இன்றைய தமிழக அரசியல் களத்தில் அடிக்கடி உச்சரிக்கப்படும் சொல் "ஆன்மிக அரசியல்' என்பதே. இந்தச் சொல் தமிழகத்தில் தற்போது புதிதாக இருக்கலாம். பொதுவாக ஆன்மிகவாதிகள் கட்சி அரசியலில் நேரடியாக ஈடுபடுவதில்லை. ஆட்சிக்கு அப்பாற்பட்டு ஆன்மிகப் பணிகளை- ஆன்மிகவாதிகள், மடாதிபதிகள், துறவிகள் மேற்கொண்டனர்.
இந்தியாவில் சுமார் 14-ஆம் நூற்றாண்டில் முஸ்லிம் மன்னர்களின் ஆட்சியின்போது பலவகையில் பாதிக்கப்பட்ட இந்துக்களைப் பாதுகாக்க, ஆன்மிகவாதியும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் (சிருங்கேரி மடம்) 12-ஆவது பீடாதிபதியுமான ஸ்ரீ வித்யாரண்ய ஸ்வாமிகள் (துறவு கி.பி. 1331-1386), துங்கபத்திரை நதிக்கரையில் ஹரிஹரர் (1336-1355), அவரது தம்பியான புக்கர் (1355-1376) ஆகிய இருவரைக்கொண்டு விஜயநகரம் என்னும் ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். இந்தப் பேரரசு உருவாக முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர் ஸ்ரீவித்யாரண்ய ஸ்வாமிகளே. ஆன்மிகம் எப்படி அறம்சார்ந்த விஷயமோ அதே போன்று அரசியலும் அறம் சார்ந்த விஷயமே. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அரசியலில் அறமென்பது அரிதாகிவிட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ragavender1_2.jpg)
சிருங்கேரி மடத்தின் பத்தாவது பீடாதிபதியாக அருளாட்சி செய்தவர் ஸ்ரீ வித்யாசங்கரர் (துறவு 1228-1333) என்னும் மகான் ஆவார். இவரைப்பற்றி விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் மன்னரான இரண்டாவது ஹரிஹரர் கூறும்போது, "ஸ்ரீ வித்யாதீர்த்தர் துறவிகளுள் முதன்மையானவர். அவரை யதிராஜர் என்று கூறலாம்.
அவர் சூரியனைவிட மேம்பட்டவர். சூரியன் பகலில் புற இருளைத்தான் போக்குவான். ஆனால் ஸ்ரீ வித்யாசங்கர தீர்த்தரோ பகலிலும் இரவிலும் நமது புற இருளையும் அக இருளையும் ஒருங்கே போக்குபவர்' என புகழுரை தந்துள்ளார்.
கி.பி. 1228-ஆம் ஆண்டு துறவறம் மேற் கொண்ட ஸ்ரீ வித்யாசங்கரர், சுமார் 105 ஆண்டுகள் பீடாதிபதியாக அருளாட்சி செய்தவர். சிறந்த தவயோகியும் ஆசாரசீல ருமாக விளங்கிய கல்விமான் ஆவார். இவருக்கு ஸ்ரீ பாரதீகிருஷ்ண தீர்த்தர், ஸ்ரீ வித்யாரண்யர் என்னும் இரு சீடர்கள் இருந்தனர். 11-ஆவது பீடாதிபதியாக இருந்த ஸ்ரீ பாரதீகிருஷ்ண தீர்த்த சுவாமிகள் தன் குருவுடனேயே தங்கியிருந்து ஆன்மிகப் பணிகளை மேற்கொண்டார். 12-ஆவது பீடாதிபதியான ஸ்ரீ வித்யாரண்ய ஸ்வாமிகள் எப்போதும் விஜய யாத்திரையிலேயே இருந்தார். இவர் காசி மாநகருக்குச் சென்ற சமயத்தில் பகவான் வேதவியாசரின் தரிசனம் கிட்டியது.
இவர் ஸ்ரீ பாரதீகிருஷ்ண தீர்த்தரிடம், தான் லம்பிகா யோகத்தில் பூமிக்கடியில் இருக்கப்போவதாகக் கூறியபடி, சிருங்கேரி யில் துங்கா நதிக்கரையில் பூமிக்கடியில் சுரங்கம் போன்ற குழிதோண்டி, அதில் ஸ்ரீ வித்யாசங்கரர் லம்பிகா யோகத்தில் ஈடுபட்டார். மிகவும் கடினமான இந்த யோகத்தைத் தன் தவத்தின் பயனாக மிகச்சுலபமாகச் செய்தவர்.
12 ஆண்டுகள் பூமிக்கடியில் தவம்செய்யும் இந்த யோகத்தில் அவர் ஈடுபட்டபோது, குழியை நன்கு மூடிவிடவேண்டு மென்றும்; 12 ஆண்டு களுக்கு முன்னர் திறக்க வேண்டாமென்றும்; அவ்வாறு திறந்தால் தான் சதுர்மூர்த்தி வித்யேச்வரர் போன்று மாறிவிடுவேன் எனவும் கூறி, குழியை மூடியநிலையில் பூமிக்கடியில் லம்பிகா யோகத்தில் ஈடுபட்டார். ஆனால் 12 ஆண்டுகள் முடிவதற்கு சில ஆண்டுகள் முன்பாக, பீடாதிபதி சிருங்கேரியில் இல்லாத சமயத்தில், மடத்தில் பணிபுரிபவர்கள் ஆர்வமிகுதியால் மூடியிருந்த குழியைத் திறந்தபோது, அங்கு ஸ்ரீ வித்யாசங்கரரின் புனித உடல் காணப்படவில்லை. அதற்கு மாறாக சதுர்மூர்த்தி வித்தியேச்வரர் உருவத் தின்மேலுள்ள லிங்க வடிவம் இருப்பதைக் கண்டு அதிசயித்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ragavender_12.jpg)
குருநாதரின் கட்டளையை மீறி குழியைத் தோண்டியதை எண்ணி அவரது சீடர் களான ஸ்ரீ பாரதீகிருஷ்ண தீர்த்தரும் ஸ்ரீ வித்யா ரண்யரும் மிகவும் வருந்தினார்கள். மீண்டும் அந்தக் குழியை மூடிவிட்டார்கள். ஒருநாள் ஸ்ரீ பாரதீகிருஷ்ண தீர்த்தரின் கனவில் வந்த ஸ்ரீ வித்யாசங்கர தீர்த்தர், அந்த இடத்தில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்யுமாறு கூறினார். அதன்படி விஜயநகர மன்னர்களின் உதவியுடன் சாளுக்கிய, திராவிட பாணியில் முழுவதும் கல்லாலான அழகிய பெரிய ஆலயத்தை ஜர்கணன் என்னும் தலைமைச் சிற்பியைக்கொண்டு உருவாக்கினர். கிபி 1338-ல் கட்டப்பட்ட இந்த ஆலயம் ஸ்ரீசக்கரம் போன்ற அமைப்பில் கலைநயத்துடன் அமைந்துள்ளது. இங்கு வரும் பக்தர்கள் இந்த ஆலயத்தின் அழகையும் சிற்பக்கலை நுட்பத்தையும் கண்டு இன்றும் வியந்து பார்ப்பதுண்டு. தற்போது இவ்வாலயம் இந்திய அரசின் தொல்பொருள் துறையால் பாதுகாக்கப்படுகிறது. இந்த மகானைப் போற்றும் வகையில் இன்றும் சிருங்கேரி மடத்தில் அதிகாரப்பூர்வமான முத்திரையில் "ஸ்ரீ வித்யா சங்கரர்' என பொறிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில்- குறிப்பாக தென்னிந்தியப் பிரதேசங்களில், ஸ்ரீ வித்யாரண்யர் காலத்தில் அரசியல் நிலைமை இந்துக்களுக்கு எதிராகவே இருந்தது. இந்துக்கள் கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள் யாவும் தகர்க்கப்பட்டன. இத்தகைய கொடுமை களைத் தடுக்க தங்களுக்கென ஒரு தனி அரசு வேண்டுமென்னும் எண்ணம் இந்துக்களுக்கு ஏற்பட்டது.
முதன்முதலில் நமது இந்தியாமீது படையெடுத்த முஸ்லிம்கள் அரேபியர்கள் தான். அவர்களது ஆட்சிக்காலத்தில் பல மன்னர்கள் டெல்லியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சிபுரிந்தனர். வட இந்தியாவில் ஆதிக்கம்செலுத்திய முஸ்லிம் மன்னர்கள், அரசியல் ஆசையாலும் படைபலத்தாலும் தென்னிந்தியாவையும் கைப்பற்றத் துடித்தனர்.
டெல்லி சுல்தான் முகம்மது பின் துக்ளக் (கி.பி. 1325-1351) ஆட்சியில் ஏற்பட்ட நிர்வாகக் குழப்பத்தால் அவர்களது திட்டம் பலவீனமடையத் தொடங்கியது. முகம்மது பின் துக்ளக்கின் உறவினரான பஹாவுதீன் டெல்லி அரசை எதிர்த்து நாட்டில் கலகம் செய்தான். அவனை தண்டிக்க முகம்மது படையினர் வந்தபோது, துங்கபத்திரை நதிக்கரையிலிருந்த ஆனேகுந்தி சிற்றரசனிடம் தஞ்சம் புகுந்தான். முகம்மது படையினரின் தாக்குதலை சமாளிக்கமுடியாமல், பஹாவுதீன் ஹொய்சாள சிற்றரசன் வீர வல்லாளன் என்பவனிடம் தஞ்சம் புகுந்தான். ஆனால் அந்த சிற்றரசன் முகம்மது படைக்கு அஞ்சி பஹாவுதீனை சுல்தான் படையிடம் ஒப்படைத்தான். அவர்கள் அவனை சித்திரவதை செய்து கொன்றனர். சிலநாட்களில் ஆனேகுந்தி சிற்றரசன் இறக் கவே, அவனது அமைச்ச ரான ஹரிஹரனும், நிதிக் காப்பாளரான புக்கரும் அரசை வழிநடத்தினார்கள்.
இந்துக்களின் நலனைக் காக்க தனி அரசு அமைக்க எண்ணிய ஹரிஹரனும் புக்கரும் சிறிய படையைத் திரட்டிப் போராடினார் கள். இறுதியில் தோல்வியைத் தழுவியதால் இருவரும் மிகுந்த கவலைகொண்டனர். ஹம்பியில் விரூபாக்ஷர் ஆலயத்திற்கு அருகே முகாமிட்டிருந்த ஸ்ரீ வித்யாரண்ய சுவாமி களிடம் தங்கள் மனக்குறையைத் தெரிவித்த னர். சிறந்த தவயோகியான ஸ்ரீ வித்யாரண்யர் இருவருக்கும் பரிபூரண ஆசிர்வாதம் செய்து, போரில் எவ்வாறு வெல்லவேண்டுமென்னும் ராஜதந்திர ஆலோசனைகளையும் கூறினார்.
குருவின் ஆசியால் அடுத்தடுத்து வந்த சிறிய போர்களிலெல்லாம் இருவரும் வெற்றி கண்டனர்.
துங்கபத்திரை அருகேயிருந்த ஆனேகுந்தியில் தம் குருநாதர் பெயரில் ஸ்ரீவித்யா நகரத்தை உருவாக்கினார்கள். அதுவே பிற்காலத்தில் விஜயநகரம் என்று அழைக்கப் பட்டது. இந்த நகரம் 1336-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆங்கில நாட்காட்டி கணக்குப்படி 1336 -ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 18-ஆம் தேதியாகும். முதலாம் ஹரிஹரன் சுதந்திர விஜயநகர அரசின் முதல் மன்னரானார். அவருக்குப்பின்பு அவரது தம்பி புக்கர் மன்னரானார். ஹரிஹரன் ஆட்சியில் தென்னாட்டின் பெரும்பகுதி விஜயநகரப் பேரரசின்கீழ் வந்தது. குமரிவரை பரவியிருந்ததாகக் கூறுவார்கள். அதேபோன்று புக்கர் ஒரிசாவரை வென்றார்.
விஜயநகர அரசு பதினைந் தாம் நூற்றாண்டில் துளு ராச்சியம், மலை ராச்சியம், உதயகிரி ராச்சியம், பெனுகொண்டா ராச்சியம், ராச கம்பீர ராச்சியம், மழவ ராச்சியம் என ஆறா கப் பிரிக்கப்பட்டது. ராச கம்பீர ராச்சியம்தான் நமது தமிழகம்.
முதல் மன்னராகப் பதவியேற்ற ஹரிஹர னுக்கு ஸ்ரீ வித்யாரண்யரே பட்டாபிஷேகம் செய்துவைத்தார். அதன்பின் சிறிய சிறிய ராஜ்ஜியங்கள் ஒன்றி ணைந்து சாம்ராஜ்ஜி யமாக மாறியது. குருவின் திருவருளால்தான் பெரும் வெற்றியைப் பெற்றோம் என்பதால், அவருக்கு நன்றி செலுத்தும் வண்ணம் சக்கரம், சாமரம், கொடி, விதானம், பல்லக்கு, தங்க சிம்மாசனம், தங்கப் பாதுகை போன்ற வற்றை காணிக்கையாக அளித்தார். துறவியான தனக்கு இவை யாவும் வேண்டாமென மறுத்த ஸ்ரீ வித்யாரண்யர், மடத்தின் உபயோகத்திற்குப் பயன்படுத்துமாறு கூறிவிட்டார்.
எனவே அக்காலத்திலிருந்து சிருங்கேரி மடாதிபதிகளுக்கு "கர்நாடக 'சிம்ஹாசன பிரதிஷ்டாபனாச்சாரியார்' (கர்நாடக ராஜ்ஜியத்தை நிறுவியவர்) என்னும் சிறப்புப் பட்டம் ஏற்பட்டது. இன்றைக்கும் சிருங்கேரி மடாதிபதிகள் நவராத்திரி காலத்தில் மட்டும் தினமும் இரவில் ராஜதர்பார் நடத்தும் வழக்கமுண்டு. அச்சமயம் விஜயநகர மன்னர் கள் மற்றும் பிற மன்னர்கள் அளித்த அரசு சின்னங்கள், கிரீடங்களை தரித்து, மடத்தின் அதிதேவதையான சாரதாம்பாள் அன்னையை வழிபட்டு ராஜதர்பார் நடத்துவார்கள்.
ஸ்ரீ வித்யாரண்யர் சிறந்த தவயோகி யாக மட்டு மல்லாமல், ஸ்ரீ ஆதிசங்கரரின் வரலாற்றை 'ஸ்ரீமத் சங்கர திக்விஜயம்' என்னும் பெயரில் எழுதினார், அது மட்டுமின்றி, அவர் எழுதிய நூல்களில் ஸ்ரீ பாரதீ கிருஷ்ண தீர்த்தருடன் இணைந்து எழுதிய "பஞ்சதசீ' என்னும் நூலில், அத்வைத வேதாந்தக் கருத்துகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
ஒரு ஆன்மிகவாதியான வித்யாரண்யரின் திருவருளால் ஒரு இந்து சாம்ராஜ்ஜியமே உருவானது என்பது உண்மை. ஸ்ரீ சிருங்கேரி மடத்தின் 12-ஆவது பீடாதி பதியாக (1380-86) விளங்கிய இவரால், கிபி 1336-ல் உருவாக் கப்பட்ட விஜயநகர சாம்ராஜ்ஜியம் ஏறத்தாழ 250 ஆண்டுகள் நாட்டை நல்லமுறை யில், மக்களுக்கு எவ்விதமான குறைகளு மின்றி ஆண்டது. நாட்டு மக்கள் விரும்பும் வண்ணம் நல்லாட்சியை அளித்தது மட்டு மின்றி, சைவ- வைணவ சமயங்களின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தந்தது. அதேசமயத்தில் பிற மதத்தினருடனும் நல்லிணக்கம் காட்டியது. விஜயநகர மன்னர்கள் காலத்தில், தென்னிந்தியாவில் காளஹஸ்தி, சிதம்பரம், மதுரை, ஸ்ரீரங்கம், திருப்பதி போன்ற பல கோவில்களுக்குத் திருப்பணி களைச் செய்தனர். ஆக, ஆன்மிக அரசியல் என்பது நமக்குப் புதிதல்ல.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-03/ragavender-t.jpg)