28
பாப- சாப- தோஷங்கள் தீர்க்கும் மார்க்கம்!
சித்தர்தாசன் சுந்தர்ஜி
"பறைச்சி யாவதேதடா பணத்தி யாவதேதடா
இறைச்சி தோலெம்பிலு மிலக்கமிட்டிருக்குதோ
பறைச்சி போகம் வேறதோ பணத்தி போகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்துப்பாரு உம்முளே.'
(சிவ வாக்கியர்)
அகத்தியர்: புலத்தியனே, இந்த பூமியில் வசிக்கும் மக்களிடையே ஏராளமான மதங்கள் உண்டு. ஒவ்வொரு மத வேதங்களும், ஒவ்வொரு விதமான கருத்துகளை மக்களிடையே பரப்பிவருகின்றன. வடபுல வேதங்களில் கூறப்படுவதுபோல், கடவுளின் உடலுறுப்பு களிலிருந்து மனிதன் படைக்கப்படுவதில்லை. அவ்வாறு பிறந்திருந்தால் உருவத்திலும் வாழ்வியல் முறைகளிலும் வேற்றுமை காணப் பட வேண்டும். ஆனால் அவ்வாறில்லை.
மனித இனத்தில் பூமியின் எந்தப்பகுதியில் பிறந்திருந்தாலும், அவர்கள் அனைவரும் வாயினால் உண்ணுதல்- பேசுதல், கண்களால் பார்த்தல், காதினால் கேட்டல், மூக்கினால் சுவாசித்து வாழ்தல் என அனைத்திலும் ஒன்றுபோலவே செயல்பட்டு வாழ்கிறார் கள். இதுபோன்று ரத்தம், நரம்பு, எலும்பு அனைத்திலும் மாறுபாடில்லை. பசி, தாகம், போகம், மகிழ்ச்சி, தூக்கம், ஆணின் விந்து, பெண்ணின் கருமுட்டை, மாதவிலக்கு என எதிலும் மனித இனத்தில் வேறுபாடில்லை. இதுவே இயற்கையால் நிர்ணயிக்கப்பட்ட எதிலும், பூமி தோன்றிய நாளிலிருந்து இன்றுவரை நடைமுறையாக உள்ளது.
மதங்கள் கூறும் கதைகளில் ஆண்- பெண் தெய்வங்கள், தேவதைகள் என வானுலகில் வாழ்பவர்களாகக் கூறப்படுபவர்களின் தோற்றம், செயல், உணர்வுகள் என அனைத் தும், மனிதனின் உருவ அமைப்பு, கணவன்- மனைவி, குழந்தைகள், சகோதர உறவுகள், உணர்வுகள் என மனித வாழ்வைப் போன்று தான் கூறப்பட்டுள்ளன. இந்த கதைகளை எழுதி வைத்தவர்கள் மனிதனின் உருவத்தையும், அவன் வாழ்க்கை அனுபவ நிகழ்வுகளையுமே எழுதி வைத்துள்ளார்கள்.
கடவுள், தேவர்கள், தெய்வங்களின் உருவ அமைப்பும், பூமியில் பிறந்து வாழும் மனிதர்களின் உருவ அமைப்பும் ஒன்றுபோல் இருப்பதால், மனிதர்களும் தேவர்களும் ஒரே இனம்தானே தவிர, மனிதர்களுள் உயர்ந்தவன், தாழ்ந்தவன், அந்தணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் என்ற சாதி பாகுபாடு, பிரிவு கிடையாது.
புலத்தியனே, இன்னும் கூறுகிறேன் அறிந்து கொள். இந்த பூமியிலுள்ள மண் பிரிவுகளில் கரிசல் மண், உவர் மண், வெள்ளை மண், செம்மண், மணல், சரல் என பலவகை உண்டு.
இவை ஒவ்வொன்றும் நிறம், குணத்தில் மாறுபட்டுள்ளது.
ஒளி தரும் கற்களில் ஒன்பது வகைக்கும் மேற்பட்ட ரத்தினக்கற்கள் உண்டு. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தைக் கொண்டவை.
பூமியில் பலவகையான மரங்கள் உண்டு. உதாரணமாக, மாமர இன வகையில் புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு போன்ற பல்வேறு சுவை களுடன், பல உருவ அமைப்புடன் மாங்கனி கள் உண்டு. இதுபோன்று எல்லா வகை மரம், செடி, கொடி, தாவரங்களிலும் காய், பழம், அதன் சுவை மாறுபாடுகளுடன் இருப்பதை அறிந்துள்ளோம்.
விலங்கினங்களில் "ஆடு' என்ற ஒரு இனத் தில் வெள்ளாடு, வரையாடு, செம்மறியாடு, பள்ளையாடு, கம்பளியாடு, குறும்பையாடு என பல பிரிவு ஆடுகள், பல உருவில் உண்டு. இதுபோன்று, நாய் இனத்திலும் பலவிதமான உருவ அமைப்புகள் கொண்டவை உண்டு.
மான் இனத்தில் புள்ளிமான், கலைமான் என பல பிரிவுகள் உண்டு. பாம்பு இனத்தில் பல வகை உடல் தோற்றம் கொண்டவை உண்டு.
தேள் இனத்தில் செந்தேள், கருந்தேள், நட்டுவாக்கலி போன்ற பலவகை உண்டு.
பறவையினங்களில் காகம், கிளி, மயில், கழுகு, சிட்டுக்குருவி என இவை ஒவ்வொன்றி லும் வித்தியாசமான உருவ அமைப்புகள் கொண்டவை உண்டு.
பூமியில் மனித இனத்தைத்தவிர, அனைத்து உயிரினங்களிலும், தாவரங்களிலும், மாறுபட்ட தோற்றம் கொண்டவை ஒரே இனத் தில் பல பிரிவுகளாக உள்ளன. ஆனால், இவை உருவில் மாறுபட்டிருந்தாலும் அவற்றின் இனப்பெருக்கம், உணர்வு நிலை, வாழ்வு முறை என எதிலும் மாறுபாடில்லை.
இந்த பூமியில் அனைத்து உயிரினங்களும் இயற்கையின் பரிணாம வளர்ச்சியினால் உருவாகி, அதன்பிறகு அதனதன் இனத்தை அவையே உருவாக்கி, இனவிருத்தி செய்து, தன் இனம் அழியாமல் காப்பாற்றிக்கொண்டு வருகின்றன.
புலத்தியர்: அகத்தியரே, பூமியில் உயிரினங் களின் தோற்றத்தைத் தெளிவுபடுத்தினீர்கள். மனித இனத்தில் "மதம்' என்ற பிரிவு நிலை, யாரால் உருவாக்கப்பட்டது?
அகத்தியர்: இந்த பூமியில் வாழும் மக்கள், அவரவர் பேசும் மொழியின் அடிப்படை யில் தனித்தனி இனமாகக் கூறப்பட்டது. (தமிழ் பேசுபவர்கள் தமிழர்கள் என்பதுபோல், வங்கமொழி பேசுபவர்கள் வங்காளிகள், தெலுங்கு பேசுபவர் தெலுங்கர், குஜராத் மொழி பேசுபவர் குஜராத்தியர் என தங்களைக் கூறிக்கொள்கிறார்கள்). இதுபோல், அவரவர் பேசும் மொழியின் அடிப்படையில் அவர்கள் வசிக்கும் நாட்டுப் பகுதியும் அழைக்கப் படுகிறது.
"மதம்' என்றால் "வெறித்தன்மை', "சுயஅறிவு செயல்படாத நிலை'யைக் குறிக்கும். தமிழில் "பைத்தியம்', "பித்தம்', "மனச்சிதைவு நிலை' என பொருள். யானைக்கு மனச்சிதைவு ஏற்பட்டால் "மதம்' எனப்படும். நாய்க்கு "மதம்' பிடித்தால் "வெறி' எனக்கூறப்படும். மனிதனுக்கு மனநிலை பாதித்தால் அவனை "பைத்தியம்' என கூறுவர்.
சில மனிதர்கள் இந்த பூமியில் இல்லாத- மனித வாழ்வில் நடைமுறையில் இல்லாத, நிரூபிக்க முடியாத, தங்கள் மனதில் தோன்றும் கற்பனையான கருத்துகளைத் தங்களுடன் வாழும் மக்களிடம் கூறி, தாங்கள் சொல்வதை நம்பி ஏற்றுக்கொள்ளும் மக்களின் மனதை மாற்றிவிடுகின்றனர்.
அதாவது, வண்டு இனத்தைச் சேர்ந்த ஒரு குளவி, ஒரு புழுவைக் கொண்டுவந்து தன் கூட்டிற்குள் அடைத்து வைத்து, அந்தப் புழு வைக் கொத்திக்கொத்தி தன்னைப்போன்ற குணமுள்ளதாக மாற்றுவதைப்போல, இவர் கள் தன்னை நம்பும் மக்களிடம் தங்கள் எண்ணக் கருத்துகளைத் திரும்பத் திரும்பக் கூறி, அவர்களை "நம்புங்கள்; நம்புங்கள்' எனக் கூறி நம்பச்செய்து, மனதில் பதிய வைத்து, "மதம்' என்ற வெறியை அவர்களிடம் உருவாக்கி, அவர்களைத் தங்கள் அடிமையாக மாற்றிவிடுகின்றனர்.
இதுபோன்ற செயலால், தங்கள் பேச்சை நம்பும் மக்களை ஒன்றுசேர்த்து, ஒவ்வொரு வரும் அவரவருக்கென்று ஒரு கூட்டத்தைச் சேர்த்துக்கொள்கிறார்கள். இந்தக் கூட்டத் தில் மதம் சம்பந்தமான கருத்துகளைக் கூறுபவரை தலைவனாக ஏற்றுக்கொண்டு, அவர்களை குரு, ஆச்சாரியன் என்றும்; அவர்கள் கூறும் கருத்துகளை ஏற்றுக்கொண்டு, கடைப் பிடித்து வாழ்பவர்களை சீடர்கள், அடியார் கள், பக்தர்கள் என்றும் கூறுகிறார்கள்.
இந்த குருமார்கள், அவரவருக்கென்று ஒரு கடவுளை உருவாக்கிக்கொண்டு, அந்தக் கடவுளைப் பற்றி பல கதைகளைக் கூறி, தங்கள் பெயரால் அல்லது தங்களால் உருவாக்கப் பட்ட கடவுள் பெயரால் மடம், பீடம் என்று ஆங்காங்கே அமைத்துக்கொண்டு, தன்னை நம்பி வரும் மக்களிடம் மதத்தைப் பரப்பவேண்டும் எனக் கூறி பணம், பொருள், சொத்துகளை மடத்திற்கு தானமாகப் பெற்று, தங்கள் வாழ்க்கையை சுகபோகமாக அமைத்துக்கொள்கிறார்கள். இந்த உண்மையை அறியாத மக்கள், இவர்களை கடவுள் என நம்பி எதையெதையோ இழந்து வருகிறார்கள்.
ஒவ்வொரு மதகுருவும் தங்களைப் போன்றுள்ள மற்ற மத குருமார்களையும், அவர்கள் கூறும் கருத்துகளையும் கொள்கை களையும் மறுத்தும், எதிர்த்தும்; அவர்களைப் பின்பற்றும் மக்களையும் எதிரிகளாக எண்ணும்படி தன்னைச் சேர்ந்தவர்களின் மனதில் வெறியை ஏற்படுத்தி, ஒற்றுமையாக வாழும் மக்களை ஒருவரையொருவர் அழிக்கும் செயல்களையும் தூண்டிவிடுகிறார் கள். இதனால் மக்களிடையே பகைமை உணர்வு உண்டாகி, நாட்டில் அமைதிக்குறைவு உண்டாகிறது. இச்செயல்மூலம் ஒவ்வொரு குழுவும், அவரின் சீடர்களும் தங்களையே பெரியவர்களாகக் காட்டிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகின்றன.
இதுபோன்ற மதகுருமார்களின் கபட மான சுயநலக்கொள்கைகளை அறியாத அரசர் களும், இவர்கள் கூறும் கடவுளையும் கருத்து களையும் நம்பி, இவர்கள் பெரிய ஞானிகள், அறிவாளிகள், சக்திமிக்கவர்கள் என ஏற்று, இவர்களை அரச குருவாக, ஆலோசகராக ஏற்றுக்கொண்டு, இவர்கள் கூறுவதையே ஆட்சி, நிர்வாகத்தில் கடைப்பிடித்து செயல் படுகின்றனர். இவர்கள் கூறும் மதக்கொள்கை களைத் தன் நாட்டு மக்களும் கடைப்பிடித்து வாழவேண்டுமென்று அரசாணை பிறப் பிக்கிறார்கள். தன் நாட்டை ஒரு மதம் சார்ந்த நாடாக அறிவித்து, நாட்டு மக்களிடம் பார பட்சமாக ஆட்சி புரிகிறார்கள்.
ஒவ்வொரு மதகுருவும், "எங்களுக்கு மட்டுமே எல்லாம் தெரியும்; நாங்கள் கடவு ளின் தூதர்கள்; நாங்கள் சொல்வதையே நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் அவரவர் குடும்பத்தில் செய்ய வேண்டும். நாங்கள் சொல்லும் கடவுளை, நாங்கள் சொல்லும் முறையில் வழிபாடு செய்யவேண்டும். நாங்கள் சொல்வதை ஏற்று செயல்படாதவர்கள் தங்கள் இறப்பிற்குப் பிறகு நரக லோகத்தை அடைவார்கள். நம்பிக்கையுடன் செயல்படு பவர்கள் சொர்க்கத்திற்கும், கடவுள் வசிக்கும் உலகத்திற்கும் செல்வார்கள். அடுத்து இந்த பூமியில் பிறக்கும்போது, செல்வந்தராகப் பிறந்து வாழ்வார்கள்' என மக்களை பயமுறுத்தி தங்களுக்கு கீழ்ப் பணியவைப்பார்கள்.
நாட்டு மக்கள் அனைவரும் தங்களுக்கு அடிமைகள்; சுயமாக யாரும் சிந்திக்கக் கூடாது; குருமார்கள் சொல்வதையே அரசன் முதலான அனைத்து மக்களும் கேட்டு வாழவேண்டும் என்ற மதவெறிகொண்ட குருமார்களால்தான், பிறப்பால் சமநிலை பெற்ற மனித இனத்தில் மதம், சாதி, உயர்ந்த வன், தாழ்ந்தவன் என்ற பேதம், பிரிவுகள் உருவாக்கப்பட்டன.
புலத்தியனே, இன்று சபை கலையலாம். நாளை மற்ற கேள்விகளுக்கு விடை கூறுகிறேன்.
வாசி யோகம்- மரண காலம் அறிதல் ஒருவருக்கு அவரது மூக்கின் வலப்பக்கத் துவாரத்தின்வழியாக (பிங்கலை) மூச்சுக் காற்று இடைவிடாமல் ஒரே பக்கமாக ஒரு இரவு முழுவதும் ஓடினால், அவருக்கு மூன்று வருடத்தில் மரணம் உண்டாகும்.
இதேபோன்று மூக்கின் இடப்பக்கத் துவாரத்தில் (இடகலை) மூச்சுக்காற்று ஒரே பக்கமாக இரவு முழுவதும் ஓடினாலும் மூன்று வருடத்தில் மரணம் உண்டாகும்.
ஒருவரின் மூக்கின் வலப்பக்கத் துவாரத்தின் வழியாக மட்டுமே சுவாசக்காற்று இரண்டு இரவு, இரண்டு பகல், வலம், இடம் என மாறாமல் வலப்பக்கம் மட்டும் ஓடினால், அவருக்கு இரண்டு வருடத்தில் மரணம் உண்டாகும்.
மூக்கின் வலப்பக்கத் துவாரத்தில் மட்டும் ஒருவருக்கு மூன்று நாட்களுக்கு ஒரே பக்கமாக மூச்சுக்காற்று ஓடினால், ஒருவருடத்தில் மரணம்.
மூக்கின் இடப்பக்கத் துவாரத்தில் மட்டும் மூன்று நாட்களுக்கு ஒரே பக்கமாக மூச்சுக்காற்று ஓடினால், ஒருவருடத்தில் மரணம்.
ஒருவருக்கு சில நாட்கள் தொடர்ந்து இரவு முழுவதும் இடப்பக்கம் மட்டும் சுவாசம் நடந்து, அதேபோன்று மூக்கின் வலப்பக்கத் துவாரத்தில் பகலில் மட்டும் சுவாசம் நடந்தால், அவருக்கு ஆறு மாதத்தில் மரணம்.
வலப்பக்கத் துவாரத்தில் மட்டும் மூச்சுக்காற்று தொடர்ந்து ஒரே பக்கமாக ஒரு இரவு, ஒரு பகல் என ஓடினால், அவருக்கு பதினைந்து நாளில் மரணம்.
"கழித்திடுவார் பாவத்தா லென்று சொல்லும்
கட்டியநால் வேதமாறு சாத்தி ரங்கள்
அழிந்திடவே சொன்னதல் லால்
வே றொன்றில்லை
அதர்மமென்றுந் தர்மமென்று மிரண்டு ண்டாக்கி
ஒழிந்திடுவார் என்றுசொல்லி பிறப்புண் டென்றும்
உத்தமனாய் பிறப்பரென்று உலகத் தோர்கள்
தெளிந்திடுவோர் குருக்க ளென்றுஞ் சீடரென்றும்
சீவனத்துக் கங்கல்லோ தெளிந்து காணே'
(அகத்தியர்)
சித்தரைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!
(மேலும் சித்தம் தெளிவோம்)