விவேகானந்த ஜெயந்தி 17-1-2020

(கீதா ஜெயந்தி 6-1-2020)

மும்பை ராமகிருஷ்ணன்

ண்ணன் பகவத் கீதையில் கூறுவார்-

"யதாயதாஹி தர்மஸ்ய

க்லானி: பவதி பாரத

அம்யுத்தானம் அதர்மஸ்ய

ததாத்மானம் விஸ்ருஜாம் யஹம்.'

"எப்போதெல்லாம் தர்மம் நசித்து அதர்மம் தலையெடுக்கிறதோ அப்போதெல்லாம் தர்மத்தை நிலை நாட்ட நானே அவதரிப்பேன்' என்றார்.

Advertisment

(கீதா ஜெயந்தி 6-1-2020)

அத்வைதாச்சார்யார் பிருந்தாவனத் தில் வேண்ட, ராதாகிருஷ்ணரே கிருஷ்ண சைதன்யராக கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் அவதரித்தார்.

Advertisment

"கலௌ கல்மஷ சித்தானாம்

பாபத்ரவ்ய உபஜீவினாம்

விதிக்ரியா விஹீனானாம்

கதிர் கோவிந்த கீர்த்தனம்'

என்று பறைசாற்றினார். அதாவது, "மனிதர்கள் தூய மனதுள்ளவராக இருக்க மாட்டார்கள். பண்டங்கள் யாவும் கலப்பட மாக இருக்கும். ஒரு செயலையும் முறைப்படி செய்ய இயலாது. இதற்கெல்லாம் கதி, வழி கோவிந்த நாம சங்கீர்த்தனமே' என்றார்.

அந்த சைதன்யரே, பக்தி ஞானத்தைத் தானே உணர்ந்து போதிக்க ராமகிருஷ்ண பரமஹம்சராக (1836-1886) வங்காளத்தில் தோன்றி, சர்வ மதமும் சம்மதம் என்று பறைசாற்றினார்.

Advertisment

பாரதியார்-

"அல்லா என்பார் சிலபேர்கள்

அரன்அரி என்பார் சில பேர்கள்

வல்லான் அவன் பர மண்டலத்தில்

வாழும் தந்தை என்பார்கள்

எல்லாரும் இப்படி பல பேசும்

ஏதோ ஒருபொருள் இருக்கிறதே

அந்தப் பொருளை நாம் நினைத்தே

அனைவரும் அன்பாய் வாழ்ந்திடுவோம்'

என்பதைத் தானே உணர்ந்து பறைசாற்றினார்.

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மனைவியையே தெய்வமாகப் பூஜித்தவர். அனைவரையும் கடவுளாகப் பார்த்தவர். "சர்வம் பிரம்ம மயம்' என்ற வேத தத்துவத்தை உணர்ந்தவர்.

தனது கொள்கை மேலும் பரவ அவர் இறைவனை வேண்டிட உதித்தவரே பின்னா ளில் விவேகானந்தர் என பிரசித்திபெற்ற நரேந்திரன்.

பரமஹம்சர்- ராதாகிருஷ்ணர், காளியின் ஆழ்ந்த பக்தர். விவேகானந்தரோ விக்ரக வழிபாட்டை ஏற்காதவர். பிறர் சொல்வதை நம்பமாட்டார். யோசித்து, கண்டித்து, வாதித்து உண்மையை உணர்பவர்.

பரமஹம்சர் கொல்கத்தா, காசி, மதுரா, பிருந்தாவனம் போன்ற சில இடங்களையே தரிசித்தவர். விவேகானந்தரோ இந்தியா முழுவதுமல்லாது வெளிநாடுகளுக்கும் சென்று மக்கள் நிலை, நாட்டு முன்னேற்றங் கள், தாழ்வுகளை உணர்ந்து, ஏழைகளின் மேம்பாட்டுக்காக உழைத்தவர். 1863 முதல் 1902 வரை என்று 39 வயதே வாழ்ந்த விவேகானந்தர் பக்தி, ஞானம், சமூக சேவைக்காக உழைத்த அதிசய வீரதீர குணசீலர்.

மூதாதையர்

விவேகானந்தரின் கொள்ளுத் தாத்தாவான ராம்மோஹன் தத்தா (காயஸ்தர்- பிராமணர் அல்ல) சட்டப்படிப்பில் உயர்ந்து வாழ்ந்தவர். துர்க்கா பிரசாத், காளி பிரசாத் என இரு புதல்வர்கள். ஆனால் செல்வம், பதவி, போகம் யாவற்றையும் துறந்து, 25-ஆவது வயதில் சந்நியாசம் ஏற்றவர். (அவரேதான் நரேந்திரராக உதித்து, மீண்டும் சந்நியாசம் பெற்றாரோ என்பர்.)

அவர் சந்நியாசம் ஏற்றபிறகு பிறந்தவர் விஸ்வநாதர். (விவேகானந்தரின் அப்பா).

vv

அம்மா ஸ்யாமசுந்தரியால் வளர்க்கப்பட்டார். ஒருசமயம் ஸ்யாமசுந்தரி காசி விஸ்வநாதரை தரிசிக்கச் சென்றார். கங்கையில் ஸ்நானம் செய்ய அவரும் குழந்தை விஸ்வநாதரும் பிரவாகத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அவளோ, "விஸ்வநாதா' என்று கதற, ஒரு சந்நியாசி காப்பாற்றிக் கரையேற்றி அமர வைத்தார். இருவர் கண்களும் நோக்க, அந்த சந்நியாசி ஸ்யாமசுந்தரியின் கணவர் ராம்மோஹனரே! விஸ்வநாதர் பத்தாவது வயதில் அன்னையை இழந்தார். அவரது மாமாவால் வளர்க்கப்பட்டு, வங்காளம், ஆங்கிலம், அரபி, உருது, பார்சி, ஹிந்தி என எல்லா மொழிகளும் நன்கு கற்று, சங்கீதமும் பயின்று, நன்கு உழைத்து, அட்டர்னி அட்லா என (ஆற்ற்ங்ழ்ய்ங்ஹ்லிஹற்லிப்ஹஜ்) கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் பணிபுரிந்து நல்ல சம்பாத்தியமும் பெற்றார். வீடு தேடிவரும் சந்நியாசிகள், ஏழைகளுக்கு வேண்டிய உதவிகள் செய்தார். கொல்கத்தா மட்டுமல்லாது லக்னோ, லாகூர், டில்லி, ராஜபுடானா, பிலாஸ்பூர், ராய்ப்பூர் என்று பல இடங்களில் வேலை செய்து சம்பாதித்தார். பெரிய குடும்பத்தை சமாளிக்கவேண்டிய பொறுப்பும் இருந்தது.

ஜனனம்

விஸ்வநாத தத்தா 16-ஆவது வயதில் புவனேஸ்வரி தேவியை (பத்து வயது) மணந்தார். இராமாயணம், மகாபாரதம் அறிந்தவர்; சிவபக்தை. அவர்களது முதல் மகனும், மகளும் சிறுவயதிலேயே இறந்தனர். அடுத்து ஹரமோஹினி, ஸ்வர்ணமயி என்று பெண் குழந்தைகள் பிறந்தன. மூன்றாவது பெண் குழந்தை இறந்துவிட்டது. (வங்காளப் பெண்களின் பெயர்கள் மிக இனிமையாக இருக்கும்.)

ஆக, சிவபக்தை புவனேஸ்வரி தனக்கோர் ஆண்மகவு வேண்டி சிவனைத் துதித்தார். அவரது உறவினர் காசி வீரேஸ்வரை ஆராதனை செய்யச் சொன்னார். அங்கு அவர் ஒரு வருடகாலம் அந்த சிவனையே விரதமிருந்து உபாசிக்க, ஒரு நாளிரவு சிவனே குழந்தை ரூபமாகத் தோன்றினார். விழித்தெழுந்து சிவனை ஆழ்ந்து துதித்தார். 12-1-1863, மகரசங்கராந்தி, தேய்பிறை சப்தமி திதியில் காலை 6.33 மணிக்கு ஆண்குழந்தை பிறந்தது. பெயர் வீரேஸ்வர்; செல்லமாக "பிலே' மற்றும் நரேந்தர். சுருக்கமாக நரேன். இவரே பின்னாளில் ஸ்வாமி விவேகானந்தர்.

குழந்தைப் பருவம்

நரேன் குழந்தைப் பருவத்தில் படுசுட்டி. விஷமங்கள் அதிகம். தாயார், "இறைவன் அசுரகுண குழந்தையை அனுப்பிவிட்டானே' என்று பொருமுவாராம். குழந்தையைக் காக்க இரண்டு செவிலியரை ஏற்பாடு செய்தனராம். ராமாயண, மகாபாரத, பாகவதக் கதைகளை தாயார் போதிக்க குழந்தை உற்றுக் கேட்பானாம்.

நினைவாற்றல் அதிகம். ஏதாகிலும் தவறாகச் சொல்லிவிட்டால், "நீ அன்று அவ்வாறு சொன்னாயே- இன்று இவ்வாறு சொல்கிறாயே' என்பானாம். தாயாரும், "எனக்கு மறதி; தவறு' என்று, குழந்தையை மெச்சுவாராம். அக்காக்களை மிகவும் சீண்டுவான். சாதுக்கள், சந்நியாசிகள் வந்தால் நரேனுக்கு மிக குஷி. ஒருசமயம் தாயார் பட்டுப் பீதாம்பரத்தை அணிவித்தார். அச்சமயம் ஒரு சாதுவர, அவரிடம் அந்தப் பட்டுப் பீதாம்பரத்தை அளித்துவிட்டான். அவரோ, "பட்டுப்பூச்சிபோல எங்கும் பறந்து, விவேகமுற்று, ஞான- பக்தியைப் பரப்புவாய் குழந்தை' என்று ஆசிர்வதித்தார்.

நரேனுக்கு குரங்கு, ஆடு, மாடு, மயில், புறா, குதிரை என எல்லா பிராணிகளிடமும் பிரியம் அதிகம். பாட்டு கேட்பதில் மிக ஆவல். கேட்பதைப் பாடுவான்- இனிமையான குரலில்.

ஒருசமயம் அவனது நண்பன் ஒரு ராமர் பொம்மை கொணர, இருவரும் ஓர் அறையில் அமர்ந்து கதவை மூடிக்கொண்டு ராம தியானத்தில் அமிழ்ந்தனர். மூன்று மணிநேரமாக குழந்தைகளைக் காணோமே என்று தேடி, கதவைப் பலமுறை தட்ட, அவர்கள் தியானம் கலைந்து கதவைத் திறந்தனர்.

இதுவே நரேனின் முதல் ஆழ்ந்த தியானம்.

அப்போது மூன்று வயதுதான். ஆனால் ராமாயண உத்தரகாண்டம் பகுதியை அம்மா சொன்னபோது, இலங்கையில் அக்னியில் புடம் செய்யப்பட்ட சீதையை, கருவுற்றிருந்த தேவியை, எவரோ ஏதோ சொல்ல, ராமர் காட்டுக்கு அனுப்பிவிட்டாரே என்று, "சே என்ன ராமர்' என்று வெறுத்தாராம். எனவே தாயார், "சிவனைப் பற்றிக்கொள்' என்றாராம்.

நீச்சல், மல்யுத்தம், படகோட்டுதல் ஆகிய வற்றிலும் ஆசை. மென்குரலால், இந்து, முஸ்லிம் வித்வான்களிடம் ஐந்து வருடகாலம் வாய்ப்பாட்டும், வாத்திய சங்கீதமும் பயின்றான்.

ஒருசமயம் சிவன் பொம்மையை வைத்து சிவ தியானத்தில் அமிழ்ந்தான். தட்டி எழுப்ப வேண்டியதாகிவிட்டது. வீட்டில் கிடந்த காவித் துணியை அணிந்துகொண்டு, "நானும் தாத்தாவைப் போல சந்நியாசி ஆவேன்' என்றானாம்! அம்மா திடுக்கிட்டு நரேனின் வாயை மூடினாராம்.

படிப்பு

ஆறு வயதில் பாடசாலைப் படிப்பு. வேட்டி அணிந்து விஜய தசமியன்று ஆரம்பம். நரேன் கண்களை மூடிக்கொண்டு பாடம் கேட்க, தூங்குகிறானோ என ஐயப்பட்ட ஆசிரியர் அதட்டிக்கேட்க, கேட்டதையெல்லாம் கடகடவென்று ஒப்பித்தான். சமஸ்கிருதமும் கற்றான். உண்மை பேசுதல், தன்மீது நம்பிக்கை வைத்தல், பெரியோர்களை- ஏழை எளியவர்களை மதித்தல் போன்றவற்றையெல்லாம் தாயார் போதித்தார். பள்ளியில் அவனே தலைவன். கைரேகை பார்ப்பதில் தேர்ந்தவன். தன் கையில் ஒரு ரேகையைக் காண்பித்து, "நான் சந்நியாசி ஆவேன்' என்றான். ஆங்கிலம், சரித்திரத்தில் ஈர்ப்பு அதிகம். கணக்கில் மந்தமே!

கோபமுள்ள ஆசிரியர் ஒரு மாணவனை அடிக்க, நரேன் அவரிடம், "அவனை ஏன் அடிக்கிறீர்கள்? சாந்த மாகக் கூறுங்கள்' என்றான். ஆசிரியர் நரேனின் காதைப் பிடித்துத் திருக, "என்னைத் தொடுவதற்கு நீங்கள் யார்?' என கத்தினான். அச்சமயம் பண்டிட் வித்யாசாகர் அங்குவர, சாந்தமானது. அவரோ ஆசிரியரைக் கண்டித்தார். இந்த சம்பவம் பெற்றோருக் குத் தெரியவர, இருவரும், "பயப் படாதே. நேர்மையாக இரு. எவர் தவறுசெய்தாலும் கண்டிக்கத் தயங்காதே' என்றனர்.

1877-ல் நரேனின் 14 வயதில் அப்பா ராய்ப்பூரில் இருந்ததால், 8-ஆவது வகுப்பு அங்கு படித்துக்கொண்டிருந்த சமயம். அப்போது, படித்தவர்கள், சகலகலா வல்லவர்கள், மேதாவிகள், கலைஞர்கள் அப்பாவை நாடிவருவார்கள். அவர்கள் பேச்சுகளை உன்னிப்பாகக் கவனிப்பான். நடுநடுவே தன் கருத்தையும் கூறுவான். அவர்கள் சிறுவனின் மேதாவிலாசத்தில் மகிழ்வர்.

1879-ல் (16 வயது) "மெட்ரோபாலிடன் இன்ஸ்டியூஷ'னில் வாசிப்பு. அந்நாள் தேசியத் தலைவரான சுரேந்திரநாத் பானர்ஜி பரிசு வழங்கவந்தார். வரவேற்புரை வழங்க நரேனைத் தேர்ந்தெடுத்தனர். அவனது உரையில் மகிழ்ந்த அவர், "நீ ஒரு பெரிய பேச்சாளனாக- யாவரையும் கவர்பவனாகத் திகழ்வாய்' என்று ஆசிர்வதித்தார். 1884-ல் பி.ஏ., தேர்ச்சிபெற்றார். உளவியல், தத்துவம், தர்க்கம் போன்றவற்றையும் ஆழ்ந்து கற்றார். பல நாட்டு மொழிகளிலுள்ள தத்துவங்களையும் பயின்றார்.

பேராசிரியர் வில்லியம் என்ற அறிஞர், கல்லூரி முதல்வராக இருந்தார். அவர் வகுப்பில் "தன்னில் ஆழ்தல்' (பழ்ஹய்ஸ்ரீங்) பற்றிப் பேசும்போது ஒருவருக்கும் புரியவில்லை. அதை உணர்ந்த அவர், "அப்படி ஒருவரைக் காணவேண்டுமென்றால் தக்ஷிணேஸ்வரம் கோவில் பூசாரியான ராமகிருஷ்ணரைக் காணவேண்டும். அந்த நிலை மயக்கமருந்து உண்பதால் அல்ல; மிகமிக ஆழ்ந்த பக்தியாலேயேதான் நிகழும்' என்றார். வில்லியத்திற்கு நரேன்மீது அதிக மதிப்புண்டு. அவர் ஒருசமயம், "பல பல்கலைக்கழகங்களில் இருந்துள்ளேன். ஜெர்மனியில் ஆழ்ந்த தத்துவம் படிப்பவர்களைப் பார்த்துள்ளேன். ஆனால் கல்கத்தா நரேனுக்கு ஈடு எவருமில்லை! அவன் பிற்காலத்தில் ஆழ்ந்த பேச்சாளனாக, ஞானியாகத் திகழ்வான். எவர் கூறினாலும், தான் அதனுள் ஆழ்ந்து யோசித்து, உண்மையென்று தன் மனதுக்குப்பட்டால்தான் சம்மதிப்பான்' என்று கூறியுள்ளார்.

கேஷப் சந்திரசென் நடத்திய பிரம்ம சமாஜத்தில் இணைந்தார். 1828-ல் ராஜா ராம் மோகன்ராயால் தொடங்கப்பட்ட இயக்கமிது. அப்போதைய இந்து சம்பிரதா யத்தில் நிலவிய மூடப்பழக்கவழக்கங்களுக் கெதிராக செயல்பட்டது. தேவேந்திரநாத் தாகூரும் அதற்கு மெருகூட்டினார். ஜாதி வேறுபாடு பார்ப்பது, சிறுவயதில் திருமணம் செய்வது, கணவன் இறந் தால் பெண்கள் உடன்கட்டையேறுவது போன்றவற்றையெல்லாம் இந்த இயக்கம் எதிர்த்து மாற்றியது. பெண் கல்வியை வலியுறுத்தியது.

1878-ல் பிரம்மசமாஜத்தைப் பிளந்து, பண்டித சிவநாத சாஸ்திரி சாதன பிரம்மசமாஜம் என்று ஆரம்பித்தார். அதனில் நரேன் சேர்ந்தார்.

ஆன்மிக தாக- அனுபவங்கள்

நரேனுக்கு உருவ வழிபாடு அல்லாது அருவ- அத்வைத வேதாந்தத்தில் ஈடுபாடு அதிகமானது. கடவுளை உணர ஆசை. மகேந்திரநாத் தாகூரிடமே ஒருமுறை, "நீங்க கடவுளைக் கண்டதுண்டா? என்று வினவ, அவரோ, "இளைஞனே, உனக்கு யோகிகளின் கண் உள்ளது' என்றார். ஆனால் கேள்விக்கு பதிலில்லை.

தொடர்ச்சி அடுத்த இதழில்...