கடந்த இதழில்...

யோத்தி மன்னனாக பட்டாபிஷேகம் செய்துகொண்ட ஸ்ரீராமபிரானைக் காண நான்கு திசைகளிலிருந்தும் முனிவர்கள் அகத்தியர் தலைமையில் வந்தனர்.

அப்போது இராமபிரானின் பேராற்றலைப் புகழ்ந்த முனிவர்கள், ""தாங்கள் இராவணனைக் கொன்றது எளிது; இந்திரஜித்தைக் கொன்றது பெரிது"" என்று கூறினர்.

இதைக்கேட்ட ராமபிரான் வியந்து, ""அது எவ்வாறு?'' என்று கேட்க, ""அவன் வரலாற்றை முழுமையாகச் சொல்கிறேன்'' என்று, இந்திரஜித்தின் முன்னோரான புலத்தியர் பிறப்பிலிருந்து கூறத்தொடங்கினார் அகத்தியர்.

Advertisment

uttar

பிரம்மதேவரின் மானச புத்திரர்களில் ஒருவராகிய புலத்திய முனிவர் த்ருணபிந்து என்னும் ராஜரிஷியின் மகளை மணந்தார். அவர்களுக்கு விச்ரவஸ் என்னும் மகன் பிறந்து, அவரும் பெரும் முனிவராகத் திகழ்ந்தார். இனி...

மூன்றாவது சர்க்கம் விச்ரவஸ் (குபேரன்) இலங்கையைப் பெற்றது புலத்திய முனிவரின் மகனான விச்ரவஸ் கடுந்தவத்தில் ஈடுபட்டார். உண்மையே பேசுதல், நல்லொழுக்கம், அமைதி, வேதம் ஓதுதலில் ஈடுபாடு, மனத் தூய்மை, அனைத்துவிதமான புலனின்பங்களிலும் பற்றின்மை போன்ற நற்குணங்கள் எல்லாம் பெற்று, அறநெறியில் சிறந்து விளங்கிவந்த அவரைப்பற்றிக் கேள்வியுற்ற பரத்வாஜ முனிவர், தேவ கன்னிகைக்கு நிகரானவளாக விளங்கிய தன் மகளை அவருக்கு மணம்செய்து கொடுத்தார்.

நல்லறமாகிய இல்லறத்தைக் கடைப்பிடிப்பதன் இன்றியமையாமையை உணர்ந்து, அதன்பொருட்டு பரத்வாஜ மாமுனிவரின் மகளைத் திருமணம் செய்து கொண்ட விச்ரவஸ், மக்களுக்கு நன்மைசெய்யும் குணமுடைய, வீரம் பொருந்திய ஒரு மகவைத் தன் மனைவி மூலம் தோற்றுவித்தார். அதுகண்டு தாத்தாவான புலத்தியர் மிகவும் மகிழ்ந்தார்.

புலத்தியர் தன் ஞானதிருஷ்டியால், "இவன் மக்களுக்கு நன்மைபுரியும் அறிவுகொண்டவன். பிற்காலத்தில் செல்வத்திற்கு அதிபதியாகத் திகழ்வான்' என்பதை அறிந்து, தேவ முனிவர்களை அழைத்து, குழந்தைக் குப் பெயர்சூட்டும் நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்தார்.

"விச்ரவஸின் மகன் என்பதாலும், அவரைப்போலவே இருப்பதாலும் இக்குழந்தை வைச்ரவன் என்னும் பெயருடன் விளங்கட்டும்' என்று அவர்கள் வாழ்த்தினார்கள்.

தவம் புரியுமிடத்தில் வளர்ந்துவந்த வைச்ரவன், நெய் வார்க்கப்பட்ட யாக குண்டத் தீக்கொழுந்துபோல பொலிவுற்றுத் திகழ்ந்தான். ஆசிரமத்தில் வளர்ந்ததால் நற்குணம் நிரம்பப் பெற்ற வைச்ரவனின் மனதில், அறமே வாழ்வின் முதற்கடமை என்பதால், தவத்தில் ஈடுபடவேண்டுமென்னும் எண்ணம் வேரூன்றியது.

அடர்ந்த கானகத்துச் சென்ற வைச்ரவன் அங்கு ஆசிரமம் அமைத்து, மனதைக் கட்டுக்குள் வைத்து, கடுமையான நியமங்கள் மேற்கொண்டு ஆயிரம் ஆண்டுகள் பெருந்தவம் புரிந்தான். அதன்பின்னர் மேலும் நீர் மட்டுமே உணவு- பின்னர் காற்றே உணவு- அதன்பின்னர் அதுவுமில்லை என்று கடும் நியமத்தை மேற்கொண்டு பல்லாயிரம் ஆண்டுகள் தவத்தில் ஈடுபட்டான். அவ்வளவு ஆண்டுகளும் ஓராண்டுபோல மிகக்குறுகிய காலத்திலேயே அவனுக்குக் கழிந்தன.

வைச்ரவனின் கடுந்தவம் கண்டு மனம்குளிர்ந்த பிரம்மதேவர், இந்திரன் உள்ளிட்ட தேவர்களுடன் சென்று அவனுக்குக் காட்சிதந்தார்.

""சிறந்த விரதங்களை கடைப்பிடித்த மகனே! உன் பெருந்தவத்தால் மகிழ்ந்தேன். வரம்பெறத் தகுதியுடையவனாகிய நீ விரும்பும் வரத்தைக் கேள்"" என்றான்.

அவரை வணங்கிய வைச்ரவன், ""சுவாமி, உலகமக்களை ரட்சித்து, அவர்களுக்கான செல்வத்தைக் காப்பாற்றும் பொறுப்பை வேண்டுகிறேன்"" என்றான்.

மனம் மகிழ்ந்த பிரம்மா, ""அவ்வாறே ஆகட்டும்'' என்றார். மேலும் அவர், ""உலக மாந்தர்களை ரட்சிக்கும் பணிக்கு நான்காவதாக ஒருவரை படைக்கும் எண்ணத்தில் இருந்தேன். உன் தவத்தால் அது ஈடேறியது. எமன், இந்திரன், வருணன் ஆகிய மூவரும் பெற்ற பதவிகளுக்கு அடுத்த நான்காவதான பெரும் பொறுப்பை நீ ஏற்றுக்கொள். உலகக்காப்பு என்னும் பொறுப்புடன், செல்வத்தைக் காக்கும் தலைமைப் பதவியையும் உனக் களித்தேன். மேற்சொன்னவர்களோடு சேர்ந்து நீ நான்காமவனாக இருப்பாய்'' என்று கூறி கூறினார்.

அப்போது பிரம்மதேவர், ஆதவனைப் போல ஒளிவிளங்கும் புஷ்பக விமானத்தை வைச்ரவனுக்குக் கொடுத்து, ""இந்த விமானத்தை உனக்கேற்ற பயணங்களுக்குப் பயன்படுத்தி தேவர்களுக்கு இணையாக எங்கும் வலம்வருவாய். மங்களம் பெருகட்டும்'' என்று வாழ்த்தி, தேவகணங்களோடு தம் இருப்பிடம் சேர்ந்தார்.

அதன்பின்னர் வைச்ரவன் தன் தந்தை விச்ரவஸைக் கண்டு வணங்கி, ""தந்தையே, படைக்கும் கடவுளான பிரம்மதேவரிடமிருந்து நான் கோரிய வரத்தைப் பெற்றுவிட்டேன். ஆனால் எனக்கான இருப்பிடம் குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை. எனவே, எவ்விடத்தில் எந்த உயிரினங்களுக்கும் எவ்வித இன்னல்களும் ஏற்படாதோ, எனக்குத் தகுந்த அத்தகைய வசிப்பிடத்தைத் தாங்கள்தான் காட்டியருள வேண்டும்'' என்றான்.

அதற்கு விச்ரவஸ், ""மகனே, உனக்கான இருப்பிடத்தைக் கூறுகிறேன். இந்திரனுடைய அமராவதி நகரத்திற்கு இணையான ஒரு நகரம் பெருங்கடலின் தெற்குக் கரையில் திரிகூடம் எனும் மலையுச்சியில் உள்ளது. விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டதும், அனைத்து வசதிகளையும் கொண்டதுமான இலங்கை என்னும் அந்த நகரம் ஒரு காலத்தில் அரக்கர்களின் வாழ்விடமாக இருந்தது.

நாற்புறமும் அகழிகளால் சூழப்பட்ட அந்த நகரத்தின் மதில்கள் தங்கத்தால் உருவாக்கப்பட்டவை. எந்திரங்கள், மந்திராஸ்திரங்கள் பொருத்தப்பட்ட மிகப் பாதுகாப்பான நகரமது. தங்கத்தாலும் வைடூரியங்களாலும் செய்யப்பட்ட தோரணங்கள் ஒளிபொழியும் அந்த அழகிய நகரத்தில் வாழ்ந்த அரக்கர்கள், திருமாலின் சினத்திற்கு அஞ்சி அந்நகரை விட்டு நீங்கி, ரசாதலம் என்னும் உலகிற்குச் சென்றுவிட்டனர். அதனால் வசிப்போர் யாருமற்று பாழடைந்து கிடக்கிறது இலங்கை நகரம். மகனே, நீ அந்நகர் சென்று மகிழ்வுடன் வாழ்வாயாக. உனக்கு அங்கு யாராலும் இடையூறு ஏற்படாது'' என்றார்.

அதன்படி வைச்ரவன் இலங்கை சென்று, நைருதர்களைக் குடியமர்த்தி அவர்களுக்குத் தலைவனாக வாழ்ந்து வந்தான். செல்வத்திற்கு அதிபதியான அவன் பெற்றோர்மீது மிகுந்த பக்திகொண்டவன் என்பதால், பிரம்மதேவர் வழங்கிய புஷ்பக விமானத்திலேறிச் சென்று அன்னை- தந்தையை வணங்கி வந்தான்.

நான்காவது சர்க்கம்

இராவணன் உள்ளிட்ட அரக்கர் குல வரலாறு மேற்கண்ட வரலாறை அகத்தியர் சொல்லக்கேட்டறிந்த இராமபிரான், அரக்கர் குலத்தின் தோற்றுவாயிலாகக் கருதப்படுபவர் விச்ரவஸ். ஆனால் அகத்தியர் கூற்றுப்படி அவருக்கு வெகு காலம் முன்னதாகவே அரக்கர்கள் இருந்தார்களா என்னும் ஐயம் எழுந்தது. அதன்பொருட்டு மூவர்களும் ஓருருவாக வந்திருப்பதுபோலிருந்த அகத்தியரை நோக்கிக் கேட்டார்.

""ஐயனே, அரக்கர்கள் மாமிசம் உண்பவர் கள். அவர்கள்வசம் இலங்கை இருந்தது என்பதைக் கேட்டதன்மூலமாகவும் கண்டதன் மூலமாகவும் அறிவோம். விச்ரவஸ் முனிவருடைய பரம்பரையில்தான் அரக்கர் கள் தோன்றினர் என்று சொல்லப்படும்போது, வேறு வழியிலும் அவர்கள் அதற்கு முன்னர் தோன்றினர் என்பதைத் தங்கள் திருவாய்மொழியால் அறிகிறோம்.

அவ்வாறாயின் தற்போது இருந்த இராவணன், கும்பகர்ணன், பிரகஸ்தன், விகடன் மற்றும் இராவணனுடைய மகன்கள் உள்ளிட்டோரைவிட மிக ஆற்றல்கொண்ட அரக்கர்கள் முன்னர் வாழ்ந்துள்ளனரா? அது உண்மையெனில் அவர்களது முன்னோர் கள் யார்? அவர்களது வீரம் என்ன? என்ன காரணத்தால் அவர்கள் இலங்கையிலிருந்து துரத்தப்பட்டார்கள்? ஆதவன் இருளைப் போக்குவதுபோல என் ஐயங்களையும் தாங்கள் நீக்கியருள வேண்டும்'' என்றார்.

சொல், சொற்றொடர், பொருளாண்மை எனும் மூவகைச் சிறப்பும் கொண்ட இராமபிரானது ஐயக் கேள்விகளைக் கேட்டு சிறுநகை பூத்த அகத்திய மாமுனி, அந்த வரலாறைக் கூறத் தொடங்கினார்.

தண்ணீரில் மலர்ந்த தாமரையில் தோன்றிய பிரம்மதேவரான பிரஜாபதி முதன்முதலாக நீரால் நிரம்பிய கடலை உருவாக்கினார். கடல்நீரைக் காப்பதற்காக அதைச் சார்ந்து வாழும் இயல்புடைய உயிரினங்களை ஏற்படுத்தினார்.

அவ்வாறு அவரால் படைக்கப்பட்ட உயிரினங்கள் பசி, தாகம்கொண்டு வருந்தின. தங்களுக்குள் கலந்துரையாடிக் கொண்ட அவ்வுயிர்கள், தங்களைப் படைத்த பிரம்மதேவரிடமே சென்று தங்கள் குறைகளைக் கூறி வணங்கின. தங்களைக் காப்பாற்றுமாறு கூறிநின்ற அவ்வுயிர்களைப் பார்த்து அருள்மனம் கொண்ட பிரம்மா, ""கவனமாகக் காப்பாற்றுங்கள்'' என்னும் சொற்களைக் கூறினார்.

பசியினாலும் தாகத்தாலும் தவித்துக் கொண்டிருந்த அவ்வுயிரினங்களில் ஒரு குழுவினர், ""நாங்கள் காப்பாற்றுவோம்'' என்றன. மற்றொரு குழுவோ ""நாங்கள் பூஜை செய்வோம்'' என்றன.

(அதாவது ஒரு பிரிவினர், "ரக்ஷாம' (காப்பாற்றுவோம்) என்றும்; மற்றொரு பிரிவினர் "யக்ஷாம' (பூஜை செய்வோம்) என்றும் கூறியதாக வால்மீகி மகரிஷியின் சுலோகம் கூறுகிறது.)

அதைக்கேட்ட நான்முகன், ""உங்களில் காப்பாற்றுவோம் (ரக்ஷாம) என்று கூறியவர்கள் ராட்சதர்களாவீர்கள்'' என்றும்; ""பூஜை செய்வோம் (யக்ஷாம) என்று கூறியவர்கள் யட்சர்களாவீர்கள்'' என்றும் வரமருளினார்.

இதன்படி அரக்கர்களாகத் தோன்றிய வர்களில் ஹேதி, பிரஹேதி எனும் சகோதரர் கள் அரக்கர் தலைவர்களாகத் திகழ்ந்தனர்.

எவராலும் வெல்லமுடியாதவர்களாக விளங்கினர். இந்நிலையில் நன்னெறியில் நாட்டம்கொண்ட பிரஹேதி தவம்புரிய எண்ணம்கொண்டு கானகம் ஏகிவிட்டான். தனித்திருந்த ஹேதி திருமணம் செய்து கொள்ள விரும்பி அதற்கான முயற்சியில் இறங்கினான்.

அறிவிலும் ஆற்றலிலும் மேம்பட்டவ னான அவன் காலனான எமனையே தேடிச் சென்றான். எமதர்மனின் சகோதரியும் பயங்கரமான தோற்றமுடையவளுமான "பயா' என்னும் பெண்ணைக் கேட்க, எமனும் கொடுக்க, அவளை மணந்துகொண்டான். ஹேதி- பயா தம்பதிக்குப் பிறந்த மகனே வித்யுத்கேசன்.

அரக்கர் தலைவனான ஹேதியின் மகன் வித்யுத்கேசன் வாலிப வயதையடைந்ததும் அவனுக்கு மணம் முடித்துவைக்க எண்ணினான் ஹேதி. எனவே சந்தியா தேவியிடம் சென்று, அவளைப்போலவே அழகுபொருந்திய அவளது மகளான சாலக்கடங்கா என்னும் பெண்ணைத் தன் மகனுக்குத் தருமாறு கேட்டான். ஒரு பருவப்பெண்ணை உரிய வயதில் ஒரு ஆண்மகனுக்கு மணம் செய்விக்கதானே வேண்டுமென்று எண்ணிய சந்தியா தேவியும், ஹேதியின் மகனுக்குத் தன் மகளைத் தந்தாள். அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு இந்திரனும் இந்திராணியும்போல இன்புற்றிருந்தார்கள்.

அதன்விளைவாக சாலக்கடங்கா கருவுற் றாள். பிரசவ காலத்தின்போது மந்தர மலைக்குச் சென்ற அவள் மின்னல்போல் ஒளிவீசும் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். ஆனால், தன் கணவனுடனான இன்ப வாழ்வுக்கு அந்தக் குழந்தை இடையூறாக இருக்குமே என்றெண்ணிய அவள், அந்த மகவை அங்கேயே விட்டுவிட்டு நகரம் திரும்பி, எப்போதும்போல் வித்யுத்கேசனுடன் சுகம் அனுபவிப்பதில் ஈடுபட்டாள்.

கானகத்தில் தனித்து விடப்பட்ட அக் குழந்தை தன் கைவிரலை வாய்க்குள் வைத்த வாறு அழத் தொடங்கியது. அச்சமயம் பார்வதி தேவியுடன் காளை வாகனத்தில் வான்வெளி யில் சென்றுகொண்டிருந்த சிவபெருமான், மேகத்தின் உறுமல்போன்ற அந்தக் குழந்தை யின் அழுகுரலைக் கேட்டார். தனிமையில் அழும் அக்குழந்தையைக்கண்டு பேரிரக்கம் கொண்ட பார்வதிதேவியும் அதற்கு அருள் புரியுமாறு பரமனிடம் கேட்டாள்.

(பார்வதி தேவி முன்னரே ஈசனிடம், அரக்கர்குல மாதர்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதில் காட்டும் ஆர்வத்தை, குழந்தை பிறந்தபின்பு கவனித்து வளர்ப்பதில் காட்டுவதில்லை. தாயின்றி சின்னஞ்சிறு குழந்தைகள் துன்புறுகின்றன. எனவே அரக்கர் குலப் பெண்களுக்கு குழந்தை பிறந்தவுடன், அவர்கள் உடனடியாக தாய்க்கு நிகரான வயதுடையவர்களாக வளர்ந்தவிட வேண்டு மென்று வரம் கேட்டிருந்தாள்.)

முப்புரங்களையும் தன் புன்சிரிப்பாலேயே எரித்த சிவபெருமான், தன் தேவியின் கருணை ததும்பிய வேண்டுகோளை நினைவிற் கொண்டு, அப்போதே அக்குழந்தையை அதன் தாய்க்குச் சமமான வயதுடையவனாக வளரச்செய்தார். அவனிடம், ""உமாதேவியின் வரத்தின்படி நீ பிறந்தவுடனேயே பெரியவனா னாய். இனி அரக்க மகளிர் விரைவில் கருவுறுவர். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் உடனேயே வாலிபமெய்து வர்'' என்றருளி, அக்குழந்தைக்கு இறவாமை உள்ளிட்ட பல வரங்களைத் தந்ததோடு, நினைத்த இடத்திற்குச் செல்லக்கூடிய கோட்டைபோன்ற விமானத்தையும் வழங்கினார்.

சுகேசன் என பெயர்பெற்ற அவன், (வித்யுத்கேசனின் மகன்) சிறந்த அறிவுடைய வனாக விளங்கினாலும், பரமேஸ்வரனிட மிருந்து பெற்ற அளப்பரிய வரத்தால் ஆணவம் கொண்டான். சிவன் தந்த விமானத் தில் இந்திரனைப்போல கர்வம்கொண்டு எங்கெங்கும் சுற்றிவந்தான்.

(தொடரும்)