சித்தர்கள் அருளிய வாசி யோகம்!
பாவ- சாப தோஷங்கள் தீர்க்கும் மார்க்கம்!
32
சித்தர்தாசன் சுந்தர்ஜி
"எல்லா மறிந்தவ ரென்றுசொல் லியிந்த
பூமியிலே முழு ஞானியென்று
உல்லாச மாக வயிறு பிழைக்கவே
ஓடித் திரிகிறார் வாலைப் பெண்ணே.'
(கொங்கணர்)
புலத்தியர்: இந்த பூமியில் சிலர் அவரவர் அனுபவ நிலைப்படி கடவுள் களைக் கூறி, அந்த கடவுள்களின் பெயரால் மதங்களை உருவாக்கிக் கொண்டார்கள் என்று, மதங்கள் தோன்றிய உண்மை வழியைக் கூறினீர்கள்.
ஒவ்வொரு பகுதியில் வசிக்கும் மக்களும்- தாங்கள் பேசும் மொழி யால், தங்களை மொழி சார்ந்த இனத்த வராகக் கூறிக்கொண்டார்கள்.
அவரவர் செய்யும் தொழிலால் சாதிப் பிரிவுகளை தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்டார்கள் என, மக்களிடையே மதம், இனம், சாதி இம்மூன்றும் உண்டான முறையை விளக்கமாகக் கூறி தெளிவுபடுத்தி னீர்கள்.
ஆண்- பெண் இனச்சேர்க்கையால் உருவாகி இந்த பூமியில் தோன்றும் மனிதன், விலங்கு, பறவை, மரம், செடி, கொடி, தாவர இனங்கள் என அனைத்திற்கும் ஆன்மாவின் செயல்நிலை ஒன்றுதான்; இதில் பேதமில்லை என்று கூறினீர்கள். ஆன்மா பற்றிய கேள்விகள் எங்கள் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கின்றன.
ஆசானே, ஆன்மா என்பது கை, கால்கள் போன்று ஒரு உறுப்பாக உள்ளதா? அப்படியானால் அந்த உறுப்பு சரீரத்தில் எங்குள்ளது?
சரீரத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு விதத்தில் செயல்படுகிறது. ஆன்மா எப்படி செயல்படுகிறது?
ஆன்மா ஜீவராசிகளின் உடலினுள் உள்ளதா அல்லது வெளிப்புறத் தில் உள்ளதா?
ஆன்மா உயிரினங்களை செயல்பட வைக்கிறதா அல்லது உயிரினங்கள் ஆன்மாவை செயல்படச் செய்கின்றனவா?
ஆன்மா உயிரினங்களின் காரணக் கருவியா?
அல்லது காரியக் கருவியா?
ஓரறிவுமுதல் ஆறறிவுவரையுள்ள நிலையில் பலவகையான உயிரினங்கள் இந்த பூமியில் பிறந்து வாழ்கின்றன. இவற்றின் சரீரமும் வாழ்வு முறையும் ஒன்றுபோல இல்லை. ஆனால் அவற்றின் ஆன்மாவின் செயல் மட்டும் ஒன்றுபோல எப்படி இருக்கமுடியும்?
ஆன்மாவின் நிலையினைப் பரமாத்மா, ஜீவாத்மா என்று இருவிதமாகக் கூறுகிறீர்கள். அதன் வேறுபாடு, உண்மைத்தன்மை என்ன?
உடல் அழிந்தபின் உயிரின் நிலை என்ன? ஆன்மாவின் நிலை என்ன? இவை எங்கே செல்கின்றன?
ஆன்மா அழிந்துவிடுமா அல்லது அழிவற்றதா?
ஒரு உயிர் இந்த பூமியில் பிறப்பதும், பிறப்பைத் தொடர்வதும், பிறப்பை முடிப்பதும் ஆன்மாவினால் தான் என கூறுகிறார்கள். இதற்குப் பிரமாணம் என்ன?
மனிதர்களின் வாழ்வில் உண்டாகும் பாவ- சாப- புண்ணியப் பதிவுகள் அனைத்தும் அவரவர் ஆன்மாவின் செயலால்தான் என்பது உண்மையா?
இதுபோன்று இன்னும் ஏராளமான கேள்விகள், ஆன்மா பற்றிய சந்தேகங்கள் இங்குள்ள அனைவருக்கும் உண்டு. இதைப் பற்றிய உண்மை விளக்கங்களைக் கூறுங்கள்.
அகத்தியர்: புலத்தியரே, உங்களுக்கு இவ்வளவுதான் கேள்விகளா? இல்லை இன்னும் உள்ளதா?
என் அருமை நண்பா. நீங்கள் பிரம்மயோகி. அனைத்து உண்மைகளையும் அறிந்தவர். பூரண ஞானி என்ற நிலையில் வாழ்பவர். நான் தங்களுக்கு ஆன்மா பற்றி தெளிவுபடுத்த வேண்டுமா? உண்மை யாய்க் கேட்கின்றீர்களா? உயிர்த்தோழன் என்ற நட்பு முறையில் விளையாட்டாகக் கேட்கின்றீர்களா?
புலத்தியர்: அகத்தியரே, கேள்வி கேட்பவன் ஞானத் (அறிவு) தேடலில் உள்ளவன் என்றும், ஒருவன் பூரண ஞானம் அடைய வேண்டுமானால் அவனுக்கு கேள்வி ஞானம் இருக்கவேண்டும் என்றும், கேள்வி கள்மூலமே அனைத்தையும் பற்றிய உண்மை களைத் தெரிந்துகொள்ள முடியுமென்றும், கேள்விகளுக்கு ஒருவர் கூறும் பதில்மூலம் இன்னும் புதிய புதிய கேள்விகள், சந்தேகங் கள் தோன்றும் என்றும், அவற்றுக்கும் முழுமையான விளக்கமறிந்து தெளிவு பெற வேண்டுமென்று "ஞானத்தெளிவு' பெறும் வழிமுறையை முன்பு நீங்கள்தானே எனக்குக் கூறீனீர்கள்.
இந்த தமிழ்ச்சபை கேள்விகள் கேட்டு விளக்கம் பெறவும், சந்தேகத் தெளிதலுக் காகவுமே உங்களால் உருவாக்கப்பட்டது. சித்தர்கள் அனைவரும் கேள்வி கேட்பதும், அவற்றுக்கு நீங்கள் விளக்கம் கூறுவதும் எங்களுக்காக மட்டுமல்ல; இந்தப் புவியில் பிறந்து வாழும், இனி பிறக்கப்போகும் மக்களுக்காகவும்தான். மக்கள் நல்வாழ்வு அடைவதற்காகத்தான் நீங்கள் தமிழ்ச் சித்தர்கள் சங்கத்தை உருவாக்கினீர்கள் என்பதை அறியாதவர்களா நாங்கள்?
ஆடலும் பாடலும் இசையுமல்ல ஞானம்.
போற்றுதலும் புகழ்தலுமல்ல ஞானம். மாயையைக் கண்டு மனம் மயங்குவதல்ல தெளிவு. ஞானம் அடிபணிந்து அறிவதல்ல. ஏதோ ஒன்றைப் பற்றி யாரோ ஒருவர் தன் அனுபவத்தை எப்போதோ கூறியதைப் படித்துவிட்டு, அதிலுள்ள உண்மை- பொய் தெரியாமல் நம்பிக் கடைப்பிடித்து, தான் கோரியது எதனையும் அடையமுடியாமல், நிம்மதியையும் காலத்தையும் இழந்து, ஏமாந்து வாழ்ந்து கொண்டிருப்பவன் ஐந்தறிவுள்ள விலங்கிற்கும் கீழானவன் என்று எங்களுக்கு போதித்தவரே நீங்கள்தானே.
தன் சித்தத்தால் தன் சித்தமறிந்து, சித்தத்தால் சுயமாக சிந்தித்தறிந்து, சித்தத்தை வென்றடக்கி, சித்தத்தை செயலாக்கி, சிவமாகி, பின் சித்தர்கள் நிலையடைந்த தமிழ்ச் சித்தர்கள் நிறைந்த இந்த சபையில் கேள்வி என்ற வேள்வித்தீ சுடர்விட்டு எரிந்துகொண்டேயிருக்கும். இந்த வேள்வியில் நீங்கள், உண்மை விளக்கம் என்ற நெய்வார்த்து வளர்த்துக்கொண்டே இருக்கவேண்டும். அதனால் உலகமக்களுக்கு பகுத்தறிவு என்ற சித்தர் ஞானம் வளர்ந்து கொண்டே இருக்கவேண்டும்.
அகத்தியர்: புலத்தியரே, பிரம்மயோகி யான நீங்கள் உங்களின் பிரம்ம ஞானத் தால் என் கடமையை எனக்குப் புரியவைத்து விட்டீர்கள். எனக்கே தெரியாமல் என்னுள் கர்வம் தோன்றியிருக்குமோ என்னவோ? சகலமுமறிந்த பூரண ஞானம் பெற்றவன்- அட்டமகாசக்திகளை அடைந்தவன்- பிறப் பறுத்து மரணத்தை வென்றவன்- "நான்' என்ற ஆணவகுணம் என்னையுமறியாமல் எனக்குள் ஏற்பட்டிருக்குமோ? ஆனால் ஒரு நல்ல நண்பன் தன் நண்பனுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்துவிட்டீர்கள். ஆணவத்தால் நான் பிழை செய்யாமல் தடுத்துவிட்டீர்கள்.
உங்கள் கேள்விகளுக்குரிய உண்மை விளக்கம் அளிக்கிறேன். இங்கு கற்பனைக் கதைகளுக்கும், உதாரணக் கருத்துகளுக்கும் இடமில்லை.
அனுபவம் எதனையும் சுயஅறிவால் சிந்திக்காதவன், தன் சந்தேகத்தைக் கேட்டு விளக்கமறிந்து கொள்ளாதவன், இந்த பூமியில் நடைப்பிணமாக வாழ்பவன், ஒருவர் கேட்கும் சந்தேகங்களுக்கு சரியான விளக்கம் சொல்லத் தெரியாமல், எதை யெதையோ உதாரணம் கூறி தானும் குழம்பி, கேள்வி கேட்டவனை மேலும் குழப்பத்தில் ஆழ்த்துபவன் மூடஞானி.
கேள்வி கேட்பவன் ஞானி. அதற்குத் தெளிவான விளக்கம் கூறுபவன் மெய் (உண்மை) ஞானி. கேள்விகளுக்கு உதாரண கற்பனைக் கதைகளைக் கூறுபவன் அஞ்ஞானி ஆவான்.
அருமைச் சித்தர்களே, இன்றைய தமிழ்ச்சங்கம் என் அருமை நண்பர் புலத்தியர் தலைமையில் நடந்தது. கேள்விக்குள் பதிலையும், பதிலுக்குள் கேள்வியையும் கொண்டு வரமுடியும் என ஞானத்தால் தெளிவுபடுத்தினார். எதனையும் தெளிவாகத் தெரியச் செய்வதே சித்தர் சித்தாந்தம்.
இனி, தமிழ்ச்சங்கத்தில் அகத்தியன் யான் மட்டுமல்ல; நீங்களும் கேள்விகளுக்கு சரியான விளக்கத்தைத் தரலாம். சித்தர் ஞானம் மக்களுக்கு தெளிவான நிலையில் வெளிப்படவேண்டும்.
சித்தர்கள் குண்டலினி யோகம் செய்யத் துவங்கும் நேரம் நெருங்கிவிட்டது. அவரவர் குகைக்குத் திரும்புங்கள். நாளை சபையில் சந்திப்போம்.
வாசி யோகம்
ஒவ்வொரு வருடமும் தை மாதம் 1-ஆம் தேதிக்கு முதல் நாள்- அதாவது மார்கழி மாதக் கடைசி நாளன்று, சரீரம் சுத்தம் செய்து, மனதில் எந்தவிதமான சலனமுமின்றி அமைதியாக வைத்துக்கொள்ளவேண்டும். காலை மட்டும் ஒரு வேளை உணவுண்டு, மதியம், இரவு இரண்டு வேளையும் உணவுண்ணா மல், காற்றை மட்டும் உண்டி ருப்பதால் தேகம், வயிறு, ஜீரண உறுப்புகள் மெலிந்தி ருக்கும். இதனால் சுவாசக் காற்று, சரீரத்தின் அனைத்து பாகங்களுக்கும் தடையின் றிச் சென்றுவரும்.
மறுநாள் தை மாதம் முதல் தேதி பொழுது விடிய ஐந்து நாழிகை இருக்கும் போது (ஒரு நாழிகை- 24 நிமிடம், ஐந்து நாழிகை- இரண்டு மணி நேரம்)- அதாவது அன்று விடியற்காலை 4.00 மணிமுதல் 6.00 மணிவரை மூச்சுக்காற்று மூக்கின் இடதுபக்க துவாரத்தில் மாறாமல் சிதறாமல் ஓடவேண்டும். இதுவே அன்றைய சரியான சுவாச நிலை.
இதேபோன்று, ஆடி மாதம் 1-ஆம் தேதிக்கு முதல் நாள்- அதாவது ஆனி மாதக் கடைசி நாளன்று, காலை ஒரு பொழுது மட்டும் உணவுண்டு, மதியம், இரவு உணவுண்ணாமல், காற்றை மட்டும் புசித்து, ஆடி மாதம் 1-ஆம் தேதி விடியற்காலை 4.00 மணிமுதல் 6.00 மணிவரை மூச்சுக்காற்று உங்கள் மூக்கின் வலப்பக்க துவாரத்தில் மாறாமல் ஓடவேண்டும். இதுவே சரியான சுவாச நிலை.
தினமும் மூச்சுப் பயிற்சி (பிராணாயாமம்) செய்துவருபவர்களுக்கு, இதுவரை செய்த பயிற்சி சரியாக உடலில் செயல்பட்டுக் கொண்டிருந்தால் இந்த நாட்களில் சுவாசம் மேலே குறிப்பிட்டதுபோல் சரியாக இருக்கும். சுவாசம் மாறாமல் செயல்பட்டால் அன்றுதொட்டு இவர் நூறு வருடம் வாழ்ந்திருப்பார். ஆயுள் விருத்தியாகும், ஆயுள் பங்கம் ஏற்படாது. இதுவரை சென்ற ஆயுளை நீக்கி நூறு வருட ஆயுள் கணக்கில் வாழ்வார்.
இதேபோன்று சுவாசப்பயிற்சி தொடர்ந்து செய்யாதவர்களுக்கும் ஆடி மாதம் 1-ஆம் தேதி, தை மாதம் 1-ஆம் தேதியில் இதுபோன்று சரியான நிலையில் சுவாசம் ஓடினால், அவர் களுக்கும் ஆயுள் விருத்தியா கும். ஆயுள்பங்கம் ஏற்படாது.
நூறு வருட ஆயுளில் 40 வருடம் சென்றிருந்தால் இன்னும் 60 வருடம் வாழ்வார்.
தை மாதம் 1-ஆம் தேதி யும், ஆடி மாதம் 1-ஆம் தேதி யும் மூச்சுக்காற்று சரியாக ஓடாமல், இடம், வலம் முற்றிலும் மாறி ஓடினால் ஆயுள்காலம் குறைவு என்று அறிந்துகொள்ளவேண்டும்.
இதற்கு தினந்தோறும் மூச்சுக்காற்றை முறைப்படுத்தி வரவேண் டும். வருடா வருடம் தை மாதம் 1-ஆம் தேதி யும், ஆடி மாதம் 1-ஆம் தேதியும் சுவாச நிலையை கவனித்து வரவேண்டும்.
"மனிதரிலும் பறவையுண்டு விலங்குண்டு
கல்லுமுண்டு மரமுமுண்டு
மனிதரிலும் நீர்வாழுஞ் சாதியுண்டு
அனேக குண மனிதருண்டு
மனிதரிலும் மனிதருண்டு
வானவரும் மனிதராய் வருவதுண்டு
மனிதரிலே பிறப்பறுக்க வந்ததே
அருமையென வகுத்தார் சித்தர்.'
(சைவ சித்தாந்தம்)
சித்தர்களைப் பற்றி வாழ்வோம்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!
(மேலும் சித்தம் தெளிவோம்)