காசி நகர சுடுகாட்டில் அரிச்சந்திரனின் பசிக்கு பிணங்களுக்கான வாய்க்கரிசிதான் சோறு என்றாகி விட்டது. சூரியகுல வம்சத்தில் வந்தவன், அயோத்தி என்னும் தர்மமிகு நாட்டுக்கே அரசன், லட்சக்கணக் கானோருக்கு நாள்தோறும் படியளந்தவன்... அவனுக்கே இன்று இப்படியொரு நிலை! இத்தனைக்கும் செய்யக்கூடாத தவறு எதையும் தெரிந்தும் செய்துவிடவில்லை; தெரியாமலும் செய்துவிடவில்லை. சொன்ன சொல் பிசகாமல் சொல்லி−ல் நிற்கிறான். அப்படி நிற்பவனுக்குத்தான் இத்தனை கஷ்டங்கள்!
இதைக் காண்போர்க்கு தர்மத்தின்மீது விருப்பமே தோன்றாது. தர்மப்படி வாய்மையோடு நடந்தால் பாடாய்ப் படவேண்டியிருக்கும். எனவே நாம் வளைந்து கொடுத்துப் போய்விடுவோம் என்றே ஜனசமூகம் நினைக்கும். இப்படி ஒரு ஜனசமூகம் நினைத்தால் அந்த நாடு நல்ல நாடாகவா இருக்கும்?
சராசரிகளும், அற்பமனிதர்களும் மிகுந்திருப்பர். தர்மம் இல்லாத இடத்தில் தானமோ மழையோ இருக்காது. இதனால் வறட்சி, நோய், திருட்டு என கேடுகள் ஏற்படும்.
அரிச்சந்திரன் சுடுகாட்டில் இதையெல்லாம் எண்ணி வருந்தினான். தன்னால் இப்படி ஆகிவிடக் கூடாதென்று தன் வரையில் உறுதியோடிருந்து கஷ்டத்தைத் தாங்கிவிட்டான். இதேபோல் சாமான்ய ஜனங்கள் தாங்குவரா? இதனால் உலகமே அல்லவா பாவப்பட்டதாகி அழியும்? "சர்வேஸ்ரா... இது என்ன சோதனை' என்று அவன் சுடுகாட்டில் படும்பாட்டை விண்ணில் சிவனும் விஷ்ணுவும் பிரம்மாவும்கூட கண்டு, அவர்களும்கூட கலங்கினர்.
குறிப்பாக லஷ்மிதேவி மகாவிஷ்ணுவிடம் மிக வருந்தினாள். ""உங்களால் தோற்றுவிக்கப்பட்ட சூரிய வம்சத்து ராஜாவுக்கு இப்படிக்கூடவா ஒரு சோதனையை ஏற்படுத்துவது? இதற்கு ஒரு முடிவே இல்லையா?
இந்த தர்மதேவனுக்கு ஈவு இரக்கமே கிடையாதா? இப்படியா சோதிப்பான்'' என்று அடுக்கினாள்.
விஷ்ணுவோ, ""சோதனைதான் சாதனையாக மாறும்'' என்றார். ""அரிச்சந்திரனை வைத்து இந்த உலகம் அழியாப் பாடம் ஒன்றைக் கற்கப் போகிறது. "எவ்வளவுதான் சிரமப்பட்டாலும் தர்மம்தான் வெல்லும்- எத்தனைதான் சுகப் பட்டாலும் அதர்மம் தோற்கும்' என்பதுதான் அந்தப் பாடம். இப்படி பாடங்கள் நடத்துவது கூட நாட்டு மக்களுக்காகவே...'' என்றார்.
""அப்படியானால் இதன் முடிவுதான் என்ன?'' என்று கேட்டாள் லட்சுமி. ""முடிவு நெருங்கி விட்டது தேவி... அடுத்தடுத்து நடக்கவிருக்கும் சம்பவங்களைப் பார்'' என்றார் விஷ்ணு.
அதற்கேற்பவே அடுத்தடுத்த சம்பவங்களும் நிகழத் தொடங்கின.
சந்திரமதியையும் லோகிதாசனையும் விலைக்கு வாங்கிச்சென்ற வேதியர், அவர்கள் இருவரையும் கசக்கிப் பிழிந்தார். லோகிதாசன் சிறுவன். இருந்தும் அவனை காட்டுக்கு விறகு வெட்டி எடுத்துவரவும், ஆற்றோரமாகச் சென்று தர்ப்பை அறுத்துவரவும் பணித்தார்.
அதேசமயம் ஒரு நாளைக்கு ஒருவேளை சோறு தான்! அதுவும் அவர்கள் சாப்பிட்டுமுடித்த மிச்ச சோறு... இந்நிலையில் உச்சபட்ச சோதனை யாக காட்டுக்கு தர்ப்பை கொண்டுவரச் சென்ற லோகிதாசனை சர்ப்பம் ஒன்று தீண்டியது. இந்த சர்ப்பம்கூட விசுவாமித்திரரின் தூண்டு தல்தான்... சர்ப்பம் தீண்டிய லோகிதாசன் நுரை கக்கி நீலம்பாரித்து இறந்துபோனான்... காட்டுக்குச் சென்றவன் திரும்பி வராததை அறிந்த வேதியர் சந்திரமதியை அழைத்து மகனை அழைத்து வரச்சொன்னார்.
""உன் மகன் வேலைப்பளு தாங்காமல் இந்த ஊரைவிட்டே ஓடிவிட்டான் என்று கருதுகிறேன். போய் அவனை அழைத்துவா..
அப்படி வராவிட்டால் உனக்கு ஒரு வாரத்துக்கு சோறில்லை'' என்றார்.
சந்திரமதி மகனைத் தேடிக்கொண்டு காட்டுப்பக்கம் வந்தாள். ஒரு புதரில் அவன் பிணமாகக் கிடக்கக் கண்டாள். இதனால் அவள் நெஞ்சம் வெடித்து கதறி அழுதாள்.
""ஐயோ மகனே... நீ இந்த ஊரைவிட்டுத்தான் ஓடிவிட்டாய் என்று நினைத்தேன். உலகத்தை விட்டேவா ஓடிவிட்டாய்? உனக்கு இப்படி யொரு நிலையா? உண்மையில் ஒழிந்து போக வேண்டியவள் நான்தான். வாழ வேண்டிய வயது உனக்கு. ஆனால் எல்லாம் தலைகீழாகிவிட்டதே'' என்று குமுறிக்குமுறி அழுதாள். பின் அவன் பிணத்தை தோளில் போட்டுக்கொண்டு வேதியர் வீட்டுக்கு வந்தாள். வேதியரோ லோகிதாசனை பிணமாகப் பார்த்து, ""ஐயோ, நான் இவன் பொருட்டு கொடுத்த பொன் அவ்வளவும் வீணாகி விட்டதே. இவன் இப்படி செத்துப்போய் எனக்கு பெரும் செலவு வைத்துவிட்டானே'' என்று சுயநலத்தோடு புலம்பினார்.
அதுமட்டுமின்றி, ""இவனை எரிக்கவோ புதைக்கவோ சல்லிலி−க்காசுகூட தரமாட்டேன். இதைச் சாக்கிட்டு நீ இன்று வேலை செய்யாமல் நாள் கடத்தவும் முடியாது. போ... போய் இன்றைய வேலையைப் பார். இவன் வேலையையும் சேர்த்துப் பார்'' என்றார்.
சந்திரமதி ஆடிப்போனாள்.
""வேதியரே! இவனை சுடுகாட்டில் போட்டு எரித்துவிட்டு வந்து எல்லா வேலையையும் செய்கிறேன். அதற்குமட்டுமாவது அனுமதி தாருங்கள்'' என்றாள்.
""முடியாது... விட்டால் நீயும் ஓடிவிடுவாய். இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொண்டு என்னை ஏமாற்றிவிடுவாய்...''
""நான் ராஜபத்தினி... வார்த்தை மாறமாட்டேன்...''
""அதெல்லாம் எப்போதோ... இப்போது நீ என் அடிமை. சொன்னதை மட்டும் செய்..''
அந்த வேதியர் லோகிதாசன் உடல் கிடக்க, சந்திரமதியை அன்று முழுக்க வேலை வாங்கினார். நள்ளிரவு அவர் உறங்கப்போன சமயத்தில், ""பிணத்தை எடுத்துச்சென்று எரித்துவிட்டுவா... அப்போதுகூட நான் சும்மா இருக்கமாட்டேன். உனக்காகக் காத்துக் கொண்டிருப்பேன்'' என்றார். சந்திரமதி மகன் உடலை தோளில் சுமந்தலிவளாக சுடுகாட்டிற்குச் சென்றாள். சுடுகாட்டில் அரிச்சந்திரன் அன்று இறந்து சொர்க்கம் சேர்ந்த சடலங்களை யெல்லாம் எரித்துமுடித்தது மட்டுமின்றி, அன்றிரவுதான் தன் பசிக்கு சோறு பொங்கிக் கொண்டிருந்தான்.
அரண்மனையில் தங்கத்தட்டில் தாதியர் புடைசூழ விதவிதமாய் உண்டவன் வாய்க் கரிசி சோற்றில் உப்புகூட போடாமல், பாழாய்ப் போன பசி நிமித்தம் உண்ணப்போனான்.
அப்போது அந்த சுடுகாட்டில் திரியும் நாய் ஒன்று அவன்முன் பசியோடு வந்து நிற்கவும், தன் பசிக்கு பொங்கிய சோற்றை அந்த நாய்க்குப் போடவும், அது தின்றுவிட்டு திரும்பிக் கூட பார்க்காமல் சென்றது. அப்போது தான் சந்திரமதி மகனைத் தோளில் போட்டுக் கொண்டு அந்த மயானத்துக்குள் நுழைந்தாள். அரிச்சந்திரனும் தன் மனைவி, மகன் இருவரையும் ஒருசேரப் பார்த்தான். அதில் மகனைப் பிணமாய்ப் பார்க்கவும் பதறினான்.
"என்னாயிற்று- எப்படியாயிற்று?' என்ற கேள்விக்குக் கிடைத்த பதில்களால் நெஞ்சு வெடித்துவிடும் அளவு கதறி அழுதான்.
அப்போது சுடுகாட்டுப் புலையனும் அரிச்சந்திரனை விலைக்கு வாங்கியவனுமான சண்டாலிளன் என்னும் அவன், ""இதென்ன கூத்து... வந்த பிணத்தை காசை வாங்கிக் கொண்டு எரிக்காமல் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டு அங்கு நிலவிய துக்கத்தை அதிகமாக்கினான்.
""அய்யா... இவன் என் மகன். அநியாயமாக பாம்பு கடித்து இறந்துவிட்டான். நானும் ஒரு அடிமை. எனக்கு பிணக்கூலி− தர விதியில்லை. தயவுசெய்து கருணை காட்டுங்கள்'' என்று கதறினாள் சந்திரமதி.
""கருணை, அன்பு, பாசம் என்கிற எந்த உணர்ச்சிகளுக்கும் இடமில்லாத இடம்தான் சுடுகாடு. அழகிய உடம்பிலே இருந்து அழுகிய உடம்புவரை அவ்வளவையும் மனதை கல்லாக்கிக்கொண்டு எரிப்பவனே புலையன் என்பவன். இங்கே வந்து கருணைகாட்டச் சொல்கிறாயே... முடியாது'' என்றான் அந்த சண்டாளன்.
அரிச்சந்திரனோ, ""அய்யா, ஒரு தந்தை என்கிற முறையில் நான் ஈமக்கிரியை செய்ய அனுமதியுங்கள். இவனைப் பெற்ற பாவி நான்'' என்று கதறினான்.
""உன் பாசம், பந்தம் எல்லாம் நீ அடிமை யானவுடனேயே போய்விட வேண்டிய ஒன்று. நீ இப்போது என்னால் விலைக்கு வாங்கப்பட்ட அடிமை. உனக்கென்று யாரும் கிடையாது. உன் எஜமானன் நான் மட்டும்தான் இருக்கிறேன்... நான் சொல்கிறபடிதான் நீ நடக்கவேண்டும்.''
""ஐயோ, இப்படி சொன்னால் எப்படி? ஒரு புலையன் தன் மகனை எரிக்கக்கூடவா பணம் கேட்கவேண்டும்?''
""அதுதான் இந்த ருத்ரபூமியின் நியதி.''
""அப்படியானால் நான் எப்பாடுபட்டாவது அந்த பணத்தைக் கட்டி விடுகிறேன். இப்போது அனுமதியுங்கள்.''
""கடனுக்குப் பிணத்தை எரிப்பதா? உலகம் இதுவரை கண்டிராத விந்தை இது...''
""என்வரையில் நடப்பதெல்லாமும் விந்தைதானே?''
""ஒரு விந்தையுமில்லை. இப்போதுகூட நீதான் அயோத்தி மன்னன்- யாருக்கும் எந்த வாக்குறுதியும் தரவில்லை என்று ஒரு பொய் சொல்... நீ இங்கிருந்து விடுதலையாவது மட்டுமல்ல; திரும்பவும் அயோத்திக்கே அரசனாகிவிடலாம்.''
""ஓ... இப்போதுதான் புரிகிறது... என் வாய்மையை சோதிக்கத்தான் இப்படி யெல்லாம் நடக்கிறதா?''
""ஆம்... இந்தப் பூவுலகில் மனிதனாய்ப் பிறந்த ஒருவனால் வாய்மையோடு வாழமுடியாது என்பதே தேவர்களின் தீர்மானம்...''
""இது என்ன கொடுமை... வாய்மையோடு வாழவைப்பதல்லவா அவர்கள் தீர்மானமாக இருக்கவேண்டும்?''
""அதைச்சொல்ல உனக்கு அருகதையில்லை. நீ இப்போது இங்கே என் அடிமை...''
சண்டாளனோடு வாக்குவாதம் நிகழ்வதைக் கண்ட சந்திரமதி, ""அரசே... இதற்கு மேலும் நாம் இந்த உலகில் வாழத்தான் வேண்டுமா?'' என்று கேட்டாள்.
""ஆம் சந்திரமதி... நீ சொல்வதே சரி... இனி நாம் வாழ்வதில் ஒரு பொருளுமில்லை. நாம் நம்மைத்தான் விற்றுள்ளோம்- நம் விருப்பங்களை இவர்களுக்கு விற்கவில்லை. அதை விற்கவும் முடியாது. எனவே லோகி தாசனுக்கான சிதை நெருப்பில் நீயும் நானும் குதித்து உயிரைமாய்த்துக் கொள்வோம்...'' என்றான்.
அதைக்கேட்ட சுடுகாட்டு சண்டாளன், ""என்னிடமிருந்து தப்பிக்கப் பார்க்கிறாயா? தற்கொலை புரிந்துகொண்டால் என்னாவாய் தெரியுமா?''
""நாங்கள் எதுவேண்டுமானால் ஆகிவிட்டுப் போகிறோம்.''
""புரியாமல் பேசாதே... பேயாய் பிசாசாய் மரங்களில் தொங்கிக்கொண்டு பாடாய்ப் படுவாய். இங்காவது உனக்கு வாய்க்கரிசிச் சோறு கிடைக்கிறது. பேயாய் பிசாசாய் திரிகையில் எதுவும் கிடைக்காது...''
""பரவாயில்லை... மகன் இருக்கிறான் என்கிற நம்பிக்கையில்தான்- அவன்மூலம் எங்கள் சந்ததி வாழும் என்னும் நம்பிக்கையில்தான் இத்தனை துன்பங்களைத் தாங்கிக்கொண்டேன். அவனே இல்லை எனும் நிலையில் வாழ்வதில் ஒரு பயனுமில்லை. ஆனால் ஒன்று... இறுதிவரை வாய்மையை இழக்காமல் வாழ்ந்தேன் என்கிற ஒரு விஷயம்போதும் எனக்கு...'' என்ற அரிச்சந்திரன் மளமளவென்று லோகிதாசன் உடல்மேல் கட்டைகளை அடுக்கி எரிக்கத் தயாரானான். சந்திரமதியும் அரிச்சந்திர னோடு சேர்ந்து குதிக்கத் தயாரானாள். சண்டாளனோ ""வேண்டாம்... சொன்னால் கேள்'' என்று தடுத்துப்பார்த்தான். எதுவும் அரிச்சந்திரன் காதில் விழவில்லை. அவர்கள் சிதையில் குதித்து உயிர் விடப்போன சமயம் சிதை நெருப்பு தானாய் அணைந்து, அந்த விறகுகள் அவ்வளவும் மலர்களாகின. அது வரை பாடாய்ப்படுத்திய சண்டாளன் தர்ம தேவனாகவும், விசுவாமித்திரருடன் இந்திரனும் அங்கே தோன்றினர். அரிச்சந்திரனின் இழிந்த புலையன் தோற்றமும் மாறி, அவன் முன்போல் அயோத்தி அரசனானான். சந்திரமதியும் ராணியாகி, லோகிதாசனும் உயிர்த்தெழுந்து நின்றான். அப்போது அவர்கள் மூவர்மேலும் மலர் மாரி பொழிந்தது. விண்ணில் தேவர்கள் தோன்றி பூரிப்புடன் அரிச்சந்திரன் பெயரைச் சொல்ல, ரிஷிகளும் முனிகளும் "வாழ்க வாழ்க' என்று வாழ்த்தினர்.
விசுவாமித்திரரே இப்போது அரிச்சந்திரனை வாழ்த்திப் பேசத் தொடங்கினார்.
""அரிச்சந்திரா... நீ அபூர்வமானவன். உன் மனவுறுதி அசாத்யமானது. அயோத்தி வம்சத்துக்கே உன்னால் பெரும் பெருமை ஏற்பட்டுவிட்டது. மானுட வாழ்வில் இதற்கு மேல் துன்பத்தை ஒருவன் அனுபவிக்க இயலாது எனும் அளவிற்கு நீ அனுபவித்தும், உன் வாய்மையை மட்டும் ஒருபோதும் இழக்கவில்லை. உன் பெருமை உலகமறியவே நீ சோதிக்கப்பட்டாய். வாழ்க நீ! வாழ்க உன் கொற்றம்...'' என்றார்.
(தொடரும்)