"சாதிபேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம்

தானென்றா லொருஉடல்பேத முண்டோ

ஓதியபாலதில் ஒன்றாகியே யதில்

உற்பத்தியாகி நெய்தயிர் மோராச்சு.'

Advertisment

(கொங்கணச் சித்தர்)

அகத்தியர்: சித்தர் பெருமக்களே, தமிழின மக்களிடையே சாதிப்பிரிவென்பது அவரவர் செய்யும் தொழிலால் உண்டானது என்று கூறினேன். அதைப்பற்றி இன்னும் சில உண்மை விளக்கங்களை இன்று கூறுகிறேன்.

தமிழ்மக்கள் அறிவின் முதிர்ச்சியால், வளர்ச்சியால், ஆங்காங்கு தனித்தனியே வாழ்ந்தவர்கள், கூட்டமாகச் சேர்ந்துவாழத் தொடங்கினர். அவ்வாறு வாழ்ந்த பகுதிகளை நாடு, பேட்டை, பாக்கம், பாளையம், வலசு, கிராமம், பட்டினம் என இன்னும் பல பெயர்களில் அழைத்தார்கள்.

Advertisment

தமிழ் மக்கள், அகத்தியன் யான் வகுத் தளித்த தமிழ்மறையான சைவத் தமிழ்ச் சித்தாந்தக் கருத்துகள்படி, பிறருக்கு இன்னா விளையாதவராய், எவ்வுயிர்க்கும் இரங்கு வோராய், பிறருக்கு தம்மால் இயன்ற நன்மை களைச் செய்வோராய், பொய், சூது, கபடு, கள்ளம் நீக்கி பிறரிடம் இரந்துண்ணாமல் தங்கள் உழைப்பால் தன்மானத்துடன் தன்னை யறிந்து வாழ்ந்துவந்தார்கள். அகத்தியன் யானும் தமிழ்மொழி தந்து, சரியான வாழ்க்கை வழிமுறைகளையும், இந்த பூமியில் எது உண்மை- எது பொய் என்பதையும் போதித்து, என் அட்டமகா சக்திகளால் மக்க ளின் உடல், உயிர், ஆன்மாவைக் காப்பாற்றி வந்தேன்.

கூட்டமாய்க் கூடிவாழ்ந்த மக்கள் தங்களுக்குத் தேவையான நன்மை- தீமைகளை அவ்வப்போது கூடிப்பேசி, எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திக் கொண்டார்கள். தாங்கள் கூடிப்பேசும் நாளை பறையடித்து ஒலியெழுப்பி எல்லா மக்களும் அறியச்செய்தார்கள்.

தோலினாற்செய்த கருவியைக்கொண்டு ஒலியெழுப்பி மக்களை ஓரிடத்தில் கூடச் செய்பவர்கள், அதனை ஒரு தொழிலாகச் செய்து கூலியைப் பெற்றுக்கொண்டார்கள். இந்த பறைக்கருவியை அடித்து தொழில் செய்தவர்களை "பறையர்கள்' என அடை யாளப்படுத்தினார்கள்.

புலத்தியனே, கிணறுகளில் இருக்கும் ஊற்றுநீரை இறைத்து பயிர்த்தொழில் செய்ய "கொப்பறை' போன்று தோலினால் தைத்துக்கொடுக்கும் தொழிலைச் செய்தவர் களை "அருந்ததியர்' என்று அழைத்தனர். "பறி' என்றால் பறித்தல் என்று பொருளாகும். கிணற்றிலுள்ள நீரைப்பறித்து மொண்டு மேலே கொண்டுவருவதைக் குறிக்கும். தோலினால் செய்யப்பட்டிருப்பதால் இதற்கு "தோல்பறி' என்று கூறப்பட்டது. நாளடைவில் மருவி "தோப்பரை' என்று கூறப் பட்டது.

தென்பாண்டிப் பகுதியில் ஓடும் சிறிய ஆறான "கடனாநதி'ப் பகுதியில் வசிக்கும் எனது அன்பிற்குரிய "அத்திரி முனிவர்' இந்த அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த பூரண ஞானியாவார்.

புலத்தியனே, மக்களின் தலை, முகத்தில் வளரும் முடியை மழித்து திருத்தம் செய்யும் தொழிலைச் செய்தவர்களை- உடம்பிலிருந்து முடியைப் பறித்து எடுப்பவர்களை "பறியாரி' என அழைத்தனர்.

இவர்கள் மூலிகைகளைக் கொண்டு மக்களின் சரீர நோய்களைத் தீர்த்ததால் ஆண் களை "மருத்துவர்கள்' என்றும், இந்தப் பிரிவுப் பெண்கள் பேறு காலத்தில் மருத்துவம் செய்து குழந்தை பிறக்க உதவி செய்ததால்- தாயிடமிருந்து குழந்தையைப் பறித்து வெளியே எடுப்பதால் "பறியாரிப் பெண்கள்', "மருத்துவச்சி' என அழைக்கப்பட்டனர்.

முடிதிருத்தி, உடம்பிலுள்ள கட்டிகள், கை, கால் நகங்களை வெட்டி ஒழுங்குப்படுத்தி, மகப்பேறு பார்த்து, மருத்துவம் என நானா விதத் தொழிலைச் செய்ததால் இவர்களை "நாவிதர்கள்' என அழைத்தனர்.

புலத்தியனே, உங்கள் வம்ச முன்னோர் கள் தங்கள் வாழ்வாதாரத்திற்குச் செய்த தொழில் என்ன?

புலத்தியர்: முனிவரே, என்வம்ச முன்னோர்கள் செய்த தொழில், மக்கள் அணிந்து அழுக்குப்படிந்த ஆடைகளைத் துவைத்து வெளுத்து, உலர்த்தி சுத்தமாக்கித் தருவதுதான்.

இங்கு நாம் புலத்திய முனிவரின் வரலாற்றை சுருக்கமாக அறிவோம்.

புலத்திய முனிவர் தென்புலமான தமிழ் நாட்டைச் சேர்ந்த இலங்கைப் பகுதியை ஆட்சி செய்த இராவணனின் பாட்டனார் என இராமாயணக் கதையில் கூறப்பட்டுள்ளது.

புலத்தியர், அகத்தியரின் காலத்தில் வாழ்ந்தவர், அகத்தியருக்கு உற்ற நண்பராக இருந்தவர் என்பதையும்; அகத்தியரும் புலத்தி யரும் இராமரின் காலமான திரேதாயுகத்திற்கு முன் யுகங்களில் வாழ்ந்தவர்கள் என்பதையும்; அகத்தியர், புலத்தியர், இராணவன் போன் றோர் தென்தமிழ்நாட்டுப் பகுதியில் பிறந்த வர்கள், தமிழ்மொழி பேசும் தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அகத்தியர் முதலான சித்தர்களின் பாடல்மூலம் அறியமுடிகிறது.

அகத்தியரின் நண்பரும், இலங்கை வேந்தன் இராவணனின் பாட்டனாருமான புலத்திய முனிவர் தமிழ்மொழியில் எழுதிய நுல்கள் ஓலைச்சுவடிகளாக கிடைக்கப் பெற்றுள்ளன.

1. கற்பம் முதல் காண்டம்- 100

2. கற்பம் நடுக் காண்டம்- 100

3. கற்பம் கடைக் காண்டம்- 100

4. வைத்திய வாதம்- 1000

5. வாத சூத்திரம்- 300

6. வாதம்- 100

7. வைத்தியம்- 100

8. வழலைச் சருக்கம்- 13

புலத்திய முனிவர் அகத்தியரால் "பிரம்ம யோகி' என அழைக்கப்பட்டவர்.

yyy

புலத்திய முனிவரும், அவரின் பேரனான இராவணனும் தமிழர் பகுதியைச் சேர்ந்த புலத்திய (வண்ணார்) இனத்தைச் சேர்ந்தவர்கள்.

குறுந்தொகை, அகநானூறு போன்ற பழமையான தமிழ் நூல்கள்மூலம் "புலத்தி யன்' என்ற சொல் அழுக்குத்துணிகளை வெளுத்துத் தரும் தொழில் செய்பவர்களையே குறிக்கிறது என்பதை அறியமுடிகிறது.

குறுந்தொகை பாடல் வரி- 330-1-ல் "நலத்தகை புலத்தி பசை தோய்த்தெடுத்து' (பசை- அழுக்கு; தோய்த்தல்- துவைத்தல்) என்று கூறப்பட்டுள்ளது.

நாட்டு மக்களின் நலன்கருதி புலத்தி இனத்தைச் சேர்ந்த பெண்கள் ஆடைகளில் படிந்து ஒட்டியுள்ள அழுக்கினை (பசை) துவைத்து, உலர்த்திக் கொடுத்தார்கள் என கூறப்படுகிறது.

அகநானூறு பாடல் வரி 386-6-70-ல் "பூந்துகில் மெல்விரல் பெருந்தோள் புலத்தி' என்று கூறப்பட்டுள்ளது.

மங்கையர் அணியும் பூவின் இதழ்களைப் போன்ற மென்மையான ஆடைகளில் படிந்த அழுக்கினை (பசை) உயர்ந்த, வலிமையான தோள்களை உடைய "புலத்தி' இனத்தைச் சேர்ந்த பெண்மகள் தன் மெல்லிய விரல்களால் தோய்த்துத் தந்தாள் என கூறப்பட்டுள்ளது.

தமிழ் மொழியில் "புலத்தி' என்ற சொல் துணி வெளுக்கும் தொழிலைச் செய்யும் இனப்பெண்களையும், "புலத்தியன்' என்ற சொல் அந்த இனத்து ஆண்களையும் குறிப் பிடுகிறது.

புலத்திய முனிவரின் பெயர் அவர் வம்ச முன்னோர்கள் செய்த தொழிலைக்கொண்டு வழங்கப்பட்டுவருகிறது.

அகத்தியர்: புலத்தியனே, தமிழ் மக்களி டையே சாதிப் பிரிவென்பது, அவரவர் செய்யும் தொழில், உபதொழில்களைக் கொண்டு பிரித்துக் கூறப்பட்டதே தவிர, பிறப்பாலோ, கடவுளாலோ, மதத்தாலோ, சைவத்தமிழ்ச் சித்தாந்த அடிப்படையாலோ அல்ல.

வடபுலத்து சனகாதி முனிவர்கள் கூறிய ஆதிவேத நூல்களில்கூட, கடவுள், மதம், சாதி இனப் பிரிவுகள் பற்றி எதுவும் கூறப் படவில்லை. பிற்காலத்தில் வாழ்ந்த மதகுரு மார்கள் தங்கள் சுயநலத்திற்காக கடவுள்களை உருவாக்கி, ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு மதம், அந்த மதத்திற்குள் பலவிதமான சமயப் பிரிவுகள், அந்த சமயங்களுக்கென தனித்தனி சம்பிரதாயச் சடங்குகள் என உருவாக்கிக் கொண்டார்கள்.

வடபுலத்து வேதசாஸ்திரங்களிலுங்கூட, மக்கள் செய்யும் தொழிலை வைத்தே சனாதன சாதிப்பிரிவுகளை உருவாக்கி மக்களைப் பிரித்து வைத்தார்கள்.

வடபுலத்து மக்களும் அவரவர் செய்யும் தொழில்களால்தான் இனம் பிரித்து வைக்கப்பட்டார்கள்.

இந்த பூமியில் வாழும் மக்கள் அனைவரும் ஒரே இனம்தான். செய்யும் தொழில்கள்தான் வேறு. அனைவரின் ஆன்மாவின் நிலை, செயல், உணர்வுகளும், உருவங்களும் ஒன்றுதான். புரிந்தாயா புலத்தியனே.

புலத்தியர்: பொதிகைத் தலைவனே, கடவுள், சாதி, மதம், உயிர்களின் பிறப்பு இவை மனிதர்களால் இடையில் உருவாக் கப்பட்டதுதானே தவிர, இயற்கையில் பூமி தோன்றும்போதே உண்டானதல்ல என்ற உண்மை விளக்கத்தை அறிந்தேன்; தெளிந்தேன்.

வாசி யோகம்

ஒருவர் தன் வலது கையைத் தன் நாசிக்கு நேராக நிறுத்தி, தன் இரண்டு கண்களாலும் வலது கையில் நாடி துடிக்கும் இடத்தை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தால், வலது கை பருமன் குறைந்து, துரும்புபோல் சிறியதாக கண்ணிற்குத் தெரியும். இவ்வாறு சிறியதாகத் தோன்றினால் சமீபத்தில் மரண தோஷமில்லை.

அவ்வாறு துரும்பு போன்று கை சிறிதாகத் தோன்றாமல், கையின் அளவு அப்படியே தெரிந்தால் மரணம் அல்லது மரணத்திற்கு ஒப்பான கண்டம், கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும்.

பார்வையில் கை சிறியதாகத் தோன்றி பின்பு இருளாகத் தோன்றும். அதன்பின் இருள் மறைந்து நன்கு வெளிச்சமாக, ஒளியுடன் பிரகாசமாகத் தோன்றும். இதுபோன்று வலது கையைப் பார்ப்பதை, தொடர்ந்து பயிற்சி செய்து வருபவர்கள் படிப்படியாக சித்தியடைந்து, அந்த பிரகாசமான வெளிச்சத்தில் நிறைய அற்புதக் காட்சிகளைக் காண்பார்கள்.

வீட்டுத் தாழ்வார நிழல் அல்லது வெளிப்பகுதிகளிலுள்ள நிழலில் அமர்ந்து கொண்டு, முகம் பார்க்கும் கண்ணாடியை வலக்கையில் வைத்துக்கொண்டு, தனது வலக்கண் கருவிழியை, கருமணிப் பகுதியை மட்டும் கண்ணிமைக்காமல்- மனதில் வேறு சிந்தனை இல்லாமல் ஒரே நிலையில் சுவாசத்தை ஒழுங்குப்படுத்திப் பார்த்துக் கொண்டிருந்தால் கண்ணிலிருந்து நீர்வடியும். அப்படி நீர் வரும்போதும் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தால் முதலில் இருளாகத் தோன்றும். அந்த இருளையே பார்த்துக்கொண்டிருந்தால், அதன்பின் பிரகாசமான வெளிச்சம் தோன்றும். அந்த வெளிச்சத்தில் அநேகவிதமான அற்புதக் காட்சிகளைக் காணலாம்.

இந்த பூமியில் பிறக்கும் அனைத்து மக்களிடமும் இந்த நோக்கு வர்ம சக்தி உள்ளது. ஒருவர் கடவுளை நம்புவராக இருந்தாலும் நம்பாதவராக இருந்தாலும், எந்த மதம், சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்த பார்வையின் சக்தி இயற்கையாகவே அமைந்திருக்கும். இதற்கு மந்திரம், பூஜை, தவம் என எதுவும் தேவையில்லை.

இந்தப் பார்வை சக்தியை "நோக்கு வர்மம்' என கூறுவார்கள். இதன்மூலம் மனிதர் கள், மிருகங்கள், பிராணிகளை வசியப் படுத்தலாம். எலுமிச்சை போன்ற பொருட் களைத் தன் எண்ணப்படி ஓடவிடலாம். உயரே எழும்பச் செய்யலாம். பொருட்களை வளைக்கலாம். இதுபோன்று இன்னும் அநேக வேலைகளைச் செய்யலாம். காற்றைக் கட்டினால் மனம் கட்டுப்படும்.

"பாடினதோர் வகையேது சொல்லக் கேளு

பாரத புராண மென்ற சோதி யப்பா

நீடியதோர் ராவணன்தான் பிறக்க வென்றும்

நிலையான தசரதன்கை வெல்ல வென்றும்

நீடியவோர் ராசனென்றும் முனிவ ரென்றும்

நிறையருள் பெற்றவரென் றுந்தேவ ரென்றும்

ஆடியதோர் அரக்கரென்றும் மனித ரென்றும்

பாடினார் நாள்தோறும் பகையாய் தானே.'

(அகத்தியர்)

சித்தரைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்.

(மேலும் சித்தம் தெளிவோம்)