உண்மையை உரைக்கும் ஓலைச்சுவடிகள்!
அடிகளார் மு. அருளானந்தம்
தேவையான நேரத்தில், தேவையான உணவு உற்பத்தி செய்வதற்கு, தேவையான விதைகளை நேர்த்திசெய்து விளைவிக்கும் திறனை "வேள்' எனவும், இதனைத் திறம்படச் செய்தலை "வேளாண்மை' என்றும் அழைத்தனர் மருதநில மக்கள்.
அங்கம்மாள்
வேளாண்மையில் சிறந்த பகுதிகளில் பல தொழில்களும் வளர்ந்து, நகர நாகரிகம் உருவானது. அந்த நாகரிகத்தைக் கடைப்பிடித்த மக்கள் பெண்கள் நலனில் அதிக கவனம் செலுத்தினர். பெண்களுக்கு உடல்நோய், உளநோய், திருமண வாழ்வியல் அச்சம் ஆகிய மூன்று நோய்களும் வரக் கூடாது என்றெண்ணினர். இவற்றை சரிசெய்வதற்கு, நகரத்தில் அனுபவம்மிக்க மூத்த தாயானவள் வளரிளம் பெண்களில் பூப்படையாதோருக்கு, வெற்றிலையோடு தம்பலப்பொடியைச் சேர்த்துக்கொடுத்தும், உடல் பூரிப்படைவதற்கு கிளர்ச்சிக்காயோடு சேர்ந்த கருஞ்சீரகத் தைலத்தைப் பூசியும், திருமணக் காலத்தில் காய்ச்சல், வாய்ப்புண், வாய்நாற்றம் போன்றவை வராமல் இருப்பதற்கு பனஞ்சர்க்கரையோடு அதிமதுரப்பொடியைச் சேர்த்துக் கொடுத்தும், பூஞ்சைத் தேமல் வராமல் இருப்பதற்கு வசம்பு, பாசிப்பருப்பு, கஸ்தூரி மஞ்சள் பொடியினை சேர்த்துப் பூசியும், மலச்சிக்கல், மூலம் வராமல் தடுப்பதற்கு அரசம்பட்டை சேர்ந்த குங்குலிய வெண்ணெய் கொடுத்தும், சிறுநீர்த் தாரையை சுத்தப்படுத்துவதற்கு சீந்தில் சர்க்கரையும், தாய்ப்பால் ஊறிட முப்பிரண்டை கசாயம் கொடுத்தும், உடல் வலுப்பெற கருநெல்லி, கருநாவல், இலந்தை சேர்த்த லேகியம் கொடுத்தும் வந்திருக்கி றாள். உடல் உள்ளுறுப்புக்களைச் சீராக்குவதற்காக இதுபோன்ற 51 வகையிலான மருந்துகளை அவள் கற்றுக்கொடுத்தாள். இதுமட்டுமல்லாமல், தன் உயிரைக்காட்டிலும் மேலான கற்பு மாண்பினை மிகவும் வலியுறுத்திக் கற்றுத் தந்தாள். இவ்வாறு தனது உடல் அங்கங்களை ஆளுமை செய்வதற்குக் கற்றுத்தந்த ஆதித்தாயானவள் "அங்கம்மாள்' என போற்றி அழைக்கப்பட்டாள்.
வாலை குருநாதன்
வாலைப் பருவத்திலிருந்தே வீரம், நுண்ணறிவு, பேராண்மை போன்றவற்றை ஆண்களிடம் வளர்த்தெடுப்பதற்கு, அனுபவப் பயிற்சியளித்த ஆதித்தந்தையை "வாலை குருநாதன்' என்றழைத்தனர்.
அங்கம்மாள் மற்றும் வாலை குருநாதனின் வாழ்வு நிறைவடைந்ததும், அவர்களது உருவங்களைக் கல்லில் செதுக்கி ஆலயம் அமைத்து, ஆண்டுதோறும் குளிர்காலம் முடியும் நாளான மாசி மாத அமாவாசை திதியன்று பொங்கலிட்டு வழிபட்டனர்.
இவ்வழிபாட்டின்போது மருதநில மக்களின் வாழவியலை 21 அங்கங்களாகப் பகுத்து, அத்துறைகளில் பேருதவியாக இருந்து மறைந்த பேராண்மை மிக்கவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதத்தில் 21 தலைவாழை இலை போட்டு, அதில் அறுசுவை உணவு படைத்து, பந்தியிட்டுப் பூஜை செய்து வழிபாடு நடத்தினர். இதுவே மருதநில மக்களின் முதல் உருவ வழிபாடாகும்.
மருதநாயகம், சோனை முத்தையா!
பின்னாளில் மேற்கண்ட வாலை குருநாதரால் உருவாக்கப்பட்ட, ஒப்பற்ற, மனிதநேயம்மிக்க பேராண்மை படைத்தவர்களில் ஒருவனைத் தலைவனாக்கி "மருதநாயகம்' என்று பெயரிட்டு, தங்களை வழிநடத்தச் செய்தனர்.
அவனுடைய சாதனை மிகுந்த வாழ்வு நிறைவுற்றபின், அவனைப் போலவே கம்பீரமும் பேரழகும் கொண்ட, வண்ணம் தீட்டப்பட்ட சுதைச் சிலைகளை உருவாக்கி, "சோனை முத்தையா' என்று பெயரிட்டு தெய்வமாக்கி வணங்கினர்.
ஆறுவகை கடல் முத்துக்களில் "சோனைமுத்து' என்பது மிக உயர்வான வகையைச் சேர்ந்தது. முதன்முதலில் மனித இனம் பயன்படுத்தியவை ரத்தினமும், முத்தும், சங்கு வளையல்களுமே ஆகும். பிறகுதான் நவரத்தினங்கள் கண்டறியப்பட்டன. இவற்றில் முத்து மட்டுமே கடலிலிருந்து எடுத்தவுடன் செயற்கையாகப் பட்டை தீட்டப் படாமல், அப்படியே பயன்படுத்தக்கூடியது. இந்த முத்து வகைகளில் ஒன்றான சோனை முத்துதான் மருநிலத் தலைவனுக்கு ஆபரணமாக அணிவிக்கப்பட்டது.
முத்து என்ற சொல் சுயம்பு, ஆதி என பொருள்படுகிறது. மருதநில மக்களுக்கு முத்து என்றால் பழம்பெருமை வாய்ந்த உயர் பொருளாகும். அதனாலேயே தமிழ்க்கடவுள் முருகனின்மீதான பக்தியில், முத்தையா, முத்துக்குமரன் என்று அழைப்பதுண்டு. சோனை முத்தையா கோவிலைச்சுற்றி பெண்களுக்குத் தேவையான 51 வகையிலான மூலிகை மருந்துச்செடிகளை வளர்த்துப் பாதுகாத்து வந்தனர். ஏனென்றால், நோய் எது வானாலும் மூலிகைச் செடியைத் தேடி அலைய வேண்டியதில்லை. சோனை முத்தையா கோவிலுக்குச் சென்றாலே கிடைத்துவிடும் என்ற நிலையை ஏற்படுத்தியிருந்தனர்.
காராளன்... ஊர்க்காவல் ஐயனார்!
கார்+ஆளன்=காராளன் எனப்படுபவன், மழையை (கார்) ஆளக்கற்றுக்கொண்டவன் (ரஹற்ங்ழ் ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற்) ஆவான். இவன், ஆற்றுச்சமவெளி இல்லாத, உயரமில்லாத நீண்ட மலைத்தொடர் அடிவாரத்தில் வசித்து வந்த நீராளுமைப் பேரறிவாளன். மழைக் காலத்தில் மலைத்தொடரின் உச்சியிலிருந்து வடிகின்ற நீரானது இயற்கையாகவே பல சிறிய நீர்த்தேக்கங்களை உருவாக்கிவிடும். இவற்றையெல்லாம் ஒன்றாக இணைத்து, அதைச் சுற்றி ஒரு நீண்ட மண் கரையை எழுப்பி, பெரிய ஏரிகளையும், கண்மாய்களையும் உருவாக்கி னான் காராளன். ஏரிகளுக்கும் கண்மாய்களுக் கும் நடுவிலுள்ள மண் கண்டங்களை வெட்டிக் கரையில் சேர்த்து பலப்படுத்தினான்.
அந்தக் கண்மாயும் ஏரியும் மழைக்காலங்களில் பெருகியபின், அவற்றிலிருந்து தேவையான நேரத்தில், தேவையான அளவு நீரை வெளி யேற்ற உதவும் "மடை' என்ற மிகச்சிறந்த உப கரணத்தை முதன்முதலில் கண்டறிந்து பயன் படுத்தியவன் காராளன். இவன் ஓரிடத்தில் ஏரியை உருவாக்குவதற்கு முன்பாக, மழைக் காலத்தில் இயற்கையாக நீர் பெருகும் தடாகத்தில் எலுமிச்சம்பழங்களை மிதக்க விடுவான். எந்தெந்த இடங்களில் அந்த எலுமிச்சம்பழங்கள் சுழன்றுகொண்டிருக் கின்றனவோ, அந்தந்த இடங்களை மடை களை உருவாக்கும் இடங்களாகக் குறித்துக் கொள்வான். அப்பழங்கள் ஓரிரு நாட்களில் ஓரிடத்தில் ஒதுங்கி நிற்கும். அந்தந்த இடத்தைக் கண்மாய்க்கரையின் கடை எல்லையாக வைத்துக்கொள்வான்.
கண்மாய் மற்றும் ஏரியை உருவாக்கியபின், மழைக்காலத்தில் அவை பெருகியதும் மிகுதியாக உள்ள நீர் தானாகவே வெளி யேறும் விதத்தில், "கழுங்கு' என்ற அற்புதமான கட்டுமான அமைப்பை ஏற்படுத்தி உலகுக் குக் காட்டியவன் காராளனே. அவன் உருவாக்கிய ஏரி மற்றும் கண்மாய்களில் அதிக ஆழமுள்ள, நீர்க் கொள்ளளவு அதிகமாக இருக்கும் இடத்தில் கரையை அகலப் படுத்தி உறுதியாக்கி, கரை உடையாமல் பாதுகாப்பிற்கு ஊர்க்காவல் ஐயனார் என்ற தெய்வத்தை அங்கு நிறுவினான். அந்தக் கோவிலுக்கு எதிரில் குடியிருப்புப் பகுதி எதுவும் இருக்கக்கூடாது என்ற நியதியை ஏற்படுத்தினான். ஏனென்றால், நீர் நிறைந்து கண்மாய் உடைந்தால், ஊர் மக்களைக் காப்பாற்ற முடியாத அளவுக்கு அந்த இடத்தில் நீர்க் கொள்ளளவு அதிகமாக இருக்கும் என்பதால்தான். கரை உடைந்து ஊரை ழித்துவிடக்கூடாது என்பதற்காகவே அங்கே அகலமான கோவிலைக் கல்லால் கட்டி னான். அக்கோவிலின் நடுவே, சிலை வடிவில் தங்களின் தந்தையாக இருந்து, வாழ்வுக்கு ஆதாரமாக விளங்கும் நீரைக் காத்து வருப வர் என்பதால், அந்த தெய்வத்துக்கு நீர்காத்த ஐயன் என்று மக்கள் பெயரிட்டனர்.
பெரும்பொழுது... வள்ளுவன்!
அந்தக் கோவிலுக்கு முன்பாக காலக்களி என்ற கற்றூணை நிறுவி, அதன் மேற்கு திசையில் கோவிலின் கிழக்குச்சுவற்றில், சுண்ணாம்பினால் வெண்ணிறக் கோடு களையும், செம்மண்ணால் சிவப்புநிறக் கோடு களையும் 6 + 6 என்ற விகிதத்தில் தீட்டினர். அதில், காலக்களியின் நிழலானது கோவிலின் வடக்கு முனையிலிருந்து தெற்கு முனைக்கும், பிறகு தெற்கிலிருந்து வடக்கு முனைக்கும் ஆண்டுக்கு ஒருமுறை கடந்து செல்லும். அந்த நிழல் ஒரு சிவப்பு, ஒரு வெள்ளைக் கோட்டைக் கடந்து செல்லக்கூடிய காலத்தை "ஒரு பெரும்பொழுது' என வரையறுத்தனர். இவ்வாறு ஒருவருட காலத்தை, ஆறு பெரும்பொழுதுகளாகப் பிரித்தனர். இதிலிருந்து பருவகாலங்களைக் குறிக்கும் "வள்ளுவம்' என்ற காலக்கணக்கு தொடங்கலாயிற்று. இக்கணக்கினை ஆய்வுசெய்து, அதன் பலனை மக்களுக்குத் தெரிவிக்கும் பணியினை மேற்கொள்பவர் "வள்ளுவர்' என்று அழைக்கப்பட்டார்.
மடைக்கருப்பன், காலாடிக்கருப்பன்!
கண்மாய் மடைகளைக் கையாளும் திறன் யாருக்கும் எளிதில் அமைந்துவிடாது. அதனால், மிகுந்த விழிப்புணர்வும், நுண்ணறிவும், நீரில் மூழ்கிப் பணிசெய்யும் திறனுடையோரை மட்டுமே மடை திறந்து மூடும் பணிகளில் இரவு- பகலாக ஈடுபடுத்தினர். இவர்களுக்கு "மடையர்' என்று பெயரிட்டனர். இம்மடையிலிருந்து திறக்கப்படும் நீர் நீண்டதூரத்திற்கு, விவசாய நிலங்களுக்கு ஒரே வேகத்தில் (same and constant water current) செல்லும்படியாக வாய்க் கால்களுக்கு நடுவில் தன் கால்களை ஆட்டி நீரோட்ட வேகத்தை ஆராய்ந்து, அதற்கேற்றவாறு பள்ளம், மேடுகளைச் சீர்செய்தனர். வாய்க்கால்களைச் சீர்செய்யும் அறிவியலார், "காலாடி' என்று அழைக்கப்பட்டனர். காலாடி களின் மறைவுக்குப் பிறகு, அவர்களின் நினைவாக, மடைக்கருப்பன் மற்றும் காலாடிக் கருப்பன் என்ற பெயரில் இரு கற்சிலைகளை, ஐயனார் கோவிலின் இடப் புறத்திலும் வலப்புறத்திலும் வைத்து வழிபட்டனர்.
மேற்சொன்ன முறையில் பயிர்த்தொழில் செய்தவர்களை "காராள வேளாளர்' என்றழைத்தனர். இதுபோன்ற மடைகளின் மிகப்பெரிய தொடர் அமைப்புதான், பின்னா ளில் கல்லணைகளாக உருப்பெற்றன.
(தொடரும்)
தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்