ந்து மதத்திற்கு வேற்று மதத்தினரால் பாதிப்பு வரும்போது, மதத்தைக் காப்பாற்றவும் மறுமலர்ச்சி ஏற்படுத்தவும் ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைவனின் அருளால் மகான்கள் அவதரித்து அந்தத் திருப்பணிகளைச் செய்தனர். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் அவதரித்த ஆதிசங்கரரால் இந்து மதம் புத்துணர்ச்சி பெற்றது. குறிப்பாக சைவ சமயத்திற்குத் தொய்வு ஏற்பட்ட சமயத்தில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் போன்றவர்கள் தோன்றி சமயப் பணிகளைச் செய்தனர். அதற்குப்பிறகு எத்தனையோ மகான்கள் இதுபோன்ற பணிகளை மேற்கொண்டனர்.

அந்தவகையில் சைவ சமயத்தைக் காக்க சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கங்கைகொண்டான் எனும் ஊரில் தோன்றிய கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் (1831-1878) பற்றி தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே. சாமிநாதையர் குறிப்பிடும்போது, "சுந்தர சுவாமிகள் வேதாந்த கிரந்தங்களையும் சிவ புராணங்களையும் கற்றுத் தேர்ந்த அறிஞர். எல்லாரது உள்ளங்களிலும் சிவபக்தியை விதைத்தவர்' என்று புகழ்ந்துள்ளார். குறிப்பாக நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினர் சிவாலயத் திருப்பணி செய்வதற்கும், கழுத்தில் ருத்ராட்சம் அணியவும், நெற்றியில் திருநீறு பூசுவதற்கும் அறிவுறுத்தினார். இந்தப் பழக்கத்தை இன்றும் அந்த சமுதாய மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

samy

"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்' என்னும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாடிய மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை (1855-1897) தாம் படைத்த மனோன்மணீயம் என்னும் கவிதை நாடக நூலில்-

Advertisment

"சுந்தர முனிவன் சிந்துர அடியும்

வாரிசம் போன்ற மலர்ந்த வதனமும்

கருணை அலையெறிந் தொழுகுங் கண்ணூம்

Advertisment

பரிவுடன் முகிழ்க்கு முறுவலும் பால்போல்

நரைதரு தலையும் புரையலும் உரையும்

சாந்தமும் தயை தங்கிய உடலும்'

என்று தமது ஞானகுருவான சுந்தர சுவாமிகளைப் பற்றி எழுதியுள்ளார்.

ஞானியர்க்கு ஞானியாகவும், எளியோருக்கு எளிய அருளாளராகவும் விளங்கிய மகான் கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள், திருநெல்வேலி மாவட்டத்தில் கங்கைகொண்டான் கிராமத்தில் வாழ்ந்த யக்ஞேஸ்வரன்- காமாட்சி தம்பதியருக்கு இரண்டாவது மகனாக, ஸ்ரீவத்ஸ கோத்திரத்தில் 3-12-1831 அன்று பிறந்தார்.

பிறந்த சில மாதங்களில் அடுத்தடுத்து தாய்- தந்தையை இழந்ததால், தாய்மாமன் வேங்கட சுப்பையர் ஆதரவில் வளர்ந்தார். ஏழாம் வயதில் உபநயனம் நடைபெற்றது. வீரவநல்லூர் சோமசுந்தர சாஸ்திரிகளிடம் பிரம்மசூத்திரம், உபநிடதங்களைக் கற்றார்.

கோவிலூர் மடத்தின் மூன்றாவது மடாதிபதியான சிதம்பர சுவாமிகளிடம் வேதாந்தப் பாடங்களைக் கற்றார்.

அதன்பிறகு சூத சம்ஹிதையை சிறப்பாகப் பயின்றார்.

சிறு வயதிலேயே தினமும் தவறாமல் சிவபூஜையும், ஒரு லட்சம் முறை பஞ்சாட்சர மந்திர ஜெபம் செய்யும் வழக்கத்தையும் கொண்டிருந்தார். இவரது இளமைக்காலத் தோற்றப் பொலிவையும் ஆன்மிக சிந்தனையையும் கண்டு ஊர்மக்கள் இவரை தெய்வீகப் பிறவி என்று புகழ்ந்தனர்.

தாய்மாமனின் ஏற்பாட்டில் அடைச்சாணி எனும் ஊரில் வாழ்ந்த ராமசுப்பையரின் மகளான ஜானகியுடன் திருமணம் நடைபெற்றது. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சருக்கு சாரதா தேவி அம்மையார் எப்படி மனைவியாக இருந்து ஆன்மிக வாழ்க்கையில் ஈடுபட்டாரோ, அதே போன்று இவரது மனைவியும் ஈடுபட் டார். அடைச்சாணி யில் வசித்த வேத பண்டிதரான விஸ்வேஸ்வரரிடம் மந்திர உபதேசம் பெற்றார்.

சுந்தர ஸ்வாமிகள் தாமிரபரணி பாண தீர்த்தத்தில் தொடங்கி திருச்செந்தூர் வரை நடந்தே சென்று, ஆங்காங்கே சிவ பஜனையும் சூத சம்ஹிதையின் சிறப்பையும் விளக்கி சொற்பொழிவு நடத்திவந்தார். அதன்பின்னர் மதுரை, சிதம்பரம், விருத்தாசலம் போன்ற இடங்களுக்குச் சென்று சமயச் சொற்பொழிவாற்றி வந்தார்.

samy

பின்னர் வடக்கே புனித காசிக்குச் சென்று விஸ்வேஸ்வரரை வழிபட்டபிறகு, மகா கணபதி சுவாமிகளை சந்தித்து அவருடைய உபதேசத்தைப் பெற்றார். மகா கணபதி சுவாமிகள் கங்கை நதிக்குள் ஆறு மாதங்கள்வரை (நீருக்குள்ளே) தியானம் செய்யும் பழக்கத்தையுடையவர். கங்கைக் கரையிலிருக்கும் மணிகர்ணிகா கட்டத்தின் அருகேயுள்ள மண்டபத்தில் மகா கணபதி சுவாமிகள், சுந்தர சுவாமிகளின் கற்சிலைகளை இன்றும் காணலாம்.

சில காலங்களுக்குப்பிறகு திருநெல்வேலி திரும்பிய சுந்தர சுவாமிகள், தனிமையில் தவம்செய்ய எண்ணி கோடகநல்லூரைத் தேர்வுசெய்தார். அங்கு நீண்டநாட்கள் உணவுண்ணாமல் கடுந்தவம் புரிந்தார். அந்த சமயத்தில் பரமசிவனே அந்தணர் வடிவில் வந்து உணவு கொடுத்தாராம். இந்த சம்பவத்திற்குப்பிறகு மீண்டும் கடுந்தவம் புரிந்ததால், இவரது பெயருக்கு முன்பு கோடகநல்லூர் என்னும் ஊர்ப் பெயரும் இணைந்து, கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் என அழைக்கப்பட்டார். தனது 21-ஆம் வயதில் துறவறத்தை மேற்கொண்டு, சிலகாலம் திருநெல்வேலி சங்கர மடத்தில் தங்கி ஆன்மிகப் பணிகளை மேற்கொண்டார்.

திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் காந்திமதியம்மன் திருக்கல்யாண உற்சவத் திருவிழாவில், அம்மனை பாலாம்பிகையாகவும், எட்டாம் நாள் நிகழ்ச்சியின்போது கோலாட்ட சிறுமியாகவும் அலங்கரித்து கோலாட்ட நிகழ்ச்சியை ஏற்படுத்தினார். அதேபோன்று நெல்லையப்பர் கோவிலில் தை மாத அமாவாசையன்று லட்சதீபத் திருவிழாவைக் கொண்டாடும் வழக்கத்தை ஏற்படுத்தினார். இவ்விரு விழாக்களும் இன்றும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

சுந்தர சுவாமிகள் பக்தர்களுக்காக சில அற்புதங்களைச் செய்துள்ளார். சமயச் சொற்பொழிவு செய்யும்போது, "நமது உள்ளங்கையில் அக்னிதேவன் வசிக்கிறான் என்பதால், உள்ளங்கையில் உணவு படாமல் உண்பது நல்லது என கூறினார். இந்த சொற்பொழிவு நடந்த சில நாட்களுக்குப்பிறகு கம்பா நதி மண்டபத்தில் தங்கியிருந்தார்.

அருகே இருக்கும் காமாட்சியம்மன் பூஜைக் காக, கோவில் அர்ச்சகர் சுப்பிரமணிய பட்டர் ஒரு சிறு பாத்திரத்தில் நெருப்புத் தணல்களைப் போட்டு எடுத்துக்கொண்டு மடைப்பள்ளியிலிருந்து வெளியே வந்தார். திடீரென மழை பெய்யவே, பாத்திரத்திலிருந்த நெருப்புத் தணல்கள் அணைந்துவிட்டன. அவர் நடந்தவற்றை சுவாமிகளிடம் கூற, அப்போது அருகிலிருந்த குஜராத் அந்தணரான ராமச்சந்திர மேத்தா சுந்தர சுவாமிகளிடம், "தங்களது உள்ளங்கையிலிருந்து நெருப்பெடுத்துத் தரலாமே' என பணிவுடன் கேட்டார். "அப்படியே செய்வோம்' எனக் கூறிய சுவாமிகள், மேத்தா அணிந்திருந்த மேல்துண்டை வாங்கி தனது உள்ளங்கையில் வைத்துத் தேய்த்தார். அதிலிருந்து நெருப்பு ஏற்பட்டது. இதைக்கண்டு அனைவரும் வியந்தனர். மேத்தாவுக்கும் தனது ஐயப்பாடு நீங்கியது.

சுந்தர சுவாமிகளின் சீடரான நாராயண சிவம் என்பவர் மதுரை பொற்றாமரைக் குளத்தில் யோக நிட்டையில் ஈடுபட்டிருந்தார். அதில் ஏதோ தவறு ஏற்படவே அவர் நீரில்மூழ்கி இறக்க நேரிட்டது. அங்கிருந்த பக்தர்கள் காவல்துறைக்குத் தகவல் தர, மூன்று நாட்களுக்குப்பிறகு உடலை வெளியே எடுத்தனர். நாராயண சிவத்தின் சோக முடிவையறிந்த சுந்தர சுவாமிகள் பொற்றாமரைக் குளத்திற்கு நேரில் வந்தார். நாராயண சிவத்தின் உடலை விபூதி விநாயகர் சந்நிதிக்குக் கொண்டுவருமாறு கூறினார். முதலில் காவல்துறையினர் தடுத்தனர். சிவபக்தர்கள் எப்படிப் பிழைக்க வைக்கமுடியும் என பேசினார்கள். சுந்தர சுவாமிகள் நாராயண சிவத்தின் உடல் முழுவதும் விபூதி பூசினார். அவரது காதில் ஏதோ ஒரு மந்திரத்தை ஓத, உடனே நாராயண சிவம் உயிர் பெற்றெழுந்தார். இதைக்கண்டு எல்லாரும் வாயடைத்துப் போனார்கள்.

சைவ நெறியைப் போற்றும்வகையில் சுந்தர சுவாமிகள் சிவானுபூதி ரசாயனம், ஸ்வானுபவ ரச மஞ்சரி, நிஜானந்த விலாசம் போன்ற நூல்களை எழுதியுள்ளார். தம் வாழ்நாளில் திருவையாறு, திருவேதிக்குடி போன்ற 22 முக்கிய தலங்களில் கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தியுள்ளார். ராமலிங்க வள்ளலாரை 1872-ஆம் ஆண்டு சந்தித்து, இருவரும் ஞான மார்க்கத்தைப் பற்றி மூன்று நாட்கள் விவாதம் செய்துள்ளனர்.

அதேபோன்று சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் 32-ஆம் பீடாதிபதியான எட்டாம் ஸ்ரீ நரசிம்ம பாரதீ சுவாமிகளை (1817-1879) திருநெல்வேலியில் தரிசனம்செய்து, அவரிடம் பிரம்மஞான தத்துவத்தைக் கேட்டறிந்தார். ரிஷிகேஷத்தில் வாழ்ந்த சுவாமி சிவானந்தர், சுந்தர சுவாமிகளிடம் பெரும் மதிப்பும் பக்தியும் கொண்டிருந்தார்.

சைவ சமயம் தழைத்தோங்க தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று சமயச் சொற்பொழிவாற்றி சிவத்தொண்டையும், கோவில் திருப்பணிகளையும் செய்தார். குறிப்பாக, நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தினரிடம் முறையாக சிவபூஜை செய்யும் முறைகளைக் கற்பித்தார்.

சுந்தர சுவாமிகளைத் தன் குருவாக ஏற்றுக்கொண்ட மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை, அவரது பெருமைகளைத் தனது படைப்புகள்மூலம் வெளிப்படுத்தினார்.

சுந்தர சுவாமிகள் தனது இறுதிக்காலத்தை புதுக்கோட்டை அருகேயுள்ள அரிமழம் எனும் கிராமத்தில் கழிக்க எண்ணினார். சிவராமன் செட்டியார் என்பவர் சுந்தர சுவாமிகளுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து, அவர் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொடுத்தார். 1878-ஆம் ஆண்டு, ஐப்பசி மாதம் தேய்பிறை தசமி திதியன்று சுவாமிகள் சித்தியடைந்தார். அங்கே பாணலிங்கம் பிரதிஷ்டை செய்து அதிஷ்டானம் (சமாதிக் கோவில்) கட்டப்பட்டுள்ளது.