மேஷம்
இந்த மாதம் தொழில் அல்லது வியாபாரத்தில் சுறுசுறுப்பும் புதிய தெம்பும் உண்டாகும். முன்னேற்றமும் லாபமும் உண்டு என்றாலும், சிலருக்கு அரசாங்க அதிகாரிகள் தலையீடும் விசாரணைகளும் டென்ஷனை ஏற்படுத்தலாம். ஒரு காலத்தில் சர்க்காரியா கமிஷன் நோட்டீஸைப் பற்றி பத்திரிகையாளர்கள் கலைஞரிடம் கேட்டபோது, "படித்தேன்- ரசித்தேன்' என்று விமர்சனம் செய்த மாதிரி, நீங்களும் எந்தவித பரபரப்பும் அடையாமல், பதட்டமும் அடையாமல் திடமாக இருந்து எல்லாப் பிரச்சினைகளையும் சமாளிப்பீர்கள். சிலசமயம் கொடுக்க வேண்டியதைக் கொடுத்துப் பெற வேண்டியதைப் பெறலாம். கூட்டுத்தொழில் செய்கிறவர்களுக்குள் சில பிரச்சினைகள் உருவாகலாம். கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். கூட்டு முறிவுக்கும் வழிவகுக்கலாம். கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவுகள் குறிப்பிட்டபடி நடக்கும். வாக்கு நாணயம் காப்பாற்றப்படும். கூடுமானவரை கோபத்தைக் கட்டுப்படுத் திக்கொண்டு செயல்பட்டால் நினைத்த காரியத்தை நிறைவேற்றிவிடலாம். ஆரோக்கியம் வழக்கம்போல செம்மையாக இருக்கும்.
ரிஷபம்
இந்த மாதம் உங்கள் நலம், குடும்பத்தில் உள்ளவர்களின் நலம், குழந்தைகளின் நலம் எல்லாம் சீராகவே அமையும். எல்லாம் நலமாகத் திகழும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. முயற்சிகளில் தளர்ச்சி விலகி வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும். சொந்தத் தொழில் செய்கிறவர்கள் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு தொழிலையும் சிப்பந்தி களையும் கண்காணிக்க வேண்டும். கண்ணி மைக்கும் நேரத்தில் களவு போகலாம் அல்லது காணாமல் போகலாம். குறிப்பாக யாரை முழுமையாக நம்பியிருக்கிறீர்களோ அவர்களே நம்பிக்கைத்துரோகியாக மாறி உங்களுக்கு கெடுதல் செய்யலாம். வேலியே பயிரை மேய்ந்த கதையாக அமையும். குடும்பத்தில் உள்ளவர்களையும் சரி; அல்லது வெளியுலக நண்பர்களையும் சரி; அல்லது நெருக்கமானவர்கள், நண்பர்களானாலும் சரி- எல்லாரிடமும் கோபப்படாமல், ஆத்திரப்படாமல், நயந்து பேசி நடந்துகொண்டால் விபரீதத்தைத் தடுக்கலாம். காரியம் பெரிதா- வீரியம் பெரிதா என்றால், காரியம் ஆகவேண்டுமானால் கழுதையின் காலைப்பிடிப்பதும் தவறில்லை என்று நடந்துகொள்ளவேண்டும்.
மிதுனம்
பொருளாதாரத்தில் நெருக்கடிநிலை காணப்பட்டாலும் எப்படியோ அதைச் சமாளித்துவிடலாம். இவரிடம் வாங்கி அவரிடம் கொடுத்து, அவரிடம் வாங்கி இவரிடம் கொடுத்து- இப்படியே நாணயம் கெடாமல் சமாளிக்கலாம். சிலசமயம் கடன் வாங்கிக் கடனைக் கொடுப்பதால் இரு பக்கமும் வட்டி நட்டமாகலாம். ஒருசிலர் பழைய தவணை முடிவதற்குள் புதுத்தவணை வாங்கி பழைய தவணை பாக்கியைக் கழித்து மீதியை வாங்குவதாலும் நட்டம் ஏற்படலாம். பெரும்பாலும் கை முதலீடு இல்லாமல் செயல்படுகிறவர்கள் இப்படித்தான் "நனைத்து சுமக்கிறவர்களாக' இருப்பார்கள். சுமை (பாரம்) அதிகமாகவே அமையும். கடிதப்போக்குவரத்து மூலமாக நல்ல தகவல்கள் வரலாம் அல்லது லாபங்கள் பெருகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் மன ஒற்றுமையும் உண்டாகும். "நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்' என்பதற்கு இணையாக விளங்கும். பொதுவாக உறவுகள் மேம்பட விட்டுக்கொடுத்து நடக்கவேண்டும். விட்டுக்கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை. எல்லாருக்கும் ஏற்படும் "ஈகோ'வால்தான் பிரச் சினைகளுக்கு பிள்ளையார்சுழி போடப்படுகிறது.
கடகம்
இந்த மாதம் எல்லாவற்றிலும் உங்களுக்கு டென்ஷனும் ஈகோவும் அதிகமாக ஏற்படும். அதற்கு நியாயமான காரணம் இருக்குமா என்றால் இருக்காது. அதாவது வறட்டு கௌரவம் அல்லது போலி கௌரவம் ஆட்டிப்படைக்கும்; கண்ணை மறைக்கும்! கருப்புக்கண்ணாடி அணிந்து பார்த்தால் பார்க்கும் பொருட்கள் எல்லாம் கருப்பாகத்தான் தெரியும். வெள்ளைக் கண்ணாடி அணிந்து பார்த்தால் உள்ளது உள்ளபடி தெரியும். உலகத்தில் நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார் என்று ஒரு "சென்சஸ்' கணக்கு எடுத்துவரும்படி குரு துரோணர், சிஷ்யர்கள் தருமரிடமும் துரியோதனிடமும் சொல்லியனுப்பினார். தருமர், "கெட்டவனிடமும் ஒரு நல்லது உள்ளது. எல்லாரும் நல்லவர்தான்' என்றாராம். துரியோதனனோ, "எல்லாருமே கெட்டவர்தான்- நல்லவரே இல்லை. நல்லவர் என்று போனால் அவரிடமும் கெட்டது இருக்கிறது' என்றானாம். ஆக, பார்க்கும் பார்வை- அவரவர் மனதைப் பொருத்தே அமையும். துணி வெளுக்க சோப்பு உண்டு. மனம் வெளுக்க என்ன உண்டு? பக்குவம் வேண்டும்.
சிம்மம்
தொழில்துறையில் போட்டியும் பொறாமையும் அதிகமாக இருக்கும். அவற்றைக் களையெடுக்க வேண்டும். யாரை நம்புவது- யாரை நம்பக்கூடாது என்பதே புரியாத புதிராக இருக்கும். சிலசமயம் சிலரிடம் பழகிப்பார்த்த பிறகுதான் நல்லவரா இல்லையா என்பதே விளங்கும். கிட்டப் போனால் முட்டப்பகை! தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளுமையாகத் தெரியும். சிலருடைய அனு பவத்தில், கட்டிய மனைவியும் பெற்ற பிள்ளைகளுமே உங்களை நம்பத்தகாத "லிஸ்டில்' வைத்து எடை போடுகிறபோது, மற்றவர்களின் விமர்சனத்தைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? பொருளாதாரத்தில் பாதிப்புக்கு இடமில்லை. இருந்தாலும் தேவைகளை நிறைவேற்ற கையிருப்பை எடுத்து செலவிட முடியாது. பேங்கில் பணம் இருந்தாலும் பேங்க் விடுமுறை அல்லது ஸ்டிரைக் என்று வரும்போது பணம் எடுக்கமுடியாத நிலையாகி விடுமல்லவா? அப்போது அக்கம்பக்கம் புரட்டி தேவையை நிறைவேற்றிவிடுவீர்கள் அல்லவா! ஆக, தேவைகள் திட்டமிட்டபடி நடக்கும். ஆனால் எந்த முறையில் எந்த வகையில் எப்படி நடக்கும் என்பது இறைவன் திட்டம்! நினைப்பது மனிதன் நிலை- நிறைவேற்றுவது இறைவன் கருணை!
கன்னி
இந்த மாதம் குடும்பம், பொருளா தாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். இருந்தாலும் தொழில்துறையிலும் வியாபாரத்திலும் தெளிவான நிலையும், குறைவில்லாத நிலையும் இருப்பதால் பொருளாதாரப் பிரச்சினைகளை எளிதாக சமாளித்துவிடலாம். குடும்பத்தில் சிற்சில குழப்பங்களும் பிரச்சினைகளும் காணப்பட்டாலும், உங்கள் பொறுமை யாலும் புத்திசாலித்தனத்தாலும் கெட்டிக் கார சாமர்த்தியத்தாலும் அவற்றைச் சமாளித்து சோதனைகளை வென்று சாதனைகளைச் செய்யலாம். நவகிரகங்கள் மாதிரி குடும்பத்தில் உள்ளவர்கள் ஆளுக்கொரு திசையில் திரும்பி நின்று ஆளுக்கொரு கருத்துகளைக் கூறிவந்தா லும், திட்டமிட்ட காரியங்களும் செயல்களும் முறையாக நடந்துவிடும். திருமணமாக வேண்டியவர்களுக்குத் திருமணம் பேசி முடிக்கப்படும். வாரிசு இல்லாதவர் களுக்கு வாரிசு யோகம் அமைந்துவிடும். சுபகாரியச் செலவுகளுக்கு பணப்பற்றாக்குறை இருந்தால், அக்கம் பக்கம் அறிந்த வர்கள், தெரிந்தவர்கள் வகையில்- நண்பர் கள் வகையில் கைமாற்றுக்கடன் வாங்கி நிறைவேற்றலாம்.
துலாம்
இந்த மாத முற்பகுதியில் அலைச்சலும் அகால போஜனமுமாக இருக்கும். சிலருக்கு அரைகுறைத் தூக்கமும் அதனால் உடல் சோர்வும் அசதியும் காணப்படலாம். ஜாதகரீதியான கிரக தசாபுக்திக்கேற்ற பரிகாரமும் செய்துகொள்ள வேண்டும். நோய்க்கான மருத்துவ சிகிச்சையும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏழரைச் சனியில்கூட இப்படிப்பட்ட அனுபவங்கள் ஏற்படவில்லை. சனி விலகியபிறகு நடக் கும் சங்கடங்கள்தான் தாங்கமுடியாததாக அமைகிறது. 3-ல் உள்ள சனி, செவ்வாய் சேர்க்கைப் பலனாக பங்காளிகள் அல்லது உடன்பிறப்புக்கள் வகையில் பல பிரச்சினைகளைச் சந்திக்க நேரும். சிலர் மற்றவர்களுக்காக வாங்கிக்கொடுத்த கடன் (ஜாமீன் பொறுப்பேற்று வாங்கிக் கொடுத்ததை) அவர்கள் திருப்பிக் கொடுக்காமல் தாமதப்படுத்துவதால், வாங்கிக் கொடுத்த இடத்தில் நீங்கள் நெருக்கடிக்கு ஆளாகவேண்டிய அவசியம் ஏற்படும். உங்கள் நாணயத்தைக் காப்பாற்ற குறுக்குவழிகளைக்கூட கையாளலாம். எப்படியோ நிலைமையைச் சமாளித்தால் சரிதான்.
விருச்சிகம்
இந்த மாதம் பாதச்சனி- குடும்பச்சனி செவ்வாய் சம்பந்தம் என்பதால், பொருளாதாரத்தில் அல்லது குடும்ப உறவில் பல பிரச்சினைகள் உருவாகலாம். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் பொருள் இழப்பு, நெருங்கியவர் பிரிவு போன்ற பாதிப்புகளையும் சந்திக்கலாம். அப்படிப்பட்டவர்கள் சிவன் கோவிலில் ருத்ரஹோமம் வளர்த்து சுவாமி, அம்பாளுக்கு ருத்ராபிஷேக பூஜை செய்யவேண்டும். சந்திர தசையோ சந்திர புக்தியோ நடந்தால் தவறா மல் மேற்படி தசாபுக்திக் காலம் முடியும்வரை திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்துக்கு காலையில் பாலாபிஷேகம் செய்து வழிபட வேண்டும். ராகு தசையோ ராகு புக்தியோ நடந்தால் சூலினிதுர்க்கா ஹோமம் செய்து சம்பந்தப்பட்டவர் அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். சிலருக்கு மாதப் பிற்பகுதியில் பெரும் செல்வந்தரின் தொடர்பு உண்டாகும். அவரது உதவியால் உங்களின் பணக்கஷ்டமும் விலகும். மனக்கஷ்டமும் விலகும். ஒருசிலர் ஸ்பெகுலேஷன் வழியில்- குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க விரும்பலாம். சிலர் மனைவிவழியில் அல்லது தாயார் அல்லது உடன்பிறப்புக்கள் வகையில் நகைகளை வைத்து தங்கள் பணப்பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வார்கள்.
தனுசு
ஜென்மச்சனி- செவ்வாய் சேர்க்கை இருந்தாலும் குருவருளும் திருவருளும் உங்களுக்குப் பரிபூரணமாக இருப்பதால் எல்லா சங்கடங்களையும் சமாளித்துவிடலாம். சிலர் வைத்தியச்செலவுகளை அனாவசியமாக சந்திக்க நேரலாம். உதாரணமாக, வாய்வுத் தொல்லையால் ஏற்படும் அவஸ்தைகளை நிவர்த்தி செய்ய ஒவ்வொரு டாக்டரைச் சந்தித்து, ஒவ்வொரு ரிப்போர்ட்டைக் கேட்டு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பயமுறுத்தலாம். இது ஜென்மச்சனியின் வேலை. யார் அட்வைஸையும் நம்பி அறுவை சிகிச்சை போன்ற மேஜர் ட்ரீட்மென்ட் செய்யவேண்டாம். ஆயுர்வேதம் அல்லது ஹோமியோ சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும்மேல் தன்வந்திரி மந்திரத்தை ஜெபம் செய்யவும். தன்வந்திரி பகவானுக்கு அபிஷேக பூஜை செய்யவும். சிலர் உத்தியோகம் சம்பந்தமாக அடிக்கடி "கேம்ப்' போகலாம். அலைச்சல் என்றாலும் பயன்தரும் அலைச்சல்தான்! தொழில் செய்கிறவர்களுக்கு முன்னேற்றமான காலம். கிளைகள் ஆரம்பிக்கலாம். புதிய தொழில் தொடங்கலாம். குடும்ப உறவு, நண்பர் உறவு பலமாகத் திகழும்.
மகரம்
இந்த மாதம் பெரும் பணக்காரரின் அறிமுகமும் தொடர்பும் உங்களில் சிலருக்கு அனுகூலமும் ஆதாயமுமாக அமையும். அதேபோல அரசியல் பிரமுகர்களின் ஆதரவும் உங்களுக்கு நன்மையாக அமையும். வழக்குப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். சிலருக்கு இடத்துப் பிரச்சினை தலைவலியாக இருக்கும். சிலர் வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்து மூன்று மாதத்தில் பத்திரப்பதிவு செய்வதாக அக்ரிமென்ட் போட்டும், ஆறுமாதம் தாண்டியும் பணம் புரட்டமுடியாமல் மனம் தவிக்கும். சிலர் பேங்க் லோன் அப்ளிகேஷன் போட்டும், லோன் பாஸ் ஆகாமல் கிணற்றில் போட்ட கல்போல நாள் ஓடும். ஆக, அட்வான்ஸ் கொடுக்க வெளியில் வட்டிக்கு வாங்கிக் கொடுத்தவர்கள் பாடு- திரிசங்கு சொர்க்கம் போல தர்மசங்கடத்தில் சிக்கித்தவிக்கலாம். இந்த மாதிரி நிலையுள்ளவர்கள் பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று பூமிநாத சுவாமிக்குப் பூஜைபோட வேண்டும். அத்துடன் கும்பகோணம் அருகில் (குடவாசல் போகும் பாதை) திருச்சேறை சென்று கடன் நிவர்த்தித் தலத்தில் பூஜை செய்யலாம். பொதுவாக மலைபோல வரும் எல்லாப் பிரச்சினைகளும் பனிபோல விலகிவிடும்.
கும்பம்
இந்த மாதம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அரசு உத்தியோகஸ் தர்களுக்கும், தனியார்துறை ஊழியர்களுக்கும் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற நன்மைகள் உண்டாகும். நீண்டகாலமாக நிறைவேறாமல் தடைப்பட்டுவந்த திருமண முயற்சிகள் இப்போது கைகூடிவரும். அதே போல காரண காரியம் தெரியாமல் உடலை வருத்திய நோய் நொடிகளும் சூரியனைக் கண்ட பனிபோல விலகியோடிவிடும். வீடு அல்லது வாகனம் வாங்க வங்கிக்கடன் எதிர்பார்த்து முயற்சி செய்தவர்களுக்கு எதிர்பார்த்ததுபோல கடன் கிடைக்கும். திட்டங்கள் கைகூடும். பந்தபாசங்களுக்கு பங்கமில்லை. தொழில்துறையில் புதிய ஆர்வமும் அக்கறையும் ஏற்பட்டு, தீவிர முயற்சி செய்து திட்டங்களை நிறைவேற்றி திருப்தியடையலாம். உதவிகள் கேட்டு வந்த உறவினர்களின் விருப்பங்கள் நிறைவேறாமல் வருத்தப்பட்டு ஒதுங்கிப்போனவர்கள், இக்காலகட்டத்தில் மனம் திருந்தி- பழைய கருத்து வேறுபாடுகளை மறந்து நேசக்கரம் நீட்டி நெருங்கிவந்து உறவுகொண்டாடுவார்கள். நீங்களும் மறப் போம்- மன்னிப்போம் என்று ஏற்றுக் கொள்வது அவசியம்! விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை.
மீனம்
கோட்சாரக் கிரகங்கள் சாதகமாக இருப்பதால் உங்கள் விருப்பங்களும் எண்ணங்களும் முழுமையாக நிறைவேறும். ஒருசில காரியங்களில் உடனுக்குடன் முழுமையான பலனும் வெற்றியும் கிடைக்கும். ஒருசில காரியங்களில் கொஞ்சம் தாமதமான பலனாகக் கிடைக்கும். பொதுவாக தோல்விக்கும் ஏமாற்றத்துக்கும் இடம் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்போருக்கு உன்னதமான பலன்களும், எண்ணம்போல முன்னேற்றமும் உண்டாகும். சொந்தத் தொழில் செய்கிறவர்களுக்கு லாபமும் அபிவிருத்தியும் ஆதாயமும் அனுகூலமும் ஏற்படும். சிலர் புதிய கூட்டாளிகள் சேர்க்கையால் புதிய தொழில் முயற்சியில் ஈடுபடலாம். ஆரோக்கியத்தில் பிரச்சினையில்லை. இதுவரை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட நோய்த்தொல்லையும் வைத்தியச் செலவும் முழுமையாக விலகி முழுமையான ஆரோக்கியமும் சுகமும் உண்டாகும். எவ்வளவு புதிய புதிய செலவுகள் வந்தாலும், அவற்றை சந்திக்கவும் சமாளிக்கவும் வரவுகளும் வந்துசேரும்.