இளவல் அருகில் சீராள குரு, ஆறு கணக்காயர்கள் கொடுத்த ஓலைச் சுவடிகளைப் பட்டுத்துணியில் ஏந்தி, தன் ஆசனத்தில் அமர்வார். அச்சுவடிகளில், போர்க்களத்தில் தன் தலைவனுக்காக வீரசுவர்க்கம் அடைந்த வீரர்களைப் பற்றிய விவரங்கள் இருக்கும்.
நடுகல் காட்சிப்படுத்துதல்!
அதைச் சீராளர், சேனைத்தலைவரிடம் ஒவ்வொன்றாகக் கொடுப்பார். அதனைப் பெற்ற சேனைத் தலைவர் வீரரது பெயரை உரக்கக் கூறியவுடன், பாணர்கள் அந்த வீரன் உயிர்க்காணிக்கை அளிப்பதற்கு முன்னால் என்னென்ன அரிய செயல்களைப் போர்க்களத்தில் செய்தான் என்பது பற்றிய துதிப்பாடலைப் பண்ணோடு மனம் இளகும்படி அவனது புகழ் பாடுவார்.
அது முடிந்தவுடன், அவன் செய்த கடமைக்கு நிகரான, அரசு செய்ய வேண்டிய நிவாரணம் இன்ன இன்ன என்பதனை, சீராள குரு சத்தமாக அறிவிப்பார். இதனை இளவல் மனமுவந்து ஏற்றுக்கொண்டு, "இவற்றை ஓலையிலும் செப்பிலும் கல்லிலும் கீறுக' என அறிவிப்பான்.
இதனைப் பரிவட்ட னைக் கடமை சிலாசாதன மாக, திருவோலை நாயகர்கள் விரைந்து எழுதி கணக்காயர்களிடம் ஒப்படைப்பார்கள்.
அவர்கள் ஒவ்வொரு ஓலைச்சுவடியையும் செப்புத் தட்டாரிடமும், கல் தச்சர்களிடமும் எழுதுவதற்கு ஒப்படைப்பார்கள்.
உடனே, வெண்சங்கங்களும் தாரைகளும் முழங்கப்படும். அப்போது, ஏற்கெனவே இவ்வீரர்களுக்கு வீரக்கல் நடுவதற்கான உறுதியான கற்கள், கல் தச்சர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றை அலங் கரிக்கப்பட்ட மாட்டு வண்டிகளில் ஏற்றி, வரிசையாக வேல்கோட்டத்திற்குமுன் கொண்டு வருவார்கள்.
அரண்மனை நிமித்திகர்கள் இவ்வீரக்கற்களை நடுவதற்கான நல்ல ஓரைகள் கணிக்கப்பட்டதை எடுத்துரைத்து, அந்த நாளில்தான், முருகு அயர்தல் நடத்தப்பட இந்த நாள், இந்த நேரம் என்பதை மக்களுக்கு உரக்கத் தெரிவிப்பார்கள்.
நீர்ப்படை!
அப்போது வண்டிகளிலிருந்து நடுகற்கள் செங்குத்தாக இறக்கி ஊன்றப்படும். இச்செயலை வீரர்கள் விரைவாகச் செய்வார்கள்.
அப்போது, போருக்குப் படை திரட்டியபோது, எந்தெந்த திசைகளிலிருந்து சேர்வார்கள் இந்த வீரமரணமடைந்த வீரர்களைக் கொண்டுவந்தனர் என்பதைக் கேட்டு, அந்தந்த திசை நோக்கி அந்த நடுகற்களை ஊன்றுவார்கள். பின், மேளதாள முழக்கத்துடன் அந்த நடுகற்களை நீராட்ட, வீரர்களின் குடும்பத்தார்கள் வரிசையாக, அவ்வீரன் வழக்கமாகக் குளித்துவந்த நீர்நிலைகளிலிருந்து குடங்களில் நீரெடுத்து வந்து, குலவை ஒலி நிரம்ப, அந்நடுகற்களைக் குளிப்பாட்டு வார்கள்.
அப்போது, தாரை தப்பட்டைகள் முழங்க, சேனைத் தலைவர், வேலவன் காலடியிலிருந்த புனித நீர்க்குடத்தைத் தன் தோள்களில் சுமந்து, இளவல் பின்தொடர வந்து, அந்த நடுகற்களுக்குப் புனித நீராட்டுவார்.
அடுத்து, இளவல் மஞ்சள் குங்குமமிட்டு, அந்தக் கற்களுக்கு சந்தனப் பொதியமிட்டு, அதன் நடுவே அக்க சாலையிலிருந்து (பொற்காசுகள் செய்யும் தொழிற்கூடம்) கொண்டுவரப்பட்ட பொற்காசுகளை அந்த சந்தனப் பொதியத்தில் பதித்து, சுத்தமான மனங்கமழும் பூக்களைத் தூவி வணங்குவார்கள்.
அதனைத் தொடர்ந்து, வீரனின் சுற்றத்தார் வரிசையாக வந்து, நடுகல்லுக்கு மலர்தூவி வழிபட்டு, அவ்வீரனின் வாரிசுகள் இருந்தால், அவர்களுக்கு மலர் மாலை சூட்டி பெருமிதம் கொள்வர். பொதுமக்களும், பெரியோர்களும் இம்மரியாதை களைச் செய்வர். நடுகல்லுக்கா னவன் திருமணமாகாதவனாக இருந்தால், அவனுடைய பெற்றோருக்கு மாலையும், பட்டாடைகளும் தந்து பெருமிதம் கொள்வார்கள்.
திருமணமாகி குழந்தைப்பேறு கிடைக்கும் முன் தன் நேசகியை- துணையாளைவிட்டு வீரமரண மடைந்தவனாக இருந்தால், ஆதித்தமிழர் பண்பாட்டில் அவன் பூதவுடல் எரியூட்டப்படும் போது, அவனோடு சேர்ந்து அவனது இணையாளும் கல்யாணக் கோலத்துடன், மங்கலப் பத்தினியாக நெருப்பில் அமர்ந்து உயிர்நீத்த நிகழ்வு களும் நடந்துள்ளன. அப்படி நடந்திருந் தால் அவ்வீரனுக்கும் அத்தலைவிக்கும் சேர்த்துப் புடைப்புச் சிற்பமாக ஒரே கல்லில் வடிவமைத்தி ருப்பார்கள்.
அப்படிப்பட்ட பெண்கள்தான் பிற்காலத்தில் பூவாயம்மாள், மாலையம்மன் என்று, தங்கள் குலத்தையும் ஊரையும் நாட்டையும் காவல் காத்திடும் காவல் தெய்வங்களாக வழிபடப்பட்டனர்.
அவ்வகைச் சிற்பங்களை கணவனோடு இயைந்த காதலைத் தெரிவிக்கும் வண்ணம் வடிவமப்பர். இவற்றைச் செதுக்கிய பின்னரே முருகு அயர்தல் விழா நடைபெறுவது வழக்கம். இவ்வாறான வீரக்கல்லுக்கு அறுவை வணிகர்கள் (துணி வியாபாரிகள்) பட்டாடைகளைத் தங்களின் காணிக்கையாகச் செலுத்தி, தங்கள் வணிகம் சிறந்திட காவல் தெய்வங்களாக இருக்கவேண்டுமென வேண்டிக்கொள்வர்.
அவ்வீரனுக்கும் தலைவிக்கும் இரண்டு பொற்காசுகளை சந்தனப் பொதியத்தில் நெற்றியில் வைத்து, மங்கலப் பொருள் சூட்டி இளவல் வணங்குவான். அதனைத் தொடர்ந்து, கற்பில் சிறந்துவிளங்க நினைக் கும் பெண்டிர் அனைவரும் மங்கலப்பொருட்களை (குங்குமம், வளையல் கள், பட்டாடைகள் போன்றவை) வைத்து வரிசையாக வணங்குவார்கள்.
பீழி சாற்றுதல்!
இதனையடுத்து, நடுகல் நடப்பட்டவருக்குரிய வீரர்களின் உறவினர்களை அழைத்து, மயிற்பீலிக் கட்டுகளை சேனைத் தலைவர் கொடுப்பார்.
அவரைத் தொடர்ந்து, அறுவையர்கள் பட்டுக்கயிறுகளைக் கொடுப்பர். இரண்டை யும் பெற்றுக்கொண்ட வீரரின் வாரிசுகள், அந்த மயிற்பீலிகளை வீரத்தோடு சொர்க்கம் சென்ற தனது முன்னோன் நடுகல்லின் தலைப்பாகத்தில் பட்டுக்கயிறு கொண்டு கட்டுவித்து வணங்கி, சந்தனப் பொதியத்திலிருந்த பொற்காசுகளை பத்திரமாக எடுத்து, அவனிடம் பெற்ற செல்வம் குறையாமல் வளருமென்ற நம்பிக்கையுடன் பத்திரப்படுத்திக்கொள்வர்.
பெரும்படை!
மேற்சொன்ன நிகழ்வு நடந்தவுடன் அவ்வீரன் என்னென்ன உணவு களையெல்லாம் விரும்பி உண்டுவந்தானோ அந்த உணவு வகைகளையெல்லாம் சமைத்து, அவனுக்கான நடுகல்லுக்குமுன் தலைவாழை இலைவிரித்துப் பரிமாறி சிறப்பு செய்யும்போது அன்னப்பறை முழங்குவார்கள். அப்போது இளவல் அவர்களிடம் சென்று அவ்வீரர்களது வாரிசுகளைத் தழுவி, தன் பரிவட்டனை சிலாசாதனப் பட்டயங்களை பட்டுத்துணியில் சுற்றி, அவர்களிடம் அன்போடு கொடுத்து முத்தமிடுவான். அவர்களுக்குப் படைத்த உணவு வகைகளை, தாயுள்ளத்தோடு அவ்விளைய வாரிசுகளுக்கு ஊட்டி மகிழ்வான். வயதானவர்களைத் தன் தோள்மீது தாங்கி, தன் பட்டயத்தை அன்புக் காணிக்கையாக்கி வாழ்த்துவான்.
வீரமுழக்கம் விண்ணதிர, வாகைப்பூ மாலைகளை அனைவரும் சூடி, குருமார்களும், அரச குடும்பத்தினரும் நடுகல்லை வணங்கி நிற்பர். அப்போது புலவர்களால் இயற்றப்பட்ட வெட்சித்திணைகளின் பதினான்கு துறைகளும் இசையோடு பாணர்களால் பாடப்படும். இந்தப் பாடல்கள், படையில் தொடங்கி கொடையில் முடியும். இவ்வாறு வழிபாட்டினை முடிக்கும் முறைக்கு "மறத்தொழில் முடிக்கும் முறை' என்று பெயர்.
இவ்வாறு மறத்தொழில் முடித்தலை, ஆதித் தமிழர்களால் போர்த்தெய்வமாகக் கருதப்பட்ட கொற்றவைக்கு, துடி கொட்டி முடிப்பர். இதனையே ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன்பு தொல்காப்பியப் பெருமகனார்-
"காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்
சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல் என்று
இருமூன்று வகையிற் கல்லொடு புணர...'
என நடுகல் முறையை விளக்குகிறார்.
இவ்வாறு ஒரே இடத்தில் நெருக்கமாக நிறைநடுகற்களை பலதிசை நோக்கி வைப்பதற்கு, "திசை நட்டார் கற்கோட்டம்' என்று பெயர். இதில் ஒவ்வொரு கல்லும் எந்த திசை நோக்கி இருக்கிறதோ, அந்த திசையிலிருந்து இந்த ஊருக்குப் புலம்பெயர்ந்து வந்தவர்கள் என்று பொருள்.
இப்படி பலதரப்பட்ட இனக் குழுக்கள் ஓரிடத்திற்கு வந்து, நீத்தாரை வழிபடும் முறையை "பட்டவன் வழிபாடு' என்றழைத்தனர். இவ்விதத்தில் வழிபடும்போது, நீண்ட தூரத்திற்குப் புலம்பெயர்ந்து சென்றவர்கள் தாங்கள் வாழும் இடங்களில், வீரக்கல்லில் இருந்த முன்னோனின் வடிவத்தை சிலை வடிவாக்கி, அதற்குக் கோவில் கட்டி தங்கள் குலதெய்வமாக வழிபடும் வழக்கமே நாட்டார் வழிபாடாக மாறியது. ஆகவே, குலதெய்வங்களை வழிபடும் நாட்டார் வழிபாடுகள் யாவுமே நீத்தார் வழிபாடென்றும் கொள்ளலாம்.
வரும் இதழிலும் நிகழ்வுகள் தொடரும்...
தொடர்புக்கு:
அலைபேசி: 99445 64856
தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்