மேஷம்

இந்த மாதக் கடைசிவரை மேஷ ராசிநாதன் செவ்வாய் 5-ல் திரிகோணம் பெறுகிறார். எனவே உங்களது எண்ணம், திட்டம், செயல்பாடு எல்லாம் பூர்த்தி யாகும். குரு 8-ல் மறைந்தாலும் குருவுக்கு வீடுகொடுத்த செவ்வாய் அவரைப் பார்ப்பதால் மறைவு தோஷம் பாதிக்காது. குரு 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் வரவும் உண்டு; செலவும் உண்டு. குடும்பத்தில் இடையூறுகள் வந்தாலும் அதை குருவின் பார்வையால் முறியடிக்கலாம். மனதில் பிறக்கும் துணிச்சல் எதையும் சாதிக்கும் வல்லமையைத் தரும். பெரியோர்களின் ஆதரவும் ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலர் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வெளியூர் அல்லது வெளிமாநிலத்தில் வேலை பார்க்கும் சூழல் உருவாகலாம். தனியார்துறையில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும் என்றாலும் உழைப்பு சற்று கூடுதலாக அமையும். செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை வழிபடவும்.

ரிஷபம்

இந்த மாதம் 10-ஆம் தேதிமுதல் 4-ல் இருக்கும் சுக்கிரன் 5-ஆம் இடத்துக்கு மாறுகிறார்; நீசம் பெறுகிறார். 7-ஆம் தேதி 2-க்குடைய புதன் 5-ல் மாறி ஆட்சிபெறுகிறார். எனவே ரிஷப ராசிநாதன் சுக்கிரன் நீசபங்க ராஜயோகமடைகிறார். மதிப்பு, மரியாதை உயரும். உறவினருடன் சுமுக நிலை ஏற்படும். 2-ல் உள்ள ராகுவும் அவரைப் பார்க்கும் சனி, கேதுவும் குடும்பத்தில் குழப்பம், பிரச்சினைகளை உருவாக்கலாம். என்றாலும் குரு ராசியைப் பார்ப்பதால் அவற்றை சமாளிக்கலாம். கணவன்- மனைவியிடையே வாக்குவாதம் தோன்றினாலும் அன்பு விலகாது; பிரிவினை ஏற்படாது. சகோதர- சகோதரிகளால் அனுகூலம் உண்டாகும். கருத்து வேறுபாடு காரணமாக விலகி யிருக்கும் உடன்பிறப்புகள் இனி சேரலாம். செப்டம்பர் 3-ல் சனி வக்ரநிவர்த்தி அடைவதால், இதுவரை வக்ரத்தில் உக்ரமாக இருந்த பலன்கள் மாறும். திடீர் பணவரவு எதிர்பாராத வகையில் வந்துசேரும். தேவைகள் பூர்த்தியாகும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வழிபடவும். கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யலாம்.

Advertisment

மிதுனம்

மிதுன ராசியில் ராகு நிற்க, அவரை சனியும் கேதுவும் பார்க்கிறார்கள். பத்து ரூபாயில் முடியுமென்று நினைத்த காரியம் இருபது ரூபாய் செலவு வந்தும் குறிப்பிட்ட நேரத்தில் முடியாமல் இழுபறியாக இருக்கும். பணமும் நேரமும் விரயமாவதுதான் மிச்சம் என்ற அளவில் மனதில் வேதனை ஏற்படும். முதல் வாரம் வரை 3-ல் உள்ள புதன் 7-ஆம் தேதிமுதல் 4-ல் உச்சம் பெறுகிறார்; நன்மை தருவார். மனதில் பக்தி எண்ணம் மேம்படும். முயற்சிகளில் வெற்றி காணும் சூழல் உருவாகும். பொருளாதார வளம் பெருகும். சிலநேரம் உடல்நலத்தில் மருத்துவச் செலவுகள் வரலாம். பாதிப்புகளுக்கு இடம் ஏற்படாது. புதிய வீடு, மனை வாங்குவது சம்பந்தமான யோசனைகள் செயல்பாடாக மாறும். உறவினர்களினால் சிறிது மனக் கிலேசம் ஏற்படுவதால் சற்று விலகி நிற்பது நல்லது. 10-ஆம் தேதிமுதல் 12-க்குடைய சுக்கிரன் 4-ல் நீசம் பெறுகிறார். 4-க்குடைய புதன் அவரோடு சேருவதால் நீசபங்க ராஜயோகம் அடைகிறார். சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.

கடகம்

Advertisment

கடக ராசிக்கு 5-ல் குரு நின்று ராசியைப் பார்க்கிறார். உங்களது திறமை, செயல், கீர்த்தி, புகழ் யாவும் சிறப்பாக செயல்படும். 6-ல் உள்ள சனி, கேது சத்ருஜெயத்தைத் தருவர். பணியில் ஆற்றல் மேம்படும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். குடும்பத்தில் சுபமங்கள காரியங்கள் நடக்கும். பொருளாதார வளம் மேம்படும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை, உறவினர் வகையில் கருத்து வேறுபாடு முதலியன மறையும். பணியாளர் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். 11-க்குடைய சுக்கிரன் 3-ல் நீசம் பெற்றாலும், 3-க்குடைய புதன் ஆட்சி என்பதால் சுக்கிரன் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். மாத முற்பகுதியில் எதிர்பாராத பணவாய்ப்புகள் கிடைக்கும் யோகம் அமையலாம். சகோதரவழியில் சங்கடங்கள் விலகும். நீண்டநாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த காரியம் பூர்த்தியாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலையில் பொறுமை தேவை. தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சிம்மம்

இந்த மாதம் 17-ஆம் தேதி சிம்ம ராசிநாதன் ஜென்மத்தில் ஆட்சியாக இருக்கிறார். 9-க்குடைய செவ்வாய் அவருடன் சேர்ந்திருக்கிறார். தகப்பனார் வழியில் பூர்வீக சொத்து சம்பந்தமான விவகாரங்கள் விலகும். 5-ல் உள்ள சனி, கேது அவர்களைப் பார்க்கும் ராகுவால் பிள்ளைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். திட்டங்களை நிறைவேற்றுவதில் சற்று காலதாமதம் ஏற்படலாம். தனியார்துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு உழைப்பு கடுமையாக அமையும். சக பெண் ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. முக்கியப் பொறுப்புகளைத் தட்டிக்கழிக்காமல் செய்வது நல்லது. மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். அதிக முயற்சி எடுத்துதான் கோரிக்கைகளை நிறைவேற்றமுடியும். சிலருக்கு வேலைரீதியாக இடமாற்றம் ஏற்பட லாம். அரசுவகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். தொழில் துறையில் இருப்பவர் களுக்கு போட்டி, பொறாமைகளைச் சமாளிக்கும் சூழல் உருவாகும். லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.

கன்னி

இந்த மாதம் 7-ஆம் தேதிமுதல் கன்னி ராசிநாதன் புதன் ஜென்மத்தில் ஆட்சி யாக மாறுகிறார். 9-க்குடைய சுக்கிரனும் 10-ஆம் தேதிமுதல் புதனுடன் இணை கிறார். அதனால் தர்மகர்மாதிபதி யோகம் செயல்படுகிறது. முயற்சியில் இருக்கும் தடைகள் விலகும். முயற்சிக்கேற்ற பலனும் கிடைக்கும். 12-ல் சூரியன் ஆட்சி என்பதால் அரசு சம்பந்தப்பட்ட முயற்சிகளில் சில விரயங்களைச் சந்தித்தபின்தான் முயற்சி கைகூடும். 4-ல் உள்ள சனி, கேது உடல்நலத்தில் சிறுசிறு தொந்தரவுகளையும் வைத்தியச் செலவுகளையும் ஏற்படுத்தும். 3-ல் குரு, அவரைப் பார்க்கும் செவ்வாய் காரணமாக சகோதர- சகோதரிகள் வகையில் சுபமங்களச் செலவுகள் அல்லது விசேஷச் செலவுகளைச் சந்திக்கநேரும். அதற்காக கடன் வாங்கும் அவசியமும் நேரும். கணவன்- மனைவியிடையே இணக்கமான சூழ்நிலை இருக்காது. சிறு பிரச்சினைகள் வந்து மறையும். தொழில்துறையில் புதிய ஒப்பந்தங்களை செயல்படுத்தலாம். தன்வந்திரி பகவானையும் பெருமாளையும் வழிபடவும்.

துலாம்

துலா ராசிக்கு 11-க்குடைய சூரியன் 11-ல் ஆட்சி. (17-ஆம் தேதிவரை). எனவே இது சிறப்பான மாதமாக அமையும். தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். பொருளாதார வளம் குறையாது. முயற்சியிலுள்ள தடைகள் விலகும். மதிப்பு, மரியாதை உயரும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழில் விருத்தி போன்ற நற்பலன்கள் நடைபெறும். 7-ஆம் தேதிமுதல் 12-க்குடைய புதன் ஆட்சி, உச்சம். சுபவிரயங்கள், மங்கள நிகழ்ச்சிகள் போன்றவற்றில் செலவினங்கள் ஏற்படும். பணவரவும் அதிகரிக்கும்; வரவுக்கேற்ற செலவும் இருக்கும். சொந்த பந்தங்களின் வருகை இருக்கும். புதிய வீடு, மனை வாங்கும் திட்டத்தை செயல்படுத்த முனைய லாம். சகோதரிகள் வகையில் சிறு மனசங்கடங்கள் வந்து விலகும். தனியார்துறையில் பணிபுரிவோருக்கு வேலைப்பளு கூடுதலாகக் காணப்படும். மாணவர்களுக்கு படிப்பில் விடாமுயற்சி தேவைப்படும். லட்சுமி ஹயக்ரீவரை வழிபடவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு ஏழரைச்சனியில் பாதச்சனி நடக்கிறது. செயல்பாடுகளில் மந்தத்தன்மை, பொருளாதாரத்தில் தேக்கம், சில காரியங்களில் ஏமாற்றம் போன்றவற்றைச் சந்திக்கும் சூழல் உருவாகலாம். 2-ல் உள்ள சனி, கேது குடும்பத்தில் குழப்பத்தையும் பிரச்சினைகளையும் உண்டாக்கலாம். "வாக்குச்சனி கோப்பைக் குலைக்கும்' என்பது ஜோதிடப் பழமொழி. எனவே வார்த்தைகளில் கவனம் தேவை. நிதானமும், பொறுமை யும் அவசியம். ராசிநாதன் செவ்வாய் குருவைப் பார்க்கிறார். உடன்பிறந்தவர்களால் அனுகூலம், ஆதாயம் எதிர்பார்க்கலாம். 11-ல் புதன் ஆட்சி. 7, 12-க்குடைய சுக்கிரன் 11-ல் நீசபங்கம். வியாபாரம் தொழிலில் முன்னேற்றம் காணலாம். புதிய முதலீட்டு முயற்சியைத் தள்ளிப்போடவும். பிள்ளைகளால் நன்மதிப்பும் பாராட்டும் உண்டாகும். வீண் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து, அத்தியாவசியத் தேவைகளில் கவனம் செலுத்தவும். காலபைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடவும்.

தனுசு

தனுசு ராசியில் சனி, கேது நிற்க, ராகு பார்க்கிறார். நவகிரகங்களில் சுக்கிரனும் குருவும்தான் முழு சுபகிரகம் எனப்படும். சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேது ஆகிய ஐந்தும் அசுப கிரகங்கள் எனப்படும். சந்திரன் வளர்பிறையில் சுபகிரகம்; தேய்பிறையில் பாவகிரகம். சுபரோடு சேர்ந்த புதன் சுபராகவும், பாவரோடு சேர்ந்த புதன் பாவகிரகமாகவும் கருதப்படுவார். இதைத்தான் "ஐந்துக்கு இரண்டு பழுதில்லை' என்பார்கள். 17-ஆம் தேதிவரை 9-ல் சூரியன் ஆட்சி. அரசுத்துறை காரியங்கள் நிறைவேறும். தகப்பனாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். பனிப்போர் விலகும். செவ்வாய் குருவைப் பார்க்கிறார். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பொருளாதார வளம் சிறப்பாக அமையும். யாருடனும் வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம். எதிலும் அமைதி காத்து நடப்பது நன்மை தரும். ஆஞ்சனேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடவும்.

மகரம்

மகர ராசிக்கு 6-ல் ராகு நின்று 12-ல் உள்ள சனி, கேதுவைப் பார்க்கிறார். ராகு முயற்சிகளில் வெற்றியைத் தருவார். அவரால் பகைவரின் சதியை முறியடிக்கும் வல்லமையைப் பெறுவீர்கள். குரு 11-ல் நின்று 3-ஆமிடத்தைப் பார்க்கிறார். குருவுக்கு வீடுகொடுத்த செவ்வாய் குருவைப் பார்க்கி றார். 9-ல் சுக்கிரன் நீசம் பெற்றாலும் நீசபங்கம் பெறுகிறார். தகப்பனார்வழியில் நிலவும் பூர்வீகச் சொத்துப் பிரச்சினை யில் சுமுகமான முடிவுகள் ஏற்படும். தாய்மாமன்வழி ஆதரவும் ஒத்துழைப்பும் அமையும். பொருளாதாரத்தில் நிலவும் சங்கடங்கள் படிப்படியாகக் குறையும். வீடு, மனை வாங்கும் திட்டத்திற்காக வங்கி உதவியை நாடியவர்களுக்கு திட்டம் கைகூடும். வங்கிக்கடன் கிடைக்கும். ஏழரைச்சனியால், படிக்கும் மாணவ- மாணவியருக்கு மந்தம், மறதித்தன்மை ஏற்படலாம். அதிக கவனம் தேவைப்படும். காலபைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடவும்.

கும்பம்

கும்ப ராசிநாதன் சனி 11-ல் இருக்கிறார். சனிக்கு வீடுகொடுத்த குரு 10-ல் திக்பலம் பெறுகிறார். குருவுக்கு வீடுகொடுத்த செவ்வாய் குருவைப் பார்க்கிறார். ஆக, பழம் நழுவிப் பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்த பழமொழியாக எடுத்த காரியங்கள் எல்லாம் சிறப்பாக செயல்படும். பொன், பொருள் சேரும். மனதில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் குழப்பங்கள் விலகி ஒற்றுமையும் நிம்மதியும் ஏற்படும். பெரியோர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மாறும். அதற்கு உங்களது முயற்சியும் அவசியம். "விட்டுக்கொடுப்பவன் கெட்டுப் போவ தில்லை' என்ற பொன் மொழிக்கிணங்க பெரியோர்களை அனுசரித்துச் செல்வதால் நன்மையே உண்டாகும். வேலை பார்க்கும் பெண்கள், அலுவலகத்தில் முக்கியப் பொறுப்புக்குப் பரிந்துரை செய்யப்படுவார்கள். அப்பொறுப்பை செவ்வனே செய்துமுடிக்கலாம். குடும்பத்தினரின் தேவையறிந்து அதை நிறைவேற்றுவீர்கள். ஆடை, ஆபரணம் வாங்கலாம். வியாழக்கிழமை தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.

மீனம்

மீன ராசிநாதன் குரு 9-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். "ஓடிப்போனவனுக்கு ஒன்பதாமிடத்து குரு; அகப்பட்டவனுக்கு அட்டமச்சனி' என்பார்களே, அதுபோல உங்கள் ராசியைப் பார்க்கும் குரு உங்களது திறமை, செயல்பாடு, கீர்த்தி யாவையும் சிறப்பாக செய்துமுடிக்க உதவுவார். 2-க்குடைய செவ்வாய் 6-ல் இருந்து குருவைப் பார்க்கிறார். 7-ல் சுக்கிரன் நீசம் பெற்றாலும் 7-க்குடைய புதன் ஆட்சி. எனவே சுக்கிரனுக்கு நீசபங்க ராஜயோகம் அமைகிறது. சுக்கிரனின் பார்வையும் ராசிக்குக் கிடைக்கிறது. வேலை நிமித்தமாக குடும்பத்தைவிட்டுப் பிரிந்தவர்கள் ஒன்றுசேருவர். அலுவலக ரீதியான முனனேற்றமும் உண்டாகும். கட்டடம் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் வெற்றியாகும். கட்டடத் தொழிலும் சிறப்பாக நடைபெறும். நினைத்த செயலைப் பூர்த்தி செய்யலாம். உங்களைப் புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மையை அறியும் நேரம் இது! செவலூர் பூமிநாத சுவாமியை வழிபடவும்.