மகாளயபட்ச ஆரம்பம்- 25-9-2018
மகாளய அமாவாசை 8-10-2018
சூரியனும் சந்திரனும் இணைகின்ற நாளே அமாவாசை என நாம் அறிவோம். அதுமட்டுமின்றி இறைவனின் வலது கண்ணாகிய சூரிய சக்தியும், இடது கண்ணாகிய சந்திர சக்தியும் சேர்ந்து, இறைவனின் ஆக்ஞா நேத்ர சக்தியானது பல தீர்த்தங்களிலும், பித்ரு முக்தித் தலங்களிலும் பெருகுகின்ற நாளே அமாவாசையாம்!
அமாவாசையன்று சூரிய, சந்திர ஐக்கிய மண்டலத்தில் தோன்றும் சோமபாஸ்கர சாயா தீர்த்தத்தில் பித்ருக்கள் நீராடி, தங்களுடைய பித்ருக்களுக்கும் தர்ப்பண அர்க்யம் அளிக்கின்றனர். ஆம்; பித்ருக்களுக்கும் தர்ப்பண பூஜை முறைகள் உண்டு!
பித்ருக்களுக்கெல்லாம் நாயகராக விளங்குகின்ற ஸ்ரீமகாவிஷ்ணு, அமாவாசையன்று சூரிய, சந்திர ஐக்கிய மண்டலத்தின் எள், பிரண்டை, புடலங்காய், வாழைக்காய் போன்ற பித்ருசக்திகள்கூடிய தாவர மண்டலங்கள் நிறைந்த தேரில் பவனிவருகிறார்.
பித்ரு முக்தித் தலங்கள்
அமாவாசைச் சித்தர் என்னும் பெயர் கொண்ட சித்தபுருஷர்கள் பலர் உண்டு. எவ்வாறு எத்தனையோ அகத்தியர், திருமூலர்கள் தோன்றி மறைந்து, தோன்றாச் சுடரொளி சித்தர் பிரானாக, என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாக விளங்குகின்றனரோ, இதேபோல அமாவாசைச் சித்தர், திதிப் பிரவாளர் போன்ற கால காலாதீதச் சித்தர்கள் எத்தனையோ லோகங்களில் இன்றும் அருளாட்சி புரிகின்றனர். வேதாரண்யம், இராமேஸ்வரம், திலதைப்பதி (கோவில்பத்து), பட்டுக்கோட்டை அருகே இடும்பவனம், பரிதிநியமம், திருவிடைமருதூர், எச்சூர், பெருமகளுர் போன்ற பித்ரு முக்தித் தலங்களில் மானுட வடிவிலும், சூட்சும ரூபங்களிலும் தர்ப்பண பூஜைகளை மேற்கொள்கின்றனர்.
சித்தர்களுக்கும் தர்ப்பண பூஜை
காலங் கடந்தவர்களாகவும், மடி ஆசார நியமங் களுக்கு அப்பாற்பட்டு பூஜை, புனஸ்காரங்களில் கரை கண்டவர்களாகவும், அரும்பெரும் இறை வழிபாட்டு நிலைகளைக் கடந்தவர்களாகவும் பிரகாசிக்கின்ற சித்தபுருஷர்களே காருண்ய தர்ப்பணப் பூஜையை மேற்கொள்ளும் அவசியம்தான் என்னே!
பூலோக மக்களில் பலர் சுகபோகத்தில் திளைத்து, சோம்பேறித்தனத்தாலும், அறியாமையினாலும் கடைப்பிடிக்க மறந்த பூஜைகள், தர்ப்பண வழிபாட்டு முறைகள் நிறைய உண்டு. ஒவ்வொரு வினாடி நேரத்தையும் பூலோக ஜீவன்களின் நலன்களுக்காக அர்ப்பணிக்கும் சித்தபுருஷர்கள்தாம் இத்தகைய பூஜைகளைத் தாமே ஏற்று நடத்தித்தந்து, அவற்றின் பலாபலன்களைப் பிரித்து வழங்குகிறார்கள்! இதனால்தான் இறைவழிபாட்டு முறைகளை சரிவரக் கடைப்பிடிக்காதவர்களுக்கும்கூட வான்மழை பொழிகிறது. நல்லிடம், நல்லுணவு, நல்லுடையுடன் நற்சந்ததியும் வாய்க்கிறது!
பித்ரு முக்தித் தலங்கள் யாவும் உயர்ந்த நிலைகளைக் கொண்ட பித்ரு தேவர்களுக்கே உன்னத முக்தி நிலைகளைத் தரவல்லவை. இத்தகைய தலங்களில் ஸ்ரீஅமாவாசைச் சித்தர், ஸ்ரீஅரிக்கேன் விளக்குச் சித்தர், ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈசச் சித்தர் போன்ற சித்தபுருஷர்கள் பல சூட்சும வடிவங்களில் பித்ருத் தர்ப்பண வழிபாட்டுமுறைகளை மேற்கொண்டு நல்வழி காட்டுகிறார்கள்!
அமாவாசைச் சித்தர் இன்றைக்கும் அமாவாசைத் திதியில் திருவண்ணாமலையை வலம்வருகிறார்.
எனவே அமாவாசை யன்று மேற்குறித்த பித்ரு முக்தித் தலங்களில் மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் அளிப்பதுடன், சித்தபுருஷர்களுக்கும் மகரிஷிகளுக்கும் அர்க்யம் அளிப்பது மிகவும் சிறப்புடையதாகும். பித்ருக்கள் அமாவாசையன்று தர்ப்பண நீர் வார்த்தலை ஏற்க பூலோகத்திற்கு வந்து விடுகிறார்களே- பின் எவ்வாறு அவர்கள் சூரிய, சந்திர ஐக்கிய மண்டலத் தில் கூடுவார்கள் என்ற ஐயம் தோன்றலாம்.
பித்ருக்கள், பித்ரு தேவதைகள், பித்ரு தேவர்கள், பித்ரு பத்தினிகள், பித்ரு நாயகர்கள், பித்ரு சண்டேஸ்வரர்கள், பித்ரு அதிகார பூஷணர்கள், பித்ரு மூர்த்திகள், பித்ரு துவாரபாலகர்கள் என்று பித்ருக்களிலேயே எத்தனையோ உத்தம இறைநிலைகள், வகைகள் உண்டு.
இவர்களில் சிலருக்குதான் அமாவாசையன்று சூரிய, சந்திர ஐக்கிய மண்டலத்தில், ஸ்ரீமகாவிஷ்ணுவுக்கு பாத பூஜைசெய்து தேர் பவனிக் காட்சியை தரிசிக்கும் பெரும் பாக்கியம் கிட்டும்! தங்கத் தேர்போல தேவ லோக வைடூரியங்கள், வைரங்கள், பவளங்களாலான தேரில் அங்கு மகாவிஷ்ணு பவனி வருகிறார்.
ஸ்வதா தேவியின் அறப்பணி!
பூலோகத்திற்கு வருகின்ற பித்ருக்கள் நாம் அளிக்கின்ற தர்ப்பண அர்க்யத்தை அக்னி பகவானுடைய பத்தினி ஸ்வதா தேவியின்மூலம் பெறுகின்றனர். பித்ருக்கள் ஏன் தாமாகவே முன்வந்து தர்ப்பண அர்க்ய நீரைப் பெறலாகாது? பித்ரு நிலையே மிகவும் உயர்ந்த இறைத்தன்மைகளைக் கொண்டமையால், பலவிதமான கர்மச் சுமைகளுடன் நாம் அளிக்கின்ற தர்ப்பண அர்க்யத்தை அவர்கள் பெற இயலாமல் போய்விடுகிறது!
அசிரத்தையுடன் ஏனோதானோ என்று செய்கின்ற தர்ப்பணமானது பலவிதமான விருப்பு- வெறுப்புகளைக் கொண்டதாகத்தானே இருக்கும். எனவே ஸ்வதா தேவி அக்னி ரூபமாதலாலும், பிரபஞ்சத்தின் சகல கோடி அக்னி ரூபங்களின் வடிவான அக்னி பகவானின் பத்தினியாதலாலும், ஞானப் பேரொளி, சாணக்கனல், ஹோமச் சுடரொளி, அடுப்புப் படரொளி, விண்மீன் திருவொளி, விளக்குப் பதியொளி, பத்தினிக் கண்ணொளி போன்ற பலவிதமான ஒளிச்சுடர்களில் மூழ்கித் திளைக்கின்ற ஸ்வதா தேவிதான், தர்ப்பண அர்க் யத்தோடு சேர்ந்துவருகின்ற கர்மச் சுமைகளை பஸ்மம் செய்து அறவழி காட்டுகிறாள்!
பரிவிக்கல் தோஷம்!
எனவேதாம் ஸ்ரீஸ்வதா தேவிமூலம் பரிசுத்தமடைந்து வருகின்ற தர்ப்பண நீரை அடைய பித்ருக்கள் விரும்புகிறார்கள். நீராலாகிய தர்ப்பணம் ஏன்? விருப்பு, வெறுப்பு நிலைகளைக் கடந்தவர்களாக பித்ருக்கள் விளங்கினாலும், அவர்களுக்குரிய ஒளிமயமான தேகத்தில் பரிவிக்கல் என்ற நிலை ஏற்படும். அவரவருடைய சந்ததிகள்மூலம் அளிக்கப்படுகின்றத் தர்ப்பண நீரில் தேவசத்து குறைவுறும்போது அவர்களுக்குப் பரிவிக்கல் ஏற்படும்.
இதனால் அவர்களால் பலவிதமான பூஜைகளை நிறைவேற்ற முடியாமல் போய்விடும். அவரவருடைய பூலோக சந்ததிகளின் தர்ப்பணத்தில் விளையும் தேவ நீரோட்டச் சக்தியால் மட்டுமே இந்தப் பரிவிக்கலைத் தீர்க்க முடியும்.
இந்தப் பரிவிக்கலினால் அவர்களால் ஆசிகளை நமக்கு அளிக்க முடியாமல் போகிறது! இவற்றையே பித்ருசாபம் என மறைமுகமாகச் சொல்கிறோம்.
குறித்த ஒரு குடும்பத்தில் பல தலை முறையாக ஒழுங்காக தர்ப்பணம் அளிக்கப்படாவிடில் அவர்களுடைய பித்ருக்களுக்குப் பரிவிக்கல் ஏற்பட்டுப் பெருகி, அவர்களால் நல்வரங்களைத் தர இயலாதிட, இதுவே சந்ததி விருத்திக்கான ஆசிகளையும் தடுத்துவிடுகிறது.
இப்பரிவிக்கல் தோஷத்தால் நீரில் மூழ்கி இறத்தல், நீர்க்கண்டங்கள், கொதிகலன் போன்ற தீ சம்பந்தப்பட்ட விபத்துகள், பாதாளச் சாக்கடை, விஷ வாயு ஆபத்து, நீர் சம்பந்தப்பட்ட நோய்கள், விவசாயம் போன்ற நீர் சம்பந்தப்பட்ட தொழில்களில் பெருத்த இழப்பு போன்றவை ஏற்படும். இருப்பினும் பல சித்தபுருஷர்கள், மகரிஷிகள் அருட்பெருங்கருணையாகக் காருண்ய பித்ரு தர்ப்பணங்களை உலக ஜீவன்களின் நல்வாழ்விற்காக ஏற்று நடத்துவதனால்தான், பல குடும்பங்கள் பரிவிக்கலாகிய பித்ரு சாபங்களிலிருந்து ஓரளவு மீள்கின்றனர்.
எனவே அமாவாசை, பௌர்ணமித் திதிகளில் புதுச்சேரி அருகில் உள்ள ஸ்ரீபடே சாஹிப் சித்தர், ஸ்ரீகள்ளிப்பால் சித்தர், ஸ்ரீராம் பரதேசி ஸ்வாமிகள், காஞ்சிபுரம் ஸ்ரீபோடா சுவாமிகள், திருவாரூர் அருகே விடயபுரம் ஸ்ரீசட்டாம்பிள்ளை மகான் போன்ற சித்தபுருஷர்களுடைய ஜீவசமாதிகளில் அபிஷேக ஆராதனைகள், தர்ப்பண பூஜைகள், அன்னதானம் போன்றவற்றை நிகழ்த்துவதால், தர்ப்பணம் செய்யாமைக்கானப் பிராயச்சித்தத்தை ஓரளவேனும் பெற்றிடலாம். ஆனால் பிராயச்சித்தத்தைப் பெற்ற பிறகேனும் தர்ப்பணப் பூஜையை முறையாகத் தொடர்தல் வேண்டும்.
இந்தப் பரிவிக்கல் தோஷத்தை நிவர்த்தி செய்யக்கூடிய பித்ரு முக்தித் தலங்கள்- பித்ருக்களுடைய குறை களையும் திருத்தலங்கள் சில உண்டு. மயிலாடுதுறை அருகே திருமருகலை ஒட்டி கோவில் சியாத்தமங்கை என்னும் சிவத்தலத்திலுள்ள தீர்த்தத்தின் ஒருபாதி சூரிய தீர்த்தமாகவும், மறுபாதி சந்திர தீர்த்தமாகவும் விளங்குகின்றன. சூரிய, சந்திர சங்கமம்தானே அமாவாசை!
எனவே அமாவாசைதோறும் இத்தீர்த்தத்தில் எள்கொண்டு தர்ப்பணமிட்டுப் பித்ருக்களின் பரிவிக்கலைத் தீர்க்கவல்ல பிரண்டை, புடலங்காய், வாழைக்காய் கலந்த உணவினை தானமளித்துவந்தால் பித்ரு சாபங்கள் தணிந்து சந்ததி விருத்தி ஏற்படும். நல்ல வீடும், வரனும் அமையும். பாரம்பரிய நோய்கள் தாக்குமோ என்ற அச்சம் தீரும்.
அமாவாசை வழிபாடுகளில் தை, ஆடி, புரட்டாசி அமாவாசைகள் கூடுதல் சிறப் பைப் பெறுகின்றன. அதிலும் குறிப்பாக, புரட்டாசி மாதப் பௌர்ணமியை அடுத்த பிரதமை திதியிலிருந்து அமாவாசை வரையிலுமான தேய்பிறை நாட்கள் அனைத்திலும் (மகாளய பட்சம்) தர்ப்பணம் செய்யலாம். இராமேஸ்வரம் போன்ற புனிதத் தலங்களில் முன்னோர் வழிபாடு மேற்கொள்வது சிறப்பானது. இயலாதவர்கள் அவரவர் பகுதியிலுள்ள தலங்களில் மேற் கொள்ளலாம்.