ஐந்தாவது சர்க்கம் சுகேசனின் வம்சத் தோற்றம்

ராமபிரானுக்கு அகத்தியர் கூறுவது...

அரக்கர் குலத்தில் தோன்றிய சுகேசன் சிவபெருமானிடமிருந்து பல வரங்களைப் பெற்று தன்னிகரற்று விளங்குவதை கிராமணீ என்னும் கந்தர்வன் கண்டான். அவனுக்கு இளமையும் அழகும் நிரம்பிய- இன்னொரு மகாலட்சுமியோ என்று வியக்குமளவுக்கு தோற்றப்பொலிவு கொண்ட தேவவதி என்னும் மகள் இருந்தாள். அவளை, பெருஞ்செல்வத்தையே அள்ளிக்கொடுப்பதுபோல சுகேசனுக்கு முறைப்படி திருமணம் செய்துகொடுத்தான் கிராமணீ.

செல்வச்செழிப்புடன், வரங்கள் பலவும்பெற்ற சுகேசனை மனதிற்கேற்ற மணாளனாகப் பெற்ற தேவவதி, ஏதுமற்ற ஏழை நவநிதிகளும் கிடைக்கப்பெற்றதுபோல அளவற்ற பூரிப்பில் இருந்தாள். எண்திசை யானைகளுள் ஒன்றான அஞ்சனம் எனும் யானையிடமிருந்து தோன்றிய பெரிய ஆண் யானையானது, பெண் யானையுடன் சேர்ந்து களித்திருப்பதுபோல தேவவதி யுடன் இன்புற்றிருந்தான் சுகேசன்.

Advertisment

அவர்களுக்கு முக்கண்ணுடைய சிவபெருமானைப்போல ஒளிபொருந்திய மூன்று புதல்வர்கள் பிறந்தனர். மால்யவான், சுமாலி, மாலி என பெயர்கொண்ட அவர்களுள் மாலி என்பவன் மிகுந்த வலிமை யுடையவனாக இருந்தான். மூன்று உலகங்கள், மூன்று தீக்கனல்போன்று திகழ்ந்த அவர்கள் வாதம், பித்தம், கபம் என்னும் மூவகை நோய்களைப்போல அச்சுறுத்தக்கூடியவர்களாகவும் இருந்தனர்.

அலட்சியப்படுத்தப்பட்ட வியாதியைப் போல வெகு விரைவாக வளர்ந்தனர்.

தங்களது தந்தை நிகரற்ற செல்வங்களையும் அரிய வரங்களையும் சிவ- பார்வதியிட மிருந்து பெற்றார் என்பதையுணர்ந்த அம் மூவரும், தாங்களும் அதுபோன்று பெருமையடையவேண்டுமென்று உறுதிபூண்டு தவம் மேற்கொள்வதற்காக மேரு மலைக்குச் சென்றனர்.

Advertisment

அரக்கர்களான அவர்கள் புலன்களையடக்கிக் கடுந்தவம் புரியத் தொடங்கினர்.

செயற்கரிய அவர்களது தவத்தின் வெப்பம் மூவுலகங்களிலுமிருந்த தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் ஆகியோரைத் தாக்கி பெரும் வேதனைகொள்ளச் செய்தது. அனைத்துயிர்களையும் அஞ்சச் செய்வதாக இருந்தது அவர்களது தவக்கனல்.

இதைக்கண்ட பிரம்மதேவர், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் சூழ்ந்துவர அவர்கள் முன் தோன்றினார். பிரம்மதேவரைக் கண்ட அவர்கள் மூவரும், காற்றிலாடும் மரங்களைப்போல பரவசத்தால் விதிர்விதிர்த்து கைகூப்பித் தொழுதார்கள்.

""எங்களது தவத்துக்கு மகிழ்ந்து வரமளிக்க சித்தமுடையவராக இருந்தால், பரம்பொருளான பிரம்மதேவரே, எவராலும் வெல்ல முடியாதவர்களாகவும், எதிரிகளைக் கொல்பவர்களாகவும், இறப்பற்றவர்களாகவும் நாங்கள் விளங்கவேண்டும். எங்களுக்குள் மனபேதமின்றி அன்புடன் வாழவேண்டும். இவ்வரங்களைத் தாங்கள் அருளவேண்டும்'' என்று வேண்டினர். பிரம்மதேவரும் அவர்கள் கேட்டபடியே வரமருளினார்.

வரம்பெற்றபின் அச்சமென்பதையே மறந்துவிட்ட அவர்களால் அனைவரும் துன்புற்றனர். நரகத்தில் விழுந்து வேதனையுறும் மனித ஆன்மாக்களைப்போல பெருந்துயருற்ற தேவர்களும் முனிவர்களும் சாரணர்களும், தங்களைக் காப்பவர் எவருமின்றித் தவித்தனர்.

இந்நிலையில் அரக்கர்கள் மூவரும் தேவலோகச் சிற்பியான விஸ்வகர்மாவிடம் சென்று, ""ஆண்மை, ஆற்றல், உடல் வலிமை, உள்ளொளி பெற்ற தேவர்களின் விருப்பப்படி, அவர்களுக்கான மாளிகைகளை அமைத்துத் தருபவர் நீங்கள். அதுபோல எங்களுக்கான வசிப்பிடத்தையும் தாங்கள்தான் அமைத்துத் தரவேண்டும். சிவபெருமான் விளங்கும் கயிலை போன்ற ஒரு வசிப்பிடத்தை- அது இமயம், மேரு, மந்தரம் போன்ற எந்த மலையிலாவது இருக்கட்டும்- எங்களுக்கு அமைத்துத் தாருங்கள்'' என்று மகிழ்வுடன் கேட்டனர்.

அதற்கு விஸ்வகர்மா, ""அரக்கர் தலைவர்களே... தென்திசைக் கடலோரத்தில் திரிகூடம் என்னும் மலை உள்ளது.

அதற்கருகில் சுவேலம் என்னும் வேறொரு மலையும் உண்டு. அந்த மலையுச்சியில் மேகநிறம் கொண்ட சிகரம் உண்டு. உளிகொண்டு வழுவழுப்பாகச் செதுக்கப் பட்ட அந்த சிகரத்தில் பறவைகள்கூட சென்று தங்கமுடியாது. இந்திரன் கேட்டுக் கொண்டபடி அப்பகுதியில் முந்நூறு யோசனை நீளமும், நூறு யோசனை அகலமும்கொண்ட இலங்கை என்னும் நகரை முன்பு உருவாக்கினேன். தங்கத்தால் அமைக்கப்பட்ட நுழைவாயிலையும் மதிற்சுவர்களையும் கொண்டது அது. எதிரிகள் எவராலும் நெருங்கமுடியாத அவ்விடத்தில், அமராவதிப் பட்டினத்தில் இந்திரன் தலைமையிலான தேவர்கள் மகிழ்வுடன் வாழ்வதைப்போல நீங்களும் சென்று வாழ்வீர்களாக"" என்று கூறினார்.

kk

அதன்படியே அவர்கள் ஆயிரக்கணக்கான வேலையாட்களுடன் இலங்கை சென்று, அகழிகள் சூழப்பெற்று ஏராளமான வீடுகள்கொண்ட அவ்விடத்தில் மகிழ்வுடன் வாழத்தொடங்கினர்.

இந்நிலையில், நர்மதா என்னும் கந்தர்வப் பெண்ணுக்குப் பேரழகுடைய மூன்று மகள்கள் இருந்தனர். நர்மதா அரக்கர் இனத்தைச் சேர்ந்தவளாக இல்லாதபோதும், கந்தர்வ இனத்தைச்சேர்ந்த தனது மகள்களை அரக்கர்குல சுகேசனின் மூன்று மகன்களுக்கும் உத்திர நட்சத்திர நாளில் திருமணம் செய்து கொடுத்தாள். அவர்கள் தங்கள் மனைவி யருடன் இன்புற்று வாழ்ந்திருந்தனர்.

மால்யவான்

தனது மனைவி சுந்தரி மூலம் வஜ்ரமுஷ்டி, விரூபாட்சன், துர்முகன், சுப்தக்னன், மத்தன், உன்மத்தன் ஆகிய ஆறு அரக்க மகன்களைப் பிறப்பித்தான். ஏழாவதாக அனலா என்னும் அழகிய மகளும் சுந்தரிக்குப் பிறந்தாள்.

மால்யவானின் தம்பி சுமாலி, தன் மனைவி கேதுமதியின்மூலம் பிரஹஸ்தன், அகம்பனன், விகடன், காலகார்முகன், தும்ராட்சன், தண்டன், சுபார்ச்வன், சம்ஹராதி, பிரகசன், பாசகர்ணன் ஆகிய பத்து மகன்களைத் தோற்றுவித்தான். மேலும் அவர்களுக்கு ராகா, புஷ்போத்கடா, கைகசி, கும்பீநசி ஆகிய மகள்களும் பிறந்தனர்.

மூன்றாமவனான மாலி, பேரழகியான வசுதா என்னும் தன் மனைவிமூலம் அநலன், அநிலன், ஹரன், சம்பாதி ஆகிய நான்கு அரக்க மைந்தர்களைத் தோற்றுவித்தான். அந்த நால்வரும் இப்போது இலங்கையை ஆண்டுகொண்டிருக்கும் விபீஷணனுக்கு அமைச்சர்களாக உள்ளனர்.

மால்யவான் முதலான மூன்று அரக்க சகோதரர்களும் தங்கள் மக்கட்செல்வத் தாலும் பொருட்செல்வத்தாலும் வரங்களின் சக்தியாலும் மிகவும் ஆணவம்கொண்டு, இந்திரன் முதலான தேவர்களுக்கும் முனிவர் களுக்கும் நாகர்களுக்கும் யட்சர்களுக்கும் பெருந்துன்பம் தந்தனர். வேள்விகளை அழிப்பதில் எப்போதும் ஈடுபட்டனர்.

ஆறாவது சர்க்கம்

திருமால்- மால்யவான் போர் இராமபிரானுக்கு அகத்தியர், அரக்கர்கள் வரலாற்றைத் தொடர்ந்து கூறுகிறார்...

அரக்கர்களால் துன்பத்திற்காளான தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானைச் சரணடைந்தனர்.

உலகத்தைத் தோற்றுவிப்பவரும் அழிப்பவரும், பிறப்பற்றவரும், பார்வைக்குத் தென் படாத வடிவுடைய வரும், அனைத்து லகங்களுக்கும் ஆதாரமானவரும், போற்றுதலுக்குரிய வரும், மன்மதனை வென்றவரும், முப்புரங்களை எரித்த வரும், முக்கண்ணருமாகிய பரமேஸ்வரரைத் தொழுது, கலங்கிய நெஞ்சினராகக் கூறலாயினர்.

""இறைவா, சுகேசனுடைய மகன்கள் பிரம்மதேவரிடமிருந்து பெற்ற வரங்களால் மிகவும் செருக்குற்று அனைவருக்கும் துன்பமிழைத்து வருகின்றனர். எல்லாருக்கும் அபயமளிக்கும் இடங்களான எங்கள் ஆசிரமங்கள் எவரும் வாழமுடியாத வண்ணம் அவர்களால் தகர்க்கப்பட்டன. தேவர்களை தேவலோகத்திலிருந்து அகற்றிவிட்டு அரக்கர்கள் களிப்புடன் வாழ்கின்றனர்.

அரக்கர் தலைவர்களான மால்யவான், சுமாலி, மாலி ஆகியோர் "நானே திருமால், நானே பிரம்மன், நானே ருத்திரன்; இந்திரன், எமன், வருணன், சூரியன், சந்திரனும் நானே' என முழக்கமிடுகின்றனர்.

அவர்களால் நாங்கள் படும் இன்னலுக்கு அளவில்லை. அச்சத்தால் நடுங்கிக் கொண்டிருக்கும் எங்களுக்குத் தாங்கள் தான் அபயமளிக்க வேண்டும். மகா ருத்ரனாகத் தோன்றி அவர்களை அழிக்க வேண்டும்'' என்று இறைஞ்சி நின்றனர்.

அதற்கு சிவபெருமான், ""கானகத்தில் சிறு குழந்தையாக ஆதரவற்றுக் கிடந்த சுகேசனைக் காப்பாற்றி அவனுக்கு பல வரங்களையும் அளித்தேன். அவனுடைய புதல்வர்களை நான் கொல்வது ஆகாது.

ஆனாலும் அதற்கொரு வழியை உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் அனைவரும், சரணடைந்தவர்களுக்கு அபயமளித்தருளும் திருமாலிடம் செல்லுங்கள். அவர் மால்ய வான் முதலான அரக்கர்களை அழிப்பார்'' என்று கூறினார்.

சிவபெருமான் உரைத்தவண்ணம் அவர்கள் மகாவிஷ்ணுவைச் சரணடைந்து தங்கள் குறைகளை முறையிட்டனர். பகைவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய ஜனார்த்தனர் அவர்களுக்கு அபயமளித்து, ""சிவபெருமானிடம் வரம்பெற்றதால் செருக்குற்றுத் திரியும் சுகேசன் என்னும் அரக்கனை நானறிவேன். மால்யவான் முதலான அவனது மகன்களையும் அறிவேன்.

அறத்தின் எல்லையை மீறிய அவர்களை நான் கொல்கிறேன். துயரம்நீங்கிச் செல்லுங் கள்'' என்றருளினார்.

இவர்கள் திருமாலிடம் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்த செய்தியையறிந்த மால்யவான் தன் இரு சகோதரர்களையும் நோக்கி, ""தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று, "தங்களின் ஒரு உறுமல் ஒலியாலேயே அவர்களை அழித்துவிடுவீர்கள். அவ்வாறு அழித்து எங்களைக் காக்கவேண்டும்' என்று வேண்டினார்கள்.

அவர்கள் கூறியதைக் கேட்ட கால காலரான சிவபெருமான், தன் உடலசைவால் அதனை மறுத்து, அவர்களது வேண்டுதலை ஏற்கமுடியாததைக் கூறி, "சுகேசனின் மக்கள் என்னால் அழிக்கப்படக்கூடியவர்கள் அல்லர். யார் அவர்களைக் கொல்லத் தக்கவரோ அவரைப்பற்றிக் கூறுகிறேன். சக்ராயுதம், கதாயுதத்தைக் கைகளில் தாங்கியவர்; பட்டாடைகள் உடுத்தியவர்; ஹரிநாராயணர்; ஜனார்த்தனராகிய அவரை சரண்புகுங்கள்' என்றார். சிவபெருமான் அருளியபடி அவர்கள் மகாவிஷ்ணுவைத் தஞ்சமடைந்து தங்கள் குறைகளைக் கூறினார்கள். திருமால் நம்மவர்களைக் கொன்று அவர்களைக் காப்பதாக உறுதியளித்தார்.

அரக்கப் பெருவீரர்களே, பயத்தால் நடுங்கிக்கொண்டிருந்த தேவர்களுக்கு, நம்மைக்கொன்று அவர்களைக் காப்பதாக நாராயணர் உறுதியளித்திருக்கிறார்.

எனவே இதுபற்றி நாம் அடுத்து என்ன செய்யவேண்டுமென்பதை கலந்தாலோசிக்க வேண்டும். தேவ எதிரிகளான இரண்யகசிபு முதலான பலரை அழித்தவரும், இப்போது நம்மையழிக்க சித்தம் கொண்டவருமான நாராயணரை வெல்வது மிகவும் அரிதான செயல்'' என்றான்.

மால்யவான் இவ்வாறு சொன்னதைக்கேட்ட அவனது தம்பிகளான சுமாலியும் மாலியும், ""அண்ணா, நாம் வேதப் பயிற்சி, தானதர்மங்கள், யாகங்கள் செய்திருக்கிறோம். நமக்குக் கிட்டிய அற்புதங்களைத் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நோயற்ற நீண்ட ஆயுள் பெற்றவர்கள் நாம். அறநெறியையும் சரியாகவே பின்பற்றி வந்திருக்கிறோம். தேவர்கள் படையென்னும் ஆழமறியாப் பெருங்கடலில் மூழ்கி, பேராற்றல்கொண்ட எதிரிகளை சஸ்திர அஸ்திரங்களால் எதிர்த்து வெற்றிகண்டோம். எனவே எம பயமென்பது நமக்கில்லை. நாராயணன், ருத்திரன், இந்திரன், எமன் ஆகியோர் நம் எதிரே நிற்கவும் அஞ்சுகின்றனர்.

மகாவிஷ்ணுவானவர் நம்மிடம் கோபம்கொள்ள காரணம் எதுவு மில்லை. தேவர்கள் சென்று முறையிட்ட தால் அவர் மனம் மாறியிருக்கிறது. எனவே நாமனைவரும் ஒன்றிணைந்து, அனைத்துப் படைவீரர்களுடனும் சென்று, நம் ஆபத்துக்கான அறிகுறி களைத் தோற்றுவித்த தேவர்கள் அனைவரையும் கொன்றொழிப்போம்"" என்றனர்.

அவ்வாறே அரக்கர்படை புறப் பட்டது. அவர்கள் மிகுந்த ஆணவத்துடன் இலங்கை நகரிலிருந்து, தேர், யானை, யானைக்கு ஒப்பான உருவம் கொண்ட குதிரை, கழுதை, காளை, ஒட்டகம், சிசுமாரம், பாம்பு, முதலை, ஆமை, மீன், கருடன்போன்ற பறவை, சிங்கம், புலி, பன்றி, மான், பசு இனத் தைச் சேர்ந்த கவயம் என்னும் விலங்கு ஆகியவற்றைத் தத்தமது வாகனங் களாகக் கொண்டு தேவலோகத்தை நோக்கிப் போர்புரியச் சென்றனர்.

அப்போது இலங்கையிலிருந்த காவல் தேவதைகள், இனி இலங்கை அழியப்போவது உறுதியென்றெண்ணி சஞ்சலமுற்றனர்.

அரக்கர்கள் செல்லும் வழியிலேயே- அவர்களுக்கு முன்பாகவே இலங்கையின் காவல் தெய்வங்கள் அங்கிருந்து அகன்றன. அனைத்து திசைகளிலும் உயிரினங்கள் இருக்கக்கூடாத இடத்தில் இருந்துகொண்டு பயமேற்படுத்தும் ஒலிகளை எழுப்பின. எமதர்மன் கட்டளைக்கிணங்க, நிலத்திலும் வானிலும் அரக்கர்களின் அழிவைக் குறிக்கும் அபசகுனங்கள் தோன்றின. மேகங்களிலிருந்து எலும்புத் துண்டுகளும் வெப்பமான உதிரமும் கொட்டின.

பெருங்கடலானது கரையைக் கடந்து சீறிப்பாய்ந்தது. மலைகள் குலுங்க, விலங்குகள் பெருங்குரலெழுப்பி அங்குமிங்கும் அலைந்தன. நரிகள் கொடூரமாக ஊளையிட்டன. ஐந்து பூதங்களும் ஒன்றன்பின் ஒன்றாக அமிழ்வதுபோல தோற்றமிட்டன.

கொழுந்துவிட்டெரியும் நெருப்புச் சுடர்கள், கழுகுகளின் வாயிலிருந்து வெளிப்பட்டன. அந்தப் பறவைகள் தீ வளையம்போல அரக்கர்படைக்கு மேலே சுழன்று வந்தன.

புறா, கிளி, மைனா போன்ற பறவையினங்கள் எல்லாம் இலங்கையைவிட்டு விலகின. காகங்கள் கரைய, பூனைகள் அலற, நாற்கால் உயிரினங்கள் அனைத்தும் ஓலமிட்டன.

தங்கள் வலிமையால் செருக்குற்றிருந்த அரக்கர்கள், இந்த அபசகுனங்களையெல்லாம் அலட்சியப்படுத்தி முன்னேறிச் சென்றனர்.

மால்யவான் என்னும் உறுதிகொண்ட தலைவனை அவர்கள் முழுமையாக நம்பியிருந்தனர்.

மாலியின் தலைமையிலான அரக்கர்படை, இடியோசை போன்ற பேரொலியை எழுப்பிக் கொண்டு தேவருலகம் நுழைந்தது.

தூதர்கள்மூலமாக இந்தச் செய்தியைக் கேள்வியுற்ற ஸ்ரீமந் நாராயணர் அவர்களுடன் போரிட ஆயத்தமானார்.

தாமரைக்கண்ணரான அவர், ஆயிரம் சூரியருக்கு நிகரான கவசத்தை அணிந்து கொண்டு, அம்புகள் நிறைந்த இரு அம்பறாத் தூணிகளையும் தரித்துக்கொண்டார். இடையில் வார்ப்பட்டையை அணிந்து, அதில் பெரும் வாளைச் செருகிக்கொண்டார். சங்கு, சக்கரம், கதாயுதம், சாரங்கம் என்னும் வில், சக்தி உள்ளிட்ட படைக்கலன்களை ஏந்திக் கொண்டவர், கருட வாகனத் தின்மீதேறி மிக விரைவாகச் சென்றார்.

பட்டாடைகள் உடுத்தியிருந்த நீல நிறத் தவறான நாராயணர், தங்கச் சிகரத்தில் மின்னலுடன் விளங்கும் மேகம்போல கருடன்மீதமர்ந்து காட்சிளித்தார்.

அதுகண்டு சித்தர்கள், முனிவர்கள், நாகர்கள், கந்தர்வர்கள், யட்சர்கள் முதலியோர் அவரைப் போற்றித் துதித்தனர். நாராயணர் தேவர் படைசூழ அரக்கர்கள் வந்துகொண்டிருந்த இடத்தை அடைந்தார்.

கருடனின் சிறகுகளிலிருந்து வெளிப் பட்ட சூறாவளி போன்ற காற்றின் வேகம் தாங்காமல் அரக்கர்படை செயலற்று நின்றது. அவர்கள் கைகளிலிருந்த அஸ்திரங் களும் சஸ்திரங்களும் நழுவி விழுந்தன. மலையுச்சியில் இருக்கும் ஒரு சிகரம் நடு நடுங்கித் தன் பாறைகளை உதிர்ப்பதுபோல அந்தக் காட்சி இருந்தது.

எனினும் சுதாரித்துக்கொண்ட மால்ய வானின் அரக்கப் படையினர், நாராயணரை நாற்புறங்களிலும் சூழ்ந்துகொண்டனர்.

மாமிசம், ரத்தம் தோய்ந்தவையும், பிரளய கால நெருப்புபோல அக்னியை வெளியிடு பவையுமான அம்புகளாலும், இன்னும் பல்வேறு ஆயுதங்களாலும் அவரைத் தாக்கத் தொடங்கினார்கள்.

(தொடரும்)