சிம்மம் காலபுருஷனின் 5-ஆவது ராசி. இதன் அதிபதி சூரியன். இவர் இருக்கும் ராசியில் எந்த கிரக உச்ச- நீசத்திற்கும் இடமில்லை.

குடும்ப விவரம்

சிம்ம ராசியினர் கம்பீரமாக, "ஈ.கோ' உணர்வு கொண்டவராக, தான் சொல்வதை எல்லாரும் கேட்டுத்தான் ஆகவேண்டும் என நிர்பந்திப்பர். இதற்கேற்றாற்போல், இவர்கள் குடும்பமும் படிப்பறிவு மிக்கதாக, அறிவுக்கூர்மை கொண்டவர்களாக இருப்பர். இவர்களுடைய இளைய சகோதரி பார்க்க லட்சணமாக இருப்பார். தாயார் சற்று கோபகுணம் கொண்டவராக இருப்பார். இவர்களின் குலதெய்வம் அமைதியான தெய்வமாக- அந்தணர்களும் வணங்கத்தக்கதாக இருக்கும். சிலரது தாய்மாமன் சோம்பேறியாக இருப்பார். இவர்களுடைய வேலையில் அழுக்கும் பிசுக்கும் இருக்கும். வாழ்க்கைத்துணை சற்று நிறம் குறைந்தவராக இருப்பார். இவருக்கும் வாழ்க்கைத் துணைக்கும் அவ்வப்போது கருத்துவேறுபாடு ஏற்படும். இதை சாக்கிட்டு சில சிம்ம ராசிக்காரர்கள் "செகண்ட் சேனல்' ஆரம்பித்துவிடுவர். சிலரது பழக்க- வழக்கங்கள், ஒழுக்கமின்மை அவமானத்திற்குக் காரணமாக அமையும். தந்தை சிறந்த ஆன்மிகவாதி. இவர்களுடைய தொழி-ல் அழகியலும், நீர்வளமும், கலையும் சேர்ந்திருக்கும். மூத்த சகோதரம் சற்று கோமாளிபோல இருப்பார். இவர்களுக்கு அலைச்சல், பயணம் என்பது பெரு விருப்பமான ஒன்றாக இருக்கும்.

இதெல்லாம் சிம்ம ராசியின் பொதுவான குடும்ப அமைப்புப் பலன்கள். தனிப்பட்ட ஜாதக கிரக நிலையைப் பொருத்து பலன்கள் ஏறக்குறைய இருக்கும்.

Advertisment

குரு இருக்குமிடப் பலன்

சிம்ம ராசிக்கு குரு 5, 8-ன் அதிபதி. அவர் 6-ஆம் வீடான மகரத்தில் இருந்தார். இப்போது 7-ஆம் வீடான கும்பத்திற்கு இடம் மாறி அமர்ந்துள்ளார்.

7-ஆமிடம் களஸ்திர ஸ்தானம். அவர் மாங்கல்யம் மற்றும் புத்திர ஸ்தானாதிபதியாகி 7-ல் அமர்ந்துள்ளார். ஆக, இந்த குருப்பெயர்ச்சி சிம்ம ராசியாருக்கு காதல் செய்யவும், கல்யாணம் முடிக்கவும், பிள்ளை பெறவும் என இந்த வேலைகளுக்கே நேரம் சரியாகிவிடும். வேறு வேலைக்கு நேரம் இருக்குமா என்று தெரியவில்லை.

Advertisment

உங்களில் நிறைய பேர் பெற்றோரின் திருமண விழாவை எடுத்து நடத்துவீர்கள். வீட்டின் கிரகப் பிரவேச விழா நடக்கும். சிலர் மாமியார்- மாமனாரின் விழாக்களை சிறப்பு செய்வீர்கள். நீங்கள் வெளிநாட்டில் இருப்பின், பெற்றோர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வர்.

சிலருக்கு அதிக அளவில் காதல் பொங்கும். சிலபல பிரச்சினைகளுக்குப்பின் கல்யாணத்தில் முடித்துவிடுவீர்கள். அடுத்தது என்ன? பிள்ளைதான். இந்த வேலை முடிவதற்குள்ளேயே, "தாங்காதுடா சாமி' என குருபகவான் மீன ராசிக்கு ஓடிவிடுவார்.

இந்த குருப்பெயர்ச்சியில் குழந்தை பிறக்கும் வாய்ப்புள்ளது. எனினும் குழந்தைப் பிறப்பின்போது மிக கவனமாக இருக்கவேண்டும்.

கலைத்துறையினர், தங்களது வேலையை சிலபல இடையூறு, இன்னலுடன் எடுத்துச்செல்லவேண்டியிருக்கும். கலைஞர்கள் சற்று அடிபட வாய்ப்புள்ளது; கவனம் தேவை. பங்கு வர்த்தகத்தில் கவனமாக செயல்படவேண்டும். ஏற்ற- இறக்கமாக இருக்கும்.

விளையாட்டு வீரர்கள் தடுமாறி, சிறிய தோல்விக்குப்பிறகு வெற்றி பெறுவர். வியாபாரிகள், தொழிலதிபர்கள், சிறுதொழில் செய்வோர் இன்னல் களுடன் வணிகம் செய்யவேண்டிவரும்.

குலதெய்வக் கோவில் பயணம் தடைகளை சந்திக்கும். சிலரின் மந்திரி பதவி ஆட்டம் காணும். நீங்கள் சந்திக்கும் நபர், உங்களிடம் சர்க்கரையாகப் பேசி காலை வாரி விடுவார்.

கோவில் குருக்களுக்கு சற்று தடுமாற்றம் ஏற்படும். உயர் பிறப்பாளர்கள் தீய பழக்கத்துக்கு ஆளாவார்கள்.

சிலர் பிறர்க்கு நல்ல யோசனை கொடுக்கிறேன் என, அவர்களிடமிருந்து திட்டுவாங்குவார்கள். "உன் சங்காத்தமே வேண்டாம்' என ஓடுவர். சில மடாதிபதிகள் மடத்து ஆட்களுடன் சண்டையிட்டு, வேறிடம் செல்வர். சிலரின் உடல்நலம் பாதிக்கும்.

சில தம்பதிகளுக்குள் சண்டை உண்டு. சில தம்பதிகள் வேலை, குழந்தை, வியாபாரம் சம்பந்தமான அவமானத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

சிலரின் காதல் திருமணங்கள், கடைசி நேரத்தில் தடைப்பட வாய்ப்புண்டு. வியாபார பங்குதாரர் வீணாகப் பழிசுமத்துவார். சிலர் வழக்கும் போடக்கூடும்.

5-ஆம் பார்வைப் பலன்

குரு தனது 5-ஆம் பார்வையால் சிம்ம ராசியின் லாபஸ்தானத்தைப் பார்க்கிறார். சும்மாவே லாபவீடு என்பது ஜாதகருக்கு வாரிவழங்கும் இடம். இதில் குரு பார்வை அதில் பதியும்போது, படரும்போது என்னதான் நடக்காது? நல்லன அத்தனையும் நடைபெறும். சும்மாவே இந்த ராசியார் பலர் தாம் தூம் என ஆடுவர். சும்மா ஆடுகிறவருக்கு சலங்கை கட்டின கதையாக சிலர் போடும் ஆட்டம் அதிகமிருக்கும்.

முத-ல் அரசிய-ல், "எல்லாரும் தள்ளுங்க, நான்தான் ஃபர்ஸ்ட்' என இடித்துத் தள்ளி, அவர்கள் அளவிலுள்ள முத-டத்தைப் பிடித்துவிடுவர். இதேபோல் பதவியில் இருப்பவர்களும் அரசு, தனியார் என எதில் இருப்பினும் கொடுக்கவேண்டியதைக் கொடுத்து பதவி உயர்வு வாங்கிவிடுவர்.

இந்த காலகட்டத்தில் சிம்ம ராசியாருக்கு நிறைய மனை, வயல், தோட்டம் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணம் உண்டு. கல்வி மேன்மையுண்டு. மாணவர்கள் எந்த உயர்கல்வியில் சேரவேண்டுமென நினைத்தார்களோ, அவ்வண்ணமே சேர்ந்துவிடுவர். சிலரின் கல்வியில் வெளிநாட்டு சம்பந்தம் உண்டு.

பெற்றோர் ஆசையை நிறைவேற்ற முடியும். அது வீடு, வாகனம், பசு, கிராமத்திற்குச் செல்வது கிணறு தோண்டுவது, பரம்பரை சொத்தை மீட்டு அவர்களுக்குப் பரிசளிப்பது என அவர்களின் விருப்பம் அனைத்தையும் நிறைவேற்றுவீர்கள். இன்னும் சொல்லப்போனால், அவர்களின் இறுதி இடம் பற்றியும் அவர்களது விருப்பமறிந்து, நிறைவேற ஆவன செய்வீர்கள்.

ஒருசிலர் தியானம் கற்க ஆரம்பித்துவிடுவீர்கள். உங்களின் வெகுநாள் அபிலாஷையான ஆன்மிக எழுத்துகள், புத்தகமாக வெளியிட ஆவன செய்வீர்கள்.

சிலருக்கு மருமகன் வரும் நேரமிது. அவர் நீங்கள் சொல்வதைக்கேட்டு நடப்பவராக இருப்பார்.

இந்த காலகட்டத்தில், தகுதியான சிம்ம ராசிக்காரர்களுக்கு லஞ்சப் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும். போதுமென்று சொன்னா லும் கருப்புப் பணம் வந்து, பணப்பெட்டியை அல்ல- பணம் வைக்கும் அறையையே நிரப்பும்.

ஏனோ, இந்தக் காலநேரத்தில் சிலருக்கு எண்ணம் சற்று மாசடையும். இதற்குக் காரணம் 11-ஆமிடத்தில் ராகு சார நட்சத்திரம் இருப்பதுதான். குரு பார்வை ஓரளவுக்கு கட்டுப்படுத்தும். இவர் பிற பெண்களின் சேர்க்கையைக் கொடுப்பார்.

சிலருக்கு மறைமுகச் செயல்கள் செய்யும் ஆசை பொங்கிப் பெருகும். இதனை செயற்கரிய செயலாக உருவகப்படுத்திக் கொள்வார்கள்.

சமையல் போட்டியில் பங்கேற்கும் சிம்ம ராசியினர் முதல்பரிசு பெறுவர். சமையல் கலைஞர்கள் நன்மை பெறுவர்.

7-ஆம் பார்வைப் பலன்

குரு தனது ஏழாம் பார்வையால், சிம்ம ராசியைப் பார்க்கிறார். "அப்படி போடு அருவாளை' என்ற கதைதான். சும்மா "ஜே ஜே' என்றிருப்பீர்கள்.

உங்களின் தனித்தன்மை மிளிரும். ஒவ்வொரு நொடியும் "ஈகோ' வழியும். சிலர் எந்த இடத்திலும் "நான்தான் தலைமை தாங்குவேன்' என அடம் பிடிப்பார்கள். கல்யாண வீடென்றால் "மாப்பிள்ளை நான்தான்' என்பார்கள். இழவு வீடென்றால் "நான்தான் பிணம்' என்பார்கள். இந்த பழமொழிமூலம் எந்த இடத்திலும், அது நல்லதோ கெட்டதோ- இவர்கள் எல்லாராலும் கவனிக்கப்பட வேண்டும் என்னும் தீரா ஆவல் இருக்கும். சிம்ம ராசிப் பெண்களும் "கெத்து' காட்டுவதில் குறைவைக்க மாட்டார்கள்.

இந்நேரத்தில், சிம்ம ராசிக்காரர்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ள மெனக்கெடுவார்கள். அழகுப் பொருட்கள், வாசனைப் பொருள் உபயோகம் அதிகமிருக்கும். நல்ல ருசியான உணவுண்பர். நகைகள் வாங்குவர். விதவிதமான ஆடைகள் வாங்கிப் பயன்படுத்துவர். கலைத்தொழில் சம்பந்தமான கலைஞர்கள் மிக மேன்மை அடைவீர்கள். சிலர் அதன் தயாரிப்பாளர்களாக முதன்மை இடத்தைப் பிடிப்பீர்கள். உங்கள் புகழ் திக்கெட்டும் பரவ, நீங்களே காசைக் கொடுத்து விளம்பரம் செய்வீர்கள்.

சிம்ம ராசியில் அரசுத் துறையினர் சிலர் ஆர்ப்பாட்டம் செய்வர். அரசியல் வாதிகள் முதன்மை பெறுவர். சிலர் தந்தையின் தொழிலை ஏற்று நடத்துவர். அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பேரும் புகழும் முதன்மையும் பாராட்டும் பெறுவர். துப்பறியும் நிறுவனம் நடத்துபவர் ஏற்றம் பெறுவர். சிம்ம ராசியினர், அவரவர் அளவில் முதன்மைநிலை பெற்று, வெகுசிறப்பு பெறுவர். இதில் ஐயமில்லை.

9-ஆம் பார்வைப் பலன்

குரு தனது ஒன்பதாம் பார்வையால் சிம்ம ராசியின் 3-ஆமிடத்தை வருடுகிறார்.

3-ஆமிடம் என்பது வீர, தீர, தைரிய, வீரிய ஸ்தானம்; இளைய சகோதர ஸ்தானம். உங்களின் மனதிலும் புத்தியிலும் தைரியம் பொங்கிப் பெருகும். "என்ன கஷ்டம் என்றாலும் என்கிட்ட வாங்க. ஒரே நிமிடத்தில் எல்லாத்தையும் சரிபண்ணிவிடுவேன்' என்று கூறுமளவு பெருகும். சிலர் தொழில் செய்யுமிடத்தில், "என்னைக் கேட்காமல் ஒரு தூசு நகரப்படாது' என ஆணையிடுவர்.

உங்கள் இளைய சகோதரம், அவர் பங்குக்கு தூள் கிளப்புவார். அவர்களின் திருமணத்தை சிறப்பாக, மிகச் சிறப்பாக நடத்துவீர்கள்.

சில பெண்கள், காதல் விஷயத்தில் ஈடுபடக்கூடும். அதனால் ஏற்படும் அவமானத்தையும், "வாழ்வில் இதெல்லாம் சகஜப்பா' என்று தட்டிவிட்டுத் தொடர்வார்கள்.

விலை உயர்ந்த தொலைபேசி வாங்குவீர்கள். நீங்கள் பத்திரிகை, தொலைக்காட்சியை சேர்ந்தவர்களாயின், தைரியமாக செய்திகளை வெளியிடுவீர்கள். அதனால் சில பிரச்சினைகளையும் சந்திக்க நேரும். என்றா லும் பக்குவமாக சமாளித்து, பின் பழையபடி ஆரம்பித்து விடுவீர்கள்.

குரு பார்வை நல்லதுதானே செய்யும் என உங்களுக்குத் தோன்றும். 3-ஆமிடத்தில் சித்திரை, சுவாதி எனும் செவ்வாய், ராகு சார நட்சத்திரங்கள் இருப்பதால் இவ்விதம் நிகழும்.

பொதுப் பலன்கள்

இந்த குருப்பெயர்ச்சியில், சிம்ம ராசியின் ராசிவீட்டையும், லாப, தைரிய ஸ்தானத்தையும் பார்ப்பதால், சிம்ம ராசியினர் வாழ்க்கைத் தரம் மிக உயரும். சும்மா உயராது; வீர, தீர, பராக்கிரமத்தோடு உச்சத்துக்குப் போகும். எந்த மனிதரும் வாழ்வில் நல்ல மேன்மையடையும்போது, கையை காலை வைத்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டார். ஒருமுறை மகாலட்சுமித் தாயார் பெருமாளிடம், "நான் எப்படி ஒருவனுக்கே எனது ஐஸ்வர்யத்தை வாரி வழங்குவது? என்னுடைய மற்ற குழந்தைகளுக்கும் தனப் பிராப்தி தரவேண்டுமே? என் செய்வது?' என வினவ, அதற்குப் பெருமாள், "நீ அவனுக்கு மிக மேன்மையான வாழ்க்கையைக் கொடு. நான் அவனுக்கு திமிரைக் கொடுக்கிறேன். அதனால் அவன் பணிவின்றி நடந்துகொள்வான். எவன் பணிவின்றித் திரிகிறானோ அவ்விடம் உனக்குப் பிடிக்காது;

அவனைவிட்டு நீங்கிவிடுவாய். இதன்மூலம் நீ உன் அனைத்து பக்தர்களையும் ரக்ஷிக்கலாம்' என்று கூறினார். சிம்ம ராசிக்காரர்களின் கோட்சாரம் இவ்வித பலன் தரும் நிலையில்தான் உள்ளது. எனவே இதனை மனதில் இருத்தி, பணிவோடு நடந்து, வந்து சேர்ந்த மகாலட்சுமியின் திருப்பாதம் பற்றி, எக்காலமும் அந்தத் தாயார் உங்களை விட்டுப் பிரியாமலிருக்க வேண்டி, தன்மையாக நடந்துகொள்ளுங்கள். உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி 90 சதவிகித நற்பலன் தரும்.

மக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சியில் மக நட்சத்திரத்தரர் மனக்குழப்பம் நீங்கித் தெளிவடைவர். இதுவரையில் உங்கள் வீடு, மனை, வயல் பற்றிய ஒரு குழப்பம் இருந்துகொண்டே இருந்திருக்கும்... என்ன முடிவெடுப்பதென்று தெரியாமல், ஒரு தெளிவற்ற தன்மை இருந்திருக்கும். அல்லது உங்கள் தாயார் விஷயமாக சற்று மனத்தாங்கல் ஓடிக்கொண்டிருக்கும். சிலருக்கு கல்வி, சுகம் சமபந்தமான மனக்கிலேசம் இருக்கும். அரசு சம்பந்தமான பயமும் சந்தேகமும் இருக்கும். கிணறு தோண்ட, அதில் தண்ணீரே வந்திருக்காது. வேளாண்மை, விதைகளின் குற்றத்தால் பின்னடைவு கொடுத்திருக்கும். சிலசமயம் இன்னதென்று தெரியாமல் மனம் பாரமாக இருந்திருக்கும். இந்த குரு பார்வை பட்டவுடன் மேற்கண்ட அத்தனை பிரச்சினைகளும், தீர்ந்துவிடும். மனநிறைவு உண்டாகும். இதுதான் குரு பார்வையின் உண்மையான பலன். லேசான மனம், நிறைந்த வயிறு, உரத்த தூக்கம்- இதுதவிர மனித வாழ்க்கையில் வேறென்ன சுகம் இருக்கப் போகிறது? இதைத் தரும் குருபகவானுக்கும், மலைமேலுள்ள விநாயகருக்கும் நன்றி கூறுங்கள்.

பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

இந்த நட்சத்திர ஆண்களோ பெண்களோ மிகமிக மனத்துணிவு கொள்வீர்கள். எந்த தருணத்திலும் அந்த மன தைரியமானது திமிராக மாறாமல் பார்த்துக்கொள்ளுதல் அவசியம். ஏனெனில் உங்களுக்கு அந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடக்கும். வேலை செய்யுமிடத்தில் "உங்களை மாதிரி யார் இதைச் செய்யமுடியும்' என்பர். தொழில் செய்யும் தலங்களில், "எப்படி சார் தைரியமாக இந்த முடிவெடுத்தீர்கள்? நோ சான்ஸ்' என்பர்.

மனிதத் தொடர்புத் துறைகளில், "கொஞ்சமும் தயங்காமல், ஒரு நொடியில் அந்த நிகழ்வைப் படம்பிடித்தீர்கள்' என தொலைக்காட்சி சம்பந்தப்பட்டவர் களிடம் கூறுவர். உங்களின் வாழ்வியலைப் பொருத்து உங்கள் செயல்கள் அடுத்தவரைப் பாராட்டச் செய்யும். இதன் அடுத்த படியாக புகழ் போதையாகி தலைக்கேறும். இதைத்தான் தவிர்க்க வேண்டும். மலைமேலுள்ள மகாலட்சுமியை வணங்கவும்.

உத்திரம் 1-ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு:

அரசியல் பதவிகள் தேடிவரும். அரசுப் பணியாளர்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர். மனத்திண்மை பெருகும். தந்தைமூலம் பெருமை கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள்குலம், பரம்பரை, பூர்வீகம் சார்ந்த மேன்மையும், புகழும் பெறுவீர்கள். அரசுமூலம் பாராட்டும் பத்திரமும் கிடைக்கும். சிலருக்கு முதலமைச்சர், பிரதமமந்திரி போன்ற உச்ச ஸ்தான தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். மருத்துவத் துறையில் உள்ளவர்கள் முதன்மை பெறுவர். சமூக சேவை செய்பவர்கள் பெரும்புகழ் பெறுவர். தர்ம ஸ்தாபனங்கள் வெகு மதிப்பு பெறும். நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்கள் முன்மாதிரி மனிதராகப் போற்றப்படுவீர்கள். ஆக, உத்திரம் 1-ஆம் பாத நட்சத்திரத்தார் வெகு பிரபலமும், மன சந்துஷ்டியும் அடைவீர்கள். மலைமேலுள்ள சிவனை வணங்கவும்.

பரிகாரங்கள்

சூரியனார் கோவிலுக்குச் சென்று, அகந்தை ஏற்படாமலிருக்க வேண்டிக் கொள்ளுங்கள். தினமும் சூரியனை வணங்கவும்.

திருமண விஷயங்களில் உதவவும். உங்கள் சொந்தம், நட்பு வட்டாரத்தில் யாருடைய வாழ்க்கைத் துணைக்காவது உடல்நிலை சரியில்லாவிட்டால், அவருக்குத் தேவையான உதவியை சரியான தருணத்தில் கிடைக்கும்படி செய்யவும். உங்கள் இளைய சகோதரி வயதுடைய பெண்களுக்கு, வியாபாரம் ஆரம்பிக்க அல்லது ஏதேனும் வேலையில் சேர உதவுங்கள். பிரசவ மருத்துவமனைக்கு உங்கள் உதவிகள் சென்று சேரட்டும். அதிலும் அறுவை சிகிச்சை செய்து, பிரசவம் நடக்கும் தாய்மார்களுக்கு உதவி செய்யவும்.

"செல்வ நெடுமாடம் சென்று சோணாங்கி' என்று தொடங்கும் பஞ்ச புராணப் பாடலைப் பாராயணம் செய்யலாம்.