இரண்டாம் பாகம்

தேவர்கள் தன்னை நாடி வந்திருப்பதை அறிந்து சசாதனன் மிகுந்த ஆச்சரியம் கொண்டான். அவர்களை வணங்கி வரவேற்று உபசரித்தான். பின் அவர்கள் வந்த நோக்கம் தெரியத் தொடங்கியது. தேவர்கள் தலைவனான இந்திரனே பேசத் தொடங்கினான்.

""சசாதனா... நாங்கள் உன்னிடம் ஒரு உதவிகேட்டு வந்துள்ளோம்...''

""உதவியா...? என்னிடமா?!''

Advertisment

""ஆம்... உன்னால்தான் எங்களுக்கு உதவவும் முடியும்.''

""ஆச்சரியமாக உள்ளது. நான் சாதாரண மானுடன். நீங்களோ சர்வ வல்லமை பெற்ற தேவர்கள். அமிர்தம் உண்டு சாகாவரமும் பெற்றவர்கள். அப்படிப்பட்ட நீங்கள் என்னிடம் உதவிகேட்பது என்பதும், என்னால் உங்களுக்கு உதவமுடியும் என்பதும் நம்பமுடியாத அதிசயமே...''

""ஒரு கோணத்தில் நீ கூறுவது உண்மைதான்! ஆனால் உன்னா லேயே எங்களுக்கு உதவமுடியும் என்கிற செய்தியைச் சொன்னவரே ஸ்ரீமகாவிஷ்ணுதான்... ஆதிப்பரம்பொருளான அவரால் நீ வழிமொழியப்பட்டுள்ளாய் என்றால் காரணமில்லாமல் இருக்குமா என்ன?'' என்று இந்திரன் கேட்க, அதற்கு அங்குவந்த ஒரு முனிவர், ""தேவேந்திரா! உனக்குக்கூடவா இந்த சசாதனன் யார் என்று தெரிய வில்லை?'' என்று கேட்டார்.

Advertisment

""தாங்களே கூறிவிடுங்கள்'' என்றான் இந்திரன்.

""இந்த சசாதனனின் இயற்பெயர் விரூஷி. இவன் தந்தைதான் இக்ஷவாகு. இந்த இக்ஷவாகுவும் யாரோ அல்ல... வைவஸ்வத மனுவின் புதல்வன். மனுவின் தந்தை யாரென்று உனக்கே தெரியும்.

அவனே உலகுக்கெல்லாம் ஒளிதரும் சூரியன்!''

சசாதனன் யாரென்று முனிவர் கூறவும் இந்திரனிடம் பிரமிப்பு. ""என்ன... இந்த சசாதனன் சூரிய குலத்தவனா? அவனது பேரனா?''

""ஆம்... இவன் விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்பந்தம்கொண்டு பிறந்தவன். அதேசமயம் அரசனுக்கு அரசன்- சந்நியாசிக்கு சந்நியாசி.''

""அது எப்படி?''

""வம்சாவளிப்படி அரசன். இடையில் ஒரு பிழை காரணமாக நாடுதுறந்து தேவி உபாசனை புரிந்து சந்நியாசியானவன்!''

-அந்த முனிவரின் விளக்கம் சசாதனனுக்கே ஒரு புதுத்தெம்பை அளிக்கத் தொடங்கியது.

""முனிவரே! நான் உங்களால் என் வரலாற்றைத் தெளிவாக அறிந் தேன். ஆனால் ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை. அசுரர்களோடு போரிட்டு வெல்ல என்னால் முடியுமென்று தேவர்கள் கருதுவது எப்படியென்று தெரியவில்லை. என்னிடம் விசேஷ வரசித்திகளோ, ஆயுதங்களோ ஏதுமில்லையே?''

""இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி உனக்குத் தெரியவில்லை.''

""ஆச்சரியமாக இருக்கிறதே. எனக் குத் தெரியாமல் அப்படி எந்த ஆயுதம் என்னிடம் உள்ளது?''

""சசாதனா... நீ தேவர்களில் ஒரு பாதியும், மானுடர்களில் ஒரு பாதியும் என்கிற கலப்பில் உருவானவன். அதேபோல் அதிகாரமுடைய அரசனாகவும், சகலமும் துறந்த சந்நியாசியாகவும் இருந்தவன். இப்போது தொந்தரவு செய்தபடி இருக்கும் அசுரர்களை வெல்ல உன்போன்ற சக்திகொண்ட ஒருவனாலேயே இயலும். இப்போதுள்ள அசுரர்கள் பிரம்மாவிடம், "தேவர்களாலும், மானிடர்களாலும் எங்களுக்கு எந்த ஆபத்தும் நேரக்கூடாது' என்றே வரம் பெற்றுள்ளனர். தேவமானிடர் என்று ஒரு இனத்தால் ஆபத்து நேரக்கூடாது என்று கேட்க அவர்களுக்குத் தோன்றவில்லை.''

முனிவர் அப்படிக் கூறவும்தான் இந்திரனுக்கே சசாதனனின் விசேஷ சக்தி தெரியவந்தது.

""முனிவரே... சரியான நேரத்தில் வந்து சசாதனன் பற்றிக்கூறி எங்களுக்கும் தெளிவை ஏற்படுத்திவிட்டீர்கள். உங்களுக்கு என் நன்றிகள்'' என்றான் இந்திரன்.

""அப்படியானால் நான் எதிர்த்தால் அசுரர்கள் அழிந்துவிடுவார்களா?'' என்று கேட்டான் சசாதனன்.

""ஆம் சசாதனா. நீ தனியே செல்லாமல் தேவர்கள் துணையோடு செல். உன் னோடு தேவசக்தியும் சேரும் போது வெற்றி சுலபமாகி விடும்'' என்றார் முனிவர்.

அதற்கேற்ப இந்திரன் உதவ முன்வந்தான். தன்னை ஒரு மாடு வடிவில் ரிஷப மாக்கிக் கொண்டான். அந்த ரிஷபத்தின்மேல் அமர்ந்து கொண்டு சசாதனன் அசுரர் களை எதிர்த்தான். அசுரர் களும் அழிக்கப்பட்டு, தேவர்கள் இழந்ததெல்லாம் திரும்பக் கிடைத்தது.

இதனால் சசாதனனுக்கு இந்திர வாகனன் என்றும், புரஞ்ஜெயன், காருத்சன் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. காளையின் முகப்பிலிருந்து போரிடுபவர்களை காருத்சர் என்பர். இப்பெயரே இவனது பரம்பரைக்கும் ஏற்பட்டு இவர்கள் காருத்சர்கள் என்றும் பெயர் பெற்றனர். வியாசர் ஜெனமே ஜெயனிடம் சசாதனன் கதையைக்கூறி முடித்ததில் ஜெனமேஜெயனிடம் பிரமிப்பு.

""மகரிஷி தாங்கள் கூறிடும் ஒவ்வொரு கதையும் எனக்கு நுட்பமான ஒரு செய்தியை உணர்த்திவிடுகின்றன. இந்த உலகில் மனித வாழ்வென்பது போட்டி, பொறமை, ஆசை, பேராசை, துக்கம், கண்ணீர் என்று எல்லாம் கொண்டதாகவே இருக்கும் என்பதே அது!''

""ஆம்... இதை நவரசங்கள் எனலாம். நவரசங்கள் கொண்டதே மனித வாழ்வு...''

""சரியாகச் சொன்னீர்கள். மனிதனைப் படைத்து, அவன் வாழும் வாழ்வில் நவரசங் களையும் படைத்து இந்த உலகை நிர்வகிக்கும் தேவியின் சக்தியையும் கருணையையும் எண்ணி நான் வியக்கிறேன்.''

""உண்மைதான் ஜெனமேஜெயா... மனித வாழ்வென்பது நவரசங்களின் சலனமே! இதில் நம் அறிவுக்கு அப்பாற் பட்ட வினோதங் களுக்கும் இடமுண்டு.''

""அப்படி ஏதாவது வினோதங்கள் இருக்கிறதா மகரிஷி.''

""ஆம்... இப்போது நான் கூறப்போகும் ஒரு வினோ தம் உலகம் கண்டறியாதது. கேட்டறியாதது!''

""முதலில் அதைக்கூறுங்கள் மகரிஷி. நான் மிக ஆவலாக இருக்கிறேன்.''

""கூறுகிறேன். இந்த உலகில் ஒரு பிறப்பு உருவாக ஆண்- பெண் என்று இருசாரர் வேண்டுமல்லவா?''

""அதிலென்ன சந்தேகம்...?''

""அப்படி இல்லாமல் ஒரு பிள்ளை பிறந் தால்...?''

""என்ன... ஆண்- பெண் கலப்பின்றிப் பிள்ளையா?''

""ஆம் ஜெனமேஜெயா... ஒரு மன்னன் ஒரு பெண்ணிடம் கூடாமல் தானே கருவுற்று, தானே கர்ப்பம் தரித்து, பிள்ளையையும் பெற்றெடுத்தால் எப்படியிருக்கும்?''

""நம்பமுடியவில்லையே... இப்படி யெல்லாம்கூட நடக்குமா?''

indiraparathasarathy

""நடந்திருக்கிறது. அதுதான் சிருஷ்டி வினோதம்.''

""எங்கே, யாருக்கு, எப்போது?''

""இதே சசாதனனின் சூரிய வம்சத்தில்தான்.''

""விளக்கமாகக் கூறுங்கள்.''

""கூறுகிறேன். சூரியனில் தொடங்கிய வம்சம் வைவஸ்வத மனு, இக்ஷவாகு, விரூஷி என்னும் சசாதனன்; பின் இவன் பிள்ளையான பிருது, பிருதுவின் பிள்ளை சந்திரன், இவனுக்கு யுவராஷ்வன் பிறந்தான். யுவராஷ்வனுக்கு பரமதர்ஷ்டன், இவனுக்கு சாவந்தன் என்பவன் பிறந்தான். சாவந்தனைத் தொடர்ந்து குவலயாச்வன், பின் திருடாச் வன், பின் அரியச்வன், பர்ஹச்வன், கிருசாச் வன், யௌவனாச்வன், மாந்தாதா என்று சூரியவம்சம் தொடர்ந்தது. இதன் தொடர்ச்சியில் இறுதியாக நான் கூறிய மாந்தாதா என்பவனே பெண் தொடர்போ அவள் சுரோணிதக் கலப்போ இன்றி பிறந்த வனாவான்!''

""எப்படி மகரிஷி?''

""கூறுகிறேன். மாந்தாதாவின் தந்தை யான யௌவனாச்வனுக்கு முதலில் பிள்ளை கள் இல்லை. எங்கே புத்திரப்பேறு இல்லா மலே தன்னோடு தன் சூரிய வம்சம் அழிந்து விடுமோ என்று யௌவனாச்வன் கலங்கி னான்.''

""ஆச்சரியமாக உள்ளதே... ஒரு பரம்பரை எப்படி இப்படி அழியமுடியும்? வரிசையாகப் பிறப்புகள் தொடர்ந்துள்ளனவே?''

""நாம் எல்லாருமேகூட நம் முன்னோர் களின் தொடர்ச்சியே. அதற்காக நம்மூலம் வம்சம் கட்டாயம் தொடருமென்று சொல்வதற்கில்லை.''

""ஏன் அப்படி?''

""வம்சத் தொடர்ச்சி என்பது பிறப்பு சார்ந்தது. இந்த உலகில் பிறந்த எந்த உயிராக இருந்தாலும்- அது தாவரமாக, புழுவாக, பூச்சியாக, மிருகமாக, பறவையாக என்று எத்தன்மை கொண்டதாயினும் பிறப் பென்பது ஒரு சிறந்த விஷயமல்ல!''

வியாசர் இப்படிக் கூறவும் ஜெனமே ஜெயன் விக்கித்துபோய் அவரைப் பார்த்தான்.

""மகரிஷி... என்ன கூறுகிறீர்கள்... பிறப்ப தென்பது சிறந்த ஒன்றல்லவா?''

""ஆம் ஜெனமேஜெயா... இக்கருத்தைக்கூட மனிதன் மட்டுமே அறியவோ உணரவோ முடியும். ஏனைய உயிரினங்கள் தங்களையே அறியாதவை. காலத்தின்வசம் சிக்கிவிட்டவை. அதன் வாழ்வும் அழிவும் காலத்தாலேயே ஏற்படும்.''

""மனிதனையே எடுத்துக் கொள்வோம். மனிதப்பிறப்பை சிறந்ததில்லை என்று எப்படிக் கூறமுடியும்?''

""எந்தப் பிறப்புமே சிறந்ததில்லை... பிறந் தால் வளர்ந்தாக வேண்டும். பின் வாழ்ந்தாக வúண்டும். வாழ்வதென்பது சுலபமா என்ன? வாழ்வதற்கு ஆரோக்கியம் முக்கியம். அதற்கு சத்துள்ள ஆகாரம் தேவை. ஆகார நிமித்தம் நாம் உழைத்தால்தான் உணவு கிட்டும்.

அடுத்து நாம் மட்டுமேவா இந்த உலகம்? நம்மைப்போல் கோடி கோடி பேர் உள்ளதே இவ்வுலகம். இவர்களோடு நாம் உறவு கொண்டு வாழவேண்டும். அப்படி உறவு கொள்ளும்போது பிடித்தவர், பிடிக்காதவர் என்கிற பாகுபாடுகள் தோன்றும். அதனால் பேதம் ஏற்பட்டு நன்மை- தீமைகள் ஏற்படும். இப்படி நம் வினைகளை நாம் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒரு கட்டத்தில் எதற்கு வாழ்கிறோம் என்று கேள்வி எழும். வாழ்ந்த நாட்களோ வெறும் நினைவாகவே இருக்கும். அதைக்கூட மறந்துவிடும் சாத்தியமுண்டு. மொத்தத்தில் வாழ்வென்பது வாழும் நொடியில் மட்டுமே என்கிற உண்மை புலப்பட்டு, அந்த நொடியில் நாம் மகிழ்வாக வாழ முற்பட்டாலும் வாழ இயலாதவாறு தடைகள் ஏற்படும். தடைகளோடு நாம் போராடுவோம். போராட்டம் வெறுப்பைத் தரும். இது என்ன வாழ்வென்று இதிலிருந்து விடுபட்டு மீண்டும் பிறவாத ஒரு நிலையை அடைய மனது எண்ணும். ஆனாலும் நம் கர்மவினைகள் அத்தனை சுலபத்தில் நம்மைவிடாது. இப்போது சொல்... வாழ்வு சிறப்பானதா? பாரமானதா?''

வியாசர் கேட்கவும் ஜெனமேஜெயன் தெளிந்தவனாக, ""உண்மைதான் மகரிஷி. வாழ்வு ஒரு பெருஞ்சுமையே... எப்போதும் மகிழ்வுடன் ஒருவரால் வாழமுடிவதில்லை. இன்ப- துன்பங்கள் மாறிமாறி வருவதே வாழ்வாகவும் உள்ளது.''

""இதனால்தான் வாழ்வு சிறந்த ஒன்றல்ல என்றேன்.''

""புரிந்துகொண்டேன். நீங்கள் யவ்வனாச் வனைத் தொடருங்கள்...''

""இந்த யவ்வனாச்வன் தனக்குப் பிள்ளை இல்லை என்கிற கவலையில் பிள்ளைப் பேற்றுக்காக ஒரு வேள்வி செய்தான். ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இவனுக்கு நூறு மனைவிகள். இவர்களில் ஒருவரால் கூட இவனுக்கு புத்திர பாக்கியம் தரமுடிய வில்லை.''

""வினோதத்திலும் வினோதம்...''

""ஆம்... மனிதப்பிறப்பில் இப்படி நிறைய வினோதங்கள் அனேகர் வாழ்வில் உள்ளன.

அதில் யவ்வனாச்வன் ஒருவிதம். இவன் பிள்ளைப்பேறு நிமித்தம் வேள்வி புரிந்த போது நூறு கலசங்கள் வைக்கப் பட்டு, அவற் றில் மந்திர நீர்விட்டுப் பூஜிக்கப்பட்டன. வேள்வியின் முடிவில் இந்த நூறு கலசங்க ளும் யவ்வனாச்வன் மனைவியருக்கு ஆளுக்கு ஒரு கலயம் என்று வழங்கப்படும். அந்த கலச நீர் பருகினால் பிள்ளைப்பேறு ஏற்படும்.''

""சரி... அதன்பின் என்னாயிற்று?''

""கலசங்களில் மந்திர நீர்விட்டு வேள்வி நிகழ்த்தப்பட்டது. அந்த நீரை ஒரு நல்ல நேரத்தில் யவ்வனாச்வன் மனைவியர் அருந்த வேண்டும். அந்த நல்ல நேரம் மறுநாள் காலைப் பொழுதாகும். எனவே யாக சாலையிலேயே அந்த மந்திரநீர்க் கலசங்கள் காத்திருந்தன.

இப்படி ஒரு நிலையில் யவ்வனாச்வன் அன்றிரவு யாகசாலைக்கு அருகிலேயே படுத்து உறங்கிவிட்டான். நள்ளிரவில் அவனுக்கு தாகம் எடுத்து உறக்கம் கலைந்தது.

எழுந்தவன் தண்ணீரைத் தேடத் தொடங்கி னான். இரவில் அருகிலிருந்த 101-ஆவது கலசம் எனும் ராஜகலசம் அவன் கையில் தட்டுப்பட்டது. அது மந்திர நீரென்று தெரியாமல் அதை யவ்வனாச்வனும் குடித்து விட்டான்.''

(தொடரும்)