இரண்டாம் பாகம்
4
ஜெனமேஜெயன் "பிறகு?' என்று கேட்கவும், வியாசர் தொடர்ந்து பார்கவர் ஹைஹயர்களை மன்னித்த அந்த வரலாற்றைக் கூறிமுடித்தார்.
""மனிதனின் உயரிய பண்புகளில் மிக மேலானதாகக் கருதப்படுவது பிறர் பிழை பொறுத்து அவர்களை மன்னிப்பதே! இன்னும் சொல்லப்போனால் தண்டிப்பதைவிட மன்னிப்பதுதான் மிகப்பெரிய தண்டனை...'' என்ற வியாசரை ஜெனமேஜெயன் ஆச்சரியத்தோடு பார்த்தான். அதெப்படி என்று பார்வையாலேயே கேட்டான்.
""ஆம் ஜெனமேஜெயா... ஒருவரை நாம் தண்டித்தால் அந்த தண்டனை முடியவும் நம்வரையில் அவர் குற்றம் சரியாகிவிடுகிறது. ஆனால் தண்டனை அடைந்தவர் மனதில் அது வடுவாகிவிடுகிறது. நாம் மன்னிக்கும் பட்சத்தில் தவறு செய்தவர் தனக்குள் குற்றவுணர்வுக்கு ஆளாகி, காலம் முழுக்க அதை நினைப்பார். நமக்கும் நாம் பெருந்தன்மையோடு நடந்துகொண்ட நிறைவு காலம் முழுவதும் இருக்கும். இதனால்தான் பார்கவர் அவர்களை மன்னித்து இழந்த கண்களை அவர்கள் திரும்பப் பெறும்படியும் செய்தார்.''
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/yathumyagi.jpg)
வியாசரின் பதிலால் ஜெனமேஜெயன் உண்மையிலேயே நெகிழ்ந்து போனான்.
""மாமுனியே... தாங்கள் கூறிடும் ஒவ்வொரு சம்பவமுமே மிக உன்னதமானதாய் எனக்கு ஒரு படிப்பினையைத் தருவதாக உள்ளது. நான் வாழும் இந்த உலகமும், இதன் வாழ்விலும்தான் எத்தனைவிதமான வண்ணங்கள் என்கிற சிந்தனையும் ஏற்படுகிறது. உங்களை, என்னை, நம்மை, நாம் வாழும் இந்த உலகை, இதற்கும் அப்பால் பல அண்டசராசரங்களை, நட்சத்திரங்களைப் படைத்த அந்த தேவியை நினைக்கையில் பிரமிப்பு தட்டுகிறது. அவளுக்குத்தான் எத்தனை சக்தி? அதை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை'' என்று ஜெனமேஜெயன் உணர்ச்சிப் பிரவாகமானான்.
""ஆம் ஜெனமேஜெயா... என்னிடமும் அம்பிகை குறித்து பிரமிப்பு உண்டு. உலகைப் படைப்பதோ, அதில் உயிர்களைப் படைப்பதோகூட பெரிதில்லை. அந்த உலகும் உயிர்களும் பற்றுதலோடு வாழ்ந்திடும் வண்ணம் ருசியோடு செய்வதுதான் இயலாத ஒன்று.
அன்னை அதை மாயாவின் துணைகொண்டு நிர்வகிக்கிறாள். என்வரையில் அன்னைமேல் எனக்கிருப்பது பக்தி என்றால் மாயாமேல் எனக்கிருப்பது ஒருவித பயமாகும்...''
வியாசர் மாயா குறித்துப் பேசவும் ஜெனமேஜெயன் சற்று அதிர்ந்தான். அது அவன் முகத்தில் எதிரொலித்தது.
""என்ன ஜெனமேஜெயா...''
""மாயாவை எண்ணி பயப்படுவதாகக் கூறினீர்களே... உங்களுக்குக் கூடவா பயம்?''
""பயம் என்றால் அதற்குள் பல பொருள் உண்டு. கோழைத்தனமாய் நடுங்குவதோ, அதை சந்திக்க மறுப்பதோ அல்ல... அதன் சக்தியை எண்ணியும், தப்பித்தவறியும் அதோடு மோதாமல் சென்றுவிட வேண்டுமென்கிற எச்சரிக்கை உணர்வும்கூட பயத்தோடு சேர்ந்ததுதான். என் பயம் அந்த எச்சரிக்கை சார்ந்த பயம்...''
""இதற்கு பயம் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் எச்சரிக்கை என்றே கூறிவிடலாமே..?''
""அப்படியே கூறலாம்தான்... இருப்பினும் பயம் என்பதே சரியானதாக எனக்குப்படுகிறது...''
""உங்களைப்போல முற்றும் துறந்தவர்களே பயப்படலாமா? பற்றிருந்தால் அல்லவா பயமும் வரும்?''
""ஜெனமேஜெயா... உண்மையில் பற்றின்றி வாழ்வது மிகக்கடினம்.
அது இயலாது. எனக்கு எதுவும் வேண்டாம் என்று நிர்வாணக்கோலம் பூண்டிடும் ஒரு சந்நியாசிகூட "எதுவும் வேண்டாம்' என்பதை விரும்பியே சந்நியாசியாகிறான்.
ஒன்றை விரும்புவது மட்டும் பற்றல்ல... வேண்டாம் என்பதும்கூட பற்றுதான். உதாரணத்திற்கு, ஒரு பாத்திரத்தில் விஷம் இருக்கிறது. நாம் அதை வேண்டாமென்று ஒதுக்குகிறோம் என்று வை.
அதுகூட நம்மேலுள்ள பற்றினால்தானே?''
""ஆம் முனிவரே... அருமை யான விளக்கம். பற்றின்றி வாழ முடியாதுதான். பற்றைக் குறைத் துக்கொள்ளலாம். மற்றபடி பற்றே இல்லாமல் இருக்க முடியாதுதான்...''
""இப்போது நீ உணர்ந்து சொன்னதே உண்மை. துளியும் பற்றில்லாவிட்டால் உலகில் வாழவும் முடியாது. வாழ்ந்தால் அது வாழ்வாகவும் இருக்காது. மரம், செடி, கொடிகள் பற்றில்லாத உயிரினங்களே... சிலவகை விலங்குகளும்கூட பற்றில்லாதவையே...
அவற்றைக் கூர்ந்து கவனித்தால் இவை எதுவுமே தனக்கென வாழாதவை என்பது புலனாகும். மரமோ செடியோ கொடியோ மழை பொழிந்தால் செழிக்கும். வறட்சி ஏற்பட்டால் பட்டுப்போகும். செழித்திருக்கும்போது மகிழ்ச்சியோ, பட்டுப் போகும்போது வருத்தமோ அவற்றுக்குக் கிடையாது.
பற்றென்பது நம்மிடமும் இல்லாது போகும்போது நம் வாழ்வும் இதுபோன்றதாகிவிடும். நம் வாழ்வு பல வண்ணம் கொண்டு ருசிமிக்கதாக இருந்திட பற்றே காரணம். இந்த பற்றைத் தருவது மாயா!''
வியாசர் மாயாவிடம் இறுதியாக வந்து நின்றார்.
""இந்த மாயாவுக்கு யாருமே விதிவிலக்கு கிடையாதா மகரிஷி?''
""ஆம் ஜெனமேஜெயா... எவருமே விதிவிலக்கு கிடையாது. மும்மூர்த்தி களுக்கும்கூட மாயா உண்டு. மாயாவால் ரசமான சம்பவங்கள் உண்டு.
பார்வதியாகிய உமை ஈசனாரிடம் சண்டை போட்டதுண்டு- காரணம் மாயா.
ஈசனார் உமையிடம் மட்டுமல்ல; தன் பிள்ளை முருகனிடம் சண்டை போட்டிருக்கிறார். சண்டை மட்டுமல்ல; பல தருணங்களில் மயக்கத்திற்கும் ஆட்பட்டிருக்கிறார்.
திருமாலுக்கும் திருமகளுக்கும்கூட ஊடல் ஏற்பட்டதுண்டு. இந்திராதி தேவர்களுக்கும் மாயா காரணமாக இன்பதுன்பங்கள் ஏற்பட்டதுண்டு.
இதையெல்லாம் சொல்லும் எனக்கே மாயாவால் வருத்தங்கள் ஏற்பட்டதுண்டு.''
வியாசர் தன்னையும் உட்படுத்தியதைக் கேட்டு "எப்படி?' என்பதுபோல் பார்த்தான்.
""ஜெனமேஜெயா... என் கதை விசித்திர மானது. நான் ஒரு மீனவப்பெண்ணுக்கும் முனிவருக்கும் ஒரு படகில் பிறந்தவன். என்னை ஈன்ற தாய் அதன்பின் சந்தனு மகாராஜாவுக்கு பத்தினியாகி பாண்டு, திருதராஷ்ட்ரன், விதுரர் போன்றோர் தோன்றக் காரணமானாள்.
அதன்பின் என் சகோதரனுக்கு புத்திரபாக்கியமில்லாத நிலையில், என்னால் அவர்கள் வம்சம் தழைக்கத் தொடங்கியது. எனக்கென பிள்ளைகள் இருந்தும் அவர்களால் எனக்கு இன்பமில்லை... நான் சொன்ன ஒவ்வொரு சம்பவத்தின் பின்னா லும் ஆசை, மோகம், பாசம் எனும் உணர்ச்சி நிலைகளை நீ காணலாம். அவ்வளவும் மாயையே!''
வெகு அழகாக விளக்கிய வியாசர் மாயைக்கு சர்வலோக சஞ்சாரியான பிரம்மபுத்திரர் நாரதரும்கூட விதிவிலக்கில்லை என்பதற்குக் காரணமான ஒரு சம்பவத்தைக் கூறத் தொடங்கினார்.
நாரதரும் பர்வத முனிவரும் ஒருசமயம் பூலோக சஞ்சாரம் செய்தார்கள். பூலோகத்தில் இருக்கும் சகல தீர்த்தங்களிலும் நீராடி, ராஜாக்களையெல்லாம் சந்தித்து அளவளாவி, அவர்கள் சந்தோஷமாய் இருந்த சமயத்தில் சஞ்சியபுரி என்னும் ஒரு பட்டணத்து அரச னின் அரண்மனைக்கு விஜயம் செய்தனர்.
அரசனும் இருவரையும் வரவேற்று மகிழ்ந்தான். இந்த அரசனுக்கு தமயந்தி என்கிற ஒரு அழகான பெண் இருந்தாள். இவள் நாரதரிடம் மிகவே அன்பைப் பொழிந்தாள். பர்வத முனிவரிடம் மரியாதை காட்டி ஒதுங்கிநின்றாள். ஒரு கட்டத்தில் தமயந்தி நாரதரைக் காதலிக்கவே தொடங்கிவிட்டாள். குறிப்பாக நாரதரின் இசைக்கு அடிமையாகிப்போனாள்.
இதையறிந்த பர்தவத முனிவர் நாரதரிடம், ""என்ன நாரதரே... விருந்தாளியாகத் தங்கியுள்ள இடத்தில் காதல் போன்ற மயக்கங்களுக்கு இடம் தரக்கூடாது என்பது தெரியாதா? நீங்களும் சரி; நானும் சரி- அரசர்கள் அல்ல; முனிவர்கள்... நமக்கெதற்கு மானுடக்காதல்?'' என்று கேட்டார்.
""உண்மைதான் முனி... ஆனாலும் தமயந்தி என்னை விடமறுக்கிறாளே... நான் என்ன செய்வது?''
""அப்படியானால் நாம் இப்போதே இந்த ஊரைவிட்டுச் செல்வதே சரியானது...''
""காதலுக்காக பயந்து ஓடச் சொல்கிறீர்களா... அது என்ன அவ்வளவு பெரிய பாவமா மகரிஷி...?''
""நாரதரே... அது ஒரு கோணத்தில் பாவமே! நீங்களும் விரும்பும்போதுதான் காதல் முழுமையடையும். நீங்கள் விரும்பாமல் அவள் மட்டுமே விரும்புவது ஒருதலைக் காதலாகும். நாளை அவள் வேறொருவனை மணக்கும் சமயம், அவளது பதிவிரதா சக்தி குன்றிப்போகும். எனவே நீங்களும் விரும்பி அவளை மணந்துகொள்ளுங்கள்'' என்றார் பர்வத முனிவர்.
நாரதரோ பர்வத முனிவர் தேவையின்றி தன் அந்தரங்க விஷயத்தில் தலையிடுவதாகக் கருதி, ""பர்வதரே... இனி என் விஷயத்தில் தலையிடாதீர்கள். எதுவாயினும் நான் பார்த்துக்கொள்கிறேன்'' என்றார்.
இதனால் கோபமடைந்த பர்வத முனிவர், ""நாரதரே... நான் இவ்வளவு சொல்லியும் உமக்குப் புரியவில்லையா? க்ஷணத்துக்கு க்ஷணம் தாவும் மனம் கொண்ட குரங்குகூட உம்மைப்போல நடக்காது... பிரம்மபுத்திரராக இருந்துகொண்டு நீங்கள் இப்படி ஒரு பெண் மனதில் ஆசையை வளர்ப்பது தவறு. இதை சுட்டிக்காட்டியும் புரிந்துகொள்ளாமல் நீங்கள் பேசுவது உங்கள் குரங்கு மனதைக் காட்டுவதால் நீங்கள் குரங்கு முகம் வாய்க்கப்பெறுவீராக! உம்மைப் பார்த்து அந்தப் பெண்ணும் திருந்தட்டும்'' என்று சபிக்கவும், நாரதர் அதை எதிர்பார்க்கவில்லை. பதிலுக்கு அவருக்கும் கோபம் வந்தது.
""பர்வதரே! உங்களுக்கு என்மேல் பொறாமை ஏற்பட்டே சபித்து விட்டீர். தமயந்தி உங்கள்மேல் காதல் கொள்ளவில்லை என்பதால் உமது புத்தி பேதலித்துவிட்டது. அதனால்தான் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறீர்கள். பதிலுக்கு உங்களை நானும் சபிக்கிறேன். சொர்க்கவாசம் புரியவேண்டுமென்பது உங்கள் விருப்பமாகும். அது இனி நிறைவேறாது. எக்காலத்திலும் உங்களுக்கு சொர்க்கவாசம் கிடைக்கக்கூடாது என்று நானும் சபிக்கிறேன்.''
அதன்பின் குரங்கு முகத்துக்கு மாறிய நாரதரைக் கண்டு அரசன் மகள் தமயந்தி மனம் மாறவில்லை. மாறாக மனம் வருந்தி மிகவே உபசரித்தாள். நாரதரால் சபிக்கப்பெற்ற பர்வத முனிவரோ அரச னைத் தூண்டிவிட்டு தமயந்திக்கு சுயம்வர ஏற்பாடு செய்யச் சொன்னார். அதில் வெல்பவர்க்கு தமயந்தி மாலை சூட்டுவாள். அதில் தானும் பங்குகொண்டு வெல்ல முயலலாம் என்றெல்லாம் கணக்குப் போட்டார்.
ஆனால் தமயந்தி சுயம்வரத்துக்கு சம்மதிக்கவில்லை. மாறாக அரசனிடம் தான் நாரதரைக் காதலிப்பதோடு, மானசீகமாய் அவரை மணந்துகொண்டுவிட்டதாகவும் கூறினாள். அரசன் அதிர்ச்சியடைந்தான். சுயம்வரத்தையும் கைவிட்டான். பின் அரைமனதாக நாரதரைத் தன் மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்ள, பர்வதரும் தனியே தீர்த்த யாத்திரை புறப் பட்டார்.
அதன்பின் காலம் உருளத் தொடங்கியது.
தமயந்தியின் பணிவிடையில் நாரதர் மகிழ்ந்தபோதிலும் தன்னால் அவளுக்குப் பெரிதாக எந்த சுகமும் இல்லையே என்றும் கருதினார். குரங்கு முகத்தோடு வெளியே எங்கும் செல்லவும் முடியவில்லை. இதனால் ஒரு சிறைவாசிபோலான நாரதர் பர்வதமுனிவர் சொன்னதை மெல்ல எண்ணிப் பார்த்தார். தான் இங்கு வராமலும், தமயந்தியை சந்திக்காமலும் இருந்திருந்தால் இப்படியெல்லாம் எதுவுமே நடந்திருக்காது. இப்போது நடந்துவிட்டதையும் எதுவும் செய்ய இயலாத நிலை... எனவே நாரதரும் வருந்தினார். அதை தமயந்தியிடம் வெளிப்படுத்தினார்.
""தமயந்தி... என்னால் உனக்கு பெரிய சந்தோஷங்களில்லை. பெரும் அரசர்களை மணந்து ஒரு ராணிபோல வாழ வேண்டிய நீ என்னால் எல்லாவற்றையும் இழந்துவிட்டாய்,'' என்று கூறவும் தமயந்தி அவர் வாயைப் பொத்தித் தடுத்தாள்.
பின் அவரிடம், ""இது நான் செய்த பாக்கியமே சுவாமி... தங்களைத் தாங்களே தாழ்வாகக் கருதிவிடாதீர்கள்...'' என்றாள். இவ்வேளையில் அரண்மனை விட்டுச் சென்ற பர்வத முனிவர் திரும்பி வந்தார். வந்தவர் இருவரும் ஒருவர்பால் ஒருவர் பாசத்தோடும் பற்றோடும் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார்.
நாரதருக்கும் பர்வதரை தான் கோபப் பட்டு சபித்தது புரிந்தது. எனவே இம்முறை பழையதை மறந்து அவரை வரவேற்று உபசரித்தார். தமயந்தியின் பாசம் மற்றும் பற்றைக் கண்டு ஆச்சரியம் கொண்ட பர்வதர் தானளித்த சாபத்தை விலக்கிக்கொள்வதாகக் கூறினார். மறுக்ஷணமே நாரதர் பழைய உருவத்துக்கு ஆளாகிவிட்டார். அப்படி ஆளான மறு விநாடியே அவர் பர்வதருக்கு அளித்த சாபத்தை தானும் விலக்கிக்கொள்வதாகக் கூறி விலக்கிக்கொண்டார். இதனால் பழைய நிலைக்கு இருவரும் திரும்பினர். இவ்வாறு வியாசர் நாரதர் குரங்காக மாறிய சம்பவத்தைக் கூறி முடிக்கவும் ஜெனமேஜெயன் மகிழ்ந்தான்.
""மாயை இரு முனிவர்களைக்கூட விடவில்லை. அவர்களையே ஆட்டிப் படைத்து ஒரு கை பார்த்துள்ளதே?'' என்றான்.
""ஆம்... அதுவே மாயாசக்தி. இதே நாரதர் சாபத்தால் குரங்கானதுபோல் பெண்ணாகவும் ஒருசமயம் மாறிவிட்டார். அதுவும் ஒரு இனிய வரலாறு'' என்று அந்த சம்பவத்தைக் கூறத்தொடங்கினார்.
(தொடரும்)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-07/yathumyagi-t.jpg)