சூரபத்மாதியரை அழிப்பதற்காகவே முருகனின் அவதாரம் நிகழ்ந்தது. முருகனுக்குப் பல பெயர்கள் உண்டு. ஆறு முகங்கள் கொண்டதால் ஆறுமுகன். உமாதேவி ஆறு குழந்தைகளை அணைக்க, முருகன் ஓருடலாக ஒன்றினான். அதனால் ஸ்கந்தன். பற்றுக்கோடாக- ஆதாரமாக இருப்பவன். வாயுகுமாரன், அக்னிபாலன், காங்கேயன், சரவணபவன், கார்த்திகேயன் என்றெல்லாம் பெயர்களுண்டு. முருகனது அவதார தினம் வைகாசி விசாகம் என்பதால் விசாகன். சங்கரபாலன், உமாகுமாரன், குமரன், அழகு வடிவம் என்பதால் முருகன், பக்தர்களின் இதயத்தில் உறைவதால் குகன், வேலேந்துவதால் வடிவேலன்!

அசுரர்களை அழிக்க புதிய ஆயுதம் தேவையென்பதால், உமாதேவி தனது ஆற்றலையெல்லாம் ஒன்றுதிரட்டி வேலாக்கி முருகனுக்கு வழங்கினாள். எனவே அது சக்திவேல், வெற்றிவேல், ஞானம்தரும் ஞானவேல். வேலாயுதம் முருகனுக்கே உரியது; வேறு எந்த தெய்வங்களிடமும் இல்லாதது.

அந்த வேலால்தான் கந்தன் க்ரௌஞ் சாசுரன் (மலை), தாரகன், சிங்கமுகன், சூரபத்மன் ஆகிய யாவரையும் அழித்தான். அருணகிரியார் வேல்வகுப்பு, வேல்வாங்கு வகுப்பு, வேல் விருத்தம் என்று பாடியுள்ளார். கந்தர் அனுபூதி, அலங்காரம், அந்தாதி, திருப்புகழில் வேலின் மகிமையைப் பாடியுள்ளார்.

ஆதிசங்கரர் தனக்கேற்பட்ட கடும்நோய் தீர கோகர்ண ஆத்மலிங்கேஸ்வரரை நாடினார்.

Advertisment

அவரோ "ஜெயந்திபுரம் (திருச்செந்தூர்) செல்க' என்றார். அங்கு வந்தபோது ஒரு பாம்பு கோவிலுக்குள் நுழைவதுபோல் தோன்றியதால், ஆதிசங்கரர் முருகன்மீது "சுப்பிரமணிய புஜங்கம்' என்று 33 துதிகள் இயற்றினார். (புஜங்கம் என்றால் பாம்பு.) நோய்நீங்கப் பெற்றார். அந்தத் துதியில் "வேலேந்திய கைகளை உடையவனே' என்று முருகனைப் பாடியுள்ளார்.

தண்டபாணி சுவாமிகள், "குகன் கையிலேந்தும் வெற்றி வேலாயுதத்திற்கு மேலாயுதம் வேறில்லை' என்கிறார்.

அத்தகைய வேலின் சிறப்பையும், முருகனின் அருள்திறனையும், முருகனடியார் சிலரின் பெருமையையும் சிறிது காண்போமா...

Advertisment

tm

கவி குஞ்சரபாரதி

வால்மீகி முனிவர் இராமாயணத்தை 24 ஆயிரம் சுலோகங்களில் அருளினார். அதை கவிச்சக்கரவர்த்தி கம்பர் தமிழில் கம்ப இராமாயணம் என்று 16 ஆயிரம் பாடல்களில் படைத்தார். அருணாசல கவிராயர் கம்ப இராமாயணத்தை 250 பாடல்களில் சுருக்கமாகச் செய்தார். (நாடகம், நடனம், உபன்யாசம், ஹரிகதா காலட்சேபங்களில், பஜனைகளில் இவற்றைப் பாடக் கேட்கிறோம்.)

அதுபோல கந்தபுராணத்தை வடமொழியில் வியாசர் எழுத, அதை கச்சியப்ப சிவாச்சாரியார் தமிழில் 10,345 பாடல்களில் கந்தபுராணம் என செய்தார். அதனையே சம்பந்த சரணாலயர் 1,048 துதிகளில் சுருக்கி எழுதினார். மேலும் அதை கவி குஞ்சரபாரதி 240 கீர்த்தனங் கள், 300 விருத்தங்களில் பாடியுள்ளார். அவற்றுள் ஒருசில பாடல்கள் பஜனை சம்பிரதாயங்களில் பாடப்படுகின்றன. (இது 1914-ல் அச்சிடப்பட்டது.) கவி குஞ்சரபாரதியின் காலம் கி.பி. 1810-1896. இவரது சரிதம் சேய்த்தொண்டர் புராணத்தில் 2478-2483 என ஆறு பாடல்களில் மட்டுமே உள்ளது.

முத்துசுவாமி தீட்சிதர்போல் இவரது பரம்பரையினரே சங்கீதத்தில் ஆழ்ந்தவர்கள். இவரது தாத்தாவான கோடீஸ்வர ஐயர் 72 மேளராகக் கீர்த்தனைகளைத் தமிழில் இயற்றினார். தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் ஆழ்ந்த ஞானம் பெற்றவர். தந்தை சுப்பிரமணிய பாரதியும் அவ்வாறே. இவர்கள் சிவகங்கை சமஸ்தானத்தின் பெருங்கரை என்னும் ஊரில் வசித்துவந்தனர்.

பாரதி என்பது குலப்பெயராகும்.

சுப்பிரமணிய பாரதிக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லாததால், கொடுமளூர் குமர குருநாதரை தம்பதி சகிதமாய் விரதமிருந்து வழிபட, அவனருளால் 1810-ல் குழந்தை பிறந்தது.

அதற்கு தாத்தாவின் பெயரான கோடீஸ்வரன் என்னும் பெயரையே சூட்டினர். அது அக்கால வழக்கம். கோடீஸ்வரன் தமிழ், சமஸ்கிருதம், இலக்கணம், சங்கீதம் ஆகியவற்றை நன்கு கற்றார். உறவினரான மதுரை மதுரகவி பாரதியிடம் இசையைக் கற்றறிந்தார். குலதெய்வமான கந்தன், மீனாட்சி யம்மையிடம் பேரன்புகொண்டு, தனது 12-ஆவது வயதிலேயே பல கீர்த்தனைகளைப் புனைந்தார். 18-ஆவது வயதில் கடுமையான காய்ச்சல் வர, ஐயப்பன் இவரது கனவில்தோன்றி தன்னைப் பாடுமாறு சொல்ல, இவரும் பாடி நலம்பெற்றார்.

சிவகங்கை சமஸ்தானாதிபதி கௌரி

வல்லபராஜன் தமிழின்மீதும் இசையின்மீதும் பேரார்வம் கொண்டவர். எனவே சங்கீத வித்வான்கள் பலரை அழைத்து ஆதரித்தார். கோடீஸ்வரரின் இசைத் திறமையைக் கேள்விப்பட்டு, தன் சமஸ்தானத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்க, இவரும் சிவகங்கைக்குச் சென்று குடியேறினார். கௌரி வல்லபருக்குப் பிறகுவந்த சத்ரபதி போத குருமகாராஜாவும் இசை மற்றும் தமிழ்ப் பிரியர். ஆக, கோடீஸ்வரர் "கவி குஞ்சரர்' என்று பெயர்பெற்றார். குலப்பெயர் பாரதியும் சேர, கவி குஞ்சரபாரதி ஆனார்.

இராமநாதபுர சமஸ்தானத்தின் அரசர் முத்துராமலிங்க சேதுபதியும் தமிழ் மற்றும் இசையின்மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அவரது வேண்டுகோள்படி இராமநாதபுர சமஸ்தானத்தில் அவைப் புலவராகத் திகழ்ந்தார் கவி குஞ்சரபாரதி. அப்போது தனது ஊரான பெருங்கரை சென்று கந்தபுராணப் பாடல்கள், தரிசனப் பாடல்களைப் புனைந்தாராம்.

வள்ளி குஞ்சரிமணாளன் பதிகம் பாடியுள்ளார். அழகர்மலை பெருமாள்மீது அழகர் குறவஞ்சி பாடி அரங்கேற்றமும் செய்துள்ளார். மீனாட்சிமீது பல கீர்த்தனைகள், அடைக்கல மாலை, கயற்கண்ணி மாலை போன்றவை பாடியுள்ளார். திருப்பதி வெங்கடேசப் பெருமாள்மீதும் திருவேங்கடமாலை, திருமுக விலாசம் என பாடியுள்ளார். அனைத்தும் எளிய தமிழில் மனதைக் கொள்ளைகொள்ளும் துதிப்பாடல்கள்.

ஒருமுறை இவரது ஊரில் மழை பெய்யாது அவதியுற்றனர். இவர் கந்தன்மீது உருகிப் பாட, முருகனருளால் மழை பொழிந்ததாம். இன்னொரு சமயம் அவர் வீட்டில் நன்கு பால் கறந்துகொண்டிருந்த பசு நோய்வாய்ப்பட்டது. வடிவேலன்மீது அவர் ஒரு வெண்பா பாட, பசுவின் நோய் அகன்று முன்புபோல பால் சுரந்ததாம்.

ஞானம், பக்தி, சக்திவாய்ந்த பாக்களின் மகிமையே மகிமை!

சம்பந்த சரணாலயர்

இவரது காலம் கி.பி. 17-ஆம் நூற்றாண்டு.

தாய்- தந்தையர், பிறந்த இடம், பிறந்த தேதி, இயற்பெயர் போன்ற யாவையும் கிட்ட வில்லை. இவரது வரலாறு சேய்த்தொண்டர் புராணத்தில், 1710-1804 பாடல்களில் சொல்லப்பட்டுள்ளது. தர்மபுர ஆதீன ஆறாம் பட்டத்தவர் திருஞானசம்பந்த தேசிக சுவாமிகள். அந்த மடத்தில் சேர்ந்து தொண்டு செய்வதையே விரும்பியவர். எனவே அவரது பெயரே சம்பந்த சரணாலயர் என்று குறிக்கப் பெற்றது. மடத்தில் தொண்டு செய்ததுடன், தமிழ் இலக்கணம், இலக்கியம், சைவ சித்தாந்தங்கள், கந்தபுராணம் ஆகியவற்றையும் ஆழ்ந்து கற்று, நன்கு உபன்யாசிக்கும் தன்மையும் பெற்றார்.

இவரது திறமை, அக்காலத்தில் மைசூர் அரசராக இருந்த பெட்ட தசாமராலு உடையாருக்கும் எட்டியது. மன்னர் தமிழ், வடமொழி ஆகியவற்றில் தேர்ச்சிபெற்றவர். அவர் குருமூலம் சம்பந்த சரணாலயருக்கு மைசூர் வரும்படி அழைப்பு அனுப்பினார்.

குருவின் அனுமதி பெற்று சரணாலயர் மைசூர் வந்துசேர்ந்தார். மன்னரும் அடியாரும் சிவன், கந்தன் மற்றும் ஆன்மிக விஷயங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

சரணாலயர் கருநிறமாக இருந்ததால் மன்னர் வேடிக்கையாக, "என்ன... நீங்கள் அண்டங்காக்கைபோல் இருக்கிறீரே...'' என்றா ராம். அதற்கு சரணாலயர், "மன்னரும் அண்டங்காக்கைதானே'' என்றார். மன்னருக்கு திடுக்கென்றது. "நாட்டைக் காக்கும் அரசர்தானே" என்று அடியார் கூறியதும், மன்னர் சமாதானமாகி நகைத்தாராம். தமிழ்மணம் அத்தகையது.

சரணாலயர் உரையாற்றும்போது அடிக்கடி கச்சியப்பரின் கந்தபுராணப் பாடல்களைப் பாடி அதற்கு உரை கூறுவார். அதில் பெரிதும் ஈர்க்கப்பட்ட அரசர், "கந்தபுராணம் 10,345 பாக்களில் உள்ளதே!

அதனையே பொருள், சுவை, கதை சிதையாமல் சுருக்கமாகத் தரமுடியுமா?'' என்று கேட்டார். "பாராயணத்திற்கு சுலபமாக இருக்குமே'' என்றும் கூறினார்.

ஸ்ரீமத் பாகவதம் 18,000 துதிகள் என்றால், அதன் சுருக்கத்தை நாராயண பட்டத்திரி "நாராயணீயம்' என 1,036 துதிகளில் செய்து முடித்தார். நான்கைந்து மணி நேரத்திலேயே படித்துவிடலாம். அதுபோல, மன்னர் வேண்டுகோளுக்கிணங்க சரணாலயர் 1,049 துதிகளில் கந்தபுராணத்தைச் செய்தார். (இந்த நூல் தருமபுர ஆதீனத்தில் உள்ளது.)

இந்த நூல் திருச்செந்தூர் செந்திலாண்ட வன் சந்நிதியிலேயே அரங்கேற்றம் செய்யப் பட்டது. அரசரும், அடியாரும், கலந்து கொண்டவர்களும் இன்புற்றனர். கடைசி துதியைக் காண்போமா...

"துய்ய தாமறைகளாலும் துதித்திட அரியதான

செய்ய வேளடிகள் வாழ்க சேவலு மயிலும் வாழ்க

வெய்ய மார்புநீண்ட வேற்படை வாழ்க அன்னான்

பொய்யில் சீரடியார் வாழ்க வாழ்க இப்புவனமெல்லாம்.'

சரணாலயரின் பணிவு, வைராக்கியம், ஆசையற்ற நிலை போன்றவற்றைப் பாராட்டியாக வேண்டும். அரசரின் அரண்மனையில் இருந்தபோதும் அவர் பிச்சையெடுத்தே உண்டார். புராணம் எழுதி முடித்ததும் அரங்கேற்றிட அரசர் காணிக்கைகளை அளிக்க, "அது என் குரு மூர்த்திகளுக்கு உரியது'' என்றார்.

மீண்டும் காணிக்கைகளை அளிக்க, "அது முருகனுக்கு'' என்றார். வியந்த அரசர் மீண்டும் காணிக்கைகள் அளிக்க, "இவை இறையடியார்களுக்கு'' என்றார். அங்கிருந்த சமயம் சரணாலயர் தனது குருமீது "சிகா ரத்தின மாலை' என்று பதினோரு பாடல்கள் செய்தார்.

சம்பந்த சரணாலயர் அடிபோற்றி குருவருள் பெறுவோம்.

வெற்றிலைக் காம்பே வேல்!

அந்தக் காலங்களில், ஆலயங்களில் தேவரடியார்கள் என்னும் இறைத்தொண்டு புரியும் பெண்கள் இருந்தனர். ஆலயத்தில் ஆடுவதும் பாடுவதும் அவர்களது தொழில். திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு வேண்டிய வசதிகளை ஆலய நிர்வாகமே செய்து தரும். அத்தகைய ஒரு தேவரடியார் திருச்செந்தூர் கோவிலில் பணிசெய்து வந்தாள்.

தற்போதும் திருச்செந்தூரில் அர்த்தஜாம பூஜை, திருப்பள்ளியறை விழா முடிய இரவு பத்து மணிக்குமேல் ஆகிறது. அதுபோல அப்போதும் இருந்தது. அர்த்தஜாம திருப்பள்ளி விழா நடந்தபிறகே அவள் வீடுதிரும்புவாள். அவளது வீடு ஆலயத்திலிருந்து சிறிது தூரத்தில் இருந்தது. சற்று மரங்களடர்ந்த பகுதியைக் கடந்துபோக வேண்டும். அவள் முருகபக்தை என்பதால், முருகனின் நாமங்களை- துதிகளைக் கூறியவண்ணம் வீடுதிரும்புவாள். தைரியமானவள்; சாந்தமானவள்.

ஒரு நாள் வழக்கம்போல ஆலயத்தில் பணிமுடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தாள். தேவரடியார் என்பதால் நகைகள் அணிந்திருந்தாள். இரவு நேரம்; எங்கும் இருள். அவள் நடந்து வந்துகொண்டிருந்தபோது ஒரு மரத்தின்பின் மறைந்திருந்த இரு கள்வர்கள் வெளிப்பட்டு, "உன் நகைகளைக் களைந்து கொடு. இல்லையெனில் உன்னைக் கொன்றுவிடுவோம்'' என்று கத்தியைக் காட்டி மிரட்டினர்.

"அப்படியா... இருங்கள் தருகிறேன்'' என்றவள், "சூரபத்மனை அழித்த திருச்செந்தூர் வெற்றிவேலவா' என்று மனதில் ஆழ்ந்து துதித்து, தான்போடும் வெற்றிலையை எடுத்து இரண்டு காம்புகளைக் கிள்ளி அந்த திருடர்கள்மேல் எறிந்தாள். அந்த வெற்றிலைக் காம்புகள் வேலாக மாறி அவர்களை அழித்ததாம். முருகனை மனதார வணங்கித் தன் இல்லம் திரும்பினாள். அதன் நினைவாக மறுநாள் காலை முருகனுக்கு அவள் பெயரில் அபிஷேக ஆராதனைகள் செய்தாள். இரு சிறு வேல்கள் வாங்கி உண்டியலில் செலுத்தினாள்.

கந்தபுராணத் துதியுடன் நிறைவு செய்வோமா...

"மூவிரு முகங்கள் போற்றி

முகம்பொழி கருணை போற்றி

ஏவரும் துதிக்க நின்ற

ஈராறு தோளா போற்றி

காஞ்சி மாவடி வைகும்

செவ்வேள் மலரடி போற்றி

அன்னான் சேவலும் மயிலும்

போற்றி திருக்கைவேல் போற்றி.'