ஸ்ரீ யாகண்டி உமா மகேஷ்வரர் ஆலயம், ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்திலுள்ளது. வைணவர்களின் கட்டடக்கலை பாணியில் இந்த சிவாலயம் கட்டப்பட்டிருக்கிறது.
விஜயநகரப் பேரரசுக்கு உட்பட்ட, சங்கரா வம்சத்தைச் சேர்ந்த ஹரிஹர புக்கராயர் என்ற அரசரால் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தைப் பற்றிய ஒரு கதை இது...
வேங்கடேஸ்வரருக்கு ஒரு ஆலயத்தை உருவாக்கவேண்டுமென்று அகத்திய மாமுனிவர் திட்டமிட்டிருக்கிறார். அதற்காக வேங்கடேஸ்வரரின் சிலை கொண்டு வரப்பட்டது. அந்த சமயத்தில் அந்தச் சிலையின் கட்டைவிரல் உடைந்துவிட்டதாம். அதைப் பார்த்துக் கவலைக்குள்ளான அகத்தியர், சிவனை நோக்கித் தவம்செய்தார்.
அவருக்கு முன்னால் சிவன் தோன்றி, "முனிவரே, உமக்கு என்னவேண்டும்?' என்று கேட்க, அகத்தியர், "சிவபெருமானே, இந்த இடம் கயிலாய மலையைப்போல இருக்கிறது. நீங்களும் அன்னை உமா மகேஸ்வரியும் ஒரே கல்லிலிருந்து எங்களுக்கு அருள் செய்யவேண்டும்' என்று கேட்டார்.
அகத்தியரின் வேண்டுகோளை சிவபெருமான் அடுத்த கணமே நிறைவேற்றினார்.
ஆலயத்தைப் பற்றிய இன்னொரு கதை இது...
சிட்டெப்பா என்றொரு சிவபக்தர். அவர் சிவனை நோக்கித் தவம் செய்தார். சிவன் அவருக்குமுன் புலி வடிவத்தில் தோன்றினார்.
புலியின் உருவில் இருப்பவர் சிவன்தான் என்பதைப் புரிந்துகொண்ட சிட்டெப்பா அந்த மகிழ்ச்சியின் பெருங்கால் நடனமாடினாராம். அவருக்கு சிவன் அருள் புரிந்தார்.
இந்த ஆலயத்திற்கு அருகிலேயே சிவபக்தர் சிட்டெப்பாவின் பெயரில் ஒரு குகை இருக்கிறது.
இந்த ஆலயத்தில் மகாசிவராத்திரி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆந்திரப் பிரதேசத்திலுள்ள பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்தைத் தேடிவருவார்கள். அங்குள்ள நந்தி சிலையையும் அனைவரும் வணங்குவார்கள்.
வீர பிரம்மேந்திரர் என்னும் சித்தர் இந்த ஆலயத்திற்கு வந்து, ஒரு புனிதநூலை எழுதியிருக்கிறார்.
அங்கு ஒரு பெரிய குளம் இருக்கிறது. அங்கிருக்கும் நந்தியின் வாயிலிருந்து தூய்மையான நீர் குளத்திற்குள் எப்போதும் விழுந்து கொண்டிருக்கிறது. அந்த நீர் எங்கிருந்து வருகிறதென்று இதுவரை யாருக்குமே தெரியாது. இந்த ஆலயத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் அந்த குளத்தில் பக்திப் பெருக்குடன் குளிப்பார்கள்.
மாமுனிவர் அகத்தியர் பெயரில் ஒரு குகை இருக்கிறது. அந்த குகைக்குச் செல்ல 120 படிகள் உள்ளன.
அதற்கு அருகிலேயே வேறொரு குகை உள்ளது. அதன் பெயர் வேங்கடேஸ்வரர் குகை. அங்கு மகாவிஷ்ணுவின் சிலை உள்ளது.
திருப்பதி வேங்கடேஸ்வரர் ஆலயம் உருவாவதற்கு முன்பிருந்தே இந்த ஆலயம் இருப்பதாக வரலாறு கூறுகிறது.
இங்குள்ள வேங்கடேஸ்வரரின் கால்விரல் உடைந்த நிலையில் இருப்பதால், அவருக்குப் பூஜைசெய்ய மாட்டார்கள்.
இங்கிருக்கும் நந்தி வளர்ந்துகொண்டிருப் பதாக மக்கள் நம்புகிறார்கள். கலியுகம் வளர... வளர... நந்தியும் வளர்ந்துகொண்டிருப்பதாக ஐதீகம். வருடத்திற்கு இரண்டு அங்குலம் வளர்வதாகக் கூறுகிறார்கள். "நாங்கள் இதை சிறிய அளவில் பார்த்தோம். அது இப்போது பெரிதாகியிருக்கிறது. கலியுகம் முடியும் வேளையில் அது உயிர் பெற்று வரும்.
அத்துடன் கலியுகம் முடிவுக்கு வந்துவிடும்' என்பது பொதுமக்களின் கருத்து.
அகத்தியர் தவமிருந்த சமயத்தில் காகங்கள் அங்குவந்து இடையூறு செய்திருக்கின்றன.
அப்போது கோபமடைந்த அவர் காகங்களைப் பார்த்து சாபமிட்டாராம். அதனால் இப்போதும் இப்பகுதியில் காகங்கள் வராது. எனவே, இங்கு சனி பகவான் நுழையமுடியாது. ஏனெனில், சனியின் வாகனம் காகமாயிற்றே!
இந்த ஆலயம் இருக்கும் யாகண்டி, கர்னூல் நகரத்திலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது. அருகிலிருக்கும் விமான நிலையம் ஹைதராபாத்.
சென்னையிலிருந்தும் பெங்களூருவிலிருந்தும் ரயில், சாலை வசதிகள் இருக்கின்றன.
சென்னையிலிருந்து 456 கிலோமீட்டர் தூரத்திலும், பெங்களூருவிலிருந்து 360 கிலோமீட்டர் தூரத்திலும் திருப்பதியிலிருந்து 330 கிலோமீட்டர் தூரத்திலும் கர்னூல் உள்ளது.