்பாக இயங்கும் இத்தலத்தில், அனைத்து தெய்வங்களுக்கும் உரிய மாத, வருட வைபவங்கள் நடைபெறு கின்றன. இத்தலத்தின் தலையாயப் பெரு விழாக்களாக ஆருத்ரா தரிசனம், அன்னா பிஷேகம், பைரவாஷ்டமி, ஆடிமாதம் முதல் ஞாயிறு நடைபெறும் ஏகாதச ருத்ரா பிஷேகம் ஆகியவை விளங்குகின்றன. சிவாலயத்திற்குரிய சந்நிதிகள் யாவும் சிறப் பாக அமைந்துள்ளன.

குளம் அல்லது நதிக்கரையோரம் கோவில் அமைந்திருந்தால் அதற்கு சக்தியும் ஆற்றலும் அதிகம் என்பார்கள். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஒருங்கே அமையப்பெற்றால் தெய்வீக சாந்நித்யம் அதிகமாக இருக்கும்; தெய்வீக அதிர்வுகளை உணர இயலும் என்பார்கள். இவையனைத்தும் இணைந்திருக்கும் தலமாம்- தீராத நோய்களைத் தீர்க்கவல்லதொரு தலமாம்- அங்கக் குறைபாடுகளை நீக்குவதோடு அங்காரக தோஷத்திற்கும் தீர்வு கிடைக்கிற தலமாம்- தோல் வியாதிகளை நீக்குவதோடு ராகு- கேதுக்களின் தோஷங்களைப் போக்க வல்லதொரு தலமாம்- அறுவை சிகிச்சைக்குமுன் பிரார்த்தனை செய்தால் நல்ல தீர்வினைத் தர வல்லதொரு திருத்தலமாம் சூலூரில் கோவில் கொண்டுள்ள தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமியை வழிபடுவோம். கலக்கங்கள் அகற்றிக் களிப்புடன் வாழ்வோம்!

காலை 6.00 முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும்; மாலை 4.30 முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

ஆலயத் தொடர்புக்கு:

நிர்வாக அதிகாரி, தையல்நாயகி சமேத ஸ்ரீவைத்தியநாத சுவாமி திருக் கோவில், சூலூர் (அஞ்சல்), கோயம் புத்தூர்- 641 402. சிவாஜல சுந்தர குருக்கள்,

அலைபேசி: 98650 10696, சிவாசல சுப்பிர மணிய குருக்கள், அலைபேசி: 98426 45411.

அமைவிடம்: கோயம்புத்தூரிலிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் கிழக்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பேருந்து வசதி நிறைய உண்டு.

படங்கள்: போட்டோ கருணா