தை அமாவாசை 4-2-2019
அமாவாசைத் திதியிலேயே தலைசிறந்தது எதுவென்றால், அது தை அமாவாசை திதிதான்.
காரணம், உத்தராயனத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் இதற்குத் தனிச்சிறப் புண்டு.
"பித்ருக்கள்' என்று அழைக்கப்படும் நமது மூதாதையர்கள் தை அமாவாசை நாளன்று, தங்களுடைய சந்ததியினர் தங்களுக்குத் தர்ப்பணம்விட்டு, தங்களின் பசியைப் போக்குவார்கள் என்று கருதி, புனித நதியோரம், புனிதமான நீர் நிறைந்த குளக்கரைகள், அலைபாயும் கடற்கரை போன்ற இடங்களில் வந்து காத்து நிற்பார்கள்.
அப்போது நாம் நம்முடைய மூதாதையர்களுக்கு தர்ப்பணம்விட்டு, அன்னதானம், பிற தானதர்மங்கள் செய்தால் அவர்கள் மனமகிழ்ந்து நம்மை ஆசிர்வதித்துச் செல்வார்கள். அந்த ஆசிர்வாதமே நம்மை துன்பங்கள், துயரங் களின்றி மேம்படுத்தி, நல்ல வாழ்வு அமையச் செய்யும்.
இவ்வளவு சிறந்த ஆசிர்வாதத்தை தை அமாவாசையில் பெறுவதற்கும், நல்வாழ்வு அமைவதற்கும் சிறந்த குளமாக விளங்குவது திருவள்ளூரிலுள்ள "ஹ்ருத்தாபநாசினி' என்னும் குளமாகும். தை அமாவாசை தர்ப் பணத்திற்கென்றே இறைவனால் படைக்கப் பட்ட இக்குளம் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆலயத்தைச் சேர்ந்ததாகும். ஊரின் நடுவில் அகன்று பெரிய குளமாகக் காட்சி யளிக்கிறது. சிறப்பாகப் பராமரிக்கப்படுகிறது.
சகல வித்தைகளையும், வேத சாஸ்திர சம்பிரதாயங்கள் முழுவதையும் கற்றுத் தேர்ந்த "சாலிஹோத்ரன்' என்ற ஞானி, மகாவிஷ்ணுவை நோக்கித் தவமிருந்து பகவானை நேரில் காணவேண்டுமென்று அடர்ந்த காடுகள், தெளிந்த பளிங்கு போன்ற நீர் நிறைந்த குளம் ஒன்றைத் தேடிவந்து, தமிழ் நாட்டில் இயற்கை வளம் நிறைந்த சோலை நடுவில் ஒரு குளத்தைத் தேர்ந்தெடுத்தார்.
அக்குளம்தான் இந்த திருவள்ளூர் குளமாகும்.
புராணகாலத்தில் இக்குளம் ஒரு காட்டுப் பகுதியில் இருந்துள்ளது. பின்னாளில் இக்குளம் அமைந்த இடத்தில்தான் வீரராகவப் பெருமாள் ஆலயம் தோன்றியதாக வரலாறு கூறுகிறது.
ஒருசமயம் கிருதயுகத்தில் "ப்ரத்யும்ன மகாராஜா' என்னும் அரசன், தனக்குக் குழந்தை இல்லையென்பதால், குழந்தை வரம் கேட்டு மகாவிஷ்ணுவை நோக்கி, வலதுகால் கட்டைவிரலை மட்டும் ஊன்றி நின்று மகா உக்ரமான நிலையில் தவமிருந்தான். அவனது அற்புதமான தவத்தை மெச்சி மகாவிஷ்ணும் அவன்முன் தோன்றினார். பகவானை நேரில் கண்ட அரசன் அவரை வணங்கி சேவித்து, ""பகவானே! எனக்குப் பிறகு என்னுடைய வாரிசாகப் பிள்ளைவரம் வேண்டும். அதே சமயம், தை அமாவாசை நாளான இன்று, பகவான் இங்கு, இந்தக் குளத்தருகே எழுந்தருளி யுள்ளதால், எல்லாப் புண்ணிய தீர்த்த நீரைக் காட்டிலும் இந்த குளத்து நீருக்குத் தனி மகிமை அளிக்கவேண்டும். இக்குளத்து நீரில் குளித்தெழுந்தால் அனைத்துப் பாவங்களும் நீங்கவேண்டும். பித்ரு தர்ப்பணம் செய்ய உகந்த இடமாக இக்குளமிருக்க அருள வேண்டும்'' என்று கேட்டுக்கொள்ள, பகவானும் அவ்வாறே அருளினார்.
இதேபோல கிருதயுகத்தில் ஒரு ஏழை அந்தண வாலிபன், பிறப்பிலேயே ஏராளமான நோய்களுடன் வாழ்ந்து வந்தான். தன் நோய் தீர பல புண்ணிய தீர்த்தங்கள் தேடிப்போய் தீர்த்தமாடினான்; பயனில்லை. அப்படியே வடநாட்டிலிருந்து தென்னாட்டிற்கு வந்தான். வழியில் ஒரு காட்டுப் பகுதியில் அவன் மயங்கி விழுந்துவிட்டான். அவனை காட்டுவாசி ஒருவன் தூக்கிச் சென்று தன் குடிலில் அமர்த்தி, இடமளித்து, உணவளித்து வந்தான். உண்ட இடத்திற்கே துரோகம் செய்தான் அந்த அந்தண வாலிபன். அதாவது அந்த வேடுவனின் மகளை அனுபவித்து அவள் கற்பைச் சூறையாடிவிட்டான். அதனால் ஆத்திரமடைந்த காட்டுவாசி அந்த அந்தண வாலிபனை வயிறெரிய சாபமிட்டு, இருவரையும் துரத்தி விட்டான். அந்த அந்தண வாலிபன் திருவள்ளூரி லுள்ள ஹ்ருத்தாபநாசினி குளத்தின் அருமை, பெருமை அறிந்து, ஒரு தை அமாவாசையன்று இக்குளத்து நீரில் மூழ்கியெழுந்து தன் பாவத்தையும், சாபத்தையும் போக்கிக் கொண்டான்.
ஒரு காலகட்டத்தில் அவன் முதிர்வடைந்து மரணமும் எய்தினான். எமதூதர்கள் அவனை சவுக்கால் அடித்து இழுத்துக்கொண்டு போனார்கள். அவனை எமதர்மராஜன் முன்பு நிறுத்தி, ""இந்த துரோகி தனக்கு அடைக்கலம் கொடுத்த ஒரு நல்லவரின் மகளைக் கெடுத்து அனுபவித்த பெரும் துரோகி'' என்றுகூறி அவனை நரகத்தில் தள்ள அனுமதி கோரினார் கள். ஆனால் எமதர்மராஜன், ""இவன் தர்மம் தவறியவனாக இருந்தாலும், தை அமாவாசை யன்று ஹ்ருத்தாபநாசினி திருக்குளத்தில் நீராடியதால், சர்வ பாவத்தினின்றும் நீங்கப் பெற்று மோட்சமடைகிறான்'' என்று தீர்ப்பளித் தார். எனவே எப்படிப்பட்ட பாவத்தைச் செய்தவனுக்கும் இக்குளத்து நீர் பாவ மன்னிப்பளிக்கிறது என்பது இதன்மூலம் தெரிகிறது.
மனிதர்கள் மட்டுமல்ல; இறைவனுக்கேகூட இந்த குளத்து நீர் பாவத்தைப் போக்கியுள்ளது. ஒருசமயம் சர்வ சக்திகளையும் பெற்றிருந்த தக்ஷன், தனது மருமனாகிய பரமேஸ்வரனை அழைக்காமல் பெரும் யாகம் ஒன்றை நடத்தினான். தன் கணவரை அழைக்காமல் யாகம் நடத்தும் தனது தந்தைமீது அள வில்லாத கோபம் கொண்டாள் பார்வதி தேவி. தனது கோபத்தாலும், தந்தை தன்னை அவமானப்படுத்தியதாலும், தன்னுடைய யோகமகிமையால் தன் உடலை யாக குண்டத்தில் இறக்கி தன் உயிரை மாய்த்துக்கொண்டாள். இதனையறிந்த பரமேஸ்வரன் மிகவும் கோபமடைந்து, தனது நெற்றிக்கண்ணைத் திறந்து வீரபத்திரன் என்ற வீரனை உருவாக்கி தக்ஷனை சம்ஹாரம் செய்யும்படி ஆணையிட்டார். அவனும் அப் படியே செய்தான். தவத்தில் சிறந்த தக்ஷனைக் கொன்றதால் பரமேஸ்வரனுக்கு ப்ரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. பரமேஸ்வரன் எவ்வளவோ தீர்த்த யாத்திரை சென்று தீர்த்தமாடியும் தோஷம் போகவில்லை. கடைசியாக திருவள்ளூரிலுள்ள இந்த ஹ்ருத்தாபநாசினி குளத்தில் தை அமாவாசை யன்று வந்து நீராடினார். அதன்பிறகு அவரைப் பிடித்திருந்த "ப்ரம்மஹத்தி தோஷம்' விலகியது. அன்றுமுதல் இந்த குளக்கரையிலேயே ஸ்ரீவீரராகவப் பெருமாளை தரிசித்தபடி "திருத்திரீஸ்வரர்' என்ற பெயரிலே திருக் குளத்தின் வாயு மூலையில் கோவில்கொண்டு அருள்பாலிக்கிறார்.
ஒருசமயம் வடலூர் ராமலிங்க அடிகளார், தீராத வயிற்றுவலியால் துன்பப்பட்டார்.
அவர் இந்த திருவள்ளூர் திருக்குளத்தில் வந்து தை அமாவாசையில் நீராடி, வீரராகவப் பெருமாளை தரிசித்து, "திருப்பஞ்சகம்' என்ற ஐந்து பாடல்களைப் பாடி முடித்ததும், வயிற்றுவலி தீர்ந்துவிட்டது.
பிறவியிலேயே ஊமையாக இருந்த ஒருவன், ஒவ்வொரு அமாவாசையன்றும் தை அமாவாசையிலும் தவறாமல் பல ஆண்டுகள் நீராடி வந்தான். அவனுக்கு பேசும் திறமையும், மரணத்திற்குப்பின் வைகுண்டமும் கிடைத்தது என்று வீரராகவப் பெருமாள் சரித்திரம் கூறுகிறது.
நோயாளிகள் இக்குளத்தில் தவறாமல் சில அல்லது பல நாட்கள் நீராடினால் நோய் தீருகிறது என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
வலிமையிழந்த வயோதிகர்கள், சிறுவயதுக் குழந்தைகள், நோயாளிகள் மற்றும் உடல் நலமுள்ளவர்கள் என்று யார் இந்தக் குளத்தில் நீராடினாலும் பாவம் தொலைகிறது. புண்ணி யம் கிடைக்கிறது. நோய் தீருகிறது. நல்ல நிம்மதியான வாழ்க்கை அமைகிறது.
தை அமாவாசை நாளில் கங்கை முதல் அனைத்துப் புண்ணிய நதிகளின் தீர்த் தங்களும் இக்குளத்தில் வந்து சேருகிறபடியால் அந்த நாளன்று நாம் இக்குள நீரில் மூழ்கியெழுந்து நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம்விட்டால் சகல சௌபாக்கியங்களும் நம்மைத் தேடிவரும்.
குளத்தில் இறங்கிக் குளிக்கமுடியாத வயோதிகர்களும், நோயாளிகளும் இக்குளத்து நீரைக் கண்ணால் பாத்தாலே போதும்; பாவங்கள் தீர்ந்து சகல நன்மைகளையும் பெறுவார்கள். இக்குளத்தில் நீராடினால் பரத்திலும் மோட்சமாகிய நற்கதியை அடை வார்கள்.
பிரம்மாதி தேவர்கள், வசிஷ்டர், நாரதர், ரிஷிகள், தவமுனிவர்கள் போன்றோர் இக்குளத் தில் தை அமாவாசையில் நீராடி விசேஷ பலன் களைப் பெற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாமும் நீராடி நற்கதி அடைவோம்.