மந்த்ராலய மகானின் சிலிர்ப்பூட்டும் தொடர்!

14

இரண்டாம் பாகம்

ஸ்ரீராகவேந்திர ஸ்வாமி களின் அருளுரையினைக் கேட்க பலகாதம் கடந்தும் நடந்தும் வந்து, அவரது திவ்ய அருள்சொரூபத்தைக் கண்டும், அவரின் உபதேசங்களைக் கேட்டும் பலர் மதபேதமின்றி வழிபடலாயினர்.

Advertisment

உலகில் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்றும் சிருஷ்டிக் கப்படுகையிலேயே தீர்மானிக்கப் பட்டுவிடுகிறது. படைத்தல் என்ற பிறப்பும், அழித்தல் என்ற இறப்பும் சரிசமமாகவே நடைபெறுகிறது. பூமி பாரம் இங்கு வீணே திணிக்கப் படுவதில்லை. துல்லியமாகத் தீர்மானிக்கப்படுகிறது. அந்த துலாக் கோல் நியாயம் காத்தல் என்ற தர்மநீதிப்படி ஆராயப்பட்டு, அவரவரின் புண்ணிய பலாபலன் களைக் கணக்கில்கொண்டு, ஒன்று விதி என்பது தள்ளிப் போடப்படுகிறது அல்லது அடுத்த பிறவியில் அந்த பிறப்பிற்கான ஸ்தானம் முற்பிறவி கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. நம் போன்ற மானுட ஜென்மங்கள் உலக நியாய தர்மங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்க்கையை தூய அன்பினாலும், குடும்பத்தில் உண்மை யான நடத்தையினாலும் நகர்த்தினா லேயே போதுமானது. அதுவே இறைமை. செய்த தவறுகளை உணர்ந்து வருந்தி தெய்வத்திடம் நேரில் மன்னிப்பு கேட்பதென்பது இயலாத ஒன்று. மாறாக, ஆண்டவனே தேர்ந்தெடுத்து உலகை உய்விக்க அனுப்பிய மகான்களைச் சரண டைந்து, அந்த குருவிடம் சகலத்தையும் ஒப்படைக்கும்போது ஒருவரது பிறவி கர்மாக்களின் வீரியம் குறைக்கப்படும் அல்லது அகற்றப்பட்டுவிடும்.

ஸ்ரீராயர் புகழ் நாடு கடந்தும் பரவலாயிற்று. அவர் தனது சந்நியாசக் கடமையிலிருந்து நழுவாது பிறழாது, தனது பக்தர்களுக்கு தன் அபரோஷித ஞானதிருஷ்டிகொண்டு பலப்பல செய்துகொண்டே இருந்தார்.

சந்நியாசிகள் பெரும்பாலும் ஸ்நானம் செய்துகொள்கையில் தூய நதியோரங்களில் அல்லது ஆற்றுப்படுகைகளின் ஓரம் அல்லது நன்னீர்க் குளங்களையே நாடுவர்.

Advertisment

சுவாமிகளின் சீடர்கள் அதற்கு முன்பாக தெளிந்த நீர்நிலைகள் ஓரம், நீர் சலனங்களால் கரையோரம் ஒதுங்கும் மெல்லிய மண்ணடுக்கு களை- அதிலும் மனிதர், விலங்கு களின் கால்கள் படாத பகுதிகளிலிருந்து சேகரித்து வருவர். சேறு போன்ற கொழகொழப்பான அந்த தூய்மை யான மண்ணை ஸ்வாமிகள் ஸ்நானம் செய்யும்போது உடலெங்கும் பூசிக்கொண்டு சுத்திசெய்யப் பயன் படுத்துவதுண்டு. இதற்கு மிருத்திகா சௌசம் என்று பெயர். தனது அன்றாட மடத்துத் திருப்பணிகளுடன் இந்த தூய மிருத்திகையினையும் சேகரிப்பதை தனது தலையாய- தவறாத பணியாகச் செய்யும் நந்தன் என்னும் அந்த சீடனின் மனதுள் திருமண ஆசை துளிர்த்திருந்தது. அவனது வீட்டாரும் அவன் வயதைக் கருத்தில் கொண்டு அவனுக்கு மணம் முடிக்க ஆவலாயிருந்தனர்.

நந்தன் தனது திருமண ஆசையை எங்ஙனம் சொல்வதென்று தயங்கிக் கொண்டேயிருந்தான். ஸ்வாமிகள் தனிமையில் இருக்கும்போது தனது எண்ணத்தை அவரிடம்கூறி, அனுமதிபெற்று ஊருக்குக் கிளம்பலாமென்றிருந்தான். தியானம் செய்கிற பொழுதைத்தவிர, பிற நேரங்களில் பெரும்பாலும் ஸ்வாமிகளைச் சுற்றி எவரேனும் இருந்துகொண்டேயிருந்தனர். தியானப்பொழுதில் அவரை அணுகுதல் தவத்தைக் கலைப்பதற்கு ஒப்பாகும் என்பதால், அவரிடம்கூறி அனுமதிபெற இயலாதபடிக்கு ஸ்ரீமடத்து சூழ்நிலைகள் அமைந்திருந்தன. இப்படி பல நாட்கள் போய்க்கொண்டே இருந்தன. அவன் வருவதையும், ஏதோ சொல்லமுயன்று பிறர் இருப்பதால் தயங்குவதையும் ராயர் கவனிக்கலானார்.

அளவுக்கதிகமான நாணம் காரணமாய் அவனது முகம் பெரும்பாலும் பூமிபார்த்தே இருந்தது. கண்கள் படபடக்க அவன் தயங்கித்தயங்கித் திரும்புவது வழக்கமாகப்போனது.

அன்றைய பொழுது ஸ்வாமிகள் ஸ்நானம் செய்துகொண்டிருந்தார். வஸ்திரம் மற்றும் பிற மங்களப் பொருட்களைக் கொடுக்க அன்று நந்தன் சேவைக்கு நின்றிருந்தான். கபடில்லாத அந்த முகத்தை ஸ்வாமிகள் கண்ணுற்றார்.

""என்ன நந்தா, உடல் சுகவீனமா?'' என்றார்.

""இல்லை ஸ்வாமி. அப்படி ஏதுமில்லை'' என்றான் நந்தன்.

""பின் ஏன் என்னை சந்திக்க வந்து தலைகவிழ்ந்தபடி நிற்கிறாய்? மூச்சிரைக்கிறது. பின் படபடப்பாய் நகர்ந்துவிடுகிறாய். பெற்றோரைப் பார்க்க ஆவலாய் இருக்கிறயா?'' ஸ்வாமிகள் வேண்டுமென்றே அவனோடு வார்த்தைகளால் விளையாடி னார்.

""அப்படியில்லை ஸ்வாமி. தாங்களே தாயும் தந்தையுமாய் இங்குள்ள அனைத்து சீடர்களையும் அரவணைக்கும்போது, இங்குள்ள எவருக்குமே அவ்வெண்ணம் எழுவதில்லை. இருப்பினும் எனக்கென்று...''

""உனக்கென்று? ம்... சொல்லப்பா.''

""எனக்கென்று...''

""ம்... உனக்கென்ன?''

""ஒரு சிறு விண்ணப்பம் தெரிவிக்க வேண்டி பல பொழுது முயற்சித்தேன். எப்போதும் சில முக்கியஸ்தர்கள் தங்களோடு இருந்துகொண்டேயிருந்தனர். சிலபொழுது நாணமும்...''

""எங்கே, உனது கைகளைக் காட்டு'' என்றார் ஸ்வாமிகள்.

நந்தன், முழங்கால் வளைத்து, லேசே முதுகுவளைத்து ஸ்வாமிகள் முன்பாக தனது இருகரங்களையும் ஏந்தி நின்றான். தனது இரு திருக்கரங்களாலும் ஈர மிருத்திகையினை அள்ளி யெடுத்த ஸ்வாமிகள்...

""நந்தா, உனது உள்ளக்கிடக்கை எனக்குத் தெரிகிறது. ம்... இதைப் பெற்றுக்கொள். இந்த மண்ணோடு செல். பொன்னும் பெண்ணும் உன்னைத் தானே வந்தடையும்'' என ஆசிர்வதித்து, மிருத்திகையினை அவனது கரத்தில் கொடுத்தார்.

கண்களில் பரவசக் கண்ணீரோடு மிருத்திகையினைப் பெற்றுக்கொண்டு ஸ்வாமிகளை சாஷ்டாங்கமாக வணங்கி னான்.

""ம்... சென்று வா. அனைத்தும் முடித்து உன் மனம் சொல்லும்போது மடம் திரும்பி வா. எப்போதும் உனக்கிங்கு இடமுண்டு'' என மறுபடி ஆசிர்வதிக்க, நந்தன் மகிழ்வுடன் தலைவணங்கினான்.

"நாம் விடைபெறப் போகிறோம் என்பதை ஸ்வாமிகள் தெரிந்து கொண்டு வெறும் மண்ணைத் தருகிறாரே' என அவன் எண்ணாமல், கிடைத்தற் கரிய வரமாய்க் கருதி அதை ஒரு சுத்தமான குவளையினுள்ளே வைத்து, அதை வஸ்திரத்தில் சுற்றி..

சிறிது பழங்களையும், வழியில் தேவைப் படுமென சிறிது உணவையும் ஸ்ரீமடத்தில் பெற்றுக்கொண்டு தனது ஊர் நோக்கிப் பயணப்படலானான்.

"ஸ்வாமிகள் ஆசியால், நல்லதோர் குடும்பத்திலிருந்து நற்பண்புள்ள பெண்ணை பெற்றோர் தேர்ந்தெடுத்து தனக்கு மணமுடிக்க, தனது வாழ்க்கை ஆரம்பிக்கும். அவளும் நல்ல பக்தியுடையவளாக, வருங்காலத்தில் தன்னோடு ஸ்ரீமடத்தில் சேவைசெய்யப் பெருந்துணையாய் இருக்கும் துணைவியாக வாய்த்தால் எப்பேற்பட்ட ஆசிர்வாதமாய் இருக்கும்...' என்ற பல கலவையான சந்தோஷ எதிர்பார்ப்பில், யோசனையின் ஆனந்தத்தில் அவன் நடந்து கொண்டேயிருந்தான். குதூகலத்தில் அவன் எங்கும் நில்லாது தனது பயணத்தைத் தொடர்ந்துகொண்டேயிருந்தான். வெகு தொலைவு நடந்த களைப்பு காரணமாகவும், பசியின் பொருட்டும் நந்தனின் பார்வை ஓய்வெடுக்க இடம் தேடலாயிற்று. "அதோ... அந்த விசாலமான வீடு. அதன் வெளியில் நம் போன்ற வழிப்போக்கர் தங்க ஏதுவாக பெரிய திண்ணை. அங்கு தங்கிப் பசியாறி, சற்று இளைப்பாறியும் செல்லலாம்' என்று நினைத்து, அங்கே சென்று தனது உடமைகளை இறக்கிவைத்து, கையுடன் கொணர்ந்த நீரால் கை கால்களை சுத்தம் செய்து, பின் உணவைப் பிரித்துப் பசியாறினான்.

அப்போது வீட்டினுள்ளே ஒரு பெண்ணின் முனகல் கேட்டது. அச்சமயம் வீட்டிலிருந்து வெளியில் வந்த ஆணின் முகம் பெரிதும் வாடியிருந்தது. நடுத்தர வயதைக்கடந்த அவர் நந்தனைக் கண்ட வுடன் அருகில் வந்தார்.

""ஐயா, தாங்கள் யார்? நிரம்ப களைத்திருக்கிறீர் கள்போல் தெரிகிறது. சாப்பிட உணவு தயார் செய்கிறோம். அதுவரை பொறுத் திருக்கவேண்டும்...''

"ஆஹா... என்ன ஒரு கனிவான உபசரிப்பு' என்று மகிழ்ந்தவன், ""ஐயா, கையுடன் உணவு கொண்டுவந்திருந்தேன். உண்டும் முடித்துவிட்டேன்.

அருந்த நீர் கொடுத்தால் போதும். மேலும்... உள்ளிருந்து ஒரு பெண்மணியின் முனகல் கேட்கிறதே... ஏதேனும் சுகவீனமோ?'' என்று கேட்டான்.

""இல்லை ஐயா. எனது மனைவி பிரசவ வலியில் இருக்கிறாள். உள்ளே எனது மைத்துனி உதவியுடன் அனுபவ முதிர்ச்சிபெற்ற வயதான மருத்துவச்சி பிரசவம் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.''

""பயப்பட வேண்டாம். சுகப்பிரசவமாகி விடும். நான் பிரார்த்திக்கிறேன் ஐயா...''

""என்ன இருந்து என்ன பிரயோஜனம்.

இதுவரை பல பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் உயிர் தங்கியதில்லை. இந்த குழந்தையாவது வம்சம் சொல்ல ஜனிக்குமோ என்பதில் இன்னும் கவலை கூடுகிறது.''

""கவலையற்க ஐயா. நிச்சயம் குழந்தை உயிர் ஜனிக்கும்.''

""இருந்தாலும்... சரி... உங்களுக்கு இதுபற்றி அதிகம் பிரஸ்தாபிக்க முடியாது. இன்னும் மூன்று மணி நேரமாகும் என்று அந்த முதியவள் கூறினாள். நான் உள்ளே சென்று வருகிறேன். களைப்பாறுங்கள்'' என்றவர் பதட்டமுடன் சென்றார்.

"குருவே, ஜகம் போற்றும் சத்குருவே.

இறந்தவர்களையும் உயிர்ப்பித்த ஞானியே. இந்த இல்லத்துப் பெண்மணிக்கு சுகப் பிரசவமாக கருணை செய்யுங்கள். இந்த குழந்தை பிறந்து உயிர்தங்கி அவர் வம்சம் விளங்க அருள்செய்யுங்கள். மாம்பழ ரசத்தில் மூழ்கி இறந்த தேசாயின் குழந்தையையும், சர்ப்பம் தீண்டி இறந்த அந்த இஸ்லாமிய மன்னரின் மகனையும் உயிர்ப்பித்தவரே. இந்த சிசுவையும் காப்பாற்றுவீராக' என வேண்டிக்கொண்ட நந்தன் களைப்பில் கண்ணயர்ந்துவிட்டான்.

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த நந்தன் பலவந்தமாக எழுப்பப்பட்டான். அவன் எதிரே அசிங்கத்தோற்றத்தில், ஆஜானுபாகு வான உருவத்தில் பிரம்ம ராட்சஸன் நின்றுகொண்டிருந்தான். பயத்தில் பேச்சு வரவில்லை நந்தனுக்கு. ""பயப்பட வேண்டாம் மானிடா. எனக் கொரு உதவி செய்வாயா?'' என்றான் பிரம்ம ராட்சஸன்.

r

தன்னை சுதாரித்துக்கொண்ட நந்தன், ""பயமா? எனக்கா? என்னைக் கோழையாக நினைத்தாயா? உன்னை என்ன செய்கிறேன் பார்'' என்றான்.

""சரி சரி. பொறு. உனது பையில் என்ன வைத்திருக்கிறாய்? அதை அப்பாலே வீசி எறி'' என்றான் அவசரத்துடன்.

""ஏன்?''

""அந்த பையிலிருந்து ஏதோ ஒன்று... காற்றில் அரூபமாக வந்து இந்த வீட்டில் என்னை நுழையவிடாது தடுக்கிறது.

அந்த பையை அப்பால் வீசி எறி...'' பிரம்ம ராட்சஸன் பெரிதும் கெஞ்சினான்.

""அதற்காக நான் உனக்கு நிறைய பொன்னும் பொருளும் தருகிறேன்.'' இன்னும் கெஞ்சினான்.

""உன் பேச்சை நம்ப முடியாது.''

""இல்லை... இப்போது சொல்... உனக்கு என்னென்ன வேண்டும்?''

""நீ முன்பு சொன்ன பொன்னும் பொருளும்...''

""இதோ வருகிறேன்'' என்று சொல்லிச் சென்ற சில நிமிடங்களில் திரும்பி வந்தான். அவன் தோளில் ஒரு பெரும் தங்கக்குடம்.

அதனுள்ளே நவமணிகளும் தங்கக்காசுகளும் நிரம்பியிருந்தன.

""இதோ... இதை வைத்துக்கொள். முதலில் அந்த துணிமூட்டையில் இருப்பதை...''

""நீ ஏன் வீட்டிற்கு போவதற்கு அவசரப்படுகிறாய்?''

""சொல்கிறேன்... நான். முன்ஜென்மத்தில் பரம ஏழை. இதோ, இந்த வீட்டின் தலைவன் அந்த ஜென்மத்தில் பெரும் செல்வந்தன். நான் பட்ட கடனைத் தீர்க்க எனது ஏழு குழந்தைகளையும் இவன் கொத்தடிமைகளாய் வைத்து வதைத்தான். இவனது கொடுமை தாங்காது எனது மனைவி குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து இறந்தாள். நான் அவனைக் கொன்றதனால் இந்த ஜென்மத்தில் இப்படி ஆனேன். இதோ, இந்த ஜென்மத்திலும் எனது வன்மம் அடங்காது, இதுவரை அவனது ஆறு குழந்தைகளைக் கொன்றும் எனது தாகம் அடங்கவில்லை. இதோ, இப்போது பிறந்த அந்த ஏழாவது குழந்தையையும் கொல்லவேண்டும். வழி மறுக்கும் உனது துணிமூட்டையை வீசியெறி...''

""பேசிக்கொண்டிருக்கும்போதே நந்தன் குவளையிலிருந்து மிருத்திகையினை எடுத்து நீரில் கலந்து எதிரில் நின்ற பிரம்ம ராட்சஸன்மீது தெளிக்க, ""ஐயோ! எரிகிறதே எரிகிறதே'' என்று அலறியபடி எரிந்து பஸ்பமானான்.

பெருத்த சத்தம் கேட்டு வெளியில் வந்த அந்த குடும்பத் தலைவன் நடந்தது முழுவதும் கேட்டு பிரம்மித்துப் போனான்.

கண்களில் நீர் பெருக, ""ஐயா, தாங்கள் ஸ்ரீமடத்திலிருந்து வந்தது தெரியாமல் போனதே... ஸ்வாமி ராகவேந்திரரின் சீடர் என்பது பெருமைக்குரிய விஷயமாயிற்றே! முக்காலமும் உணர்ந்த அந்த மகான் எனது மகவைக் காப்பாற்றவே தங்களை அனுப்பியதாக நான் நம்புகிறேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லையெனில், எனது மைத்துனி திருமண வயதில் இருக்கிறாள். அவளைத் தாங்கள் மனைவியாகக் கைப்பிடிக்கலாமே'' என்றார்.

நந்தனுக்கு கண்ணீர் பெருகிற்று. தன் குருவின் மகிமையின் வெளிப்பாடு எத்தனை அபாரமான ஒன்று. தனக்கு பெண்ணும் பொன்னும் கிடைக்குமென்று ஆசிர்வதித்ததன் சூட்சுமம்... "குருவே சரணம்... குருவே சரணம்...' மனம் அரற்றிற்று நந்தனுக்கு.

அன்று ஸ்ரீமடத்தில் ஸ்ரீராகவேந்திரர் வேதாந்த வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார்.

""பிள்ளைகளே, பொன்னை நெருப்பிலிட்டுக் காய்ச்சக் காய்ச்ச ஜொலிக்கும் ஒளியோடு விளங்கும்.

அதுபோல துறவிகளுக்கு துன்பங்களும் இன்னல்களும் வருத்த வருத்தவே அவர்களுக்கு மெய்யறிவு பெருகும். தவம் செய்வதால் வரும் இயல்பான சக்தியால் மரணத்தையும் தவிர்க்கமுடியும். தவம் கடுமையான பயிற்சியினாலும், மனவலிமையினாலும், தூய எண்ணங்களினா லும் கைகூடும்.

கோபமே சத்ரு. கோபமே எதிரி. கோபமே அழிவு. எவரொருவர் கோபமென் பதை அறவே தன்னிலிருந்து விலக்கு கிறாரோ அவரே நினைத்ததை எல்லாம் கையகப்படுத்தும் வலிமை பெறுவார். பரம்பொருளான ஸ்ரீமன் நாராயணனின் நாம ஸ்மரணையில் சிந்தை வைத்தவர்கள் யாரையும் நிந்தனை செய்யமாட்டார்கள். வேறெவரேனும் நிந்தனை செய்தாலும் அது அந்த தூயவரின் சிந்தையில் குடிபுகாது. காரணம், பரமபவித்ர குணம் அவரிடம் குடிகொண்டுவிடும். அந்நிலை பெற்ற எவரொருவரையும் கோபமும் வன்மமும் கள்ளமும் மட்டுமின்றி, பெரும் தீங்கிழைக்கும் குணங்களும் அணுகாது. இது கிரகஸ்தர்கள் என்னும் இல்லறத்த வர்களுக்கும் பொருந்தும். இல்லறத்தின்பால் சத்தியமும் நேர்மையும் கொண்டு, இல்லற தர்மத்தை வழுவாது கடைப்பிடிப்பது வுமேகூட தெய்வீக மாகும். ஏன், அதை வழிபாட்டின் இன்னொரு நிலை என்றும்கூட எடுத்துக் கொள்ளலாம். அந்த வழிபாடு வழுவாது, முறை தவறாது ஒழுங் காக நடைபெறின் இல்லறம் சுபிட்சமாகும்.

அதைப்போலவே இறைவழிபாடு நிலை தடுமாறாது, வழுவாது, நேர்மை தவறாது நடை பெறின் அவருக்கு வாத்சல்யமான குரு அமைவார். அவரே உன்னை மிருதுவாக்கு வார். உன்னைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று இறையை உணரவைப்பார். ஒவ்வொரு வருக்கும்...'' என்று தொடர்ந்து வகுப் பெடுக்கையில் ஸ்ரீராகவேந்திரரின் உரை தடைப்பட்டது.

சட்டென்று கண்மூடி அமர்ந்தார். உதடுகள் இணைந்து மௌனமே வெளிப்பட்டது. அவரது தேகம் சிலிர்த்து சிலிர்த்து அடங்கியது. சட்டென்று முகத்தில் தெய்வீகப் புன்னகை தவழ்ந்தது. ""நல்லது நல்லது. என்னது... இப்போதோ... ஆஹா! கடைசி நொடியில் எனக்கு பாக்கியமா. இதோ...

இதோ... வருகிறேன். அந்தத் திருநாளை எனக்கு உணர்த்துங்கள். ஆம்; இன்றேதான்... ஜெப மாலையா... தங்களிடமிருந்தா... ஆஹா! பாக்கியம் பாக்கியம்...'' என்றவர் கண்களைத் திறந்தார். விரைப்பாய் எழுந்து நின்றவர், வேகமாக வெளியில் விரைந்து நடக்கலானார். திறந்தவெளி முற்றம் வந்து வானம் பார்த்து வணங்கி நின்றார். சில நிமிடங்கள் கடந்தன. ஸ்ரீராகவேந்திரரைத் தொடர்ந்து வெளியில் வந்த சீடர்களும் அவரைப்போலவே வானம் பார்த்து நிற்க... மெல்லிய மணியோசை அந்தரத்தில் கேட்டது. அந்த வானவெளியில் தெய்வீகப்பிரகாசம் எழுந்தது. மெல்ல இரு திருக்கரங்கள் புலப்பட்டன. அக்கரங்கள் பின் சாய்ந்து பிறகு முன்வந்து வாழ்த்தின. பிறகு அதில் வலக்கரம் மட்டும் பொறு என்று என்ற பாவனையில் சட்டென்று நிலையாக நின்றது.

ஸ்ரீராகவேந்திரர் பரவசமாகப் பார்த்துக் கொண்டே இருக்க, அந்த கரம் சுட்டு விரலையும் நடுவிரலையும் மட்டும் உயர்த்தி, இரண்டு என்று காட்டி தன் நிலை வந்தது. மறுபடி இரண்டு என்று காட்டி தன் நிலை வந்தது. பிறகும் மறுபடி இரண்டு என்று காட்டி தன் நிலை வந்து வாழ்த்தியது. ஸ்ரீராகவேந்திரர், ""ஆஹா ஆஹா! துல்லியம்... அந்த நாளை இப்போதே உணர்ந்தேன்'' என்று வாய்விட்டுக் கூறினார்.

அவர் தனது இருகரங்களை முன்னால் நீட்ட, அதில் மேலிருந்து ஒரு அழகிய துளசிமாலை விழுந்தது. ஸ்ரீராகவேந்திரர் அதை கண்களில் ஒற்றிக்கொண்டார். பின் வானம் பார்க்க, அந்த இரு கரங்களும் அவரை வாழ்த்தி மறைந்தன. கூடியிருந்தோர் பிரம்மையுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அன்று கும்பேஸ்வரர் கோவிலிலிருந்து முக்கியஸ்தர்களும் அர்ச்சகர்களும் ராயரை தரிசிக்க மகா பிரசாதம் கொண்டுவந்திருந்த னர். ஆம்; ஸ்ரீராகவேந்திரர் அவர்களை அன்று ஸ்ரீமடம் வர ஏற்கெனவே பணித்திருந்தார்.

அவர்களும் ஸ்ரீமடத்து சீடர்களும் மட்டு மின்றி, சில வேலையாட்களும்கூட இந்த வானத்து அற்புதத்தைப் பார்த்து அதிசயித்து நின்றனர். "என்னவென்று புரியவில்லை. ஆனால் அந்த தெய்வீகம் எதையோ உணர்த்துகிறது. அதுதான் என்னவென்று தெரியவில்லை' என குழம்பினர்.

அவரை மெல்ல நெருங்கிய லக்ஷ்மி நாராயணன் தயங்கித் தயங்கி பவ்யத்துடன் வினவலானான்.

""ஸ்வாமி, அடியேனுக்கு மட்டுமல்ல; அனைவருமே இந்த அற்புதம் கண்டு அதிர்ந்து நிற்கிறோம். இந்த நிகழ்வு எதையோ சூகமாக உணர்த்துவதாக...''

""ஆஹா! சரியாகத்தான் சொன்னாய் குழந்தாய்...''

""அனைவருமே அதை அறிந்துகொள்ள ஆவலாய் உள்ளோம் ஐயனே. தாங்கள் தங்கள் திருவாக்கினால் அதைத் தெரியப்படுத்த வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம்''

என்றான் மேலும் பவ்யத்தோடு.

(தொடரும்)