"யவ்வனாச்வன் கும்ப நீரைக் குடித்து தாகம் தணிந்தவனாகத் திரும்ப உறங்கச் சென்றான். மறுநாள் பொழுதுவிடிந்து வேள்வியைத் தொடங்கு வதற்காக வேதியர்கள் வந்தனர். அவர்கள் நூறு கலசங்களுக்கு நடுவில் நூற்று ஓராவது உச்ச சலசமாய் வைக்கப்பட்டிருந்ததில் நீரில்லாதிருப் பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பிறகே அதை இரவில் யவ்வனாச்வன் தாகத்தின் பொருட்டு குடித்துவிட்டதை அறிந்தனர். யவ்வ னாச்வனும் ""அது தவறா?'' என்று கேட்டான். ""தவறில்லை; ஆனால் விபரீதம்'' என்றனர்.
""விபரீதமா... எப்படி?''
""கலச நீரில் வேள்விப்பயன் மந்திரசப்த வடிவில் கலந்துள்ளது. அதில் உச்சகலசத்தில் காறு கலசப்பயனும் கலந்துள்ளது. இந்த நீரை அபிஷேகித்திட உடற்பிணிகள் தீரும். கூடுதலாய் புண்ணிய நதிகள் அனைத்திலும் குளித்த பயன் கிடைக்கும். உள்ளுக்கு அருந்தினாலோ தோஷம் நீங்கி எதன் பொருட்டு யாகம் நிகழ்த்தப்பட்டதோ அதற்கான பயன் கிடைக்கும். நீ பிள்ளை வரம் வேண்டியே இந்த யாகத்தைச் செய்தாய். எனவே பிள்ளைப்பேறு உனக்கு உண்டாகும்'' என்றனர் வேதியர்கள்.
அதைக்கேட்டு யவ்வனாச்வன் மட்டுமல்ல; அவன் மனைவியர் நூறு பேருடன் சகலரும் திகைத் தனர். ""இது எப்படி சாத்யம்?'' எனவும் கேட்டனர்.
""ஆணின் சுக்கிலமும் பெண்ணின் சுரோணித மும் கூடிக்கலந்த நிலையில் ஒரு பெண் கருவுண்டாகி, தன் கருப்பையில் அக்கரு வளர இடமுமளிப்பாள். இது இயல்பான பிரசவம்!
மந்திர சக்தியால் சுக்கில சுரோணிதம் கலசநீரிலேயே ஏற்பட்டு, அது உடம்புக்குள் திசுவைப் பற்றிக்கொண்டு செயல்படத் தொடங்கும். பெண்கள் இதைக் குடித்திருந்தால் இயல்பாக கருப்பையில் நிகழும். ஆண் என்னும் பட்சத்தில் குடலில் தங்கி குடலையே கருப்பையாக்கி வளரத் தொடங்கிவிடும்'' என்று அங்குள்ள வேதியர்கள் கூறினர்.
அதைக்கேட்டு யவ்வனாச்வன் கலங்கினான். "ஒரு ஆணான நான் பிள்ளை பெறப் போகிறேனா? இதை இந்த உலகம் எவ்வாறு எடுத்துக்கொள்ளும்? பிறக்கும் இந்த குழந்தை இயல்பான குழந்தையாக எல்லாவித சக்தியோடும் இருக்குமா?' என்று அவன் மனதுக்குள் பல கேள்விகள்!
-வியாசர் இங்கே ஜெனமேஜெயன் முன்னால் ஒரு இடைவெளிவிட்டார்.
அப்படி அவர் செய்தால், ஏதேனும் கேள்வி கள் தோன்றினால் அதை கேட்கலாம் என்று பொருள். ஜெனமேஜெயனும் கேட்கத் தொடங்கினான்.
""மகரிஷி... இது விந்தையிலும் விந்தை! நம்முடைய வேள்விகள் ஒரு ஆணைக்கூட பிள்ளைபெறச் செய்யும் சக்தி படைத்தவை என்பதை நான் இப்போது தெரிந்துகொண்டேன். இயற்கைக்கே மாறான இந்த செயலும் சரி; இதைத் தொட்டு யவ்வனாச்வனுக்குள் எழும்பிய சந்தேகங்களும் சரி- எனக்கும் இருக்கின்றன.... அதன்பின் என்னா யிற்று?'' என்று ஜெனமேஜெயன் கேட்டிட வியாசரும் தொடர்ந்தார்.
""யவ்வனாச்வன் கருக்கொண்டு அவன் வயிறு வளரத் தொடங்கியது. அறுவைசிகிச்சை செய்தே குழந்தையை வெளியே எடுக்கமுடியும் என்று அரண் மனை வைத்தியர்களும் கூறிவிட்டனர். பின்னர் அவன் கலச நீரை உண்ட நாளை முதல் நாளாகக் கொண்டு ஒன்பது மாதம் கழிந்து, ஒன்பது நாட்களும் கழிந்த நிலையில் பத்தாம் நாள் அதிகாலை யவ்வனாச் வன் வயிற்றைக் கிழித்து பிரம்ம முகூர்த்த வேளை யில் குழந்தையை வெளியே எடுத்தனர்.
அழகிய ஆண் குழந்தை!
எந்த ஊனமுமின்றி முழுமையான உடல் அமைப்போடு இருந்தது அந்தக் குழந்தை! குழந்தையைக் கண்டு அனைவரும் பூரித்தனர்.
பிரம்ம சிருஷ்டியில் ஒரு ஆண் கர்ப்பம் தரித்து பெற்ற பிள்ளை என்பதால், அந்த குழந்தை பற்றி அறிந்த சகலரும்- குறிப்பாக ரிஷிகள், முனிகள், அரசர்கள் என்று சகலரும் யவ்வனாச்வனை வந்து பார்த்து குழந்தையையும் ஆசிர்வதித்தனர்.
பூவுலகில் இப்படி ஒரு குழந்தை பிறந்து விட்ட செய்தி விண்ணில் இந்திரனையும் அடைந்தது. இந்திரனைவிட இந்திராணி அதிக ஆச்சரியம் கொண்டாள்.
"ப்ரபோ! அந்த அதிசயக் குழந்தையைக் காண நான் விரும்புகிறேன்' என்றாள். இந்திரன் உடனே இந்திராணியோடு தனக் கான வானரதத்தில் ஏறிக்கொண்டு யவ்வனாச் வனைக் காண அவனது அந்தப்புர அறைக்கு வந்தான். அவனை யவ்வனாச்வனின் மந்திரி களும், மனைவியர்களும் பூரணகும்பத்தோடு வரவேற்றனர். இந்திரன் மகிழ்ந்தான். பின் குழந்தையையும் கண்டான். அப்போது குழந்தை பசியெடுத்து அழத் தொடங்கியது. தாதிகள் கொடுத்த பால் அதற்குப் பிடிக்க வில்லை. பொதுவாக பிறந்த ஒரு குழந்தைக்கு தாய்ப்பால்தானே அருமருந்து? அது யவ்வனாச்வனிடம் இல்லை. குழந்தையோ தொடர்ந்து அழுதது. அப்படியே அழுது இறந்தாலும் இறந்துவிடும் என்றுகூட பலருக்குத் தோன்றியது. அப்போதைக்கு அக்குழந்தைக்கு தாய்ப்பால் தர யாரும் அங்கே தாய்மை நிலையிலும் இல்லை! அதை உணர்ந்த இந்திரன் ஒரு காரியம் செய்தான்! சட்டென்று தன் வலக்கை கட்டை விரலை குழந்தையின் வாயில் வைத்தான். உடனேயே குழந்தையும் அதை சப்பத் தொடங்கியது.
அழுகை நின்றது மட்டுமல்ல; பின் குழந்தை சிரிக்கவும் செய்தது. எல்லாரும் ஆச்சரியப்பட, இந்திரனே அதற்கான காரணத்தையும் விளக்கினான்.
"இனி இக்குழந்தை தாய்ப்பால் இல்லை யென்று அழாது. தாய்ப்பாலுக்கும் மேலான அமிர்தத்தை இது என் கட்டை விரல் வழி யாகக் குடித்துவிட்டது. இதனால் நிலைத்த ஆரோக்கியம் மற்றும் புகழ் பெற்று இந்தக் குழந்தை பெரும் தாதாவாக விளங்கும்.
அதாவது "மாந்தாதா' என்கிற பெயர் கொண்டு விளங்கட்டும்' என்றான்.
உடனேயே, "அயோத்தி வம்சத்து மாந்தாதா வாழ்க' என்று எல்லாரும் குரல் எழுப்பினர்.
யவ்வனாச்வனும் இந்திரனுக்கு நன்றி கூறி னான். அதன்பின் இந்திரன், இந்திராணி என இருவரும் சென்றுவிட, மாந்தாதா சிறப்பு டன் வளரத் தொடங்கினான். பின்னாளில் பிந்துமதி எனும் எழிலார்ந்த பெண்ணையும் மணந்தான். இவர்களுக்கு யாதொரு தடையு மின்றி பிள்ளைகள் பிறந்தனர். பிரகஸ்த்வன், பின் இவன் மகன் அரியச்வன், இவன் மகன் திரிதன்வா, இவன் மகன் அருணன் என்று வம்சமும் ஒரு குறையுமின்றித் தொடர்ந்தது.
அதாவது யவ்வனாச்வனில் தொடங்கி நான்கு தலைமுறைவரை பிள்ளைப்பேற்றிலும் பிரச்சினையில்லை. புகழ், கீர்த்தியிலும் குறைவில்லை. ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்த சத்தியவிரதன் பிறக்கவும்தான் குறை மீண்டும் தோன்றத் தொடங்கியது!''
வியாசர் இங்கே மீண்டும் இடைவெளி விடவும், ஜெனமேஜெயன் புரிந்துகொண்டு கேட்கத் தொடங்கினான். ""மகரிஷி... அது என்ன குறை? பெரிய குறையா அல்லது மனிதர்கள் வாழ்வில் இயல்பாய் ஏற்படும் குறைபாடா?'' என்று கேட்டான்.
""இயல்பான குறைபாடுதான் ஜெனமே
ஜெயா... ஆனாலும் சற்று இயல்புக்கு மிஞ்சியதும்கூட...!''
""என்ன மகரிஷி அது?''
""சத்தியவிரதனுக்கு காம இச்சை அதிக மிருந்தது. அழகிய பெண்களைக் கண்ட மாத்திரத்தில் காமுறத் தொடங்கிவிடுவான்.
அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டா லும் அவர்களை அனுபவிக்க முனைவான்.
அதுபோல ஒரு அழகிய பிராமணப் பெண்ணை அவன் கவர்ந்து சென்று அனு பவிக்கவும், அந்தப் பெண்ணின் குடும்பத்தார் சத்தியவிரதன் தந்தையான அருணனிடம் சென்று முறையிட்டார்கள். இதனால் மனமுடைந்த அருணன் சத்தியவிரதனை நாடு கடத்தி, காட்டில் அவன் வசிக்க வேண்டு மென்று தண்டித்துவிட்டான்.
சத்தியவிரதனை அரண்மனை சேவகர் களும் காட்டில் கொண்டு விட்டுவிட்டு வந்த னர். அந்த காட்டுக்குள் முனிவர்கள், வேடுவர் கள், சக்கிலியர்கள், குறவர்கள் என்று பலரும் வாழ்ந்தனர். அவர்களில் வேடுவர்கள், குறவர் கள் சத்தியவிரதனைத் தங்களோடு சேர்க்க மறுத்தனர். சக்கிலியர்கள்கூட அரை மனதாகவே அவனுக்கு இடமளித்தனர். இதனால் சத்தியவிரதன் பெரிதும் வருத்தமடைந்து, தன் காமம் தன்னை மிகவே தாழ்த்திவிட்டதையும் உணர்ந்து அக்கணமே திருந்தவும் செய்தான்.
இந்நிலையில் பிரம்மரிஷியான விஸ்வா மித்திரர் ஒரு பெண்ணோடு அந்த வனத்தில் வாழ்ந்துவந்தார். காலத்தால் குறைவுபட்ட தன் தவசக்தியை மீண்டும் பெறுவதற்காக அவர் கௌசிகி எனும் நதியின் கரையில் ஒரு நெடிய தவத்தில் அமர்ந்துவிட்டார். அவர் தவமியற்றவும் அவரது குடும்பம் தள்ளாடத் தொடங்கியது. விஸ்வாமித்திரர் மனைவிக்கு ஆறு குழந்தைகள் பிறந்திருந்தன. அதில் கைக்குழந்தை பசியால் துடித்து பாலுக்கு அழுதது. விஸ்வாமித்திரர் மனைவி என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தாள். அவ ளுக்கு அப்போது ஒரு வழியும் தோன்றியது.
அதாவது தன் பிள்ளைகளில் ஒரு பிள்ளையை யாருக்காவது விற்றுவிடுவது என்பதுதான் அது! மூத்த பிள்ளையை விட்ட வள் கடைக்குட்டியையும் விட்டுவிட்டு நடுப் பிள்ளையைத் தேர்வுசெய்து அவனோடு நகரத் தெரு நோக்கி நடந்தாள். தான் சீராட்டி வளர்த்த பிள்ளையை விற்கப்போகும் துக்கம் காரண மாக அழவும் செய்தாள். அப்படி அழுத படியே அவள் செல்வதை காட்டில் பிழைத்து வந்த சத்தியவிரதனும் கண்டான். அவளைத் தடுத்து நிறுத்தி காரணம் கேட்க, அவளும் தான் விஸ்வாமித்திரரின் பத்தினி என்பதில் தொடங்கி, அவர் இப்போது தவத்தில் ஆழ்ந்து விட்டார் என்று கூறவும்தான் சத்திய விரதனுக்கும் புரிந்தது.
"கவலைப்படாதீர்கள் தாயே... விஸ்வா மித்திரர் இடத்திலிருந்து உங்கள் அவ்வளவு பேரையும் நான் காப்பாற்றுகிறேன். இதற்காக பெற்ற பிள்ளையை விற்கமுனைவது பெரும் பாவமாகும். எனவே இந்த விற்பனை எண்ணத்தை விட்டுவிடுங்கள்' என்றான்.
விஸ்வாமித்திரரின் மனைவி, "உனக் கெதற்கப்பா சிரமம்' என்று மறுத்தாலும், பின்னர் சம்மதித்தாள். சத்தியவிரதனும் அவள் குடும்பத்தை தன் குடும்பம்போல் கருதி தினமும் வேட்டைக்குச் சென்று வேட்டையாடி விலங்குகளோடு வரத்தொடங்கினான்.
இதனால் விஸ்வாமித்திரர் குடும்பமும் தப்பியது. இது எதுவும் தெரியாமல் விஸ்வா மித்திரர் தவத்தில் இருந்ததுதான் விந்தை!
தினமும் வேட்டையாடிய மிருக மாமிசங்களோடு வந்து விஸ்வாமித்திரரின் குடும்பத்தை பசியாறச் செய்தவன், ஒரு நாள் காட்டில் வசிஷ்டரின் ஆசிரமத்தில் ஒரு பசுவைக் கண்டான். வசிஷ்டர்தான் அவன் தந்தை அருணனிடம் சத்தியவிரதனின் காமஇச்சையைப் பற்றிச் சொல்லி அவனை காட்டில் வாழும்படிச் செய்தவர். இதனால் சத்தியவிரதனிடம் வசிஷ்டர்மேல் கோபம் இருந்தது. எனவே அந்த கோபத்தோடு அந்த பசுவை அவருக்குத் தெரியாமல் திருடியவன், அதைக் கொன்று அதன் மாமிசத்தை விஸ்வாமித்திரரின் குடும்பத்தினர் சாப்பிடும் படிச் செய்துவிட்டான்.
பசுவைக்கொல்வது பெற்ற தாயைக் கொல்வதற்குச் சமமான ஒன்றாகும். அதன் இறைச்சியை உண்பதென்பது தாயைக் கொன்று தாயின் இறைச்சியை உண்பதற்குச் சமமானது. இது தெரியாமல் விஸ்வாமித்திரர் குடும்பம் அந்த பசுவை உண்ணத் தொடங்க வும், அந்தப் பாவம் சத்தியவிரதனைத்தான் சேர்ந்தது. குறிப்பாக வசிஷ்டர் தன் ஞான திருஷ்டிமூலம் சத்தியவிரதனே பசுவைத் திருடியவன் என்றறிந்தார். அதோடு விஸ்வா மித்திரர் குடும்பத்தையும் பாவியாக்கிவிட்ட காரணத்தால் வெகுண்டு சபித்தார். எப்படித் தெரியுமா?
சத்தியவிரதனை யார் கண்டாலும் முகம் சுளித்து ஓரமாய்ச் சென்றுவிட வேண்டும் என்னும் அளவு அவன் கோர முகம் கொண்ட வனாய் மாறும்படிச் செய்துவிட்டார்.
இதனால் சத்தியவிரதன் கண்ணீர் சிந்தினான்.
"நான்தான் கொலை செய்தேன். மறுக்க வில்லை... ஆனால் வேண்டுமென்று செய்ய வில்லை. என் சுயநலத்திற்காகச் செய்யவு மில்லை. எனவே எனக்கு இந்த தண்டனை மிக அதிகபட்சமானது' என்று குமுறினான்.
ஆனால் வசிஷ்டரோ, "கொடுத்தது கொடுத்ததுதான். இருந்தாலும் ஒரே ஒரு மந்திரம் இருக்கிறது' என்றதோடு தேவியின் "அந்த மந்திரத்தை நீ தினமும் விடாமல் பக்தி யோடும் உருக்கத்தோடும் கூறிவந்தால் போகப் போக உனக்கு நன்மை ஏற்படும்' என்று அந்த மந்திரத்தையும் உபதேசம் செய்தார்.
சத்தியவிரதன் கோரமாக மாறிவிட்ட நிலையில், அவன் பெயரும் திரிசங்கு என்று மாறிவிட்டது. முதலில் அரசன் மகன், பின் கானகச் சண்டாளன், இப்போது கோர ரூபம் என்று மூன்று நிலைப்பாடுகள் காரணமாக மூன்று நிலையை சந்தித்தவன் என்பதால் திரிசங்கு என்றானான்.
திரிசங்குவாய் வசிஷ்டர் உபதேசித்த தேவி மந்திரத்தைச் சொல்லித்திரிந்ததில் நாட்கள் மாதங்களாகிக் கடந்தன. அதனால் அவனிடம் மாற்றம் வரவில்லை. இதனால் பெரிதும் மனம் வருந்தியவன் தீக்குளித்து உயிர்விடத் தீர்மானித்தான். அதற்காக தீ வளர்த்து அதில் குதிக்கும்முன் தேவிக்கான மந்திரத்தை உருக்கமாய் ஒருமுறை கூறினான்.
பின் குதிக்க முனைந்தான். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது.
"சத்தியவிரதனாகிய திரிசங்குவே... உயிரை விடாதே... உன் பக்தியை மெச்சினேன்... இனி உன் வாழ்வில் எல்லாம் மாறும். ரோகம் நீங்கும்; உன் தந்தையும் உன்னை மன்னித்து அயோத்தி அரசனாக்குவான். நீ இழந்த அனைத்தையும் திரும்பப்பெறுவாய்' என்னும் அந்த அசரீரி தேவியின் குரலாகவே அவனுக்குக் கேட்டது. அதற்கேற்ப அயோத்தியிலிருந்து அருணனின் தளபதிகள் சத்தியவிரதனைத் தேடிக்கொண்டு காட்டுக்கும் வந்தனர்.
அவனை அழைத்துச் சென்று அருணன்முன் நிறுத்திப் பின் பட்டாபிஷேகமும் செய்வித் தனர். அதன்பின் சத்தியவிரதனான திரிசங்கு நெடுங்காலம் ஆட்சி செய்தான். திரிசங்கு வுக்கு ஒரு மகனும் பிறந்தான். இவனே அரிச்சந்திரன்!'
(தொடரும்)