ராமபிரானுக்காக வானர மன்னன் சுக்ரீவன், சீதையைத் தேடும்பொருட்டு தனது வானர சேனையை நான்கு திசைகளுக்கும் அனுப்பினான் என்பது அனைவருக்கும் தெரியும். அவ்வாறு அனுப்பும்போது ஒவ்வொரு திக்கிலும் உள்ள இடங்களில் விவரங்களைத் தெளிவாக அவர்களுக்கு எடுத்துக்கூறி, அங்கெல் லாம் சென்று தேடுமாறு ஆணையிட்டான்.

கிழக்கு திசை

வினதன் என்னும் சேனாதிபதியை அழைத்து, "சந்திர சூரிய அம்சமான வானரர்களுடன் கிழக்கு திசையில் சென்று தேடுவாய்'' என்று கூறி, அப்பகுதியிலுள்ள இடங்களைக் கூறினான்.

aa

Advertisment

"பாகீரதி, சரயூ, கௌசகீ, காளிந்தி, யமுனா ஆகிய நதி ஓரங்களிலும்; யாமுனம் என்னும் மலையிலும்; சரஸ்வதி, சிந்து, சோணா ஆகிய நதிப் பகுதிகளிலும்; மஹி, காலமஹி பிரம்மாலம், விதேகம், மாளவம், காசி, கோசலம், மாகதம், புண்ட்ரம், வங்கம் போன்ற தேசங்களிலும்; யவனம் என்னும் த்வீபம், ஸுவர்ணருப்யம் என்னும் தீவு, ஜம்புத் தீவு, பிலஷ த்வீபம், சால்ம- த்வீபம், நெய் சமுத்திரம், செத்வீபம், தயிர் சமுத்திரம், கிரவுஞ்ச த்வீபம், பின்னர் பாற்கடல், மேலும் புஷ்கர த்வீபம் ஆகிய இடங்களிலெல்லாம் தேடுங்கள்.

அங்கு தூயநீர் சமுத்திரம் இருக்கும். அதன் அக்கரையில் ஜாதரூபசிலம் என்னும் தங்க மலையில், பூமியைத் தாங்கும் அனந்தன் என்னும் மகாநாகம் ஆயிரம் தலைகளுடன் இருப்பார். அவரே ஆதிசேஷன் ஆவார். அந்த தங்கமலை யின் உச்சியில் அவரது தங்க பனைமரக் கொடி பிரகாசிக்கும். அதுவே கீழ்த்திசை எல்லையாக தேவதைகளால் ஏற்படுத்தப்பட்டது.

பின்னர் உதயகிரி காணப்படும். அதில் ஸௌமனஸ் என்னும் தங்கச் சிகரமுண்டு. சூரிய பகவான் ஒவ்வொருநாளும் ஜம்பு த்வீபத்தின் வடப்புறத்தில் சுற்றிவரும்பொழுது ஸௌமனஸ் சிகரத்தில் சற்று தங்குவார். இந்த உதயகிரி பூமிக்கும் பிரபஞ்சத்துக்கும் துவாரமாகவும், சூரியனுடைய சஞ்சாரத்திற்கு ஆரம்ப ஸ்தானமாகவும் பிரம்மாவால் முன்பு ஏற்படுத்தப்பட்டபடியால் இதுவே கிழக்கு திசை என்றாயிற்று. எனவே இந்த கிழக்கு திசை முழுவதும் சீதா பிராட்டியாரைத் தேடுங்கள்'' என சுக்ரீவன் ஆணையிட்டான்.

தெற்கு திசை

அக்னி குமாரனான நீலன், வாயு புத்திரனான அனுமன், ஜாம்பவான் போன்ற வானர வீரர் களைப் பார்த்து சுக்ரீவன், "நீங்கள் பெரிய சேனை யுடன் தெற்கு திசை நோக்கிச் செல்லுங்கள். அங்கு விந்தியமலை, நர்மதை, கோதாவரி, கிருஷ்ண வேணி, வரதா, மேகலை, உத்கலை, ஆகிய நதிகளையும்; அச்வவந்தி, அவந்தி, விதர்ப்பம், ரிஷகம், மாஹிஷகம், வங்கம், கலிங்கம், கௌசிகம், தண்டகாரண்யம், ஆந்த்ரம், புண்ட்ரம், சோழநாடு, பாண்ட்யம், கேரளம் முதலிய தேசங்களிலும் நன்கு தேடுங்கள்.

பின் அயோமுகி என்னும் மலையும், காவேரி என்னும் புண்ணிய நதியும் காணப்படும். மலய பர்வதத்தின் சிகரத்தில் அகத்திய முனிவரைக் காணலாம். முதலைகள் நிறைந்ததும், சந்தனக் காடுகளால் சூழப்பட்டதுமான தாமிரவருணி என்னும் நதியைக் காணலாம். அதையடுத்து பாண்டிய மன்னர்களின் கபாடபுரம் இருக்கும். அதற்கும் அப்பால் மனிதர்கள் போக இயலாத இலங்கைத்தீவு காணப்படும். அதற்கும் தெற்கில் புஷ்பிதகம் என்னும் தேவகணங்கள் சஞ்சரிக்கும் மலையும், அதில் தங்கமயமான ஒரு சிகரம் சூரியனுக்கும், வெள்ளிமயமான ஒரு சிகரம் சந்திரனுக்கும் உண்டு.

அதன்பின் தென்படும் குஞ்சரம் என்னும் மலையில் நவரத்தினமயமான அழகான ஆசிரமத்தை அகத்திய முனிவருக்காக விஸ்வகர்மா அமைத்துள்ளார். இந்த மலையில் வாசுகி என்னும் நாகம் வசிக்கிறது. பின்னும் ரிஷபம் என்னும் மலை காளையின் ரூபத்துடன் தோன்றும். மிகுந்த புண்ணியவான்களும், சொர்க்கத்தை அடைந்தவர்களும் அங்கு வசிக்கின்றனர். அதற்கும் அப்பால் உள்ள பிதுர் லோகம், எமனுடைய தலைநகருக்கு யாரும் செல்ல இயலாது. எனவே இந்த தெற்கு திசை முழுவதும் சென்று சீதாபிராட்டியாரை கவனமாகத் தேடுங்கள்'' என்றான்.

மேற்கு திசை

இந்திரனையும் கருடனையும்போல் தேஜஸ் பெற்று விளங்கும் மரீசியின் மகனான சுஷேண னும் மற்றும் சேனை வீரர்களும் மேற்கு திசையில் சீதையைத் தேடச் சென்றனர்.

"மேற்கில் ஸுராஷ்ட்ரம், பாஹ்லிகம், சூரம், பீமம் முதலிய தேசங்களையும்; பின் பாலைவனத் தையும், கடற்கரையிலுள்ள ஜஷீபுரம், முரசீ பட்டினம், அவந்திபுரம், அங்கலோபை ஆகிய நகரங்களிலும்: அடர்ந்த மரங்கள் நிறைந்த அலக்ஷிதம் எனும் வனத்திலும் தேடுங்கள்.

சிந்து நதி சமுத்திரத்தில் கலக்குமிடத்தில் ஹேமகிரி என்னும் மலை பல சிகரங்களுடன் உள்ளது. அங்கு இறக்கைகள் உடைய சிங்கங்கள் வசிக்கின்றன. பின் தங்கச் சிகரம்கொண்ட பாரியாத்ரம் என்னும் பெரிய மலை உள்ளது. அதையடுத்து வைடூரியம் என்னும் மலை நூறு யோசனை பரப்பளவில் பரந்து காணப்படும். அதன்பின் சமுத்திரத்தின் நான்காவது பாகத்தில் சக்ரவான் என்னும் மலை இருக்கும். பின் வராக பர்வதம் உள்ளது. அதையடுத்து தங்கக் குகைகள் உள்ள மேகவா என்னும் மலையுண்டு.

பின் 60 ஆயிரம் தங்க மலைகளைக் காண்பீர் கள். அதற்கு நடுவில் ஸாவர்ணி மேரு என்னும் மலையானது, இவற்றுக்கு அரசனைப்போல் விளங்கும். அதற்கும் அப்பால் சூரியன் மறையும் அஸ்தகிரி உள்ளது. அந்த மலைச்சிகரத் தில் வருண பகவானின் தலைநகரம் உள்ளது. ஸாவர்ணி மேருவுக்கும் அஸ்தகிரிக்கும் இடை யில் ஒரு தங்கமயமான பனைமரம் பத்து கிளைகளுடன் உன்னதமாகக் காட்சிதரும்.

சூரிய பகவான் தினமும் அஸ்தகிரியில் மறைகி றார். அதற்கு அப்பால் வானரர்கள் செல்ல இயலாது. எனவே இவ்வளவு பரப்பளவுள்ள மேற்கு திசையில் சீதா பிராட்டியாரைத் தேடுங்கள்'' என்று சுக்ரீவன் ஆணையிட்டான்.

வடக்கு திசை

சதபலி என்னும் வானரவீரனின் தலைமை யில் அனேக வானர வீரர்கள் வடக்கு திசையில் தேடச்சென்றனர்.

"வடக்கில் இமயமலை அலங்காரமாக இருக்கும். அங்கிருந்து புறப்பட்டு மிலேச்சம், புளிந்தம், ஆரஸேனம், ப்ரஸ்தலம், பரதம் (இந்திரப்பிரஸ்தம், ஹஸ்தினாபுரம் முதலியவை), தட்சிணகுரு, மத்ரகம், காம்போஜம், யவனம், சகம், ஆரட்டகம், ப்ரஹ்லீகம், ரிஷகம், பௌரகம், டங்கணம், சீனம், பரமசீனம், நீஹாரம், தரதம் முதலிய தேசங்களில் தேடுங்கள்.

இமாலய பர்வதம், அடுத்து காலம் என்னும் பர்வதம், ஸுதர்சனம் தேவஸகா பர்வதம், அதன்பின் பாலைவனமும் தோன்றும். பின் கயிலாயம் என்னும் மகாபர்வதம் தோன்றும். அங்கு வெண்மையான மேகத்தைப்போல அழகான நகரம் விஸ்வகர்மாவால் குபேரனுக் காக உருவாக்கப்பட்டிருக்கிறது. அங்கு மானசம் என்னும் ஏரி உள்ளது. அங்கு குபேரன், குஹ்யர் என்னும் தேவகணங்களுடன் வசித்துக்கொண்டிருக்கிறார்.

பின் கிரவுஞ்ச பர்வதத்தில் ஸ்கந்தருடைய சக்தி ஆயுதத்தால் பிளக்கப்பட்ட ஒரு குகையில் சென்று தேடுங்கள். பின் மன்மதன் தவம்செய்த காமசைலம் என்னும் மலையிலும் தேடவேண்டும். பிறகு மைநாக பர்வதம், வைகானஸம் என்னும் ஏரியும் உள்ளது. வைகானஸ ஏரிக்கரையில் குபேரனின் வாகனமான ஸர்வபௌமம் என்னும் கஜமானது பெண் யானைகளுடன் சஞ்சரிக்கும். பின்னர் சைலோதை என்னும் நதி தென்படும். அதை யடுத்து புண்ணியாத்மாக்கள் வசிக்கும் உத்திர குரு என்னும் தேசமுண்டு. அங்குள்ள சில விருட்சங்கள் ஆடை, ஆபரணம், பழங்கள், பானங்கள் போன்றவற்றைக் கொடுக்கும். ராட்சஸர்கள் இங்கு வசிக்க இயலாது.

பின் லவண சமுத்திரம் காணப்படும். அங்கு ஸோமகிரி என்னும் மலையுண்டு. அங்கு சிவனும் விஷ்ணுவும் பிரம்மாவும் வசிக்கின்றனர். அந்த ஸோமகிரிக்கு எவரும் செல்வது கடினம். எனவே அதனை தரிசித்து விட்டுத் திரும்பிவிடுங்கள். இவ்வளவு தூரமுள்ள வடக்கு திசையின் எல்லைவரை சீதா பிராட்டி யாரைத் தேடிக் கண்டுபிடித்து வாருங்கள்'' என சுக்ரீவன் தன் வானர சேனைகளுக்குக் கட்டளை யிட்டான்.

இவ்வாறு ஸ்ரீ ராமபிரானுக்கு சீதையை மீட்டுக்கொடுக்க முழுமுயற்சியுடன் ஈடுபட்டான் சுக்ரீவன்.