மேஷம்
இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு அனுகூலமான காலம். மதிநுட்பத்தோடு எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் வெற்றி காணும் மாதம். சொந்தத் தொழில், வியாபாரம் செழிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வரவு- செலவு திருப்தியாக அமைவதால் வாக்கு நாணயம் காப்பாற்றப்படும். கொடுக்க வேண்டியதை குறிப்பிட்டபடி கொடுத்து நல்ல பேர் எடுக்கலாம். சிலருக்கு கடன் வாங்கி இடம், வீடு, வாகனம் வாங்கும் யோகம் அமையும். அது சுபக்கடன் என்று திருப்திப்படலாம். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் நோய் உபாதைகளும் அல்லது போட்டி, பொறாமை, சத்ரு தொல்லைகளும் உண்டாகலாம். என்றாலும் ராசிக்கு குரு பார்வை கிடைப்பதால் எல்லாவற்றையும் சமாளித்து ஜெயிக்கலாம்; முன்னேறலாம். பணியாளர்களும், உடன்வேலைபுரிகிறவர்களும் உங்கள் கருத்தறிந்து நடந்துகொண்டு மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவார்கள். குடும்பத்தினரும் உங்களுக்கு ஒத்துழைப்பாக செயல்படுத்துவார்கள்.
பரிகாரம்: கரூர் அருகில் நெரூரில் அவதூதர் சதாசிவப் பிரம்மேந்திராள் ஜீவசமாதியை வழிபடவும். இந்த இடத்தில் காவேரி தென்வடலாக (உத்திரவாகினியாக) ஓடும்.
ரிஷபம்
இந்த மாத முற்பகுதிவரை உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியிலேயே ஆட்சியாக இருக்கிறார். எனவே உங்களது செயல்பாடுகள் எல்லாம் வெற்றியாக அமையும். இழுபறியாக இருந்துவந்த காரியங்கள் முடிவடையும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வி.ஐ.பி.யின் தொடர்பு ஏற்படும். அது உங்கள் வாழ்க்கை முன்னேற்றம், தொழில், வியாபாரத்துறையின் முன்னேற்றத்துக்கும் பயன்படும். உங்கள் துன்பங்களும் துயரங்களும் வேதனைகளும் படிப்படியாக விலகும். சிலருக்கு ஜாதக தசாபுக்தியில் பாதகமான கிரக அமைப்பு இருந்தால் அதற்கேற்ற பரிகாரம் செய்துகொள்வது அவசியம். அட்டமச்சனியில் தொட்டது துலங்காது என்பார்கள். ஆனால் ரிஷப ராசிக்கு அது விதிவிலக்கு. சனி யோகாதிபதி என்பதால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தமாட்டார் என்று நம்பலாம்.
பரிகாரம்: பொன்னமராவதி அருகில் செம்பூதியில் தம்பதி சகிதம் செம்பூதி சித்தர் ஜீவசமாதியாக அருள்பாலிக்கிறார்கள்.அங்கேசென்று வழிபடவும்.
மிதுனம்
இந்த மாத ஆரம்பத்திலேயே நீசமாக இருந்த மிதுன ராசிநாதன் புதன் 11-ஆம் இடமான மேஷத்துக்கு மாறுகிறார். தொழில்துறையில் லாபகரமான முன்னேற்றங்களை சந்திக்கலாம். வியாபாரத்தை சீராக நடத்துவதற்கான யோசனைகளைச் செயல்படுத்தலாம். சிலர் அதற்கு உறுதுணையாக அல்லது உதவியாக மனைவியின் ஆலோசனைகளை ஏற்று செயல்படலாம். பொருளாதாரம் வற்றாத நதியாகக் காணப்பட்டாலும், அவ்வப்போது சிறுசிறு இடையூறுகளைச் சந்திக்க வேண்டியதைத் தவிர்க்கமுடியாது. உங்கள் பொறுமையை சோதிப்பதற்காகத்தான் இவையெல்லாம் நடக்கின்றன. எனவே பொறுமையும் செயல்பாட்டில் விடாமுயற்சியும் இருக்கும்வரை உங்கள் காரியத்தில் வெற்றி காணலாம். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால், "பழம் நழுவிப் பாலில் விழுந்து, அது நழுவி வாயில் விழுந்த மாதிரி' என்ற பழமொழிக்கேற்ப வெற்றி வாகை சூடலாம்.
பரிகாரம்: திருவாரூரில் மடப்புரம் பகுதியில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும்.
கடகம்
கடக ராசிக்கு 11-க்குடைய சுக்கிரன் 11-ல் ஆட்சியாக இருக்கிறார். தொழில்துறையில், வியாபாரத்தில் இருந்துவந்த போராட்டங்கள் மாறி லாபகரமான சூழ்நிலை அமையும். குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப வேண்டிய சரக்குகளை ஒருநாள் முன்னதாகவே டெலிவரி செய்து பெயரைக் காப்பாற்றலாம். 10-க்குடைய செவ்வாய் 7-ல் கேதுவோடு மாறியிருக்கிறார். சிலருக்கு அவர்களது மனைவி பார்த்து வந்த வேலையில் சுணக்கமும், அதனால் வருவாய் குறைந்தும் காணப்படலாம். உடல்நலத்தில் சிறு வைத்தியச்செலவுகளைச் சந்திக்க நேரும். 2-க்குடைய சூரியன் 10-ல் உச்சமாக இருப்பதால் பொருளாதாரத்திலும் வேலையிலும் உள்ள சிரமங்கள் விலகும். தேவைகள் பூர்த்தியாகும். மேலும் சில அத்தியாவசியத் தேவைகள் உள்ள பொருட்களை வாங்கலாம். சிலர் புதிய தொழில் தொடங்கும் திட்டங்களைச் செயல்படுத்தலாம்.
பரிகாரம்: மதுரை- திருப்பரங்குன்றம் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதி, சோமப்பா சித்தர் ஜீவசமாதியை வழிபடவும்.
சிம்மம்
ராசிநாதன் சூரியன் மாத முற்பகுதிவரை 9-ல் உச்சமாக இருக்கிறார். தேங்கிக்கிடந்த அல்லது செயல்வடிவம் பெறாத முயற்சிகள் நிறைவேறும். 10-க்குடைய சுக்கிரன் 10-ல் ஆட்சியாக இருக்கிறார். தொழில்துறையில் அனுகூலமான மாற்றங்கள் நிகழும். முதலில் உங்கள் ஆலோசனைகளைப் புறக்கணித்தவர்கள் பின்னர் சரியென்று ஒப்புக்கொள்வார்கள்; ஏற்றுக்கொள்வார்கள். அதாவது முட்டிய பிறகு குனிவார்கள். அதனால் உங்கள் மனசாட்சி என்ன சொல்லுகிறதோ அதன்படியே செய்யுங்கள். அதைத்தான் கவியரசர், "போற்றுவோர் போற்றட்டும்; புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும்; ஏற்றதென எனதுள்ளம் எடுத்துரைத்தால் அக்கருத்தை சாற்றுவேன்; எவர் தடுத்தாலும் அஞ்சேன்' என்று பாடினார். அதுபோல, கொண்ட கொள்கையில் விடாப்பிடியாக செயல்படலாம். அதேசமயம் உங்களது வேலையில் சிறு அலட்சியம், அசமந்தம் காணப்படும். அதை மாற்றிக்கொள்வது அவசியமான ஒன்றாகும்.
பரிகாரம்: சிங்கம்புணரியில் முத்துவடுகச் சித்தர் (வாத்தியார்கோவில்) ஜீவசமாதியை வழிபடவும்.
கன்னி
இந்த மாதம் 7-ல் இருந்த புதன் 8-ஆம் இடமான மேஷ ராசிக்கு மாறுகிறார். அவருடன் 12-க்குடைய சூரியன் இணைந்திருக்கிறார். எனவே உங்களுடைய செயல்கள் முற்றுப்பெறாத நிலையில் அமையும். முயற்சியில் தளர்ச்சியும், அயர்ச்சியும் காணப்படும். வளர்ச்சி தள்ளிப்போகும். தொழில்துறையிலும் பணியிலும் போட்டியும் பொறாமையும் முட்டுக்கட்டைகளும் காணப்படும். அப்படி இருப்பது உங்களை சரியான பாதையில் இயக்கும். தேர் ஓடும்போது முட்டுக்கட்டை போடுவார்கள். அப்போதுதான் அது ஓரத்தில் போகாமல் நேராக- சரியான பாதையில் இயங்கும்; தடம் மாறிப்போகாது. ஆகவே தடைகளும் குறுக்கீடுகளும் உங்களை உஷார் செய்யும். 2-ல் குரு. எனவே பொருளாதாரம் தொய்வில்லாமல் செயல்படும். என்றாலும், கையிலுள்ள பணம் முழுவதும் காலியான பிறகே அடுத்த வரவு நிகழும். தைரியத்துடன் சமாளிக்கலாம்.
பரிகாரம்: பொள்ளாச்சி அருகில் புரவிபாளையம் சென்று கோடிச்சாமி ஜீவசமாதியை வழிபடவும்.
துலாம்
துலா ராசிநாதன் சுக்கிரன் 8-ல் ஆட்சியாக இருக்கிறார். ராசிநாதன் 8-ல் மறைவென்பதால் அலைச்சல்களும் திரிச்சல்களும் இருக்கத்தான் செய்யும். 4-ல் கேது; 10-ல் ராகு. தொழில், வேலை, உத்தியோகம் சம்பந்தமான அலைச்சலும், நேரம் தவறிய போஜனமும் உடல்நலத்தை பாதிக்கலாம். 2-க்குடைய செவ்வாய் 4-ல் உச்சம் பெறுவதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது மாதிரி பாதிப்புகள் ஏற்படாது. சொந்தத் தொழில் செய்கிறவர்களுக்கு போட்டி, பொறாமைகள், எதிர்ப்பு, இடையூறுகள் காணப்பட்டாலும் அவற்றை சமாளித்து முன்னேறலாம். 7-ல் சூரியன் உச்சம். அவருடன் 12-க்குடைய புதன் இணைவு. அவர்களுக்கு செவ்வாயின் பார்வை. எனவே மனைவி அல்லது கூட்டாளிகளிடம் சில ஆதாயங்களையும் ஆதரவுகளையும் எதிர்பார்க்கலாம். உதவியும் அமையும். சிலர் பிள்ளைகளின் மேற்படிப்புச் செலவு அல்லது சுபகாரியச் செலவு ஆகியவற்றுக்காக கடன் வாங்கலாம்.
பரிகாரம்: திண்டுக்கல் அருகில் கசவனம்பட்டியிலுள்ள ஜோதிமௌன குரு நிர்வாண சுவாமியின் ஜீவசமாதியை வழிபடவும்.
விருச்சிகம்
ராசிநாதன் செவ்வாய் 3-ல் உச்சம் பெறுகிறார். மேஷ ராசியான 6-ஆம் இடத்தைப் பார்க்கிறார். பிரபலங்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். அதன்மூலம் உங்கள் தொழிலை மேம்படுத்தலாம். அதற்கான கடனும் வாங்கலாம். குடும்பத்தார் வகையில் சில சுபச்செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சிகள் இடம்பெறலாம். அதேபோல சுற்றத்தினர் வகையிலும் சுபச்செலவுகளை சந்திக்கலாம். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் தொழில்துறையிலோ அல்லது வேலையிலோ சிறுசிறு குறைபாடுகளும் பிரச்சினைகளும் உருவாகும். அல்லது போட்டி, பொறாமைகள், எதிர்ப்பு, இடையூறு ஏற்படும். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் தொழில் முன்னேற்றமும் புதிய தொழில் வளர்ச்சியும் உண்டாகும். 2-ல் உள்ள சனி உங்கள் பேச்சில் நிதானமின்மையையும், தூக்கியெறிந்து பேசுகிற தன்மையையும் தருவார். கவனமுடன், பணிவுடன் நடந்துகொள்வது அவசியம்.
பரிகாரம்: திருநெல்வேலி அருகில் வல்லநாடு சென்று கணபதி சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும். அவரது தாய்- தந்தை சமாதியும் அங்குண்டு.
தனுசு
தனுசு ராசிக்கு குரு 11-ல் இருந்து 3-ஆமிடத்தைப் பார்க்கிறார். 12-க்குடைய செவ்வாய் 2-ல் உச்சம். செலவுகள் கட்டுக்கடங்காமல் காணப்பட்டாலும் அதை சமாளிக்கும் வகையில் வரவுகளும் வந்துசேரும். சிலர் இடப்பெயர்ச்சி போன்ற மாற்றங்களையும் சந்திக்கலாம். 6-க்குடைய சுக்கிரன் 6-ல் ஆட்சி. சிலர் வீட்டுக்காக கடன், சிலர் தொழில்துறைக்காக கடன் வாங்க நேரிடும். ஜென்மத்தில் சனி உடல்நிலையில் சிறுசிறு தொந்தரவுகளைத் தரலாம். இன்னும் சிலர் வீண் பயத்தை மனதில் நினைத்து இல்லாத வியாதியை கற்பனை செய்துகொள்வார்கள். அதனால் மனதில் உற்சாகமின்மையும் ஒருவிதக் கவலையும் ஆட்கொண்டு வரும். இறைவன்மேல் தீராத நம்பிக்கையும், தியானப் பயிற்சியும் அவற்றிலிருந்து காப்பாற்றும்.
ஜென்மச்சனி தொழில், வேலையில் சுமையைத் தரலாம். என்றாலும் அதை இறக்கவேண்டிய நேரத்தில் இறக்கி பாரத்தைக் குறைக்கலாம். அதற்கான வழிமுறைகளும் அமையும்.
பரிகாரம்: திருவண்ணாமலையில் ரமணர், சேஷாத்திரி சுவாமி, விசிறி சுவாமி (ராம்சுரத்குமார்) ஜீவசமாதியை வழிபடவும்.
மகரம்
மகர ராசிக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி. ஜென்மத்தில் செவ்வாய் உச்சம். அவருடன் கேது. 2-ஆம் இடத்தை சனி பார்க்கிறார். சகோதர- சகோதரி வகையில் நன்மதிப்பையும் பாராட்டையும் பெறலாம். வரவு வந்தாலும் செலவும் அதற்கேற்றாற்போல் வந்துகொண்டிருக்கும். என்றாலும் பெரியதளவில் சேமிப்புக்கு இடமில்லாமல் அலைக்கழிக்கும். சிலர் வெளிநாட்டு வேலைக்கு முயற்சிசெய்து தாமதமாகிக் கொண்டிருந்தால், இந்த மாதம் அவை நல்ல முறையில் செயல் வடிவம் பெற்று வெற்றி காணலாம். வாகனத்தில் பராமரிப்பு செலவு கூடும். பிள்ளைகளினால் உண்டான மனக்கவலைகள் விலகும். அவர்களின் மேற்படிப்பிற்கான செலவுகளுக்குப் பணம் புரளும். அது கடனாகக்கூட இருக்கலாம். சில அத்தியாவசியமான காரியத்துக்கு கடன் வாங்கும் கட்டாயமும் உண்டாகும்.
பரிகாரம்: நாமக்கல் அருகில் சேந்தமங்கலத்தில் (சாமியார்கரடு) அவதூதர் ஸ்வயம்பிரகாச சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும்.
கும்பம்
இந்த மாதம் 10-க்குடைய செவ்வாய் 12-ல் மறைகிறார். தொழில்துறையில் சில மாற்றங்களை நிகழ்த்தலாம். உடன்பிறந்த சகோதர- சகோதரி வகையில் சுபச்செலவுகள் அல்லது விரயச்செலவுகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். வாகனத்தில் அடிக்கடி பழுது செலவினங்களும் உண்டாகும். சிலர் வாகனப் பரிவர்த்தனையை அல்லது புதிய வாகனம் வாங்கும் முயற்சியை மேற்கொள்ளலாம். 7-க்குடைய சூரியன் 3-ல் உச்சம். 3, 10-க்குடைய செவ்வாய் 12-ல் உச்சம். சூரியனுக்கு செவ்வாய் பார்வை. உச்சனை உச்சன் பார்க்கிறார். என்றாலும் உங்கள் ராசிக்கு சனியின் (ராசிநாதன்) பார்வையும், குருவின் பார்வையும் இருப்பதால் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாக வேண்டிய அவசியமில்லை. பயமும் தேவையில்லை. மாதப் பிற்பகுதியில் சூரியன் ரிஷபத்திற்கு மாறியபிறகு பொருளாதார நிலையில் சீரான அமைப்பு ஏற்படும்.
பரிகாரம்: புதுக்கோட்டை புவனேஸ்வரி கோவிலில் ஜட்ஜ் சுவாமிகள் ஜீவசமாதியை (அதிஷ்டானம்) வழிபடவும்.
மீனம்
மீன ராசிநாதன் குரு 8-ல் மறைந்து 12-ஆம் இடத்தைப் பார்க்கிறார். செலவுகள் கட்டுக்கடங்காமல் இருந்தாலும் 2-க்குடைய செவ்வாய் 11-ல் உச்சம்பெற்று 2-ஆம் இடத்தையே பார்க்கிறார். 2-ஆம் இடத்தை குருவும் பார்க்கிறார். எனவே செலவுகள் ஒருபுறம் வந்தாலும் அதை சமாளிக்கும் வகையில் வரவுகளும் வந்துகொண்டிருப்பதால் பயம்கொள்ளத் தேவையில்லை. நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் தள்ளிப்போகுமே தவிர தடைப்படாது. உடன்பிறந்த சகோதர- சகோதரிகளின் ஒத்துழைப்பும் உதவியும் ஆதரவாக அமையும். அதேபோல உங்களால் அவர்களும் சகாயம் கிடைக்கப்பெறுவார்கள். தேவையில்லாத வீண் கற்பனை எண்ணங்களை மாற்றி, மனதை தியானமுயற்சியில் ஈடுபடுத்துவது நல்லது. குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தி உங்கள் செயல்பாட்டில் வெற்றியைத் தரும்.
பரிகாரம்: கும்பகோணம்- குடவாசல் அருகில் சேங்காலிபுரம் சென்று துளசிமாடத்தின்கீழ் அருள்பாலிக்கும் ராமானந்த பிரம்மேந்திரர் சுவாமிகளின் ஜீவசமாதியை வழிபடவும்.