"நல்லவர் களைக் காத்து, தீயவர்களை அழித்து யுகங்கள் தோறும் தர்மத்தை நிலைநாட்ட வந்து திப்பேன்.'
"பரித்ராணய ஸாதூநாம் விநா சாய ச துஷ்க்ரு தாம் தர்ம ஸம்ஸ் தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே' என பகவத் கீதையில் கூறிய பகவான் கிருஷ்ண பரமாத்மா துவா பரயுகத்தில் அவதரித்தார். கிருஷ்ணாவதா ரத்தால் ஐந்தாவது வேதம் எனப் போற்றப்பட்ட ஸ்ரீமத் பகவத்கீதை யை அர்ஜுனன் வாயிலாக நமக்கு உபதேசித்தார். கிருஷ்ணர் நீளா தேவியின் அவதா ரமான நப்பின்னையைத் திருமணம் செய்ததன்மூலம் உலகிற்கு நடைமுறைத் தத்துவத்தை மறை முகமாக உபதேசித்தார்.
நப்பின்னை என்பவளை வடமொழி இலக் கியங்கள் மற்றும் புராணங்களில் சத்யை, நாக்னஜிதீதேவி என்று குறிப்பிடுவார்கள். சிரவண மாதம் (ஆவணி), கிருஷ்ணப் பட்ச அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தில் வசுதேவர்- தேவகி தம்பதியினருக்கு எட்டா வது மகனாக பகவான் விஷ்ணு (கிருஷ்ணர்) அவதரித்தார். இந்த நாளைத்தான் நாம் கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி என்கிற பெயரில் கொண்டாடி வருகிறோம்.
ஆயர்குலத் தலைவனாக விளங் கிய ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த நேரத்தில் ஆயர்பாடி எப்படி இருந்தது என்பதை- "ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார் நாடுவார் நம்பிரான் எங்குதான் என்பார் பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப் பாடியே' என வர்ணிக்கிறார் பெரியாழ்வார்.
ஆயர்பாடி மக்கள் எங்ஙனம் ஆனந் தக்கூத்தாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினார்கள் என்பதைத் தெரிவிக் கிறார்.
ஸ்ரீகிருஷ்ணரின் வருகை மற்றும் அவரது லீலைகளை நினைத்து மகிழ்ச்சி யடைந்தனர் மக்கள். காரணம் தங்களின் குலத்தைக் காக்க ஒரு ரட்சகர் வந்து விட்டார் என்ப தால் இருக்குமோ?
ஆயர் குழந்தையின் வடிவழகைப் பற்றி, அரங்கநாதனைத் தவிர வேறு யாரையும் பாடாத தொண்டரடிப் பொடியாழ்வார், "பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கன் அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்' எனப் புகழ்ந்து பாடுகிறார்.
எல்லையற்றவரான முழுமுதற் கடவுளான கிருஷ்ணரின் நாமம், ரூபம், குணம், லீலைகள், உன்னதமான உயர்பண்புகளைப் பற்றி ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீவிஷ்ணு புராணம் ஆகியவற்றின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
பகவான் கிருஷ்ணர் எட்டுத் திருமணங்களை முறையே ருக்மிணீ, சத்யபாமா, மத்ர விந்தா, ஜாம்பவதீ, சத்யை, பத்ரை, காளிந்தீ, இலக்கணை ஆகியோருடன் செய்துகொண்டதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இவ்வெண் மருள் ருக்மிணி, சத்யபாமா திருமணம் பற்றி தான் பொதுவாகச் சொல்வதுண்டு. நப்பின்னை பற்றி தமிழ்நுல்கள் மட்டுமே தெரிவிக்கின்றன.
ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான சிலப்ப திகாரம் எழுதிய இளங்கோவடிகள் தமது நூலில் நப்பின்னையைப் பற்றி "ஆய்ச்சியர் குரவை' பகுதியில் எழுதியுள்ளார். அதேபோன்று திருத் தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணியில்-
"குலம் நினையல் நம்பி கொழுங்கயற்கண் வள்ளி
நலன்நுகர்ந்தான் அன்றே நறுந்தார் முருகன்
நிலமகட்குக் கேள்வனும் நீள்நிரைநப் பின்னை
இலவர்வாய் இன்னமிர்தம் எய்தினான் அன்றே'
(483)
என நப்பினையைப் பற்றிப் பாடியுள்ளார்.
ஆண்டாள் தன் திருப்பாவையில் கிருஷ்ண ரைப் பற்றிப் பாடும்போது, "நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்' என்றும், "நப்பின்னை கொங்கைமேல் வைத்துக்கிடந்த மலர்மார்பா' எனவும் பாடியுள்ளாள். ஆயர் குலத்து நாயகனான கிருஷ்ணரையும், நப்பின்னை பற்றியும் தமிழ் இலக் கியங்களே நமக்குச் சொல்கின்றன.
வைஷ்ணவ சம்பிரதாயத்தில் சரணாகதி தத்துவமான இறைவனைப் பற்றும் முறையைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அதில், "வராஹா வதாரத்தில் பூமாதேவி மூலம் நிறைவேற்றுதல், ராமாவ தாரத்தில் சீதாதேவி மூலம் நிறைவேற்றுதல், கிருஷ்ணாவதாரத்தில் நீளாதேவியின் அவதாரமான நப்பின்னை மூலம் நிறைவேற்றுதல்' என கூறப்பட்டுள்ள தால், நப்பின்னையின் சிறப்பும் பெருமையும் புலப்படுகிறது.
ஆயர்குலத்தில் பிறந்த யசோதையின் சகோதரன் கும்பகன் (கும்பன்) கோசல நாட்டின் அரசன். இவனது மகளான நப்பின்னை பிறவியிலே அழகும் நற்குணங் களும் வாய்ந்தவளாகத் திகழ்ந்தாள். இவளது அழகைப் பற்றி திருப்பாவையில், "முப்பத்து மூவர் அமர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலையே...'
எனத் தொடங்கும் இருபதாவது பாடலில் ஆண்டாள் தெரிவிக்கிறாள்.
நப்பின்னைக்குத் திருமணம் செய்வதற்காக அரசன் சுயம்வரம் நடத்தினான். இந்த சுயம்வரத்தில் பல நாட்டு இளவரசர்கள், பெரிய பண்டிதர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். வந்தவர்கள்முன்பு அரசன் கும்பகன் ஓர் அறிவிப்பை வெளியிட் டான். அதாவது, தன்னுடைய பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்புபவர், அதற்குமுன்னர் கூரிய கொம்பு களைக் கொண்ட, அடக்கமுடியாத அசுரத்தன்மை வாய்ந்த, முரட்டு குணமுடைய ஏழு காளைகளை அடக்க வேண்டும் என நிபந்தனை விதித்தான்.
பல இளவரசர்கள் காளை மாடுகளுடன் போராடித் தோல்வியடைந்தனர். இதனால் யாராலும் நப்பின்னையை மணம்முடிக்க இயலவில்லை. இந்த அறிவிப்பைக் கேள்விப்பட்ட யதுகுல நாயகனான கிருஷ்ணர் கோசல நாட்டிற்குச் சென்றார். அங்கு பலராலும் அடக்கமுடியாத ஏழு காளைகளை திறமையுடன் அடக்கினார். நிபந்தனைப்படி அரசன் தன் மகள் நப்பின்னையை முறைப்படி சீரும்சிறப்புடன் கிருஷ்ணருக்குத் திருமணம் செய்துகொடுத்தான்.
ஸ்ரீமத் பாகவதத்தில் துவாரகா லீலை என்னும் அத்தியாயத்தில் இத்திருமணம் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்டுள்ள பெயர் மட்டும் தமிழ் இலக்கியத்திற்கும், வடமொழி இலக்கியத்திற்குமிடையே சற்று வேறுபாடு வருகிறது. வடநாட்டில் சிலர் நப்பின்னையை ராதையுடன் ஒப்பிடுவதுண்டு. பொதுவாக ஆயர்குலத்துத் திருமணங்கள் யாவும் "ஏறு தழுவுதல்' என்ற முறையில் நடைபெறும்.
ஏழு காளை மாடுகள், அதன் பதினான்கு கொம்புகளை கிருஷ்ணர் அடக்கியதில் ஒரு ஆழமான நடைமுறைக் கருத்து அடங் கியுள்ளது. நம்முடைய வாழ்க்கையில் ஏழு நிலைகளைக் கடக்கிறோம். அவை கர்ப்பம், ஜன்மம், பால்யம், கௌமாரம், யௌவனம், வார்த்தக்யம், மரணம் என்பனவாகும். இந்த ஒவ்வொரு நிலையிலும் மனுஷ்ய லோகத்தில் இன்பம்- துன்பம் ஆகிய இரண்டும் மாறி மாறி வருவதுண்டு. இந்த ஏழு நிலைகள்தான் ஏழு காளை மாடுகள். ஒவ்வொரு நிலையில் நமக்கு வரும் இன்ப- துன்பங்கள் ஒரு காளை மாட்டின் இரண்டு கொம்புகள். கிருஷ்ணர் பதினான்கு கொம்புகளை முறித்து ஏழு காளை மாடுகளை அடக்கி நப்பின்னைப் பிராட்டியாரைத் திருமணம் செய்துகொண்டார். அதேபோன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையிலுள்ள ஏழுநிலைகளில் ஏற்படும் இன்ப- துன்ப நிகழ்வுகளைப்பற்றிக் கவலைப்படாமல், இறைவன் பற்றிய சிந்தனையில் வாழ்ந்தால், எப்படி கிருஷ்ணருக்கு நப்பின்னை திருமணம் மூலம் மகிழ்ச்சி ஏற்பட்டதோ அதேபோன்று நம் வாழ்க்கையிலும் கடைசியில் மகிழ்ச்சி மட்டுமே ஏற்படும். ஆக இன்பத்ûயும் துன்பத்தையும் சரிசமமாக பாவிக்க வேண்டும் என்கிற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதையே கிருஷ்ணர்- நப்பின்னை திருமணம் விளக்குகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-11/kaalai-t.jpg)