"கருக்கலந்த காலமே கண்டிருந்த காரண

உருக்கலந்த சோதியை தெளிந்துயா னறிந்தபின்

தருக்கலந்த சோதியை தெளிந்துயா னறிந்தபின்

இருக்கிலே இறக்கிலே இரண்டுமற் றிருந்ததே.'

Advertisment

(சிவ வாக்கியர்)

சுந்தரானந்தர்: ஆசானே, ஒரு ஆண்- பெண் உறவால், பெண்ணின் கர்ப்பத்தில் கருவாகி, தாய்தந்த உணவு, உயிரால் உடல் உருவாகி, ஒரு குழந்தை பூமியில் பிறக்கும் வழிமுறைகளை அறிந்தோம். தாயின் கர்ப்பத்தில் வளர்ந்த குழந்தை, தாயைவிட்டுப் பிரிந்து இந்த பூமியில் பிறந்த வுடன், அது தனித்தியங்க அதற்கென்று உடலில் உயிர் வருவதெப்படி?

அகத்தியர்: சுந்தரா, ஒரு குழந்தை தாயிடமிருந்து பிரிந்து இந்த பூமியில் பிறந்த வுடன், தாய்க்கும் சேய்க்கும் உறவுத் தொடர்பு தந்த தொப்பூழ்க் கொடியைத் துண்டித்தவுடன், குழந்தையின் தொப்பூழ்க் கொடிவழியாக அந்த குழந்தைக்குரிய உயிர்க்காற்று அதன் உடம்பினுள்ளே நுழைந்து சென்று, அந்தக் குழந்தையின் இதயத்தை இயக்கி, உடலிலுள்ள ரத்தம், தசை, எலும்பு, நரம்பு, மஞ்ஜை, குடல், குறி, எழுபத்திரண்டாயிரம் நாடி களிலும் பரவிக்கலந்து, உயிர்ப் பினை உண்டாக்குகிறது.

Advertisment

இந்த உயிர்க்காற்று உடலிலுள்ள அனைத்து பாகங்களிலும் பாய்ந்தபின்தான் கண், காது, மூக்கு, வாய், குதம், குறி என அனைத்துப் பாகங்களின் துவாரத்தைத் திறக்கச் செய்கிறது. இதயத்தை இயங்கச்செய்து, மூக்குத் துவாரங்களின்வழியாக சுவாசிக்கச் செய்கிறது. ஒரு குழந்தை தாயைவிட்டுப் பிரிந்து பூமியில் பிறக்கும்போது, அந்தக் குழந்தை சடம்போல அசைவற் றிருக்கும். தொப்பூழ்க் கொடி யைத் துண்டித்து, உயிர்க்காற்று உடம்பினுள்ளே நுழைந்து கலந்தபின்தான் அது உயிர் பெற்று உணர்ச்சிகள் உண்டாகி, அசையவும் கத்தவும் தொடங்கும்.

மனிதன், விலங்கு, மிருகம் என தாயின் கர்ப்பத்தில் வளர்ந்து பிறக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும், "தொந்தி நடுக்குழி தொப்பூழ் வழியாகத்தான்'

உயிர் உடலிலினுள்ளே வரும்.

(காற்று மண்டலத்தில் ஆக்ஸிஜன், நைட்ரஜன், ஹைட்ரஜன், கார்பன்- டை-ஆக்ஸைடு போன்று, பல வித்தியாசமான குணங் களைக் கொண்ட காற்றின் பிரிவுகள் பலவுண்டு. இவை காற்றுமண்டலத்தில் கலந்து தனித்தனியே இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற் றைப்போன்று ஜீவராசிகளின் உயிர்க்காற்றும் காற்று மண்டலத்தில் கண்டுபிடிக்க இயலாமல் உள்ளது.)

சுந்தரானந்தர்: ஆசானே, இந்த உயிர்க்காற்றுதான் ஆன்மாவா?

அகத்தியர்: சுந்தரா, உயிர்வேறு; ஆன்மாவேறு. ஆன்மாவைப் பற்றிப் பின்னர் கூறுகிறேன். இப்போது உயிர்க் காற்றைப் பற்றி அறிந்துகொள்.

இந்த உயிர்க்காற்று உள்ளே வந்து மூக்கின்மூலம் சுவாசம் தொடங்கியவுடன், அதன் தொப்பூழ்க்கொடி துவாரம் அடைக்கப்பட்டுவிடும்.

அவ்வாறு அடைக்கப்பட்டதும் உயிர்க்காற்று உடம்பினுள்ளே அடைபட்டுவிடும்.

சுந்தரானந்தர்: ஆசானே, இந்த உலகில் மனிதன், விலங்கு, மிருகம், பறவைகள், ஊர்வன, நீர்வாழ் பிராணிகள் என ஏராளமான உயிரினங்கள் உள்ளன. இவையனைத்திற்கும் பொதுவான உயிர்க்காற்று உள்ளதா அல்லது வெவ்வேறாக உள்ளதா?

அகத்தியர்: இந்த உலகில் வாழும் மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளுக்கும் அதனதன் உயிர்க்காற்றும், உயிர்க்காற்றின் சுவாசகால அளவும் தனித்தனியாகவே உள்ளன. பொதுவாக, ஒரே காற்றை சுவாசித்து எல்லா உயிர்களும் வாழமுடியாது. உன் உயிர்க்காற்று, உன் சுவாசகால அளவுக் கணக்கு வேறு; என் சுவாச உயிரின் காலஅளவு வேறு. என் உயிர்க்காற்றை சுவாசித்து, என் கால அளவை நீ வாழமுடியாது. உன் உயிர்க்காற்றை சுவாசித்து உன் உயிர்க்கால அளவு நான் வாழமுடியாது.

சுந்தரானந்தர்: ஆசானே, உடம்பினுள்ளே உயிர்க்காற்றின் நிலையையும் செயல்களையும் பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்கள்.

அகத்தியர்: அவரவர் உயிர்க்காற்று, அவரவர் உயிர் நிர்ணயிக்கப்பட்ட காலம்வரை இயங்கி வாழவைக்கிறது. உயிர்க்காற்று, மூக்கின் இடது- வலது துவாரங்களின் வழியாக உடம்பினுள்ளே சென்று இதயத்தையடைந்து, ரத்தத்தில் கலந்து, உடம்பிலுள்ள அனைத்து பாகங் களுக்கும் கொண்டுசேர்த்து, அவை இயங்க உயிர்சக்தியைத் தருகிறது.

மூக்குத் துவாரங்களில் ஒரு நிலையாகச் செல்லும் உயிர்க்காற்று உடம்பினுள்ளே சென்றவுடன், பத்துவிதமாகப் பிரிந்து செயல் பட்டு உடலுறுப்புகளை இயங்கச்செய்யும்.

siddhar

மனிதர்களின் மூக்குத் துவாரங்கள் வழியாக உள்ளே செல்லும் சுவாசக்காற்று, பன்னிரண்டு அங்குல நீள அளவுடன் உள்ளே சென்று, பின் வெளியே வரும்போது நான்கு அங்குல அளவு வருகிறது. எட்டு அங்குலக் காற்று உடம்பின் பாகங்களில் சேர்ந்து அவற்றை இயக்குகிறது.

இனி உடலில் காற்று செயல்படும் நிலைகளை அறிவோம்.

1. உயிர்க்காற்று (பிராணன்)

இது இதயத்திலிருந்து மேல்நோக்கிச் சென்று பசி, தாகங்களை உருவாக்கி, உண்ணும் உணவினை ஜீரணமடையச் செய்கிறது.

2. அபான வாயு

இந்த வாயு மூத்திரம், மலம், சுக்கிலம், சுரோணிதம் போன்றவற்றை குறிகளின் வழியாக வெளியேற்றுகிறது.

3. உதான வாயு

இந்த காற்று கண்டத்திலிருந்து, உண்ணும் பொருட்களை விழுங்கச்செய்து, அதிலுள்ள அன்னரசச் சத்தினை நாடிகளில் சேர்த்து வியாபிக்கச்செய்து, அதனால் உண்டாகும் ஏப்பம், குறட்டைபோன்று சப்தத்தோடு கலந்து குரலோசையை எழும்பச் செய்கிறது.

இந்த உதானன் என்ற காற்று, தூங்கும் போது கண்கள், மூக்கு, வாய், செவிகள், சரீரத்தை மூடிக்கொண்டிருக்கும் "தோல்' என்ற ஐந்து கருவிகளின் இயக்கத்தை நிறுத்தியும், பின் தூங்கி எழுந்தவுடன் அந்த பாகங்களை மறுபடியும் செயல்படவும் வைக்கும்.

4. சமான வாயு

இது உண்ட உணவு ஜீரணித்துப் பெறப் பட்ட அன்னசத்தினை, நாடிகளுக்கு (நரம்புகள்) சமமாகப் பங்கிட்டுத்தந்து, தேகத்தை வளர்க்கிறது.

5. வியான வாயு

இது உடம்பின் எல்லா பகுதிகளிலும் வியாபித்திருந்து, தொடு உணர்ச்சியை உண்டாக்கி வைக்கும். மேலும் உண்ட உணவில் திப்பிவேறு, ரசம் வேறாகச் செய்துகொண்டிருக்கும்.

6. நாகன் வாயு

இது கண்டத்திலிருந்து, வாந்தியை உருவாக்கும். மேலும் கண்களில் சக்தியாக இருந்து, எல்லாவற்றையும் பார்க்கச்செய்யும்.

7. கூர்மன் வாயு

இது கண்கள் சிமிட்டுதலையும், உறக்கம் வந்தபோது கண் இமைகளை மூடவும், விழிப்பு வந்தபோது திறக்கவும் செய்யும்.

8. கிருகரன் வாயு

இந்த வாயு மூக்கிலிலிருந்து குறுகுறுத்து தும்மலை உண்டாக்கும்.

9. தேவதத்தன் வாயு

இது மார்பில் நின்று, கபத்தைச் சேர்த்து, நெட்டியையும், கொட்டாவியையும், சோம்பலையும், விக்கலையும் உண்டாக்கும்.

10. தனஞ்ஜெயன் வாயு

இந்தக் காற்று பெண்களின் கர்ப்பத்திலிருக்கும் பிண்டத்தை வெளியே தள்ளும். மேலும் மரணமடைந்த உடலிலிலிருந்து, சரீரத்தை வீங்கி, வெடித்து, நாற்றமெடுக்கும்படி செய்யும். இந்த தனஞ்ஜெயன் என்ற வாயு, இறந்த உடலை நெருப்பிலிலிட்டு எரிக்கும் வரையில் உடலைவிட்டு அகலாமல் உள்ளேயே இருக்கும்.

இந்த பத்து வாயுக்களும் உடலினுள்ளே திரிந்து செயல்பட்டுக்கொண்டே இருக்கும்.

உயிர்க் காற்றினைப் பற்றிய இன்னும் பல விளக்கங்களைத் தமிழ் ஞானசபையில் நாளை அறிவோம்.

"மோட்சம் பெறுவதற்குச் சூட்சங் கேளு

முன்செத்த பேர்களது குறியைக் கேளு

ஏய்க்கும் குருக்களது குறியைக் கேளு

எல்லோரும் கூடழிந்த தெங்கே கேளு

பேச்சதுவும் மாய்கையப்பா வொன்று மில்லை

பிதற்றுவார் அவரவரும் நிலையுங்

காணார்

கூச்சலது பாடையில் தான்போகும் போது

கூட்டோடு போச்சுதப்பா மூச்சு தானே'.

(அகத்தியர்)

சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!

(மேலும் சித்தம் தெளிவோம்)