49-ஆவது சர்க்கம்
வால்மீகி ஆசிரமத்தை அடைவது வால்மீகி மகரிஷியின் ஆசிரமத்திற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த முனிவர் களின் பிள்ளைகள், சீதை அழுது கொண்டிருப் பதைக் கண்டதும் வால்மீகி மகரிஷி இருந்த இடத்திற்கு ஓடிச் சென்றனர். மாமுனிவரின் பாதங்களில் விழுந்து வணங்கிய அவர்கள் சீதை உரத்த குரலில் அழுது கொண்டிருப்பதை அவரிடம் கூறினர்.
"ஐயனே, இங்கு இதற்குமுன் நாம் பார்த்திராத ஒரு பெண், செந்திருவைப் போன்றவள், மாட்சிமைமிக்க யாரோ ஒருவருடைய மனைவி மன மயக்கத்தினால் வாடிய முகத்துடன் அழுதுகொண்டிருக்கி றாள். யாரோ ஒரு உத்தமப் பெண்மணி துயரத் துடன் தென்படுகிறாள். தேவலோகத்திலிருந்து தவறிவிழுந்த தேவதையைப்போல விளங்கும் அவளைத் தாங்கள் வந்து காண வேண்டும். உரத்த குரலில் அவள் அழுது கொண்டிருக்கிறாள். ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியிருக்கிறாள்.
மனக்கவலை, உடல் துயரம் ஆகியவற்றை அனுபவிக்கத்தக்கவள் அவளல்ல. தன்னந் தனியாக இருக்கிறாள். ஆதரவற்றவர்போல் பரிதாபமாகக் காணப்படுகிறாள். அவளை நாங்கள் பார்த்தோம். ஒரு மானுடப் பெண் ணாக அவளை நாங்கள் கருதவில்லை. தாங்கள் அவளுக்கு நல்லமுறையில் உபச்சாரம் செய்ய வேண்டும். இந்த ஆசிரமத்திற்கு அருகிலேயே அவள் காணப்படுவதால் தங்களையே அவள் சரணடைந்திருக்கிறாள். குணவதியான அவள் தன்னைக் காப்பாற்றக்கூடிய ஒருவரைத் தேடிக் கொண்டிருக்கிறாள். பகவானே, தாங்கள்தான் அவளைக் காப்பாற்றவேண்டும்'' என்றனர்.
அவர்கள் கூறியதைக் கேட்டதும் அறமறிந்தவரான வால்மீகி முனிவர் தவத்தினால் அடைந்த ஞான திருஷ்டியால் நிகழ்ந்தவற்றை அறிந்து, மனதிற்குள் ஒரு முடிவெடுத்து மைதிலி இருந்த இடத்திற்கு வேகமாகச் சென்றார். பெரும் அறிவாளியான அவர் புறப்பட்டுச் செல்வதைக்கண்ட சீடர்களும் அவரைப் பின்தொடர்ந்தனர். அர்க்கிய தீர்த்தம் எடுத்துக்கொண்டு சிறிது தூரம் நடந்து, காண்பதற்கினிய கங்கைக் கரையில் அந்த இடத்தை அடைந்தார். அங்கே இராமச்சந்திர மூர்த்தியின் அன்புக்குரிய மனைவி ஆதரவற்ற ஒரு பெண்ணைப்போல இருப்பதைக் கண்டார்.
சோகச் சுமையினால் வருந்திக்கொண்டி ருக்கும் சீதையை நோக்கி, அவளுக்கு மன மகிழ்ச்சியை உண்டாக்குவதுபோல மென்மை யான குரலில், "கற்புக்கரசியே, நீ தசரதனுடைய மருமகள்; இராமனுடைய பாசத்துக்குரிய பட்டத்தரசி; ஜனக மன்னருடைய மகள்.
உன்னை வரவேற்கிறேன். தியான சமாதி நிலையில், ஒன்றிய மனதுடன் இருந்த நான் நீ வந்திருப்பதை அறிந்துகொண்டேன். அதற்கான காரணத்தையும் என் மனம் தெரிந்துகொண்டது. பெரும்பேறு பெற்றவளே! உன்னைப் பற்றிய செய்திகள் அனைத் தையும் உண்மையாக நான் அறிவேன். இந்த மூன்று உலகங்களிலும் நடப்பது அனைத் தையும் அறிவேன்.
சீதையே, தவத்தால் அடைந்த ஞான திருஷ்டியால் நீ பாவமற்றவள் என்பதை நான் அறிந்திருக்கிறேன். வைதேகி, இப்போது நீ பாதுகாப்புடன் இருக்கிறாய். அதனால் கவலைப்படாதே. குழந்தாய், என்னுடைய ஆசிரமத்திற்கு அருகில் தவம்செய்யும் தவப்பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது குழந்தையைப்போல உன்னை அன்புடன் பராமரிப்பார்கள். கவலைப் படாதே. பயத்தை அகற்று. இந்த அர்க்கியத்தை ஏற்றுக்கொள். உன்னுடைய சொந்த வீட்டுக்கு வந்திருப்பதாக நினைத்துக்கொள்.
49-ஆவது சர்க்கம்
வால்மீகி ஆசிரமத்தை அடைவது வால்மீகி மகரிஷியின் ஆசிரமத்திற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த முனிவர் களின் பிள்ளைகள், சீதை அழுது கொண்டிருப் பதைக் கண்டதும் வால்மீகி மகரிஷி இருந்த இடத்திற்கு ஓடிச் சென்றனர். மாமுனிவரின் பாதங்களில் விழுந்து வணங்கிய அவர்கள் சீதை உரத்த குரலில் அழுது கொண்டிருப்பதை அவரிடம் கூறினர்.
"ஐயனே, இங்கு இதற்குமுன் நாம் பார்த்திராத ஒரு பெண், செந்திருவைப் போன்றவள், மாட்சிமைமிக்க யாரோ ஒருவருடைய மனைவி மன மயக்கத்தினால் வாடிய முகத்துடன் அழுதுகொண்டிருக்கி றாள். யாரோ ஒரு உத்தமப் பெண்மணி துயரத் துடன் தென்படுகிறாள். தேவலோகத்திலிருந்து தவறிவிழுந்த தேவதையைப்போல விளங்கும் அவளைத் தாங்கள் வந்து காண வேண்டும். உரத்த குரலில் அவள் அழுது கொண்டிருக்கிறாள். ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியிருக்கிறாள்.
மனக்கவலை, உடல் துயரம் ஆகியவற்றை அனுபவிக்கத்தக்கவள் அவளல்ல. தன்னந் தனியாக இருக்கிறாள். ஆதரவற்றவர்போல் பரிதாபமாகக் காணப்படுகிறாள். அவளை நாங்கள் பார்த்தோம். ஒரு மானுடப் பெண் ணாக அவளை நாங்கள் கருதவில்லை. தாங்கள் அவளுக்கு நல்லமுறையில் உபச்சாரம் செய்ய வேண்டும். இந்த ஆசிரமத்திற்கு அருகிலேயே அவள் காணப்படுவதால் தங்களையே அவள் சரணடைந்திருக்கிறாள். குணவதியான அவள் தன்னைக் காப்பாற்றக்கூடிய ஒருவரைத் தேடிக் கொண்டிருக்கிறாள். பகவானே, தாங்கள்தான் அவளைக் காப்பாற்றவேண்டும்'' என்றனர்.
அவர்கள் கூறியதைக் கேட்டதும் அறமறிந்தவரான வால்மீகி முனிவர் தவத்தினால் அடைந்த ஞான திருஷ்டியால் நிகழ்ந்தவற்றை அறிந்து, மனதிற்குள் ஒரு முடிவெடுத்து மைதிலி இருந்த இடத்திற்கு வேகமாகச் சென்றார். பெரும் அறிவாளியான அவர் புறப்பட்டுச் செல்வதைக்கண்ட சீடர்களும் அவரைப் பின்தொடர்ந்தனர். அர்க்கிய தீர்த்தம் எடுத்துக்கொண்டு சிறிது தூரம் நடந்து, காண்பதற்கினிய கங்கைக் கரையில் அந்த இடத்தை அடைந்தார். அங்கே இராமச்சந்திர மூர்த்தியின் அன்புக்குரிய மனைவி ஆதரவற்ற ஒரு பெண்ணைப்போல இருப்பதைக் கண்டார்.
சோகச் சுமையினால் வருந்திக்கொண்டி ருக்கும் சீதையை நோக்கி, அவளுக்கு மன மகிழ்ச்சியை உண்டாக்குவதுபோல மென்மை யான குரலில், "கற்புக்கரசியே, நீ தசரதனுடைய மருமகள்; இராமனுடைய பாசத்துக்குரிய பட்டத்தரசி; ஜனக மன்னருடைய மகள்.
உன்னை வரவேற்கிறேன். தியான சமாதி நிலையில், ஒன்றிய மனதுடன் இருந்த நான் நீ வந்திருப்பதை அறிந்துகொண்டேன். அதற்கான காரணத்தையும் என் மனம் தெரிந்துகொண்டது. பெரும்பேறு பெற்றவளே! உன்னைப் பற்றிய செய்திகள் அனைத் தையும் உண்மையாக நான் அறிவேன். இந்த மூன்று உலகங்களிலும் நடப்பது அனைத் தையும் அறிவேன்.
சீதையே, தவத்தால் அடைந்த ஞான திருஷ்டியால் நீ பாவமற்றவள் என்பதை நான் அறிந்திருக்கிறேன். வைதேகி, இப்போது நீ பாதுகாப்புடன் இருக்கிறாய். அதனால் கவலைப்படாதே. குழந்தாய், என்னுடைய ஆசிரமத்திற்கு அருகில் தவம்செய்யும் தவப்பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது குழந்தையைப்போல உன்னை அன்புடன் பராமரிப்பார்கள். கவலைப் படாதே. பயத்தை அகற்று. இந்த அர்க்கியத்தை ஏற்றுக்கொள். உன்னுடைய சொந்த வீட்டுக்கு வந்திருப்பதாக நினைத்துக்கொள். வருந்தாதே'' என்றார்.
அவர் பேசியதைக்கேட்ட சீதை தலை குனிந்து அவரது திருவடிகளில் வணங்கி கைகளைக் கூப்பியவாறு, "அவ்வாறே செய்கிறேன்'' என்றாள்.
உடனே புறப்பட்ட முனிவரைப் பின் தொடர்ந்து கூப்பிய கரங்களுடன் சென்றாள் வைதேகி. வால்மீகி முனிவர் வந்துகொண்டி ருப்பதைப் பார்த்த ரிஷிபத்தினிகள் மகிழ்ச்சி யுடன் வரவேற்று, "உத்தம முனிவரே, தங்கள் வரவு நல்வரவாகுக. தாங்கள் இங்குவந்து வெகுகாலம் ஆகிவிட்டது. நாங்கள் அனைவரும் தங்களை வணங்குகிறோம். நாங்கள் தங்களுக்கு என்ன சேவை செய்யவேண்டும்?'' என்று கேட்டார்கள்.
அதற்கு வால்மீகி முனிவர், "அறிவுடையவ னான இராமனுடைய பத்தினி சீதை இங்கு வந்திருக்கிறாள். இவள் தசரதனுடைய மருமகள்; ஜனகனுடைய மகள்; கற்புக்கரசி; குற்றமில்லாதவள்; கணவனால் கைவிடப்பட்டவள்; எப்போதும் என்னால் காப்பாற்றத்தக்கவள். இவளிடம் நீங்கள் அனைவரும் மிகவும் நேசமாக இருக்க வேண்டும். நான் சொன்னதாலும், இவளுடைய சுய கௌரவத்தாலும் உங்களுடைய சிறந்த மரியாதைக்குரியவள் இவள்'' என்றார்.
வைதேகியை முனி பத்தினி களிடம் ஒப்படைத்துவிட்டு, "கவனமாக இருங்கள்'' என்று வலியுறுத்திக் கூறிவிட்டு பெரும் தவசியான வால்மீகி முனிவர் தன் சீடர்களால் சூழப்பெற்றவராக ஆசிரமம் திரும்பினார்.
50-ஆவது சர்க்கம்
சுமந்திரர் ரகசியத்தை வெளிப்படுத்துதல் சீதை, ரிஷி பத்தினிகளுடன் ஆசிரமத் திற்குச் சென்றுவிட்டதை தூரத்திலிருந்து கண்ட லட்சுமணன் பயங்கரமான மன கொதிப்பை அடைந்தான். அவன் மந்திரா லோசனைகளில் கலந்துகொள்ளும் சுமந்திரரைப் பார்த்து, "தேரோட்டியே, இனி சீதையைப் பிரிந்ததால் ஏற்படும் துயரத்தை இராமபிரான் அனுபவிப்பதைப் பார்க்கப் போகிறீர்கள். ஜனகனின் மகளும், தூய்மையான ஒழுக்கமுடைவளுமான மனைவி சீதையைத் துறப்பதென்பதைக் காட்டிலும் மிகப்பெரிய வேதனை வேறெது இராமபிரானுக்கு ஏற்படப்போகிறது? தேரோட்டியே, ராகவன் சீதையைத் துறந்ததற்குக் காரணம் விதியென்றே எண்ணுகிறேன். ஒருபோதும் விதியைமீறி செயல்படமுடியாது. எந்த ராகவன் கோபம் கொண்டால் தேவர், கந்தர்வர், அசுரர், அரக்கர்களைக் கொல்லும் ஆற்றல் படைத்த வரோ, அதே ராகவன் விதியை அனுசரித்துச் செல்கிறார்.
முன்பு தந்தையின் வாக்கின்படி மனித நடமாட்டமில்லாத தண்டகாரண்யத்தில் பதினான்கு ஆண்டுகளைக் கழித்தார். இப்போது சீதையை நாட்டிலிருந்து வெளியேற்றியதென்பது வனவாசத்தைவிட மிகப்பெரும் துயரத்தைத் தருவது. ஆனால் நகரமக்கள் பேசுவதைக் கேட்டு இவ்வாறு செய்தது சற்றும் கருணையற்ற செயலென்றே எனக்குத் தோன்றுகிறது. தேரோட்டியே, சீதையின்மேல் நியாயமற்ற பழிச்சொற்களைக் கூறும் மக்க ளுக்கு அஞ்சி, புகழையழிக்கும் இந்தக் காரியத்தை செய்ய இராமன் எந்த அறநெறியைப் பின்பற்றினார்?'' என்று பலவித மாக லட்சுமணன் கூறினான்.
இவற்றையெல்லாம் கேட்ட அறிவாளி யான சுமந்திரர் அடக்கத்துடன், "சுமித்திரை யின் மகனே, சீதையைக் குறித்து நீங்கள் வேதனை அடையவேண்டாம். ஏனென்றால் உங்கள் தந்தை தசரதனிடம் வேத விற்பன்னர் கள் கூறியது எனக்குத் தெரியும். "துன்பத்தை அனுபவிக்க நேரிட்டாலும் இராமன் நிச்சயமாக சௌக்கியமாகவே இருப்பார். அவர் நிச்சயமாக அன்புக்குரியவர்களைப் பிரியநேரிடும். உன்னையும் (தசரதன்), சீதையையும், பரதன், சத்ருக்னனையும் நீண்ட காலத்துக்குப் பின்னர் இராமன் துறந்து விடுவார்' என்று கூறினர்.
லட்சுமணா, இந்த செய்தியை உன்னிடமோ பரதனிடமோ சொல்லக்கூடாது என்று துர்வாச முனிவர் கூறிய ரகசியத்தை மன்னர் என்னிடம் கூறினார். மேன்மக்கள் கூடி யிருந்த இடத்தில் நானும் வசிஷ்டரும் கேட்டுக் கொண்டிருக்கும்போது துர்வாச முனிவரால் இவ்வாறு கூறப்பட்டது. துர்வாசரின் சொற்களைக்கேட்ட பின்னர் தசரத மன்னர்,
"தேரோட்டியே, இந்த செய்தியை மக்களிடம் எப்போதும் நீ கூறக்கூடாது' என்று ஆணை யிட்டார். உலகைக் காக்கும் மன்னரின் சொற்களை ஒருபோதும் பொய்யாக்கிவிடக் கூடாது என்பதில் நான் மிக கவனமாக இருந்துவந்தேன். இந்த ரகசியத்தை நான் ஒருக்காலும் உங்களிடம் கூறக்கூடாதுதான். கேட்க விருப்பமிருந்தால் கேளுங்கள்.
முன்னொரு சமயம் இந்த ரகசியத்தை மற்றவர்களுக்குக் கூறக்கூடாதென்று அரசர் ஆணையிட்டிருந்தாலும், இப்போது உங்களுக்கு நான் அதைக் கூறப்போகிறேன். விதியை மீறி செயல்படமுடியாது. அதனால் தான் இத்தகைய துன்பமும் வருத்தமும் வந்திருக்கின்றன. இந்த விஷயத்தை பரத சத்ருக்னர்களிடம் நீங்கள் கூறக்கூடாது" என்றார்.
இவற்றைக் கேட்ட லட்சுமணன் "உண்மையைக் கூறுங்கள்'' என்று அவரிடம் சொன்னான்.
51-ஆவது சர்க்கம்
துர்வாசர் சொன்னதைக் கூறிய சுமந்திரர் லட்சுமணனால் தூண்டப்பட்ட தேரோட்டி, துர்வாசர் கூறிய செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.
அத்திரி மகரிஷியின் புதல்வரும், துர்வாசர் என்னும் பெயர் கொண்டவருமான மாமுனிவர் முன்னொரு காலத்தில், வசிஷ்டருடைய ஆசிரமத்தில் மழைக் காலத்தில் அனுஷ்டிக்கப்படவேண்டிய சாதுர்மாஸ்ய விரதத்தை மேற் கொண்டிருந்தார். ஆற்றல்மிக்க வரும் பெரும்புகழ் படைத்த வருமான உங்கள் தந்தை தசரதர், அரச புரோகிதரும் மகாத்மா வுமான வசிஷ்டரைக் காண்பதற்கு அந்த ஆசிரமத்திற்குச் சென்றார்.
வசிஷ்டரையும், அவரது இடப்பக்கத்தில் சூரியனைபோல் ஒளிவீசிக்கொண்டு, ஆன்மப் பொலிவினால் பிரகாசித்துக்கொண்டு வீற்றிருந்த துர்வாசரையும் பார்த்து அவர் களுக்குப் பணிவுடன் வணக்கம் கூறினார்.
அவர்கள் மன்னனுக்கு நல்வரவு கூறி, ஆசனம் தந்து, பாத்யம் கொடுத்து, பழம், கிழங்குகள் வழங்கி உபசாரம் செய்தனர்.
தசரதர் அந்த முனிவர்களின் அருகில் அமர்ந்துகொண்டார். அங்கிருந்த ரிஷிகள் ஒவ்வொருவரும் இனிய வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருக்கும்போதே நண்பகல் கடந்துவிட்டது. அவ்வாறு பேசிக்கொண்டி ருந்தபோது ஒரு கட்டத்தில் தசரதர் கைகளைக் கூப்பிக்கொண்டு துர்வாசரைப் பார்த்து, "இறைவனே, எனது குலம் எவ்வளவு காலம் நீடிக்கும்? என் மகன் இராமனுக்கு ஆயுள் எவ்வளவு? மற்ற பிள்ளைகளுக்கும் எவ்வளவு ஆயுள்? இராமனுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்கு எவ்வளவு வயது? என்னுடைய குலத்தின் தொடர்ச்சியைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவலால் கேட்கிறேன்'' என்றார்.
தசரதர் கூறியதைக்கேட்ட துர்வாசர், "மன்னரே, மிகப்பழைய காலத்தில் நடந்த நிகழ்ச்சி இது. தேவர்களுக்கும் அசுரர் களுக்குமிடையே நடந்த போரில் தேவர் களால் தாக்கப்பட்ட அசுரர்கள், பிருகு முனிவரின் பத்தினியைச் சரணடைந்தனர்.
அவள் அவர்களுக்கு அபயமளித்தாள். அங்கு அச்சமில்லாமல் அசுரர்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். அசுரர்களுக்கு அடைக் கலம் கொடுத்ததைக் கண்டு கோபம் கொண்ட மகாவிஷ்ணு, கூரிய முனைகளு டைய சக்ராயுதத்தால் அவளை வெட்டினார்.
தன் மனைவி கொல்லப்பட்டதைக் கண்ட பிருகு முனிவர் கோபம்கொண்டு, எதிரி களின் குலத்தை நாசம்செய்யும் மகாவிஷ்ணுவுக்கு சாபம் கொடுத்தார். "ஜனார்த்தனரே, கொல்லத்தகாத என் மனைவியை பெரும் கோபத்திற்கு ஆட்பட்டு கொன்றுவிட்டீர்கள். அதனால் நீங்கள் மானுட உலகில் பிறக்கக் கடவீர். அங்கு பல ஆண்டுகள் மனைவியைப் பிரிந்து வாடும் துயரத்தை அனுபவிக்கப் போகிறீர்கள்'' என்றார்.
சாபம் கொடுத்தபிறகு தனது சாபம் பலிக்காமல் போய்விடுமோ என்றெண் ணிய பிருகு முனிவர், தனது சாபம் பலிக்க வேண்டுமென்பதற்காக அந்த மகாவிஷ்ணு வையே வழிபட்டார். தவத்தினால் ஆராதிக்கப்படுபவரும், அடியார்களிடம் அன்புகொண்டவருமான மகாவிஷ்ணு, "எல்லா உலக மக்களுக்கும் மகிழ்ச்சி ஏற்படவேண்டும் என்பதற்காக உங்கள் சாபத்தை ஏற்றுக்கொள்கிறேன்' என்றார்.
அரசர்களுக்கெல்லாம் அரசரே, அனைவருக்கும் மரியாதை கொடுப்பவரே. எல்லையில்லா தவ ஆற்றல் பெற்ற பிருகு முனிவரால் முன்பு சபிக்கப் பட்டவர் மகாவிஷ்ணு. அவரே மூவுலகங்களிலும் பெரும்புகழ் கொண்ட இராமன் என்னும் பெயரைத் தாங்கி இப்போது உங்கள் மகனாகப் பிறந்திருக்கி றார். பிருகுவினுடைய சாபத்தின் பயனை அடையப்போகிறார்.
அயோத்தியின் மன்னராக இராமன் நீண்டகாலம் ஆட்சி செய்வார். அப்போது மனைவி யின் பிரிவில் நெடுங்காலம் கழிந்துவிடும். இராமனை அண்டி வாழ்பவர்கள் சௌக்கியமாகவும் செல்வச் செழிப்புள்ளவர்களாகவும் இருப்பார்கள். பதினோராயிரம் வருடங்கள் இராமன் ஆட்சி செய்துவிட்டு பிரம்மலோகம் (வைகுண்டம்) செல்லப் போகிறார். (இராமன் பரப்பிரம்மம். அவருடைய உலகம் பிரம்மலோகம் என்பது கருத்து.) எவராலும் வெல்லமுடியாத இராமன் ஏராளமாக பொருட்செலவு செய்து அஸ்வ மேத யாகங்கள் பலவற்றை செய்யப் போகிறார்.
கணக்கில்லாத அரச பரம்பரையையும் நிலைநிறுத்தப் போகிறார். இராமன், சீதை மூலமாக இரண்டு மகன்களை அடைவார். சீதையின் மகன்களுக்கு அயோத்தி யில் பட்டம் சூட்டப்போகிறார். இது சத்தியம்; சந்தேகமில்லை'' என்று வரப்போகும் பரம்பரையைப் பற்றி தகவல்களை முனிவர் கூறினார்.
இவ்வாறு கூறிவிட்டு முனிவர் பேச்சை நிறுத்தி மௌனமடைந்தார். அதைக் கேட்ட தசரதர் அவர்களை வணங்கி விட்டுத் தன் நகரத்திற்குத் திரும்பினார்.
முன்னொரு காலத்தில் முனிவரால் கூறப் பட்ட இந்த விவரங்களை நானும் கேட்டுக்கொண்டிருந்தேன். எவரிடமும் கூறாமல் என் இதயத்திற்குள்ளேயே வைத்திருந்தேன். ஏனென்றால் அரசருடைய ஆணை மீறப்பட்டதாக ஆகக்கூடாது. எனவே சீதைக்கும் இராமனுக்கும் நேர்ந்துவிட்ட துன்பங்கள் குறித்து நீங்கள் வேதனைப் படவேண்டாம்.''
தேரோட்டியின் ஆச்சரியமான பேச்சைக் கேட்ட லட்சுமணன் ஈடில்லாத மகிழ்ச்சியடைந்தான்.
"அப்படியா... நல்லது!'' என்று பதில் கூறினான். பயணம் செய்துகொண்டிருக்கும் சுமந்திரருக்கும் லட்சுமண னுக்குமிடையே இவ்வாறு உரையாடல் நடந்துகொண்டி ருந்தபோது சூரியன் மறையத் தொடங்கினான். அவர்கள் கேசினீ நதிக்கரையில் இரவைக் கழித்தனர்.
52-ஆவது சர்க்கம்
இராமனுக்கு லட்சுமணன் ஆறுதல் கூறுதல் லட்சுமணன் கேசினீ நதிக்கரையில் அன்றிரவைக் கழித்துவிட்டு, பொழுது விடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான். நண்பகல் வேளையில் அவர்களது விசாலமான ரதமானது பல்வகை செல்வங்களைக் கொண்டதும், மன மகிழ்ச்சியும் உடல்வலிமையும் கொண்ட மக்கள் நிரம்பியதுமான அயோத்தி நகருக்குள் பிரவேசித்தது. அப்போது லட்சுமணன் மிகவும் பரிதாப உணர்வையடைந்தான். இராமனுடைய திருவடிகளை வணங்கு வதற்காக அவரை நெருங்கும்போது நான் அவருக்கு என்ன சொல்வேன் என்று மனம் கலங்கினான். இவ்வாறு அவன் சிந்தித்துக்கொண்டிருக்கும்போது, முழு நிலவுபோல் ஒளிவீசுவதும் அகன்றதுமான இராமனுடைய மாளிகை எதிரில் தென்பட்டது. அரச மாளிகையின் வாயிலில் லட்சுமணன் தேரிலிருந்து இறங்கி, மனத் துயரத்தால் கவிழ்ந்த தலையுடன் எவராலும் தடுக்கப்படாமல் உள்ளே சென்றான்.
மிகவும் துயரத்துடன் சிம்மாசனத்தில் இராமன் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருகிக்கொண்டிருந்தது. நொந்துபோன மனதுடன் இருந்த லட்சுமணன் அவரது பாதங்களைப் பணிந்தான்.
மனதை ஒருமுகப்படுத்தி கைகளைக் கூப்பியவாறு, "மன்னரின் ஆணைப்படி, ஜனகர் மகளும் புகழ்பெற்றவரும் நன்னடத்தை உடையவருமான சீதையை கங்கைக் கரையில் வால்மீகி முனிவரின் புனிதமான ஆசிரமத்திற்கு அருகில் மன்னர் குறிப்பிட்ட இடத்தில் விட்டுவிட்டு, தங்கள் திருவடிகளுக்குப் பணிசெய்வதற்காக மீண்டும் திரும்பி வந்திருக்கிறேன். தாங்கள் வருத்தமடைய வேண்டாம். காலத்தின் போக்கு இவ்வாறாக இருக்கிறது.
தங்களைப்போன்ற துணிவுள்ள அறிவுடையோர் எதைக் குறித்தும் வருந்துவதில்லை. உலகத்தில் நாம் சேர்த்து வைப்பவை முடிவில் அழிந்துபோகின்றன. உச்சியின் முடிவு கீழே விழுவது; சேர்க்கையின் முடிவு பிரிவு; வாழ்க்கையின் முடிவு மரணம். அதனால் பிள்ளைகள், மனைவி, நண்பர், செல்வம் போன்றவற்றில் அதிக பற்றுதல் வைக்கக்கூடாது. ஏனென்றால் அவற்றைப் பிரிவது நிச்சயம்.
காகுத்தரே, ஆத்மாவினால் தன் ஆத்மாவையும், மனதால் மனதையும், எல்லா உலகங்களையும் அடக்கிவிடும் ஆற்றல் பெற்றவர் நீங்கள்.
அவ்வாறிருக்கும்போது தன்னைப் பற்றியுள்ள சோகத்தை அடக்கி வைப்பதொரு பொருட்டா?
தங்களைப்போன்ற ஆணேறு கள் இதுபோன்ற தருணங்களில் மனமயக்கம் அடைவதில்லை. தாங்கள் துக்கத்தை வெளிப் படுத்திக் காட்டினால் அந்தப் பழிச் சொல் மீண்டும் தங்களையே வந்துசேரும். மன்னரே, எந்த பழிச்சொல்லுக்கு அஞ்சி நீங்கள் சீதா பிராட்டியாரைத் தியாகம் செய்தீர்களோ, அதே அபவாதம் நகரமக்களால் பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை. எனவே தாங்கள் தைரியமாக மனதை ஒருநிலைப்படுத்தி, மனத்தளர்ச்சி உண்டாக்கும் சோகத்தைக் கைவிடுங்கள். தாங்கள் வேதனைப்பட வேண்டாம்'' என்று கூறினான்.
லட்சுமணன் இவ்வாறு கூறியதும் இராமன் மிகவும் அன்புடன் லட்சுமணனைப் பார்த்து, "லட்சுமணா, நீ கூறிய அனைத்தும் உண்மைதான். என் ஆணையை நீ நிறைவேற்றிவிட்டாய். அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். துக்கத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டேன். மன வேதனையைத் துரத்திவிட்டேன். உன்னு டைய இனிய சொற்களால் எனக்கு அமைதி கிடைத்துவிட்டது'' என்றார்.
(தொடரும்)