பாவ- சாப தோஷங்கள் தீர்க்கும் மார்க்கம்!
31
சித்தர்தாசன் சுந்தர்ஜி
"ஓதும்நாலு வேதமுரைத்த நூல்களும்
பூதத்தத் துவங்களும் பொருந்தா கமங்களும்
சாதிபேத யுண்மைகூற தயங்குகின்ற நூல்களும்
பேதபேத மாகியே பிறந்துழன்றி யிருந்ததுவே.'
(சிவ வாக்கியர்)
அகத்தியர்: சித்தர் பெருமக்களே, அகத்தியன் யான், இந்த மண்ணில் வாழும் மக்கள் அனைவரும், தங்கள் பிழைப்பிற்காகச் செய்யும் உபதொழில்களைக் கொண்டு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள். ஒவ்வொரு தொழில் செய்பவர்களையும், மற்ற மக்கள் அறிந்து கொள்ளவே மக்களிடையே இனப்பிரிவு கூறப்பட்டது. இந்த பூமியில் எல்லாரும் ஒரே இனம்தான். "பார்க்க பதினெண்சாதியு மொன்றே உய்வார் பதினெண் சாதியு மொன்றாய் செய்வார் விவாகந் திறமை யாக.'
தமிழின மக்கள் பதினெட்டு விதமான தொழில்களைச் செய்து, தாங்கள் செய்யும் தொழிலால் இனம் பிரித்துக் கொண்டாலும், எல்லாப் பிரிவு மக்களும் பேதமில்லாமல் பெண் கொடுத்து, பெண் எடுத்து திருமணம் புரிந்துகொண்டு ஒற்றுமையாக மகிழ்ச்சி யுடன் வாழ்ந்தார்கள். "திரிவார்கள் திருடரப்பா கோடா கோடி தேசத்தில் கள்வரப்பா கோடா கோடி வருவார்கள் அப்பனே அநேகங் கோடி வார்த்தை யினால்பசப் புவார்கள் திருடர்தானே.'
முக்காலமும் உணர்ந்த அகத்தியன் யான் இப்போது கூறுவதை கவனமாகக் கேளுங்கள். எதிர்காலத்தில், சித்தர்கள் பூமியான இத்தமிழ்ப்பகுதியில், உழைத்து வாழாமல், பிறரை ஏமாற்றிப் பொருள் பறித்து வாழும் கபடமான கள்ள மனதுடையவர்கள் தமிழ் மக்களிடையே கலந்து, தாங்கள் அணியும் உடையால் வேறுபடுத்திக் காட்டிக்கொண்டு, மனிதர்களில் தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என பெருமை பேசிக்கொண்டு, மதம், சாதி, இனம், மாயம், மந்திரம், மடம், பீடம் என்றும், அதற்கு ஆதாரமாக பல பொய்யான கற்பனைக் கதைகளையும் கருத்துகளையும் கூறி, தமிழ் மக்களிடையே சாதி, சமயம் என பிரிவினைகளைக்கூறி, பகைமையை உண்டாக்கி ஒற்றுமையைக் குலைத்துவிடுவார்கள்.
இந்த மதகுருமார்களின் பேச்சு, செயல் களை நம்பி தமிழ் மக்கள் ஏமாந்துவிடக் கூடாது. கவனமாக இருந்து, தமிழ்மொழியை யும், நாகரிகத்தையும், வழிபாட்டு முறைகளையும், சைவத்தமிழ்ச் சித்தாந்தத்தையும் அழிந்துவிடாமல் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
சித்தர்கள் கூடியுள்ள இத்தமிழ்த் திருச்சபையிலுள்ள பதினெட்டுச் சித்தர் களாகிய நாம் அனைவரும் அறிவிலும் அட்ட மகாசக்திகளிலும் சமமானவர்களே. நம்மிடையே பெரிய சித்தர், சிறியவர் என்ற பேதமில்லை.
பாம்பாட்டிச் சித்தரே, சாதி, சமயம் பற்றி தங்கள் கருத்துகள் என்னவோ?
பாம்பாட்டிச் சித்தர்:
"சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்
சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்.'
பொதிகைத் தலைவனே! சாதி, சமயம் என பிரிவினைக் கருத்துகளைக்கூறி மக்களைப் பிரித்து சூழ்ச்சியான செயல்களைச் செய்து மக்களின் ஒற்றுமையைக் குலைத்து வாழ்பவர்களை நெருப்பிலிட்டு அழிக்க வேண்டும். அவர்கள் கூறும் கருத்துகளை ஒதுக்கவேண்டும்.
மக்களிடையே சாதி, பேதம் இல்லை; அனைவரும் சமமானவர்கள் என்ற உயர்ந்த கருத்துகளைக் கூறும் சைவத்தமிழ்ச் சிந்தாந்தக் கொடியைத் தமிழ் மண்ணில் பறக்கவிடவேண்டும்.
அகத்தியர்: நமது சித்தர்கள் கூட்டத்தில் எப்போதும், அதிக கோபத்துடனும் அதிக சீற்றத்துடனும் இருப்பவர் நமது பாம்பாட்டிச் சித்தர். சாதி, சமயம் பற்றி கருத்துக்கூறும் போது, கோபத்தின் உச்ச நிலைக்கே சென்று, சாதி, சமயக் கொள்கைகளை தீவைத்து எரித்துவிட உத்தரவிட்டுவிட்டார். அவரின் உத்தரவை அனைவரும் நிறைவேற்றுவோம்.
அகப்பேய்ச் சித்தர்:
"சாதி பேதமில்லை- அகப்பேய்
தானாகி நின்றவர்க்கே
ஓதி யுணர்ந்தாலும்- அகப்பேய்
ஒன்றுந் தான் யில்லையடி.'
இந்த பூமியில் ஒரு மனிதன் தனக்கு உறவில், உணவில், தொழிலில் நல்லது எது?
தன் பிறப்பிற்குக் காரணமென்ன? இப்பிறவி யில் தனது தாய், தந்தை, மனைவி, குழந்தை களுக்குச் செய்யவேண்டிய கடமைகள் எவை? தனது வாழ்வை செல்வம், செல்வாக்கு டன் உயர்வானதாக அமைத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும்? தனது முற்பிறவி பாவ- சாபப் பதிவுகளை எப்படி நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்? பாவ- சாபங்கள் எந்த செயல்களால், யாரால் உண்டாகின்றன? இந்த பூமியில் எது உண்மை? எது பொய்? நிலையானது எது? நிலையற்றது எது என அனைத்தையும் பகுத்தறிவால் அறிந்து, தனது வாழ்க்கைக்கு நன்மைகளை மட்டுமே தரும் அனைத் தையும் அறிந்து, பூரணமாக அடைந்து-
அனுபவித்து தன்னையறிந்து வாழும் மனிதர்கள் இந்த சாதி, சமயப் பேதக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
கருவூர்ச் சித்தர்:
"பார்க்க வொண்ணாத பிரம்மச் சத்திரியரும்
தூர்க்கப் படாத சூத்திரர் வணிகரும்
பார்க்க பதினெண் சாதியு மொன்றே
ஏற்கை யாயவர் களிருந் துய்வரே.'
சித்தர்களில் தலைமையானவரே, வடபுலத்தினரின் வரலாறுகளைக் கூறும் ஒருசில மதத்தாரின் நூல்களில், பிராமணர்கள், சத்திரியர்கள் என தங்களை உயர்வாகக் கூறிக்கொள்பவர்களும், பொருள் வாணிபம் செய்யும் வைசிய மக்களும், பதினெட்டு வகையான தொழில் செய்து உழைத்துவாழும் "சூத்திரர்கள்' என கூறப் படும் மக்களும் சமமானவர்கள்தான்.
இந்த பூமியில் வாழும் மக்களிடையே பிறப் பால், உடல், உயிர், ஆன்ம உணர்வுகளில் எந்த பேதமும் கிடையாது. அனைவரும் சமமே. அகத்தியர் தாங்கள் கூறியது அனைத் தும் உண்மையே. எனது கருத்தும் தங்கள் கருத்தே.
வாசி யோகம்
ஒரு மனிதனுக்கு மரணமென்பது திடீரென உடனே உண்டாவதில்லை. ஒரு குழந்தை, தன் தாய், தந்தை இணைவினால் கருவாகி, தாயின் கர்ப்பத்தில் 270 நட்சத்திர நாட்கள் (ஒரு வருடம்) படிப்படியாக வளர்ந்து, ஒரு குறிப்பிட்ட நாளில் இந்த பூமியில் பிறக்கின்றதோ, ஒரு குழந்தையின் பிறப்பை எப்படி முன்பே அறிந்துகொள்ள முடிகின்றதோ, அதேபோன்று ஒருவரின் மரண நிலையும் குறிப்பிட்ட காலம் முன்பே தொடங்கி, ஒரு குறிப்பிட்ட நாளில் மரணமடையச் செய்துவிடுகிறது. மரணகாலம் மறைக்கப்பட்ட ரகசியமல்ல. அதை முன்பே அறிந்துகொள்ள முடியும்.
அவரவரின் மூச்சுக்காற்றினால்தான், அனைவரின் உயிரும் ஒன்றுபோல் செயல்படுகிறது. மூச்சுக்காற்று உடலினுள்ளே செல்லாமல் தடைப்பட்டு நின்றுவிட்டால், உயிர்சக்தி தொடர்பில்லாமல் மரணம் உண்டாகிறது. உயிரைத் தருவதும் "காற்று' என்ற கடவுள்தான்; மரணத்தை உண்டாக்கி வைப்பதும் "காற்று' என்ற "காலன்'தான். உயிரினங்களுக்கு காற்றின் அருள் கிடைக்கும்போது, அது கடவுள் நிலையாகிறது. காற்றின் நிலை மாறும்போது அதுவே காலனாகி மரணத்தைத் தருகிறது.
ஒரு மனிதன் தன் மரணம், நோய் தாக்கும் காலத்தை தனது சுவாசக்காற்றின் செயல்பாடு, ஒழுங்கற்ற மாறுதல் நிலைமூலம் அறிந்துகொள்ளமுடியும். தங்கள் அறிவால் மரணகாலத்தை அறிந்து அதைத் தள்ளிப் போடவும், தடுத்துக்கொள்ளும் நிலையும், அகத்தியர் முதலான பதினெட்டுச் சித்தர்கள் மட்டுமே அறிந்த சித்த ரகசியமாகும்.
மரணத்தை வென்று மரணமில்லா நிலையை அடையும் முறையே பாம்பாட்டிச் சித்தர் கூறிய 65-ஆவது கலையாகும். ஒரு மனிதன் மரணமடையும் வருடம், மாதம், நாள் என காலக்கணக்கிற்கு முன்பே, அவரின் மூச்சுக் காற்று எப்படி வலது- இடது என ஒரே பக்கம் ஓடும் என்பதை சென்ற தொடர்களில் அறிந்தோம். இதுபோன்று மூச்சுக்காற்றின் நிலை மாறும்போது மரணம், தற்கொலை, விபத்து பிறரால் கொலை செய்யப்படுதல் போன்ற எந்த நிலையிலும் சுவாசம் நிறுத்தப்பட்டு உயிர் பிரிந்து மரணத்தை அடையலாம். சுவாசக் காற்றின் மாற்றத்தை அறிந்துகொள்ளும் "வாசி' அறிவிருந்தால் இதுபோன்ற துர்சம்பவங்கள் நடைபெறாமல் நம்மால் தடுத்துக்கொள்ள முடியும்.
அவரவர் மூச்சுக்காற்றின் நிலையறிந்து, காற்றின் மாறுபட்ட செயல்பாட்டை ஒழுங்குபடுத்திக்கொள்ளும் சூட்சும வழிமுறைகளைப் பற்றி சித்தர்கள் கூறிய ரகசியங்களைத் தொடர்ந்து அறிவோம். காற்றின் நிலையறிந்து காலனைத் தடுப்போம்.
"நில்லென்ற பெரியோர்கள் பாசை யாலே
நீடுலகம் தன்னுள்ளே நாலு வேதம்
வல்லமையாய்ச் சாத்திரங்க ளிருமூன் றாக
வயிறுபிழைக்க புராணங்கள் பதினெட் டாகச்
கல்லுகளைக் கரைப்பதுபோல் வேதாந் தங்கள்
கட்டினா ரவரவர்கள் பாசை யாலே
தொல்லுலகில் நாற்சாதி யனேகஞ் சாதி
தொடுத்தார்க ளவரவர்கள் பிழைக்கத் தானே!
(வால்மீகிச் சித்தர்)
சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!