ஸ்ரீராகவேந்திர விஜயம்!

/idhalgal/om/shri-ragavendra

4

இரண்டாம் பாகம்

மந்த்ராலய மகானின் சிலிர்ப்பூட்டும் தொடர்!

யர்கதியடைய ஆச்சார்ய சம்பந்தம் அவசியம் இருத்தல் வேண்டும். ஊசிமுனையளவும் சுயநலமில்லாத, நெல்முனையளவும் கர்வமில்லாத, பெருத்த ஞானமுடைய, அமைதியான அறிவார்ந்த ஆச்சார்யன் ஒருவனுக்கு அமைவது பூர்வஜென்ம பலனேயாகும். அவர்மூலமாக, அவரே உருவாக அமைந்துவிட்டால் சொல்ல வேண்டியதேயில்லை; பேச்சும் செயலும் சத்தியமாகும். வாக்கும் போகப்போக பலிதமாகும். நாற்பது சம்ஸ்காரங்களில் மிக உயர்ந்தது உபநயனமே. உபநயனத்திலிருந்தே பால்யத்தில் வாழ்க்கைமுறையை உபதேசிக்க ஆரம்பித்துவிடுகின்றனர். நல்லன- தீயனவற்றை பால்யத்திலிருந்தே பிரித்தறிய சொல்லிக் கொடுக்கப்படுவதால் இயல்பாகவே நிதானம் வந்துவிடுகின்றது.

ஸ்ரீராகவேந்திரர் தெய்வீகப் பிறப்பாகையினால் அட்சயப் பாத்திரமாய் அள்ள அள்ளக்குறையாத புண்ணியம் அவரிடம் வளர்ந்துகொண்டே இருக்கின்றது. பூர்வாஸ்ரமத்தில் வேங்கடநாதனாக இருக்கையில் தந்தைமூலமாக, தமயன் குருராஜன்வழியாக, பின் முறையாக தமக்கை கணவர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார்மூலமாக, பின் மத்வ மடாதிபதி சுதீந்திரரிடம் நிலைகொண்டு தர்க்கம் மற்றும் இன்னபிற சாஸ்திரங்கள் கற்று, முறையான சந்நியாசத்திற்குப்பிறகு பூரண தகுதி பெற்று, மந்திர உபதேசம் பெற்று பீடாதிபதியாகப் பொறுப்பேற்றது என்பதெல்லாம் தங்குதடையின்றி நடந்ததும் சர்வ வியாபியான ஸ்ரீமன் நாராயணன் ஏற்கெனவே விதித்த ஒன்று.

எந்த தெய்வீக அவதாரமும் மானுடப் பிறப்பெடுப்பின், இப்பூவுலகின் அனைத்து விதிகளுக்கும் சத்தியத்திற்கும் கட்டுப்பட்டே அவதார நிகழ்வைப் பூர்த்தி செய்திருக்கின்றன. இதில் ஸ்ரீராமரும் சரி; ஸ்ரீராகவேந்திரரும் சரி- விதிவிலக்கல்ல. இங்கு கவனிக்கவேண்டிய ஒன்று- மகாசக்தி வாய்ந்த இவர்களுக்கு கல்வியும் உபதேசமும் காலத்திற்கான சம்பிரதாயமேயன்றி வேறல்ல. இப்படி விஸ்தாரமாகக் கூறுவதன் காரணம் ஸ்ரீராகவேந்திரர் முப்பிறவி எடுத்தவர். ஒவ்வொரு பிறவியிலும் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரங்களை நேரில் கண்டுணர்ந்து அனுபவித்தவர். ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீவாமனர், ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீஹயக்ரீவர் என்று கண்டவருக்கு அவர்கள் பரிபூரணமாக அருளினர். அதனாலேயே ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். இறந்தவரை உயிர்ப்பித்திருக்கிறார்; ஊமையைப் பேச வைத்திருக்கிறார்; இறுகிப்போன உலக்கையைத் துளிர்க்கச் செய்திருக்கிறார்; பார்வையிழந்தவர்களுக்குப் பார்வை கிடைத்திருக்கிறது. இனி வருகின்ற தொடரில் அவரின் முற்பிறவி பற்றியும், அதன் சிறப்புகளையும் நீங்கள் தெரிந்து, ஸ்ரீராகவேந்திரரின் பேரருளைப் புரிந்து, அவர்மீதான உங்களது பக்தி இன்னும் முதிர்ந்து கனிந்துவிடும் என்பது சர்வ நிச்சயம்.ஸ்ரீமடத்தில் ஸ்ரீராகவேந்திரர் தனது திருக்கரங்களால் ஸ்ரீமூலராமரின் பூஜைக்கு மலர் கொய்துகொண்டிருந்தார். ஒவ்வொரு மலரும் அவர் திருக்கரம் பட்டவுடனேயே செடியிலிருந்து தங்களை மென்மையாக விடுவித்துக்கொண்டு அவர் வசம் பிரியமுடன் சேர்ந்தன.

அவரது சீடர்களில் ஒருவனுக்கு மறுதினம் திருமணம். அவன் தனது குருவிடம் ஆசியும் வாழ்த்தும்பெற விரும்பி சங்கோஜத்துடன் தயங்கி நின்றுகொண்டிருந்தான். அவன் நிலையினை ஸ்ரீராயர் நன்குணர்ந்து புன்னகைத்தார். அவரது கருணா நயனங்கள் மேலும் கனிவு கூட்டின. பணிவுகாட்டிய சீடரை அருகழைத்தார்.

""என்னப்பா கிருஷ்ணா, திருமண ஏற்பாடுகளெல்லாம் நன்கு நடந்துகொண்டிருக்கின்றனவா?'' என்றார் புன்னகையுடனே.

""தங்களது ஆசிர்வாதத்தில் செவ்வனே நடக்கின்றன குருவே.''

""நீயும் உடனிருந்து செய்யவேண்டிய சம்பிரதாயங்களும் நிறையவே இருக்குமேயப்பா.''

""ஆம் ஸ்வாமி. அதற்காகத்தான் தங்களது அனுமதியும் ஆசிர்வாதமும் வேண்டி நிற்கிறேன்.''

""நீண்ட ஆயுளுடனும் நிறைந்த ஆரோக்கியத்துடனும் சௌக்கியமாக வாழ்வாயாக. உனது இல்லாள் தீர்க்கசுமங்கலியாக இருப்பாளாக'' என்று வாழ்த்தினார்.

அந்த சீடனுக்கு ஸ்ரீமடத்தினிலிருந்து நிறைவாய் பொன்னும் பொருளும் கொடுத்தனுப்பப்பட்டது. சக சீடர்கள் கேலியுடனும் கிண்டலுடனும் அவனை வழியனுப்ப, உள்ளிருந்த ராகவேந்திரர் அதைக்கேட்டு புன்னகைக்கவே செய்தார்.

அந்தத் திருமண வீடு மகிழ்ச்சியில் தளும்பிக்கொண்டிருந்தது. மங்கள நாணில் மஞ்சள் கமகமக்க, குங்குமமிட்டு மல்லிகைசூடிய மணப்பெண் தன் கணவனைக் கடைக்கண்ணால் ரசித்தாள். உருண்ட முகம், கொழுத்த கன்னம், அகன்ற நெற்றியில் திருமண், அடர்த்தியான கேசம், நுனியில் சிறுமுடிச்சிட்டு... அவள் கண்களுக்கு தன் கணவன் ஸ்ரீகிருஷ்

அந்தத் திருமண வீடு மகிழ்ச்சியில் தளும்பிக்கொண்டிருந்தது. மங்கள நாணில் மஞ்சள் கமகமக்க, குங்குமமிட்டு மல்லிகைசூடிய மணப்பெண் தன் கணவனைக் கடைக்கண்ணால் ரசித்தாள். உருண்ட முகம், கொழுத்த கன்னம், அகன்ற நெற்றியில் திருமண், அடர்த்தியான கேசம், நுனியில் சிறுமுடிச்சிட்டு... அவள் கண்களுக்கு தன் கணவன் ஸ்ரீகிருஷ்ணனாகவே தெரிந்தான். வெட்கப்பட்டாள்; தலைகவிழ்ந்தாள். தன் மனைவி கண்ணுக்கு நிறைவாக இருக்கிறாள்.

ragavendra

குழிவிழுந்த கன்னம், வெண்சங்கு கழுத்து, அதை அலங்கரிக்கும் மஞ்சள் மணம் வீசும் தாலிக்கயிறு, அழகான நெற்றியில் வட்ட குங்குமப் பொட்டு, நெற்றி வகிட்டில் மற்றொரு குங்குமத்தீற்றல்... பேரழகி தன் மனைவி என்ற பெருமிதத்தில் அவனுள் மகிழ்ச்சி பொங்கியது.

""தம்பதிகளுக்கு திருஷ்டி கழியுங்கோ... தெய்வக்களை. புருஷா யாராச்சும் இருந்தா பூசணி உடையுங்கோ.'' ஒரு வயதான பெண் இருவரின் கன்னம் வழித்து நெட்டி முறித்தாள்.

பிள்ளையைப் பெற்றவருக்கும் பெண் வீட்டாருக்கும் சந்தோஷம் அளவிட முடியாதபடிக்கு இருந்தது. பலவித பட்சணங்களுடன் சமையல் பிரமாதமாயிருந்தது. உண்ட ருசியின் திருப்தி அனைவரது முகங்களிலும் சந்தோஷமாகப் பரவியிருந்தது. மாப்பிள்ளை விடைபெறும் உறவுகளையும், தன் சகாக்களையும் உள்ளிருந்து வெளிவந்து மரியாதையுடன் விடைகொடுத்துக் கொண்டிருந்தான். புதுமனைவியிடம் ஓரிரு வார்த்தை பேச ஆரம்பிக்க, அதற்குள் ஒருவரை வழியனுப்ப வெளியில் வருவது என, இப்படிப் போவதும் வருவதுமாக அவனது அவசர அல்லாடல் கண்டு புதுமனைவிக்கு சிரிப்பு பொங்கி வந்தது. மறுபடியும் தன் மனைவியிடம் அவள் அருகே வந்து பேச ஆரம்பிக்கையில், அவனது ஆத்ம சிநேகிதன் இவனிடம் வந்து சொல்லி விடைபெறலானான்.

முகுந்தன் என்ற பெயருடைய மாப்பிள்ளை சிநேகிதன் ஸ்ரீமடத்தில் இவனுக்கு நெருக்கமானவன். வெளியில் சென்றவனுக்கு பலகாரங்கள் கொடுக்காதது நினைவுவர, அடடா... என்று வருந்தியவன் கூடம் சென்று ஒரு தூக்குச்சட்டி நிரம்ப பலகாரம் எடுத்துக்கொண்டு வேகமாக வாசலுக்கு ஓடினான். வாசல் நிலை மிகவும் உயரம் குறைவானது.

அசுர வேகத்தில் ஓடிவந்தவனின் கவனக்குறைவால் நெற்றி அதன்மீது விசையுடன் மோதியது. பலத்த அடியில் அவன் நினைவு தப்பியது. உயரமும் அதற்கேற்ற கன சரீரமும் கொண்ட அவன் மல்லாந்து விழ, பின் மண்டையிலும் பலத்த அடி அவன் விழுந்த சத்தம் கேட்டு ஓடிவந்தவர்கள் அவன் மூர்ச்சை தெளிவிக்க முகத்தில் நீர் தெளித்தனர். பனை ஓலை விசிறியால் வேகமாய் முகத்தருகே விசிறினர். சலனமில்லாதது கண்டு ஒருவன் மார்பில் காது வைத்துக் கேட்கலானான். உடனே உதடு பிதுக்கினான். மயங்கியவனின் கையைத் தூக்கிவிட, அது சரிந்து சொத்தென்று விழுந்தது.

"ஐயோ... போய்விட்டாயா... போய்விட்டாயா' என்ற அலறல்... சத்தம் கேட்டு ஓடிவந்த மணப்பெண் உயிரற்ற அவன் தேகம் கண்டு பிரமைபிடித்து நின்றவள் மயங்கிச் சரிந்தாள். மாப்பிள்ளை உயிர் பிரிந்துவிட்டதை கூட்டத்திலிருந்த ஒரு வைத்தியரும் ஊர்ஜிதப்படுத்த, குபீரென்று பெருத்த ஒப்பாரி எழுந்தது. மணமக்களின் பெற்றோரை யாராலும் சமாதானம் செய்ய இயலவில்லை. முகுந்தனின் முகத்திலும் அதிர்ச்சி விலகவில்லை.

""ஸ்ரீராகவேந்திரர் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியத்துடன் இருப்பாய் என வாழ்த்தினாராமே? அவர் வாழ்த்தியது பொய்யாய்ப் போனதா'' என கிருஷ்ணனின் தந்தை கதறத் தொடங்க, முகுந்தன் உடனே கவலையானான். எழுந்து வேகமாக ஸ்ரீமடம் நோக்கி ஓடினான்.

ஸ்ரீராகவேந்திரர் ஸ்ரீமடத்தில் அன்று அறிஞர் பெருமக்களுடன் விவாதித்துக் கொண்டிருந்தார். பல மாணவர்களும் சுற்றி அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தனர். முகுந்தன் வாசலின் வெளியில் மூச்சிரைக்க நின்றதைக் கண்ட ஸ்ரீராகவேந்திரர் அவனை உள்ளே அழைக்க, அவன் தயங்கி மெல்ல விஷயம் கூற, ஒருசில நொடி... ஆம்; சில நொடிகளே யோசித்த ஸ்ரீராகவேந்திரர்,""சரி... கிருஷ்ணனை இங்கு தூக்கி வர ஏற்பாடு செய்யுங்கள்'' என்றார்.

""ஸ்வாமி! பிணத்தையா ஸ்ரீமடத்திற்குள் கொண்டு வருவது?''

""யார் சொன்னது அவன் இறந்தானென்று?''

""இல்லை குருவே. ஒரு நல்ல வைத்தியர்கூட நாடி பார்த்து...''

""என் மூலராமன் இன்னும் மனதுக்குள் சிரித்துக்கொண்டுதான் இருக்கிறான். கொண்டு வாருங்கள் உடனடியாக கிருஷ்ணனை.'' அவரது கமல முகத்தில் எம்மாற்றமும் தடுமாற்றமும் கலக்கமுமில்லை. அமைதியும் தேஜஸுமாய்த் திகழ்ந்தது.

கிருஷ்ணன் ஸ்ரீராகவேந்திரர் முன்பாகக் கிடத்தப்பட்டான். அடியின் தாக்கமோ என்னவோ, அவன்முகம் சற்றே கருமை படரத் தொடங்கியிருந்தது. உடன் வந்திருந்த அவனது மனைவி விசும்பிக் கொண்டிருந்தாள். சலனம் காட்டாது அமர்ந்திருந்த ஸ்ரீராகவேந்திரர் தன்னருகிலிருந்த கமண்டல நீரை உள்ளங்கையில் நிரம்ப எடுத்து கண்மூடி ஜெபிக்கலானார்.

தன்வந்திரி மந்திரத்தை சிரத்தையுடன் உச்சரிக்கலானார். அவரது முகத்தில் புன்னகை படர்ந்தது. விழிதிறந்தவர் தனது உள்ளங்கை நீரை கிடந்தவன்மீது தெளிக்க, அந்த தேகத்தில் சிலிர்ப்பு வந்தது. மெல்ல கண் திறந்தவன் எதிரில் ஸ்ரீராகவேந்திர யதிகள் நிற்பதைக் கண்ணுற்று வேகமாக எழுந்து அவர் பாதம் பணிந்தான்.

அனைத்துமே நிமிடங்களின் இடைவெளியில் நடந்து முடிந்துவிட்டன. கூடியிருந்த அறிஞர் பெருமக்களும், சீடர்களும், திருமணத்திற்கு வந்திருந்த பொது ஜனங்களும் வியந்து நின்றனர்.

அந்த அற்புதத்தை நேரில் கண்ட சந்தோஷத்தில் ஜயகோஷம் எழுப்பினர்.

"ஓம் ஸ்ரீராகவேந்திராய நமஹ.. ஓம் ஸ்ரீராகவேந்திராய நமஹ...' என்னும் உற்சாக கோஷம் பெருத்த அளவில் எழுந்தது. அது அடங்காமல் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

""ஸ்வாமி. என்னை மன்னித்துவிடுங்கள். தங்களது மகிமை தெரியாது நான் சந்தேகித்துவிட்டேன். மணநாளன்றே என் மகனுக்கு மரணம் நேர்ந்ததனால் ஏற்பட்ட பெரும் அதிர்ச்சியும், மருமகளின் கைம்பெண் கோலமும் கண்முன் எழுந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக, தங்களது ஆசிர்வாதத்தையே சந்தேகிக்கும் பாவியாகிவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் ஸ்வாமி!'' என கிருஷ்ணனின் தந்தை கண்கலங்கி கைகூப்பினார்.

""ஆம்... எங்களையும் மன்னித்துவிடுங்கள்'' என்று அவருடன் வந்த ஒட்டுமொத்த ஜனங்களும் நெடுஞ்சாண்கிடையாக ஸ்ரீராகவேந்திரரை விழுந்து வணங்கினர். சலசலப்பும் சந்தோஷக் குரலும் அங்கே வியாபித்திருந்தது.

ஸ்ரீராகவேந்திரர் புன்னகைத்தார். இரு கைகளையும் உயரே தூக்கி ஆசிர்வதிக்க, கூட்டம் சட்டென்று அமைதியானது.

""குடந்தை ஜனங்களே. ஜனார்த்தனனான ஸ்ரீஹரி கருணையே வடிவானவன். மகாவிசேஷ சக்தி வாய்ந்த ஸ்ரீமுலராமன் பூஜை நடைபெறும் இந்த ஸ்ரீமடத்தின் பிரஜையினை அவன் கைவிடுவதில்லை. ஸ்ரீமூலராமனின் அனுமதியின்றி எந்த ஜீவனையும் இங்கிருந்து அகற்றவே முடியாது. ஸ்ரீமூலராமோ விஜயதே. எல்லாரும் சுகத்துடன் வாழ்வீர்களாக.''

யதிகளின் முகத்தினில் மகாதேவம் படர்ந்திருந்தது.

ஸ்ரீராகவேந்திரர் யதிகளாகப் பட்டாபிஷேகம் ஏற்றுக்கொண்ட பிறகு குடந்தையில் அவர் நிகழ்த்திய முதல் அற்புதம் இதுவேயாகும். அவரது புகழ் திக்கெங்கும் படர்ந்தது.

ஸ்ரீராகவேந்திரர் தனது தீர்த்த யாத்திரை மார்க்கத்தில் உத்திர கர்நாடக தேசம், கதக் என்னும் க்ஷேத்திரத்திலுள்ள பெருமாள் கோவிலில் தங்கினார். நித்ய அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு கூடியிருந்த மக்களுக்கு அருளாசி வழங்கினார். பின் தீர்த்தப் பிரசாதமும் மந்த்ராட்சதையும் தன் திருக்கரங்களால் வழங்கினார். அப்போது, மங்களகரமாக திருமண்தரித்து, வெண்பட்டுடுத்தி, மரியாதையான தோற்றத்துடன் இருந்த மனிதர் பெரிய தட்டு நிறைய பழங்களை வைத்து ஸ்ரீராகவேந்திரரின் பாதங்களில் சமர்ப்பித்து அவரை வணங்கி நிற்க, ஸ்ரீராகவேந்திரர் அவரை புன்னகையுடன் ஏறிட்டார். அந்தப் பார்வையில் கேள்வி தொக்கிநின்றது.

""ஸ்வாமி, அருகில் இருக்கும் கிரீடகிரி என்ற பெரிய கிராமத்தைச் சேர்ந்த முக்கியஸ்தன். தங்களது திவ்ய நிகழ்வுகளைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றுதான் தரிசன ப்ராப்தம் கிட்டியது. அடியேனின் கோரிக்கையினை ஏற்று, தாங்கள் எனது இல்லத்தில் எழுந்தருளி ஸ்ரீமூலராமர் பூஜையினை நடத்தி, தங்களது வருகையினால் எமது கிராமம் சீரோடும் வளமோடும் நிலைத்துநிற்க அருளுமாறு தங்களை வேண்டி அழைக்கிறேன்'' என்றார்.

புன்னகைத்த ஸ்ரீராகவேந்திரர், ""தங்களது பொதுநலத்திற்கு எனது மூலராமன் ஆசிர்வதிப்பாராக. இன்னும் இரண்டு நாட்கள் கழித்து உமது இல்லத்தில் ஸ்ரீமூலராமன் பூஜையை ஏற்றுக்கொள்வான்'' என்றார்.

தேசாய் என்ற பெயர் கொண்ட மாமனிதர், கிரீடகிரி கிராமத்திற்கு ஒரு மிராசு போன்ற அந்தஸ்த்தில் இருக்கும் முக்கிய நிர்வாகஸ்தர் ஆவார். ஸ்ரீராகவேந்திரரிடம் தீர்த்தப்பிரசாதம் பெற்றுக்கொண்டு அதை அருந்தி பின் சிரஸில் தடவிக்கொண்டவர் மந்த்ராட்சதை பெற சற்று முன்பாக வருகையில் இடப்பாதம் இடற, ராகவேந்திரர் உதிர்த்த மந்த்ராட்சதை தேசாயின் கை தவறி நிலத்தில் சிதறியது. ஸ்ரீராகவேந்திர யதிகள் சற்றே விழிமூடித் திறந்தார்.

அவரின் நெற்றி ஒரு நொடி சுருங்கிப் பின் தன்நிலைப் பெற்றது. அவருக்கு திரும்பவும் மந்த்ராட்சதை அளித்து ஆசிர்வதித்தார்.

""நான் நிச்சயமாய் தங்கள் இல்லம் வருகிறேன். ஏற்பாடு செய்யுங்கள்'' என்றார் நிதானமாக- ஆனால் உறுதியுடன்.

கிரீடகிரி என்ற கிராமம் உண்மையிலேயே பெயருக்குத் தகுந்தாற்போல கிரீடம் சூட்டிய வளமான ஊர். எங்கும் பச்சைப்பசேலென்ற வயல் வெளிகள். நெல்லும் தோட்டப்பயிர்களும் செழித்தோங்கி இருந்தன. உயர்ந்த தென்னை மரங்கள் வயல் வரப்புகளில் வளர்ந்து நெடிதுயர்ந்து இளநீர்க்குலைகளுடன் காய்த்துக் குலுங்கின. வளமான மேய்ச்சல் பூமியில் பசுக்கள் நிதானமாக மேய்ந்துகொண்டிருந்தன. கபிலைகளில் இரைக்கப்பட்ட நீர் இடைவிடாது வயல்களில் பாய்ச்சப்பட்டுக் கொண்டிருந்தது. பசுக்கள் தாகம் தீர நீர் அருந்தி வயிறு நிறைத்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டன. மாலையில் வீடு திரும்பும் அவற்றுக்கு வளமாக வைக்கோல் கொடுக்கப்பட்டது. பாலும் தயிரும் நெய்யுமாக ஒவ்வொரு வீட்டிலும் வளம் பொங்கியது. அதற்கு முக்கிய காரணம் தேசாய். ஊரின் பொதுநலனில் அக்கறை எடுத்துக்கொண்டவரை கிராமம் தலைமையாய்க் கொண்டாடியது. அதனால் தேசாய் ஸ்ரீராகவேந்திரர் வருகையினை அறிவித்து ஊரையே பூஜைக்கும் விருந்துண்ணவும் அழைத்தார்.

ஊர்மக்கள் ஒட்டுமொத்தமாய் இறங்கி வேலை செய்தனர். தென்னை இலைக்குருத்தும் மாவிலைகளும் சேகரிக்கப்பட்டு தோரணங்கள் கட்டப்பட்டன. சமையல் செய்து அதன் அருகிலேயே பந்திக்காக ஓலை வேய்ந்து பந்தல் போடப்பட்டது. சிறு மணியளவு கற்கள்கூட அப்புறப்படுத்தப்பட்டு, சாணம் தெளித்துப் பின் மெழுகி ஆங்காங்கே அழகுற கோலமிடப்பட்டது. ஸ்ரீராகவேந்திரருடன் வருகின்ற சீடர்கள் மற்றும் ஆச்சார்யார்களுக்கு தனித்தனியே மடிஆசாரத்துடன் சமையல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது கோடையின் நடுமையக் காலம். மாம்பழக் காலம். கிரீடகிரியின் மாம்பழங்கள் சதைப்பற்றும் சுவையும் கூடுதலாகக் கொண்டவை. சமையல் செய்யும் ஐயர் தேசாயின் மனைவியிடம் மாம்பழ ரசம் செய்ய அனுமதி கேட்டிருந்தார். அதற்காக தேசாயின் தோப்பிலிருந்தே மிகவும் கனிந்த பெரிய மாம்பழங்கள் பார்த்துப் பார்த்து பறித்து வரப்பட்டு குவிக்கப்பட்டிருந்தன. தேசாய் தம்பதிகளின் ஒரே செல்ல மகன், ஊருக்கே செல்ல மகன். அன்று அந்த கோலாகலத்தில் கூட்டம் கண்டு வெகு குதூகலமானான். ஓடுவதும் ஒளிவதுமாக பிற பிள்ளைகளுடன் ஒன்றிவிட்டிருந்தான்.

ஸ்ரீராகவேந்திரர் புறப்பட்டுவரும் செய்திகேட்டு தேசாய் பெரும் பரிவாரங்களை அழைத்து பூரண கும்பமரியாதை ஏற்பாடு செய்து பட்டாச்சார்யார்களை முன்னிருத்தியிருந்தார். வெகுதொலைவே ஸ்ரீராகவேந்திரர் வருகை தெரிந்தவுடன் மங்கள வாத்தியங்கள் இசைக்க ஆரம்பித்தனர். ஸ்ரீராகவேந்திரரின் பல்லக்கு ஊர் எல்லையில் இறக்கப்பட, ஸ்வாமிகள் உள்ளிருந்து இறங்கினார். அவருக்கு பூரண கும்பம் கொடுத்து ஆசி பெற்றுக்கொண்டனர் தேசாயும் உடன் வந்தோரும். பின் தேசாயின் இல்லம்வரை ஸ்வாமிகள் பல்லக்கினை மறுத்து, நடந்தே வரலானார்.

பாதை இருமருங்கிலும் இருந்து "ஓம் ஸ்ரீராகவேந்திராய நமஹ...' என்ற தொடர் முழக்கம் கேட்டுக் கொண்டேயிருந்தது. தேசாயின் இல்லத்தருகே பாத பூஜை செய்யப்பட்டு ஸ்ரீராகவேந்திரர் வாசலில் தன் திருப்பாதம் வைக்க, சட்டென்று அவரின் திருமேனி ஏனோ உள்ளுள் பதறியது. உள்ளே நுழைந்தவர் நின்று மெல்ல தனது பார்வையினால் உள்நோக்கினார். தேசாய்க்கு சந்தோஷம் பிடிபடவில்லை. ஒரு சக்திவாய்ந்த மாபெரும் பீடாதிபதி தன் இல்லம் வந்தது அவருக்கு மனநிறைவாக இருந்தது. யதிகளை நெருங்கி வாய் பொத்திக் கேட்கலானார்.

""ஸ்வாமி, மூலராமர் பூஜைக்கு தாங்கள் எவ்விடத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று...''

ஸ்வாமிகளின் திருக்கரம் உயர்ந்தது.

""இதோ, இந்த நடுக்கூடத்தில் கிழக்கு முகமாய் பலர் தரிசிக்க பூஜை ஏற்பாடாகும்'' என்றார். அங்கே ஏற்கெனவே கட்டியிருந்த தோரணம் இன்னும் உயர்த்திக் கட்டப்பட, சீடர்கள் தலைசுமந்து வந்த ஓலைப்பெட்டிகள் பத்திரமாய் இறக்கி வைக்கப்பட, பூஜை ஆரம்பமானது.

உள்ளே சமையல் கூடத்தில் இனிப்புப்பண்டங்கள், பருப்புப் பாயசம், மணக்கும் சாம்பார் என்று வகைவகையாக, வேகவேகமாக சமையல் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. பெரிய அண்டாக்களில் மாம்பழ ரசம் செய்யப்பட்டு, சூடுஆற காற்றாட திறந்து வைக்கப்பட்டிருந்தன. தேசாயின் மகன் அங்கே தன் சகாக்களுடன் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தான்.

"இங்கே மறைந்தால் பார்த்துவிடுவார்கள். அங்கே மறைந்தால்... ம்ஹும்... பார்த்துவிடுவார்கள். வேறெங்கு... அதோ, நாம் அம்மாவிடம் போக்கு காண்பிக்க அண்டாவில் இறங்கிவிடுவோமே...

அதுபோல் அந்த அண்டாவில் இறங்கி மறைந்து கொள்வோம்' என்று நினைத்தவன் உடனே மாம்பழ ரசம் இருப்பது தெரியாமல் இறங்கிவிட, அது மொத்தமாக அவனை உள்வாங்கிக்கொண்டது. அந்த அடர்த்தியான திரவம் அவனை சுவாசிக்க முடியாமல் செய்ய, பிஞ்சு நுரையீரல் காற்றுக்காக ஏங்கி ஏங்கித் துடித்து நின்றது.

உள்ளே ஸ்ரீராகவேந்திரர் வெள்ளிப் படிகளில் தெய்வ மூர்த்தங்கள் அடுக்கி, அவற்றை அபிஷேகித்து ஒவ்வொருமுறையும் கூடியிருந்த ஜனங்களுக்குக் காண்பித்து வரிசைப்படுத்தியவர், ஸ்ரீமூலராமரை மக்களுக்குக் காண்பித்து முதல்படியினில் வைத்து அவருக்கு சிறு சாமரக் குடையினைப் பொருத்த, அது தவறி தலைகீழாகக் கவிழ, சட்டென்று ஸ்வாமி இரு கைகளால் நிலைநிறுத்தினார்.

ஒரு நொடியில் அந்த மாம்பழ ரச விபத்தை உணர்ந்து இயல்பானார். அர்ச்சிக்கப்பட்டு ஆரத்திக்குப் பின் அனைவருக்கும் தீர்த்தப்பிரசாதம் கொடுக்க ஆரம்பித்தார். தேசாய் தன் மனைவியிடம் குழந்தையை அழைத்துவருமாறு கூற, அவளும் குழந்தையை தேடிச் சென்றாள். கடைசியாக சமையல் கூடம் சென்றவருக்கு அண்டாவின் விளிம்பில் ஒரு பிஞ்சுப் பாதம் தெரிய, பெரும் பதட்டமாகி நெருங்கித் தூக்க, குழந்தை தலைதொங்கியதைக் கண்டவள் வீறிட்டாள். பின்னாலேயே தேடிவந்த தேசாய்க்கும் நிலைமையின் தீவிரம் புரிய, மனைவியின் வாயினைப் பொத்தி அமைதியாக சைகை புரிந்தார். பெற்ற மகனை இழந்த புத்திர சோகத்தையும்மீறி, விருந்தோம்பலும் பூஜையுமே அவர் மனதில் வந்தது.

""பாரம்மா. ஸ்ரீராகவேந்திரரின் பூஜை நிறைவுற்றிருக்கிறது. எல்லாரும் பசியுடனிருக்கின்றனர். இதுபற்றி தெரிந்து அவர்கள் தோஷமென்று சாப்பிடாது போனால் பெரும் பாவமல்லவா சூழும். எனவே அனைவரும் சாப்பிட்டுக் கிளம்பட்டும். நமது சோகத்தை தாம் மறைத்தேயாக வேண்டும்'' என்றவர் அங்கே இருந்த தென்னையோலையில் குழந்தையினைக் கிடத்தி மேலே மற்றொரு ஓலை கொண்டுமூடி, பின் இருவரும் பூஜை நடக்கும் இடம் வந்து சேர்ந்தனர். ஸ்ரீராகவேந்திரர் இருவர் முகத்தையும் புன்முறுவலுடன் நோக்கலானார்.

""உங்களது ஆண்மகவெங்கே தேசாய்? குழந்தையோடு வந்து தீர்த்தப் பிரசாதம் பெற்றுக்கொள்ளலாமே.''

""மன்னிக்க வேண்டும் ஸ்வாமி. அவன் விளையாட்டுப் பிள்ளை. அங்கிங்கு ஓடி விளையாடி பூஜைக்கேதேனும் இடையூறு செய்யலாகாது என்று உறவுக்காரர் வெளியில் தூக்கிச்சென்றுள்ளார். அவன் வரும்வரை மற்றவர்களுக்கு வழங்குங்கள். பிறகு நாங்கள் பெற்றுக்கொள்கிறோம்.''

""இல்லை. இது உங்கள்முறை. போய் குழந்தையோடு வாருங்கள்.''

""இல்லை. அவனைத் தேடி...''

""சென்று அழைத்து வாருங்கள். ம்...''

""ஸ்வாமி வந்து... நான் என்ன சொல்வதென்று...''

""நீங்கள் ஆரம்பத்திலேயே உண்மை சொல்லவில்லை. அப்படித்தானே தேசாய்.''

""ஸ்வாமி, எங்களை மன்னித்துவிடுங்கள். எங்கள் குழந்தை இறந்துவிட்டான் ஸ்வாமி. தீட்டு இருப்பதனாலேயே தீர்த்தப் பிரசாதம் பெற மனதினங்கவில்லை. மேலும் பூஜைக்கு வந்தவர்கள் போஜனம் இல்லாமல் போவது பாவமன்றோ. எங்கள் துக்கம் எங்களோடு போகட்டும் ஸ்வாமி. எங்கள் ஒரே மகன் எங்களைவிட்டுப் போய்விட்டானே ஸ்வாமி...'' என இருவரும் துயர்தாங்காது தரைவிழுந்தனர்.

ஸ்வாமி புன்னகைத்தார்.

""யார் சொன்னது உங்கள் புத்திரன் போய்விட்டானென்று? எனது மூலராமன் இருக்கும் இல்லத்தில் காலதேவன் கால்வைக்கத் தயங்குவானே. சென்று நித்திரையில் இருக்கும் உங்கள் புத்திரனை தூக்கிவாருங்கள்.''

அதற்குள்ளாக தேசாயின் வேலையாட்கள் குழந்தையைக் கொண்டு வந்து கூடத்தில் கிடத்தினர். ஸ்ரீராகவேந்திரர் அலங்கரிக்கப்பட்ட மூலராமரை கைகூப்பி வணங்கி, கமண்டல நீரைக் கையிலெடுத்துக் கண்களில் ஒற்றி மந்திரம் ஜெபித்து குழந்தைமீது புரோஷணம் செய்தார். அடுத்த நொடியே குழந்தை கண்விழித்தெழுந்து தனது தாயைக் கட்டிக்கொண்டு அழுதது. தம்பதிகள் தன் மகவை ஒருசேர அணைத்து நன்றிப் பெருக்கில் ஸ்ரீராகவேந்திரரின் பாதம் பணிந்தனர். அதைக் கண்ணுற்ற அத்தனை ஜனங்களும் ஸ்ரீராகவேந்திரரை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினர். பலர் கண்களில் உணர்ச்சிப் பெருக்காய் ஆனந்தக்கண்ணீர் பெருகியது. ஆஹா... ஆஹா... எப்பேற்பட்ட மகான். எப்பேற்பட்ட அற்புதம். "ஓம்... ஸ்ரீராகவேந்திராய நமஹ... ஓம்... ஸ்ரீராகவேந்திராய நமஹ...' என்று தேசாய் உரக்கக்கூற, கூட்டமும் அதைச் சொல்லிச்சொல்லி எதிரொலியாக்கியது. அனைவரும் ஸ்வாமி ஸ்ரீராகவேந்திரரின் மந்த்ராட்சதை பெற்றும் தீர்த்தப் பிரசாதம் அருந்தியும் பாக்கியம் பெற்றனர்.

ஸ்ரீராகவேந்திரரின் அளப்பரிய சக்தி பலபொழுது, பலமுறை மக்கள் நடுவே நிகழ்ந்திருக்கிறது. ஒவ்வொரு அற்புத முடிவிலும் அவர் தான் வணங்கும் மூலராமரையே சாட்சியாக்கியிருக்கிறார்.

அப்படியென்ன மூலராமரிடம் இருக்கிறது என்பதும் ஸ்ரீமூலராமரின் அற்புத வரலாறு என்னவென்பதும் இதுவரை பலருக்கும் தெரியாது. அதைத் தெரிந்துகொண்டு, தற்போது மந்த்ராலயத்தில் தொடர்ந்து நடந்துவரும் ஸ்ரீமூலராமர் விக்ரகத்துக்கு செய்யப்படும் பூஜையைப் பார்க்கும் ஒவ்வொரு ராகவேந்திர பக்தரும் நெக்குருகிப் போவார் என்பது உண்மையிலும் உண்மை!

(தொடரும்)

இதையும் படியுங்கள்
Subscribe