குரு- சீடர் சம்பந்தம் விசித்திர மானது. சீடர்களின் தேடலின் முடிவில் குரு அமைவது, பின் பண்படுத்தப்பட்டு வழிநடத்தப்படுவதென்ப தொன்று! குருவே விரும்பி ஒருவனை சீடனாக ஏற்பதும் இதில் அடங்கும். அடுத்து சிறந்த சீடனை மகாபவித்திரமான குரு கண்டடைவது முண்டு.
காலம் ஒரு சம்பவத்தை உருவாக்கி குரு- சீடர்களை சந்திக்கவைத்து பந்தத்தை ஏற்படுத்திவிட்டது. நவாப்பின் முரட்டுத் தனமான செயலினால், எழுதப் படிக்கத் தெரியாத ஒரு பிராமணனை தனது அருட் கடாட்சத்தால் கல்வியறிவைக் கொடுத்து, அதன்பயனாய் அவனுக்கு திவான் பதவி கிடைக்கச்செய்து வெங்கண்ணர் என்ற சீடனையும்; சரஸ்வதி கடாட்சம் பரிபூரணமாகப் பெற்ற அப்பண்ணாவை நதிதீரத்தில் சந்திக்கவைத்து, அவரை அன்றைய தினத்திலிருந்தே தனது அணுக்கச் சீடனாக ஸ்ரீராகவேந்திரர் ஏற்றுக்கொண்டதும் சிறப்பான ஒன்று.
வித்யாமேன்மை இல்லாதவனுக்கு கல்வியறிவையும், அதை ஏற்கெனவே பெற்றிருந்த மற்றொருவருக்கு அணுக்கன் என்ற மேன்மையையும் கொடுத்து தனது அருகே இருத்திக் கொண்டதும்; பின்னாளின் நிகழ்வு களில் அவர்களை உரிய நேரங்களில் பொருத்தி வைத்ததும் காண்கையில், ஸ்ரீராயர் தனது ஆன்மிகப்பயண நிகழ்வுகள் இப்படியாகத்தான் போகப்போகின்றன என்பதனை எப்போதோ நிர்ணயித்து விட்டார்; அதன் முடிவையும் அவர் துல்லியமாகத் தீர்மானித்து விட்டார் என்பதை அவரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்து முடித்து யோசிக்கையில் பிரம்மிப்பின் எல்லைக்கே சென்றுவிடுவோம்.
திம்மண்ணரும் சரி; அப்பண்ணா வும் சரி- இருவருமே தனது நடத்தை யினாலும் செய்கையினாலும் குருவை மேன்மைப்படுத்தியவர்களே. சோழ சாம்ராஜ்ஜியத்தில் சிறந்த பண்டிதனும், வேதம் முற்றும் கற்றவனுமான ஒருவனிருந்தான். மெத்தப்படித்தவர்கள் அனைவரையும் சவால்விட்டு தன்னுடன் போட்டியிட அழைத்து, அவர்களை தோல்வியுறச் செய்து பெரும் கர்வத்து டன் உழன்றபடியிருந்தான். படித்த ஞானிகளையும் குருவையும் இவ்வா றாகச் செய்வது பெரும்பாவமென்று வேதமே கூறுகிறது. இவனுக்கு மறுபிறப் பென்பது மயானத்தில் பட்டமரமாக, அங்கெரிக்கப்படும் சடலத்தின் புகை வாசனையாலும், சாம்பல் காற்றாலும் கருத்த மரமாகி, அதன் கிளைகளில் பிணந்தின்னிக் கழுகுகளும், வல்லூறும், கௌதாரி போன்ற இன்னபிற பறவை களும் அலகினைத் தீட்டியும் கொத்தியும் நிற்கவேண்டிய அவல விருட்சமாக ஈனப் பிறப்பெடுக்க வேண்டியிருக்கும்.
கல்வி நன்கு வந்தபிறகு குருக்களையும், பெரும் ஆச்சார்யர்களையும், ஞானி களையும் வாதத்திற்கு இழுப்பதோ அபச்சாரம் செய்வதோ பெருத்த பாவத்திற்கு வழிவகுக்கும். இவர்களுக்கு அடுத்த பிறவி வருவது தப்பாது என வேதமே கூறுகிறது. மயானத்தில் மரமாகி நிற்பது ஒரு தண்டனையா என கேட்கத் தோன்றும். மரமாகி நின்றால் ஜடம்தானே- ஜடத்திற்குத் தன்மீது அலகால் தேய்ப்பதும், துர்வாசமும் தெரியவா போகிறது என எண்ணத் தோன்றும். மரப்பிறவி எடுத்ததால் புத்தியிருக்காது. ஆனால் அனுபவமும் அவஸ்தையும் இருக்கும். மயானத்து பிணவாடை, கரும்புகை, பிணந்தின்னிக் கழுகுகள் அலகு தீட்டும் செயல்களால் பெரும் அவஸ்தை யும், அழுகைக் குரல்களைக் கேட்டுக் கொண்டேயிருக்கின்ற அவலமும் இருந்துகொண்டேயிருக்கும். ஆனால் ஆக்கியாள்வான் என்னும் அந்த பண்டித னுக்கோ இதுபற்றியெல்லாம் கவலையில்லை. வித்யா கர்வத்தினால் எல்லாரையும் வாதத் திற்கு அழைத்தான். அவனுக்குப் பாடம் புகட்ட சோழமன்னன் பலதிசைகளுக்கும் பல்லக்கு களை அனுப்பி பண்டிதர்களை அழைத்துவரப் பணித்தான். அதிலொரு பல்லக்கு சென்ற ஆசிரமத்தில் குருவானவர் இல்லை. அங்கிருந்த யாமுனேயன் என்னும் சிறுவன் ""என்ன விஷயம்'' என்று வினவினான்.
""ஆஸ்தான வித்வானோடு வாதம் செய்யவேண்டும். மன்னர் ஆச்சார்யாரை அழைத்துவரப் பணித்திருக்கிறார்'' என்றனர்.
""அதற்கு எமது ஆச்சார்யார் ஏன்? நானே வருகிறேன்'' என்றான் யாமுனேயன்.
இம்மாதிரியான சிறுவன் வாதத்திற்கு வருவது மன்னனுக்குத் தெரிவிக்கப்பட்டது. ""ஏதோ விதியின் விளையாட்டு... சிறுவன்மூலம் பாடம் கற்பானோ! இது இறைசித்தமோ என்னவோ... அழைத்துவாருங்கள். வயது நிர்ணய மெல்லாம் இல்லை'' என ஆணையிட, அந்த பாலகன் யாமுனேயன் பல்லக்கில் எழுந்தருளி, ""நான் வெறுமேன வியாக்யானங்களை மனனம் செய்து ஒப்பிக்கும் புத்தகப் புழுவல்ல. வெறும் கவியுமல்ல. எதிரில் வரும் வாதியென்கிற பிரம்மாண்ட யானையின் மத்தகம்மீதமர்ந்து அதனையடக்கும் சிம்மம்'' என்னும்ரீதியில் கவிபாடி கம்பீரமாக அமர்ந்து வந்தான்.
உப்பரிகையில் இருந்தபடி சிறுவனின் தேஜஸைக் கண்ணுற்ற மன்னர் மகாராணியிடம், ""பாவம் இவன்... ஆக்கியாள்வானிடம் தோற்றுப்போவானே'' என கவலைப்பட்டார்.
""இல்லை... இவன் வெல்லப்போவது உறுதி. முரணாய் நடந்தால் நான் மகாராணி என்ற பட்டம் துறப்பேன்'' என்றாள்.
""பாலகன் வெற்றிபெற்றால் பாதி ராஜ்ஜியம் தருவேன்'' என்றார் மன்னர்.
சபா மண்டபத்தில் "ஜெயவிஜயீபவ' கூறி அமர்ந்த ஆக்கியாள்வான், ""முரட்டு சிங்கத்தின் முன்னே சிறுமுயல் வந்திருக்கிறதே'' என்று கேலி செய்தான்.
""சிங்கத்தைப் பார்த்து சிறுமுயல் இப்படி தான் உளறும்'' என்று யாமுனேயன் ஆரம்பிக்க...
""பலே! பலே!'' என்று சபையே கொண்டாடியது.
""சரி; நீ சிறுவனாய் இருப்பதால் உனக்கே முதல் வாய்ப்பு. இப்போது உனது உத்தேசம் என்ன? எந்த சாஸ்திரத்தில் நீ தேர்ந்தவன்?''
""ஒன்றா இரண்டா... நான் சகல சாஸ்திரங் களையும் குருமூலம் பெற்றவன். எனது மூன்று கேள்விகளுக்கு நீங்கள் மறுத்து வாதம்செய்தால் போதுமானது.''
""எப்படி?''
""நான் எதையெல்லாம் இருக்கிறது என்கிறேனோ அவற்றை இல்லையென்றும்; இல்லையென்று சொல்வதை இருக்கிறதென்றும் எதிர்த்து வாதம் செய்தல் வேண்டும். அவற்றை சரியாக எதிர்த்து ஸ்தாபனம் செய்ய இயலாது போனால் நீர் தோற்றதாக சபை கூறட் டும்'' என்றான் தெளிவாக.
""சரி... மூன்றையும் கேள்...''
""உமது தாய் மலடியல்ல. எங்கே மறுத்துப் பேசும்?''
முதல் கேள்வியே பெரிய அடியாய் விழ, ஆக்கியாள்வான் நடுங்கிப் போனான். தனது தாயை மலடியென்று எப்படிக் கூறமுடியும்?
""சரி... இரண்டாவது கேள்வி. இந்த மன்னர் சார்வபௌமன் அல்ல...''
இரண்டாவதும் இடியாய் இறங்க... விழிக்கும் அவனை நோக்கி மூன்றாவதாகப் பெரிய இடி இறங்கியது.
""இந்த மகாராணி மகா பதிவிரதை'' என்று கேள்வி கேட்ட யாமுனேயன் அப்போது ஆக்கியாள்வானுக்கு மூன்றடி நிலம் கேட்ட வாமன விஸ்வரூபியாய்த் தெரிந்தான். மகா சிரமமான சூட்சுமக் கேள்விகள், தோல்வியை ஒப்புக்கொள்ள வைத்தது. தலைகவிழ்ந்து நின்றான் ஆக்கியாள்வான். இருப்பினும் கர்வம் குறையாது, ""எங்கே... இதனை மறுத்தும் ஆமோதித்தும் உனது வித்யா விஸ்தீரணத்தைக் காண்பி'' என்றான்.
""காக்கை ஒரு முட்டைதான் இடும். வாழை ஒரு குலை மட்டும் விட்டுச் செல்லும். இருப்பினும் இவற்றை வேதம் மலடு வரிசையில் சேர்ப்பதால் உமது தாயும் மலடியே.
மன்னர் சார்வபௌமன் அல்ல. ஏழேழு உலகங்களிலும் எல்லையற்று பரந்துவிரிந்த லோகத்தில் எங்கெங்கும் அவன் ஆட்சி நடை பெற்று- அதாவது சூரியன் அஸ்தமிக்காத படிக்கு... ஓரிடத்தில் அஸ்தமித்தாலும் வேறொரு இடத்தில் ஜொலித்துக்கொண்டிருக்குமே... அப்படி தேசங்களை ஆள்பவனே சார்வ பௌமன். எல்லைக்குட்பட்ட தேச பரிபாலனம் செய்யும் இவர் சார்வ பௌமனல்ல...'' சபையில் கைத்தட்டல் அன்று இதுவரை காணாதபடிக்கு பிரம்மாண்டமானதாக இருந்தது.
""அடுத்து, ஒரு பெண் குழந்தையானது உலகத்தில் பிறந்தவுடன், அதன் ஆன்மா சந்திரனிடமிருக்கும். பிறகு கந்தர்வனிடத்தில் வரும். அடுத்து அக்னியிடம் இடம்பெயரும். அவளது திருமணக் காலத்தில் "இப்படி மூன்றுபேரிடம் இருந்தவளை உன்வசம் ஒப்படைக்கிறேன்' என்ற மந்திரம் ஓதி மணம் செய்துவைப்பர். இது சகல பெண்களுக்கும் பொதுவான ஒன்றென்று தர்மம் உள்ளது.''
சாஸ்திரத்தை அடிப்படையாகக்கொண்டு வாதிட்ட அந்த பாலகனை மகாராணியார் ஓடோடி வந்து அணைத்துக்கொண்டு, ""என்னை ஆளவந்தாயோ!'' என உவகையுடன் கூறினாள். அந்த சிறுவனே பின்னாளில் "ஆளவந்தான்' என்று அழைக்கப்பட்ட பெருமைமிகு ஆச்சார்யார்.
மதுரகவி ஆழ்வார் அயோத்தி அருகே சஞ்சரித்துக்கொண்டிருந்தபோது, தென்திசை யில் ஒரு ஜோதி தெரிந்தது. அதனைத் தொடர்ந்து பயணப்பட்டவர் தமிழக திருக்குறுகூர் வந்துசேர்ந்தார்.
அங்கே இருந்த புளியமரப் பொந்தில் பேரொளி தெரிய, அதனுள் பார்த்தபோது ஒரு மகா தேஜஸ்வி கண்மூடி அமர்ந்திருந்தார். தான் பேசுவது கேட்காது என்றெண்ணிய மதுர கவியாழ்வார் ஒரு சிறு கல்லை எடுத்துப்போட, அது எழுப்பிய ஒலியில் அந்த தேஜஸ்வி கண் திறந்தார். உடனே ஆழ்வார் ஒரு வினா எழுப்பினார். ""செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே முடங்கும்?''
""அத்தைத் தின்று அங்கேயே முடங்கும்'' என்றார் அந்த தேஜஸ்வி. "செத்ததின்' - அதாவது சரீரத்தின் வயிற்றில் பிறந்த சிறியது (ஆத்மா) எதை உண்டு எங்கே முடங்கும் என்று கேட்டதற்கு, "ஆச்சார்யரான குரு அனுக்கிரகம் கிட்டாதவரை அது தன்னைத்தானே மறுபடி மறுபடி தின்று (பிறப்பெடுத்து பிறப்பெடுத்து) அவதியுறும்' என்ற உயர்ந்தரீதியிலான பதிலளிக்கப்பட்டது.
அவரை தனது ஆச்சார்யராக ஏற்றுக் கொண்டு இத்திவ்ய தேசத்திற்கு பதினோரு பாசுரங்களை அருளியுள்ளார். நாலாயிர திவ்யப் பிரபந்தத்திற்கு ஈடாக இந்த பதினோரு பாசுரங் கள் இன்றளவில் போற்றப்படுகின்றன. ஆள வந்தாரையும் மதுரகவியாழ்வாரையும் இங்கு குறிப்பிடவேண்டிய நோக்கமே- இருவருமே தமது ஆச்சார்யர்களைத் தூக்கிப்பிடித்தவர்கள். தங்கள் ஆச்சார்யர்களின் பெருமையினை பரவச்செய்தவர்கள்; போற்றியவர்கள். ஆள வந்தாரைப் போன்ற சிறந்த ஞானப்பொக்கிஷம் அப்பண்ணாச்சார்யார். மதுரகவியாழ்வாரைப் போன்றவர் வெங்கண்ணர். இருவருமே ஸ்ரீராகவேந்திரரால் கண்டெடுக்கப்பட்ட பிரசாதங்கள் என்பது மிகையான வார்த்தை யல்ல.
ஸ்ரீராகவேந்திரர் முன்பாக இரு ஞானபிம்பங் களும் சோகமயமாக நின்றிருந்தனர். என்னதான் உயர்ந்த ஞானவான்களாக இருப்பினும், பிரிவென்ற ஒற்றைச் சொல்லின் வலியை ஏற்றுக்கொண்டு பக்குவமடைய இரு ஆத்மாக்களும் விரும்பவில்லை.
அவர்கள் இருவரும் தங்கள் குருமீது வைத்திருந்த மகா பக்தியும், உயிரோட்டமான பாசமும் அளப்பரிய ஒன்று.
""உங்கள் இருவரையும் சீடர்களாகப் பெற்றது எனது பூர்வஜென்மத்து வரமோ என பெருமைப்படும்படியான விஷயம். இந்த நிகழ்வில் இரு வெவ்வேறு தளங்களில் செயல்படவேண்டிய அவசியத்தில் இருக்கக் கூடியவர்கள்- அதற்குத் தகுதியானவர்கள் நீங்கள் மட்டுமே. எனவே தன்னிலையுணர்ந்து செயல்படுங்கள். நீங்கள் குருவுக்காற்றும் உச்சபட்ச முக்கிய சேவையிது என்பதை உணர்வீர்களாக. ஜென்ம ஜென்மங்களாகப் பேசப்படப்போகின்ற- பல தலைமுறையினரால் சிலாகிக்கப்படப்போகின்ற சாட்சியாக இருக்கப் போகிறவர்கள் நீங்கள். நாளை உதயத்தில் திவான் வெங்கண்ணர் மன்னரிடம் அனுமதிபெற்று என்னுடன் சில மணி நேரம் செலவுசெய்ய வேண்டியுள்ளது. உடன் அப்பண்ணா, பிறகு நான் சொல்கின்ற முக்கிய சீடர்களும் என்னுடன் வந்தால் போதுமானது.
என் மூலராமன், வருகின்ற நாட்களில் நல்வழிப் படுத்துவார்.''
இருகரம் தூக்கி ஸ்ரீராயர் ஆசிர்வதிக்க, அவர் தங்களை வழியனுப்புவதைப் புரிந்து கொண்டு வணங்கி துயரத்தோடு விடைபெற்றனர்.
""லக்ஷ்மி நாராயணா... ஏன் ஏதோ சிந்தனைவயப்பட்டவனாக இருக்கிறாய்? முகத்தில் பெரும் சோகம் ததும்பிக்கிடக்கிறதே.''
மாலைநேர சூரிய வெளிச்சம் தோய்ந்தி ருந்த குடிலின் திண்ணையில், லேசாக கண் கலங்கியபடி அமர்ந்திருந்தவனின் தோளை ஆதரவாய்ப் பற்றினான் வெங்கடநாராயணன்.
""ஒன்றுமில்லை அண்ணா.''
""உனது முகம் அப்படிக் கூறவில்லையே லக்ஷ்மி. எதையும் பகிர்ந்தால் மட்டுமே இறுக்கமும் அழுத்தமும் குறையும்.''
""நமது குருவானவர் இன்னும் எத்தனை நாட்கள் நம்மோடு இருப்பார் அண்ணா?'' கண் களில் கண்ணீர் கட்டுப்படுத்த இயலவில்லை. தாரைத் தாரையாக இறங்கியது. உதடுகளைக் கடித்து மிகச்சிரமப்பட்டே தனது துயரை அவன் கட்டுப்படுத்துவது புரிந்தது.
""பார் லக்ஷ்மி நாராயணா. நேற்றுதான் பெரியப்பா உன்னிடம் அவ்வளவு கூறினார். இருந்தும் நீ தன்னிலை மறுக்கிறாய். ஸ்ரீமடத்தில் உணர்வுகளைக் கட்டுப்படுத்துதல்கூட நமக்கு போதிக்கப்பட்டிருப்பதே...''
""அண்ணா... என் நிலையில் நீ இருந்தால்- அன்னையும் இல்லாது... இப்போது...'' என்று அதற்குமேல் பேச இயலாது துக்கம் நெஞ்ச டைக்க தலைகுனிந்து அமைதியாய் அழலானான்.
சற்று ஆசுவாசம் அடையும்வரை காத்தி ருந்த வெங்கடநாராயணன், ""சரி இப்போது எதற்கு நாள் கணக்கு கேட்கிறாயப்பா?''
""நான் அவரை இன்னும் அவருக்குத் தெரியாது அருகிருந்து பார்த்து, என்னாலி யன்ற சேவையினை குருவுக்குச்செய்து ஆத்ம திருப்தியடைவேன் அண்ணா. அப்பண்ணாச் சார்யாரிடம் கேட்டாவது என்னிடம் சொல் லுங்களேன்.'' பரிதாபமான குரலும் அவனின் தோற்றமும் யாரையுமே கலங்கச் செய்துவிடும். வெங்கடநாராயணன் துன்பப்பட்டான். உலகில் இதுபோன்ற துர்பாக்கிய நிலை யாருக்கும் ஏற்பட்டிருக்காது என்றெண்ணி பெருமூச்சு விட்டான்.
""எனக்குத் தெரிந்து ஸ்வாமிகள் குடந்தை யில் நம்மைப்போன்ற பல சீடர்களுக்கு போதித்துக்கொண்டிருந்தாராம். அப்போது திடீரென்று எழுந்து வேகமாக வெளிச்சென்று பார்க்க, வானமார்க்கமாய் சென்று கொண்டி ருந்த கிருஷ்ணத் துவைபாயனர் என்ற மாபெரும் ஞானி மும்முறை இருவிரல் காட்டி துளசி மாலையும் நமது ராயருக்கு அருளினாராம். ஒரு மூத்த சீடர் அவரிடம் சமிக்ஞையின் அர்த்தம் கேட்க, "இன்னும் இரண்டு ஆண்டுகள், இரண்டு மாதங்கள், இரண்டு நாட்கள் மீதமிருக்கின்றன- நீர் பிருந்தாவனப் பிரவேசமடைய' என்றதாய் அதன் விளக்கத்தை ஸ்ரீராயர் கூறினாராம். அதன் படி கணக்கிட்டோமானால் ஸ்வாமிகள் தமிழகத்தில்- அதாவது குடந்தையிலிருந்து அவர் நடைப்பயணமாக ஆந்திரம் வந்துசேர ஆறேழு மாதங்கள் ஆகியிருக்கலாம். அல்லது கூடவும் ஆகியிருக்கலாம். பிறகு நவாப் அவர் களை சந்தித்தது மற்றும் இன்னபிற நிகழ்வு கள் நடக்க ஒருவருடமேனும் சற்றேறக்குறைய ஆகலாம். ஆக இன்னும் ஒரு வருட காலம் இருக்கும் என்பது எனது கணிப்பு லக்ஷ்மி நாராயணா! சரிதானோ என்னவோ..''
""ஆஹா! அற்புதம்! இன்னும் ஒருவருடம் நான் குருவின் அருகிருந்து சேவை செய்வதன் மூலம் எனக்கு ஆத்மதிருப்தி நிச்சயம் கிடைக்கும்.
இது ராமசேவை போன்றே ராயர் சேவை. எனக்குத் துணையிருந்து இதை நிறைவேற்ற உதவி செய்யுங்கள் அண்ணா.''
""நிச்சயமாய் செய்வோம் லக்ஷ்மி. அப்பண்ணா வோடு பேசி ஸ்வாமிகளை உடனிருந்து கவனிக்க அந்த ஸ்ரீராமனை வேண்டுவோம்.''
அன்று காலையே வெங்கண்ணா பந்த் ஸ்ரீராகவேந்திரரை சந்தித்தார். உடன் அப்பண்ணா, மூன்று சீடர்கள்- குறிப்பாக லக்ஷ்மிநாராயணனும் வெங்கடநாராயணனும் உடனிருக்க, அவர்களுடன் ஸ்ரீராகவேந்திரர் மந்த்ராலயம் வந்துசேர்ந்தார்.
கிழக்குமுகமாய் நின்று சூரியனை வணங்கி, பின் மேற்கு திசையில் நடக்கலானார். பலநூறு அடிகள் நடந்தவர், ஒரு குறிப்பிட்ட இடம் வந்தடைந்தவுடன் சட்டென்று நின்றார்.
தோளில் பலாச தண்டத்தை சாய்த்துக் கொண்டு, தனது இருகரங்களாலும் அவ்விடம் நோக்கிக் கூப்பி தலைவணங்கி நின்றவர், பின் நிமிர்ந்து அனைவரையும் உற்று நோக்கிப் புன்னகைத்தார். மெல்ல மெல்ல அவரது நயனங் கள் மூட, அவர் மனம் கிருதயுகத்திற்குச் சென்றது.
தான் பிரகலாதனாக கிருதயுகத்தில் அவதரித்து, அங்கு பலமுறை யாகங்கள் செய்த இடம் இதுவென துல்லியமாய் உணர்ந்தார். குறிப்பாக- தந்தை இரண்யகசிபுவின் சம்ஹாரம் நிகழ, தானே பிரதான காரணமாக அமைந்து விட்டதனால், அதனால் ஏற்பட்ட தோஷ நிவர்த்தி யாகமும் இவ்விடமே நிகழ்ந்ததும் அவர் மனதில் பிரதிபலிக்க, அவர் திருத் தேகம் சிலிர்த்தது.
அடுத்து ராம- லட்சுமணர்கள், அன்னை சீதாப்பிராட்டியாரை இராவணன் கவர்ந்து சென்ற திசைநோக்கித் தேடிவருகையில் இவ்விடம் வந்தமர்ந்ததனால் அவ்விடம் மேலும் பவித்திரம்கூடி மேன்மையுற்றது.
அடுத்து திரேதாயுகத்தில் பாண்டவ- கௌரவர்களால் விளைந்த பாரதப் போரில், வெற்றிக்குப்பிறகு பாண்டவர்கள் அஸ்வமேத யாகம் செய்ய இவ்விடத்தில் முயற்சிக்கையில், அதைத் தடுத்து யுத்தம் புரிந்த அனுசால்வனோடு அர்ஜுனன் போரிட்டான். அவனை வெற்றி கொள்ள இயலாதபடி போர் நீண்டுகொண்டே யிருந்தது. அதன் சூட்சுமக் காரணம்- பிரகலா தன் யாகம் செய்த இடம் இதுவென்பதால் சாத்தியமற்றுப் போனது. அதையுணர்ந்த கிருஷ்ண பரமாத்மா அதன் சூட்சுமத்தைத் தெரிந்து அர்ஜுனனை பின்வாங்கச் செய்ய, அனுசால்வன் முன்னேறத் தொடங்க... அவனை தந்திரமாக அவ்விடத்தைவிட்டு வெளியில் வரச்செய்து வீழ்த்த முடிந்தது.
மேலும் விபுதேந்திர தீர்த்தர் என்ற மாபெரும் மகானும் அவ்விடத்தில் பெருந்தவம் செய்து சிறப்பெய்துள்ளார். அங்கு எத்தகைய நிகழ்வைச் செய்தாலும் அது பெரு வெற்றியாக அமையும்.
அத்தனை மகிமைகள் பல பெற்ற அவ்விடத்தை மனதுள் தியானித்துக் கண்திறந்தார் ஸ்ரீராயர். அவ்விடத்தை வெங்கண்ணரைப் பணித்துத் தோண்டச்செய்தார். சிறிது ஆழத்தில் யாக குண்டமும் சாம்பலும் கிடைக்க, இன்னும் சிறிது தோண்ட பலிபீடமும் தெரியலாயிற்று. ஸ்ரீராகவேந்திரர் அவ்விடத்தின் யுகத் தொடர்பை விவரித்துக்கூறலானார்.
அனைவரும் அந்த உயர்ந்த அந்தஸ்த்தை யுகயுகமாய்த் தொடர்ந்து பெற்ற அந்த பூமியை சாஷ்டாங்கமாக வணங்கி எழுந்தனர். ஸ்ரீராக வேந்திரரின் அபரோக்ஷித ஞானத்தைக்கண்டு பெருமிதமாயினர்.
""ஸ்வாமி, இவ்விடத்தினை நாம் பாதுகாக்க வேண்டுமல்லவா? தாங்களும் ஏதேனும் யாகம் செய்யப்போகிறீர்களா?'' என்றார் அப் பண்ணா ஆர்வமுடன். லக்ஷ்மிநாராயணனும், வெங்கடநாராயணனும், வெங்கண்ணரும் ஸ்ரீராயர் என்ன கூறப்போகின்றார் என ஆவலுடன் எதிர்நோக்கலாயினர்.
""ஆம்; அதற்கும் மேலாக ஒன்று இங்கு நிகழப்போகிறது.''
""அந்த யாகத்தின் பெயரை நாங்கள் அரியலாமா ஸ்வாமி?'' என்றார் வெங்கண்ணர். ஸ்ரீராகவேந்திரர் புன்னகைத்தார்.
""அதற்கும் மேலாக என்றல்லவா நான் கூறினேன். இந்த இடத்திற்கும் ஒவ்வொரு யுகத் திற்கும் இருந்த சம்பந்தங்களை அனைவருக்கும் கூறினேன். இந்த சங்கிலி முயற்சியாய் நானும் இவ்விடம் இக்கலியுகத்தில் வந்து சேர்ந்திருக்கி றேன். இந்த யுகத்தொடர்பு இனி என்னால் ஒரு முடிவிற்கு வரவேண்டி என் மூலராமன் தீர்மானித்துள்ளான். இது பலநூறு ஆண்டுகள், பலகோடி அன்பர்கள் வரவேண்டி- அவர்கள் வரம்வேண்டி வருகின்ற இடமாகப்போகிறது. அவர்களின் நியாயமான கோரிக்கைகளின் அடிப்படையிலான பிரார்த்தனையை நிறை வேற்றவும், இக்கலியுகத்தின் கவனத்திற்கு என்றென்றும் நிலையாய் நிற்கவும் அடையாளம் காணவே உங்கள் அனைவரையும் இங்கு அழைத்துவந்துள்ளேன்.''
""ஆஹா! பலப்பல புராண இதிகாச சிறப்பு வாய்ந்த இந்த புனித இடத்தை, நவாப்பின் ஆட்சியில் என்மூலம் பரிபாலனம் செய்ய அமைந்தது நான் பெற்ற பாக்கியமே ஸ்வாமி. இவ் விடத்தை நடந்து கடந்து சென்று, இதன் பவித்தி ரம் தெரியாதவர்கள் அசுத்தம் செய்யவும் வாய்ப்புண்டு. ஸ்வாமிகள் அனுமதியளித்தால் நன்கு திடமாய் வேலியிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துவிடுகிறேன். அதுமட்டு மின்றி இப்பேற்பட்ட சிறப்பான இவ்விடத்தை எங்களுக்குக் காண்பித்ததன்மூலம், இது வழிபாட்டிற்குரிய சிறப்பான புனிதம் தாங்கிய நிலம் என்பதை உணர்ந்தோம். இதைக் காண் பிக்க என்ன காரணம் என நாங்கள் அறியலாமா ஸ்வாமி?'' என்றார் வெங்கண்ணர்.
""நிச்சயமாய். இப்போதே தெரிய வேண்டுமா?''
""ஆவலோடு இருக்கிறோம்'' என்றனர் அனைவரும் ஒன்றாக.
""நான் பிருந்தாவன... ஆம்; ஜீவ பிருந்தாவனம் மேற்கொள்ளவே இவ்விடத்தைத் தேர்ந்தெடுத் திருக்கிறேன்'' என்றார் புன்னகையுடன்.
(தொடரும்)