சென்ற இதழ் தொடர்ச்சி...
நவம்பர் 1881-ல் சுரேந்திரநாத் வீட்டில் நரேனை பாட அழைத்தனர். அன்று ராமகிருஷ்ணர் அங்கு வந்திருந்தார். அவர் நரேனின் பாட்டில் லயித்து, "ஒருமுறை தக்ஷிணேஷ்வரம் வா' என்று சொன்னார்.
நரேந்தருக்கு மணம்செய்ய விரும்பினர். ஆனால் அவருக்கு விருப்பமில்லை. வரன் தேடினாலும், முடிவெடுக்கும் சமயத்தில் ஏதோ தடங்கல் வந்துவிடும். உறவினர் ராமச்சந்திர தத்தா, "கடவுளைக் காண, உணர உனக்கு ஆசையானால் பிரம்மசமாஜத்தை விட்டுவிடு. தக்ஷிணேஸ்வரில் ராமகிருஷ்ணரை தரிசி' என்றார். சுரேந்திரநாத்- ராமச்சந்திர தத்தா இருவருடனேயே டிசம்பர் 1881-ல் ராமகிருஷ்ணரை தரிசிக்கச் சென்றார்.
அவர்களது முதல் சந்திப்பை இருவர் வாக்குகள்மூலம் உணர்வோமா?
ராமகிருஷ்ணர் கூறுகிறார்: ""இளம்வயதினன்.
பகட்டு ஊமையல்ல. உடலைப் பற்றி கவலைப் படவில்லை. மனதில் ஆழ்ந்த ஆன்மிக ஏக்கம். துடிதுடிப்பு அதிகம். "ஒரு பாட்டு பாடேன்' என்றேன்.
"மனமே உனது சுயநிலைக்குப் போ
இந்த வெளியுலகத்தில் ஏன் வீணாக
அலைகிறாய்'
என்று பாடினான். அவனது பாட்டு கேட்டு நான் சமாதியுற்றேன். மற்ற இளைஞர்கள் பலர் வந்தாலும் நரேனே என்னை உள்ளூர ஈர்த்தான்.''
ராமகிருஷ்ணரை சந்தித்த நரேந்திரனின் அனுபவம் என்ன?
""நான் சென்று அவரைப் பார்த்தேன். பாடச் சொன்னார்;
பாடினேன். அவர் தன்னை இழந்தார். திடீரென என் கையைப்பிடித்து வடக்கு "வராண்டா'வுக்கு அழைத் துச்சென்றார். ஏதோ உபதேசம் செய்வாரென்று எதிர்பார்த்தேன். ஆனால் அவரோ அழ ஆரம்பித்தார். "ஏன் இவ்வளவு நாளாக வரவில்லை? மற்றவர்களிடம் பேசி என் வாய் புளிக்கிறதே.
என் ஆன்மிக உணர்வுகளை அள்ளிக் கொட்ட ஒரு உணரும் மனிதனை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். உன் பெயர் நரேந்திரன். ஆனால் நீ நர- நாராயண அவதாரம். உலகிலுள்ள துயரங்களைப் போக்க வந்தவனாயிற்றே' என்றார்.
எனக்கோ வியப்பு; இவர் பைத்தியமோ என்று சந்தேகித்தேன். நான் பேசவில்லை. உள்ளே சென்று இனிப்பு, கல்கண்டு கொண்டுவந்து எனக்கு ஊட்டிவிட்டார். "என் கையில் கொடுங்கள்; மற்றவர்களுடன் சாப்பிடுகிறேன்' என்றால் கேட்கவில்லை. என் கையைப் பிடித்துக்கொண்டு, "மீண்டும் வருவேன் என்று சொல்' என்றார். நான் "சரி' என்றேன். "நீ தூங்குவதற்குமுன் புருவ மத்தியில் ஒரு ஒளியைக் காண்கிறாயா?' என்று கேட்டார். "ஆம்' என்றேன். "ஆஹா! நீ பிறந்ததிலிருந்தே தியான சித்தன்' என்றார்.''
விவேகானந்தர் தன் முதல் தரிசன அனுபவத்தை மேலும் இவ்வாறு பகிர்ந்துகொண்டார்...
""ராமகிருஷ்ணர் பைத்தியமா? மாயாஜால மந்திரம் செய்து என்னை மயக்கிவிட்டாரா? அவரது சுமுகமான பேச்சு, நடத்தை, சமாதி நிலையிலான தோற்றம் போன்றவற்றை சிந்தித்தால் அவை பொய்யெனத் தோன்றவில்லையே! "நீங்கள் கடவுளைக் கண்டதுண்டா' என்று பல பெரியவர்களைக் கேட்டுள்ளேன். நம்பக பதிலே இல்லை. மழுப்பினர். இவரைக் கேட்டபோது ஆணித்தரமான பதில்! "ஆம்; கண்டுள்ளேன், நான் உன்னை இப்போது காண்பதுபோல் கண்டுள்ளேன். கடவுளை உணரமுடியும்; காணமுடியும்; பேசமுடியும். கடவுளைக்காண யார் விரும்புகிறார்கள்? குடும்பம், பணம், சுகம்... இதைத்தானே வேண்டுகிறார்கள். கடவுளைக் காணவேண்டுமென்று ஆழ்ந்து, அழுது விரும்பினால் நிச்சயம் காணலாம்' என்றார்.
இவ்வார்த்தைகளை வெறும் வாய்ச்சவடால் என எண்ண முடியவில்லை. கடவுளைக்கண்டு உணர்ந்தவர், ஆணித்தரமாகக் கூறுவதுபோல்தான் தோன்றியது. அவர் பைத்தியம்போல தோன்றலாம். ஆனால் ஒருசிலரே அத்தகைய ஆழ்ந்த நிலையை அடையமுடியும்!''
இருப்பினும் அவரை குருவாக ஏற்கத் தயங்கினார். ஏன்? அப்போது நரேந்திரன் சார்ந்திருந்த பிரம்ம சமாஜம் குருவின் தேவையை ஒப்புக்கொள்வதில்லை.
"மறுபடி வருகிறேன்' என்று பரமஹம்சரிடம் கூறியிருந்ததால் நரேந்திரன் நடந்தே சென்று பரமஹம்ஸரை நாடினார். இச்சமயம் அவரது உணர்வை அவரது வாக்குகளால் சிந்திப்போம்.
""ராமகிருஷ்ணர் தன் கட்டிலில் அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்ததில் மிக சந்தோஷப்பட்டு அருகில் அமரச் சொன்னார். ஏதோ முணுமுணுத்தார். பின்னர் எழுந்து என்னருகே வந்து தனது வலக்காலை என் மார்பில் வைத்தார். அந்த ஸ்பரிசம் எனக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தந்தது. கண்கள் திறந்திருக்க அறைச் சுவர்கள் மறைந்தன. நான் என்பது மறந்தது. உடல் உள்ளதா இல்லையா எனத் தெரியவில்லை. அகில உலகமும் நானேயானேனா? இறந்தேனா? ஒன்றும் புரியவில்லை. "என்னை என்ன செய்கிறீர்கள்? எனக்குத் தாய்- தந்தை, சகோதரிகள் உள்ளனர்' என்று கதறினேன்.
அவர் சிரித்து எனது மார்பைத் தொட்டார். உடனே நான் சாதாரண நிலைக்கு வந்தேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை! இது என்ன மாயாஜாலமா? கடின இதயம் கொண்ட என்னை- முரட்டுத்தனமான மனம், திடவிசுவாசம், தன்னம்பிக்கை கொண்ட என்னை- பொய்ப்பித்தலாட்டங்களுக்கு இடம்கொடாத என்னை நொடிப்பொழுதில் இப்படியொரு நிலைக்குக் கொண்டுவந்தார் என்றால் அவரைப் புரிந்துகொள்ள இயலவில்லை.
காந்தம் இரும்புத்துகள்களை இழுப்பதுபோல, ஒரு நாய்க்கு ஒருமுறை ஏதாகிலும் உண்ணக்கொடுத்தால், அது தன் வாலையாட்டித் தன் விசுவாசத்தைக் காட்டுவதுபோல, அவரது ஆழ்ந்த அன்பான வார்த்தைகளால் இழுக்கப்பட்டு, சில நாட்களிலேயே மூன்றுமுறை அவரை தரிசிக்கச் சென்றேன். அவரது விநோத நடவடிக்கையால் நான் என் திடமனதை இழந்துவிடக்கூடாது என்ற கடினக் கட்டுப் பாட்டுடன்தான் சென்றேன்.
ராமகிருஷ்ணர்
அன்புடன் வரவேற்றார்.
அடுத்துள்ள ஜாதுநாத் மாலிக் என்பவரின் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு அமர்ந்தோம். ராமகிருஷ்ணர் தியான நிலையில் (பழ்ஹய்ஸ்ரீங்) ஆழ்ந்தார். அச்சமயம் என்னைத் தொட்டார். உடனே நான் என்னை இழந்தேன். சிறிதுநேரம் கடந்து சுயநிலைக்கு வந்தபோது அவர் என் மார்பைத் தட்டிக்கொண்டிருந்தார். இந்த இடைவேளையில் எனக்கு என்ன நேர்ந்ததென்று அறிய இயலவில்லை.''
இந்த சம்பவத்தைப் பற்றி பரமஹம்சர் என்ன கூறினார் என்று சிந்திப்போமா...
""நரேன் தன்னை மறந்ததும், அந்த ஆழ்ந்த நிலையில் அவனிடம் சில கேள்விகள் கேட்டேன். அவனது பதில்கள், நான் அவனைக் காண்பதற்கு முன்பே அவனை உணர்ந்ததற்கு ஒப்பானது. அவன் தன்னைப் பற்றி உணர்ந்தானானால், தானாகவே தன் யோக பலத்தால் உடலை விட்டுவிடுவான்.
நான் ஒருசமயம் மிக ஆழ்ந்த சமாதி நிலையில் இருந்தேன். மிக உயர்ந்த உலகில் இருப்பதாக உணர்ந்தேன். பல ரிஷிகள் இருந்தனர். அந்த புனித இடம் விநோதமாக இணைந்து ஒரு குழந்தை வடிவம் பெற்றது. அக்குழந்தை ஒரு முனிவரிடம் சென்று அவரது ஆழ்ந்த சமாதி நிலையைக் கலைத்தது. முனிவர் குழந்தையைப் பார்த்தார். குழந்தை, "நான் மனித உலகுக்குச் செல்கிறேன். நீயும் வரவேண்டும்' என்றது. குழந்தையைப் பார்த்துக்கொண்டிருந்தபோதே அவர் சமாதியுற்றார். அந்த முனிவர் ஜோதி வடிவமாய் நிலத்துக்கு இறங்கினார். நான் நரேனைப் பார்த்ததுமே அவனே அந்த முனி, அந்தக் குழந்தை நானே என்றுணர்ந்தேன்!''
மற்றொரு சமயம் அவர் கூறியது... ""ஒருசமயம் காசியிலிருந்து ஒரு ஜோதி கிளம்பி கல்கத்தாவுக்கு வந்தது. என்னுடைய தவம் பலித்தது. அந்த ஜோதி மயம் புருஷனாக என்னை ஒருநாள் வந்தடையும்.''
பரமஹம்சரின் தவவலிமை யால், நரேந்திரனால் அந்த தன்னைமறந்த நிலையில் என்ன நடந்ததென்று அறிய இயலவில்லையாம். இதன் பின்பு, ராமகிருஷ்ணர் தன்னை ஆட்கொண்டார் என நரேந்திரன் உணர்ந்தார்.
ஆழ்ந்த ஆன்மிக அனுபவங் களுக்கு குரு வழிகாட்டியாய் இருக்கவேண்டுமென்று நரேன் உணர்ந்தார்.
ராமகிருஷ்ணர் மேலும் கூறியுள்ளார்- "நரேன் உலக குருவாக, கர்ம- ஞான- பக்தி- யோகச் செம்மலாகத் திகழ்வான்' என்று. (அவர் வாக்குகள் பொய்க்கவில்லை என்று பிந்தைய சரிதத்தில் உணரலாம்). ராமகிருஷ்ணர்- நரேன் சந்திப்பு- மே, 1881 முதல் ஆகஸ்ட், 1886 வரை என ஐந்து வருடங்களே! 1886, ஆகஸ்ட் 16-ல் ராமகிருஷ்ணர் உடலை நீத்தார். நரேன் ஜூலை 4, 1902-ல் உடலை நீத்தார். இதற்குள் எவ்வாறு விவேகானந்தராகி உலகின் பல இடங்களில் சமூகம் உன்னதமுற பணிகளைச் செய்தார் என்பதே அதிசயம்! போதனைகளோடு மட்டும் நில்லாமல் செயலாற்றினார்.
அதுதான் முக்கியம்!
நரேன் குடும்பம் அவலநிலை
நரேனின் தந்தை நிறைய பணம் சம்பாதித்தாலும், பெரிய குடும்பம் அவருடையது.
அவரது இளகிய மனதால் வரவுக்குமேல் செலவு ஏற்பட் டது. இந்நிலையில் அவர் இதய நோயால் இறந்துபோனார். அவர் இருந்தபோது குழைந்த பெரிய மனிதர்கள், உறவினர்கள் இப்போது அலட்சியம் செய்தனர்.
இருந்த வீடும் வழக்கில் சிக்கியது. நன்றாக உண்ட குடும்பம் சாதாரண உணவுக்கு திண்டாடியது. நரேன் பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்கவில்லை. பல நாட்கள் தண்ணீர்தான் உணவு.
ஒருநாள் ராமகிருஷ்ணரிடம் சென்று, ""நீங்கள் எனக்காக அன்னையிடம் தினம் சாதாரண அன்னம் கிடைக்குமாறு வேண்டுங்களேன்'' என்றார். அவரோ, ""நான் அவ்வாறு வேண்ட முடியாது. நீ கருணைமிக்க அன்னையை மதிப்பதில்லை. நீயே அவளிடம் வேண்டு; அருள்புரிவாள்'' என்றார். நரேன் அன்னை யிடம் சென்று, ""எனக்கு பக்தி, ஞானம் வைராக்கியம் தா'' என வேண்டினார். உணவை வேண்டவில்லை. பரமஹம்சர் நரேனிடம் ""வேண்டத்தெரியாத உனக்கு இனி உணவுக்கஷ்டம் வராது'' என்றார்; அது நடந்தது!
சந்நியாசம்
ராமகிருஷ்ணருக்கு தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உண்ண முடியவில்லை. 11 டிசம்பர், 1885-ல் காசிபூர் தோட்ட வீட்டிற்குப் பெயர்ந்தனர். உடல் மெலிந் தது. பேசுவது சிரமமாயிருந்தாலும், அன்பர் களுக்கு ஆறுதல் பேச்சுகள் நடந்தன. பலவித வைத்தியங்கள் பார்த்தும் குணமாகவில்லை. நரேன், ராகால், பாபுராம், நிரஞ்சன், யோகின், லாடு, தாரக், கோபால், காளி, சசி, சரத் என சீடர்கள் காத்தனர். அன்னை சாரதாவும் உதவிக்கு வந்தார். 1-1-1886 அன்று உடலில் தெம்பு வர, தோட்ட மாமரத்தின்கீழ் பரமஹம்சர் சீடர்களுடன் உட்கார்ந்தார். கோபால் கொண்டுவந்து கொடுத்த காவி உடைகள், ருத்ராட்சம் ஆகியவற்றை சீடர்களுக்குக் கொடுத்து, ஒவ்வொருவர் மார்பையும் தொட்டு, "பூரண ஞானம் பெறுவீர்கள்' என்று ஆசிர்வதித்தார். அவர்களின் தலைவனாக இருந்து ஞானஜோதியாகப் பிரகாசிப்பாய் என்று நரேனை வாழ்த்தினார். (இந்நிகழ்வை "கல்பதரு தினம்' என்று ஜனவரி 1-ல் இன்றும் அங்கு கொண்டாடுகிறார்கள்.)
ஒருசமயம் நரேன் காசிபூர் தோட்ட கீழ்த்தளத்தில் தியானத் திலிருந்தபோது, தலையின் பின்புறம் ஜோதி தோன்றி, அது பெரிதாகி வெடித்தது. சமாதி துதியைக் கூறிய நரேன் அருகிலிருந்த கோபாலிடம், "என் உடல் எங்கே?' என்று கேட்க, "ஏன், இங்குதான் உள்ளதே' என்றாராம். நிரஞ்ஜனோ "இறந்து விட்டது போலுள்ளதே' என்றார். கோபால் ராமகிருஷ்ணரிடம் சென்று சொல்ல, அவர், "அவன் நிர்விகல்ப சமாதி வேண்டி நச்சரித்தான்; அந்த நிலையிலேயே இருக்கட்டும்' என்றார். பலமணி நேரம் கழித்து சுயநிலைக்கு வந்த நரேன் ராமகிருஷ்ணரை தரிசிக்கச் சென்றார்.
அவர் நரேனை ஆழ்ந்து நோக்கி, "என்னையே உனக்கு அளித்துவிட்டேன். நான் இப்போது ஒன்றுமில்லாதவன். உனது அந்த அனுபவம் என்னால் இப்போது பூட்டப்படும். நீ வந்த காரியங்கள் முடிந்ததும் அந்த சமாதி நிலையை அடைவாய்' என்றார்.
16-8-1886 அன்று நள்ளிரவு 1.02 மணிக்கு ராமகிருஷ்ணரின் உயிர்பிரிந்தது. உடல் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு எரிக்கப்பட்டது.
அஸ்தியை இரண்டு பாகமாக்கி, ஒன்றை இன்று காணும் பேளூர்மட விக்ரகம் கீழேயும், மற்றது காங்குர் காசியிலும் வைக்கப்பட்டது.
இந்தியா வலம்வருதல்
நரேன் 1890, ஜூலையில் சாரதா அன்னையை தரிசித்து, தான் நீண்ட யாத்தி ரைக்குச் செல்ல ஆசிபெற்று வலம்வந்தார். பெயரில்லாத சந்நியாசி. இறைவனையே துணைக்கொண்டு திரிந்தார். அடுத்த வேளை உணவு எங்கு என்பது தெரியாது. இரண்டு வருடகால யாத்திரை கால்நடையாகவே.
ராஜபுதனம், ஜெய்ப்பூர், ஆஜ்மீர், கேத்ரி, அகமதாபாத், கத்யவார், ஜுனாகட், குஜராத், போர்பந்தர், துவாரகை, பலிடானா, பரோடா, சண்டுவார், மும்பை, பூனா, பெல்காம், கோவா, பெங்களூரு, கொச்சி, மலபார், திருவிதாங்கூர், திருவனந்தபுரம், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி (1892 முடிய) என்று அலைந்தார். இந்தியாவில் பல புனிதத்தலங்கள் இருந்தாலும், பணக்காரர்கள் இருந்தாலும், மதவெறி, இனவெறி, பெண்களின் அடிமைத்தனம், தாழ்த்தப்பட்டவன் என ஒதுக்கித் துன்புறுத்தல், ஒருவேளை உணவில்லாமல் தவிக்கும் ஏழைகள், படிப்பின்மை போன்றவற்றை இந்த யாத்திரையின்போது கண்டு மனம் குமுறினார்.
"வயிறு காய்பவனுக்கு மதமில்லை' என்று ராமகிருஷ்ணர் கூறியதை உணர்ந்தார். பிறரது சேவைக்காகப் பாடுபட வேண்டுமென உணர்ந்து போதித்தார்; செயல்பட்டார். கன்னியாகுமரி குன்றில் மூன்று நாட்கள் (டிசம்பர் 24, 25, 26, 1892) தியானம் செய்தார். தியானம், பக்தி, நிர்விகல்ப சமாதி என சுயநல ஆன்மிகத்துக்கு நேரம் செலவழிப்பதைவிட்டு, ஏழை மக்கள் முன்னேற்றத்துக்குப் பாடுபட வேண்டுமென்று முடிவெடுத்தார். ராமசுப்ப ஐயர், சதாசிவப்பிள்ளை அறிவித்தனர். பின்பு ராமேஸ்வரம், புதுச்சேரி வழியாக சென்னை சேர்ந்தார்.
"சிகாகோ'வில் சர்வமத சபை
சென்னையில், 1893 ஆரம்பத்தில் வெளிநாடு போவதாக அறிவித்தார். பல பணக்காரர்கள் பணஉதவி செய்ய முன்வந்தனர்.
"நான் ஏழைகள் சார்பில் போகிறேன். எனவே நடுத்தர வகுப்பினரிடமே வசூலிக்கவும்' என்றார். சாரதா அன்னையை அணுகி ஆசிவேண்ட, அவரும் ஆசி ஈந்தார். அபுரோடில் எதேச்சையாக பிரம்மானந்தா, துரீயானந்தாவைக் காண, தான் நாட்டில் கண்டதையும், தன் முடிவையும் தெரிவித்தார்.
கேத்ரி சென்றார். மகாராஜா திவானை மும்பைவரை சென்று வழியனுப்பி விட்டு வருமாறு அனுப்பி வைத்தார். சந்நியாச உடைகளையும் தலைப்பாகையும் பெற்றார். அப்போதுதான் "விவேகானந் தர்' என்று பெயர் தரித்தார். 31-5-1893-ல் மும்பையிலிருந்து கிளம்பி, இலங்கை, பினாங்கு, சிங்கப்பூர், ஹாங்காங், நாகசாகி, யோக ஹோமா, டோக்கியோ வரை கடல் மற்றும் தரை மார்க்கமாகச் சென்றார். பின்பு வான்கூவர் சென்று ரயில்மூலம் ஜூலை மத்தியில் சிகாகோ நகர் சேர்ந்தார். நகர மேம்பாட்டைப் பார்த்து வியந்தார். செப்டம்பர் முதல் வாரம் சர்வமத சபை கூடுகிறது என அறிந்தார். அதிகாரப்பூர்வமான அத்தாட்சி இல்லாமல் பிரதிநிதியாக ஏற்கமாட்டார்களாம்.
அவரிடம் எதுவுமில்லை. கையிலிருந்த பணமும் தீர்ந்துவிட்டது. விதி துணை செய்தது. பாஸ்டனுக்கு ரயிலில் போகும்போது அவர்மீது பரிவுகொண்ட ஒரு மாது, ஜே.எச். ரைட் என்ற பேராசிரியருக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவர், "விவேகானந்தர் ஹிந்து சமயப் பிரதிநிதியாக வேண்டும்' என வலியுறுத்தி கமிட்டிக்கு சிபாரிசு கடிதம் கொடுத்தார். அது ரயில் பயணத்தில் தொலைந்துவிட்டது. விதி? சிகாகோ ரயில் நிலையத்தில் உறங்கினார்.
காலைப் பசிக்கு பிச்சை கேட்டார். இடுவாரில்லை. களைத்து தெருவில் அமர்ந்தார். மீண்டும் விதி வேலை செய்தது. எதிர்வீட்டிலிருந்த ஜி. டபிள்யூ. ஹேல், "அவர் இந்து பிரதிநிதியாயிற்றே' என்று மகாசபைக்கு அழைத்துச்சென்றார். தங்க இடமும் கிடைத்து; பிரதிநிதியாகவும் ஏற்றார் கள்.
1893, செப்டம்பர் 11, திங்களன்று மகாசபை கூடியது. பிரம்மசமாஜ் தலைவர், இலங்கை பௌத்தர்கள் பிரதிநிதி, ஜைனர்கள் பிரதிநிதி, பிரம்மஞானசபை பிரதிநிதியாக அன்னிபெசன்ட் என கீழ்திசைப் பிரதிநிதிகள் இருந்தனர். அவர்களிடையே இருந்த விவேகானந்தரைப் பார்த்தவர்கள் முகவசீகரம் கண்டு வியந்தனர். மாலை அவர், "அமெரிக்காவைச் சார்ந்த சகோதர- சகோதரிகளே' என்று ஆரம்பிக்க, மிகுந்த கரகோஷம்- எவருக்கும் கிட்டாதது. மற்றவர்கள் தத்தம் கடவுள் வழிமுறைகளைப் பேசினர். இவரோ எல்லா கடவுள்களையும் சேர்த்துப் பேசினார்.
"எந்த சமயவழிகளில்- எந்த உருவத்தில் வழிபட்டாலும் நான் அவனை அடைகிறேன்' என்று கூறினார். "யாவரும் பரப்பிரம்மமே' என்றும் முழங்கினார்.
கனத்த வரவேற்பு! அடுத்த தினங் களில் பத்துமுறை பேசினார். பாராட்டும் பெற்றார்.
பத்திரிகைகள் அவர் பேச்சைப் பிரகடனப் படுத்தின. ஞானம் தோய்ந்த சமரச இந்தியாவுக்கு தமது மிஷனரிகளை அனுப்புவது எவ்வளவு அறியாமை என்றும் பத்திரிகைகள் எழுதின.
நம் நாட்டிலும், அங்கும் அவருடைய பணிகளுக்கு உதவ பலரும் முன்வந்தனர்.
அமெரிக்காவுக்கு மீண்டும் சென்றார்.
லண்டனுக்கு இருமுறை சென்றுள்ளார். ஐரோப்பாவையும் நன்கு சுற்றி உரையாற்றி வந்துள்ளார்.
அங்கெல்லாம் பக்தி யோகம், கர்மயோகம், ராஜ யோகம், ஞான யோகம் ஆகியவற்றை போதித்தார். உபநிடத வேதாந்த தத்துவமும் போதித்தார்.
சென்னையிலும் கொல்கத்தாவிலும், பின்னர் மும்பையிலும் அலகாபாத்திலும் தலைமை ஸ்தலங்கள் அமைக்க விரும்பிட நடந்தேறின. சென்னையில் ராமகிருஷ்ணா னந்தா உழைத்தார்.
ஆன்மிக சமூகப் பணிகள்
1897, மே முதல் விவேகானந்தர் சக துறவிகளை கொல்கத்தா பலராம் வீட்டில் கூட்டி, "பக்தி, கர்ம, ஞான யோக ஆன்மிகப் பணிகள்; சமூக சேவையாகப் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் அமைத்தல்; ஏழைகள் முன்னேற்றம்; பெண்களுக்கு மதிப்பு; வெள்ளம், புயல், கடல் சீற்றம், தீ போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர் களுக்கெல்லாம் நிவாரண உதவிகள் என்பதே லட்சியம்' என்றார். முதலில் அவரது சக சந்நியாசிகள் சுய ஆன்மிகத்தில் மட்டும் மனம் செலுத்தினாலும், விவேகானந்தரின், ராமகிருஷ்ணரின் உள்ளம் உணர்ந்து யாவரும் அதிக ஆர்வத்துடன் உழைத்தனர். இன்றும் உழைத்துக்கொண்டிருக்கிறார் கள் என்பது நிதர்சனம்.
தேகமறைவு- விரும்பினதும் நடந்தது விவேகானந்தர் ஆஸ்துமா, ரத்த வியாதி, கால்வீக்கம் போன்றவற்றால் அவதிப் பட்டார். 1902, ஜூலை 4-ஆம் தேதி விடியலில் எழுந்தார். ஆலயம் சென்று 8.00 முதல் 11.00 மணிவரை தியானம் செய்தார். காளிமீது பாடினார்.
சீடர்களுடன் உணவருந்தினார். மூன்று மணிநேரம் சமஸ்கிருதப் பாடம் நடத்தி னார். பிரேமானந்தருடன் மூன்று கிலோ மீட்டர் நடந்தார். வேதத்திற்கு கல்லூரி நிறுவ வேண்டும் என்றார். மாலை நேரம் சகோதரத் துறவிகளுடன் பணிகளைப் பற்றிப் பேசினார்.
மாலை 7.00 மணிக்கு அறைக்குச் சென்று தாளிட்டார். தன் தியானம் கலைக்க வேண்டாம் என்றார். 7.45-க்கு துறவியை அழைத்து எல்லா ஜன்னல்களையும் திறக்கச் சொன்னார். தரையில் இடப்புறம் திரும்பிப் படுத்தார். ஒருமணிநேரம் கழித்து வலப்புறம் படுத்துப் பெருமூச்சுவிட்டார். இரண்டாவது பெருமூச்சில் உயிர் அடங்கியது. 39 வயதில் அவர் சாதித்ததை எவராகிலும் சாதிக்க முடியுமா?