கிராமங்களில் மக்கள் வீரனார், ஐயனார், முனீஸ்வரன், பாவாடைராயன் போன்ற காவல் தெய்வங்களை பக்தியுடனும் உணர்வுப்பூர்வமாகவும் வழிபாடு செய்வார்கள்.

அதேபோல் அக்கோவில்களில் பல அற்புதங்கள் கொட்டிக் கிடக்கும்; பல அதிசயங்கள் நிகழ்ந்திருக்கும். அப்படி ஒரு கோவிலைப் பற்றி இங்கு பார்ப்போம்.

நாகை மாவட்டம், சீர்காழி வட்டம், கொள்ளிடம் அருகே உள்ளது பெரிய குத்தவக்கரை என்னும் அழகிய கிராமம். இங்கே அமைந்துள்ளது வீரனார் ஆலயம். இந்த ஆலயத்தில் பல அற்புதங்கள் உண்டு. முதலில் இந்த ஆலயம் உருவான வரலாற்றைப் பார்ப்போம்.

பெரிய குத்தவக்கரை, தெற்கு ராஜன் வாய்க்கால் பாயும் கிராமம். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கிராமம் ஒரு பெரும் வனப்பகுதியாக இருந்தது. இங்கு ஒருசில குடும்பங்களே வசித்துவந்தனர். மாலையானால் வெளியே செல்லமுடியாது. அப்படியொரு பகுதி என்பதால் அங்கு செல்லவே எல்லாரும் அச்சப்படுவார்கள். கிராமத்தில் கோவில் எதுவும் இல்லையென்பதால் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு கோவில் அமைக்க திட்டமிட்டனர். ஆனால், அவர்கள் சக்திக்கு முடியாமல் போக, அங்கிருந்த ஒரு முதியவர், "கல்லை வைத்து வணங்கினாலும் அது தெய்வம்தான்'' என்று மக்களிடம் கூற, அவர்களும் ஆமோதித்தனர்.

Advertisment

"ஒரு பெரிய வேப்பமரம் இருக்குமிடத்தில் பதுவம் எனப்படும் மூன்று கற்களை வைத்து, ஒரு திரிசூலத்தையும் வைத்து வழிபாடு செய்வோம். அதற்கு வீரனார் என்று பெயரிடுவோம். எங்கள் ஊரைக் காவல் காக்கும் தெய்வமாய் நீ இருக்கவேண்டும் என்று கூறி வழிபடுவோம்'' என்றார். அவ்வாறே செய்யப்பட்டது.

ஒருநாள் மாலை வேளை, எல்லாரும் விவசாய வேலையை முடித்துவிட்டு, தெற்கு ராஜன் வாய்க்காலில் ஆங்காங்கே நீராடிக்கொண்டிருந்தனர். அப்போது ஒருவரின் காலை ஏதோ பிடித்திழுப்பதுபோல் உணர, "ஆஹா, முதலை வந்துவிட்டது' என்று அலறியடித்தபடி கரையேறினாராம். சிறிது நேரத்தில் அவர் கண்ட காட்சி அவரை மெய் சிலிர்க்க வைத்தது. அந்த தண்ணீரிலிருந்து ஒரு அம்மன்சிலை மேலே வந்தது. இவருக்கு ஒன்றும் புரியவில்லை. கற்சிலை எப்படி மிதக்கும் என்ற பயத்தோடு மீண்டும் வாய்க்கால் தண்ணீரில் இறங்கி அந்த சிலையை எடுத்துள்ளார்.

கரையை அடைந்தவுடன் ஊர்மக்களை அழைத்து நடந்தவற்றைக் கூறி, "இது ஏதோவொரு தெய்வத்தின் செயல்தான். நம் அய்யனார்தான் அம்மன் உருவத்தில், அதுவும் கழுத்துக்கு கீழ் மட்டும் இருக்கும் அம்மனாக வந்துள்ளார். அதனால் இதை நாம் பதுவம் பக்கத்தில் வைத்து வணங்கலாம்'' என்று யோசனை கூற, அதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

Advertisment

அம்மனை வீரனாரா கவே வழிபாடு செய்தனர்.

சில காலங் களுக்குப் பிறகு அந்த ஊரில் வசித்துவந்த ஒரு முதியவரின் கனவில் குதிரையின் மீது அமர்ந்து வீரனார் வந்துள்ளார். "எனக்கு இங்கே ஒரு ஆலயம் கட்டுங்கள். நீங்கள் செய்யும் பிரார்த்தனையை நான் நிறைவேற்றி வைப்பேன். அப்படி நிறைவேற்றி வைத்தவுடன் நன்றிக்கடனாக ஒவ்வொருவரும் இந்த கோவிலை கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டி முடிக்கவேண்டும்' என்று கூறினாராம்.

இதை அந்த முதியவர் மறுநாள் காலை ஊர்மக்களிடம் தெரிவிக்க, எல்லாருமே ஆச்சரியப்பட்டுப் போனார்கள். "அப்ப டியா! சரி; நாம் இன்றுமுதல் ஒவ்வொரு பிரார்த்தனை செய்வோம். நம் பிரார்த்தனை நிறைவேற நிறைவேற, நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து நம்மால் முடிந்த நிதியைக்கொண்டு கோவிலைக் கட்டி முடிப்போம்'' என்றனர்.

ஒருவரின் நிலம் கடனில் மூழ்கும் நிலையில் இருந்ததால், அவர் தன் நிலத்தை மீட்டுக் கொடுக்கவேண்டும் என்று வீரனாரி டம் பிரார்த்தனை செய்ய, மூன்று நாட்களுக்குள் அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றிவிட்டாராம் வீரனார். உடனடி யாக அந்த பக்தர் வீரனாருக்கு ஆலயம் கட்டும் பூமிபூஜையைத் தொடங்கினார்.

இப்படி ஒவ்வொருவரும் பிரார்த்தனை செய்து, அது நிறைவேறியவுடன் கட்டியதுதான் இந்த ஆலயம். அதனால் தான் இன்றும் இந்த ஆலயம் நம்பிக்கைக்குப் பாத்திரமாய் விளங்கும் ஆலயமாக உள்ளது.

அதேபோல் இவ்வூரைச் சேர்ந்த- இலங்கையில் வசித்த ஒரு ஸ்தபதியார் கனவிலும் வீரனார் தோன்றி, "என் ஆலயத்தை சிறப்புடன் கட்டு' என்று உத்தரவிட, அவர் அங்கிருந்து தனது குழுவினரோடு வந்து இந்த ஆலயத்தை நூதன ஆலயமாகக் கட்டிமுடித்தார் என்று கூறுகிறார்கள். இனி ஆலயத்தின் அமைப்பைப் பற்றிப் பார்ப்போம்.

கோவிலின் வெளியே கருவறையை நோக்கி குதிரை, பைரவர், காவல்காரர் என மூவரும் நிற்க, அவர்களை வணங்கிவிட்டுச் சென்றால் கோவிலின் முன்பக்கம் மேலே அற்புதமான சுதை வேலைப்பாடுகள். அதில் வீரனார், முருகன், விநாயகர் இருபுறமும் காட்சியளிக்க, கீழே காவலாளிகள் இருவர் வேல் கம்புடன் உள்ளனர். உள்ளே சென்றால் மகா மண்டபம்.

மகாமண்டபத்தில் நடராஜர் சந்நிதி உள்ளது. நாட்டியம் பயிலும் மாணவ- மாணவிகள் இவ்வாலயத்திலுள்ள நடராஜர் சந்நிதிக்கு வந்து பிரார்த்தனை செய்துவிட்டுச் சென்றால் தாங்கள் கற்கும் கலை மிகச்சிறப் பாக வருவதாகவும், பேரும் புகழும் குவிவதாகவும், நடராஜரை வணங்கிதான் நாங்கள் பெரிய கலைஞர்களாக உயர்ந்தோம் என்றும் பலர் கூறுகின்றனர்.

கோவிலில் அர்த்த மண்டபம் கிடையாது. மகா மண்டபத்துக்கு அடுத்தது கருவறைதான். கருவறையில் வீரனார் அமர்ந்த நிலையில், கையில் வாளுடன் இரண்டு விழிகளையும் உருட்டிய பார்வையோடு கம்பீரமாகக் காட்சிதருகிறார்.

கோஷ்டத்தில் சந்நிதிகள் கிடையாது. வெளிப்பிராகாரத்தில் ஆதி வீரனார் என்று முன்னோர்கள் வழிபாட்ட பதுமம் என்ற மூன்று கற்கள் ஒரு சந்நிதியிலும், அதற்குப் பக்கத்தில் வாய்க்காலில் கிடைத்த அம்மன் சந்நிதியும் உள்ளது. கோவிலுக்கு வெளியே இடப்பக்கம் விநாயகர் சந்நிதி தனிக் கோவிலாக உள்ளது.

ஆண்டுத் திருவிழாவாக ஆடிமாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று திருவிளக்குப் பூஜை நடைபெறுகிறது. பொதுவாக அம்மன் கோவில்களில் மட்டுமே திருவிளக்குப் பூஜை நடைபெறும். ஆனால் இங்கு வீரனார் கோவிலில் திருவிளக்குப் பூஜை நடைபெறுவது சிறப்பம்சமாகும். ஆதிகாலத்தில் வாய்க்காலில் வந்த அம்மன் சிலையை இங்கு வீரனா ராக மக்கள் வழிபட்டதால் அம்மனுக்கு என்னென்ன விசேஷங்கள் நடைபெறுகிறதோ அவையனைத்தையும் வீரனாருக்கு செய்வதாகக் கூறுகிறார்கள். அப்படி தான் இந்த திருவிளக்குப் பூஜையும் நடை பெறுகிறது.

இந்த திருவிளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் பக்தர்கள் சர்வ பிரார்த்தனை மேற்கொள்கிறார்கள். தங்கள் வாழ்க்கையில் என்னென்ன துன்பங்கள் இருக்கிறதோ அவற்றை வீரனாரிடம் பிரார்த்தனை செய்து திருவிளக்குப் பூஜையில் கலந்துகொண்டால் உடனடியாக பிரச்சினைகள் அகல்வதாக உணர்வுபொங்க கூறுகின்றனர்.

ஆடி மாதம் தெற்கு ராஜன் வாய்க்காலில் பாசனத்திற்காகத் திறக்கப்படும் தண்ணீர் வரும். அன்று ஒரு தெப்பம் கட்டி தண்ணீரில் மிதக்கவிட்டு, உற்சவராக இவ்வாலயத்தில் நின்ற கோலத்தில் இருக்கும் வீரனாரை வைத்து பலவிதமான திரவியங்களால் அபிஷேகம் செய்வார்கள். பிறகு அங்கேயே அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெறும். பொதுவாக அபிஷேகம், ஆராதனை செய்து பூஜைசெய்த பிறகே தெப்பத்தில் சுவாமியை வைப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் இங்கு தெப்பத்தில் வைத்து தான் எல்லாமும் நடைபெறு கிறது.

ff

"புதிய தண்ணீர் வந்த வுடன் அதை விவசாயத்திற் குப் பயன்படுத்தும் முன்னர், வீரனார் நீராடியபின் அந்த நீரை நாங்கள் விவசாயத்திற்குப் பயன்படுத்தினால் எங்களுக்கு ஒரு குறையுமில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் விவசா யம் செழிக்கிறது. நல்ல வருமானம் கிடைக்கிறது. மூன்று போக சாகுபடி செய்கிறோம். எங்கள் விவசாயம் இவ்வளவு செழிப்பாக இருக்க முக்கிய காரணம் வீரனாரின் அருள்தான். அதனால் தான் முதன்முதலில் வாய்க்காலில் தண்ணீர் வந்தவுடன் அவரை நீராடவிட்டு பிறகுதான் நாங்கள் விவசாயம் செய்கிறோம்" என்று நம்பிக்கையோடு தெரிவிக்கின்றனர்.

அதேபோல் இவ்வாலயத்தில் சகல சௌபாக்கியமும் கிடைக்க அருவா பூஜை (அரிவாள் பூஜை) என்றொரு பிரார்த்தனை உள்ளது. இந்த பிரார்த்தனை செய்ய இக்கோவிலில் முன்அனுமதி வாங்கவேண்டும். நமக்கு பல்வேறு கஷ்டங்கள் இருக்கலாம். பலவிதமான கிரகக் கோளாறுகள் இருக்கலாம். இதனால் காரியங்கள் தடைப்படுகிறது என்ற மன வருத்தம் நமக்கு இருக்கலாம். இவற்றையெல்லாம் தூள்தூளாக உடைத்தெறிவதுதான் இந்த பூஜை.

இக்கோவிலில் வீரனாரின் அரிவாள் ஒன்று கருவறையில் உள்ளது. அதை கருவறையின் எதிரிலேயே இருக்கும் வீரனாரின் வாகனமான குதிரையின் காலடியில் வைத்து, நாமே அரிவாளுக்கு அபிஷேகம் செய்து சந்தனம் பூசி, நம் பிரார்த்தனை என்னவென்பதை ஒரு துண்டுச் சீட்டில் எழுதி அதை அரிவாளின் கைப்பிடியில் கட்டிவிடவேண்டும். அப்படி கட்டப்பட்ட அரிவாளை நாம் பூசாரியிடம் கொடுத்தால், அவர் வீரனாரின் பாதத்தில் வைத்துப் பூஜை செய்வார். அதன்பிறகு அதை ஒரு பித்தளைப் பெட்டிக்குள் வைத்து மூடி கருவறையில் ஒரு ஓரத்தில் வைத்து விடுவார்கள்.

ff

நம் பிரார்த்தனை நிறைவேறியவுடன் இக்கோவிலுக்கு வந்து பூசாரியிடம் சொன்னால் அரிவாளை மீண்டும் பெட்டிக்குள்ளிருந்து எடுத்து, நாம் எழுதிக்கட்டிய அந்த சீட்டை எடுத்துக் கொடுப்பார். அதை வீரனாரின் பாதத்தில் வைத்து, "ஐயா, உன் அருளால் எல்லாமே நிறைவேறிவிட்டது' என்று நாம் மனதார வேண்டி அந்த சீட்டை அப்புறப் படுத்த வேண்டியதுதான்.

அரிவாள் பிரார்த்தனைக்காக வெளியூரிலிருந்துகூட மக்கள் இங்கு வருவதைக் காண முடிகிறது. இக்கோவிலில் இது மிகச்சிறப்பு வாய்ந்த பிரார்த்தனையாகவும் சகல சௌபாக்கியமும் கிடைக்கும் பிரார்த்தனையாகவும் கருதப்படுகிறது.

oo

மார்கழி மாதம் 30 நாட்களும் அதிகாலை கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இவ்வாலயத்தில் அனைத்து வழிபாட்டு முறைகளும் தமிழ் மொழியில் மட்டுமே செய்யப்படுகிறது.

அதேபோல் தைப்பொங்கலன்று காலை இவ்வாலயத்தின்முன் இந்த ஊர்மக்கள் அனைவரும் இணைந்து தனித்தனியாக பொங்கல் வைப்பார்கள். அதை வீரனாருக் குப் படைத்தபின்புதான் அவரவர் வீட்டில் பொங்கல் வைத்து சூரிய வழிபாடு செய்கிறார்கள். இது அக்காலம் முதல் தொடர்ந்து வருவதாக இங்குள்ள பெரியவர்கள் கூறுகிறார்கள்.

poo

கோவில் திறக்கும் நேரம்: காலை 6.00 மணிமுதல் 10.00 மணிவரை; மாலை 5.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை.

கோவில் இருப்பிடம்: சீர்காழியிலிருந்து கொள்ளிடத்திற்கு நேரடி பேருந்து வசதியுள்ளது. கொள்ளிடம் பேருந்து நிலையத்திலிருந்து பெரிய குத்தவக்கரைக்கு ஒரு கிலோமீட்டர் நடந்துதான் செல்ல வேண்டும். வாடகை வாகனம் பயன்படுத்திக் கொள்ளலாம்.