41-ஆவது சர்க்கம் புஷ்பக விமானத்தை திரும்ப அனுப்புவது

இராமபிரான் கரடி, வானரம், அரக்கர் களுக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு சகோதரர்களுடன் மிகவும் ஆனந்தமாக இருந்துவந்தார். அதன்பின் ஒருநாள் பிற்பகல் நேரத்தில் சகோதரர்களோடு இருந்த இராமபிரான் ஆகாயத்திலிருந்து வந்த இனிமையான சொற்களைக் கேட்டார்.

"எம்பெருமானே! கண்மணியான இராமபிரானே! உங்கள் அருள் நிரம்பிய பார்வையால் என்னைப் பாருங்கள். குபேரனிடமிருந்து பெறப்பட்ட புஷ்பக விமானம் நான். தங்கள் ஆணைப்படி குபேரனுக்கு சேவை செய்வதற்காக அவர் இருப்பிடம் சென்றேன். அவர் என்னிடம், "மாவீரரும் திறமைவாய்ந்த மன்னருமான இராமன், போரில் வெற்றிகொள்ளமுடியாத அரக்கர் தலைவனான இராவணனைக் கொன்று, போரில் வென்றவர் என்ற முறையில் உன்னைத் தன்வசப்படுத்திக்கொண்டார். தீயவனான இராவணன் தன்னுடைய மகன்கள், உற்றார்- உறவினர்களுடன் கொல்லப்பட்டதில் எனக்கும் மகிழ்ச்சியே.

பரமாத்மாவான இராமபிரான் இலங்கையோடு உன்னையும் சேர்த்துதான் வென்றிருக்கிறார். எனவே நான் உனக்கு ஆணையிடுகிறேன். நீ திரும்பச் சென்று இராமனுக்கு வாகனமாக இருப்பாய். உலகுக்கெல்லாம் புகலிடமாக விளங்கும் அவரை நீ சுமக்கவேண்டும் என்பதே எனது ஆசை. எனவே கவலைகொள்ளாமல் அவரிடம் செல்வாயாக' என்று கூறினார்.

Advertisment

செல்வச்சீமான் குபேரனின் ஆணைப் படி தங்களிடம் மீண்டும் வந்திருக்கி றேன். தயங்காமல் என்னை நீங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும். எந்த உயிர்களாலும் என்னை வெற்றிகொள்ளமுடியாது. குபேரனின் ஆணைப்படி தங்கள் உத்தரவு களுக்குக் கீழ்ப்படிந்து, எனது ஆற்றலினால் அனைத்து உலகங்களுக்கும் சென்று வருவேன்.''

புஷ்பக விமானம் கூறியதைக்கேட்ட இராமன் அந்த விமானத்தைப் பார்த்து, "விமானங்களுக்குள் மிகச்சிறந்த புஷ்பகமே! நீ தெரிவித்த விவரங்கள் உண்மையென்பதால் உன்னை வரவேற்று ஏற்றுக்கொள்கிறேன். குபேரனுக்கும் உன்னைத் திரும்ப அனுப்பியது குற்றமாகாது'' என்று கூறிய இராமன் பொரி, மலர்கள், நறுமணப் புகை ஆகியவற்றால் புஷ்பகத்தை வழிபட்டார்.

பின்னர், "அன்புடையவனே, சித்தர்களின் பாதையான ஆகாயத்திற்குச் செல்வாய். நான் உன்னை மனதால் அழைக்கும்போது வந்தால் போதும். கவலைகொள்ளாதே. உன் விருப்பப்படி அனைத்து திசைகளுக்கும் செல்லலாம். உனக்கு எவ்வித எதிர்ப்பும் தோன்றாது'' என்றார்.

Advertisment

இராமனுடைய ஆணையை புஷ்பக விமானம் ஏற்றுக்கொண்டது. பின்னர் இராமனால் கௌரவிக்கப்பட்டு விடைகொடுக்கப்பட்ட அது தான் விரும்பிய திசையில் பறந்துசென்றது.

புஷ்பகம் பார்வையிலிருந்து மறைந்த தும், பரதன் இராமன் எதிரில் கை கூப்பி நின்றவாறு, "மாவீரரான அரசரே, தெய்வ வடிவமுடைய தாங்கள் ஆட்சிபுரியும் காலத்தில் மனிதர்களல்லாத ஜடப்பொருள்கூட பேசுகின்றன. தாங்கள் முடிசூட்டிக்கொண்டு ஒரு மாதத்துக்குமேல் ஆகிவிட்டது. எந்த மக்களுக்கும் நோயென்பது வரவில்லை. உடல் தளர்ந்து வயோதிகத்தை அடைந்து விட்டவர்களும்கூட மரணமடையவில்லை. கருவுற்ற பெண்கள் எவ்விதத் துன்பமு மில்லாமல் சுகமாகப் பிரசவிக்கிறார்கள். எல்லா மக்களும் உடல்வலிமையுடன் இருக்கிறார்கள். அரசரே, நகரமக்கள் அனைவரும் மிக மகிழ்வுடன் வாழ்கி றார்கள்.

மேகங்கள் உரிய காலத்தில் அமுதம் போன்ற மழையைப் பொழிகின்றன. உடலைத் தழுவிச்செல்லும் காற்றானது குளிர்ச்சியாகவும் இதமாகவும் இருக்கிறது. இதற்கெல்லாம் காரணமான மன்னரான நீங்கள் நெடுங்காலம் அரசுபுரிய வேண்டு மென்று நகரமக்களும் புறநகர் மக்களும் பேசிக்கொள்கிறார்கள்'' என்றான்.

இவற்றைக்கேட்ட இராமன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

42-ஆவது சர்க்கம் பூங்காவில் இராமனும் சீதையும்

தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட புஷ்பக விமானத்திற்கு விடைதந்து அனுப்பிய பின்னர் இராமபிரான் அந்தப்புரத்தினுள்ளே அமைந்திருந்த பூங்காவுக்குள் நுழைந்தார்.

சந்தனம், அகரு, மா, புண்ணாகம், செஞ்சந்தனம், தேவதாரு போன்ற மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. செண்பகம், அசோகம், புன்னை, மகிழம், பலா, அஸனம் மற்றும் புகையில்லாமல் எரியும் நெருப்பைப்போல பிரகாசிக்கும் பாரிஜாதம் போன்றவை அழகுசெய்தன.

லோத்ரம், கடம்பு, மருதம், நாககேசரம், ஏழிலைப் பாலை, அதிமுக்தம், மந்தாரை, வாழை மற்றும் பலவகையான கொடிகளும் புதர்களும் மண்டியிருந்தன.

dd

பிரியங்கு, கதம்பம், மகிழம், நாவல், மாதுளை, கோவிதாரம் போன்றவை செழித்து விளங்கின. எப்போதும் மலர்கள், பழங்களை அளிப்பவையும், சுவைமிக்க, மணம் மிகுந்த, இளம் தளிர்களையுடைய மலர்கள் நிறைந்ததும், தாவரக்கலை நிபுணர்கள், தோட்டக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டதுமான- இளந்தளிர்கள், மலர்களையுடைய மரங்களை வண்டுகள் சுற்றிவந்தன.

குயில்கள், பிருங்கராஜம் போன்ற பல வண்ணமுடைய நூற்றுக்கணக்கான பறவைகள் மாமரங்களின் கிளைகளில் அமர்ந்து அற்புதமான ஒலிகளை எழுப்பிக்கொண்டிருந்தன. அங்கிருந்த மரங்களில் சில பொன்நிறமாகவும், சில நெருப்புக்குழம்பு போன்ற நிறத்திலும், சில மரங்கள் கண் மைபோல கருமையாகவும் விளங்கின.

அங்கு பலவகையான மலர்களும் மலர் கொத்துகளும் காணப்பட்டன. தூய்மையான நீர்நிறைந்த பல வடிவமைப்பு களுடைய சிறு நீர்நிலைகள் இருந்தன. அவற்றின் படிக்கட்டுகளில் மாணிக்கம் பதிக்கப்பட்டிருந்தன. குளத்தில் இறங்கி நீராடுவதற்கு வசதியாக தரையில் சிறிது தூரத்திற்கு பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அந்த நீர்த் தடாகங்களில் தாமரைகளும் ஆம்பல் மலர்களும் நிறைந் திருந்தன. அங்கு சக்கரவாகப் பறவைகள் அழகைக் கூட்டிக்கொண்டிருந்தன.

குயில்களும் கிளிகளும் இனிமையான குரலை எழுப்பிக்கொண்டிருந்தன. அன்னம், சாரசம் போன்ற பறவைகள் கூவிக்கொண்டிருந்தன. கரையோரங்களில் வளர்ந்திருந்த மரங்களில் மலர்கள் பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்தன. பல வடிவங்கள்கொண்ட மதில்சுவர்கள், கல் மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. தரைகளில் பசுமையாகப் பிரகாசிக்கும் புற்கள் மண்டியிருந்தன. அங்கிருந்த மரங்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு உதிர்த்த மலர்கள் ஆகாயத்தில் நட்சத்திரங்கள் விளங்குவதுபோல இருந்தன.

இந்திரனுடைய நந்தனம்போலவும், குபேரனுக்காக பிரம்மா அமைத்துக் கொடுத்த சைத்ரரதம்போலவும் அழகிய கட்டடங்களுடன் இராமனுடைய இன்பப் பூங்கா விளங்கியது.

பல இருக்கைகள்கொண்ட மண்டபங்கள், கொடிகளால் சூழப்பட்ட இடங்களுடன் விளங்கிய அந்த வனத்திற்குள் நுழைந்த இராமன், அழகான வடிவுகொண்டதும், மலர்கள் தூவப்பெற்றதும், விரிப்பு போடப் பட்டிருந்ததுமான ஓர் ஆசனத்தில் அமர்ந்தார். தேவேந்திரன் தன் கரங்களால் இந்திராணிக்கு அமுதத்தைக் கொடுப்பதுபோல, இராமன் தன்னருகே இருந்த சீதைக்கு இனிய பானத்தை எடுத்துக்கொடுத்தார்.

அப்போது இராமன் அருந்துவதற்காக உயர்வகை உணவுகளையும் பலவகை பழங்களையும் பணியாளர்கள் விரைந்து கொண்டுவந்தனர். பானங்களை அருந்தி மதம்கொண்ட நிலையிலிருந்த இசை மற்றும் நடன வல்லுனர்களான அழகிய இளம்பெண்கள், ஆடிப்பாடி தங்கள் அரசரை மகிழ்வித்தனர். பிறர் மனதிற்கு ஆனந்தமளிப்பதில் தலைசிறந்தவரான இராமன் நல்லாடை, அணிகலன்களுடன் விளங்கிய அந்தப் பெண்களுக்கு பரிசுகள் வழங்கி ஆனந்தப்படுத்தினார்.

சீதையுடன் வீற்றிருந்த இராமன், அருந்ததியுடன் அமர்ந்திருக்கும் வசிஷ்டரைப்போல பிரகாசித்தார். இவ்வாறு இராமபிரான் தினந்தோறும் அமர உலக தேவனைப்போல மகிழ்ச்சியில் திளைத்து, தேவமகள் போன்ற ஜனகன் மகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திக்கொண்டிருந்தார்.

சீதையும் இராமனும் இவ்வாறு இன்பத்தில் திளைத்திருக்க, மனதிற்கு மகிழ்வளிக்கும் அழகான இளவேனிற் காலம் கழிந்தது. அறம் தெரிந்தவரான இராமன் பகலின் முற்பகுதியில் அறக் கடமைகளை செய்துவிட்டு, பிற்பகுதியை அந்தப்புரத்தில் கழித்தார். சீதையும் பகல் வேளையின் முற்பகுதியில் தெய்வ வழிபாடுகளைச் செய்துவிட்டு, மாமியார்கள் அனைவருக்கும் சமமான முறையில் பணிவிடை செய்தாள். பின்னர் கண்கவர் அணிகலன்களை அணிந்துகொண்டு, தேவலோகத்தில் இந்திரன் அருகே இந்திராணி செல்வதைப்போல இராமனிடம் சென்றாள்.

அப்படி சென்ற ஒருநாள் தன் மனைவி கருவுற்றிருக்கும் மங்கல அடையாளங்களைக் கண்ட இராமன், "ஓ... அப்படியா?'' என்று அளவற்ற உவகையுடன் கேட்டார்.

தெய்வமகள் போன்று சிறந்த லட்சணங் கள் கொண்ட சீதையைப் பார்த்து, "தேவி, உன் வயிற்றிலிருந்து சந்ததியைப் பெறும் நற்காலம் வந்திருக்கிறது. அழகியே...

உனக்கு என்ன வேண்டுமென்று சொல். உன் விருப்பத்தை நிறைவேற்றிவைக்கிறேன்'' என்றார்.

அதைக்கேட்டு சற்றே புன்னகை புரிந்த சீதை, "ரகுவம்ச பெருந்தகையே... முனிவர்கள் வாழும் புனிதமான தபோவனங் களை ஒருமுறை பார்க்கவேண்டுமென்று ஆசைப்படுகிறேன். கங்கைக் கரையில் இருந்துகொண்டு கனி, கிழங்குகளை உண்டு கடுந்தவம் புரியும் ஆன்மவலிமை மிக்க முனிவர்களுடன் இருக்க விரும்பு கிறேன். மகாத்மாக்கள் வாழும் அந்த தபோவனத்தில் ஒரு இரவாவது தங்கவேண்டும் என்பது என் விருப்பம்'' என்றாள்.

அதைக்கேட்ட இராமன், "கவலைப் படாதே. அவ்வாறே செய்யலாம். நாளைக் காலை நீ நிச்சயமாக காட்டுக்குச் செல்வாய்'' என்று வாக்குறுதி தந்தார். இவ்வாறு மைதிலிடம் கூறிய இராமன் எழுந்து, நடுக்கூடத்தைக் கடந்து நண்பர்கள் புடைசூழ சென்றார்.

43-ஆவது சர்க்கம் பத்ரன் சொன்னது

நாட்டு நிகழ்வுகளைப் பலவிதமாகப் புனைந்து நகைச்சுவையுடன் கூறுவதில் வல்லவர்களான விஜயன், மதுமத்தன், காசியபன், பிங்கலன், குலன், சுராஜி, காளியன், பத்ரன், தந்தவக்த்ரன், சுமாகதன் போன்றோர், ஆசனத்தில் அமர்ந்திருந்த இராமனைச் சுற்றி அமர்ந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் பலவகையான வினோத செய்திகளை இராமனிடம் நகைச்சுவையுடன் விளக்கி கூறிக்கொண்டிருந்தனர்.

ஒரு செய்தி விளக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது இராமன் இடைமறித்து, "பத்ரா, நாட்டிலும் நகரத்திலும் பரவலாக இப்போது பேசப்படும் விஷயம் என்ன? நகரத்திலும் புறநகர்ப் பகுதிகளிலும் என்னைப் பற்றியும் சீதை, பரதன், லட்சுமணன், சத்ருக்னன் மற்றும் தாயார் கைகேயி பற்றியும் மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள்? அதைக் கூறு. ஏனென்றால் அறம் நழுவிய மன்னர் கள் காட்டிலும் நாட்டிலும் இகழ்ச்சியை அடைகிறார்கள்'' என்றார்.

இராமன் இவ்வாறு கூறியதும் பத்ரன் எழுந்து கைகளைக் கூப்பிக்கொண்டு, "அரசரே, நகரமக்கள் தங்களைப் பற்றி உயர்வாகப் பேசுகிறார்கள். பெருமானே, புருஷோத்தமரே! இராவணனைக்கொன்று தாங்கள் பெற்ற வெற்றியைக் குறித்து நகரமக்கள் விரிவாகப் பேசுகிறார்கள்'' என்றான்.

அதைக்கேட்ட இராமன், "முழுமையான விவரங்களை உள்ளது உள்ளபடியே கூறு. நகரமக்கள் கூறும் நல்ல கருத்துகளை ஏற்று அந்த நற்செயல்களைத் தொடர்ந்து செய்வேன். நல்லவை அல்ல என்று மக்கள் கருதும் செயல்களைச் செய்யாதிருப்பேன். சஞ்சலப்படாமல், அஞ்சாமல், கவலையை அகற்றி, குடிமக்கள் என்னைப்பற்றி என்ன குற்றம் கூறுகிறார்கள் என்பதைச் சொல்வாயாக'' என்றார்.

இவ்வாறு இராமபிரான் தெளிவாகக் கேட்டவுடன் பத்ரன் மனதை ஒருமுகப்படுத்தி கைகளைக் கூப்பியவண்ணம், "மன்னரே நகரமக்கள் நாற்சந்ததிகளிலும் கடைத்தெருக்களிலும் சாலைகளிலும் தோட்டம் துரவுகளிலும் தங்களைப்பற்றி புகழ்ச்சியாக மட்டு மின்றி இகழ்ச்சியான சொற்களையும் கூறுகிறார்கள்.

"பெருங்கடலில் இராமன் பாலம் கட்டினாரே. எவ்வளவு பெரிய அரிய செயல்! இதற்குமுன் தேவர்கள், தானவர்களாலும்கூட இத்தகைய மகத்தான செயல் செய்யப்பட்டதாகக் கேள்விப்பட்டதில்லை. எதிர்த்து வெற்றிகொள்ள முடியாத இராவணன் படைவீரர்கள், வாகனங்களுடன் அழிக்கப்பட்டான். அரக்கர்கள், வானரர் கள், கரடிகள் இராமன் வசப்பட்டனர்.

போரில் இராவணனை வென்று சீதையைக் கொண்டுவந்தார். அவளை இராவணன் தொட்டுத் தூக்கிச் சென்றான் என்பதை மனதில்கொள்ளாமல் தன் மாளிகைக்கு மீண்டும் அழைத்துவந்தார். முன்னர் இராவணன் பலவந்தமாகக் கைப்பற்றி தன் மடியில் வைத்துச்சென்ற சீதையுடன் உறவாடுவதில் அவருக்கு எப்படிதான் மகிழ்ச்சி ஏற்படும்?

சீதையை இலங்கைக்குக் கொண்டு சென்றான் இராவணன். அங்கு உல்லாச பூங்காவன அசோகவனத்தில் வெகுநாட்கள் வைத்திருந்தான். இப்படி அரக்கர் பிடியில் சிக்கியிருந்த சீதையிடம் இராமன் வெறுப்பு காட்டவில்லையே. இனிமேல் எங்கள் மனைவிகளுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நாங்களும் பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான். ஏனென்றால் மன்னர் எவ்வழியோ மக்களும் அவ்வாறுதான்.'

அரசரே, நகரமக்கள், புறநகர்மக்கள் அனைவரும் இப்படி பலவாறாகப் பேசிக்கொள்கிறார்கள்.''

பத்ரன் கூறியதைக்கேட்ட இராமன் மிகவும் துயரமடைந்து நண்பர்களைப் பார்த்து, "இது சரியா, இல்லையா என்று எனக்குக் கூறுங்கள்'' என்றார்.

அனைவரும் தரையில் விழுந்து வணங்கி தாழ்ந்த குரலில், "பத்ரன் கூறியது சரியே. சந்தே கத்திற்கு இடமேயில்லை'' என்றார்கள். எதிரிகளை வெல்லும் இராமன் இவ்வாறு அவர்கள் கூறியதைக் கேட்டதும் நண்பர் களுக்கு விடைகொடுத்து அனுப்பினார்.

44-ஆவது சர்க்கம் லட்சுமணன் முதலியோரை அழைப்பித்தல்

நண்பர்களை அனுப்பிவிட்டு இராமன் பத்ரன் கூறியதை நன்கு ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்து, வாயிற்காப்போனிடம், "சுமித்திரையின் மகனும் அங்க லட்சணம் பொருந்தியவனுமான லட்சுமணனையும், பெரும்பேறு பெற்றவனான பரதனையும், யாராலும் வெல்லமுடியாத சத்ருக்னனையும் உடனே அழைத்துவா'' என்றார்.

அதைக்கேட்டு தலைகுனிந்து வணங்கி விட்டு லட்சுமணனின் இல்லத்துக்கு விரைந்துசென்று, எவ்விதத் தடையுமின்றி உள்ளே நுழைந்தான். லட்சுமணனைக் கண்டு கைகுவித்து வாழ்த்து கூறி, "மன்னர் தங்களைப் பார்க்க விரும்புகிறார். வாருங்கள்; உடனே செல்லலாம்'' என்றான். அண்ணனின் ஆணையைக்கேட்ட லட்சுமணன் "சரி" என்று கூறி, இராமனுடைய மாளிகைக்கு தேரில் விரைந்து சென்றான். அதன்பின் வாயிற்காப்போன் பரதனிடம் சென்று கைகூப்பி வாழ்த்துக் கூறி வணக்கத்துடன்,

"அரசர் தங்களைக் காண விரும்புகிறார்'' என்றான். அவனது சொற்களைக்கேட்ட பரதன் ஆசனத்திலிருந்து உடனே துள்ளி யெழுந்து நடந்தே விரைந்து சென்றான்.

அவன் செல்வதைக்கண்ட வாயிற்காப்போன் அடுத்து விரைவாக சத்ருக்னன் இல்லம் சென்று கைகூப்பி வணங்கி, "தங்களைக் காண அரசர் விரும்புகிறார். லட்சுமணரும் பரதரும் முன்னமே சென்றுவிட்டார்கள்'' என்று கூறினான். அதைக்கேட்ட சத்ருக்னன் சிம்மாசனத்திலிருந்து உடனே எழுந்து இராமனை எண்ணி தரையில் விழுந்து வணங்கிவிட்டு இராமனது இருப்பிடம் நோக்கி விரைந்துசென்றான்.

தொடர்ந்துசென்ற வாயிற்காப்போன் இராமனிடம் சென்று வணங்கி, சகோதரர் கள் வந்துவிட்டதைத் தெரிவித்தான்.

அதைக்கேட்ட இராமன் கவலையால் கலங்கிய மனத்துடன், தலையைத் தாழ்த்திக் கொண்டு மெல்லிய குரலில் வாயிற்காப் போனிடம், "அவர்களை உடனே உள்ளே அனுப்பு. என் வாழ்க்கை அவர்களிடம்தான் இருக்கிறது. அவர்கள் என் உயிர்; எனக்கு விருப்பமானவர்கள்'' என்றார்.

மன்னர் உத்தரவிட்டதும் சகோதரர்கள் கைகளைக் கூப்பியவண்ணம் ஆவல்கொண்ட மனதினராக மண்டபத்திற்குள் நுழைந்தார்கள்.

தீய கோள்களால் சூழப்பட்ட சந்திரனைப் போல- ஒளியிழந்த மாலைநேர சூரியனைப் போல இராமனது முகம் காணப்பட்டது.

அவரது கண்கள் கண்ணீரால் நிரம்பி யிருந்தன. வாடிய தாமரைபோல அவரது முகம் சோபை இழந்திருந்ததைக் கண்டார்கள்.

சகோதரர்கள் மூவரும் இராமனுடைய திருவடிகளில் தலைவைத்து வணங்கினார் கள். ஒருமுகப்பட்ட மனதுடன் அவர் எதிரே நின்றனர். அப்போதும் இராமனது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.

இரு கரங்களாலும் அவர்களைக் கட்டியணைத்து, திகைப்பினால் சோர்ந்திருந்த அவர்களின் உணர்வைத் தட்டியெழுப்பி, "ஆசனத்தில் அமருங்கள்'' என்று கூறினார்.

அவர்கள் அமர்ந்ததும் இராமன், "அரச குமாரர்களே, நீங்கள்தான் எனக்கு அனைத்து செல்வங்களும்! நீங்களே எனது வாழ்க்கையின் ஆதாரம். உங்களால் வழங்கப்பட்ட நாட்டில்தான் நான் ஆட்சி புரிந்துகொண்டிருக்கிறேன். நீங்கள் அனைவரும் அறநூல்களைக் கற்றறிந்திருக்கிறீர்கள். அவற்றில் கூறப் பட்டுள்ள நெறிகளைக் கடைப்பிடிக் கிறீர்கள். உங்கள் தெளிந்த அறிவும் உறுதி யாக உள்ளது. இப்போது நான் சொல்லப் போகும் ஒரு பணியை நீங்கள் நிறைவேற்றித் தரவேண்டும்'' என்றார்.

இவ்வாறு இராமன் கூறியதைக் கேட்டதும் அவர்கள் எச்சரிக்கையடைந்து, தவிக்கும் மனதுடன் மன்னர் என்ன சொல்லப் போகிறாரோ என்று மனம் பதைத்தனர்!

(தொடரும்)