தியும் அந்தமுமில்லாத சக்தியாய் விளங்கி, அனைத்து உயிர்களையும் படைத்துக் காத்தருளும் சக்தி மகாமாரியம்மன்.

திருச்சி நகரத்தில் புகுந்து செல்லும் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது ச. கண்ணனூர், சமயபுரம் மாரியம்மன் கோவில். ஆயிரம் கண்ணுடையாள் என்று பக்தர்களால் போற்றப்படுபவள். இவளைத் துதிப் போர்க்கு தீராத நோய்கள் தீரும். வற்றாத செல்வங் கள் வந்துசேரும். சிவத்துடன் சக்தி ஒன்றுசேராவிடில் உலகின் இயக்கம் நின்றுவிடும். சக்தியும் சிவமும் ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரிக்க இயலாதவை என்பதை இதிகாசங்கள், புராணங்கள் நமக்கு உணர்த்தி யுள்ளன. அப்படிப்பட்ட சக்தி அம்சமான அம்மன் பல்லாயிரம் பிரிவாய்ப் பிரிந்து உலகமெங்கும் ஆயிரக் கணக்கான பெயர்களில் கோவில்கொண்டு பக்தர் களைக் காத்தருள்கிறாள். அவற்றுள் முதன்மை யாக மக்கள் வழிபடுவது சமயபுரம் மாரியம்மனைதான்.

ss

Advertisment

தமிழக மக்களில் இந்த அம்மனை தரிசிக்காத வர்கள் இருக்கமுடியாது. அப்படிப்பட்ட அம்மன் கோவிலுக்கு 2017-ல் கும்பாபிஷேகம் நடத்தப் பட்டது. அப்போதே ராஜகோபுரம் அமைக்க வேண்டுமென்று அதற்கான பணிகள் துவக்கப் பட்டன. ஆனால் நிறைவு பெறவில்லை. அதன்பிறகு பணியை முழுமையாக செய்துமுடிப்பதற்கு முன் வந்தார்கள் நாமக்கல் மாவட்டம், நஞ்சை இடையாற்றுமங்கலம் பகுதியைச் சேர்ந்த பொன்னர், சங்கர் சகோதரர்கள். பெரும் பொருட்செலவில் ராஜகோபுரப் பணிகள் முழுமைபெற்றன. 101 அடி உயரமுள்ள இந்த கோபுரத்தில் 324 சிற்பங்கள் காண்போரை பிரமிக்கவைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

மகா கும்பாபிஷேகம் 6-7-2022 (ஆனி மாதம் 22-ஆம் தேதி) புதன்கிழமை காலை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத் திருப்பணியின்போது இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் வந்து பணிகளை ஆய்வுசெய்து துரிதப்படுத்தினார்.

இணை ஆணையர் கல்யாணி மற்றும் ஆலய அர்ச்சகர்கள், ஊழியர்கள் இரவு- பகல் பாராது கோவில் திருப்பணிகளை முடிப்ப தற்கு ஒத்துழைப்பு நல்கினர்.

விமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ், திருச்சி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஆச்சாரியார்களின் வேத மந்திரம் முழங்க, கோபுரத்தைச் சுற்றி கருட பகவான் வானத்தில் வட்டமிட, ஆலய கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. இந்தக் காட்சிகளைக் கண்டு மெய் சிலிர்த்தபடி அம்மனின் பெயரை கரகோஷத்துடன் உச்சரித்து கைகூப்பித் தொழுதார்கள் பக்தர்கள்.

சமயபுரம் அம்மனின் கீர்த்தி எப்படிப்பட்டது என்பதையும் பார்க்கவேண்டுமல்லவா?

ss

Advertisment

இவ்வாலய அம்மனுக்கு மகமாயி, அகிலாண்ட நாயகி, ஆயிரம் கண்ணுடையாள், சாம்பிராணி வாசனி, கௌமாரி, காரண சௌந்தரி, சீதளதேவி, கண்ணபுரத்தாள் போன்ற பல பெயர்கள் உள்ளன.

அசுரர்களை அழித்து மக்களைக் காத்த துர்க்கை, விஜயை, சாமுண்டி, சண்டிகை, வைணவி, காளி, சாரதா, வராகி, மகிஷாசுரமர்த்தினி போன்ற தெய்வங்களின் அனைத்து அம்சத்தையும் கொண்டவள் சமயபுரம் மாரியம்மன். இந்த அம்மனுக்கு பல தெய்வீக வரலாறுகள் கூறப்படுகின்றன.

13-ஆம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலம், மைசூர் அருகில் துவார சமுத்திரம் பகுதியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்தவர் இரண்டாவது நரசிம்மன் என்ற ஹொய்சாள மன்னன். சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் ஏற்பட்ட போரின்போது, இவர் சோழ மன்னனுக்கு உதவியாக வந்து பாண்டியர்களை விரட்டிவிட்டு சோழ மன்னனைப் பட்டத்தில் அமர்த்தினார். இவருடைய மகன் வீர சோமேஸ்வர தேவன் இவ்வூரை தலைநகரமாக உருவாக்கி, கண்ண னூர் என்று பெயர் வைத்து, கி.பி.1253-ல் அவரது அரண்மனை அமைந்த பகுதிக்கு விக்கிரமபுரம் என்று பெயர் வைத்து ஆட்சிசெய்து வந்துள்ளார்.

ss

இவ்வூரில் பல தானங்களைச் செய்ததற்கான செப்புப் பட்டயம் ஒன்று பெங்களூரு கண்காட்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மன்னனைப் பற்றிய ஆதாரங்கள் ஸ்ரீரங்கம், திருவானைக் காவல், கண்ணனூர் கோவில்களில் கல்வெட்டு ஆதாரங் களாக உள்ளன என்றும் கூறப்படுகிறது. இவரது வம்சாவளியினர் இப்பகுதியில் பல ஆலயங்களை உருவாக்கி பொதுமக்கள் வழிபட வழிவகுத்தனர்.

இவர்கள் வாழ்ந்ததற்கு ஆதாரமாக கோட்டைகள் இருந்து, பிற்காலத்தில் அழிந்து போனதாகக் கூறப் படுகிறது. தற்போதும் இப்பகுதியில் கஜானாமேடு என்னும் பகுதி உள்ளது. இது மன்னரின் பொக்கிஷம் பாதுகாக்கப்பட்ட பகுதியைக் குறிக்கிறது. அதன் பிறகு 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கும் பிரஞ்சுக்காரர்களுக்கும் நடந்த போரில், ராபர்ட் கிளைவ் பிரஞ்சுப் படைகளை இவ்விடத்தில் முறியடித்து, ஆங்கிலேயருக்கு சொந்தமாக ஒரு அரசை இங்கு நிலைநாட்டினார். அதன்மூலம் இந்தப் பகுதியும் இங்குள்ள அம்மன் ஆலயமும் மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்கான ஆதாரங்கள் அரசு கெஜட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படி வரலாற்றில் இடம்பெற்றுள்ள சமயபுரம் புராண வரலாறுகளிலும் இடம்பெற்றுள்ளது. கிருஷ்ணாவதாரத் தின்போது தேவகியின் குழந்தையாக கிருஷ்ணனும் யசோதையின் குழந்தையாக மாயாதேவியும் பிறந்தார்கள். இறைவன் விருப்பத்தின் பேரில் இடம் மாறினார்கள். தனது சகோதரி தேவகியின் பிள்ளையினால் தனக்கு அழிவுநேரும் என்பதை அறிந்த கம்சன், பிள்ளைகள் இடம் மாறியது அறியாமல் சிறையில் தேவகியிடமிருந்த பெண் குழந்தையைக் கொல்ல முடிவுசெய்து அந்தக் குழந்தையை மேலே தூக்கி னான். அப்போது குழந்தை அவன் கைகளிலிருந்து விடுபட்டு ஆகாயத்தில் எழும்பி நின்றது. வில், அம்பு, சூலம், அங்குசம், சங்கு, சக்கரம் என பல ஆயுதங்களைக் கையில் ஏந்தியபடி தோன்றி, "கம்சா, உன்னால் என்னைக் கொல்ல முடியாது. உன்னைக் கொல்ல கிருஷ்ணன் பிறந் துள்ளார்' என்று கூறிவிட்டு மறைந்தது. அவளே மகா மாரியம்மன். அவளே சமய புரத்தில் அருளாட்சி செய்கி றாள் என்கிறது புராண வரலாறு.

gg

"சாய்ந்தால் சமயபுரம் சாதித் தால் கண்ணபுரம்' என்ற முது மொழியும் வழக்கில் உள்ளது.

முற்காலத்தில் ஸ்ரீரங்கத்தில் வைணவி என்ற அம்மன் விக்ரகம் இருந்ததென்றும், அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால், அப்போது ஸ்ரீரங்கத் தில் இருந்த ஜீயர் சுவாமிகள் அந்த சிலையை அப்புறப் படுத்தவும் உத்தர விட்டாராம். வைணவி யின் விக்கிரகத்தை பணியாளர்கள் சிலர் தூக்கிக்கொண்டு வடக்கு நோக்கி வந்துகொண்டிருந்தனர்.

அம்மனின் சுமை தாங்கமுடியாமல் தற்போதுள்ள கண்ணனூர் அரண்மனை மேட்டுப் பகுதியில் இறக்கிவைத்து விட்டு இளைப்பாறினர்.

பிறகு அம்பாளின் விக்கிரகத்தை எடுத்துச்செல்ல தூக்கியுள்ளனர். ஆனால் சிலையைத் தூக்கமுடியவில்லை. எனவே அதே இடத்தில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். (தற்போது அம்மன் அமர்ந்துள்ள இடம்).

அப்போது காட்டுவழியாகச் சென்ற வழிப்போக்கர்கள் சிலர் அம்பாளின் விக்கிரகத்தைப் பார்த்து வியந்தனர்.

பின்னர் அக்கம் பக்கத்திலிருந்த கிராமத்து மக்களைக் கூட்டிவந்து, அம்பாளை அதே இடத்தில் வைத்து, கண்ணனூர் மாரியம்மன் என்று பெயரிட்டு சிறு குடிசை அமைத்து வழிபட ஆரம்பித்தனர்.

oo

இதன்பிறகு சிலகாலம் கழிந்து விஜயநகர மன்னன் சொக்க நாயக்கர் தென்னாட்டின்மீது படையெடுத்து வரும்போது, இப்பகுதியில் முகாமிட்டுள்ளார். அப்போது கண்ணனூர் மாரியம்மனின் சக்தி அளப்பரியதென்று கேள்விப்பட்டு அவர் அம்மனை வந்து வழிபட்டார். அப்போது தென்னாட்டில் நடை பெறும் போரில் வெற்றிபெற்றால் இந்த அம்மனுக்கு பெரிய கோவில் கட்டுவதாக சத்தியம் செய்தார்.

அதன்படி அவர் வெற்றிபெற்றார். அவர் சொன்னபடி அம்மனுக்கு பெரிய ஆலயம் ஒன்றை அமைத்தார். அதுதான் சமயபுரம் மாரியம்மன் கோவிலாக உலக அளவில் பிரசித்தி பெற்று விளங்கிவருகிறது. கோவிலுக்குப் பூஜைசெய்வதற்காக நிலங்களும் ஆபரணங்களும் பொற்காசுகளும் மானியமாக அவர்களால் வழங்கப்பட்டுள்ளன. இது கி.பி. 1706-ஆம் ஆண்டு நடந்ததென்று வரலாற்று ஆய்வாளர் கள் கூறுகின்றனர்.

அழகு தெய்வமான அம்மன் எட்டுக் கைகளுடன், கழுத்தில் சர்ப் பக் கொடியுடன், ஐந்து அரக்கர் களின் தலைகளைத் தன் காலால் மிதித்தபடி சிம்மாசனத்தில் கம்பீர மாக அமர்ந்து காட்சி தருகிறாள். இவளது அழகைக் கண்டால் மனம் உருகும். மனதில் உள்ள மாசுகள் விலகும்.

இக்கோவில் கிழக்குநோக்கி அமைந்துள்ளது. விநாயகர், முருகன் ஆகியோருடன், அம்மனின் காவல், ஏவல் தெய்வமாக கருப்பண்ணசாமி தெற்குநோக்கி அமர்ந்துள்ளார். இந்த அம்மனுக்கு உயிர்பலி கிடை யாது. உப்பு, வெல்லம், தானியங்கள், தங்கம், வெள்ளி ஆபரணங்கள் மற்றும் ஆடு, கோழி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகிறார்கள் பக்தர்கள். அன்னை சமயபுரத் தாளுக்கு அபிஷேகம் கிடையாது. விக்ரகம் மூலிகைகளால் ஆனது என்பதால் உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம். அம்பிகை எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டுமென்ற நோக்கில், கருவறையைச் சுற்றிலும் எப்போதும் நீர் சூழ்ந்திருக்கும்படி செய்திருக்கிறார் கள். கருவறையின் பின்புறம் அம்ம னின் பாதங்கள் உள்ளன. இதற்கு மலர்சூட்டி, தீபமேற்றி வழிபடுகிறார் கள். அம்மன் தனது எட்டுத் திருக் கரங்களில் முறையே கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஆகியவற்றை ஏந்தி யுள்ளாள். நெற்றியில் திருநீறு, குங்குமம். 27 நட்சத்திரங்களின் ஆதிக் கங்களையும் தன்னுள் அடக்கி, 27 எந்திரங்களாகத் திருமேனி பிரதிஷ் டையில் திகழ, மகாமாரியாக இங்கு அருள்புரிகிறாள்.

பக்தர்கள் அம்பாளை வேண்டி விரதமிருப்பது நடைமுறை. ஆனால், இங்கு பக்தர்களுக்காக அம்மனே விரதமிருக்கிறாள். இது "பச்சைப் பட்டினி விரதம்' எனப் படுகிறது. மாசிமாதக் கடைசி ஞாயிறன்று நடைபெறும் பூச்சொரிதல் திருவிழாவுடன் அம்மனின் இந்த விரதம் துவங்குகிறது. பூச்சொரிதலின்போது அம்மனுக்கு பூக்கள் வந்து குவியும். இங்கு "கரும்புத்தூளி எடுத்தல்' என்னும் விசேஷப் பிரார்த்தனை பிரசித்தம். குழந்தைப் பேறில்லாத தம்பதிகள் கரும்புத் தூளி எடுப்பதாக வேண்டிக்கொள்கிறார்கள். அன்னையின் அருளால் கருவுற்று, சீமந்தம் முடிந்தபின், சீமந்தப் புடவைலி வேட்டியைப் வீட்டில் பத்திரமாக வைத்திருந்து, குழந்தை பிறந்து ஆறாவது மாதத்தில், ஏற்கெனவே பத்திரப்படுத்திய துணிகளை மஞ்சள் நீரில் நனைத்து கரும்புத் தொட்டில் தயார்செய்து அதி ல் குழந்தையைக் கிடத்துகிறார்கள். அந்தத் தொட்டிலைப் பிடித்தபடி தந்தை முன்னே செல்ல, தாய் பின்தொடர கோவிலை மூன்றுமுறை வலம்வந்து பிரார்த்தனை செலுத்தும் காட்சி பக்தர்களிடையே பரவசத்தை ஏற்ப்படுத்துகிறது. இப்படி கரும்புத்தூளி எடுத்துப் பிரார்த்தனை செய்வது வேறெங்குமில்லாத நிகழ்ச்சி என்கிறார்கள் சமயபுரத்து அம்மனின் தீவிர பக்தர்களான திருமானூர் ஜெயபால், ஜோதிடர் குமரவேல், கீழ் காவட்டாங்குறிச்சி பிரபாகரன்.

ஆண்டுதோறும் தைமாத பூசத்தின்போது அம்மன் காவிரி நதியின் தென்கரைக்குச் சென்று தீர்த்தமாடி திரும்புவாள். அன்று அன்னையின் சகோதரர் ஸ்ரீரங்கம் அழகிய மணவாள ரங்கநாதப் பெருமாளிடமிருந்து ஆடை கள், மாலை, ஆபரணங்கள் முதலியன தங்கைக்கு சீர் கொடுப்பதுபோல அம்மனுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அம்மனுக்கு காலை, உச்சி, மாலை, இரவு, ஆகிய நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.