இடைச் செருகல் சர்க்கம்- 2
இராமன் வழங்கிய தீர்ப்பு லட்சுமணன், நாயொன்று ஒரு கோரிக்கையை முன்வைத்து வாயிலில் காத்திருப்பதாக இராமபிரானிடம் கூற, அதை உடனே அழைத்துவருமாறு இராமன் கூறினார். அதன்படி நாயை அழைத்துவந்தான் லட்சுமணன்.
நாயைப் பார்த்த இராமன், "நீ சொல்ல விரும்புவதைக் கூறுவாய். நீ இங்கே பயப்படத் தேவையில்லை'' என்றார்.
உடைபட்ட தலையுடன் இருந்த அந்த நாய், மன்றத்தில் வீற்றிருந்த இராமனைப் பார்த்து, "அரசர்தான் அனைத்தையும் செய்கிறார்; காப்பாற்றுகிறார். அனைத்து உயிர்களுக்கும் தந்தை போன்றவர். அரசர்தான் காலம்; யுகம்.
அவரே இந்த உலகம் முழுமைக்கும் அரசர். அனைவருக்கும் பாதுகாவலர். பாரபட்சமில்லாது நியாய முறையைப் பின்பற்றி அனைவரையும் காப்பாற்றுகிறார்.
மன்னர் காப்பாற்றாவிட்டால் மக்கள் விரைவில் அழிந்துபோவார்கள்.
உலகம் முழுவதையும் தர்மம் தாங்கிக் கொண்டிருப்பதால்தான் அதை தர்மம் என்று கூறுகிறார்கள். தர்மம்தான் எல்லா மக்களையும் தாங்கிக்கொண்டிருக்கிறது.
அதுவே சராசர உயிரினங்கள் நிறைந்த முழு உலகங்களையும் தாங்கி நிற்கிறது. தர்மத்தை அடிப்படையாகக்கொண்டு எதிரிகளையும் மன்னர் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார். மக்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கிறார்.
மன்னரின் ஆட்சிமுறையை "தாரணம்' என்கிறார்கள். அதுவே தர்மம் என்பது நிச்சயம்.
அரசே, மக்களைக் காப்பதென்னும் தர்மம் அரசருக்கு மேலுலகத்தில் நல்ல பயனைக் கொடுக்கக்கூடியது. தர்மத்தினால் அடையப்பட முடியாததென்று எதுவுமே இல்லையென்பது எனது கருத்து. தானம், தயை, சான்றோர்களை கௌரவித்தல், செயல்களில் நேர்மை போன்றவைதான் உயர்ந்த தர்மம். இராமபிரானே, இந்த அறநெறிகளைக் கடைப்பிடித்தால், வாழும் காலத்தில் இவ்வுலகிலும் மரணத்திற்குப்பின் மேலுலகிலும் சௌக்கியத்தை அடையலாம்.
இராகவனே, தர்மத்தை அளக்கும் அளவுகோல்களுக்கெல்லாம் மேலான அளவுகோலாக இருப்பவர் தாங்கள். நல்ல நியமங்களைக் கடைப்பிடிப்பவரே, மேலோர்கள் அனுஷ்டிக்கும் அறநெறிகளைத் தாங்கள் அறிவீர்கள்.
அரசருக்கு அரசே, தர்மங்களின் கருவூலம் நீங்களே. நற்குணங்களின் கடல் போன்றவர். என்னுடைய அறியாமையால் தர்மத்தைப் பற்றி சில விளக்கங்களைக் கூறினேன். நான் தலைவணங்கி உங்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். இதன்பொருட்டு தாங்கள் என்மீது கோபம் கொள்ளக்கூடாது'' என்றது.
நாயின் சொற்களைக்கேட்ட இராமபிரான், "உனக்கு இங்கே ஆகவேண்டிய காரியம் என்ன என்பதை அஞ்சாமல் உடனே கூறு. அதை நான் செய்துதருகிறேன்'' என்றார்.
அப்போது நாய், "அரசர் தர்மநெறிப் படியே ஓர் ஆட்சியைப் பெறவேண்டும்; தர்மநெறிப்படியே ஆட்சி நடத்தவேண்டும். தர்மத்தினால்தான் அரசர் அனைவருக்கும் அடைக்கலம் கொடுக்கும் ஆற்றலைப் பெறுகிறார். மன்னர்தான் அனைவருடைய அச்சத்தையும் போக்குபவர். இதை மனதில் நினைவு படுத்திக்கொண்டு நான் கூறவரும் கோரிக்கையைக் கேளுங்கள். இராகவனே, சர்வார்த்த சித்தன் என்னும் பிரம்மச்சாரி, அந்தனர் குடியிருப்பில் வசித்துக் கொண்டிருக்கிறார். நான் எவ்வித குற்றமும் செய்யாதபோதும் அவர் என்னை இன்று அடித்துவிட்டார்'' என்றது.
அதைக்கேட்டு இராமன் ஒரு சேவகனை உடனே அனுப்பினார். அவன் பல்கலை வித்தகரான சர்வார்த்த சித்தன் என்னும் அந்தணரை அழைத்து வந்தான். பேரொளி வீசும் தோற்றம்கொண்ட அவர் மன்றத் திற்குள் வந்து இராமனைப் பார்த்து, "குற்றமற்றவரே, என்னால் தங்களுக்கு ஆகவேண்டிய காரியம் என்ன?'' என்று கேட்டார்.
இவ்வாறு அவர் கேட்டவுடன் இராமன், "அந்தணரே, நீங்கள் இந்த நாயைத் தடியால் அடித்து மண்டையை உடைத்திருக்கிறீர்கள். இத்தனை கடுமையான தண்டனை பெறுவதற்கு அது செய்த குற்றம்தான் என்ன? கோபமென்பது உயிரைப் பறிக்கும் எதிரி. நண்பனைப்போல் இருந்து அழிக்கும் எதிரி.
கோபமென்பது மிகவும் கூர்மையான கத்தியைப் போன்றது. எல்லா நற்குணங் களையும் கோபம் அழித்துவிடுகிறது. மனிதன் செய்யும் தவம், வேள்வி, தானம் ஆகியவற்றின் புண்ணியங்களை கோபம் அபகரித்துவிடுகிறது. எனவே கோபத்தை விட்டுவிடவேண்டும். கட்டுக்கடங்காத குதிரையைப்போல நுகர் பொருட்களை நோக்கி ஓடிச்செல்லும் புலன்களை, அந்த நுகர் பொருட்களிலிருந்து திருப்பி, குதிரையின் கடிவாளத்தை தேரோட்டி பிடித்திழுப்பதுபோல மனவுறுதியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். ஒருவன் தன்னைச் சுற்றியுள்ள மக்களிடம் மனம், செயல், சொல், பார்வை ஆகியவற்றால் நல்லதையே செய்யவேண்டும். இவ்வாறு மக்களிடம் வெறுப்பின்றிப் பழகுபவன் பாவத்தை அடைவதில்லை.
கட்டுப்பாட்டுக்குள் அடங்காத மனமானது கூர்மையான கத்தி, காலை சுற்றிக்கொண்ட பாம்பு அல்லது எப்போதும் ஆத்திரத்துடன் இருக்கும் பகைவன் ஆகியவற்றை விடவும் அதிகமான தீமையைச் செய்யக்கூடியது. ஒருவன் அடக்கம் சம்பந்தமான எவ்வளவு உபதேசங்களைப் படித்திருந்தாலும், அவனுடைய இயல்பான தீய குணம் அவனைவிட்டுச் செல்வதில்லை. ஒருவன் தன் செயல்களில் எவ்வளவுதான் முயன்று தன் தீய நோக்கத்தை மறைக்க முயன்றாலும் அது தானாகவே வெளிப் பட்டுவிடும்'' என்றார்.
இராமன் இவ்வாறு கூறியதும் அந்தணர், "நான் கோபத்தினால் தடி கொண்டு இந்த நாயைத் தாக்கினேன். இல்லங்களில் பிச்சைகேட்டுச் செல்லும் காலம் கடந்துவிட்டிருந்தது. அதனால் வேகமாகச் சென்று ஒவ்வொரு வீட்டிலும் உணவை யாசித்துக்கொண்டிருந்தேன்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ramayanam_22.jpg)
எனக்கு இடையூறாக இந்த நாய் தெருவில் சுற்றிக்கொண்டிருந்தது. "ஓரமாகச் செல்' என்று விரட்டினேன். ஆனால் அது தன் விருப்பப்படி சாலையின் குறுக்கே எனக்கு இடையூறாக நின்றது. பசியினால் தவித்துக்கொண்டிருந்த என்னை கோபம் ஆட்கொண்டது. அதனால் இந்த நாயை அடித்தேன்.
அரசரே, நான் குற்றவாளி. எனக்கு தண்டனை கொடுங்கள். தங்களால் தண்டிக்கப்பட்டுவிட்டால், பிறகு அனுபவிக்கவேண்டிய நரகவாசம் இல்லாமல் போகும்'' என்றார்.
இதைக் கேட்டவுடன் சபையில் இருந்தவர்கள் அனைவரையும் பார்த்து இராமன், "இந்த விஷயத்தில் நாம் என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதைக் கூறுங்கள். இவருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? ஒருவர் செய்த குற்றத்திற்குரிய தண்டனை கொடுக்கப்பட்டுவிட்டால் அவர் நரகவாசத்திலிருந்து காப்பாற்றப்படுகிறார்'' என்றார்.
அந்த சபையில் பிருகு, ஆங்கிரசர், குத்ஸர், வசிஷ்டர், காசியபர் மற்றும் தர்மத்தைப் பேணிக்காக்கும் முக்கியமானவர்கள், அமைச்சர்கள், பெருங்குடி மக்கள் ஆகியோரும், மேலும் பல கற்றறிந்த சான்றோர் களும் குழுமியிருந்தனர். அரச நீதியில் விற்பன்னர்களான அவர்கள், அந்தணருக்கு உடல் துன்பத்தைக் கொடுக்கக்கூடிய தண்டனையைத் தரக்கூடாது என்பதை அறிந்தவர்கள். எனவே அப்போது அனைத்து முனிவர்களும் இராமனிடம், "ரகுநந்தனரே, தாங்கள் எல்லாரையும் அடக்கியாள்பவர். குறிப்பாகத் தாங்கள் சனாதனரான விஷ்ணு மூர்த்தி. மூவுலகையும் ஆள்பவர்'' என்றனர்.
அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்ட நாய், "இராமனே, தாங்கள் என்னிடம் கனிவுள்ளவராக இருந்தால், நான் கேட்கும் வரத்தைக் கொடுக்கவேண்டும். அரசே, "என்னால் ஆகவேண்டிய காரியத்தைக் கூறு; செய்துதருகிறேன்' என்று முன்பே எனக்கு வாக்கு கொடுத்திருக்கிறீர்கள். எனவே இவரை ஒரு மடத்தின் தலைவராக்கி விடுங்கள். அரசரே, காலஞ்சரத்திலுள்ள மடத்தின் தலைமைப் பதவியை இவருக்குக் கொடுத்துவிடுங்கள்'' என்றது.
இதைக்கேட்ட இராமன் அந்த அந்தணரை மடாதிபதியாக பட்டம் சூட்டினார். அந்த அந்தணர் மடாதிபதியானவுடன் யானையின்மீதமர்ந்து மகிழ்ச்சியுடன் சென்றார்.
பின்னர் இராமனுடைய அமைச்சர் கள் சற்றே புன்னகைத்தவர்களாய், "பேரறிவாளரான இராமப்பிரபுவே, இவருக்குத் தாங்கள் கொடுத்திருப்பது வெகுமானம்; தண்டனையல்ல'' என்றனர்.
அப்போது இராமன், "நீங்கள் நீதியின் நுட்பங்களை அறிந்தவரல்லர். இந்த நாய்க்கு இதற்கான காரணம் தெரியும்'' என்றார்.
பின்னர் இராமன் ஆணைப்படி நாய், "நான் முற்பிறவியில் அந்த இடத்தில் மடாதிபதியாக இருந்தேன். வேள்வியில் எஞ்சிய அன்னத்தையே உணவாகக் கொண்டேன். தேவதைகள், வேத விற்பன்னர்கள் வழிபாட்டில் முழுமையாக ஈடுபட்டிருந்தேன். ஏவலர்களுக்கும் பெண் பணியாளர்களுக்கும் உரிய சன்மானத் தைப் பங்கிட்டுக் கொடுத்தேன். நற்செயல்களைச் செய்துவந்தேன். தெய்வ சொத்துகளைப் பாதுகாத்துவந்தேன்.
அடக்கமும் நல்லொழுக்கமும் கொண்டு அனைத்து உயிரினங்களின் நன்மைக்காகவும் உழைத்துவந்தேன். அப்படியிருந்த நானே இவ்வளவு பயங்கரமான கீழ்நிலையை அடைந்தேன்.
இந்த அந்தணரோ மிகவும் கோபக்காரர். தர்மத்தைக் கைவிட்டவர். பிறருக்குத் துன்பம் விளைவிப்பதில் நோக்கம் கொண்டவர். கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாதவர். கொடியவர். இழிந்தவர். தெளிந்த அறிவில்லாதவர். அறம்தவறி நடப்பவர். இவர் மடாதிபதியாக அதிகாரம் பெற்று, தன்னுடைய முன்பின்னான ஏழேழு தலைமுறையினரையும் தன்னோடு சேர்த்துக்கொண்டு நரகத்தில் விழப் போகிறார்.
அதனால் எந்த நிலையிலும் மடத்து தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்ளக் கூடாது. எவனை பிள்ளைகள், செல்வம், உற்றார்- உறவினருடன் நரகத்தில் தள்ளிவிட விருப்பமோ, அவனை தேவதை, பசு, அந்தணர்களுக்குத் தலைவராக நியமித்துவிட்டால் போதும். அந்தணர்களின் செல்வம், தேவதைகளின் சொத்து, பெண்கள்- பிள்ளைகளின் சொத்து இவற்றை அபகரிப்பது, தானம் செய்துகொடுத்ததைத் திரும்ப எடுத்துக்கொள்வது போன்றவற்றைச் செய்பவன் தன் உற்றார்- உறவினரோடு அழிந்துபோகிறான். இராமனே, அந்தணர் மற்றும் தேவதைகளின் சொத்துகளைப் பறிப்பவன் நிச்சயமாக அவிசி என்னும் பயங்கர நரகத்தில் வீழ்வான். "அந்தணர், தேவதை ஆகியோரின் சொத்துகளைக் கவர்வேன்' என்று மனதால் நினைப்பவன் ஒரு நரகத்திலிருந்து இன்னொரு நரகத்திற்குப் போய்க்கொண்டே இருப்பான்'' என்றது.
இதைக்கேட்ட இராமனின் கண்கள் ஆச்சரியத்தால் மலர்ச்சியடைந்தன. ஞானம் படைத்த அந்த நாய் தான் வந்தவழியே திரும்பிச்சென்றது. முற்பிறவியில் அந்த நாய் தெளிந்த அறிவுபெற்ற ஞானியாக இருந்தது. ஆனால் இந்தப் பிறவியில் நாயாகப் பிறந்ததால் இழிநிலையை அடைந்தது. பின்னர் இராம தரிசனத்தால் பெரும் புண்ணியத்தைப்பெற்ற அந்த நாய், வாரணாசி நகரம் சென்று, உணவு, நீர் அருந்தாமல் பிராயோபவேச முறையில் தன் உயிரை நீத்தது.
(இடைச் செருகலின் இரண்டாவது சர்க்கம் நிறைவுற்றது.)
60-ஆவது சர்க்கம்
சியவனர் முதலான முனிவர்களின் வருகை இராமனும் லட்சுமணனும் இவ்வாறான சீரிய உரையாடலில் ஈடுபட்டுக்கொண்டும், அரசு அலுவல்களை செவ்வனே நடத்திக்கொண்டும் இருந்தார்கள். நாளடைவில் அதிக வெப்பமும், அதிக குளிருமில்லாத வசந்தகால இரவு வந்தது. இரவுப் பொழுது கழிந்து நிர்மலமான வைகறைப் பொழுது வந்ததும், காலை வேளைக்குரிய வைதீக சடங்குகளை முடித்துக்கொண்டு, குடிமக்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகளில் கருத்துடைய இராமன் மக்களின் பார்வையில் படும்படியாக வெளியேவந்தார். அப்போது சுமந்திரர் அங்குவந்து இராமனைப் பார்த்து, "பிருகு முனிவரின் புதல்வர் சியவனரை முன்னிறுத்தி முனிவர்கள் பலரும் வந்து வாசலில் காத்திருக்கிறார்கள். காவலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். தங்களை உடனே தரிசிக்கவேண்டுமென்று தங்களிடம் கூறுமாறு எங்களிடம் கேட்டுக் கொண்டனர். யமுனையின் கரையில் வசிக்கும் அவர்கள் தங்களிடம் ஆழ்ந்த அன்புகொண்டவர்கள்'' என்றார்.
சுமந்திரர் கூறியதைக்கேட்ட இராமன், "பெரும் புண்ணியசாலிகளான பார்க்கவர் உள்ளிட்ட அவர்களை உள்ளே அனுப்புங்கள்'' என்றார். மன்னரின் கட்டளைக்குப் பணிந்து வாயில் காப்போன், இரு கரங்களையும் தலைக்குமேல் கூப்பியவண்ணம் எல்லையற்ற ஆன்மப் பொலிவுடன் விளங்கும் அந்த தவசீலர்களை மாளிகைக்குள் செல்ல அனுமதித்தான்.
நூற்றுக்கணக்கான முனிவர்கள் அரச மாளிகைக்குள் சென்றனர். அனைத்து புண்ணிய தீர்த்தங்கள் நிரம்பிய கலசங்களை யும், பலவகைப் பழங்கள், கிழங்குகள் உள்ளிட்ட காணிக்கைப் பொருட்களையும் அவர்கள் கொண்டுவந்திருந்தனர். அவர்கள் கொண்டுவந்த அனைத்தையும் மகிழ்வுடன் பெற்றுக்கொண்ட இராமன் அந்த முனிவர்களைப் பார்த்து, "இங்குள்ள உயர்ந்த ஆசனங்களில் முறைப்படி அமருங்கள்'' என்றார்.
இராமனுடைய வேண்டுகோளைக் கேட்ட மாமுனிவர்கள் தங்கத்தாலான அழகிய ஆசனங்களில் அமர்ந்தனர். எதிரிகளின் நகரங்களை வெற்றிகொள்ளும் இராமன், முனிவர்கள் அனைவரும் சுகமாக அமர்ந்துகொண்டதும் வணக்கத்துடன் கைகூப்பி, "தாங்கள் அனைவரும் எதற்காக வந்திருக்கிறீர்கள்? உங்கள் விருப்பத்தை நான் மனப்பூர்வமாக நிறைவேற்றி வைப்பேன். தங்களால் ஆணையிடத்தக்கவன் நான். இந்தப் பேரரசு, என் உயிர், மற்றுமுள்ள செல்வங்கள் அனைத்தும் அந்தணர்களுக்காகவே இருக்கின்றன என்பதை உண்மையாகக் கூறுகிறேன்'' என்றார்.
இவ்வாறு அவர் கூறியதைக்கேட்டு அந்த மாமுனிவர்கள் இராமனை மிகவும் பாராட்டினார்கள். மகாத்மாக்களான அந்த முனிவர்கள் பேரானந்தத்துடன், "மானுட மாணிக்கமே, இவ்வுலகில் தங்களால் மட்டுமே இவ்வாறு கூற இயலும். வேறெவராலும் இவ்வாறு பேச இயலாது.
மன்னரே, நாங்கள் வீரம் பொருந்திய பல அரசர்களிடம் சென்று முறையிட்டோம். ஆனால் அந்த செயலை நிறைவேற்றுவதிலிருக்கும் பெரும் சிரமத்தை உணர்ந்த அவர்கள் எங்கள் வேண்டுகோளை நிறைவேற்றுவதாக வாக்கு தரவில்லை.
ஆனால் நாங்கள் இங்கே வந்திருப்பதன் காரணத்தை இதுவரை கூறவில்லை.
அவ்வாறிருந்தும், காரணம் என்னவென்பதைத் தெரிந்துகொள்ளாமலேயே "நான் நிறைவேற்றித் தருகிறேன்' என்று, எங்களிடம் வைத்துள்ள மரியாதையால் வாக்கு தந்துவிட்டீர்கள். நிச்சயமாக தாங்கள் எங்களது வேண்டுகோளை நிறைவேற்றித் தருவீர்கள் என்பதில் ஐயமில்லை. தங்களால்தான் மிகப்பெரிய அச்சத்திலிருந்து முனிவர்களைக் காப்பாற்றமுடியும்'' என்றனர்.
61-ஆவது சர்க்கம்
"லவணனிடமிருந்து காப்பாற்றவேண்டும்!' முனிவர்கள் கூறியதைக்கேட்ட இராமன், "முனிவர்களே, தங்களுக்கு என்னால் என்ன காரியம் ஆகவேண்டும்? எதைச் செய்தால் உங்களது அச்சம் நீங்குமென்று சொல்லுங்கள்'' என்றார்.
அப்போது, "எங்களுக்கும் நாட்டுக்கும் ஏற்பட்டுள்ள அச்சத்திற்கான காரணத்தைக் கேளுங்கள்'' என்று பார்க்கவர் எனப்படும் சியவனர் கூறத் தொடங்கினார்.
"மன்னரே, முன்னர் கிருத யுகத்தில், லோலா என்பவளின் மூத்த புதல்வனாக மிகவும் ஆற்றல் பொருந்திய மது என்னும் அசுரன் இருந்தான். அந்தணர்களிடம் பக்தி கொண்டவன்; புகலிடம் தேடிவந்தவர்களுக்கு அடைக்கலம் தருபவன்; விசால மனம் கொண்ட தேவர்களுடன் ஆழ்ந்த நட்புறவு கொண்டிருந்தான். அவன் அறநெறியை உறுதியாகக் கைப்பற்றி நடந்தான்.
அவன் ருத்ர பகவானைத் திருப்திசெய்யும் பொருட்டு பல்லாயிரம் ஆண்டுகள் தவம்செய்தான். மனம் மகிழ்ந்த ருத்ரன் வரம் கொடுப்பதற்காக அவனது இருப்பிடம் சென்றார். மிகச் சிறப்பாக அவன் வழிபட்ட தால் ருத்ரன் அற்புதமான வரமருளினார்.
மிகவும் சக்திவாய்ந்ததும் பேரொளி யுடையதுமான தன்னுடைய சூலத்திலிருந்து வேறொரு சூலத்தை வெளிப்படுத்தி அவனிடம் கொடுத்து, "என்னை மகிழ்விக்கும் பொருட்டு ஈடு இணையற்ற இந்த பெரிய அறச்செயலை நீ செய்திருக்கிறாய். மிகவும் திருப்தியடைந்துள்ள நான் மிகச் சிறந்த இந்த ஆயுதத்தை உனக்குத் தந்துள்ளேன். அசுரனே, அந்தணர்களிடமும் தேவதைகளிடமும் நீ விரோதம் கொள்ளாதவரையில் இந்த சூலம் உன்னிடம் இருக்கும். மாறுபட்டு நடந்தால் இது உன்னிடமிருந்து மறைந்து விடும். உன்னுடன் போர் செய்வதற்காக அச்சமின்றி எவரேனும் உன்னெதிரில் வந்தால், இது அவர்களை எரித்துவிட்டு திரும்பவும் உன்னிடம் வந்துசேரும்' என்றருளினார்.
இவ்வாறு ருத்ரனிடம் வரம்பெற்ற அந்த அசுரன் மகாதேவரான அவரை வணங்கி, "ஈஸ்வரரே, தாங்கள் தேவதைகளுக்கெல்லாம் தலைவர். ஒப்புயர்வற்ற இந்த சூலம் என் பரம்பரையினரிடம் எப்போதும் இருக்கும்படி அருள்புரிய வேண்டும்' என்று வேண்டினான்.
அனைத்து உயிரினங்களுக்கும் தலைவரானவரும் எல்லையற்ற ஆற்றல் படைத்தவருமான மகாதேவர், "இது அவ்வாறு நடக்கக்கூடியதல்ல' என்று கூறினார். மேலும் அவர், "என்னை மகிழச் செய்த உன் முகத்திலிருந்து வெளிவந்த சொற்கள் வீணாகப் போகக்கூடாது. எனவே உன்னுடைய புதல்வர்களில் ஒருவனிடம் இந்த சூலம் இருக்கும். இது உன் புதல்வனின் கையிலிருக்கும்வரை எந்த உயிராலும் அவனைக் கொல்லமுடியாது' என்று வரம்தந்தார்.
மகாதேவரிடமிருந்து மிகவும் வியப்பான இந்த வரத்தைப்பெற்ற மது என்னும் அந்த அசுரன் எழில் மிகுந்த மாளிகை ஒன்றைக் கட்டினான்.
அவனுடைய மனைவியான கும்பீநசீ என்பவள் மிகவும் பாக்கியசாலி;
அழகு மிக்கவள். அவள் விசுவாவசுவுக்கும், அநலாவுக்கும் பிறந்த மகள். அவளுடைய மகன் கொடுமனம் படைத்த லவணன் என்னும் மகாவீரன். பிறவியிலிருந்தே தீயவனாக இருந்த அவன் பாவச் செயல்களையே செய்துவந்தான். கட்டுக்கடங்காத மகனைக் கண்டு மதுவுக்கு கோபம் வந்தது; வருத்தமுண்டானது. ஆனால் அதைப்பற்றி மகனிடம் அவன் எதுவும் சொல்லவில்லை.
லவணனிடம் சூலத்தைக் கொடுத்து வரம்பற்றிய செய்தியைக் கூறிவிட்டு, இவ்வுலகிலிருந்து அகன்று கடலுக்குள் சென்றுவிட்டான் மது.
லவணன் சூலத்தின் அபாரமான மகிமையினாலும், தனது தீய குணங்களாலும் மூவுலக மக்களையும்- குறிப்பாக தவச்செல்வர்களையும் துன்புறுத்தத் தொடங்கினான். எல்லையற்ற ஆற்றலைப் பெற்றவன் லவணன். மேலும் அவனுடைய சூலத்தில் ஆற்றலும் சொல்லுந்தரமன்று. காகுத்தரே, தாங்கள் இந்த விவரங்களைக்கேட்டு செய்யத்தக்கது எதுவோ அதைச் செய்யவேண்டும். தாங்களே எங்களுக்கு உயரிய புகலிடம்.
இராமனே, அச்சத்தினால் வருந்திய முனிவர்கள் பல அரசர்களிடம் சென்று அபயம் வேண்டினர். ஆனால் எங்களைக் காப்பாற்றும் எவரையும் இதுநாள்வரை நாங்கள் காணவில்லை. தனது படைவீரர் களுடனும் வாகனங்களுடனும் இராவணன் உங்களால் கொல்லப்பட்டான் என்பதைக் கேட்டதும், இவ்வுலகில் தங்களைத்தவிர வேறெந்த அரசராலும் எங்களைக் காப்பாற்ற முடியாது என்பதைத் தெரிந்துகொண்டோம். ஐயனே, லவணனைக் கண்டு அஞ்சிக்கொண்டி ருக்கும் எங்களைத் தாங்கள்தான் காப்பாற்றவேண்டும். அளவுகடந்த பராக்கிரமம் படைத்த இராமனே, எங்கள் அச்சத்திற்கான காரணத்தைத் தங்களிடம் கூறிவிட்டோம். தங்களாலேயே எங்கள் பயத்தைப் போக்க இயலும். எனவே அதற்கான நடவடிக்கை யைத் தாங்கள் எடுக்கவேண்டும்'' என்றார்.
(தொடரும்)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/ramayanam-t.jpg)