""குழந்தைகளே! இவ்வுலகில் மலிவானதும் விலை மதிப்பானதும் அன்பு மட்டுமே. சகலத்தி லும் அன்பைச் செலுத்துங்கள். அன்பைக் கடத்துங்கள். பொருள் சார்ந்த இவ்வுலகில் அருள் சார்ந்தி ருப்போர் அரிதே. யாரையும் புறங்கூறாது, குறை கூறாது நிறைவைக் காட்டுங்கள். இருளை சபித்துக் கொள்ளும் இயல்பைவிட்டு சிறு தீபமேற்றுங்கள்.

அன்பும் எளிமையும் சகிப்புத்தன்மையும் பொறுமை யும் ஈகையும் எவரொருவர் பெற்றுள்ளாரோ, அவர் எளிதில் ஆண்டவனை அடைந்துவிடுவார். ஆசையை அறவே விடுங்கள்.

பிறவியில் மனிதம் மட்டுமே இறைவன் படைப் பில் மிக அரிதான சிறப்புகள் கொண்டது. உணர்வு களை இனம் கண்டு, வேறுபாடு கண்டு வெளிப் படுத்தும் தன்மை கொண்டது. அருசி, பசி, வலி, துக்கம், கண்ணீர், பாசம், ஈகை, கோபம், தயை, இழப்பு, ஏளனம், கர்வம் என்னும் இன்னும் பலப் பல குணங்களை வெளிப்படுத்தியும், வெளிப் படுத்துபவர்களை இனம் காணும் தந்திரத்தையும், புத்திசாலித்தனத்தையும் உணர்வினாலே மனிதன் கற்றுக்கொள்கிறான் என்பதைவிட, ஆண்டவன் பல சந்தர்ப்பங்களில் அவ்வுணர்வுகளை இனம் காணச்செய்கிறான். அத்தனை மேன்மையான குணங்களும், கீழ்த்தரமான எண்ணங்களும் ஒரே மாதிரிதான் பிறக்கின்றன. தீதெது, நன்றெது என்பதை ஒரு சூழ்நிலைமூலம் நமக்கு அவன் தெளிவுறக் காண்பிக்கிறான். சத்தியத்தின் அடிப் படையிலும், தர்மத்தின் வழிகாட்டுதல்படியும் எவனொருவன் நேர்மையுடன் தனது இறுதி வரை வாழ்ந்து முடிக்கிறானோ, அவனை இவ்வுலகுள்ளவரை போற்றிக்கொண்டு, உதாரண கர்த்தாவாக நினைத்துக்கொண்டு வாழ்வது நிச்சயம்! மகாராஜா அரிச்சந்திரன் மிகச்சிறந்த புராண உதாரணம். இஷ்வாகு குலத்தவன். எனது மூலராமனின் முன்னவன்; என் ராமன் அரிச் சந்திரனைவிட வல்லவன்; அவனைவிட சிறந்த வன் சத்தியநித்தியன்; சகோதரப் பிரியன்; மனைவி யைத்தவிர பிற மாதரைக் கண்ணெடுத்தும் பாராத வன். ராமனைவிட அவன் நாமம் சிறந்தது. பலம் வாய்ந்தது.''

ஸ்ரீராகவேந்திரர் சற்று உயர மாயிருந்த பாறைமீது அமர்ந்து கொண்டு ஸ்ரீராமனைப் பற்றி இப்படியாகப் போற்றிக்கொண்டிருந்தார். கண தாளத்து மக்கள் ஸ்ரீராகவேந்திரரின் அருளுரை யினை புல்தரையினில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தனர். "இந்த மாபெரும் மகான் நமது சுல்தானின் ராஜ்ஜியம் வந்து அவரது அபிமானம் பெற்றதோடல்லாமல், இந்த பூமியின் சிறப்பினையும், ராமாயண, மகாபாரதத் தொடர்பு பெற்ற தலம் இதுவெனவும், அதற்கான நிகழ்வுகளையும் சான்றுகளையும் தனது சீடர்களுக்கும் முக்கியஸ்தர்களும் எடுத்துக்கூறிய ஞானம் எப்பேற்பட்டது' என்பதையெண்ணி மக்கள் வியந்து, தங்களுக்குள் கருத்துகளைப் பரிமாறி சந்துஷ்டி கொண்டனர்.

Advertisment

அன்று ஸ்ரீராகவேந்திரர் அதிகாலை யிலேயே ஸ்நானம் முடித்து, காயத்ரி ஜெபித்து தனது அத்தனை அனுஷ்டானங் களையும் முடித்துக்கொண்டார். மூலராமப் பூஜையினையும் ஆரம்பித்துவிட்டார்.

அவரது கருணா நயனங்கள் யாரையோ தேடின. லக்ஷ்மிநாராயணனும் வேங்கட நாராயணனும் அருகிலேயே இருந்து சுவாமிகளின் அனைத்து பூஜாகாரியங் களையும் உடனிருந்து கவனிக்கலாயினர். ஆயிற்று. ஆரத்தியும் காண்பித்தாகிவிட்டது. ஸ்ரீராகவேந்திரர் பார்வையின் தேடல் கண்டு மற்றொரு சீடன் அருகேசென்று வாய் பொத்தி நிற்க, ""அப்பண்ணா எங்கே?'' என்றார்.

""தெரியவில்லை குருவே. காலை நதி யோரம் சென்றார். இதுவரை திரும்பவில்லை ஸ்வாமிகளே.''

Advertisment

""தன்னுள் ஆழ்ந்த தியானம். ஆயினும் சஞ்சலம். நேரம் அவரைத் தின்றிருக்கும். இன்று என்னுடன் அப்பண்ணா இருந்தபின்... ம்...

இருந்து செல்ல வேண்டியுள்ளது. கண்மூடி அமர்ந்திருக்கும் அப்பண்ணாவை நான் அழைப்பதாகக்கூறி அழைத்து வா'' என்றார் ஸ்வாமிகள்.

அப்பண்ணாவுக்கு அன்று துங்கை ஸ்நானம் ஏனோ மனதுக்கு இதம் தரவில்லை. ஒவ்வொரு நாளும் துங்கை ஸ்நானம் மிக குதூகலமான ஒன்று அவருக்கு. ஆனால் அன்றோ ஏதோ பதட்டமாகவும் மனதுள் கலவரமாயும் உணர்ந்தார். சூரிய நமஸ்காரம் செய்து அர்க்கி யம் விட்டாயிற்று. சூரியனின் இதமான கதிர்கள் தனது சரீரம் தீண்டும் முன்பாகவே கண் மூடி தன்னுள் ஆழ்ந்து போகலானார். அந்த உள்ளொளிப் பயணத்தில் அவரின் பயணத்தை நீண்டுபோய்ப் போய்... திருப்தி ஏற்பட்டாலொழிய தன்னிலை திரும்ப வெகு நேரமாகும். அன்று அவரது பயணம் இன்னும் நெடியதாக இருந்தது. ஆனால் ஆங்காங்கே தடுக்கி விழலானார். பின்னும் பயணத்தை வலுக்கட்டாயமாய்த் தொடர்ந்தார். பல தடுக்கல்கள். நடுவே மனதுடன் மல்லுக்கு நின்று இன்னும் இன்னும் தூரத்தை அதிகமாக்கினார்.

ஆனால் இதுநாள்வரை இருந்த மென்மை அந்த தினசரி பயணத்தில் இல்லையென்பதை அவராலேயே உணரமுடிந்தது. கண் திறந்தவர் தான் நேரம் கடந்துவிட்டதை அனுமானித்தார். "அடடா... பூஜை நேரம் முடிந்திருக்குமே. ஆ... ஸ்வாமிகள் என்ன நினைப்பாரோ! என் செய்வேன்? அவர் மனது வேதனைப் பட்டிருக்குமோ... துளசி தளங்களையும் பறித்துவைத்துவிட்டு வருவதுதானே வழக்கம். இன்றெப்படி மறந்து போனேன்.' அப்பண்ணா வெகுவாய்க் கலங்கிப்போனார்! தூரத்தே மடத்து மற்றொரு சீடன் வெகுவேகமாய் ஓட்டநடையில் தன்னை நோக்கி வருவதைக் கண்ணுற்றார்.

""வா... முகுந்தா... ஏனிந்த அவசரம்?''

""ஸ்வாமிகள் உங்களை கையுடன் அழைத்து வரச் சொன்னார்.''

""ஏதேனும் என்னால் தடங்கலா?''

""அல்ல அப்பண்ணா அவர்களே. முழுக்க முழுக்க குருக்களின் பார்வை உங்களையே தேடியது என்பதை அனைவருமே உணர்ந்தனர்.''

""ஏதேது. என்னால் ஏதாவது குறை ஏற்பட்டதோ?'' என்று உடனே அப்பண்ணா பதட்டப்பட்டார்.

""நீங்கள் இல்லையே என்ற வெற்றிடத்தை அவர் பார்வை வெளிப்படுத்தியதே உங்களின் பாக்கியமல்லவா?''

""தவறப்பா. குருவானவர் என்னைத் தேடும்படிக்கு நான் நடந்துகொண்டது எனது பிழையல்லவா?'' என மனம் நொந்தார்.

""வாருங்கள் தீர்த்தப் பிரசாதம் முடிவதற்குள் நாம் செல்வது நல்லது, ஸ்வாமிகள் உணவருந்தி முடிக்கவேண்டுமல்லவா. மேலும் இன்று துவாதசியாயிற்றே...''

"அடடா! எப்பேற்பட்ட தவறைப் புரிந்து விட்டேன். இன்று மடத்தில் துவாதசி. நேற்று முழுக்க கொலைப்பட்டினியாயிற்றே. இன்று காலையிலேயே தீர்த்தப் பிரசாதம் முடிந்துவிட வேண்டுமல்லவா. அடடா! காலதாமதமல்லவா ஆகிவிட்டது!' அப்பண்ணா மிகுந்த கவலைக் குள்ளானார்.

சுடுமணலில் கால் புதையப்புதைய ஸ்ரீமடம் நோக்கி வேக நடையானார்கள் அப்பண்ணா வும் முகுந்தனும்.

ஸ்ரீராகவேந்திரர் அதற்குள் தியானத்துள் ஆழ்ந்துவிட்டிருந்தார். வியர்வை வழிந்தோட உள்ளே நுழைந்தார்கள். ஸ்ரீராயர் தியானத்துள் ஆழ்ந்துவிட்டது கண்டு அப்பண்ணா பெரிதும் கவலையானார். தான் காலம் தாழ்த்தியதாலேயே தம் குரு இன்னும் உணவெடுக்காதது கண்டு மிகுந்த குற்றவுணர்வுடன் ஸ்வாமிகள் முன்பாக நின்றுகொண்டிருந்தார். ஈரம் சுமந்த துங்கபத்ரையின் காற்று சில்லென்று தேகம் தழுவ, நெற்றியில், தோள்களில், திருமார்பில் என திருச்சின்னங்களை கோபி சந்தனத்தினால் தரித்துக்கொண்டு, தோளில் பலாச தண்டம் சாய்ந்திருக்க, தூய காவி வஸ்திரம் தலைக்கேசம் மூடி லேசாய்ப் போர்த்தி, முதுகினைப் பாதி மூடி, இடுப்பு சுற்றி பின் கீழிறங்கியிருந்தது.

அவர் முன்பாக ஒற்றைச் செங்கலளவு சாணம் பூசிய உயர மண்மேட்டில், பெரியது மன்றி சிறியதுமன்றி நடுத்தரமான ஒரு விளக்கு சுடர்விட்டு எரிந்துகொண்டிருக்க, பத்மாசனமிட்ட கால்களுக்குமுன்பாக அகன்ற சிறு தாம்பாளத்தில் அட்சதையும் மலர்களும் கலந்துவைக்கப்பட்டிருந்தன. அந்த சிற்றறை யில், காற்றோட்டத்தில் லேசாக ஆடிய அந்த ஜுவாலையில், பிரகாசமான சூரியன் காவி போர்த்தி கண்மூடி தவம் செய்வதாகக் காண்போர் அனைவருக்கும் தோன்றியது. கைகூப்பி வணங்கியவண்ணம் பக்தர் கூட்டம் தரிசித்து பக்தியோடு நகர்ந்துகொண்டிருக்க, அப்பண்ணா மட்டும் பதைபதைப்பு மாறாது ஸ்வாமிகள் விழிதிறக்கக் காத்துக்கொண்டி ருந்தார்.

மெல்ல விழிமலர்ந்தார் ஸ்வாமிகள். எதிர்நின்ற தனது ப்ரிய அப்பண்ணாவைக் கண்டவுடன் அவரிடமிருந்து புன்னகையும் பிறந்தது. சட்டென்று அப்பண்ணா அவர் பாதம் பணிந்து எழுந்துநிற்க, அவரை ஆசிர்வதித்து அட்சதையளிக்க, பணிந்து வாங்கிய அப்பண்ணா தனது சிரசில் தரித்துக்கொண்டார்.

""என்ன அப்பண்ணா... புதிய தோழமை உண்டாகியிருப்பதுபோல் தோன்றுகிறது?''

""அப்படி யாருமில்லை குருவே'' என்றார் நெற்றி சுருக்கி.

""நான் உனது மறதியைச் சொன்னேனப்பா.''

""மன்னிக்கவேண்டும். என்னால் பூஜைக்கு காலதாமதம் ஏற்பட்டமைக்கு வருந்துகிறேன் ஸ்வாமி. ஏனோ இன்று படபடப்பும் பதட்ட மும் இருந்துகொண்டே இருக்கிறது. ஸ்வாமி கள் என்னை மன்னித்தருள வேண்டும். தாங்கள் இன்று உணவருந்தும் காலம் அதிகமானது என்னாலன்றோ...''

""இல்லையப்பா. இன்று உன்னுடன் சேர்ந்து உணவருந்த என் ராமன் திருவுளம் கொண்டுள்ளான் போலுள்ளது. மேலும் நானும் அதை விரும்புகிறேன்'' என்றவுடன், அப்பண்ணா விழிகளில் ஆனந்த பாஷ்யம் பெருகியது.

""தன்யனானேன் ஸ்வாமி... தன்யனா னேன்'' என்றார் உணர்ச்சிப் பெருக்கில் கைகூப்பிக்கொண்டு. அன்று உணவில் இனிப்புப் பலகாரங்கள் அதிகம் இடம்பெற்றிருந்தன. தீர்த்தப் பிரசாதம் முடிந்தபிறகு குறிப்பிட்ட வர்கள் தன்னுடன் சிறிதுதூரம் பயணப்பட் டுத் திரும்பவேண்டியுள்ளது என ஸ்ரீராகவேந்திர ரால் சொல்லப்பட்டிருந்ததால், அனைவரும் குதூகலமாய்த் தயாராய் இருந்தனர்.

முகுந்தனிடம் பயணத்தின்போது பயன் படுத்தும் வகையில் ஒரு மூட்டை இருந்தது. அதில் உலர்ந்த பழங்கள் மற்றும் வெகுநாட்கள் தாங்கக்கூடிய உணவுப் பொருட்களும் சிறிது அதிகமாய் இருந்தன.

rr

""என்ன முகுந்தா... சிறிது தூரப் பயணம் என்றுதானே ஸ்வாமிகள் சொன்னார். மேலும் ஓரிரு மணி நேரத்திற்குள்ளாகத் திரும்பி விடுவோம் என்றல்லவா கூறப்பட்டது. உள்ளே கனிவகைகளும் உலர்ந்த பழங்களும் நிரம்பவே அல்லவா இருக்கின்றன. மாற்று உடுப்புகள் வேறு இருக்கின்றனவே?'' என்றார் அப்பண்ணா.

""தெரியவில்லை. மதிய உணவின்போதே ஸ்வாமிகள் கூறி, இந்த உணவு முடிப்பைத் தங்களிடம் மட்டுமே கொடுக்கக்கூறி உத்தரவு.''

ஸ்வாமி ராகவேந்திரர் தனது சீடர்களுடன் தாம் தங்கியிருந்த மாஞ்சாலம் கிராமத்திலிருந்து மேற்கு நோக்கி நடக்கலானார். ஆங்காங்கே ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த கிராமவாசிகள் ஸ்ரீராயரைக் கண்டவுடன் தத்தமது தலைப்பாகையைக் கழற்றி கக்கத்தில் வைத்துக்கொண்டு, இருகைகூப்பி சந்தோஷத் துடன் வணங்கினர். நன்கு வளர்ந்த புற்களைக் கடித்து மேய்ந்துகொண்டிருந்த உயரமான பசுக்கள் ஸ்ரீராயரது வருகையினைக் கண்டவுடன் கழுத்தைத் திருப்பி தத்தமது ஜீவராசிகளுக்கு "ம்... ம்... மா' என்று குரல் கொடுத்து, கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணிகள் குலுங்க ஓடோடிச்சென்று ஸ்ரீராகவேந்திரை அன்பாய்ச் சூழ்ந்துகொண்டன. ஸ்வாமிகள் புன்னகைத்து அவற்றின் சிரசை வருடினார்.

மெல்ல முதுகையும் கழுத்தையும் தடவிக் கொடுத்தார். முகத்தோடு முகம் சேர்த்து, அன்பாய் அவற்றை ஒவ்வொன்றாய் சேர்த் தணைத்தார். அவை ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டு தங்கள் முகத்தை அவர் முன்பாகப் புகுத்தின. மிக நீண்ட புல்லாங்குழலைத் தோளில் சாய்த்துக்கொண்ட கண்ணபரமாத்மா தன் ஆவினங்களோடு அளவளாவுவது போன்றிருந்தது அந்த காட்சி. அவை அத்தனையையும் கரத்தால் ஸ்பரிசித்து பின் நகர்ந்தார். சில மணி நடந்து, மிக உயரமான, புதர் போன்ற இடத்திற்கு அருகில் சென்று நின்றார். அங்கு செடிகளும் கொடிகளும் மண்டிக்கிடக்க, தனது கைகளால் அவற்றை விலக்க ஆரம்பிக்க, சீடர்கள் சூழ்நிலையினை உணர்ந்து தாங்கள் முன்வந்து அவ்விடத்தை சுத்தம் செய்யலாயினர்.

அங்கிருந்த ஒரு அழகான பாறையில் மெல்லிய மஞ்சள் நிற ரேகையோடிருக்க, அது வழுவழுப்பாய் சற்று அகலமாய் இருந்தது. ஸ்ரீராகவேந்திரர் பரவசமானார்.

அவரது உதடுகள் மெல்லத் துடிக்கத் தொடங்கின. "ஸ்ரீராமா... ஸ்ரீராமா...' என்றபடி கண்கள் மெல்ல மூடி இருகரம் கூப்பி அந்தப் பாறையை வணங்கலானார். "ராம... ராம... ராம...' என்று ராம மந்திரம் அவரிடமிருந்து அதிர்ந்து அதிர்ந்து உச்சரிக்கப்பட, அவ்விடம் சட்டென்று குளுமையானது. நல்லதொரு நறுமணம் அங்கு எழுந்தது. சில மணித்துளிகள் நீடித்து பின் மெல்ல நிலை திரும்பியது.

""ஸ்வாமிகள் பவித்ரமாய் வணங்குவதென் றால், இந்தப் பாறைக்கு ஏதேனும் மகிமை இருக்கிதென்று நினைக்கத் தோன்றுகிறது'' என்றார் அப்பண்ணா.

""உண்மைதான். கணதாளத்தில் அனுமன் ஸ்ரீராம சங்கீர்த்தனத்தில் தன்னைக் கரைத்துக் கொண்டிருக்கின்றாரே.. அனுமனின் அனுமானம் சரியாகத்தானிருக்கும் என எண்ணினேன். அது உண்மைதான். என் ஆத்ம ராமனின் வாசனை இங்குதான் ஜனித்திருக்கிறது. சீடர்களே, உங்களுக்கு இன்று ஓர் உன்னதத்தைக் கூறப்போகிறேன். இந்த மாஞ்சால கிராமத்திற்கும் இராமாயண- மகாபாரதத்திற்கும் நெருங்கியதோர் சம்பந்தம் இருப்பதனாலேயே- அந்த ஸ்ரீமன் நாராயணன் எனது இறுதி நாட்களுக்கு உறுதியான இடம் இதுவென்று கருதியதாலேயே, என்னைத் தமிழகத்திலிருந்து இங்கழைத்து இத்திருவிடத்தை இனம்காண வைத்துள்ளார். ஆம்; அன்னை சீதாபிராட்டியினைத் தேடிச்சென்றபோது ஸ்ரீராம லட்சுமணர்கள் இந்தப் பாறையில் ஏழு நாழிகைகள் அமர்ந்து இளைப்பாறிச் சென்றனர். எல்லாரும் சேவித்துக்கொள்ளுங்கள்'' என்றார். அனைவரும் வியப்புடனும் பக்தியுடனும் வணங்கி எழுந்தனர்.

""வெங்கண்ணரே. இதோ, என் ஸ்ரீராமன் அமர்ந்து தன்னை ஆசுவாசித்துக்கொண்ட இந்தப் பாறையில், நான் பிருந்தாவனப் பிரவேசம் செய்கையில் அதன்மீது கண்மூடிப் பல வருடம் தவமிருந்து, என்னிடம் கோரிக்கை வைத்து வருபவர்களின் நியாயமானவற்றை நிறைவேற்றி ஆசுவாசப்படுத்துவேன். எனவே இதனையே எனக்கு அடிக்கல்லாக ஸ்தாபிக்க வேண்டும். இன்றிலிருந்து எனது ஜீவ பிருந்தாவன வேலைகளைப் படிப்படியாக ஆரம்பிக்கவேண்டிய பொறுப்பில் நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள். வெங்கண்ணரே, உங்களுக்கு முதல்வேலையாக இதனைக் காண்பித்துள்ளேன். அப்பண்ணா, என் அருகில் வா...'' என்றார் ஸ்ரீராகவேந்திரர். பவ்யமாய் வணங்கிநிற்கும் அவரைக் கனிவுடன் பார்த்துக்கொண்டிருந்தார். அந்தப் பார்வையில் காருண்யம் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. ஸ்வாமிகள் வெகுநேரம் மௌனம் காத்தார். அனைவருக்குமே இது பெருத்த ஆச்சரியமாக இருந்தது. ஸ்வாமிகள் தனது பார்வையை அவர்மீதிருந்து அகற்றாமலேயே இருந்தார். அப்பண்ணாவும் தனது குருவின் முன்பாக தலைவணங்கி மௌனம் கலையாது நின்று கொண்டேயிருந்தார். ஸ்ரீராயர் அவரைத் தொட்டு ஆசிர்வதித்தார்.

""சீடர்களே! ப்ராமணம் என்பது ஒரு பக்குவம்; ஒரு தனித்துவ நிலை. யக்ஞோபவீதம் பரமபவித்திரம். ஒரு ப்ராமணன் யக்ஞோபவீதம் தரிப்பதினாலேயே பவித்ரமானாகிவிடுகிறான். எனதருமை அப்பண்ணா, நீ யக்ஞோபவீதம் தரித்த யஞ்ஞோபவீதம். உனக்கு இன்றொரு முக்கிய பணியைத் தரப்போகிறேன். அதைச் செய்ய உனக்கு மட்டுமே உரிமையுண்டு.''

""சொல்லுங்கள் ஐயனே... செய்து முடிக்கிறேன்.''

""நல்லதப்பா. இன்றே இப்போதே நீ புறப் படவேண்டும். எனவே.''

""சொல்லுங்கள், காத்திருக்கிறேன்.''

""எனது பிருந்தாவனப் பிரவேச செய்தியினை நீ மட்டும் இந்த மக்களுக்கு... ஆம்; பரந்த இந்த சமூகத்திற்கு- குறிப்பாக நான் சஞ்சரித்த பிரதேசங்களுக்கு- முடிந்தால் நீ சென்று தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.''

இடியே தன் தலைமீது ஒட்டுமொத்தமாய் இறங்கிவிட்டதாய், ஸ்வாமிகளின் பிரிவின் தாக்கத்தை உணர்ந்து அதைத் தாங்க இயலாது ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் சட்டென்று மயங்கி விழுந்தார் அப்பண்ணா.

ஸ்வாமிகள் எந்த சலனமுமின்றிப் பார்த்துக் கொண்டிருக்க, கூடிநின்றோர் சட்டென்று இயங்கி அப்பண்ணாவைத் தாங்கி முகத்தில் நீர் தெளித்து மயக்கம் தெளிவித்தனர்.

தன் அன்பிற்கினிய சீடன் வாழ்க்கையின் நிதர்சனத்திற்கு பயந்து ஓடிவிட எண்ணும் போது, ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கும்போது, குருவானவர் மிக நிதானித்து உணரவைத்து உபதேசிப்பது, "களத்திற்கு வந்தவர்கள் கலங்க லாகாது' என்று ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உணர்த்தியது போன்று இங்கு ஸ்ரீராகவேந்திரர் தனதருமை சீடருக்கு நிதர் சனத்தை உணரவைத்தார்.

""அப்பண்ணா, உன் பயத்தை விட்டொழி... அது ஒருவகையான அறியாமை. அந்த அறியாமை மிகுந்த பயத்தையே தந்து கோழைத்தனத்தை உருவாக்கிவிடும். பிட்சாலயாவின் சிறந்த ஆச்சார்யனான நீயா நிதர்தனம் கண்டு மிரள்வது?''

""ஐயனே, தாயைப்போன்று நீங்களி ருக்க, நாங்கள் யோசிக்கக்கூட பிரயாசைப் படுவதில்லை. நீங்கள்தானே எனக்கு சகலமும். எனவேதான் சலனமற்று, யோசனையற்று தங்களையே சரணடைந்திருக்கிறேன் என்கிறபோது, தாயை இழந்த சேயாவேன் என்கிற என் நிலையில், தாயே தன் பிள்ளையைப் பிரிந்துபோகச் சொல்வது நியாயம்தானா ஸ்வாமி?''

""நீ மறுபடி மறுபடி உன்னுள் சோர்வது நல்லதல்ல. உனது சரணாகதியும், ஆசானிடம் நீ கொண்ட அன்புமயமான குருபக்தியும் அற்புதமானது. செயல்கள் ஒன்றோடொன்று தொடர்புகொண்டும், எல்லாரையும் ஒன்றாகக் கருதி ஒருவரையொருவர் சார்ந்திருத்தலும் வேண்டும். நீ முதலில் பயணத்திற்கு நேற்றே என்னளவில் ஆயத்தப்படுத்தப்பட்டுவிட்டாய். பல இடங்களுக்குப் பயணப்பட்டு, பிருந்தா வன செய்தி கேட்டுத் துக்கப்படுபவர்களை ஆற்றுப்படுத்தி, ஒன்றோடொன்று தொடர்புப் படுத்தி, நிதர்சனத்தைப் புரியச்செய்து, ஒன்றை யொன்று சார்ந்திருத்தல் பற்றி உபதேசித்து அவர்களை அமைதிப்படுத்து. இன்றே புறப்படுவாய். இது எனது ஆணை. இனி மேலும் இதுபற்றிப் பேசி நீட்டிக்க வேண்டாம்.

ம்... போய்வா அப்பண்ணா. நீ திரும்பி வருகிற நேரம், காலத்தால் யாருக்கும் கிடைக்காத சிறப்பு உனக்குக் கிடைக்கும். என்னைப் பற்றி இந்த பக்தருலகம் போற்றுகையில், அது உன் பின்புலம் கொண்டதாக இருக்கும். உன்னையும் கொண்டாடும். ம்... போய்வா...'' என்று தன் கரத்தை திசை காட்டி அப்படியே நிறுத்தினார்.

அதில் மறுப்பதற்கில்லா உறுதி இருந்த தனால் மேற்கொண்டு பேசவியலாமல் நெடுஞ்சாண்கிடையாக தனது குருவின் பாதம்பணிந்தார்.

நீண்டு நெடுஞ்சாண் கிடையாக வணங்கினா லும் அவரின் தேகம் குலுங்கிக் குலுங்கி அடங்கியது. அவர் தாங்க இயலாத துக்கத்தில் அழுவது மற்றவர்களுக்குப் புரிந்தது. மெல்ல தள்ளாட்டமுடன் எழுந்தவர் மறுபடி தலைதாழ்ந்து வணங்கி, முகுந்தனிடம் அந்த துணிமுடிப்பை வாங்கித் தோளில் சாய்த்துக்கொண்டு தனது பயணத்தை ஆரம்பித்தார். ஆஞ்சனேயர் ராம காரியமாய்ப் பயணப்பட்டதுபோன்று, ராயர் காரியம் பொருட்டு அப்பண்ணா பயணப்பட்டதாக அந்த சூழ்நிலை தன்னிகரற்றதாய் அமைந்தது.

"போய் வா அப்பண்ணா. என் அருமைச் சீடனே, நீ திரும்பிவரும் நேரம் உன்னதமான நிலைக்கு ஆட்படுவாய். உன்னிலிருந்து நான் என்னை முதலில் வெளிப்படுத்த ஆரம்பிப்பேன்' என ஸ்ரீராயர் ஆத்மார்த்தமாக தன் மனதிற்குள்ளாக நிறைவாய் வாழ்த்தினார்.

எல்லாரும் ஸ்ரீராகவேந்திரரையே பார்த்துக் கொண்டிருக்க, அவர் மட்டும் தூரத்தே நடந்து செல்லும் அப்பண்ணாவையே பார்த்துக்கொண்டிருந்தார். அவர் புள்ளியாகிக் காட்சியிலிருந்து கரைகின்றவரை பார்த்துக்கொண்டிருந்தார்.

ஒப்பீடுகளும் வேறுபாடுகளும் ஒன்றைவிட பிறிதொன்று மேன்மையானதென்று கூறவே சொல்லப்படுபவையாக இருந்தாலும், ராகவேந்திரர் தனது சரித்திரத்தில் தனித்து, ஒப்பீடுகளுக்கும் வேறுபாடுகளுக்கும் அப் பாற்பட்டவர் அப்பண்ணா என நமக்கு உணர்த்துகிறார். அவரின் நெடிய பயணத்தில் அவர் தனது அத்தனை உணர்வுகளையும் மறந்து, ஸ்ரீராயரின் பிருந்தாவனப் பிரவேசம் பற்றி பலப்பல இடங்களில் தெரிவித்து, மக்களின் வேதனைகளையும், ஏன், எதற்காக ஸ்வாமிகளின் ஜீவ பிருந்தாவனப் பிரவேசம் என்பது பற்றித் தெளிவித்து, ஒவ்வோரிடத்திலும் அவரது அயராத சேவை, அவர் பட்ட கஷ்டங்கள், கடின நாட்கள், பயணங்கள் நெடியது. உணர்வுகளுக்குள் அடக்க முடியாதவை. அவரது குரு சேவை தன்னிகரற்றது. "போய்வா' என்ற தனது குருவின் பொன்னான ஆணைக்கு அடிபணிந்து அவர் கடந்த பயண நாட்கள் அசாதாரணமானவை. தன்னலமற்றவை.

(தொடரும்)