பாப- சாப தோஷங்கள் தீர்க்கும் மார்க்கம்!
"வச்சிரத்திற் கோர்பழுது வாய்க்கு மாயினும்
வல்லுடம்புக் கொருகுறை வாய்த்தி டாது
மெல்லக்கட முள்ளவெங்கள் வேத குருவின்
மெல்லடி துதித்துநின் றாடாய் பாம்பே.'
(குரு வணக்கம்)
குரு அகத்தியர் எழுதிய தமிழ் சைவ சித்தாந்தக் கருத்து நூல்களை "அகத்தியம்' என்று கூறுவார்கள். தான் எழுதிய பகுத்தறிவு சம்பந்தமான நூல்களை "பேரகத்தியம்', "சிற்றகத்தியம்' என்று இரண்டு பிரிவுகளாகத் தொகுத்து அமைத்துள்ளார்.
பேரகத்தியம் வரிசையிலுள்ள நூல்களில் மனிதன் முதலான ஜீவராசிகளின் உடல், உயிர், ஆன்மா, உயிர்களின் மரணத்திற்கு முன் நிலை, பிந்தைய நிலை, தன்னையறியும் வழிமுறைகள், உயிரினங்களின் அகத்தின் நிலை, மனிதனுள் அமைந்துள்ள அளப்பரிய ஆற்றல்கள், வாசியோக வாழ்வியல்முறை, மூச்சுப்பயிற்சி, குண்டலினி யோகமுறை, பூரண ஞானம், பஞ்சபூதங்களின் தன்மை, அட்டமாசித்திகளை அடையும் வழிமுறைகள், பிறவி முடித்து மோட்ச நிலையடைய வழிகள் போன்றவற்றைக் கூறியுள்ளார்.
சரீரம், சரீரத்தில் பஞ்சபூதங்களின் செயல்பாடு, நோய், கர்ப்பம், காயகல்ப மூலிகைகள், மூலிகை வைத்தியம், உயிரினங் கள் தோற்றம், மனதின் ஆசை, மாயைகள், அதனால் உண்டாகும் குணம், குணத்தால் உண்டாகும் செயல்கள், அச்செயல்களால் வாழ்வில் உண்டாகும் உயர்வு- தாழ்வு, பாவம்- சாபம் போன்றவை வம்சத்தில் தொடரும் நிலை, ஊழ்வினையை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள், வழிபாடு, சித்தர்களின் அருள் பெற வாழ்வின் நடைமுறை, பூமியில் நிலையானது- நிலையற்றதை அறிந்து வளமான வாழ்வை அடைய வழிமுறைகள் என இதுபோன்ற புறவாழ்வு நிகழ்வுகள் அனைத்தையும் சிற்றகத்தியம் என்ற தொகுப்பில் கூறியுள்ளார்.
அகத்தியர் தமிழ்மொழியில் மட்டுமே தன் நூல்களை ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துள்ளார். அகத்தியர் எழுதி தற்போது கிடைத்துள்ள தொன்னூற்றைந்து நூல்களைப் பற்றி பின்னர் அறிவோம்.
அகத்தியம் என்ற பெயரில் இவர் வாழ்வியல் வழிமுறைகளைக் கூறியும், எழுதியும் வைத்த தால் இவர் அகத்தியர் என்று அழைக்கப்பட் டார். இந்தப் பெயர் காரணப் பெயராகும். தொல்காப்பியம் என்ற நூலை எழுதிய வர் யார் என்று தெரியாது. ஆனால் அவர் எழுதிய நூலின் பெயரைக் கொண்டு அவரை "தொல்காப்பியர்' என்று குறிப்பிடு கின்றனர்.
அகத்தியரின் உண்மையான காலம், பிறப்பு போன்ற விவரங்கள் எதனையும் அறியமுடியவில்லை என்பதே உண்மை.
கருவூர் சித்தர் தன் பாடல் ஒன்றில்
"ஆமப்பா சித்தர் நிலை யரைந்த அகத்தியர்தான்
ஓமப்பா தன்பிறப்பை ஒன்றுஞ் சொல்லாதுவிட்டார்'
என்று கூறுகிறார்.
அகத்தியர் தென்பாண்டி நாட்டில், தாமிரபரணி நதிக்கரையில், விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியர்க்குப் பிறந்தவர் என்ற உண்மையை தன் பாடல் களில் மறைமுகமாகக் கூறியுள்ளார்.
அகத்தியரைப் பற்றி இடைப்பட்ட காலத்தில் கற்பனைகளைப் புனைந்து, சிலர் கதைகளாக எழுதிவைத்துவிட்டார்கள்.
அகத்தியர் கூறியும், எழுதியும் வைத்துள்ள பகுத்தறிவுப் பாடல் கருத்துகளுக்கும், தற்போது அகத்தியரைப் பற்றிக் கூறும் கதைகளுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. எதிர்மறையாகவே உள்ளது.
அகத்தியர் முதலான பதினெட்டுச் சித்தர் களைப் பற்றிக்கூறும் கதைகளும், சித்தர்கள் தங்கள் பாடல்களில் கூறிய கருத்துகளும் எதிர்மறையாகவே உள்ளன. சித்தர்கள் கதைகள் அல்ல; கருத்துகள்.
இந்த பூமியில் வாழும் மக்களை, அவரவர் வசிக்கும் இடத்தைக் குறிப்பிட்டு காட்டுவாசி, கிராமவாசி, நகரவாசி, பட்டணவாசி என்று அழைக்கிறார்கள். வாசி என்ற சொல்லுக்கு வசித்தல், வாசித்தல், காற்று என்று பல அர்த் தங்கள் உண்டு. யோகம் என்றால் அனுபவித் தல் என்று பொருளாகும். வாசி யோகம் என்ற வார்த்தைக்கு இந்த பூமியில் வசிக்கும் மக்கள் நன்மைகளை அனுபவித்து வாழ்தல் என்று பொருளாகும்.
வாசி என்ற சொல்லுக்கு வறுமை என்றும் ஒரு பொருளுண்டு. நால்வரில் ஒருவரான சுந்தரர், தன் வாழ்வில் வறுமை உண்டானபோது அது தீர சிவனை வணங்கி, "வாசி தீரவே காசு நல்குவீர்' என்று பணம், பொருளைதான் சிவனிடம் கேட்கிறார்.
இன்று கோவிலுக்குச் செல்லும் மக்களும் கடவுளிடம் தங்கள் வாழ்வின் கஷ்டம், சிரமம், தடை, வறுமை தீர பணத்தைத்தான் கேட்கிறார்கள். "பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்பதுதான் நடைமுறை உண்மை.
சித்தர்கள் கூறியுள்ள வாசி யோகம் என்பது மூச்சுப்பயிற்சியல்ல. தங்கள் வாழ்வில் செல்வம், செல்வாக்கினை மனிதன் அடைந்துகொள்ள வாழ்வியல் வழிகாட்டும் முறையாகும். சித்தர்கள் கூறியுள்ள வாசி யோக வரிகளைக் கடைப்பிடித்து வாழ்பவர்கள், தங்கள் முன்வினை பாவ- சாபப் பதிவுகளால் உண்டாகும் துன்பம், வறுமை, தடைகள் இல்லாத செல்வ வாழ்க்கையை நிச்சயம் அடையலாம்.
இனி, சித்தர்கள் பஞ்சபூதங்கள், உயிரினங் களின் உண்மையை தங்கள் பகுத்தறிவால் எவ்வாறு அறிந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்வோம். "பகுத்தறிவு' என்று எந்த அறிவை சித்தர்கள் கூறினார்கள் என்பதையும் தெரிந்துகொள்வோம்.
புலத்தியர்: கும்ப முனிவரே, நேற்று மிருகம், பறவையினங்களின் ஆன்மாவின் நிலைபற்றி தெளிவுபடுத்தினீர்கள். இன்று ஐந்தறிவுள்ள உயிரினங்கள், ஆறறிவுள்ள மனிதன் நல்வாழ்வு வாழ என்ன வழி என்பதை தங்கள் மாணவர்களாகிய எங்களுக்குக் கூறுங்கள்.
அகத்தியர்: புலத்தியரே, இந்த பூமியில் வாழும் உயிரினங்களில், எதிர்கால வாழ்வின் நலன் பற்றிய சிந்தனை இல்லாமல் வாழ்பவன் மனிதன் மட்டும்தான். மனிதனிடம் கட்டுப்பாடு கிடையாது. தன்னிடம் உள்ளவற்றைத் தக்கவைத்துக்கொள்ளும் சக்தி கிடையாது. ஐந்தறிவுள்ள உயிரினங் கள் தங்கள் வாழ்வுமுறை சூட்சும ரகசியத்தைத் தன் சுய அறிவால் அறிந்து செயல்பட்டு வாழ்கின்றன. ஆனால் மனிதன் மட்டும் பிறர் சொல்வதைக் கேட்டு மாயாவாதங்கள் பேசுபவர்கள் கூறுவதை நம்பிக்கொண்டு, அவர்கள் கூறுவது உண்மையா? நடைமுறையில் சாத்தியமா என்று பகுத்தறிந்து பாராமல் வாழ்ந்து, தானே வறுமையையும் துன்பத்தையும் அடைந்து கொள்கிறான்.
மனிதர்களாகப் பிறந்து சித்தர் நிலையை அடைவதற்கு, விலங்கினங்களும் ஆசானாக இருந்து ஞானத்தை போதிக்கின்றன. இந்த உண்மையைத்தான் சித்தர் களாகிய நாம் அறிந்து, அனைத்து சித்திகளையும் அடைந்தோம். அட்டமா சக்திகளில் காற்றினை சேமித்துக்கட்டி, உடம்பை எடையில்லாமல் செய்து, வானில் சஞ்சாரம் செய்யும் நிலையை, பறவையினங்களின் செயலைப் பார்த்து அறிந்தோம்.
மனித சரீரம் முதுமையடையாமல், என்றும் இளமையாக இருக்கச் செய்யும் காயகல்ப மூலிகைகளையும், நோய் தீர்க்கும் மூலிகைகளையும் விலங்குகள் மூலம் அறிந்தோம். சில மூலிகைகளில் உயிர்சக்தி (காற்று) அதிகமுண்டு என்பதையறிந்து, அம்மூலிகைகளை சாப்பிட்டு, வெளிக்காற்று இல்லாமல் உடம்பினுள்ளேயே காற்றை உருவாக்கி சேமித்து, மரணத்தை வென்று வாழும் நிலையை அடைந்தோம். (இந்த மூலிகைக்கு அகத்தியர் மூலிகை என்றே பெயர். இதை தினசரி சாப்பிட்டுவந்தால் நமது உடலுக்குத் தேவையான "ஆக்ஸிஜன்' குறையாமல் இருந்துகொண்டேயிருக்கும். சுவாசம் இல்லாமலேயே நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கலாம். இதனை அனுபவத்தி னால்தான் அறியமுடியும். மாரடைப்பு ஏற்படாது. இந்த மூலிகை சிவப்பணுக்களை உற்பத்தி செய்து ரத்தத்தைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கும். உடம்பில் கரையாத கொழுப்பினைக் கரைத்துவிடும். இன்னும் பல செயல்களை இந்த ஞானமூலிகை செய்யும்.)
மூச்சுக்காற்றின் கணக்கையறிந்து, காற்றை சேமித்து ஆயுள்காலத்தை நீடித்துக் கொண்டோம். சுவாசக்காற்றின் நிலையறிந்து மரணம் உண்டாகும் காலத்தையறிந்து, வலது மூச்சு, இடது மூச்சுக்காற்றினை மாற்றி சுவாசித்து மரணத்தைத் தடுத்துக்கொண்டோம். (காற்றின் இந்த செயல்பற்றி பின்னர் விளக்கமாக அறிவோம்). வாழ்வில் வளம்பெற, உயர்வடைய சேமிப்புதான் முக்கியம். சேமிப்புதான் எதிர்கால வாழ்வில் சிரமமில்லாத வாழ்வைத்தரும் என்பதை மற்ற உயிரினங்களிடம் இருந்தே அறிந்தோம்.
"மாடுதானானாலும் ஒரு போக்குண்டு
மனிதனுக்கு அவ்வளவு தெரியாதப்பா.'
புலத்தியனே ஆடு, மாடுகள் மேயும் சமயத்தில் தன் உடலுக்கு நன்மை தரும் உணவு, புற்களை மட்டுமே உண்ணும். தீமை தரும் உணவுகளைத் தவிர்த்துவிடும்.
மாடுகள் மேய்ச்சல் சமயத்தில் இது நாம் உணவு தேடும் நேரம் என்று காலத்தை யறிந்து, அவசர அவசரமாக புற்களை மேய்ந்து தன் இரைப்பையில் சேமித்து வைத்துக்கொள்ளும். காலத்தை வீணாக்காது. இரைப்பையில் சேமித்த உணவை, பின் ஓய்வாக இருக்கும்போது அசைபோட்டு ஜீரணிக்கும். உழைக்கவேண்டிய காலத்தில் உழைக்கின்றன. தனக்குத் தேவையான உணவைத் தானே தேடியடைகின்றன.
ஒரு காளை மாடு தன் எஜமானனுடன் வயலில் இணைந்து உழைக்கிறது. அந்த விளைச்சலில் வரும் நெல் மனிதனுக்கும், வைக்கோல் மாட்டிற்கும் என்று பிரிக்கப்பட்டு சேமித்து வைக்கப்படுகிறது. காளை மாட்டின் உழைப்பால் வந்த வைக்கோலை அந்த காளை மட்டும் உண்பதில்லை. அந்த மாட்டுப்பட்டியில் உள்ள அனைத்து மாடுகளும் சாப்பிடுகின்றன.
"தாயென்றும் தந்தையென்றும் பிள்ளையென்றும்
பாரியென்றும் உழைக்கத்தானே சொன்னேன்.'
குடும்பத்திலுள்ள ஆண்கள் காலத்தை வீணாக்காமல், உழைக்கவேண்டிய வயதுக் காலத்தில் உழைத்து தன் தாய், தந்தை, மனைவி, குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும். தன் எதிர்கால வாழ்விற்காக சேமித்தும் வைக்கவேண்டும். தன் உழைப்பால் குடும்பத்தினரைக் காப்பாற்றும் ஆண்களைத்தான் "காளை' என்று மரியாதையாகக் கூறுவார்கள். இவர்களுக்கு பாவ- சாபப் பதிவு இராது. இருந்தாலும் நிவர்த்தியாகும்.
காலத்தில் உழைத்து தன் குடும்பத்தினரைக் காப்பாற்றாமல் ஊரை சுற்றிக்கொண்டு, தன் முன்னோர்கள் தேடிவைத்த சொத்துகளை செலவு செய்து அழித்து, பிறர் உழைப்பில் வாழும் ஆண்களை "கொண்டிமாடு'- பூமிக்கு பாரமானவன் என்று குறைவாக மதிப்பிட்டுப் பேசுவார்கள். இந்த பூமியில் உழைத்து பணம் சம்பாதிப்பவன் மட்டுமே நல்ல வாழ்வை அடைய முடியும். வேறு மாயை சக்திகள் நம்மைக் காப்பாற்றும் என்று நம்பிக்கொண்டு கற்பனையில் கனவு கொண்டிருப்பவன் வாழ்வு வறுமையானதாகவே இருக்கும். இவர்களுக்கு பித்ரு தோஷம், புத்திரசாபம், களத்திர தோஷம் ஏற்பட்டுவிடும். இவை வம்சத்தை பாதிக்கும்.
பாலைவனங்களில் வாழும் ஒட்டகம், அந்தப் பிரதேசத்தின் நீரின் நிலை அளவை யறிந்து தண்ணீர் கிடைக்கும்போது தனக்குத் தேவையான நீரைக் குடித்து தன் உடம்பில் சேமித்து வைத்துக்கொண்டு, நீர் கிடைக்காத சமயத்தில், சேமித்துவைத்த நீரைக்கொண்டு தன் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்.
தேனீ நாளைய உணவுக்கு இன்றே தேனை சேமித்து வைத்துக்கொள்கிறது.
எறும்பு, எலி போன்ற மிகச்சிறிய உயிரினங்கள்கூட தங்கள் எதிர்கால வாழ்வுக்காக உணவைத் தேடி சேமித்து வைத்துக்கொள்கின்றன.
மிருகங்கள், பறவைகள் என அனைத்து உயிரினங்களும், பிறந்தது முதல் சுறுசுறுப்பாக தனக்குத் தேவையான உணவைத் தானே தேடி உண்ணத் தொடங்கிவிடுகின்றன. மனிதர்களைப்போல் நல்ல நேரம், கெட்ட நேரம் என்று கூறிக்கொண்டு, செயல்படாமல் காலத்தை வீணாக்குவதில்லை.
ஆறறிவும், அனைத்து ஞானமும் அறிந்தவன் என்று கூறிக்கொள்ளும் மனிதனுக்கு மிருகங்களும் பறவைகளும் மட்டும் உழைப்பு, பொருள் சேமிப்பு, காலத்தின் அருமையை போதிக்கவில்லை. நாம் வாழும் இந்த பூமியும் தன் செயல் மூலம் உணர்த்துகிறது. அடுத்து அதனையும் கூறுகிறேன் அறிந்துகொள்.
"நில்லென்றால் லோகத்தில் மனிதர் தாமும்
நிட்டையுடன் சமாதியுமே பொருந்தா மற்றான்
வல்லவர்போல் வேத புராண காவியங்கள்
மந்திரங்கள் கோடான கோடியென்றும்
சொல்லுவார் கோவிலென்றுந் தீர்த்த மென்றும்
திருடர்கள் தானலைந்து திரிவார் மடையர்
வெல்வதொரு பிரம்மநிலை யறியா மற்றான்
வேரற்ற மரம்போல விழுவார் பாரே.'
(காக புசுண்டர்)
சித்தரைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்.
(மேலும் சித்தம் தெளிவோம்)