சிவபெருமானின் ஆழ்ந்த பக்தர்களை 63 நாயன்மார்கள் என்போம். அவர்களில் பெண்களும் உண்டு. அவர்களுள் சிலர் சிவபெருமானைப் போற்றிப் பாடினர். மகாவிஷ்ணுவை ஆழ்ந்து பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். ஆண்டாள் என ஒரு பெண்பக்தையும் உண்டு.

நமது நாடு கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, காவிரி என பல புண்ணிய நதிகள் நிறைந்த நாடாகும். கும்பமேளா, புஷ்கரம் போன்ற விழாக்கள் நடக்கின்றன. தமிழ்நாட்டில் இரண்டு புனித நதிகள் என்றால் காவிரியையும் தாமிரபரணியையும் குறிப்பிடலாம். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் புஷ்கரத் திருவிழா தாமிரபரணியாற்றில் மூன்று வருடங்களுக்குமுன்பு கொண்டாடப் பட்டது.

vishnu

ஸ்ரீமத் பாகவதம், தாமிரபரணி ஆற்றங் கரையில் உன்னத பாகவதோத்தமர்கள் தோன்றுவார்கள் என குறிப்பிடுகிறது. பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், மதுரகவி யாழ்வார் ஆகியோர் உதித்த பெருமை இதற்குண்டு. ஆதிசேஷ, லட்சுமண, ராமானுஜ புனரவதாரமான மணவாள மாமுனிகளின் அவதாரமும் அங்கு தானே நிகழ்ந்தது!

Advertisment

ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தம் திராவிட வேதம், தமிழ் வேதம் என்று குறிப்பிடப்படுகிறது. இவற்றில் நம்மாழ்வார் 1,296; திருமங்கையாழ்வார் 1,253; பெரியாழ்வார் 473; மற்ற ஆழ்வார்கள் 870 என 3,892 பாக்கள் செய்தனர். ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி 108 பாக்கள். ஆக மொத்தம் 4,000 துதிகள். இவற்றுள் மூன்றாவதாக அதிக பாடல்கள் பாடியவர் பெரியாழ்வார். அவரது அவதார நாள் ஆனிமாத சுவாதி நட்சத்திரமாகும். இந்த சமயத்தில் அவரைப் பற்றி சற்று சிந்திப்போமா...

பெரிய திருவடி எனப்படும் கருடனின் அம்சமாக, ஸ்ரீவில்-லிபுத்தூரில் பாகவத சம்பிரதாயத் தைத் தழுவிய அந்தணர் குலத்தில் முகுந்தாச்சாரி யார்- பதுமையார் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர்.

ஸ்ரீ வல்லபன் என்னும் பாண்டிய மன்னன் காலத்த வர். கிபி 690 முதல் 775 வரை 85 ஆண்டுகள் வாழ்ந்த வர். விஷ்ணுசித்தர் என்னும் பெயர் கொண்டவர்.

Advertisment

ஸ்ரீவில்லிபுத்தூரில் பூந்தோட்டம் அமைத்து, பூஞ்செடிகளை வளர்த்து பூக்களைக் கொய்து மாலைகட்டுவது, பெருமாள் பூஜைக்குச் சேர்ப்பது போன்ற புஷ்ப கைங்கர்யம் செய்துவந்தார். அந்த பூந்தோட்டத்தில் துளசிமாடத்தில் உதித்தவள்தான் கோதை நாச்சியார் எனும் ஆண்டாள்.

பெரியாழ்வார் திருமொழி எனும் 461 பாசுரங் கள், கண்ணன் பிறந்ததுமுதல் கோகுல பிருந்தாவனத் தில் வசித்ததுவரை விவரிக்கும். ஒரு அன்னை போன்ற பாவனையில் இவற்றைப் பாடியுள்ளார் பெரியாழ்வார். அவற்றில் ஈர்க்கப்பட்ட ஆண்டாள் கண்ணனையே கணவனாக அடைய, மார்கழி மாதம் அதிகாலையில் பாவைநோன்பு நோற்று, அரங்கனின் ஆணைப்படி மணப்பெண்ணாகச் சென்று அரங்கனுக்குள் ஐக்கியமானாள்.

எனவே, பெரியாழ்வார் அரங்கனுக்கு மாமனார் என்னும் உறவானார். பெரியாழ்வார் கருட அம்சம் கொண்டவர். கருடன் எப்போதும் பெருமாள் கோவில்களில் பெருமாளுக்கு எதிரே கைகூப்பிய நிலையில் இருப்பவர். வில்லி-புத்தூரில் மாமனாரான பெரியாழ்வார் (கருடன்) மாப்பிள்ளை அருகிலேயே, மறுபுறம் ஆண்டாளுடன் நிற்கும் கோலம் அதிசயமே.

விஷ்ணு சித்தர் ரங்கநாதருக்கு பல்லாண்டு பாடினார். பொதுவாக பெரியவர்கள், சிறு வயதினரை "சதமானம் பவதி- நூறாண்டுகள் வாழ்க' என்று ஆசிகூறுவது வழக்கம். இவரோ பெருமாளுக்கே பல்லாண்டு கூறியதால் அவர் பெயர் பெரியாழ்வார் ஆயிற்றாம். பெருமாள் கோவில்களில் தினமும் துதிக்கப்படுவது இந்த திருப்பல்லாண்டே. (இதனையடுத்து சேந்தனாரும் சிவபெருமான்மீது பல்லாண்டு பாடியுள்ளார்.)

பெருமாளுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்வதிலேயே ஆழ்ந்தார் பெரியாழ் வார். வேதம், உபநிடதம் போன்ற யாவற்றையும் அவர் கற்கவில்லை. இந்நிலையில் பாண்டிய நாட்டு அரசன் வல்லபதேவன், "பரமபத மடைய வேதப் பொருள் உரைப்பவருக் குப் பரிசு' என்று பறைசாற்றினான். இவரோ வேதம் கற்றவரில்லை. ஆனால் பெருமாளே அவர் கனவில் தோன்றி, "அரசனுக்கு வேதப் பொருளை உரை' என அருளினார். வியந்த விஷ்ணுசித்தர் மறுநாள் அரசவை சென்றார். அவர் உள்ளிருந்து வேதப் பொருளை பெருமாள் உணர்த்தினார். அவற்றை அரசனுக்குக் கூறிய விஷ்ணுசித்தர், "இறுதியில் ஸ்ரீமன் நாராயணனே பரம்' என்று கூறி முடித்தார். அரசன் மிக மகிழ்ந்து அவருக்குப் பரிசளித்து, பட்டர்பிரான் என்னும் பட்டமும் தந்தான். பின்னர் அவரை யானைமீது அமர்த்தி ஊர்வலம் செய்வித்தான்.

அப்போது விஷ்ணுசித்தருக்கு பெருமாள் கருட வாகனத்தில் தரிசனம் தந்தார். அதைக்கண்டவர் பெருமாளுக்கு கண்ணேறு (திருஷ்டி) பட்டுவிடக் கூடாதே என்று திருப்பல்லாண்டு எனப் படும் 12 பாசுரங்களைப் பாடினார். அவற்றுள் சில பாடல்களை சிந்திப்போம்.

"பல்லாண்டு பல்லாண்டு

பல்லாயிரத்தாண்டு

பலகோடி நூறாயிரம்

மல்லாண்ட திண்தோள்

மணிவண்ணா உன்

செவ்வடி செவ்வித் திருக்காப்பு.'

"அடியேமோடும் நின்னோடும்

பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு

வடிவாய் நின் வல மார்பினில்

வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு

வடிவார் சோதி வலத்துறையும்

சுடராழியும் பல்லாண்டு

படைபோர்க்கு முழங்கும் அப்

பாஞ்ச சன்யமும் பல்லாண்டே.'

எம்போன்ற அடியார்களுக்கும், சுவாமி யான தங்களுக்கும், தங்கள் வலமார்பில் விளங்கும் மகாலட்சுமித் தாயாருக்கும், வலக்கையில் ஒளிரும் சக்கரத்திற்கும், போரில் வெற்றிமுழக்கம் செய்யும் சங்குக்கும் மங்களம்.

"நாடும் நகரமும் நன்கறிய

நமோ நாராயணா என்று பாடும்

மனமுடைய பத்தருள்ளீர்

வந்து பல்லாண்டு கூறுமினே.'

பிற நாட்டிலும் நகரத்திலும் உள்ளவர் கள் உங்கள் நன்மையை அறிந்து கொள்ளும் படி, நமோ நாராயணா எனப் பாடும் அன்பர் களோடு சேர்ந்து பல்லாண்டு பாடுங்கள்.

"நல்வகையால் நமோ நாராயணா

என்று நாமம் பல பரவி

பல்வகையாலும் பவித்திரனே

உன்னைப் பல்லாண்டு கூறுவனே.'

எனக்கு நன்மை உண்டாகும்படி நமோ நாராயணா என்று சொல்ல, உன்னுடைய பல திருநாமங்களைத் துதிசெய்து மங்களா சாசனம் செய்கிறேன்.

"நல்லாண்டென்று நவின்றுரைப்பார்

நமோ நாராயணா என்று

பல்லாண்டும் பரமாத்மனைச்

சூழ்ந்திருந்தேத்துவார் பல்லாண்டே.'

இந்த திருப்பல்லாண்டை, நமக்கு நல்லகாலம் வந்ததென்று சொல்பவர், மறுமை யில் பரமபதமடைந்து அங்கும் திருமாலைப் போற்றிப் பல்லாண்டு பாடுவர்.

மனதிற்கு இதமான பதிகங்கள். அரசன் கொடுத்த வெகுமதியைக் கொண்டு வில்-லிபுத்தூர் பெருமாள் கோவிலைக் கட்டினார் என்பர். அடுத்து, திருமொழி பற்றிக் காண்போம்.

திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் திருமொழி 473, நாச்சியார் திருமொழி 143, பெருமாள் திருமொழி 105, பெரிய திருமொழி 1,084 என 1,805 பாடல்கள் உள்ளன.

பாண்டிநாட்டு 18 பெருமாள் தலங்களில் திருக்கோட்டியூரும் ஒன்று. பாண்டிய மன்ன னின் அமைச்சராகவும் புரோகிதராகவும் இருந்த செல்வநம்பி என்பவர் விஷ்ணு சித்தரின் நெருங்கிய தோழர். அவரைக் காண திருக்கோட்டியூர் சென்றார் பெரியாழ்வார்.

அன்று சௌமிய நாராயணப் பெருமாள் கோவி-லில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட் டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதைக் கண்ட விஷ்ணுசித்தரின் மனம் "அவ்வூரே ஆயர்பாடி- அதுவே ஆயர்பாடி உற்சவம்' என்று எண்ணியது. அப்போது இந்த 473 பாடல்களைச் (திருமொழி) செய்தார். தன்னை யசோதையாகவே நினைத்து, கண்ணனின் பாலபருவ குண லீலாவினோதங் களைப் பாடினார். இதற்கு மாத்ரு பக்தி என்று பெயர்.

திவ்யப் பிரபந்தம் அனைத்துக்கும் உரைசெய்தவர் பெரியவாச்சான் பிள்ளை.

இந்தத் திருமொழியில் முதல் நான்கு பாடல்களுக்கு அவரது உரை கிடைக்காததால் அதை மணவாள மாமுனிகள் செய்தாராம். திருமொழி என்றாலே வேதம் எனப் பொருள். இரண்டாவது திருமொழி 21 பாசுரங்கள். இவை பன்னிரு திருநாமப் பலன்கூறும் பாடல்கள்.

பிள்ளைத்தமிழ் என்பது பிற்காலத்தில் தோன்றிய இலக்கியமாகும். அதற்கு முன்னோடி விஷ்ணுசித்தர் என்னும் பெரியாழ்வாரே. பிறப்பு, திருமேனி அழகு, தாலாட்டு, அம்புலி, செங்கீரை, சப்பாணி, தளர்நடை, அண்மையில் வருகை, புறம் புக்கல், அம்பூச்சி காட்டல், அம்மம் உண்ணல், காதுகுத்தல், நீராட்டம், குழல்வாரல், பூச்சூடல், காப்பிடல் என்பன இவற்றில் வரும். இவற்றைக் கொண்டு பல லீலைகளை எழுதியுள்ளார்.

கண்ணனின் குறும்புத்தனங்களால் தொல்லையை அனுபவித்த ஆய்ச்சியர் கூறியவை, கோபியர்கள் கண்ணனையே கணவ னாக அடையவேண்டுமென்று பிரார்த்தனை செய்த நிலைகள் ஆகியவற்றையும் சிந்தித்தார்.

ராமாவதாரத்தையும் பாடியுள்ளார். சீதை ஏகாந்தமாக இருந்தபோது, ராமபிரான் மல்லிகை மாலையால் சீதையைக் கட்டியதாக ஒரு புதிய செய்தியை அதில் கூறுகிறார்.

19 திவ்ய தேசங்களைப் பற்றிப் பாடியுள்ள விஷ்ணுசித்தர், அவர் வாழ்ந்த வில்லி-புத்தூர் வடபத்ரசாயி திவ்யதேசம் பற்றிப் பாடவில்லை. வினோதமே!

வைணவ சமயத்தில் பெருமாளைக் காட்டிலும் அவர் அடியார்களுக்குப் பெருமை அளிக்கப்படும். "அடியார்க்கும் அடிமை என- கேசவா, புருஷோத்தமா, கிளர் சோதியாய் குறளடி என்று பேசுவார் அடியார்கள் எம்தன்னை விற்கவும் பெறுவார்களே' என்று பாடுகிறார். அதாவது பகவான் திருநாமம் கூறும் அடியார்களுக்கு அடியேனாகும் நெறியை உணர்த்துகிறார்.

கோதை ஆண்டாளுக்கு கிருஷ்ணபக்தி, கண்ணனே தன் கணவன் என்ற ஆழ்ந்த உந்துதலைப் புகட்டி, ஸ்ரீரங்கநாதருக்கு மாமனாரானவர், கடைசி நாட்களில் திருமாலி-ருஞ்சோலையில் தங்கி வழிபட்டு பரமபதமடைந்தார்.

பெரியாழ்வார்மீது பாண்டிய பட்டர் அருளிய துதியுடன் இந்தக் கட்டுரையை நிறைவுசெய்வோம்.

"பாண்டியன் கொண்டாட பட்டர்பிரான்

வந்தானென்று வேண்டிய சங்கெடுத்தூத-

வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து

கிழியறுத்தான் பாதங்கள் யாமேடை மற்று.'

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.