மனித சமுதாயத் தினிடையே மிகத் தொன்மையான காலந்தொட்டு வழிவழியாக சில மரபுகள் சமயம் சார்ந்து நிற்கின்றன. "சமயம் இல்லாமல் மனிதன் உயிர்வாழ முடியாது' என அண்ணல் காந்தியடிகள் கூறியதன்மூலம் சமயத்தையும், அதைச்சார்ந்த பண்பாட்டு, கலாச்சார மரபுகளின் முக்கியத் துவத்தையும் உணரலாம்.
ஒவ்வொரு மதத்தினரும் தங்களின் மத அடையாளங் களை (சின்னம்) அணிவார்கள். கிறிஸ்துவர்கள் சிலுவையை கழுத்தில் அணிவதுண்டு. இஸ்லாமியர்கள் தலையில் குல்லா அணிவதுண்டு. சீக்கியர்கள் தலைப்பாகை பக்ரி (டஹஞ்ழ்ண்) அணிவதுண்டு.
இந்து மதத்தில் வைணவர்கள் தங்களின் சம்பிரதாயத்தின்படி வடகலையில் 'ம' வடிவில், வெள்ளைக்கு நடுவே மஞ்சள்நிறக்கோடு வடிவில் திருமண் என்னும் திருநாமத்தை அணிவார்கள். தென்கலையில் 'வ' வடிவில் வெள்ளைக்கு நடுவே சிவப்பு நிறக்கோடு வடிவில் திருநாமத்தை அணி வார்கள். சைவர்கள் திருநீறு, கோபி, சந்தனப்பொட்டு, குங்குமப்பொட்டு மற்றும் கழுத்தில் ருத்ராட்சம் என அவரவர் வழக்கப்படி அணிவதுண்டு. பொதுவாக சைவர்கள் விரும்பி அணிவது திருநீறு என்னும் விபூதியைத்தான். திருநீறு என்னும் தமிழ்ச்சொல்லை சமஸ்கிருதத்தில் பஸ்பம் என்பர். இந்த திருநீற்றை விபூதி, சாம்பல், கற்பம் எனப் பலவாறு சொல்வதுண்டு.
திருஞான சம்பந்தர் தமது "தோடுடைய செவியன் விடையேறியோர்' எனத் தொடங்கும் முதல் பாடலிலில், "காடுடைய சுடலைப் பொடிபூசியென் உள்ளங்கவர் கள்வன்' என சிவபெருமானைப் போற்றுகி றார். அதில் சாம்பற் பொடியை உடல் முழுவதும் பூசியவர் சிவபெருமான் என்கிற பொருளில் குறிப்பிடுகிறார். ஆக சிவபெருமானுக்கும் சாம்பற்பொடியான திருநீறு என்கிற விபூதிக்கும் அதிக தொடர்புள்ளது என்பதை உணரலாம். சம்பந்தர் தம் பதிகத்தில் திருநீற்றை "சுண்ண வெண்ணீறு பொடி', "சாந்து', "வெந்த நீறு', "சாம்பல்', "சுடுநீறு' எனப் பலவாறு பாடியுள்ளார். இதுமட்டுமின்றி திருநீற்றின் மகிமையை எல்லாரும் உணரவேண்டும் என்பதற்காக பதினோரு பாடல்கள் கொண்ட "திருநீற்றுப் பதிகம்' அருளியுள்ளார்.
நாட்டுப் பசுவின் சாணத்தை சுத்தமான முறையில் எடுத்து அதன்மூலம் தயாரிக்கப்படும் வெண்ணிற விபூதியே சிறந்ததாகும். பசுவின் சாணத்தை (கோமயம்) சிறுசிறு உருண்டைகளாகவோ தட்டையாகவோ உருவாக்கி, அதை சூரிய வெளிச்சத்தில் நன்றாக உலர்த்தியெடுக்க வேண்டும். பௌர்ணமி, அமாவாசை மட்டுமின்றி மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி போன்ற விசேஷ நாட்களில் உமி அல்லது நெல் மற்றும் வைக்கோலை (பதர்) மேலே ஒவ்வொன்றாக அடுக்கி அக்னியை உண்டாக்கி எரிக்க வேண்டும். அக்னியை வைதீக முறையில் உருவாக்குவதுதான் சிறந் தது. அதாவது அரணிக் கட்டையைக் கடைந்து அதன்மூலம் கிடைக்கும் அக்னி யைத்தான் பயன்படுத்தவேண்டும்.
வேதியர்கள் யஜுர் வேதத்தில் வரும் ஸ்ரீருத்ரம் சமகம் பாராயணம், சிவபீஜ மந்திரங்கள் மற்றும் விரஜா ஹோம மந்திரங்களை ஓத, தயாரிக்கவேண்டும். பிறகு அக்னி குண்டத் திலிலிருந்து நன்கு வெந்த சாணத்தை "நமசிவாய' என்ற சிவபஞ்சாட்சர மந்திரத்தை (ஐந்தெழுத்து) ஜபித்துக்கொண்டே வெளியே எடுக்க வேண்டும். ஸ்ரீருத்ரத்தில் "நமசிவாய' என்கிற மந்திரமே மத்தியில் இருக்கிறது. ஜீவரத்னமாக விளங்குவது "நமசிவாய' என்னும் மந்திரமே. இதன் பெருமையை வள்ளலார், "நமசிவாயத்தை நான் மறவேனே' என பாடுகிறார். தமக்கு வாழ்க்கையில் எந்த நிலை ஏற்பட்டாலும் நம சிவாயத்தை எப்போதும் மறக்கமாட்டேன் என்கிறார். அவ்வாறு மந்திரம் சொல்லிலி எடுத்து புதிய மண்பாண்டத்தில் சேர்த்து, அதில் இயற்கையான நறுமணமுடைய வெட்டிவேர், சந்தனம், ஜவ்வாது, குங்குமப்பூ போன்றவற்றைப் போட்டு வைத்தால் நல்ல மணம் வீசும்.
இப்படி தயாரிக்கும் திருநீற்றை சம்புடத்திலோ, பட்டுப் பையிலோ, சுரைக் குடுவையிலோ, மண்பாண்டத்திலோ பத்திரமாக வைத்துக்கொண்டு தினமும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். விபூதி தாரணத்தை (பூசுதல்) இரண்டு வகையாகச் சொல்வதுண்டு. ஒன்று, மூன்று ரேகையாகப் பட்டைதரிக்கும் "திரிபுண்டரம்', அடுத்தது உடலிலில் பூசிக்கொள்ளும் "உத்தூளனம்.'
திரிபுண்டர முறையில் திருநீற்றை அணியும் போது, கையில் தண்ணீரால் குழைத்து மூன்று பட்டையாக வடக்குமுகமாகவோ, கிழக்குமுகமாகவோ இருந்து கீழே சிந்தாமல் சிவநாமத்தைச் சொல்லிலிக்கொண்டே பக்தியுடன் பூசிக்கொள்ள வேண்டும்.
சாஸ்திர முறைப்படி திரிபுண்டரத்தை நடுவிரல், மோதிரவிரல் ஆகியவற்றால் இடமிருந்து இரண்டு ரேகையாக முதலிலில் இட்டுக்கொள்ளவேண்டும். அடுத்து கட்டை விரலால் வலதுபுறத்திலிலிருந்து இடப்புறமாக (எதிர்புறம்) நடுவில் ஒரு ரேகையை இட்டுக்கொள்ளவேண்டும். ஐஸ்வரியமும் பவித்திரமும் நிறைந்த- நோய், தோஷங்களை நிவர்த்திசெய்து புண்ணியம் கொடுக்கக்கூடிய திருநீற்றை அணியும்போது ஸ்ரீருத்ரத்தில் வரும்- "த்ரியம்பகம் யஜாமஹே
ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான்
ம்ருத்யோர் முக்ஷீ ய மாம்ருதாத்'
என்னும் மந்திரத்தைச் சொல்லிலிக் கொண்டே அவரவர் விருப்பப்படி 32 இடங்களிலோ, 16 இடங்களிலோ, எட்டு இடங்களிலோ, ஐந்து இடங்களிலோ திருநீற்றை அணியலாம். இந்த திருநீற்றின் சிறப்பைப் பற்றி பாஸ்மா ஜபல் (இட்ஹள்ம்ஹ ஓஹக்ஷஹப்ங்) உபநிஷத்திலும், சிவபுராணம், பத்ம புராணம் உட்பட சில நூல்களிலும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
திரிபுண்டர முறையில் திருநீறு அணிய இயலாவிடில், சாதாரணமாக நெற்றியில் இடும் பட்சத்தில், மோதிரவிரல், கட்டைவிரலால் திருநீற்றை எடுத்து, அதை மோதிர விரலால் புருவங்களுக்கிடையே வைத்துக்கொள்ளலாம். கட்டைவிரல், சுட்டுவிரல், நடுவிரல், சுண்டுவிரல் ஆகியவற்றால் விபூதியை நெற்றியில் வைக்கக்கூடாதென்பது நியதி.
திருநீற்றை ஆண்- பெண் பாகுபாடின்றி இந்துக்கள் எல்லாரும் பக்தியுடன் அணியலாம் என்பதை சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று கிறிஸ்துவர்கள் கி.பி. 900 ஆண்டிலிலிருந்து, "சாம்பல் தினம்' அன்று திருச்சபையில் குருத்தோலையை எரித்துத் தரப்படும் சாம்பலை, "சாம்பல் புதன்' அன்று நெற்றியில் பூசிக்கொள்வார்கள். சாம்பலைப் பற்றி எண்ணாகமம், எபிரெயர் போன்ற அதிகாரங்களில் சொல்லப்பட்டுள்ளது.
திருநீற்றை அணிபவர்கள் தங்களுடைய மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை சிவாக்னியில் (திருநீறு) தகித்து, தூய ஆன்மாவாக்கி பிறவாப் பெருநிலையைப் பெறுவார்கள். இம் மும்மலங்களைப் பற்றி 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தருமபுர ஆதீன மடாதிபதியான குருஞான சம்பந்தர் "எக்காலம் மும்மலங்கள் இற்றிடுமோ' எனப் பாடுகிறார். பசுஞ்சாணத்தால் தயாரிக்கப்படுவதால் மருத்துவ குணம் நிறைந் துள்ளது நீறு. இதைத்தான் ஆதிசங்கரர் தனது "சுப்ரமணிய புஜங்க'த்தில்-
"அபஸ்மாரகுஷ்ட க்ஷயார்ச: ப்ரமேஹ
ஜ்வரோந்மாத குல்மாதிரோகா மஹாந்த
பிசாசாஸ்ச ஸர்வே பவத்பத்ரபூதிம்
விலோக்ய க்ஷணாத்தாரகாரே த்ரவந்தே'v எனப் பாடியுள்ளார்.
அதாவது பெரும் நோய்களான வலிப்பு, குஷ்டரோகம், ஜுரம், வயிற்றுவலிலி போன்றவையும், பூதப் பிரேதத் தொல்லைகளும் திருச்செந்தூர் முருகனின் பன்னீர் இலை விபூதியை தரித்தால் அனைத்தும் நொடியில் விலகும் என்பதே இதன் பொருளாகும்.
ஒரு முருகன் பக்திப் பாடலிலில்-
"கந்தன் திருநீரணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும்'
என்கிற வரிகள் வரும். இது உண்மை என்பதை திருஞானசம்பந்தரின் வாழ்க்கை வரலாற்றில் உணரலாம்.
மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் சைவநெறியைவிட்டு சமண மதத்தைத் தழுவினான். மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்பதற்கேற்ப குடிமக்களும் சமண மதத்தைத் தழுவினர். இது பட்டத்தரசியான மங்கையர்க்கரசியாருக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது.
இந்த நிலையில் பாண்டியனுக்கு வெப்பு நோய் ஏற்பட்டு யாராலும் குணப்படுத்த முடியாமல்போக, அரசியின் வேண்டுகோளை ஏற்று அங்கு சென்ற சம்பந்தர்-
"மந்திர மாவதுநீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவதுநீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவதுநீறு சமயத்தி லுள்ளதுநீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே'
எனத் தொடங்கும் "திருநீற்றுப் பதிகம்' பாடி, மன்னனின் தீர்க்கமுடியாத நோயைத் தீர்த்துவைத்தார். இதனால் மகிழ்ந்த பாண்டிய மன்னன் மீண்டும் சைவநெறிக்கு மாறினான்.
மங்கலமும், ஐஸ்வரியமும் நிறைந்த திருநீற்றின் பெருமையைப் பற்றி ஓதுவார் தருமபுரம் சுவாமிநாதன் ஒரு கூட்டத்தில் பேசியபோது, ""தருமபுரம் ஆதீனத் தின் 25-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீசுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் அவர்கள் காசிக்குச் சென்றுவந்த பின்னர், காசி விஸ்வநாதருக்கு அணிவிக்கப்பட்ட விபூதியை மூன்று பூட்டுடன்கூடிய பெரிய தகர டிரங்க் பெட்டியில் போட்டு பத்திரப்படுத்தி வைத்திருப்பார். அதேசமயத்தில் மடத்தின் பணத்தை ஒரு காவித் துண்டில் சாதாரணமாக சுருட்டி வைப்பாராம். பெட்டியில் வைக்க வேண்டிய பணத்தை சாதாரணமாக வைத்து, சாதாரணமாக வைக்கும் திருநீற்றை பூட்டுப்போட்டு பாதுகாப்பாக வைப்பது அந்த குருமகா சந்நிதானத்தின் வழக்கம்'' என தெரிவித்தார். இதிலிருந்து திருநீற்றின் பெருமையை உணரலாம்.
ஆன்மிகத்தில் மட்டுமின்றி வேளாண்மைக்கும் சாம்பலின் தேவை அதிகம். ஆரோக்கியமாக நெற்பயிர்கள், செடிகள் வளர தழைச்சத்து, மணிச்சத்து போன்று சாம்பல் சத்துவும் மிக அவசியமான ஒன்றாகும். மனித இனம் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் சாம்பல் பயன்படுகிறது.
"கங்காளன் பூசுங்கவசத் திருநீற்றை
மங்காமற் பூச மகிழ்வாரே யாமாகில்
தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே'
என்று, சிவபெருமானின் சின்னமான திருநீற்றின் பெருமையை திருமூலர் 10-ஆம் திருமுறையில் 6-ஆவது தந்திரத்தில் மேற்கண்டவாறு பாடியுள்ளார். எத்தகைய தீயவினைகளிலிலிருந்தும் நம்மைக் காக்க தப்பாமல் திருநீற்றை அணிவோம்!