ஏழாவது சர்க்கம் மாலி வதம்
இராமபிரானுக்கு அகத்திய முனிவர், அரக்கர்களது வரலாற்றைக் கூறுகிறார்...
ஒரு மலையின்மீது மேகங்கள் பெருமழை பொழிந்து அதை முற்றிலும் நீராட்டுவதுபோல, அரக்கர் கூட்டமாகிய மேகக்கூட்டம் இடி முழக்கத்துடன் அஸ்திரங்களாகிய நீரை ஸ்ரீமன் நாராயணன் எனும் மலைமீது பொழிந்தது; அவரைப் பெரிதும் வாட்டி வரைத்தது.
அப்போது ஸ்ரீ நாராயணரின் மேனிநிறம் ஒளிவீசும் மேக நிறமாக இருந்தது. கார்வண்ணம் கொண்ட அரக்க வீரர்கள் நாராயணரை சூழ்ந்து கொண்டு அம்புமழை பொழிந்தனர்.
அதைக் காணும்போது அஞ்சனமலைமீது கார்முகில்கள் சூழ்ந்து மழைபொழிவதுபோல இருந்தது. அரக்கர்கள் வஜ்ரம்போல் கூர்மை யானவையும் வாயுவேகம், மனோ வேகம் கொண்டவையுமான படைக் கலங்களை மகாவிஷ்ணுமீது செலுத்தினர். அவையெல்லாம் விளைநிலங்களில் வெட்டுக்கிளிகள் புகுந்துகொள்வதுபோல, தீயினுள் பூச்சிகள் விழுவதுபோல, கள் பானையில் ஈக்கள் விழுந்து மூழ்குவதுபோல, கடலுக்குள் முதலைகள் சென்று மறைவதைப்போல, பிரளய காலத்தில் அனைத்து உலகங்களும் மகாவிஷ்ணுவின் உடலுக்குள் சென்று லயமாவதைப்போல அவரது திருவுடலில் சென்று மறைந்தன.
தேர்ப்படை, யானைப்படை, குதிரைப் படை, காலாட்படை ஆகியவற்றைச் சேர்ந்த அனைத்து அரக்க வீரர்களும் வானத்தில் இருந்தவண்ணம் போர் புரிந்தார்கள். குன்றுபோல பெரிய உருவமுடைய அரக்கர்கள் கூரிய வாள், தோமரம் எனப்படும் எறியாயுதம், வேல் போன்ற ஆயுதங்களால் ஸ்ரீமன் நாராயணனைத் தாக்கினர். இருபிறப் பாளர்கள் (பூணூல் அணியும் தகுதிபெற்றவர்கள்) பிராணாயாமம் செய்யும்போது மூச்சை அடக்குவதுபோல, நாராயணரை மூச்சுவிடமுடியாமல் தாக்கினார்கள்.
அரக்கர்கள் மகாவிஷ்ணுவைத் தாக்கும் காட்சி, மீன்கள் பெருங்கடலில் துள்ளி விளையாடுவதுபோல இருந்தது. எவராலும் வெல்லமுடியாத நாராயணர், அப்போது சாரங்கம் என்னும் தனது வில்லில் அம்புகளைப் பூட்டி அரக்கர்கள்மீது ஏவினார்.
நன்றாக வில்லை வளைத்து, வஜ்ராயுதம் போல் பேராற்றல் கொண்டவையும், மனோவேகத்துடன் செல்லக்கூடியவை யுமான பல்லாயிரக்கணக்கான கூர்மை யான அம்புகளால் அவர்களைப் பிளந்தார்.
பெருங்காற்றானது மேகத்தையும் மழையும் அப்புறப்படுத்துவதுபோல, அரக்கர்களை அம்புமழையால் சிதறவைத்த ஸ்ரீமந் நாராயணர், பெருமை பொருந்திய பாஞ்சஜன் யம் என்னும் சங்கை எடுத்து ஊதினார்.
முழுமூச்சுடன் அவர் சங்கை ஊதியபோது எழுந்த பேரோசையால் மூவுலக மக்களும் நடுங்கிப்போனார்கள். மதங்கொண்ட யானைகள் சிங்கத்தின் குரலைக் கேட்டதும் எப்படி அஞ்சி நடுங்குமோ, அதுபோல பாஞ்சஜன்ய ஒலியைக் கேட்டதும் அரக்கர்கள் அஞ்சி நடுங்கினர்.
சங்கொலியைக் கேட்டமாத்திரத்தில் தங்களது ஆற்றலையும் துணிவையும் இழந்த குதிரைகளால் போர்க்களத்தில் நிற்கவும் முடியவில்லை. யானைகளின் மதம் இறங்கிவிட்டன. தேர்ப்படையினர் கீழே விழுந்தனர். சாரங்கம் என்னும் வில்லிலிருந்து புறப்பட்ட- கூர்மையான தலைப்பகுதியைக் கொண்ட- சிறகுகள் கட்டப்பட்ட அம்புகள் அரக்கர்களைத் துளைத்து பூமிக்குள் சென்று புகுந்தன.
மலையுச்சியிலிருந்து காவிக் கல்லானது கரைந்து உருகுவதுபோல, மகாவிஷ்ணு வினுடைய சக்கரத்தால் தாக்கப்பட்ட அரக்கர் களின் உடலிலிருந்து குருதி பெருகி வழிந்தது.
பாஞ்சஜன்யத்தின் ஓசை, சாரங்க வில்லின் நாணோசை, அரக்கர்களின் ஆவேசக் குரல்கள் என எல்லாமே, மகாவிஷ்ணுவின் வீரமுழக்கக் குரலின்முன் அடங்கிப்போயின.
அரக்கர்களுடைய தலைகள், கொடிகள், தேர்கள், அம்பறாத்தூணிகள், பதாகைகள் என அனைத்தையும் ஸ்ரீஹரி நாராயணர் தன் அம்புகளால் அறுத்தெறிந்தார்.
வெப்பம் மிகுந்த சூரியனது கதிர்கள் போலவும், பெருங்கடலில் ஓயாது வீசும் அலைகள் போலவும், மழையில் தலைதூக்கிப் பார்க்கும் பெரிய நாகங்கள் போலவும், மேகத்திலிருந்து பொழியும் நீர்த்தாரை போலவும் மகாவிஷ்ணுவின் வில்லிலிருந்து பல்லாயிரக்கணக்கான அம்புகள் செலுத்தப்பட்டன.
சரபம் என்னும் பயங்கர காட்டு மிருகத் தைக்கண்டு சிங்கமும், சிங்கத்தைக் கண்டு யானையும், யானையைக் கண்டு புலியும், புலியைக் கண்டு சிறுத்தையும், சிறுத்தையைக் கண்டு நாயும், நாயைக் கண்டு பூனையும், பூனையைக் கண்டு பாம்பும், பாம்பைக் கண்டு எலியும் அஞ்சி ஓடுவதுபோல, மகாவிஷ்ணுவின் ஆற்றல் பொருந்திய பெருந்தாக்குதலை எதிர்கொள்ளமுடியாத அரக்கர்கள் அஞ்சி ஓடினார்கள். அவ்வாறு ஓடியவர்களில் பலர் மண்ணில் சாய்ந்தார்கள்.
மேகக் கூட்டங்களின் தலைவனான இந்திரன் அவற்றை நீரால் நிரப்புவதுபோல, நாராயணர் பல்லாயிரம் அரக்கர்களைக் கொன்று வெற்றிச் சங்கை முழக்கத்தினால் நிரப்பினார். அவரது அம்பு மழையையும், சங்கொலியையும் தாங்கமுடியாமல் மிகவும் கலங்கிய அரக்கர்கள், போரில் தோல்வியடைந்தவர்களாய் இலங்கையை நோக்கித் தப்பியோடினர்.
அப்போது அரக்கர் படைத்தலைவனான சுமாலி, அம்புமழை பொழியும் நாராயணரை மேற்கொண்டு முன்னேறவிடாமல் தடுத்து நிறுத்தினான். சூரியனை பனிமூட்டம் மறைப்பதுபோல அவன் நாராயணரைத் தனது அம்புகளால் மறைத்தான். அது கண்டு தைரியம்கொண்ட அரக்கர்கள் மீண்டும் துணிவுடன் எதிர்வந்தனர். தன் சக்தியால் செருக்குற்றிருந்த அரக்கனான சுமாலி, பெருங்குரலில் கர்ஜனை புரிந்து நாராயணர்மீது கோபத்துடன் போர் தொடுத்தான். அரக்கர்கள் புத்துயிர் பெற்றனர்.
யானையானது தனது தும்பிக்கையை மேலுயர்த்தி அசைப்பதுபோல, மின்னல் கள் வெளிப்படும் மேகம் போன்ற ஆபரணங்கள் ஒளிவீசும் தனது கையை உயரத் தூக்கி மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தான் சுமாலி.
அப்போது சுமாலியின் தேர்ப்பாகனது தலையை விஷ்ணுவானவர் வெட்டி வீழ்த்தினார். பாகன் விழுந்ததும் கட்டுப் பாடிழந்த அரக்கனின் தேரில் பூட்டப் பட்டிருந்த குதிரைகள் தறிகெட்டு ஓடின. மனவுறுதியற்ற ஒருவன் புலனுணர்ச்சி தரும் பொருள்கள்மீது ஆசைகொண்டு தடுமாறுவதுபோல, தாறுமாறாக திரியத் தொடங்கிய குதிரைகள் இழுத்துக் கொண்டிருந்த தேரிலிருந்து நிலை தடுமாறி னான் சுமாலி. அவனுடைய குதிரைகள் மகாவிஷ்ணுவின் வாகனமான கருடனைநோக்கி தேரை இழுத்துச்சென்றன. அப்போது சுமாலியின் சகோதரனான மாலி, வில்லையும் அம்பையும் ஏந்தியபடி போர்க்களத்தில் முன்னேறிக்கொண்டிருக்கும் வலிமைமிக்க நாராயணரை நோக்கி எதிர்த்துவந்தான்.
பொன்னால் போலிவூட்டப்பட்டிருந்த மாலியின் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள், கிரவுஞ்ச மலையின் இடுக்குகளில் பறவைகள் புகுந்துகொள்வதுபோல ஸ்ரீமன் நாராயணரின் உடலுக்குள் சென்று மறைந் தன. ஐம்புலன்களை வசப்படுத்திய ஒருவன் எவ்வாறு மனநோயால் துன்பப்படாமல் இருப்பானோ, அதுபோல மாலி ஏவிய ஆயிரக்கணக்கான பானங்களால் தாக்கப் பட்டாலும் மகாவிஷ்ணுவானவர் எந்த விதமான துன்பத்தையும் அடையவில்லை. ஐந்து பூதங்களையும் வடிவாய்க் கொண்ட நாராயணர் மாலியின் வில்லிலிருந்து வெளிப்பட்ட நாணொலியைக் கேட்டு அவன்மீது தொடர்ச்சியாக அம்புகளைச் செலுத்தினார். மின்னலின் ஒளியையும் வைரத்தின் வலிமையையும் பெற்றிருந்த அந்த அம்புகள் மாலியின் உடலுக்குள் புகுந்து, கருடன் கொண்டுவந்த அமிர்தத்தை பாம்புகள் பருகுவதுபோன்று அவனது உதிரத்தைப் பருகின.
சங்கு, சக்கரம் ஏந்திய மகாவிஷ்ணுவானவர் முதலில் மாலியினுடைய கிரீடம், கொடி, வில் ஆகியவற்றை வீழ்த்தி, பின்னர் குதிரை களையும் கொன்றழித்தார். தேரை இழந்த மாலி கதாயுதத்தைத் தாங்கி, மலைச் சிகரத்திலிருந்து சிங்கம் பாய்ந்தோடிவருவதைப்போல குதித்துவந்தான்.
சிவபெருமானது தலையில் எமன் தாக்கியதுபோலவும் (ஒரு புராணக் கதையின்படி), இந்திரன் தனது வஜ்ராயுதத் தால் ஒரு மலையைத் தாக்கியதுபோலவும் பறவைகளின் அரசனான கருடனது முகத்தின்மீது தன் கதாயுதத்தால் வேகமாக அடித்தான் மாலி. வலிமை பொருந்திய அந்த அடியின் வேதனையைத் தாங்க முடியாத கருடன், தன்மீது அமர்ந்திருந்த மகாவிஷ்ணுவுடன் போர்க்களத்திலிருந்து விலகிச் சென்றது. நாராயணர் அங்கிருந்து அகன்றதுகண்டு, அவர் மாலியுடன் தோற்றுப் பின்வாங்கிச் செல்வதாக எண்ணிய அரக்கர்கள் பெரும் ஆரவாரம் செய்தனர். கருடன்மீது வீற்றிருந்த மகா விஷ்ணு அரக்கர்களின் பேரிரைச்சல் கேட்டு கோபங்கொண்டு, போர்க்களத்திற்கு எதிர் திசையில் அவரது முகம் இருந்தாலும், மாலியைக் கொல்லும் நோக்கத்துடன் சக்கராயுதத்தை ஏவினார்.
காலச்சக்கரம்போல எதிர்கொள்ள முடியாததும், சூரிய மண்டலம்போல பேரொளிவீசுவதுமான அந்த சக்கராயு தம் தன் ஒளியால் வானத்தை பிரகாசப் படுத்தவாறு வேகமாகச் சென்று மாலியின் தலையை அறுத்தது. பாற்கடலைக் கடைந்து அமுதம் பெறப்பட்ட சமயம், மோகினி அவதார மகாவிஷ்ணுவால் வெட்டப்பட்ட ராகுவின் தலைபோல, அரக்கர் தலைவனான மாலியின் பயங்கர தோற்றம்கொண்ட தலை தரையில் வீழ்ந்தது. அதுகண்டு பெரிதும் மகிழ்ந்த தேவர்கள் மகாவிஷ்ணுவை "வாழ்க...
வெல்க' என்று வாழ்த்துக்கூறி பெரும் ஆரவாரம் செய்தார்கள்.
மாலி கொல்லப்பட்டதைப் பார்த்து சுமாலியும் மால்யவானும் மிகுந்த துயரங்கொண்டு தங்கள் படைகளுடன் இலங்கையை நோக்கிப் பின்வாங்கத் தொடங்கினார்கள்.
இந்த நிலையில், வலிநீங்கிய கருடன் அமைதியடைந்து, மீண்டும் போர்க் களத்திற்குத் திரும்பிவந்து ஆவேசத்துடன் சிறகுகளை அசைக்க, அதிலிருந்து எழுந்த பெருங்காற்றினைத் தாங்கமுடியாமல் அரக்கர்கள் ஓடத் தொடங்கினர்.
தண்டிலிருந்து தாமரை மலர் கொய்யப்படுவதுபோல மிக எளிதாக அரக்கர் களது தலைகள் மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தால் வெட்டப்பட்டன. அவரது கதாயுதத்தால் மார்புகள் சிதைக்கப்பட்டன. கொழுமுனை ஆயுதத்தால் கழுத்துகள் கிழிக்கப்பட்டன. உலக்கைகளால் தலைகள் பிளக்கப்பட்டன. வாளால் பலர் வெட்டப் பட்டனர். மேலும் பலர் அம்புமழையால் சிதைக்கப்பட்டார்கள். இப்படி உடல் பாகங்கள் சிதைக்கப்பட்ட அரக்கர்கள் வானிலிருந்து கடலில் விழுந்தனர்.
பெரு மேகங்களானது மின்னலுடன் கூடிய இடிகளால் பேரழிவை ஏற்படுத்து வதைப்போல, தனது வில்லிலிருந்து செலுத்தப்பட்ட உயரிய அம்புகளால் தலைவிரி கோலத்துடனிருந்த அரக்கர் களைத் துளைத்தார் ஸ்ரீமந் நாராயணர். அவரது அம்புகளால் அரக்க வீரர்களின் வேடங்கள் கலைந்தன. குடைகள் தகர்க்கப் பட்டன. அஸ்திர- சஸ்திரங்கள் நழுவி விழுந்தன. குடல்கள் வெளிப்பட்டன. அச்சத் தினால் கண்கள் கலங்கின. உயிருடன் எஞ்சியிருந்த அரக்கர்படை முழுதும் பித்துப்பிடித்ததுபோலானது. சிங்கத்தால் தாக்கப்பட்ட யானைகள் வேகமாக ஓடிக் கொண்டே அலறுவதைப்போல, நரசிம்மா வதாரத்தால் இரண்யகசிபு கொல்லப்பட்ட போது அரக்கர்கள் கதறியதைப்போல இப்போதும் அரக்கர்களின் அலறலும் ஓட்டமும் ஒன்றாக இணைந்தன.
மகாவிஷ்ணு பொழிந்த அம்புகளால் தாக்கப்பட்டவர்கள் தங்களது ஆயுதங் களைத் தரையில் போட்டுவிட்டு, சூறாவளிக் காற்றினால் சிதறடிக்கப்பட்ட மழைக்கால மேகங்கள்போல சிதறியோடினர். சக்கரத்தில் வெட்டப்பட்ட தலையுடனும், கதாயுதத்தால் சிதைக்கப்பட்ட உடலுடனும், கத்தியினால் பிளக்கப்பட்ட அங்கங்களும் ராட்சத வீரர்கள் மலைகள்போல் விழுந்து கிடந்தனர். அப்பகுதியில் சற்றும் இடைவெளி யின்றி அரக்கர்களின் பிணங்கள் நிறைந் திருந்தன. அரக்கர்களின் கழுத்தில் நீலமணி மாலைகளும் காதுகளில் குண்டலங்களும் தொங்கிக்கொண்டிருந்தன. நீலமணி மலைகளே தரையில் விழுந்துகிடப்பதைப் போல அந்தக் காட்சி இருந்தது.
எட்டாவது சர்க்கம்
சுமாலி முதலியோர் தோல்வி புறமுதுகிட்டு ஓடிக்கொண்டிருந்த அரக்கர் படையைப் பின்னாலிருந்து விரட்ட ஆரம்பித்தார் ஸ்ரீமன் நாராயணர். அப்போது கரையைத் தீண்டிவிட்டுத் திரும்பவரும் அலையைப்போல திரும்பிவந்தான் மால்யவான். கடும் கோபத்தில் அவனது கண்கள் சிவந்திருந்தன. தலையிலிருந்த மகுடம் அதிர்ந்துகொண்டிருந்தது. புருஷோத்தமரான மகாவிஷ்ணுவிடம் வந்த அவன், ""நாராயணா, சத்ரிய தர்மம் என்னவென்பது உங்களுக்குத் தெரியவில்லை. போர் செய்வதை நிறுத்தி அஞ்சி ஓடிக்கொண்டிருக்கும் எங்கள் படைமீது, ஒரு சாதாரண மனிதனைப் போல பின்னாலிருந்து தாக்குகிறீர்கள். இழிசெயல் செய்யும் அசுரர்களான எங்களைத் தவிர, போர்க்களத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருப்பவர்களைக் கொல்பவர்கள், நேரில் நின்று போராடும் வீரனை வீழ்த்தும் அறக்கடமையைச் செய்தவர்கள் அடையும் தேவலோகத்தை அடையமாட்டார்கள். சங்கு, சக்கரத்தைத் தாங்கியிருக்கும் கடவுளே! உங்கள் எதிரில் இதோ நான் நின்றுகொண்டிருக்கிறேன். என்னிடம் காட்டுங்கள் உங்கள் பலத்தை'' என்றான்.
ஒரு மலையைப்போல உறுதியுடன் நின்றுகொண்டிருந்த அரக்கர் தலைவன் மால்யவானைப் பார்த்து ஆற்றல் மிக்கவரான மகாவிஷ்ணு, ""உங்களைக் கண்டு நடுங்கிக்கொண்டிருக்கும் தேவர்களுக்கு அபயமளித்து, உங்கள் அனைவரையும் கொன்றொழிப்பதாக வாக்கு தந்திருக்கிறேன். அதையே இப்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன். தேவர்களுக்கு நன்மை தரும் செயலை என் உயிரைக் கொடுத்தேனும் செய்யக் கடமைப்பட்டவன் நான். அதனால் நீங்கள் ரசாதலத்திற்குச் சென்று ஒளிந்துகொண்டாலும், அங்கும் துரத்திவந்து உங்கள் உயிர்களைப் பறிப்பேன்'' என்றார்.
சிவந்த தாமரை போன்ற கண்கள் கொண்ட மகாவிஷ்ணு இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும்போதே, மால்யவான் அவரது மார்பைநோக்கி சக்தி ஆயுதத்தை ஏவினான். அவனது கையிலிருந்து ஏவப்பட்ட அந்த ஆயுதம் மணியோசை எழுப்பியவாறு பகவானின் மார்பில் புதைந்து மின்னலைப்போல பிரகாசித்தது. சக்தி ஆயுதம் ஏந்திய கார்த்திகேயனிடம் அன்புமிக்கவரான மகாவிஷ்ணு, தன் மார்பில் பதிந்த அந்த ஆயுதத்தைப் பிடுங்கி மால்யவானை நோக்கிச் செலுத்தினார்.
கந்தப்பெருமானால் ஏவப்பட்ட சக்தி ஆயுதம்போன்று, கோவிந்தனின் கரத்திலிருந்து விடுபட்ட அந்த சக்தி ஆயுதம், அஞ்சனமலைமீது இந்திரனது பெரு வஜ்ராயுதம் சென்று தாக்குவதைப்போல அரக்கனைத் தாக்கியது. ஒரு மலைச்சிகரத்தில் இடி விழுவதுபோல, மாலைகளால் பொலிவுடனிருந்த அவனது பரந்த மார்பில் போய்த் தாக்கியது. அந்தத் தாக்குதலில் மால்யவானின் மார்புக் கவசம் பிளந்தது. அவன் மூர்ச்சித்து விழுந்தான். ஆயினும் சற்று நேரத்தில் தன்னைத் தேற்றிக்கொண்டு மலைபோல எழுந்துநின்றான்.
ஏராளமான முட்கள் நிறைந்த, இரும்பி னால் செய்யப்பட்ட கரிய சூலத்தை எடுத்து மகாவிஷ்ணுவின் மார்பைத் தாக்கினான். போர் செய்வதில் மிகுந்த ஆசைகொண்ட அந்த அரக்கன், பாய்ந்து அவரைக் கையால் குத்திவிட்டு ஒரு வில்லின் அளவுள்ள தூரம் பின் சென்றான். அப்போது வானிலிருந்து "நன்று நன்று' என்னும் உற்சாக ஒலி எழுந்தது. அந்த அரக்கன் அடுத்து கருடனையும் தாக்கினான். அதனால் மிகுந்த கோபம்கொண்ட கருடன் தன் இறகுகளால் பலமான காற்றை உண்டாக்கி அவனை மேலே தூக்கி வீசியெறிந்தது. தனது அண்ணன் தூக்கி வீசப்பட்டதைக் கண்ட சுமாலி, போரிட விரும்பாமல் தன் படைவீரர்களுடன் இலங்கைநோக்கிச் சென்றான்.
காற்றினால் தூக்கி வீசப்பட்ட மால்யவான் போரில் தோல்வியுற்றதால் அவமானமடைந்தவனாக தன் படைகளுடன் இலங்கைக்குத் திரும்பினான். இவ்வாறு பலமுறை அரக்கர் தலைவர்கள் மகாவிஷ்ணுவால் தோற்கடிக்கப்பட்டனர். நாராயணரை எதிர்த்துப் போரிடும் ஆற்றல் இன்மையால், அஞ்சிய அரக்கர்கள் மனைவி, பிள்ளைகளுடன் பாதாள உலகம் சென்று வாழத் தொடங்கினர். சாலகடங்கடா பரம்பரையில் வந்த வீரம் பொருந்திய அவர்கள், சுமாலியின் பாதுகாப்பில் வசித்தனர்.
இராமா, புலத்தியர் மரபைச் சேர்ந்த எந்த அரக்கர்களை நீ அழித்தாயோ அவர்களைவிட சுமாலி, மால்யவான், மாலி ஆகியவர்கள் ஆற்றல் பெற்றவர்கள். அவர்கள் அனைவரும் இராவணனைவிட பலசாலிகள். அவர்களை சங்கு, சக்கரம் தாங்கும் ஸ்ரீமன் நாராயணரைத்தவிர வேறு யாராலும் அழிக்கமுடியாது.
நீங்களே தொடக்கம் அறியமுடியாத நாராயணர். தேவாதி தேவர். நான்கு கரங்களை உடையவர். வெற்றிகொள்ள முடியாத மிகப்பெரும் வீரர். அழிவற்றவர். அரக்கர்களைக் கொல்வதற்காக அவதரித்துள்ளீர்கள். மக்களைத் தோற்று விப்பவர் நீங்களே. அறநெறிகள் சீர்குலைந்து போகும் காலகட்டங்களில் அடைக்கலம் கேட்டு உங்களிடம் வருபவர்களைக் காப்பதற்காகவும், இழிகுலத்தோரை அழிப்பற்தகாகவும் அவ்வப்போது அவதரிக்கிறீர்.
மாமன்னரே, அரக்கர்களின் தோற்றம் குறித்த முழு விவரங்களையும் உங்களுக்குக் கூறிவிட்டேன். ரகுகுல மாணிக்கமே, இனி இராவணன் மற்றும் அவனுடைய மகன்களின் பிறப்பு, அவர்களது இணையற்ற வீரம் குறித்த விவரங்களை சொல்கிறேன்; கேளுங்கள்.
மகாவிஷ்ணுவிடமிருந்த பயத்தினால் நீண்டகாலம் தன் பிள்ளைகள், பேரன் களுடன் ரசாதலத்தில் வசித்துவந்தான் சுமாலி. இதற்கிடையே செல்வங்களுக்கு அதிபதியான குபேரன் இலங்கையைத் தன்வசப்படுத்திக் கொண்டு வாழத் தொடங்கினான்.
(தொடரும்)