மது முன்னோர் களின் நாகரிக வாழ்வின் சிறப்புகள், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை அடுத்தடுத்து வரும் தலைமுறைக்கு சாட்சியாக இருந்து விளக்குபவை நமது இலக்கியங்களும் கோவில்களும். தாம் வாழும் வீட்டை சிறுகக் கட்டி பெருக வாழ்ந்த நம் முன்னோர்கள், ஆண்டவனுக்கு அளப் பரிய சிறப்புகளுடன் பெருங்கோவில்களை எழுப்பியுள்ளனர். இப் பெருங்கோவில்களைப் பேணிக்காப்பது நமது தலையாய கடமை.

dd

Advertisment

அப்படி பக்தர்களாலும், ஊர் மக்களாலும் பாது காக்கப்பட்டு, இந்திய அளவில் நவகிரகக் கோவில் களில் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது கும்பகோணம் அருகி லுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசாமி திருக் கோவில். பொன்பொலியும் திரு நாகேஸ்வரத்தில் நாகநாத ஈஸ்வரர், அம்பாள் பிறையணியம்மன் அருள் புரிகின்றனர். இவர்களைச் சுற்றிலும் பரிவார தெய்வங்கள் உள்ளன. இங்கு தென்மேற்கு மூலையில் ராகு பகவான் தனது துணைவிகளான நாகவல்லி, நாகக்கன்னி சமேதராக அருளாட்சி செய்கிறார். இங்கு ராகு பகவானுக்கு பெருஞ்சிறப்பு ஏற்பட்டது எப்படி? ஒரு சிவராத்திரியின்போது நான்கு இடங்களில், நான்கு சாமங்களில் ராகு பகவான் சிவனை வழிபட்டுள்ளார். முதல் சாமத்தில் வில்வ வனமாக இருந்த குடந்தை கீழ்க் கோட்டத்திலும், இரண்டாம் சாமத்தில் செண்பகவனமாக இருந்த இந்த திருநாகேசுரத்திலும், மூன்றாம் சாமத்தில் வன்னி வனமாக இருந்த திருப்பாம்புரத்திலும், நான்காம் சாமத்தில் புன்னைவனமாக இருந்த நாகை காரோணத்திலும் ராகு பகவான் வழிபட்டிருந்தாலும்கூட, திருநாகேசுரத்தில்தான் ராகு பகவானை திரள்திரளாக வந்து வழிபட்டுச்செல்கிறார்கள். இதற்குப் பல சம்பவங்கள் எடுத்துக்காட்டாக உள்ளன.

நந்திகேசர், விநாயகர் இங்கு இறைவனை வழிபட்டு சிவகணங்களுக்கு அதிபதியானார்கள். அதேபோல், பாண்டவர்கள் வழிபட்டு போரில் வெற்றியடைந்து நாட்டைப் பெற்றனர். வசிஷ்ட முனிவர், இந்திரன், நாக மன்னர்களான ஆதிசேஷன், தக்கன், கார்க்கோடன் மற்றும் பிரம்மன், சூரியன், பகீரதன், சனக முனிவர், சித்திரசேனன் என்ற மன்னன் உட்பட பலரும் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர்.

Advertisment

கேரள நாட்டு மன்னனான சம்புமாலி, பொன்னால் பல தானதர்மங்கள் செய்துவந்தான். ஒருநாள் காலங்கிரி என்ற முனிவர் மன்னனிடம் யாசகம் பெறச் சென்றார். அன்றைய நாளுக்கான தானம் முடிந்துவிட்டதால், ""இன்று தர இயலாது'' என்றான் மன்னன். அதைக்கேட்டு கோபமுற்ற முனிவர் மன்னனைப் பார்த்து, ""நீ அலகை உருவுடன் அலைக'' என்று சாபமிட்டார். உடனே அதேபோன்று உருமாறிட, பதை பதைத்த மன்னன் முனிவரிடம் மன்றாடி பாவமன்னிப்புக் கேட்டான். முனிவரும் கோபம் தணிந்து, ""1008 சிவாலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்து, இறுதியாக திருநாகேசுரம் சூரிய குளத்தில் மூழ்கி இறைவனை வழிபட்டால் விமோசனம் கிடைக்கும்'' என்றார். அதேபோல் சம்புமாலி இங்கு வந்து இறைவனை வழிபட்டு மனித உருவம் கிடைக்கப் பெற்றான். இதற்குச் சான்றாக அந்த மன்ன னின் உருவத்தை இக்கோவில் அலங்கார மண்டபத்திலுள்ள தூணில் காணலாம்.

ddநவகோள்களில் சனியைவிட செவ்வாயும், செவ்வாயைவிட புதனும், புதனைவிட குருவும், குருவைவிட சுக்கிரனும், சுக்கிரனைவிட சந்திரனும், சந்திரனைவிட சூரியனும், இவர்கள் அனைவரையும்விட ராகுவும் கேதுவும் பலம்பொருந்தி விளங்குகின்றனர். "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதுபோல, ஜோதிட முறையில் ராகு- கேது இருவருக்கும் எந்த வீடும் சொந்தமில்லை. எந்த ராசி வீடு களில் பிரவேசிக்கிறார்களோ அதற்குத்தகுந்த பலனைக் கொடுக்கிறார்கள். ராகுவானவர் யோகத்திற்கு அதிபதி என்பார்கள். இவரால் பார்க்கப்பட்டு பாதிக்கப்படும் ஜாதகக்காரர்கள், அதிலிருந்து விமோசனம் பெற இவரை நாடி இங்குவந்து வழிபட்டுப் பலன் பெறுகிறார்கள். அதனால் ராகு பகவானுக்கு பல இடங்களில் கோவில்கள் இருந்தாலும், நவகிரக கோவில்களில் ஒன்றாக பிரதானமாக விளங்குகிறது இக்கோவில்.

இங்குள்ள ராகு பகவானுக்கு ஞாயிறு ராகு காலத்தில் சிறப்புப் பூஜைகள், பாலாபிஷேகம் நடைபெறுகின்றன. பாலாபிஷேகத்தின்போது ராகு பகவான் மீது ஊற்றப்படும் பால் நீலநிறமாக மாறிவிடுகிறது. இந்த பால் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை அருந்தும் பக்தர்களுக்கு உடல்ரீதியான பிரச்சினைகள் நீங்குகின்றன என்பதற்கு உதாரணம், தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வருவதே சாட்சி. அதிலும் ஞாயிற் றுக்கிழமை மாலை 4.30-6.00 மணிவரை ராகுகால பூஜையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

16-2-1988 அன்று ஐந்து தலை அரவு எனும் ராகு பகவான் உடலில், ஐந்தரை அடி நீளமுடைய நாகம் தோலை உரித்து விட்டுச் சென்றுள்ளது. அந்த தோலை கண்ணாடிப்பேழையில் வைத்துப் பாதுகாத்து வருகிறார்கள் கோவில் நிர்வாகிகள். 29-1-2009 அன்று வியாழக் கிழமை மதியம் 1.30-3.00 மணி ராகு காலத்தில் பக்தர் ஒருவர் நாகர்சிலைக்குப் பாலாபிஷேகம் செய்தார். ராகு விக்ரகம் மீது வழிந்தோடிய பால் அப்படியே பாம்புபோல உறைந்து நின்றதாம். அதைக் கண்டு பக்தர்கள் மெய்சிலிர்த்து ராகு பகவானை வழிபட்டுள்ளனர்.

பிருங்கிமுனிவர் இறைவன்மீது அளவற்ற பக்திகொண்டவர். சிவ பெருமான் தம்பதி சமேதராக அமர்ந்திருந்தபோது, அவர் வண்டாக உருவெடுத்து இறைவனை மட்டுமே சுற்றிவந்து வழிபட்டார். நாம் உடனிருந்தும் முனிவர் நம்மையும் சேர்த்து வலம்வரவில்லையே என்ற கோபம் உமையவளுக்கு ஏற்பட்டது. இதனால் முனிவருக்கு சாபமிட்டாள். அதைக் கண்டு கோப மடைந்த இறைவன் தேவிக்கு சாபமளித்தார். இதனால் மனம் கலங்கிய அன்னை இறைவனிடம் மன்னிப்புக் கேட்க, இறைவன் செண்பக வனமான இத்தலத்தில் தம்மை வேண்டித் தவ மிருக்குமாறும், தேவிக்குத் துணையாக சரஸ்வதியும் லட்சுமியும் உடனிருந்து உதவிசெய்வார்கள் என்றும் வரமளித்தார். அதன்படியே தேவி தவமிருக்க, லட்சுமி, சரஸ்வதி இருவரும் பணிவிடை செய்தனர்.

அப்போது சிவபெருமான் காட்சியளித்ததோடு, தேவிக்கு தமது வாகனமான நந்தியைக் கொடுத்து ஆட்கொண்டார். அதன் வெளிப்பாடாக இக் கோவிலின் வடகிழக்கில் கிரிகுஜாம்பிகை என்ற பெயரில் அம்பாள் முப்பெரும் தேவியராக அருள்கிறாள்.

இவ்வாலய இறைவனை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடியுள் ளனர். கி.பி. 872-ல் முதலாம் ஆதித்தசோழன் காலம்முதல் இப்போது வரை பலரும் திருப்பணி களை செய்துள் ளனர். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு பார்வையிழந்த வெட்டவெளி சாமிகள் என்ற சாது ஒருவர் இவ்வாலய இறைவியின் பதிகத்தைப் பாடி பார்வை கிடைக்கப் பெற்றுள்ளார். இவ்வாலய மகிமையை பார்த்திபன், பாரதிராஜா ஆகிய பக்தர்களும் பகிர்ந்தனர்.

கோவிலில் சந்திரசேகரர், ஆதிவிநாயகர் சந்நிதிகள் உள்ளன. ஆதியிலே தோன்றியவர் என்பதால் ஆதிவிநாயகர் என்ற பெயரே நிலைத்துள்ளது. இங்குள்ள சண்டிகேஸ்வரர் சந்நிதிக்கு தனிச்சிறப்புண்டு. அதாவது ஒரு யுகத்திற்கு ஒரு சண்டிகேஸ்வரர் என மூன்று யுகங்களுக்கு மூவர் தோன்றியுள்ளனர். அந்த மூவரும் ஒரே சந்நிதியில் உள்ளனர்.

இது வேறெங்கும் இல்லாத அதிசயம் என்கிறார்கள் இவ்வாலய அர்ச்சகர்கள்.

இவ்வாலயத்தில் எம்பெருமானுக்கு இரு வடிவங் கள் உள்ளன. செண்பகமரத்தடியில் அமர்ந்த நாகநாத சாமியாகவும், தனிச்சந்நிதியில் அர்த்த நாரீஸ்வரராகவும், அதேபோல் பிறையணியம்மன், கிரிகுஜாம்பிகை என்ற இருபெயர்களுடன் அம்மனும் அருளாட்சி செய்கின்றனர்.

ஆலய முகப்பிலுள்ள விநாயகர் செண்பக விநாயகர் என்றும், சான்று விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். சிவபெருமான், "முதலில் அனைவரும் விநாயகரை வழிபட்ட பிறகே மற்றவரை வழிபடவேண்டும்' என்று உத்தரவிட்டார். அதற்குச் சான்றாக இந்த விநாயகர் உள்ளதால் இவருக்கு சான்று விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டதாம்.

தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், காவிரிக் குத் தெற்கிலுள்ள 127 தலங்களில் 47-ஆவது தலமாக உள்ளது திருநாகேஸ்வரம் நாகநாதீஸ்வரர் கோவில். கும்பகோணத்திற்கு கிழக்கே ஆறு கிலோமீட்டர் தொலை விலுள்ள இவ்வாலயம் சென்றுவர கும்பகோணத்திலிருந்து நிறைய பேருந்து வசதிகள் உள்ளன. ராகு தோஷ நிவர்த்தித் தலமாக விளங்கி, நாடிவரும் பக்தர்களுக்கு உடனுக்குடன் பலனளித்து வருகிறார் இங்குள்ள ராகு பகவான். ஆலய தொடர்புக்கு தொலைபேசி: 0435-2463354.