104-ஆவது சர்க்கம் பிரம்மாவின் செய்தியை இராமனுக்குக் கூறுதல்
(தூதராக வந்த முனிவர் கூறுகிறார்) மன்னரே! மாவீரரே! பலம் மிக்கவரே! பிதாமகர் பிரம்மதேவரால் நான் அனுப்பப் பட்டிருக்கிறேன். நான் எதற்காக வந்திருக்கி றேனோ, அதைக்கேளுங்கள். பகைவரின் நகரங் களை வெற்றிகொள்பவரே! உலகப் படைப்பின் தொடக்க நிலையில், அதாவது, ஹிரண்யகர்பனின் தோற்றம் ஏற்பட்ட காலத்தில், மாயையின் துணைகொண்டு, நான் உங்களிடமிருந்து பிறந்தேன். எல்லா வற்றையும் அழிக்கும் என்னை, காலன் என்று அழைப்பார்கள்.
உலகத் தலைவரும் நாயகரும் பிதா மகருமான பகவான் பிரம்மா, பின் வருமாறு சொல்லியனுப்பி இருக்கிறார்.
"ஐயனே! பிரம்மலோகம் முதலான விண்ணுலகங்களைக் காக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது.
அறிவுக்கெட்டாத தொன்மையான காலத்தில் மாயையின் துணைக்கொண்டு, எல்லா உலகங்களையும் தங்கள் உடலில் மறைத்துக்கொண்டு, பெருங்கடலில் படுத்துக்கொண்டிருந்தீர்கள். பிறகு, இந்த உலகப் படைப்பின் தொடக்கத்தில், எல்லாவற்றுக்கும் முதலாக என்னை (பிரம்மாவைப்) படைத்தீர்கள்.
பின்னர், பெரிய படமும் சரீரமும்கொண்டு, நீரில் வசிக்கும் அனந்தன் என்ற நாகத்தை மாயையின் துணைகொண்டு படைத்தீர்கள். மிகவும் பலசாலிகளான இரண்டு உயிர்ப் பிராணிகளைத் தோற்றுவித்தீர்கள். மது, கைடபன் என்று பெயர்கொண்ட அவ்விருவரின் எலும்புக் குவியலால் மலைகள் நிறைந்த இவ்வுலகம் அப்போது உண்டாயிற்று. அதனால், மேதினீ என்ற பெயரையும் அடைந்தது.
தங்களுடைய தொப்புளிலிருந்து சூரியன்போல் ஒளிவீசும் திவ்வியமான தாமரை மலர் முகிழ்த்தெழுந்தது. தாங்கள், அந்தத் தாமரையில் என்னை உண்டாக்கி னீர்கள். மக்களைத் தோற்றுவிக்கும் எல்லாப் பணிகளும் என்னிடம் ஒப்படைக்கப் பட்டன.
என்மேல், உலகப்படைப்பு என்ற சுமை ஏற்றி வைக்கப்பட்டவுடன், அனைத்துலகத் தலைவரான தங்களைப் பிரார்த்தித்தேன். "என் படைப்புத் தொழிலுக்குத் தேவையான அறிவையும் ஊக்கத்தையும் அளிப்பவர், தாங்கள் அல்லவா? தாங்கள் எல்லா உயிர்களினுள்ளும் கலந்திருந்து, அவற்றைக் காக்கவேண்டும்.'
பின்னர், நினைவுக்கெட்டாத பழமை யான பிரமிப்பூட்டும் அந்தத் தோற்றத்திலிருந்து, எல்லா உயிர்ப் பிராணிகளையும் காப்பாற்றுவதற்காக, விஷ்ணு என்ற வடிவத்தில் வெளிப்பட்டீர்கள். பிறகு, தாங்கள் அதிதியின் கருப்பையிலிருந்து ஆற்றல்மிக்க வாமனராக அவதாரம் செய்து, சகோதரர்களான இந்திரன் முதலியோரின் ஆற்றலை வளர்த்தீர்கள். (அவர்களுக்கு வெற்றியை தேடித் தந்தீர்கள்.) தேவைப்பட்ட காலங்களில், தேவைப்பட்ட முறையில் அவர்களுக்கு உதவிபுரிந்து வருகிறீர்கள்.
உலகத் தலைவரே! மக்கள் இராவணனால் துன்புறுத்தப்பட்டபோது, அவனை மாய்க்க விரும்பிய தாங்கள், மானுட அவதாரம் செய்வதில் மனதைச் செலுத்தினீர்கள்.
மானுட உலகில் பதினோராயிரம் ஆண்டுக் காலம் வாழ்வது என்ற கால எல்லையையும் தாங்கள் நிச்சயித்துக்கொண்டீர்கள்.
மனிதருள் மாணிக்கமே! இந்த உலகில் ஒரு தம்பதிக்கு மகனாகப் பிறந்து, "இவ்வளவு காலம்வரை வாழ்வது' என்று தாங்கள் சங்கல்பித்தீர்களோ, அந்தக் காலக்கெடு நிறைவடைந்துவிட்டது. இப்போது, தாங்கள் எங்களிடம் திரும்பி வரவேண்டிய தருணம் வந்துவிட்டது.
மாமன்னரே! தாங்கள் இன்னும் சிறிதுகாலம் இங்கிருந்துகொண்டு, மக்களைப் பாதுகாக்கவேண்டும் என்று திருவுள்ளம் பற்றினால், அவ்வாறே செய்வீர்களாக. இராகவனே! வைகுண்டத்திற்குத் திரும்பவேண்டும் என்று ஆசைப்பட்டால் அவசியம் வந்துவிடுங்கள். தாங்கள் அங்கு வந்துவிட்டால், தேவர்கள், "விஷ்ணு காப்பாற்றுவார்' என்ற நம்பிக்கையுடன் கவலையை மறந்து வாழ்வார்கள்! வாழ்க, தாங்கள்!' என்று பிரம்மா சொல்லியனுப் பினார்.
பிரம்மாவின் செய்தியை காலன் கூறக் கேட்டதும், இராமன் சற்றே புன்னகைத்து, எல்லா உயிர்களையும் பறித்துச் செல்லும் காலனை நோக்கிக் கூறினார்.
"தேவதேவரான பிரம்மாவிடமிருந்து அற்புதமான செய்தியைக்கொண்டு வந்த உங்கள் வருகையால், எனக்கு மிகவும் மனநிறைவு உண்டாகிறது. மூன்று உலகங்களின் நன்மைக்காக நான் இந்த அவதாரம் எடுத்தேன். என் அவதார நோக்கம் நிறைவேறிவிட்டது. அதனால், நான் எவ்விடத்திலிருந்து வந்தேனோ, அதே இடத்திற்குத் திரும்பிச் செல்வேன்.
எல்லாவற்றையும் அழிக்கும் காலனே! நான், என் மனத்திற்குள் உன்னைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தேன். அதனால், நீ இப்போது வந்தது குறித்து வியப்படையவில்லை. நான் எல்லாக் காரியங்களையும் தேவர்கள் இஷ்டப்படிதான் செய்யவேண்டும். (அவர்களுக்கு நன்மை ஏற்படும் விதமாகத்தான் செய்யவேண்டும்.) ஆகவே, பிரம்மா சொல்லியனுப்பியுள்ளபடி செய்கிறேன்.''
105-ஆவது சர்க்கம் துர்வாசர் வருகை
அவர்கள் இருவரும் (இராமனும் காலனும்) இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போது. இராமனைக் காண்பதற்காக, பகவான் துர்வாச முனிவர் அரசமாளிகையின் நுழைவாயிலை வந்தடைந்தார்.
தவ ஆற்றல்மிக்க அவர் லட்சுமணனிடம் சென்று, "நான் உடனே இராமனைப் பார்க்க வேண்டும். தாமதம் ஏற்பட்டால், நான் வந்த காரியம் கெட்டுப்போகும்'' என்றார்.
எதிரிகளை மாய்க்கும் வல்லமைகொண்ட இலக்குவன், முனிவர் கூறியதைக் கேட்டதும், மகாத்மாவான அவரை வணங்கிவிட்டுப் பின்வருமாறு கூறினான்.
"பகவானே! தங்களுக்கு ஆகவேண்டிய காரியம் என்ன? எந்தப் பயனை உத்தேசித்து வந்திருக்கிறீர்கள்? நான் தங்களுக்கு என்ன பணி செய்யவேண்டும்? பிரம்மன்! மன்னர் இராமபிரான் தற்போது வேறு வேலையில் ஈடுபட்டுள்ளார். தாங்கள் அருள்கூர்ந்து சிறிதுநேரம் காத்திருக்கவேண்டும்.''
மாமுனிவராகிய அவர் கோபத்தினால் மனம் கலங்கி, பார்வையாலேயே எரித்து விடுபவர்போல் பார்த்து, லட்சுமணனை நோக்கிக் கூறினார்.
"லட்சுமணா! இந்த விநாடியிலேயே, இராமனிடம் நான் இங்கு வந்திருக்கும் தகவலைத் தெரிவி. நான் வந்திருப்பதை இப்போதே நீ அவருக்குத் தெரிவிக்க வில்லையானால், இந்த நாட்டையும், உன்னையும், நகரத்தையும், இராமனையும், பரதனையும், உங்களுடைய சந்ததிகளையும் சபித்து (அழித்து)விடுவேன். இனிமேலும், என்னால் கோபத்தை என் நெஞ்சில் தாங்கிக்கொண்டிருக்க முடியாது.''
அளவற்ற தவ ஆற்றல்கொண்ட அந்த முனிவரின் மிகவும் பயங்கரமான சொற்களைக்கேட்ட லட்சுமணன், அவர் சொல்லியபடியே எல்லாருக்கும் சாபம் கொடுக்கவல்லவர் என்பதில் சந்தேகமில்லை என்பதை உணர்ந்து கொண்டான்.
"என் ஒருவனுடைய மரணம் நேர்ந்தால் பரவாயில்லை; எல்லாருக்கும் மரணம் ஏற்பட வேண்டாம்' என்று முடிவுசெய்து, (இராமன் விதித்த தடையை மீறி, உள்ளே சென்று) துர்வாசர் வந்திருப்பதைத் தெரிவித்தான்.
இலக்குவன் கூறியதைக்கேட்ட இராமன், காலனை அனுப்பிவிட்டு, விரைவில் வெளியே வந்து, அத்ரியின் புதல்வரைச் சந்தித்தார். தபோபலத்தினால் பிரகாசிக்கும் மகாத்மா துர்வாசரை வணங்கிவிட்டு, காகுத்த இராமன், கைகளைக் கூப்பிக்கொண்டு, "அடியேன் செய்யவேண்டிய பணி, எதுவோ?'' என்று கேட்டார்.
தலைசிறந்த முனிவரான அவர், இராமன் கூறியதைக் கேட்டுவிட்டு, இராமனைப் பார்த்துப் பதில் கூறினார். "அறத்தைப் பரிபாலிப்பவரே! கேளுங்கள். நான், ஆயிரம் ஆண்டுக்காலம் தவம்செய்து, இப்போதுதான் நிறைவு செய்தேன். குற்றமற்றவரே! (இப்போது பசியுடன் இருக்கிறேன்.) உங்களுக் காகப் பக்குவம் செய்யப்பட்டுள்ள உணவைப் புசிக்க விரும்புகிறேன்.''
முனிவரின் சொற்களைக்கேட்டு மகிழ்ந்த இராமன், பக்குவமாகியிருந்த உணவை, முக்கிய முனிவராகிய அவருக்கு அளித்து உண்பித்தார்.
அமுதம் போலிருந்த அந்த உணவைப் புசித்துவிட்டு, "இராமா! ரொம்ப நன்றாக இருந்தது!'' என்று வாழ்த்தியபின், தன் ஆசிரமத்திற்குச் சென்றார்.
முனிவர் தன்னுடைய ஆசிரமத்திற்குச் சென்றபிறகு, இலக்குவனின் தமையனார், காலன் கூறிய சொற்களை (நிபந்தனைகளை) எண்ணிப் பார்த்து மிகவும் துக்கம் அடைந்தார். (நாம் இருவரும் பேசுவதை எவன் கேட்கிறானோ, அல்லது பார்க்கிறானோ அவன் கொல்லப்படத்தக்கவன் என்ற) பயங்கரமான காட்சியை எண்ணிப் பார்த்து, துயரத்தால் வெந்துபோன அவர், தலையைக் குனிந்துகொண்டு நின்றார். அவரால் எதுவும் பேசமுடியவில்லை.
பின்னர், காலன் கூறிய சொற்களைப் புத்திபூர்வமாக ஆராய்ந்து பார்த்து, "அவ்வாறு நடக்கக்கூடாது' என்று தீர்மானித்துப் பேசாமலிருந்தார். (லட்சுமணன் செய்த குற் றத்தை நினைவில் வைத்துக்கொள்ளவில்லை.)
106-ஆவது சர்க்கம் இராமன், இலக்குவனைத் துறந்தார்!
ராகுவினால் கவ்வப்பட்ட சந்திரன்போல் ஒளியிழந்து போயிருந்த இராமனின் முகம், துக்கத்தின் காரணமாகக் கீழ்நோக்சிக் குனிந்திருப்பதைக் கண்ட லட்சுமணன், இராமனைப் பார்த்து மனமகிழ்ச்சியுடன் இனிமையாகக் கூறினான்.
"பெருந்தோளரே! என் பொருட்டுத் தாங்கள் வருத்தம் அடையக்கூடாது. முற்பிறவி களில் செய்த வினைப்பயன்களை ஜீவன் அனுபவித்தே ஆகவேண்டும். காலத்தினுடைய போக்கு இப்படியாகத்தான் இருக்கும். அதை மாற்றமுடியாது.
பெருந்தகையே! தயக்கம் காட்டாமல் என்னைத் தியாகம் செய்துவிட்டு, (காலனுக் குக்) கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுங் கள். காகுத்தரே! கொடுத்த வாக்கைக் காப்பாற் றாத மனிதர்கள் நரகத்தை அடைகிறார்கள்.
மாமன்னரே! என்னிடம் தங்களுக்குப் பாசம் இருக்குமேயானால், என்னிடம் தயவுகாட்ட விரும்பினீர்களேயானால், கொஞ்சமும் கவலைப்படாமல் என்னைக் கொன்றுபோடுங்கள்; தருமத்தைக் காப்பாற்றுங்கள்.''
இவ்வாறு லட்சுமணன் கூறியதும், இராமன் பொறிகலங்கிப்போனார். புரோகிதரையும் அமைச்சர்களையும் அழைத்துவரச் செய்து, அவர்களிடம் தவசிக்கு (காலனுக்கு)ச் செய்துகொடுத்த வாக்குறுதி, பின்னர், துர்வாசர் வருகை ஆகிய எல்லாவற்றையும் நடந்தவாறே விவரித்தார்.
இதைக்கேட்டதும் எல்லா அமைச்சர் களும் குருமார்களும், "என்ன சொல்வது?' என்பது புரியாமல் பேசாமலிருந்தார்கள். மகாதேஜஸ்வியான வசிஷ்டர் அப்போது பேசலுற்றார்.
''பெருந்தோளனே! பெரும்புகழ் பெற்றவனே! உரோமச் சிலிர்ப்பை உண்டாக் கும் இந்தச் செய்தியையும், உன்னோடுகூட இன்னும் பலர் வைகுண்டம் செல்லவேண்டி யிருப்பதையும், இலக்குவனைப் பிரிந்து நீ இருக்க நேரிடும் என்பதையும், என் தவ வலிமையினால் முன்னரே கண்டறிந்து கொண்டேன்.
இவனை (லட்சுமணனைத்) துறப் பாயாக. காலம் மிகவும் வலிமையுடையது. கொடுத்த வாக்குறுதியைப் பொய்யாக்கிவிட வேண்டாம். கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப் படவில்லை என்றால், தருமம் மறைந்தே போய்விடும். தருமம் அழிந்துபோனால், சராசரங்கள் அடங்கிய மூன்று உலகங்களும், தேவர், முனிவர் கூட்டங்களும் மற்றும் எல்லாமும் அழிந்துவிடும்.
ஆண் புலியே! மூன்று உலகங்களும் காப்பாற்றப்படவேண்டும் என்ற நோக்கில், இலக்குவனைத் துறந்துவிடுவதுதான் சாலச்சிறந்தது. இனி, லட்சுமணன் இல்லாமலே, (நீ ஒருவனாகவே அரச அலுவல் களைக் கவனித்து.) இந்த உலகம் நிம்மதியுடன் இருக்க வாக்குறுதியைக் காப்பாற்று.'' அறம்- பொருள் நிறைந்த இந்தச் சொற்களை, அங்கு கூடியிருந்தவர்களோடு கூடக் கேட்ட இராமன். அந்த அவையில் லட்சுமணனைப் பார்த்துக் கூறினார்.
"சுமித்திரையின் மைந்தனே! நான் உன்னைத் துறந்துவிட்டேன். அறம் பிறழ்ந்ததாக ஆகவேண்டாம். ஒருவனைக் கைவிட்டு விடுதல் அல்லது வதம் செய்தல் என்பது அங்கீகரிக்கப்பட்ட சட்டம்.
சான்றோர்களுக்கு இரண்டும் சமம்தான்.''
இராமன் சொல்லி முடித்ததும், புலன்கள் கலங்கி கண்ணீர் பெருக்கிய இலக்குவன், உடனே வெளியே புறப்பட்டுச் சென்றான்.
ஆனால், அவன் தன் மாளிகைக்குச் செல்ல வில்லை.
அவன் சரயு நதியை அடைந்து, ஆசமனம் செய்து, கைகளைக் கூப்பிக்கொண்டு, எல்லாப் புலன்களையும் கட்டுப்படுத்தி, பிராணவாயுவின் ஓட்டத்தை நிறுத்தினான்.
லட்சுமணன், யோகத்தால் மூச்சுவிடுவதை நிறுத்திவிட்டான். இதை அறிந்துகொண்ட இந்திரன் முதலிய தேவர்கள், அப்சரப் பெண்டிர், முனிவர் கூட்டங்கள் எல்லாம் அவன்மேல் மலர்மாரி பொழிந்தார்கள். மகாபலசாலியான லட்சுமணன், தன் உடலை மனிதர்கள் பார்க்க முடியாதபடி மறைத் துக்கொண்டான். அப்போது இந்திரன், லட்சுமணனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு விண்ணுலகம் சென்றான்.
பின்னர், மகாவிஷ்ணுவின் நான்கில் ஒரு பகுதியான லட்சுமணன் வந்துவிட்டதைக் கண்டு, தேவர்களும் முனிவர்களும் மகிழச்சி யடைந்து, அவனை வரவேற்றுப் போற்றினார் கள்.
107-ஆவது சர்க்கம் குசலி லவர்களுக்குப் பட்டம் சூட்டுதல்
இலக்குவனைக் கைவிட்டுவிட்ட பின்னர், இராமன் மிக்க துயரமும் கவலையும் அடைந்து குருமார்கள், அமைச்சர்கள், மக்கள் தலைவர்கள் ஆகியவர்களைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார்.
"இப்போது தருமத்தில் பிடிப்புள்ள வீரன் பரதனை அயோத்தியின் மன்னனாகப் பட்டம் சூட்டப் போகிறேன். பிறகு, நான் காட்டுக்குச் செல்வேன்.
பட்டாபிஷேகத்திற்குத் தேவையான பொருள்களை உடனேகொண்டு வாருங்கள். காலதாமதம் வேண்டாம். இலக்குவன் சென்ற வழியைப் பின்பற்றி, நானும் இப்போதே செல்லப்போகிறேன்.''
இராமன் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டதும், எல்லா மக்களும் தலையால் தரையைத் தொட்டு (தங்கள் எல்லையற்ற சோகத்தை வெளிப்படுத்தி), உயிரற்றவர்கள்போல் ஆனார்கள்.
இராமன் கூறியதைக்கேட்ட பரதன், தன் சுயநினைவை இழந்தான். ஆட்சி புரிவதை இகழ்ந்துப் பேசினான். பின்னர், இராமனைப் பார்த்துக் கூறினான்.
"மன்னரே! ரகுநந்தனா! நான் சத்தியத்தின் மேல் ஆணையிட்டுக் கூறுகிறேன். தாங்கள் இல்லாமல், அரசபோகம் எனக்குத் தேவை யில்லை. ஏன், தாங்கள் இல்லாவிட்டால் சுவர்க்க போகமும் எனக்கு வேண்டாம்.
மன்னரே! குசலி லவர்களுக்குப் பட்டம் சூட்டுங்கள். தென்கோசல நாட்டை குசனுக்கும், வடகோசலத்தை லவனுக்கும் அளியுங்கள்.
வேகமாக செல்லக்கூடிய தூதர்கள், சதருக்னனிடம் சென்று நாம் எல்லாரும் சுவர்க்கம் செல்கிறோம் என்னும் செய்தியைத் தெரிவிக்கட்டும். காலதாமதம் வேண்டாம்.''
பரதன் இவ்வாறு கூறியதைக்கேட்டும், நகர மக்கள் துக்கம் தாங்காமல் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டிருப்பதையும் பார்த்த வசிஷ்டர் (பின்வருமாறு) கூறினார்.
"குழந்தாய் இராமனே! தலையைத் தரையில் படும்படியாக வைத்துக்கொண்டு, மக்கள் எல்லாரும் துக்கப்படுவதைப்பார். இவர்களுடைய எண்ணத்தை அறிந்து கொண்டு. அதற்கேற்ப நடப்பாய். இவர்கள் மனத்திற்கு ஒவ்வாததைச் செய்யாதே.
வசிஷ்டருடைய அறிவுரையைக்கேட்ட இராமன், எல்லா மக்களையும் தலைநிமிர்ந்து நிற்கச் செய்து, அவர்கள் எல்லாரையும் பார்த்து, "நான் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டார்.
அப்போது, எல்லா மக்களும் இராமனைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார்கள். "இராமா! தாங்கள் எங்கே செல்கிறீர்களோ, அதே இடத்திற்குத் தங்களைப் பின்பற்றி வருவோம்.
குடிமக்களிடம் தாங்கள் திருப்தி அடைந்த வராக இருப்பீர்களேயானால், அவர்களிடம் அளவற்ற அன்பு வைத்திருப்பீர்களேயானால், காகுத்தரே! மனைவி- மக்களுடன் தாங்கள் செல்லும் நல்ல வழியிலேயே நாங்களும் உடன்வருவோம்.
நாங்கள் எல்லாரும் தங்களால் கைவிடத் தக்கவர் அல்லர் என்று நினைத்தால், தாங்கள் செல்லுமிடம்- தவச்சாலை, உட்புகமுடியாத கோட்டை, ஆறு, கடல் ஆகிய எதுவாக இருந்தாலும்- எங்களையும் தங்களுடன் அழைத்துச் செல்வீர்களாக.
இதுதான் எங்களுக்கு மனநிம்மதியை அளிக்கக்கூடிய செயல்; இதுதான் நாங்கள் கோரும் பெரிய வரம். மன்னரே! தங்களைப் பின்தொடர்ந்து வருவதுதான் எங்கள் நெஞ்சில் எப்போதும் அமைதியை உண்டாக்கும்.''
குடிமக்களின் உறுதியான பேரன்பைக் கண்ட இராமன், "அவ்வாறே ஆகட்டும்'' என்று கூறினார். தன்னுடைய கடமையையும் நினைத்துப் பார்த்து, அதேநாளில், தென்கோசலத்திற்கு அதிபதியாக வீரன் குசனையும், வடகோசல மன்னனாக லவனையும் முடிசூட்டினார். குசலி லவர்களுக்குப் பட்டாபிஷேகம் செய்துவைத்த பின்னர், இரு குமாரர்களையும் கட்டியணைத்து, மடியில் வைத்துக்கொண்டு, பலமுறை உச்சிமுகர்ந்து, அவரவர்களுடைய தலைநகரங்களுக்கு அனுப்பிவைத்தார்.
ஒவ்வொருவருக்கும் ஆயிரக்கணக்கான தேர்கள், பதினாயிரக்கணக்கான யானைகள், லட்சக்கணக்கான குதிரைகள் மற்றும் செல்வத்தையும் கொடுத்தார்.
சகோதரர்களான குசலி லவர்களுக்கு அநேகவித இரத்தினங்களையும் பலவகை யான செல்வங்களையும் கொடுத்தார். மனவளம், உடல்வளம் கொண்ட மக்களால் சூழப் பட்டவர்களாக, அவரவர் நகரத்திற்கு அனுப்பி வைத்தார்.
குமாரர்களுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்துவிட்டு, அவரவர் நகரங்களில் நிலைபெறச் செய்தபின்னர், மகாத்மாவான சத்ருக்னனுக்குத் தூதர்களை அனுப்பினார், இராமன்.
(தொடரும்)