அம்பாளுக்கு நவராத்திரிகள் வருடத்திற்கு நான்கு என்றால், சிவனுக்கு மகாசிவராத்திரி என்று வருடத்தில் ஓரிரவே. சிவபெருமான் அடி முடி காணவியலா ஜோதியாக பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் காட்சிதந்து, பின் மலையாக (திருவண்ணாமலை) மாறியது சிவராத்திரியன்றுதான்.
அந்த நாளில் சிவ வழிபாடு செய்வது உயர்ந்த பலனைத் தரும்.
"சிவ' என்றால் மங்களம். "ஹர' என்றால் நமது பாவங்களை அழிப்பவன்.
"நமசிவாய' என்பது சிவபஞ்சாட்சரம். "சாம்பசிவ' என்பது அம்பாளுடனான சிவன். அதாவது சிவசக்தி. ஆக, "ஓம் நம சாம்பசிவாய' என்பது சிவ அஷ்டோத்திரம். இது சக்திவாய்ந்த சிவசக்தி மந்திரம் என்பர்.
"சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்னத் தீவினை மாளும்
சிவசிவ என்னத் தேவரும் ஆவர்
சிவசிவ என்ன சிவகதி தானே.'
சிவகதி என்றால் சிவமயமாதல்; முக்தி எய்துதல்.
"ஹரஹர என்றிட அறிந்திலர் மாந்தர்
ஹரஹர என்றிட அரியதொன்றில்லை
ஹரஹர என்றிட அமரரும் ஆவா
ஹரஹர என்றிட அறும் பிறப்பன்றே!'
அறும் பிறப்பெனில் சிவசாயுஜ்யம், சிவமுக்தியே. மேற்கண்ட இரு உன்னதத் துதிகளை மட்டும் சிவராத்திரியன்று ஜபித்தாலே எல்லா சுகங்களும் பெறலாம் என்பர்.
சிவனது பெருமைபோல, சிவனடியார் களின் பெருமை சொல்லவும் அரிது என்பார்கள். சிவராத்திரி சமயத்தில், பலரும் அறிந்திராத ஒரு சிவபக்தையின் பெருமையை சிந்திப்போமா?
ஆவுடையக்காள் என்பது அந்த அம்மையாரின் பெயர். அவர் ஸ்ரீதர அய்யாவாள் என்ற சிவபக்தர் பல்தேய்த்து எறிந்த வேப்பங்குச்சியால் தனது பல்லைத் தேய்க்க, அதனால் ஞானம் கைவரப்பெற்று அத்வைத தத்துவத்தை எளிய தமிழில் பாடினார்.
முதலில் ஸ்ரீதர அய்யாவாளை சிறிது சிந்திப்போம்.
இவரது காலம் 1635-1720. (சிலர் 1682-1785 என்கின்றனர்). எனவே, இவ்வருடம் அவரது 300-ஆவது ஆண்டு. அவர் திருவிடைமருதூர் மகாலிங்கத்தில், யாவரும் பார்த்திருக்க மறைந்தார். அவரது முழுப்பெயர் ஸ்ரீதர வேங்கடேச தீட்சிதர். மரியாதையாக "அய்யாவாள்' என்றே கூறுவர். ஆழ்ந்த சிவபக்தர். மணமானவர். உஞ்சவிருத்தி தர்மம் அனுஷ்டித்து, சிவாலய தரிசனங் கள், சிவத்துதிகள் செய்துவந்தார். சிவ-விஷ்ணு பேதம் பார்க்காதவர். பகவந்நாம போதேந்திராள் என்ற 59-ஆவது காஞ்சிமட சங்கராச்சாரியார்- சதாசிவ பிரம்மேந்திராள் என்ற அத்வைத அவதூதர் இவரது சமகாலத்தவர். சந்நியாசிகள் இல்லறவாசிகளை வணங்கமாட்டார்கள். ஆனால் போதேந்திரரோ- "தம்வந்தே நரரூபம் அந்த கரிபும் ஸ்ரீவெங்கடேசம் குரும்- காலனையே உதைத்த சிவஸ்வரூபமே ஸ்ரீவெங்கடேசர்' எனத் துதித்து நமஸ்கரித்தாராம்.
மகாராஷ்டிர சிவாஜி வம்சத்தவர்கள் தஞ்சையை ஆண்டனர். வேதம், புராணம், இதிகாசம், ஆகமம், சங்கீதம், கலைகளை ஆதரித்து 100 தீட்சிதர்களை கும்பகோணம் அருகே திருவிசநல்லூரில் குடியேற்றி, ஆன்மிகம் வளர்த்தனர். அய்யாவாள் திருச்சி தாயுமானவரை தரிசித்து, அங்கு சிவபக்தியைப் பரப்பி, கும்பகோணம் வந்து திருவிசநல்லூரில் தங்கியிருந்தார். (அவர் தங்கிய இடம் இப்போது வழிபடும் தலமாக உள்ளது.)
கார்த்திகை மாத அமாவாசை. வீட்டில் பித்ரு திவசம். இவர் காவிரியில் நீராடிவரச் சென்றார். வழியில் ஒரு மிலேச்சன், ""அய்யா, மூன்று நாட்களாக உணவருந்தவில்லை. மயக்கம் வருகிறது. ஏதாகிலும் உண்ணத் தாருங்கள்'' என வேண்டினான்.
பசிக்கிறவனுக்கு உணவு தருவதே சிறந்த தர்மம் என்று வீடு வந்தார். சிரார்த்தத்திற்கு சமைத்துவைத்ததை எடுத்துப்போய் அவனுக்கு இட்டார். அவனும் உண்டு, "நீங்க நல்லா இருப்பீங்க சாமி' என வாழ்த்தினான்; திடீரென மறைந்தான்.
அவர் வீடு வந்து பாத்திரங்களை மனைவியிடம் கொடுத்து, ""சுத்தம் செய்; மீண்டும் சமையல் செய். நான் நீராடிவிட்டு வருகிறேன்'' என்று கிளம்பினார்.
சிரார்த்தத்துக்கு வந்த பிராமணர் களுக்கு இந்த விஷயம் தெரிந்தது. நீராடிவிட்டு வந்த அய்யாவாளிடம், ""தர்மம், சாஸ்திரம் அறியாதவரா நீர்? சிரார்த்த தினத்தில் சண்டாளனுக்கு முன்பே அன்னமிடலாமா?'' என்றனர்.
"அவன் பசியால் துடித்தான். அதனால் கொடுத்தேன். மீண்டும் வேறு உணவு செய்யப்பட்டுவிட்டது' என்றார். அவர்கள் மசியவில்லை. ""நாங்கள் சிரார்த்தத்தில் கலந்து கொள்ளமாட்டோம்'' என்று பிடிவாதம் செய்தனர்.
அய்யாவாளோ, சிவனை மனதில் இருத்தி, சிவ, பிரம்ம, விஷ்ணுவையே வரித்து சிரார்த்தம் முடித்தார். அந்த பிராமணர்களோ, ""என்ன செய்தீர்? பிராமணர்கள் சாப்பிட்ட சத்தம் கேட்டதே?'' என்றனர். அவர் ஒன்றும் கூறவில்லை.
அன்று மாலை திருவிடைமருதூர் மகாலிங்கர் கோவிலுக்குச் சென்றபோது அங்கிருந்த அர்ச்சகர், ""வாங்கோ அய்யாவாள்! உம்மைத்தான் நினைத்தேன். ""நான் பூஜை செய்ய கருவறைக்குச் சென்றேன். அப்போது ஓர் அசரீரி வாக்கு, நான் அய்யாவாள் வீட்டில் சிரார்த்த உணவு உண்டேன். எனவே மாலைநேர நிவேதனம் வேண்டாம். அவர் கொடுத்த வேட்டி, தட்சணை உள்ளது' என்றது. பரமபாக்கியவான் நீர்'' என்று சிலிர்ப்புடன் கூறினார். அய்யாவாள் சுவாமியை தரிசித்துவிட்டு வீடுவந்தார். அங்கு குழுமியிருந்த அந்தணர்கள், ""நாங்கள் உன்னை ஜாதிப்பிரஷ்டம் (நீக்குதல்) செய்துவிட்டோம். காசிக்குப்போய் கங்கையில் நீராடிவிட்டு வந்தால்தான் இந்த அக்ரஹாரத்தில் இருக்கலாம்'' என்றனர். அக்காலத்தில் காசிக்கு நடந்துசென்று திரும்புவது சுலபமல்ல. சிவனை எண்ணியபடி கண்ணயர்ந்தார். அவர் கனவில் தோன்றிய சிவன், "அய்யா வாள், கவலைப்படவேண்டாம். நீர் காசி வரவேண்டாம். உமது வீட்டு கிணற்றிலேயே கங்கை ஆவிர்பவிப்பாள். ஊரிலுள்ள யாவரையும் அழையும்; அனைவரும் கங்கா ஸ்நானம் செய்யட்டும்' என்றார்.
காலையில் கிராமத்தினருக்குக்கூறி கிணற்றுக்கு பூஜைசெய்து "கங்காஷ்டகம்' என்று எட்டு துதிகள் வலம்வந்து செய்ய, கிணற்றில் கங்கை மங்கலப் பொருட்களுடன் தோன்றி, சாலை முழுவதும் வழிந்தோடினாள்.
அத்தகைய சிறப்புவாய்ந்தவர் ஸ்ரீதர அய்யா வாள்.
இப்போது ஆவுடையாக்காளுக்கு வருவோமா...
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை நகரில் சுமார் 350 வருடங்களுக்குமுன் நடந்த சம்பவம்...
ஒன்றுமறியாத பேதையான ஆவுடையக்காள் நளினத்தமிழில் அத்வைத சித்தாந்தம் பாடினாள். அவளை உன்னத ஆன்மிக குருவாக ஏற்றனர். அவளது பாடல் களை இன்றும் பெண்கள் சமூகத்தில் சுந்தரபாண்டியபுரம், சாம்பவர்வடகரை, ஆம்பூர், முனீர்பள்ளம், கல்லிடைக்குறிச்சி முதலிய கிராமங்களில் பாடுகின்றனர்.
ஆவுடையக்காளின் பிறப்பு விவரம் தெரியவில்லை. அக்கால மரபுப்படி சிறுவயதிலேயே திருமணம் செய்வித்தனர். சில மாதங்களிலேயே கணவர் இறந்துவிட்டார். பிணத்தின் அருகே உறவினர்கள் அழ, அவளோ, "ஏன் அழுகிறீர்கள்?' என்றாள். அவர்கள் காரணம் சொல்ல, "அவர்கள் வீட்டுப்பிள்ளை இறந்தால் நீங்கள் ஏன் அழவேண்டும்?' என்றாளாம். கணவர் இறந்துவிட்டதால், சிறுவயதுப் பெண் என்றாலும் தலை மொட்டையடிக்கப்பட்டது. வெள்ளை உடையே அணிந்தாள். வீட்டைவிட்டு வெளியே செல்வதில்லை. தாயார் இட்ட பணிகளைச் செய்து, ஏதோ தியானம் செய்து நாட்களைக் கடத்தினாள்.
ஒருசமயம் ஸ்ரீதர அய்யாவாள் செங்கோட்டை வந்திருப்பது தெரிந்து, தாயாரிடம் "அவரை நம் வீட்டுக்கு அழையுங் களேன்' என்றாள். காந்தம் இரும்புத்துகளை இழுக்கும் சம்பவம் எனலாம். அவர் வந்து தங்கி ஆராதனைகள் செய்தார். மறுநாள் காலை அவர் பல்துலக்கிப்போட்ட வேப்பங்குச்சி யால் இவள் பல்துலக்கினாள். அவரோ வியந்தார். ஆனால் தடுக்கவில்லை. இது நமக்குப் புரியாது. அய்யாவாள் ஆவுடையக்காளை நீராடிவிட்டு வரச் சொல்லி, பஞ்சாட்சர உபதேசம் செய்தார். சிவ அவதார ஸ்ரீதர அய்யாவாளிடம் பெற்ற உபதேச மகிமையால் அத்வைத சிவஞானி யானாள். பாட்டுகள் எளிதில் வெளிவர ஆரம்பித்தன. யாவும் நளினத்தமிழில், ராமலிங்க சுவாமி களுடையதுபோல் மனதை ஈர்க்கும்.
அவற்றில் உபநிடதம், வேதாந்தம் மிளிரும்.
அவற்றைக் கேட்டவர் கள், "ஒன்றுமறியாத பேதை பாடும் பாடல் களா இவை' என வியந்தனர்.
அம்மாள் இயற்றிய சில பாடல்களின் தலைப்பு:
1. வேதாந்த குறவஞ்சி நாடகம்
2. வேதாந்த வித்யா சோபனம்
3. வேதாந்த அம்மானை
4. வேதாந்தப் பள்ளு
5. வேதாந்த ஆண்டி
6. வேதாந்த வண்டு
7. ப்ரும்மஸ்வருபம்
8. வேதாந்த கும்மி
9. ப்ரும்மமேகம்
10. தட்சிணாமூர்த்தி படகை
11. வேதாந்த பல்லி
12. வேதாந்தம் ஆச்சே போச்சே
13. வேதாந்தக் கப்பல்
14. பகவத் கீதாஸாரம்
இவரது பாக்களில் நெகிழ்ந்தே சுப்ரமணிய பாரதியார் தனது பாக்களில் வேதாந்தமும் புகுத்தினார்.
ராம சரிதமும், கிருஷ்ண சரிதமும், சக்தி பீடங்களுக்கு ஒப்ப 51 வரிகளிலேயே பாடியுள்ளார்.
அய்யாவாள் மறைந்தது கேட்டு, "அனுபவரத்ன மாலை' பாடினாராம். அந்தக் காலங்களில் இறந்த பிணத்தைச் சுற்றி "சூடாலைக்கும்மி' என்று பாடுவார்களாம். "ஞானவாசிஷ்ட'த்திலிருந்து சில கதைகளைப் பாடியுள்ளாராம்.
"வித்தை சோபானம்' என்று, அக்காலத்தில் பெண்கள் பூப்படைந்தால் விழாவாகக் கொண்டாடுவார்களாம். அவர் பாக்கள் ஆயிரத்திற்கும் மேலானற்வறை ஆய்க்குடி வெங்கடராம சாஸ்த்ரிகள் அக்காள் பாடல்களைப் பிரசுரித்தாராம்.
ஸ்ரீஞானானந்த நிகேதன்- ஸ்ரீநித்யானந்த கிரி ஸ்வாமிகள் 2002- 2012-ல் அவர் பாடல்களை பிரசுரித்துள்ளார்.
ஒரு ஆடி மாத அமாவாசையன்று குற்றால அருவியில் நீராடிவிட்டு தனது புடவையுடன் மலைமேலே சென்றார். அவ்வளவே;
காணவில்லை! விநோதப்பிறவி; அதுவே ஞானியின் லட்சணம்.
அம்மையாரின் சில பாடல்கள் சிந்திப்போமா-
பண்டிதகவி- பிள்ளையார் பாடல்
"ஏக தந்தத்தாலே விளங்கும் முகத்தோனே
பார்வதியின் திருமகனே பரமேஸ்வரர் புத்திரரே
பண்டாலையில் பள்ளிகொண்டோர் மருகனே
ஸ்கந்தனுடனே கணபதியே!'
அத்வைத மெய்ஞ்ஞான ஆண்டி
"அகங்கார பிராந்தியைத் தாண்டி
அவன்சற்றே கடைக்கண்ணால் பார்த்தான்டி
பார்த்த பார்வையால் தாண்டி
அவள் பவஸாகரம் வற்றடித்தான்டி
ஏகாந்த ஸ்தலத்திலே தாண்டி
அவன் எப்போதும் போலாக்கினான்டி
சச்சிதானந்த மஞ்சத்தில் தான்டி
தூங்காமல் தூங்க வைத்தான்டி
அத்வைத ஆண்டியைத் தான்டி
அதைக் கற்றோரும் கேட்டோரும் தாண்டி
சித்ரூபமாயா ரென்றாண்டி திரும்ப ஜனியார் என்றான்டி!'
வேதாந்தம் ஆச்சே போச்சே
"ஆதியந்தமற்ற ஆசார்யர் கிருபையினால்
ஆனதும் போனதும் அன்பாகச் சொல்வேன் கேட்பார்
ஆசைக்கடல் அஞ்சலாடித் திரிந்ததும் போச்சே
அசஞ்சலமான அகண்ட ஸ்வரூபமாச்சே!
என்ன செய்வோம் என்ற ஏக்கமும் போச்சே
ஏதேது வந்தாலும் எல்லாம் ஸ்வபாவமாச்சே.
சப்த கோடி மந்திரம் ஸாஸ்திரங்கள் உள்ளதும் போச்சே
சத்துமயமான ஸாக்ஷியே நான் என்பதாச்சே!
எனக்கெதிராக வெகுவாகப் பார்த்ததம் போச்சே
ஏகம் ஏகம் என்று எங்கும் நிறைந்தவராச்சே!'
வேதாந்த ஞானரசக்கப்பல்
"குரு க்ருபையாய் வந்த கப்பல் குணாதீதமாயிருக்கும் நிர்குணத்தில் நிலைத்ததொரு நித்யமாம் கப்பல் இது ப்ரக்ஞையினால் பார்த்தவனும் பிரம்மம் என்று தான் அறிந்து- சிவோஹம் சிலிவோஹம்!
மங்களம்
"அக்ஞானம் போக்கிவைத்து பிரக்ஞானம் பிரம்மம் என்று
அஹம் அஸ்மி பதம் காட்டி வைத்த ஆத்மாவுக்கு
தத்வமஸி வாக்யத்தால் தன்வடிவை என் வடிவாய்
தானாய் நிறைந்திருந்த சாட்சி வஸ்துவுக்கு
ஜெயமங்களம் நித்ய சுப மங்களம்.'
ஆத்மானுபூதியின் மேலீட்டால் வெளிவந்த இந்த அருட்பாடல்கள் அவரது பேரின்ப நிலை யைக் குறிப்பதுடன், பல அரிய வேதாந்த சிந்தனைகளையும் சாதனைகளையும் அள்ளிக் கொட்டும் அருவிகள்! சிந்திப்போம். சிவ மயமாகுவோம்!