1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் பணப்புழக்கம் திடீரென்று நிறைய வரும். சிலசமயம் ஒன்றுமே வராமல் போய்விடும். எப்போது கையில் பணமிருக்கும்- எப்போது இருக்கவே இருக்காது என உங்களால் அனுமானிக்கவே முடியாது. அதனால் இந்த மாதம் பண வரவு- செலவை ஒரு கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். குடும்பத்திலும் வெளியிடங் களிலும் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. இளைய சகோதரி உங்களுடன் தங்க நேரும். அல்லது அவரது வேலை விஷயமாக நீங்கள் உதவவேண்டி வரலாம். உங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பை விற்க முனையும்போது நீங்கள் எண்ணியபடி விற்க இயலும். அந்தப் பணத்தை மனை வாங்க முதலீடு செய்வீர்கள். உங்கள் மற்றும் வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரம், தொழில் முன்னேற்றம் சம்பந்தமாக ஒரு புதிய யுக்தியைக் கண்டுபிடிப்பீர்கள். சீருடைப் பணியாளர்கள் சற்று நிம்மதியாக வேலைசெய்ய இயலும். ரியல் எஸ்டேட் தொழிலில் சுறுசுறுப்பு பெருகும். புதிதாக தொழில் ஆரம்பிக்க எண்ணம் கொண்டவர்களுக்கு குடும்பத்தினர் அல்லது மாமனார்- மாமியார் உதவி செய்வார்கள். விவசாய வேலை விருத்திபெறும். தொழிற்கல்வி பரிமளிக் கும். அரசியல்வாதிகள் இந்த மாதம் நடப்பதெல்லாம் நன்மைக்கா அல்லது கவிழ்ந்துவிடப் போகிறோமா என அல்லாட நேரிடும். சிலருக்கு அரசு சார்ந்த ஒப்பந்தம் கிடைக்கும். கலைத்துறையினர் சொந்த முயற்சியில் சிலபல வாய்ப்புகள் பெறுவர்.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

Advertisment

பரிகாரம்: இந்த மாதம் பணம், வாக்கு விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். பெருமாளுக்கு துளசிமாலை சாற்றி வழிபடவும். சமையல் கலைஞர்களுக்கு பச்சைநிறப் பொருட்களை தானம் செய்யவும்.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் பணமென்பது ஓட்டைப் பாத்திரத்தில் தண்ணீர் பிடித்த கதையாக இருக்கும். பணம் வந்த வேகத்தில் செலவழிந்துவிடும். இளைய சகோதரத்தி னால் மிகப்பெரிய செலவு ஏற்படும். அரசு ஒப்பந்தம் கிடைக்குமென்று யாருக்கும் லஞ்சப்பணம் கொடுத்துவிடாதீர்கள். இந்த மாதம் குத்தகை, ஒப்பந்தம் போன்றவை இழுபறி நிலையில் அமையும். வீடு, வாகனத்தைப் பழுதுபார்க்கும் செலவுண்டு. வீட்டிற்கு மருமகன் வரும் வாய்ப்புண்டு. பங்கு வர்த்தகம் பலன் தரும். கலைஞர்கள் நல்ல வாய்ப்பும் லாபமும் பெறுவர். உங்கள் வாரிசுகளின் தடைப்பட்ட கனவுகள் மேன்மையாக நிறைவேறும். சில தம்பதி களுக்குள் வாய்ச்சண்டை கைகலப்பாக மாறும். ஆன்மிகப் பயணம், கோவில் தரிசனத்தில் சிறு தடைகள் வந்து பின்னர் விலகும். வேலை, தொழிலில் வெளிநாட்டு சம்பந்தம் ஏற்படும். அரசியல்வாதிகள் தங்கள் பூர்வீகப் பெருமைமூலம் முன்னணி வகிப்பர். சமையல் தொழில் சார்ந்தவர்கள் பழங்கால உணவுமூலம் புகழும் லாபமும் கிடைக்கப் பெறுவர். உங்களில் சிலருக்கு வீடு, வாகனம் மாற்றும் நிலை ஏற்படும். சீருடைப் பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவர். விவசாயிகள் நல்ல லாபம் காண்பர். சில பணியாட்கள் வேலையை விட்டு நீங்கிவிடுவர். உங்களில் பலர் பாத வலியினால் அல்லல்படுவீர்கள். சிலருக்கு மாமனாரால் இம்சை ஏற்படும். பெண் அரசியல் தலைவர்கள் பின்னடைவை சந்தித்து பின் சரியாகக் காண்பர். உங்கள் மூத்த சகோதரி வீடு விற்பனை விஷயமாக சிறிது அதிருப்தியடைவார். வாரிசு வேண்டுவோர்க்கு நற்செய்தி கிடைக்கும்.

Advertisment

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.

எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.

பரிகாரம்: கைபேசித் தகவல், குத்தகை விஷயங்களில் கவனம் தேவை. அனுமனுக்கு வெற்றிலை மாலைசாற்றி வழிபடவும். வீட்டில் பணிபுரிபவர்களுக்கு பாசிப்பயறு சுண்டல் கொடுக்கவும்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

நீங்கள் எதிர்பார்த்த பணம் தாமதமாவ தும், எதிர்பாராத இடத்திலிருந்து பணம் கிடைப்பதும் நடக்கும். இதேபோல கிடைக்கவே கிடைக்காதென்ற நிலை யிலுள்ள கடனும் கிடைக்கும். உங்களில் சிலருக்கு கடன் அடைபடவும் கூடும். சிலரது வாரிசுகள் திகிலை ஏற்படுத்தும் செயலைச் செய்வார்கள். உங்களில் சிலரது தீய பழக்கம், கடன் வாங்க அல்லது சண்டையை இழுத்து விடச் செய்யும். இந்த மாதம் மேற்குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் திருமண விஷயங் களின்போது கூடுதல் கவனமாக இருத்தல் வேண்டும். தந்தை அல்லது மூத்த சகோதரி மூலம் சில வில்லங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் வியாபார பங்குதாரர்கள், அரசு, அரசியல்வாதிகள் சம்பந்த விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. அரசு வேலை கிடைக்குமென்பதற்காக கடன் வாங்க முற்படும்போது யோசித்து செயலாற்றுங்கள். அரசியல்வாதிகள் தாங்கள் செய்யும் சேவைகளால் சற்று சிக்கலை சந்தித்து மீள்வர். கலையுலகினர் தங்கள் மேன்மை, முன்னேற்றப் பாதையில் சிறு சறுக்கலை சந்திக்க நேரிடும். விவசாயப் பெருமக்களுக்கு வேலை அதிகரிக்கும். பணம் கொடுத்தால் பதவி உயர்வுண்டு என்பது பாதி பொய்யாக இருக்கும். உங்கள்மீது உங்களைச் சார்ந்தவர் கள் சற்று மனஸ்தாபம் கொள்வர். உங்களுக் கும் உங்கள் மருமகளுக்கும் சற்று கருத்து வேறுபாடு வர வழியுண்டு. செடி, விதைகள், உரம் விற்பவர்கள் முன்னேற்றம் காண்பர்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: கடன், லஞ்ச விஷயங்களில் கூடுதல் கவனமாக இருக்கவும். அருகிலுள்ள விநாயகருக்கு அறுகம்புல் மாலைசாற்றி வழிபடவும். பசு மடங்களுக்குக் கீரை வாங்கிக் கொடுக்கவும்.

ss

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் கட்டுப்பாடில்லாமல் வார்த்தைகளை வெளியிடுவீர்கள். சிலரது சொற்களில் கொடூரத் தன்மை மிகும். எனவே, இந்த மாதம் நீங்கள் பேசும்போது பேச்சில் கூடுதல் கவனமாக இருத்தல் அவசியம். இல்லையெனில் கூடிவரும் செயல்களும் சிதறி விடும் நிலையுண்டு. உங்களிடம் வெகு நாட்களாகப் பணிபுரிவோர் கருத்து வேற்றுமை கொள்ளும் சூழல் உருவாகும். சிலரது கைபேசி பழுதாகும். அரசு ஒப்பந்தம், உங்கள் வாரிசுகளின் யோசனையால் பிரச் சினையை சந்திக்கும். திருமண ஏற்பாடுகளில் இளைய சகோதரர்களின் தலையீடு அதிகமாக இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். உங்களது சூடான சொற்களைப் பார்த்து உங்கள் எதிரிகள் பின்வாங்கிச் செல்வர். நோய்த்தாக்கம் குறையும். தொலைபேசி குறுந்தகவல்கள் உங்களைக் குழப்பிவிடும். சீருடைப் பணியாளர்கள் தங்களுக்குக் கிடைக்கும் மறைமுக வருமானத்தைப் பேசிப்பேசியே கெடுத்துக்கொள்வர். எனினும் தர்ம விஷயம், கோவில் சார்ந்த விஷயங்களுக்கு செலவழிப்பீர்கள். உங்களது முயற்சிகள் சரியா- தவறா என சந்தேகம் கொள்ளச் செய்யும். வாழ்க்கைத் துணை உங்களின் வாரிசுகளுடன் கூட்டுச்சேர்ந்து உங்களிடம் போரிடக் கூடும். உங்களில் சிலருக்கு பல் சேதமடையும் சூழ்நிலை உருவாகும். உங்களது தொழில் நிதானமாக- எனினும் நிறைவாக நடக்கும். இதனால் பணவரவு ஓரளவு கைகொடுக்கும். வெளிநாடு, வெளியூர், ஆன்மிகப் பயணம் சார்ந்த விஷயங்களில் முன்னெடுப்பு வேலைகள் பரபரப்பாக நடக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: இந்த மாதம் பேச்சு மற்றும் பண விஷயங்களில் விழிப்புடன் இருக்கவேண்டும். உங்கள் குலதெய்வம், இஷ்டதெய்வத்திற்கு பச்சைநிற ஆடை காணிக்கை தருவது நன்று. சிறு குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள், பச்சை நிறமுடைய பொருட் களை வாங்கிக்கொடுக்கவும்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் முழுவதும் தொழில் விஷய மான அலைச்சல் இருக்கும். செலவுகளும் கட்டுக்கடங்காமல் இருக்கும். எனவே இந்த அலைச்சலையும் செலவையும், புதிய தொழில் தொடங்க அல்லது வியாபார விருத்தி அல்லது கடையை விரிவாக்க என மடைமாற்றி விடுங்கள். நல்ல விஷயத் துக்காக அலைச்சலும் செலவும் இருந்த தென மனத்திருப்தியாவது ஏற்படும். சிலர் தந்தையின் விஷயமாக பயணப்பட நேரிடும். இளைய சகோதரரின் திருமண விஷயம் விறுவிறுப்படையும். நிலம் குத்தகை, மனை கான்ட்ராக்ட் சம்பந்தமாக கையெழுத்திடு வீர்கள். பணியாளர்களின் அனுசரணை கிடைக்கும். கைபேசி நல்ல தகவல்களையும், உங்களது முயற்சி காரிய பலிதத்தையும் கொண்டுவரும். பிறந்த இடத்து நபர் ஒருவர் பங்குதாரராக அமைவார். கடை சார்ந்து வாகனம் வாங்குவீர்கள். சிலரது வாரிசுகள் சற்று முரண்டு பிடிப்பர் அல்லது உங்களுக்கு ஜீரணக் கோளாறு ஏற்படும். திருமணப் பேச்சுகள் சற்று பின்னடைவு தரும். பிற இன, மத மனிதர்களிடம் கவனம் தேவை. பயணங்களின்போது திருட்டு அல்லது ஏமாற வாய்ப்புள்ளது. உங்களது கௌரவ மேன்மை சம்பந்தமாக மண்டைக்காய யோசனை செய்வீர்கள். அரசியல்வாதிகள் தங்கள் வேகம் மட்டுப்பட்டதாக உணர்வர். கலைஞர்கள் தங்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லையென வருந்துவர். விவசாயிகள் தங்கள் வேளாண்மைச் செயலில் சற்று வேறுபாடாக- தவறாக செயல்படுவதாக சிந்திக்கக்கூடும். இந்தத் தேதிகளில் பிறந்த அனைவரும் இந்த மாதம் தங்களது செயல்கள், வேலைகள் குறித்து மறு மதிப்பீடு செய்ய முனைவர். சிலரது மாமியாரின் குதர்க்கப் பேச்சும் இதற்குக் காரணமாக அமையும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: இந்த மாதம் நீங்கள் செய்யும் தவறுகளை உணர்வீர்கள். தொழில்புரியும் இடத்துக்கு அருகிலுள்ள அனுமன் கோவி லுக்கு துளசி வாங்கிக்கொடுங்கள். தினமும் கொஞ்சம் துளசி இலையைப் பிரசாதமாக உட்கொள்ளவும்.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் வருமானத்தில் பற்றாக்குறை இருந்தாலும், நீங்கள் நினைத்த விஷயங்கள் மேன்மையாகவே நடக்கும். வீட்டில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். அதன்பொருட்டு சற்று கடன் வாங்கவும் நேரும். அது சுபக் கடனாகவே அமையும். சிலர் வீடு, வாகனம் வாங்குவீர்கள். வாரிசுகளின் கல்விச் செலவுண்டு. சிலருக்கு மருமகன்வகையில் எதிர்பாராத செலவு வரும். சிலரது வீட்டில் திருமண நிகழ்வு நடக்கும். மாதக் கடைசி யில் திருமாங்கல்யம் வகையில் ஒரு இனிய நிகழ்வுண்டு. மணவிழாவுக்குக் காத்துக் கொண்டிருக்கும் நபர்களுக்கு திருமணத் தேதி குறிக்கப்படும். வேலை தேடிக்கொண்டி ருப்பவவர்கள் வேலை கிடைக்கப்பெறுவர். சிலர் ஊடகத்துறையில் நுழைவீர்கள். கலைத்துறையினர் கடன் முறையில் அடுக்கு மாடிக் குடியிருப்பு முதலீடு செய்வீர்கள். இவ்வளவு செலவு, அலைச்சல் அமையும் போது தம்பதிகளுக்குள் அவ்வப்போது மன உரசல் வருவது இயற்கைதானே! உங்கள் தந்தை ஏதேனும் பிரச்சினையை இழுத்துவிடுவார். அரசியல்வாதிகள் எவ்வளவு செலவு செய்தாவது தங்களது நிலையை உறுதியாக்கிக்கொள்வார்கள். அரசு சம்பந்தமாக செலவு, கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும். விவசாயிகள் சற்று குளறுபடிகளை சந்திப்பார்கள். சீருடைப் பணியாளர்கள் கவனமாக இருக்கவேண்டிய மாதம் இது. "கள்ளன் பெரிதா காப்பான் பெரிதா' என கேட்பார் கள். இந்த மாதம் இந்த தேதிகளில் பிறந்த "காப்பான்கள்' கவனமாக இருத்தல் அவசியம். மாமனாரின் உடல்நிலையில் கவனம் தேவை. வெளிநாடு செல்ல முயற்சி செய்துகொண்டிருப்பவர்களுக்கு இந்த மாதக் கடைசியில் ஒரு நல்ல செய்தி கிட்டும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.

எச்சரிக்கை எண்கள்: 9 18, 27.

பரிகாரம்: இந்த மாதம் பயணங்களிலும், கண் விஷயங்களிலும் கவனம் தேவை. சமையல் கலைஞர்களுக்கு பச்சைநிற உடைகள் வாங்கிக்கொடுங்கள். ஆஞ்சனேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபடவும்.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் சம்பளத்தைவிட மறைமுக வருமானம் அதிகரிக்கும். கலப்பு மணம்செய்ய முயற்சிக்கும்போது உங்கள் உடன்பிறப்புகள் மிகுந்த கோபம் கொள்வர். உங்களில் சிலர் நீங்களே முயன்று மறுமண ஏற்பாடுகளை நடத்துவீர்கள். அரசியலில் உள்ளோர் எதற்காக செலவழிக்கிறோம்- அதனால் என்ன லாபமென தெரியாமலேயே செலவழிக்க நேரிடும். ரியல் எஸ்டேட் சம்பந்தம் கொண்டோர் அரசு சார்ந்த கட்டணம் அதிகமாக செலுத்தவேண்டி வரும். உயர்கல்வி, ஆய்வுக் கல்வியில் ஈடுபட்டிருப் போர் காரண காரியமின்றி அள்ளல்பட நேரிடும். சிலர் பழைய வீட்டை வாங்க முயற்சிப்பீர்கள். வாகனம் பழுதுபார்ப்பீர் கள். வாடகை வீடு பார்க்க தரகர் கமிஷன் கொடுக்க வேண்டியிருக்கும். என்ன முயற்சி செய்தாலும் ஒருமாதிரி இழுபறியாகவே இருந்து இன்னல் தரும். இதனால் மனம் வெறுத்துப்போய்விடும். பணியாட்கள் சற்று முரண்டு பிடிப்பர். அதன்காரணமாக சிலசமயம் நீங்களே அதிக வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இது இல்லத்தரசி களுக்குப் பெரும் சுமையாக அமையும். சிலரது கைபேசி களவுபோக வாய்ப்புள்ளது. ஞாபக மறதியும் அவ்வப்போது தலை காட்டி இம்சிக்கும். உங்களில் சிலருக்கு உழவாரப் பணி மேற்கொள்ளும் வாய்ப்பு கிட்டும். இளைய சகோதரரின் வேலை விஷயம் மனச்சோர்வு தரும். இந்த மாதம் நிறைய விஷயங்கள் உங்களை கசக்கிப் பிழிந்தாலும் தெய்வத்தின் அனுக்கிரகத்தால் நீங்கள் நினைத்த செயலை நடத்திமுடிக்க இயலும். இது பெரிய விஷயமல்லவா?

அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

பரிகாரம்: இந்த மாதம் வேலைச் சுமையாலும், சுற்றியுள்ளவர்களின் ஒத்துழை யாமையாலும் சற்று திணறிப் போவீர்கள். பெருமாளுக்கு மரிக்கொழுந்து சமர்ப்பித்து வணங்கவும். குழந்தைகளுக்கு பச்சை வாழைப்பழம் வாங்கிக்கொடுங்கள்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் வரவும் செலவும் மாறிமாறி இருக்கும். குடும்பத்தில் திருமண விஷயமாக முன்னேற்பாடுகள் நடக்கும். அது சார்ந்து நிறைய மனிதர்களை சந்திக்கக்கூடும். உங்களில் சிலர் இளைய உடன்பிறப்புகளின் திருமணத்தை நடத்த முயல்வீர்கள். அது ஒரு தடையைக் கடந்து நடக்கும். இந்த மாதம் உங்கள் வீட்டு சுப நிகழ்வுகளின்போது சில இடையூறுகள் தவிர்க்க முடியாதவையாக அமையும். பூர்வீக வீடு விற்பனை சூடுபிடிக்கும். வாரிசுகளின் திருமணப் பேச்சு தொடங்கும். உங்கள் மருமகனின் நச்சரிப்பால் உங்கள் பெண்ணுக்கு சிலபல செலவுகளைச் செய்வீர்கள். உங்கள் மகள்வகையில் மன சங்கடம் ஏற்பட்டு நீங்கும். தந்தையின்மூலம் நல்லதும் கெட்டதும் நடக்கும். சிலரது தந்தைக்கு மருத்துவச் செலவு தேவைப்படும் அல்லது அரசு சார்ந்து சில தண்டம் கட்டவேண்டி நேரும். பூர்வீகத் தொழிலில் ஒரு சங்கடம் வந்து விலகும். உங்கள் பிள்ளைகள் சம்பந்தமாக ஒரு இடையூறு, சங்கடம் வந்து பின் சரியாகும். பங்கு வர்த்தகம் சற்று தள்ளாடி பின் சுதாரிக்கும். அரசியல்வாதிகள் பெரும்பாடுபட்டு தங்களது ஸ்திரத்தன்மையைத் தக்கவைத்துக் கொள்வார்கள். கலைத்துறையினர் தங்கள் முன்னேற்றம் பொருட்டு ஒரு சங்கடத்தை சமாளிக்கவேண்டி வரும். சிலரது மாமனார்- மாமியார் ஒரு பிரச்சினையை ஏற்படுத்தி விட்டுச் செல்வார்கள். விவசாயிகள் பழைய முறையில் வெற்றி காண்பர். சீருடைப் பணியாளர்கள் பதவி உயர்வு கிடைக்கப்பெறுவர்.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.

எச்சரிக்கை எண்கள்: 6, 15, 24.

பரிகாரம்: இந்த மாதம் நிறைய நல்லவை நடக்கும்போது அதற்கு ஈடாக இடையூறுகளும் நடக்கும். முயன்று சமாளித்துவிடுவீர்கள். நரசிம்மர் போன்ற உக்கிர பெருமாளுக்கு மலர்மாலை சாற்றி வழிபடுங்கள். முடிந்தால் உங்கள் வசதிக்கேற்ப பித்தளைப் பாத்திரம் காணிக்கை செலுத்தவும். முடிவில்லையெனில் பச்சைப் பயறு தானம் செய்யவும்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் நீங்கள் மிகவும் எதிர்பார்த்த இனங்களிலிருந்து பணவரவு இருக்காது. ஆனால் கொஞ்சமும் நினைத்தறியாத இடங்களிலிருந்து பணம் கைக்கு வரும். உங்களையுமறியாமல் அடுத்தவர்களைக் கடிந்துபேசி நோகடிப்பீர்கள். இதனால் குடும்பத்தில் அவ்வப்போது கலகம் ஏற்படுவதைத் தடுக்கமுடியாது. நீண்ட நாட்கள் உங்களிடம் வேலைபார்த்த பணியாளர்களிடம் சற்று கருத்து வேறுபாடு ஏற்படும். அரசு ஒப்பந்தங்கள் சில இம்சைகள் தரும். பங்குப் பத்திரங்கள் சம்பந்தமாக கடன் ஏற்படும். கலைஞர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையின் பொருட்டு கடன் வாங்கக்கூடும். அல்லது சம்பந்தப்பட்ட கலைஞர்கள் வயிறு சார்ந்த பிரச்சினைகளை சந்திப்பர். வாரிசுகள் புதிய கைபேசி வாங்குவர். அதற்கு நீங்கள் பணம் கட்டுவீர்கள். திருமணப் பேச்சில் குதர்க்கம் ஏற்பட்டு பின் பெரியவர்களால் சரிப்படுத்தப்படும். முகத்தில் சற்று சிராய்ப்பு ஏற்படும். உயர்கல்வி, சட்டம் சம்பந்தமான செலவுண்டு. தொழில் நிதானமாக- அதேசமயம் லாபமாக இயங்கும். மகப்பேறு சம்பந்தமாக மருத்துவரைக் கலந்தாலோசிப்பீர்கள். அரசியல்வாதிகளின் உழைப்பு லாபம் ஈட்டித் தரும். அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு அரசு சார்ந்த கடன் கிடைக்கும். அல்லது கடனில் அரசு வீடு வாங்குவீர்கள். அரசு வேலை கிடைப்பதற்கு ஆட்கள் சந்திப்பும், அதற்கு பணச் செலவும் செய்வீர்கள். இந்த தேதிகளில் பிறந்த குழந்தைகளின் தந்தை அரசு சார்ந்த வேலை கிடைக்கப்பெறுவார். உங்களில் சிலர் மாமனாரின் சொத்து கிடைக்கப் பெறுவீர்கள். இதன்மூலம் கடனை அடைத்து விடுவீர்கள். விவசாயிகள் பணம் தாமதமாகக் கிடைக்கப்பெறுவீர்கள். சீருடைப்பணியாளர்கள் பேச்சைக் குறைப் பது நல்லது.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: இந்த மாதம் வாக்கு மற்றும் கடன் சம்பந்தமாக விழிப்புடன் இருக்கவும். பூர்வீக இடத்துப் பெருமாளை விளக்கேற்றி வணங்கவும். பறவைகளுக்கு, பசுக்களுக்கு தானியம், பசும்புல் வழங்கவும்.

செல்: 94449 61845