ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இது காலபுருஷனின் இரண்டாவது ராசி. எனவே, கண்களை, குடும்பத்தைக் குறிக்கும் ராசி. இங்கு சந்திரன் உச்சமடைவார்.

குடும்ப விவரம்

ரிஷப ராசியினர் அன்பானவர்கள். அழகான கண்களை உடையவராக இருப்பர். இவர்களது குடும்பம் நையாண்டி பேச்சுடைய குடும்பமாக இருக்கும். தங்கை அமைதியானவளாக இருப்பாள். தாயார் மிக கண்டிப்பானவராக அமைவார். இவர்களது பரம்பரை, ஏதோ ஒருவகையில் சிறப்பும் புகழும் மிக்கதாக இருக்கும். கலையுணர்வு மிக்க வேலைகள் செய்வர். வெப்பம் கலந்த வியாபாரம் செய்வர். சிலர் பிறரிடம் பழகும்போது கடுமை காட்டி, இன்முகமின்றிப் பழகுவர். சிலரது வாழ்க்கைத்துணை, சற்று பொல்லாதவராக அமைவார். சிலரது லட்சியம் சிலசமயம் சறுக்கலைத் தரும். தந்தை சோம்பலுடன், அதிக நேரம் தூங்குபவராக அமைவார். தொழில் பார்க்குமிடம் அழுக்கு, பிசுக்கு நிறைந்ததாக இருக்கும். பலரது மூத்த சகோதரர் நியாய தர்மம் பேசியே வீணாகப் போவார். திருமணம், அனேகம் பேரை வெளியூர், வெளிநாடு செல்லவைக்கும்.

இதுதான் ரிஷப ராசியின் பொதுவான ஜாதக அடிப்படை. இதில் பிறந்தநேர கிரக மாற்றத்தைப் பொருத்து, குடும்ப உறுப்பினர்களின் சுபாவம் சற்று முன்னே பின்னே அமையும்.

Advertisment

குரு இருக்குமிடப் பலன்

இதுவரையில் ரிஷப ராசிக்கு 9-ஆமிடத்தில் இருந்த குருபகவான் தற்போது கும்பமென்னும் 10-ஆமிடத்திற்குப் பாதைமாற்றி அமர்கிறார்.

"10-ஆமிடத்தில் ஒரு பாவியாவது இருக்கவேண்டும்' என்பது ஜோதிட வாக்கு. உங்களின் 10-ஆமிடத்தில் புண்ணிய குருவே அமர்ந்துள்ளார். குரு ரிஷப ராசிக்கு 8 மற்றும் 11-ன் அதிபதி. இந்நிலை பெற்ற குரு 10-ல் அமரும்போது தொழில் நிலையைப் பெருக்குவார் என்பதில் சந்தேகமில்லை. எனினும் குரு 8-ன் அதிபதியுமாவதால், தொழிலில் சற்று மறைவுத் தன்மையான செயல்கள் நடக்கும். தொழில் ஆரம்பிக்க லஞ்சம் கொடுக்கவேண்டியிருக்கும். அல்லது கள்ளக் கணக்கு எழுத வேண்டியிருக்கும். தொழில் வரியைக் குறைத்துக் கட்ட, சில குறுக்குவழிகளைச் செய்யவேண்டியிருக்கும். சில பத்திரங்கள், தஸ்தாவே ஜுக்களைப் பதுக்க வேண்டியிருக்கும். குறுக்குவழிகள் அனைத்தையும் பெருக்கி, தொழிலை விரிவுபடுத்த வேண்டிவரும்.

Advertisment

இவ்வளவையும் குரு 8-ஆம் அதிபதியாகி செய்வார். ஏனெனில் அவரே 11-ஆம் அதிபதியாகவும் இருப்பதால், இதனை இதன்மூலம் ஒளித்துச் செய்து, தொழில் லாபத்தைக் கொண்டுவந்துவிடுவார். இதுவே குருவல்லாது வேறுகிரகம் 8-ஆம் அதிபதியாக இருப்பின், நான்கு வெட்டு, எட்டு குத்து, பத்து கொலை, நூறு கடத்தல் என அனைத்தையும் பரபரவென்று செய்திருக்கும். ஆனால் குரு, இந்த கள்ளக் கணக்கு எழுத வைப்பதுதான் அவர் சார்ந்து பெரிய கெட்ட பழக்கம்! இருக்கும் பாவாதிபதியின் வேலையையும் அவர் செய்துதானே ஆகவேண்டும்? ஆக ஏதோவொரு வகையில் உங்கள் தொழில் முன்னேறும். உங்கள் கௌரவமும் அதிகமாகும். நான்கு பேர் உங்களைக் கொண்டாடி சுற்றிச்சுற்றி வருவார். இந்த கலிகாலத்தில் பலன் கிடைத்தால்தான் மனிதர்கள் மற்றவர்களிடம் குழைந்து, நெளிந்து, பாதம் தொட்டு சுற்றிவருவர். இல்லாவிடில் சொறிநாய் அளவுக்குக்கூட மதிக்க மாட்டார்கள். ஆக 10-ஆமிட குரு உங்களை பந்தாவாக இருக்கச்செய்யப் போகிறார். குரு 10-ஆமிடத்தி-ருந்து 5-ஆம் பார்வையால் 2-ஆமிடத்தையும், 7-ஆம் பார்வையால் 4-ஆமிடத்தையும், 9-ஆம் பார்வையால் 6-ஆமிடத்தையும் பார்க்கிறார்.

5-ஆம் பார்வைப் பலன்

குரு தனது 5-ஆம் பார்வையால் 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். 2-ஆமிடம் என்பது வாக்கு ஸ்தானம். வாக்கு சுத்தம் என்றால் வாழ்வும் சுகந்தம்தான். பொய் பேசாதவர்கள், சொன்ன சொல்லைக் காப்பாற்றுகிறவர்கள், காசு பண விஷயத்தில் நேர்மையானவர்களை இந்த உலகம் தனி மரியாதையோடு மதிக்கும். இப்போது ரிஷப ராசியின் 2-ஆமிடத்தை குரு பார்ப்பதால், இந்த மரியாதையை குரு பகவான் உங்களுக்கு தாரளமாக வழங்குவார். இவ்வளவு நாள் எப்படியிருந்தாலும், இப்போதைய குருபார்வை உங்களின் வாக்கைக் காப்பாற்ற உதவும். வாக்கு நாணயம் என்பது பெரும்பாலும் பண விஷயமாகத்தான் இருக்கும். எனவே, உங்கள் பணவரவு அதிகரிக்குமென்று தெரிகிறது. உங்கள் பணவரவு எதிர்பாராத லாபம்மூலம் கிடைக்கலாம். அல்லது முதலீட்டு "ரிட்டர்ன்ஸ்' ஆக அமையலாம். வியாபாரத்தில் கிடைக்கும் அதிக லாபம் காரணமாகவும் பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலருக்கு திருமணம் நடந்து, மாமனார் வீட்டிலிருந்து வண்டி வண்டியாக வரதட்சணை வரக்கூடும். குரு பார்வை பெறுவதால், பேச்சில் உறுதித்தன்மை வெளிப்படும். இந்த ஆற்றலான பேச்சால் வழக்கறிஞர், ஜோதிடர், ஆசிரியர், பேராசிரியர், அரசியல் பேச்சாளர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிகள் போன்ற தொழில் செய்வோர் கம்பீரம் பெறுவர். ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆதாயம் பெறுவர். அதுபோல் வங்கி சேவையில் இருப்போர் நலன் காண்பர். உங்கள் குடும்பத்தில் இதுவரையில் இருந்த குழப்பங்களை குரு அழகாகத் தீர்த்துவைப்பார். கண்களின் பார்வை பலம் பெறும். முகம் ஜொலிஜொலிக்கும். அசையும் சொத்துகளை வாங்குவீர்கள். 2-ஆமிடம் என்பது உணவுக்கான இடம். குரு கொழுப்பைக் குறிப்பவர். எனவே சத்தான உணவுகளை சாப்பிட ஆரம்பிப்பீர்கள். வருமானத்தை இன்னும் இன்னும் எவ்வாறு பெருக்கலாம் என்ற சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கும்.

7-ஆம் பார்வைப் பலன்

ரிஷப ராசியின் 4-ஆமிடமான சிம்மத்தை கும்ப குரு தனது ஏழாம் பார்வையால் நோக்குகிறார். கும்பத்திற்குள் குரு "என்ட்ரி' ஆனவுடன், ரிஷப ராசிக்காரர்களுக்கு கை, கால், மனம் எல்லாம் பரபரவென்றிருக்கும். "கிடக்கறது கிடக்கட்டும்; கிழவியைத் தூக்கி மனையில் வை' என்ற கதையாக, கடனை உடனை வாங்கி ஒரு வீட்டை வாங்கிவிட்டுதான் மறுவேலை என்று தேடலில் இறங்கி, வீடும் வாங்கிவிடுவீர்கள். அங்குதான் நிற்கிறார் ரிஷபக்காரர்! ஆம்; இந்த கும்ப குரு எந்தவித வாழ்வுப் படிகளில் உள்ளவர்களையும். அவரவர் நிலைக்கேற்ப வீடுவாங்க வைத்துவிடுவார். மேலும் விவசாய நிலங்கள், வயல், பண்ணை, தோட்டம், பம்ப்செட், கிணறு, குட்டை என இவற்றையும் கும்ப குரு கொடுப்பார். ரிஷபப் பெண்கள் தாயாகும் பாக்கியம் பெறுவர். ரிஷப ராசித் தாயாரின் உடல்நலன் மேன்மை அடையும். உங்கள் வீட்டில் தண்ணீர் பற்றாக்குறை தீரும். மாணவர்களின் கல்வி ஈடுபாட்டை குரு பகவான் அதிகரிக்கச் செய்வார். அரசு சார்ந்த வாகனம் கிடைக்கும். எனில், உங்களுக்கு அரசின் உயர்பதவி கிடைக்குமென்று அர்த்தமாகிறது. பள்ளி, கல்லூரி என கல்வி தாளாளர்களாக இருப்பவர்கள் அரசின்மூலம் ஆறுதலும் நஷ்டஈடும், முன்னேற்றமும் பெறுவீர்கள். கல்வி சம்பந்தம் கொண்டோர், அரசின் உத்தரவுமூலம் ஏற்றம் காண்பர். திரவ சம்பந்த வியாபாரிகளுக்கு குரு "லிப்ட் அப்' கொடுப்பார். அசையா சொத்துகளை வாங்கிக் குவிப்பீர்கள். பசு போன்ற கால்நடை சம்பந்த வாழ்வு கொண்டவர்கள் பெருக்கம் அடைவீர்கள். ஏதேனும் கோவிலைப் பழுதுநீக்கி புதுப்பிக்கும் செலவில் பெருமளவில் பங்குபெறுவீர்கள்.

9-ஆம் பார்வைப் பலன்

ரிஷப ராசியின் 6-ஆம் வீட்டை குரு தனது ஒன்பதாம் பார்வையால் வருடுகிறார். 6-ஆமிடம் என்பது கடன், நோய், எதிரி ஸ்தானம். குருவின் பார்வைக்கு பெருக்கும் குணமுண்டு. அப்படியாயின் கடன் பெருகுமா எனில், பதில் "ஆம்' தான். எனினும் மற்ற கிரகப் பார்வைக்கும், குரு பார்வைக்கும் வித்தியாசம் உள்ளது. குருவின் பார்வை கடன் வாங்கச் செய்தாலும் அது சுபக் கடனாகவே இருக்கும். முதலில் வீடுவாங்க கடன் பெறுவீர்கள். இது முதலீட்டுக் கடன். வேலையில் சேர டெபாசிட் பணத்துக்கு கடன் வாங்குவீர்கள். இது வாழ்வு முன்னேற்றக் கடன். திருமணம் செய்ய கடன் வாங்குவீர்கள். இது சுபக்கடன். நோயிலிருந்து விடுபட கடன் வாங்கி மருந்து மாத்திரை வாங்குவீர்கள். இது ஆரோக்கியக் கடன். ஆக, இதுபோன்ற கடனை வாங்கினாலும், அதில் கிடைக்கும் நன்மை பெரிதாக இருக்கும். 6-ஆமிடம் வேலைக்குரிய இடம். எனவே இதுவரை வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை அமையும். அந்த வேலை வெளிநாட்டு சம்பந்தம் கொண்டதாகவும், நிறைய மனிதவள மேம்பாடு கொண்டதாகவும், கொஞ்சம் அரசியல் சம்பந்தம் கொண்டதாகவும் அமையும். 6-ஆமிடத்தின் ஒரு காரகமான எதிரிப் பெருக்கம் ஏற்படினும், குரு பகவான் எதிரிகளிடமிருந்து உங்களைக் காப்பாற்றிவிடுவார். 6-ஆமிடம் நோய் ஸ்தானம். அதனை குரு பார்ப்பதால் நோய் பெருகுமா எனில், இல்லை; நோய் பெருகாது. நோய்த் தொந்தரவு கொஞ்சம் ஏற்பட்டாலும் அது கட்டுக்குள் வந்துவிடும். இதற்குக் காரணம் குரு உங்கள் எட்டாம் அதிபதியும் ஆவார். 6-ஆமிடத்தில் குரு நட்சத்திரமான விசாகம் ஓடுகிறது. எனவே, நோய் சிறிது தலை காட்டினாலும், குரு அதன் தலையில் தட்டி உட்கார வைத்துவிடுவார். வயிற்றில் அஜீரணக் கோளாறுகள் அவ்வப்போது வந்துபோகும்.

பொதுப் பலன்கள்

குருவின் பார்வை தன ஸ்தானம், சுக ஸ்தானம், ருண, ரோக ஸ்தானம் ஆகியவற்றில் பதிகிறது. இதிலிருந்து ரிஷபத்தார், வீடு வாங்க கடன் வாங்கவும், அந்த கடனை அடைக்கவும் முடியுமென நிரூபணமாகிறது. அவர் 2-ஆமிடத்தைப் பார்ப்பதால், வாங்கும் கடனால் கஷ்டமிராது எனவும், பணப் பெருக்கத்தின்மூலம் அந்த சுபக் கடனை எளிதில் அடைத்துவிடலாம் என்றும் தெரிகிறது. 6-ஆமிடம் வட்டியைக் குறிப்பதால், உங்களில் பலர் பெருகும் பணத்தை கடன் கொடுத்தோ, வங்கியில் முதலீடு செய்தோ, வீடு வாங்கி, அதில் வாடகை வாங்கவோ செய்ய இயலுமென தெரிகிறது. மேலும் வேலை கிடைப்பதாலும், தொழில் மேன்மையானாலும் இந்த கும்ப குரு ரிஷபத்தாருக்கு நன்மையே தருவார். ரிஷபத்தாருக்கு கும்ப குரு 60 சதவிகித நன்மை தருவார் என எதிர்பார்க்கலாம்.

கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சி உங்களை மிகவும் ரிலாக்ஸ்டாக- நிம்மதியாக இருக்கச் செய்யும். மேலும் நான்கு பேர் முன்னால் சற்று பெருமைப்பட இருக்க வைக்கும். அது வீடு, வாகனம் வயல் வாங்கியதாலோ, உங்கள் பெற்றோரின் மகிழ்ச்சியான ஆசிர்வாதத்தினாலோ என ஏதோ ஒரு நிறைவான மகிழ்வில் திளைப்பீர்கள். உங்களில் ஒருசிலர் நண்பர்களின் அவசரத் தேவைக்கு அனைத்துமாக உதவ இயலும். அதன்பொருட்டு மனப்பூரிப்பு உண்டாகும். உங்களின் உழைப்பு மனிதநேயம் மிக்கதாக இருக்கும். இந்த திறமை நீங்களே எதிர்பாராத அரசு கௌரவத்தைக் கொண்டுவந்து சேர்க்கும். வயல்கள் சூழ்ந்த பசுமையான இடத்திலுள்ள சிவன் மற்றும் கந்தனை வணங்கவும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

கும்ப குரு உங்களுக்கு நல்ல விவேகத்தைக் கொடுப்பார். இதன்மூலம், "இதனை இவன்கண் விடல்' என்பதுபோல் மனிதர்களைப் பிரித்தறியும் சக்தி கிடைக்கும். இதனால், தவறான நபர்களிடம் எச்சரிக்கை உணர்வோடு நடந்துகொள்வீர்கள். தொலைக்காட்சி, தகவல் தொடர்பு, மனிதவள மேம்பாடு எனும் துறைகளில் பணிபுரிவோர், இந்த உள்ளுணர்வு தரும் சமிக்ஞைகளால் எச்சரிக்கை அடைந்துவிடுவீர்கள் குறிப்பாக ரோகிணி நட்சத்திரப் பெண்களுக்கு இது சற்று அதிகமாக வருவதால், இவர்கள் தங்கள் தொழில் சார்ந்த எண்ணம் நிறைவேறும்போது, வரக்கூடிய இடர்ப்பாடுகளையும், அவமானங்களையும் முதலிலேயே உணர்ந்து, அதிலிருந்து விலகிவிடுவர். குரு, இந்த ஆற்றலை கும்பத்திலிருந்து கொடுத்து உதவுவார். குளிர்ச்சியான இடத்திலிருக்கும் அம்பாளை வணங்கவும்.

மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு வியாபார நுணுக்கத்தைக் கற்றுத் தரும். அப்படியென்றால் என்ன? வியாபாரத்தில் யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுத்தால் காரியம் நடக்கும்- யாரைப் பிடித்தால் வியாபாரம் மேன்மையடையும்- யாரைப் பகைத்துக் கொள்ளக்கூடாது- எதைச் செய்தால் வெகு லாபம் வரும் என்பன போன்ற விஷயங்களைக் கற்றுத் தருவார். "குருப்பெயர்ச்சி இதெல்லாமுமா கற்றுத் தரும்' என்று கேட்கலாம். குரு ரிஷப ராசியின் எட்டாம் அதிபதியல்லவா? அவர் திருட்டு, கொலை, கொள்ளை போன்ற அளவுக்கு சொல்லித்தர மாட்டார். ஆனால் நாசுக்காக லாபம் சம்பாதிப்பது எப்படி என சொல்லித்தருவார். அதனை சட்டென்று பிடித்துக்கொள்வது உங்கள் திறமை. பிறகு வெளியூர், வெளிநாட்டு வரனுடன் திருமணம் செய்துவைப்பார். வயல், தொழுவம் நிறைந்த இடத்திலுள்ள வள்ளி, தெய்வானை, முருகனை வணங்கவும்.

பரிகாரங்கள்

வயல்வெளிகளின் நடுவிலுள்ள சிவனை வணங்கவும். கஜலட்சுமியை வணங்கவும். உங்கள் 6-ஆமிடத்தை குரு பார்ப்பதால் இந்த குருப்பெயர்ச்சிக் காலத்தில் முடிந்த அளவு, முடிந்தபோதெல்லாம் தேவையானவர்களுக்கு மருந்து வாங்கிக்கொடுங்கள். அதுபோல், அவசரக் கடன் தேவையுள்ளோருக்கு உங்களால் முடிந்த பணம் கொடுத்து உதவுங்கள். நல்லவர்கள், கெடு சூழ்நிலையால் சிறைக்கோ அல்லது அவமானத் திற்கோ உட்படும்போது, உங்களால் முடியவிட்டாலும், தெரிந்த தகுதியான நபர்கள்மூலம் அவர்களுக்கு உதவவும். மரண வீடுகளில் பணியாற்றும் அதற்குரிய அந்தணர்க்கு வேண்டிய பணத்தைக் கொடுக்கவும். வியாபார லாபத்தில் ஒரு தொகையை, வாழ்வின் மிகக் கீழ்நிலையிலுள்ளவருக்கு கொடுத்து உதவவும். வாழ்வில் மிக நல்ல நிலையிலிருந்து, காலக் கொடுமையால் கீழிறங்கி விட்டவர்களை ஏளனம் செய்யவேண்டாம். அவர்கள் உதவி கேட்க கூச்சப்படுவர். எனவே அவர்கள் தேவையறிந்து, அவர்களுக்குத் தெரியாமல் கூட நீங்கள் உதவவும். குரு ரிஷபத்தின் 11, 8-ன் அதிபதியாதலால் இவ்வுதவி கூறப்பட்டது. "உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்' எனத் தொடங்கும் பஞ்சபுராணப் பாடலைப் பாராயணம் செய்யலாம். தொழில் செய்யும் இடத்திலுள்ள வயது முதிர்ந்தவர்களுக்கு, அவசர நேர உதவி செய்யவும்.