காவிஷ்ணுவுக்குக் குடையாகவும் ஆசனமாகவும் விளங்குபவர் ஆதிசேஷன். விஷ்ணு அமர்ந்த, சயனித்த கோலத்தில்தான் ஆதிசேஷனைக் காணமுடியும். ஆனால் அவரது வாகனமான கருடன், எந்த நிலையில் பெருமாள் இருந்தாலும் எதிரே கைகூப்பி நிற்பார். கருட வாகன சேவையின்போதுதான் பாதி அமர்ந்த நிலையில் கருடனைக் காணலாம்.

மகாவிஷ்ணுவுக்கும் அனுமனுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஆயினும் பிரம்மோற்சவத்தில் அனுமத் வாகனம் பிரசித்தமே. எல்லா பெருமாள் கோவில் களிலும் அனுமன் சந்நிதி இருக்கிறது.

ஸ்ரீமத் பாகவதம் மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் பலவென்று கூறும். எனினும் பத்து அவதாரங்கள் பிரசித்தம். எல்லாம் தீமையை அழித்து தர்மத்தை நிலைநாட்ட எடுக்கப்பட்டவை.

சிறந்த சிவபக்தனும், சிவனிடம் ஆத்மலிங்கம் பெற்றவனும், சகலகலா வல்லவனுமான இராவணனை அழிக்க மகாவிஷ்ணு ராமாவதாரம் எடுத்தார். இராவணன் மனிதனை துச்சமாக எண்ணி னான். அதனாலேயே மனிதனாக அவதரித் தார் பெருமாள். மனித அவதாரம் என்பதால் அவர் கையில் சங்கு, சக்கரம் இல்லை. வில்லே ஆயுதம். ராமர், தான் மகாவிஷ்ணுவே என்று எப்போதும் காட்டியதில்லை.

Advertisment

இராவண வதத்திற்குப் பெரிதும் துணைபுரிந்தவர் குரங்குமுகம் கொண்ட அனுமன். இது ஏன்?

இராவணன் கயிலைக்கு சிவ தரிசனம் செய்யச்சென்றான். நந்திகேசரிடம் அனுமதி கேட்கவில்லை. அகங்காரமே காரணம். நந்தி அவனைத் தடுக்க, "குரங்கு முகம் கொண்டவனே... என்னைத் தடுக்க நீ யார்?' என்றான். கோபம்கொண்ட நந்தி, "குரங்குமுகம் கொண்டவன் உன் மரணத்துக் குக் காரணமாக இருப்பான்' என சபித்தார். இராவணன் ஆழ்ந்த பரமசிவபக்தன். பரமசிவனோ காமனை- மன்மதனையே எரித்தவர். அந்த பக்குவ நிலை அவனிட மில்லை. காமத்தாலேயே அவனழிந்தான்.

"வினாச காலே விபரீத புத்தி' என்பார் கள். அழிவு வரும்போது அறிவு மழுங்கிப் போகும். இராவணேஸ்வரன் தேஜஸைப் பார்த்து, சிவாம்சமான ஆஞ்சனேயரே வியந்தாரே!

Advertisment

வாயுகுமாரன்; அஞ்சனாதேவி சிவனை வேண்டிடப் பிறந்தமையால் சிவாம்சம் கொண்டவர் அனுமன். அவரது ஒவ்வொரு உரோமத்திலும் கோடி லிங்கங்கள் உண்டாம். "ரோம ரோம கோடி லிங்க உதரிகித' என்று அபங்கம் பாடும்!

பார்வதி சிவனைக் கேட்க, "ராம நாமமே 1,008 (ஸஹஸ்ர) விஷ்ணு நாமத்திற்குச் சமம்' என்றார். சிவபக்த இராவணனை அழித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்க, ராமேஸ்வரத்தில் சீதை மண்ணால் பிடித்த சிவலிங்கத்தை ராமர் பூஜித்தார். அனுமன் நேரம்கழித்துக் கொணர்ந்த லிங்கமும் உளது. அதற்கே முதல் பூஜை! ஏன்? அனுமனின் ஆழ்ந்த செயலில் ராமருக்குப் பெருமதிப்பு!

அந்த சிவனோ, காசியில் மரிப்பவர்கள் காதில் ராம நாமம் ஓதி முக்தியடையச் செய்கிறார்.

"ராம' என்பதும் இரு அட்சரங்களே!

"சிவ' என்பதும் இரு அட்சரங்களே!

"ராம' என்றாலே அழகு பொருந்தியவர் என்று பொருள். ரிஷி, முனிவர்களே மயங்கி ராமரை ஆலிங்கனம் செய்ய அனுமதி வேண்டிட, "அது அடுத்த அவதாரத்தில்' என்று கூறினார். அவர்களே கிருஷ்ணாவதாரத்தின்போது கோபிகை களாகப் பிறந்து, ராஸலீலையின்போது கண்ணனை ஆலிங்கனம் செய்து மகிழ்ந்தனர்.

ஆக, சிவன், அனுமன் உருவில்- ராமனைத் தொடர்கிறார். அனுமன் இல்லையேல் கடல்கடந்து சீதையைக் கண்டு அங்குனீயம் ஈந்து, சூடாமணியைத் திரும்பப் பெற்று ராமரை சந்தித்திருக்கமுடியுமா?

அதற்கு அனுமன் ராமரிடம் பெற்ற பரிசு என்ன? ஆலிங்கனம்தான்! அதாவது ராமர் தன்னையே அளித்தார். வேறெவருக்கும் அது இல்லையே!

hh

வானரங்கள் இல்லையேல் கடலில் ராமர் சேனைகள் கடந்துசெல்ல பாலம் அமைத்திருக்க முடியுமா? ராமநாமம் எழுதப்பட்ட கற்கள் மிதந்தனவே. வானர சேனைகளும் அனுமனும் எத்தனை அரக்கர்களைக் கொன்றனர்! அனுமன் இல்லையேல் சஞ்சீவிமலை கொண்டுவரப் பெற்று லட்சுமணன் உயிர் பெற்றிருப்பானா? இறந்தவர் யாவரும் அதனில் உயிர் பெற்றனரே!

அனுமன் இல்லையேல் பரதன் தீயில் வீழ்வதிலிருந்து தப்பியிருப்பானா?

மயில்ராவணன் ராம- லட்சுமணர்களைக் கவர்ந்துசென்று பாதாளத்தில் வைத்தான். அவனை அழிப்பது மிகக்கடினம். அனுமன்- குரங்கு, சிங்கம், குதிரை, கருடன், வராகம் என ஐந்து முகங்களை ஏற்று, வெவ்வேறு திசைகளிலுள்ள ஐந்து விளக்குகளைத் தன் ஐந்து முகங்களால் ஒரேசமயத்தில் அணைத்தார். மயில்ராவணனை அழித்து ராம- லட்சுமணர்களை மீட்டார். இதன் அடிப்படையிலேயே ஒருசில இடங்களில் ஐந்து முக ஆஞ்சனேயரைக் காண்கிறோம். சிவனுக்கும் ஐந்து முகங்களாயிற்றே!

ராமர் பட்டாபிஷேகம் வெகுவிமரிசையாக நடந்தது. வந்திருந்த அனைவருக்கும் பல வெகுமதிகள் தரப்பட்டன. அனுமனுக்கும் தர ராமருக்கு ஆசை. பெறுவானா என்று சந்தேகம். எனவே சீதையின் முகம் பார்த்தார். ராமரின் குறிப்புணர்ந்த சீதை, தனது முத்துமாலையை அனுமனுக்குத் தந்தாள். ஆனால் அனுமனுக்கு வேண்டியது ராமனே- ராம நாமமே! மாலையிலிருந்த ஒவ்வொரு முத்தையும் உடைத்துப் பார்த்தார். ராம நாமம் இல்லை. எனவே சீதை தந்த பரிசு வீண். அதுவே அனுமன் இதயம்!

விநோதமாக ராமருக்கும் அனுமனுக்கும் ஒரு யுத்தமே நடந்தது. தனது எதிரியென்று ராமனோ, அனுமனோ அறியார்! சத்தியத்தைக் கடைப்பிடிக்கவேண்டியது ராமனின் லட்சியம். அனுமன் ஆயுதம் எடுக்கவில்லை.

கண்மூடி கைகூப்பி நின்று ராமநாமம் ஜெபித்தார். ராமரோ அநேக அஸ்திரங்கள், ஆயுதங்களைப் பிரயோகித்தார். அவை அனுமன் காலடியில் வீழ்ந்து நமஸ்கரித்தன. அதுவே அனுமனின் ஆழ்ந்த- ஈடற்ற ராமநாம பக்தி! அதாவது நாமம், நாமியை (பெயர் உள்ளவரை)விட மகிமைவாய்ந்தது என்பதற்கு உதாரணம்.

ராமரின் அவதார நோக்கம் முடிய, அவர் வைகுந்தம் செல்வதற்காக சரயூ நதியில் மூழ்க ஆயத்தமானார். (அவ்விடம் "குப்தார் காட்' என்று அயோத்தியிலிருந்து சற்று தொலைவில் உள்ளது.) அப்போது ராமர் வைகுண்டம் வருமாரு அனுமனையும் அழைத்தார். ஆனால் அனுமன், "அங்கு ராமர் உண்டோ? ராமநாமம் உண்டோ?' என வினவ, ராமர் "இல்லை' எனக்கூற, "அப்படியானால் எனக்கு வைகுண்டம் தேவையில்லை' என்றார். விநோதம்தானே!

எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அனுமன் அரூபமாக உள்ளார். அவர் சிரஞ்சீவி. என்றும் ஜீவித்திருப்பவர். ஸ்ரீராமாயண கதை சொல்பவர்கள் ராமர் அருகில் அனுமன் அமர ஒரு பலகை போட்டு வைப்பர்.

"யத்ர யத்ர ரகுனாத கீர்த்தனம்

தத்ர தத்ர க்ருதம் ஹஸ்தக அஞ்சலிம்

பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்

மாருதிம் நமத ராக்ஷ ஸாந்த கம்.'

இந்த அனுமன் துதி கூறும் பொருளென்ன?

"அரக்கர்களை அழித்த மாருதியானவர்

(அனுமன்) எங்கெல்லாம் ராமகீர்த்தனம்

நடக்கிறதோ, அங்கெல்லாம் கூப்பிய கைகளுடன், ஆனந்தக் கண்ணீர் வழியும்

கண்களுடன் உள்ளார். அவரை நமஸ்கரிக்கி றேன்.'

அனுமனை வணங்கினால் என்ன பலன்கள் பெறலாம்?

"புத்திர் பலம் யசோதைர்யம்

நிர்பயத்வம் அரோகதா

அஜாட்யம் வாக்படுத்வம் ச

அனுமத் ஸ்மரணாத் பவேத்.'

திடமான புத்தி, கட்டுமஸ்தான உடல், புகழ், பயமற்ற நிலை, வியாதியின்மை, வீரத் தனம், வாக்கு சாதுர்யம் யாவும் கைகூடும்.

பள்ளிச் சிறுவர்கள் அவசியம் துதிக்க வேண்டிய துதி இது.

ஆகவேதான் போலும், கணபதிக்கு உள்ளதுபோல, ராஜாதிராஜ ராமனைவிட அனுமனுக்குக் கோவில்கள் அதிகம்! சீதாராமர், அனுமன் பாதம் பணிந்து அருள் பெறுவோம்.