தாளச் சக்கரத்தின்படி நடனித்து, முத்தரைய சேனாதி பதியிடம் பெற்ற வாகைப்பூ மாலையுடன் ஆறு நடனமாதர்கள் இளவலிடமும், ராஜமாதாவிடமும் பணிவுடன் வந்து வணங்கி ஆசிபெற்றுச் செல்வார்கள்.

போரால் பாதிக்கப்பட்டோருக்கு பகைநாட்டு சொத்துகள்!

வேலன் பாதத்திலிருந்த பொன்மணிகளால் அலங் கரிக்கப்பட்ட வீரவடங்கள் நிறைந்த பொற் தாம்பாளங் களை வேலப்பர் குறடு பூசாரியார் தலைவணங்கி எடுத்து வந்து, சேனாதிபதியின் கைகளில் ஒப்படைப்பார். கணக்காயர்கள் ஏழரை மாற்றால் செய்யப்பட்ட பொற்காசுகளையும், எட்டரை மாற்றால் செய்யப்பட்ட வட்ட பொற்காசுகள் நிறைந்த பொற்கிழிகள் என்று சொல்லப்படும் பை முடிச்சுகளையும், பகைவர் நாட்டு அசையும்- அசையா சொத்துகளின் மதிப்புகள் அடங்கிய ஓலைச்சுவடிகளையும் இளவலுக்கு முன்னால் வந்து சமர்ப்பிப்பார்கள்.

sand

Advertisment

அப்போது, சீராளர் என்ற அரச குரு, வேலப்பர் குறடின் முன்னால் வெள்ளைக்கொடி அசைப்பார். வேலன் கோட்டத்திற்கு முன் பெருமுரசு ஒலிக்கப்பட்டு, கொம்புகள் ஊதப்படும். விருந்துக்காகச் சமைத்து வைக்கப்பட்ட அனைத்துவகை உணவுகளும் வேலவன் கோட்டத்து காவல் தெய்வ பந்திகளுக்கு சிறப்புக் கொடுத்தல் என்ற பூசைசெய்யப்படும். இங்கு பந்தி என்பது, அங்கு வசித்து வந்த ஒவ்வொரு கூட்டத்தாருக் கும் உரிய காவல் தெய்வங் களுக்கும் சிறப்புக் கொடுத் தல் என்பதாகும். இது பண் டைய பூசை முறையாகும்.

ஒவ்வொரு காவல் தெய்வத்துக்கும், அதை வணங்கும் கூட்டத்தார்களுக்குமுரிய தனித்தனி பூசாரிகள் வந்து சிறப்பு கொடுப்பார்கள். இந்தப் பூசை முடிந்தவுடன், சீராள குரு கூட்டத்திரை நோக்கி பச்சைக் கொடி காட்டுவார். கூட்டத்தினர் அனைவரும் சத்தமின்றி, நிசப்தமாகிவிடுவர்.

இங்கு சீராள குரு என்பவர், ஒரு பெரும்போர் முடிந்தபின், அதன்விளைவால் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களைக் கணித்து, அதை சீர்திருத்தும் வண்ணம் அரச பண்டாரத்திலிருக்கும் அசையும்- அசையா சொத்துகளை போரால் பாதிக்கப்பட்டோருக்கெல்லாம், எந்தெந்த தொழிலாளிகளுக்கு எவ்வளவு தானங்கள் வழங்கி, அவர்களை சீர்திருத்த வேண்டு மென்பதைப் பட்டியலிட்டு இளவலிடம் கொடுப்பார். அதன் படியே இளவல், முருகு அயர்தலின் போது தர்மதானங்களை மக்களுக்கு வழங்குவார்.

Advertisment

​ விழுப்புண் தழும்புகளில் முத்தமிட்டுப் பெருமிதம்!

இந்த நிகழ்வு ஆரம்பமாகப் போகிறது என்பதை உணர்த்து வதற்கே சீராள குரு பச்சைகொடி அசைப்பார். அந்த நிமிடமே கூட்டத்தினர் அனைவரும் நிசப்தமாகிவிடுவர். அந்த நாடு முழுவதுமிருக்கும் கிராமங் களிலுள்ள கிராம சபைக்காரர் கள் தங்கள் பகுதிகளில் யாருக் கெல்லாம் இளவலிடமிருந்து உதவிகள் தேவைப்படுகின்ற னவோ, அந்தப் பட்டியலை படைச் "சேர்வார்களிடம் ஒப்படைத் திருப்பார்கள். இங்கு படைச் சேர்வார்கள் என்பவர், மன்னரின் போருக்காக பல பகுதிகளிலிருந்து பலதரப்பட்ட படை வீரர்களை ஒன்றுசேர்த்து சேனாதிபதியிடம் ஒப்படைக்கும் காரியத்தைச் செய்தவர்களாவர். ஆகவே, அவர்கள்தான் போரில் நடந்த இழப்பீடுகளுக்கு பயன் தரும் கொடையளவு களை நிர்ணயித்து, அவரவருக்கும், கிராம சபையோர்களுக்கும் மன்னரிடமிருந்து இழப்பீடுகளைப் பெற்றுத்தரும் பொறுப்பு டையவர்கள். எனவே, சேர்வார்களெல்லாம் சேர்ந்து நிவாரணப்பட்டியல் அடங்கிய ஓலைக்கட்டுகளை சீராள குருமாரிடம் கொண்டு வந்து சேர்ப்பர். இவற்றை எடுத்துக்கொண்டு இளவலுக்கு அருகே, தனக்கென அமைத்தி ருந்த ஆசனத்திற்குச் சென்று அமர்வார்.

இதைக்கண்ட திருவோலை நாயகர்களும், பண்டாரக் கணக்கர்களும் அரச குடும்பத்திற்கு மிக நெருங்கிய- விசுவாசம் மிகுந்த தலைமை மந்திரியாரும், சேனாதிபதியும் அவரருகில் வந்துசேர்வார்கள். முதலில் இளவலுக்குப் பூட்டக்கூடிய பொன்மணி வடங்களை சேனாதி பதி ஒவ்வொன்றாக எடுத்து, அது எந்த மன்னனின் மகுடத்தை உருக்கிச் செய்யப்பட்ட பொன்வடம் என்பதைப் பெருமையோடு உரக்கச்சொல்லி ராஜமாதாவிடம் கொடுப்பார். மக்களின் ஆரவாரம் விண்ணைப் பிளக்கும். ராஜமாதா ஒவ்வொன்றாக தன் வீரமகனுக்கு அன்புடன் அணிவிப்பார். அந்த அன்பானது, மக்களின் சார்பாக வெளிப்படுத்தும் அன்பாக இருக்கும்.

ஒவ்வொரு பொன்வடம் அணிவிக்கும் போதும் இளவலுக்கு மலர்தூவி, ஆசிர்வதித்து, இளவல் தன் உடலில் தாங்கியிருக்கும் போரில் ஏற்பட்ட விழுப்புண் தழும்புகளை மக்களின் சார்பில் தன் அன்பிதழ்களால் முத்தமிட்டுப் பெருமிதம் கொள்வார். அனைத்து வடங்களும் பூட்டியபின் இளவலுக்கு முவ்வேல் தீப்பந்தத் தினால் ஆராதனை செய்வார். இவையனைத் தையும் பெற்றுக்கொண்ட இளவல், தன் ஆசனத்திலிருந்து எழுந்து, தாயின் திருவடி வீழ்ந்து வணங்கி, சீராள குருவை வணங்கி, பின் வேலனை மெய்யுருக வணங்கி, பிறகு சபையோர் அனைவரையும் வணங்கி, "இந்தப் பரிசுகள் மக்களால் வழங் கப்பட்டவை; அம்மக்களின் உயிர், உடல் தியாகத்தால் கிடைக்கப்பெற்ற வெற்றியாகும். அதனால், போரினால் கிடைத்த அத்தனை செல்வங்களும் எம்மக்களுக்கே' என, தன் இருகரங் களையும் நீட்டி சீராள குருநாதரிட மிருந்த கொடைநிர்ணயப் பட்டியல் ஏடுகளை அன்போடு பெற்று, முதன்மந்திரியிடம் ஒப்படைப்பார்.

தானதர்மங்களுக்குப் பட்டயங்கள்!

அவ்வேடுகளைப் பெற்றுக் கொண்ட மந்திரியார் அதிலுள்ள விவரங்களை ஒவ்வொன்றாக உரக்க வாசிப்பார். அதிலுள்ளபடி தானங் கள் வழங்கப்பட்டன என்று இளவல் குருநாதரிடம் கூறிய உறுதி மொழியின்படி உரக்கக்கூறி, "இதை ஓலையிலும், செப்பிலும், கல்லிலும் கீறுக' எனக்கூறி முடித்தவுடன், திருவோலை நாயகர்கள் ஆறுபேர், இளவல் ஒவ்வொருவருக்கும் கூறிய தான விவரங்களை விரைவாக ஓலை யில் எழுத்தாணிகொண்டு எழுதுவார் கள்.

அதிலொன்று அரச பண்டாரத் திற்கும், ஒன்று சேனைத்தலைவருக் கும், ஒன்று சேர்வார்களுக்கும், ஒன்று கிராம சபையோருக்கும், ஒன்று செப்புத் தட்டானுக்கும், ஒன்று கல்தச்சருக்கும் வழங்கப்படும். இவற்றைப் பெற்றுக்கொண்ட இந்த ஆறுதுறையினரும் முதல் அரசவைக் கூட்டத்திற்குள் தங்கள் பணிகளை நிறைவுசெய்ய வேண்டும்.

இளவல் கூறிய தானங்கள் இந்த திருவோலை நாயகத்தார்களால் எழுதப்பட்ட வரிகளுக்கு "கடமைப் பரிவட்டனை சிலாசாதனப் பட்டயங்கள்' என்று அழைக்கப்பட் டன. இவ்வாறு, போர் நிவாரணக் கடமைப் பரிவட்டனைகள் முடிந்த பின், தோல்வியுற்ற எதிரிநாடுகளில் நடந்துவந்த தானதர்மங்கள் என்னென்னவென்பதை சீராள குருமார் ஏற்கெனவே முன்கூட்டி சேகரித்த தகவல் களை இளவலிடம் கூறி, அதற்கென "தன்ம சிலாசாதனம்' எழுதப்பட்ட நகலை இளவலிடம் கொடுப்பார். இவற்றுக்கு "வாடா கடமை சிலா சாதனப்பட்டயம்' என்று பெயர். இவற்றை இளவல் பெற்றுக்கொண்டவுடன், கணக்காயர்கள் எதிரிநாட்டு செல்வங்களின் பட்டியல்களிலிருந்து இவற்றுக்கான செலவி னங்களைக் கழித்துக்கொள்வார்கள்.

இவற்றின்படி, முதல் அரசவைக் கூட்டத் திற்குள் இவற்றுக்கான தானநிலங்களை அளந்து, தயார்நிலையில் வைத்திருப்பர்.

இப்பட்டயங்களின் மூன்று நகல்கள் திருவோலை நாயகர்களுக்கு எழுதப்படும். ஒன்று தலைமைக் கணக்காயருக்கு, ஒன்று அரச கருவூலப் பண்டாரத்தார்க்கு, ஒன்று எதிரிநாட்டு தர்மம் பெறும் நிறுவனங்களுக்கு என வழங்கப்படும்.

தூங்கு தலை செய்வது தியாகத்தின் உச்சம்!

இதைத் தொடர்ந்து தூங்கு தலை செய்த தியாகிகளின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு, அகப்படைக்குள் சேவை செய்வதற்கு பரிசுத்த நிவாரணப் பட்டயங்கள் சீராள குருமாரால் வாசிக்கப்படும். இப்பட்டயமே மிகுந்த மதிப்புடைய பட்டயம்.

தூங்கு தலை செய்வதென்பது, ஒரு குலத்தைக் காக்கும் தலைவனோ, மனிதநேயமிக்க வள்ளலோ அல்லது பேராற்றலும் மதிநுட்பமும் மிகுந்த தம் குடிமக்களை தம் உயிரினும் மேலாக நினைக்கும் மன்னனோ நோய்வாய்பட்ட நிலையில் மரணத்தை எதிர்நோக்கவிருந்தால், அவனது உயிரைக் காப்பதற்கு தன்னுயிரை நேர்த்திக்கடனாக கொற்றவைக்கோ தன் குல தெய்வத்திற்கோ கொடுப்பதாகும். அவ்வாறு கொடுப்பதன்மூலம் தான் நேசித்த மன்னனின் அல்லது தலைவனின் அல்லது வள்ளலின் உயிர் காப்பாற்றப்பட்டு, அவன் நீண்டகாலத் திற்குத் தன் கடமைகளைச் செய்வான் என்ற நம்பிக்கையுடன், தன்னைத்தானே பலியிட்டுக் கொள்ளும் முறை.

பழந்தமிழர் காலத்தில் ஆண்களும் நீண்ட தலைமுடி வைக்கும் பழக்கம் இருந்தது. அவ்வாறில்லாவிட்டாலும், தூங்கு தலை செய்பவர்கள் ஒரு நான்கு மாதங்களுக்கு தங்களின் தலைமுடியினை வளர்ப்பார்கள். ஒரு குறிப்பிட்ட நாள் தூங்கு தலை செய்வதற்கு ஒதுக்கப்படும். அந்நாளில், ஊர்மக்களெல்லாம் சேர்ந்து தூங்கு தலை செய்பவருக்கு வழிபாடு செய்து, அவர்கள் நேர்த்திக்கடனாக நேர்ந்த கோவிலை நோக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்று, மஞ்சள் நீராட்டி, மலர் மாலைகள் சூட்டி வழிபாடுசெய்வர். அந்தக் குறிப்பிட்ட கோவிலிலுள்ள மரத்தின் கிளைகளில் தன் முடியைக் கயிற்றினால் கட்டி, தன் கையாலேயே தன் தலையை வாளால் அறுத்து, அத்தெய்வத்திற்கு தன் ரத்தம் முழுவதையும் காணிக்கை செய்து மரணிக்கும் நிகழ்வுக்கு "தூங்கு தலை' என்று பெயர்.

இவ்வாறு செய்வதற்கு முன் தன் குடும்பத்தார் களைத் தன்னால் நேசிக்கப்பட்ட தலைவனின் சுற்றத்தாரிடம் ஒப்படைத்து பாதுகாக்கச் செய்வார்கள். இவ்வாறு தூங்கு தலை செய்தல் என்பது தியாகத்தின் உச்சம். இதனால் தான் இவர்களின் குடும்ப வாரிசுதாரர்கள் இளவலின் அரண்மனைகளில் மெய்க்காவல் புரியும் அளவுக்கு உயர்ந்த மதிப்பைப் பெற்ற வர்களாகிவிடுவார்கள். அதற்கான பட்டயம் வழங்கப்படும்போது, மக்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்வார்கள். இவ்வ கைப் பட்டயங்கள் மட்டும் பொற்தகட்டினில் எழுதப்பட்டு வழங்கப்படும். இவர்களது சந்ததியினர் இருக்கும்வரை இப்பட்டயம் தொடர்ந்து செல்லும். இதனைத் தொடர்ந்து, போரில் வீரமரணமடைந்த வீரர்களின் வாரிசு களை அகப்படைகளில் சேர்த்துக்கொள்வார்கள்.

"அகப்படை' என்பது அரண்மனைக்குள் அரச குடும்பத்தினரைப் பாதுகாக்கும் மெய்க் காவல்படை. இவர்களுக்கு அதிக அதிகார முண்டு. கோட்டைக்குள் இவர்களுக்கென வீடுகள் தரப்படும். அந்தப்புரத்துப் பெண்களுக்கு காவல் தாதிப் பெண்களாக இவர்களது குடும்பத்துப் பெண்களே இருந்து காவல் செய்வார்கள். இவர்களுக்கும், தூங்கு தலை செய்தவர்களுக் கும் அதிகளவு வளமான நிலங்கள், பொன், பொருள், பட்டாடைகள் வழங்கப்படும். இவற் றுக்கான தன்ம சாசனம் தடித்த வெள்ளித் தட்டுகளில் பொறிக்கப்பட்டு வழங்கப்படும்.

வரும் இதழிலும் நிகழ்வுகள் தொடரும்

தொடர்புக்கு:

அலைபேசி: 99445 64856

தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்