இரண்டாம் பாகம்
மந்த்ராலய மகானின் சிலிர்ப்பூட்டும் தொடர்!
அரக்காணம் கோ.வீ. சுரேஷ்
6
ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளின் அற்புதங்கள் நிறைந்த வரலாறு, அவரது முற்பிறவிகளான பிரகலாதர் மற்றும் அதற்கடுத்த வியாஸராஜ தீர்த்தர் என்ற இரு பிறப்புத் தொடர்பினையும் கொண்டுள்ளது. அல்லது முற்பிறவியில் விடுபட்டதை மறுபிறவியில் பூர்த்திசெய்து சமன்செய்தும் பவித்ரமாக்குவதை இந்த திவ்ய சரித்திரத்தில் காண்பீர்கள்.
இரண்யனின் மகனாக பிரகலாதர் அவதாரம் செய்யும்முன், தாயின் கருவறையில் சிசுவாக இருக்கையிலேயே நாரத மகரிஷி குருவாய் இருந்து போதித்தார்.
அவ்வாறு பெற்ற கடனை தான் அடுத்து வியாஸராஜ தீர்த்தராகப் பிறவியெடுத்தபோது எவ்வாறு சமன்செய்தார் என்பது மிக சிலிர்ப்பான ஒன்று. அதுபோலவே இதே வியாஸராஜரிடம் கனகதாசர் என்ற மகானுபாவர் கேட்டதை, இந்தப் பிறவியில் ஸ்ரீராகவேந்திரர் எங்ஙனம் தீர்த்து வைத்தார் என்பதை உணர்கையில், தெய்வீகப் புருஷர்களுக்கே இம்மாபெரும் சக்தியும், அதை வெளிப்படுத்தக்கூட மறுஜென்மம் வரையிலான காலவரையறையை இறைவன் விதித்துள்ளான்போலும் என்ற வியப்பும் பன்மடங்காகிறது.
பதினைந்தாம் நூற்றாண்டில் கர்நாடக தேசத்தின் மத்தியில், ஹாவேளியில் காகினேலே என்ற சிறிய கிராமத்தில், கௌடே பிரிவில் குருபர் என்ற இடையர்குலத்தில் பிறந்தவர் திம்மப்பா. இவர் தன் தகப்பனாருக்குப்பிறகு அம்மண்ணின் மன்னனின் படையில் தளபதியாக விளங்கியவர். பல போர்களில் அவரது வீரம் வெளிப்பட, மன்னருக்கே அவர்மீது தனிகவனம் வந்தது. அப்படியிருக்கும்போது ஒரு முரட்டுப் போரில் வீழ்ச்சியடைந்து மரணம் தப்பி உயிர்பிழைத்தார். பெருமாளே தன்னை உயிர்ப்பித்ததை உணர்ந்து பக்தி மார்க்கத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டார். தன் சிற்றூரில் குடிகொண்ட ஸ்ரீஹரியின் பெயரால் பல திவ்ய பாடல்களையும் (காகினேலே ஆதிகேசவா) கீர்த்தனைகளையும் இயற்றினார். கால்போன போக்கில் தனது குருவானவர் எங்குள்ளார்- யார் தனது குரு என சஞ்சரிக்கையில், நமது வியாஸராஜ தீர்த்தர் அப்போது உடுப்பி கிருஷ்ண மடத்தில் தங்கியிருப்பதைக் கேள்வியுற்று அத்திசை நோக்கிப் பயணித்தார்.
வியாஸராஜ தீர்த்தரின் கீர்த்தியும் மேன்மையும் உலகறிந்தது. அப்போதைய விஜயநகர சாம்ராஜ்ய சக்கரவர்த்தியான ஸ்ரீகிருஷ்ண தேவராயரின் ராஜகுருவாக விளங்கி, அவருக்குப் பெரும் ஆலோசனைகளை நல்கும் அரும்பணியை ராஜ்யத்தின் நன்மை பொருட்டு ஏற்றுக்கொண்டவர். தேசமெங்கும் பிரசித்தி பெற்றவர். பெரும் தாசக்கூட்டமே அவருக்கு சீடர் குழாமாயிருந்தது. இவரின் சீடர்களில் முக்கியமானவர் புரந்தரதாஸராவார். தனது வாழ்நாளில் ஏறக்குறைய எழுநூறு ஆஞ்சனேயர் விக்ரகங்களை ஸ்தாபித்தவர். நன்கு கவனித்தோமானால் ஸ்ரீராகவேந்திரர் தான் ஜீவனுடன் மூலப்பிருந்தத்தில் வீற்றிருக்க, நாடெங்கும் தனது மிருத்திகா பிருந்தாவனங்கள் எழுநூற்றைம் பது தோன்றவேண்டுமென விதித்திருந்தார். அவரின் முற்பிறவியான வியாஸராஜ தீர்த்தர் எழுநூற்றுக்கும் மேலாக ஆஞ்சனேயரை ஸ்தாபித்துச் சென்றிருப்பது அவர்களது பிறவித் தொடர்பைக் காட்டும் ஆச்சரியமான விஷயம்.
அப்பேற்பட்ட மகாசக்தி வாய்ந்த மகானான ஸ்ரீவியாஸராஜ தீர்த்தரை-அந்த மத்வ சம்பிரதாய மடாதிபதியை திம்மப்பர் சந்திக்கச் சென்றபோது வியாஸராஜ தீர்த்தர் சீடர்களுக்கு போதித்துக்கொண்டிருந்தார்.
அவர் பார்வையில் படும்படி இவர் நின்றுகொள்ள, வியாஸராஜர் கவனம் அவர் பக்கம் திரும்பவில்லை. இது தினசரி தொடர்ந்தது. பல நாட்களுமாயிற்று. திம்மப்பர் சோர்வடையவில்லை. அப்படியிருக்கும்போது ஒரு நாள் மிக முக்கிய தர்க்கம் நடந்து முடிந்தது. பிறகு வேதாந்த விசாரம் ஆரம்பமாயிற்று.
""குருவே, மோட்சம் என்பது நிஜமான ஒன்றா? அவ்வாறாயின் அதனைப்பெற தகுதியானவர்கள் யார்?'' என ஒரு சீடர் வினவினான்.
""நல்லது. ஒரு சீடன் தான் மட்டுமின்றி, தன்னைப்போன்று தன் யோசனையை ஒட்டிய அல்லது அதைச் சார்ந்த கேள்வியையும், அதன் சீரான விளக்கத்தையும் கேட்டுப் பெறுதல் அவனது அதிஉன்னத கடமை. நல்லது நல்லது. எனது சீடன் இந்த தெளிதலுக்கு முயல்வது எனக்குப் பெருமையப்பா. நல்ல கேள்வி. இறைவன் எப்படி சத்தியமோ- இறையைப் புரிந்துகொள்ளல் எவ்வளவு சத்தியமோ, அதேபோன்று பரிபூரண மான உண்மையானது மோட்சம். மானுடன் தான் வாழ்ந்த காலத்தில் நெறிதவறாத அவனது வாழ்க்கை, நேர்மையுடனான- சத்தியமான பண்புகள், அவன் செய்த புண்ணியங்கள், வாய்மை போன்றவையே ஒருவனுக்கு மோட்சத்தை அருளுகின்றன. இதன் அடிப்படையில்தான் தகுதியினை இறைவன் வரையறுத்துள்ளான். அந்த ஸ்ரீஹரியானவன் புருஷார்த்தம் நிறைந்த பலருக்கு மோட்சமளித்துள்ளான்.''
""இதுதான் தகுதியா குருவே?''
""நிச்சயமாக! சத்தியம், நேர்மை, வாய்மை, நெறிபிசகாத வாழ்க்கை, நீதி தவறாது- தர்மநெறி தவறாது வாழ்கின்றவன் எவனோ அவன் இத்தகுதியுடையவனாகிறான். மூச்சடக்கித் தவம்செய்ய வேண்டியதில்லை. இல்வாழ்க்கையில் இருந்துகொண்டே மேற்படி சகல தகுதிகள் கொண்டவனுக்கும் இது சாலப்பொருந்தும். சரி; நான் உங்களைப் பார்த்துக் கேட்கிறேன். உங்களில் மோட்சத்திற்கு போகப்போகும் அதிகாரி யார்?'' என்று வியாஸராஜ தீர்த்தர் அங்கே குழுமியிருந்தோரைப் பார்த்துக்கேட்டார்.
""சொல்லப்பா... நீ போவாயா? சொல் நீ போவாயோ... நீ... நீ...'' என்று ஒவ்வொருவராகப் பார்த்துக்கேட்க, மௌனமே அங்கு மேலோங்கி நிற்க, ஒரு மூலையிலிருந்து ""நான் போனால் போகலாம்'' (நானு ஹேதரே ஹோதெனு) என்ற குரல் கணீரென்று எழுந்தது. யாரென்று எல்லாரும் திரும்பிப் பார்த்தனர்.
""யாரப்பா அது? எழுந்து நில்'' என்றார் வியாஸராஜ தீர்த்தர். தயங்கியபடியே மெல்ல எழுந்து கூச்சத்துடன் தலைகுனிந்து நின்றார் திம்மப்பா. கசங்கிய உடை. நல்ல உயரம். அடர்த்தியான கேசம். நெற்றியில் திருமண் தரித்து அவர் நின்றதைக் கண்டவர்களில் இருவர் கோபப்பட்டு எழுந்தனர்.
""யாரடா நீ. கர்வ
மாய்... "நான் போனால்
போவேன்' என்கிறாய்.
இங்கு எப்பேற்பட்ட வர்கள் குழுமியிருக்கிறார்கள் தெரியுமா. நாங்கள் என்ன உன்னைவிட மட்டமா...'' என்று ஒருவன் அவரை இழுத்துத்தள்ள, கையிடுக்கிலிருந்த ஓலைச்சுவடிக்கட்டுகள் சிதறி விழ, திம்மப்பா தரையில் வீழ்த்தப்பட்டார்.
""ஏய் நிறுத்தப்பா. என்ன இது முரட்டுத் தனம். தூக்குங்கள் அவரை'' என்றார். கண்ணோரங்களில் நீர்தளும்பி நிற்கும் அவரைக் கண்டவுடன் வியாஸராஜருக்குப் புரிந்துவிட்டது- அவர் தெளிந்தவர் என்பது. தன்னருகினில் நிறுத்தப்பட்டவரை ஏறிட்டவர், ""சொல். நீ தெரிந்துதான் சொன்னாயா... சொல்'' என்றார்.
""ஸ்வாமிகள் மன்னிக்க வேண்டும். இவன் கடந்த சில நாட்களாக இங்கு வருகிறான். நமது பாடங்களையும் விசாரங்களையும் ஓரமாய் இருந்து கேட்கிறான். அப்போதைக்கு அப்போது குறிப்பெடுப்பதுபோல் ஓலை நறுக்கினில் எழுதுவான். மனம் சரியில்லாதவன் போலுள்ளான். பெயர் மட்டும் சொன்னான் திம்மப்பாவாம்.''
குரு புன்னகைத்தார். ""சொல் திம்மப்பா. நீ தெரிந்துதான் சொன்னாயா?'' என்றார் சற்றே குரல் உயர்த்தி.
""ஆம். தெளிந்துதான் சொன்னேன் ஸ்வாமி'' என்றார் மென்மையாக.
""நான் கேட்டது "தெரிந்து' என்று. நீ கூறியது "தெளிந்து' என்று. எப்படி என்று கூறு.''
""நான் என்ற அகங்காரம் என்னை விட்டுப்போனால் நான் மோட்சம் போவேன் என்ற அர்த்தத்தில் கூறினேன் ஸ்வாமி'' என்றார் தலைவணங்கி. ஸ்வாமிகள் மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார்.
""ஒரு முழு நூலில் சொல்லவேண்டிய விளக்கத்தை ஒற்றை வரியில் சொல்லிவிட்டாயே. ஆகா... அருமையான விளக்கம். சரி எதற்காக இங்கு சுற்றி வருகிறாய்?''
""நீங்கள் என்னை சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டி...''
""உன்னால் எனக்குப் பெருமை உண்டாகும் திம்மப்பா. உன்னை எனது சீடனாக ஏற்கிறேன். தங்கம் தனது வலிமையைத் தாங்கி சுடப்பட்டு தட்டப்பட்டு அடிக்கப்பட்டு திரும்பத் திருப்ப உருக்கப்பட்டு பொறுமை காத்தே அழகிய ஆபரணமாக உருப்பெறுகிறது. நீ கனகம் (தங்கம்) போன்றவன். அதென்ன ஓலைக்கட்டுகள்?''
""நான் எழுதிய நூல்கள் இவை ஸ்வாமி.''
""என்னென்ன கூறு...''
""ஹரி பக்தி சாரம், நரசிம்ம ஸ்தவம் என்ற துதிப்பாடல்கள். ராமதான்ய சரித்ரே, நளசரித்ரே, மோகன தரங்கினி என்பன. இதில் மோகன தரங்கினி மட்டும் முற்றுப் பெறவில்லை.''
""ஆஹா அப்படியா! சரி; அதென்ன ராமதான்ய சரித்திரம்? முழுமையாக எடுத்துக்கூறு. எல்லாரும் கேட்போம்'' என்றார் புன்னகைத்து.
ஒரு நாள் சபா மண்டபத்தில் ராமன் ராஜாராமனாக வீற்றிருந்து வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தான். அரிசியும் கேழ்வரகும் தங்கள் சார்பாக வழக்கு கொணர்ந்தன. அரிசி, "நானே உயர்ந்தவன். மன்னர், பிரபுக்களின் விருந்துகளுக்கென்று பிரதானமாய் என்னைத்தான் உணவாய் மகிழ்வாய் ஏற்பார்கள்' என்றது பெருமை யுடன். கேழ்வரகு, "நானும் உயர்ந்தவன்தான். நான் உழைப்பாளிகளின் உற்ற உணவு. குடியானவர்கள், பாட்டாளிகள் என்று கீழ்த்தட்டு மக்களின் பசியாற்றுபவன்.
அவர்கள் திடமாய் இருந்தால்தான் அரிசியான உன்னை விளைவிக்க முடியும். நான் அவர்களுக்கு திடமும் சக்தியும் கொடுப்பவன்' என்றது.
பொறுமையுடன் அடுத்தடுத்து இரண்டின் வாதங்களையும் கேட்ட ஸ்ரீராமன் இரண்டினையும் ஆறுமாத காலம் சிறையிலடைத்தார். ஆறு மாதங் களுக்குப்பிறகு அவற்றுக்கு விடுதலை அளிக்க, அரிசி உளுத்துப் போயிருந்தது. கேழ்வரகு திடமாய் இருக்க, மன்னன் ராமன் "கேழ்வரகே உயர்ந்தது' என தீர்ப்பளித்தான்.
ஏற்ற இறக்கங்களுடன் இந்த "ராமதான்ய சரித்ரே'வினை வாசித்து முடிக்க...
""பலேபலே! மிக அருமையான கற்பனை. கதைமூலம் அடித்தட்டு மக்களும் ஆண்டவனின் ஆசிபெற மிகத்தகுதியானவர்கள் என்னும் நல்ல கருத்தை ராமன் தீர்ப்பாய் வெளிப்படுத்தியிருக்கிறாய். நல்லது நல்லது. ஆயுஸ்மான் பவ... நீ நிச்சயம் மோட்சம் போவாய்...'' என்றார் ஆரவார சந்தோஷத்துடன்.
""ஸ்வாமி, எனது விண்ணப்பம் ஒன்று...''
""என்னப்பா உனது தேவை?''
""எனக்கான மந்திரோபதேசம்?''
""ம்... சரியப்பா. கனகனுக்கு கோண மந்திரம்'' என்று ஆசிதந்து எழுந்து சென்றுவிட்டார்.
குருபனான திம்மப்பா "கோண... கோண...' என்று குரு உபதேசித்ததை மந்திரமாக மானசீகமாக உச்சரித்துகொண்டே இருக்க, ஆழ்ந்த நம்பிக்கை பலத்தினால் உண்மையாகவே ஒரு நிஜ கோணம் (எருமை) உருவாகி நின்றது. அதை அழைத்துக்கொண்டு வியாஸராஜர்முன்பு பணிவுடன் நிற்க, வியாஸராஜர் புன்னகைத்து அவருக்கு மந்திர தீட்சையளித்து கனகதாசன் என்று நாமகரணம் சூட்டினார்.
கனகதாசரும் புரந்தரதாசரைப் போன்றே வியாஸராஜரின் அபிமானத் தைப் பெற்றிருந்தது மற்ற சீடர்களிடையே காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. இதை வியாஸராஜ தீர்த்தரும் அறிந்தே இருந்ததால், அவரின் சிறப்பினை எடுத்துக்காட்ட ஒரு உபாயம் செய்தார். கனகர் உட்பட அனைத்து சீடர்களிடமும் வாழைப்பழம் ஒன்றைக் கொடுத்து, யாரும் பார்க்காதபடி சாப்பிட்டு வந்து சொல்லச் சொன்னார். இருட்டினில் சென்று சாப்பிட்டு மற்றவர்கள் திரும்பிவிட, கனகரும் புரந்தரரும் மட்டும் பழத்துடன் வந்தனர். வியாஸராஜர் கனகரிடம், ""ஏன் சாப்பிடவில்லை'' என வினவ, ""எங்கெங்கும் நான் வணங்கும் ஸ்ரீஹரி நிறைந்திருக்க, நான் யாரும் அறியாமல் எப்படி உண்பது?'' என்றார்.
வியாஸசராஜர் பின் அனைவரும் அறிய பேசலானார். ""சீடர்களே, கனகனை நீங்கள் அனைவரும் சாதாரணமாக நினைத்துவிட்டீர்கள். மகாபராக்கிரமசாலி. குருபர்- தாழ்ந்த குலத்தவன் என நினைப்பது தவறு. இடையர் குலத்திலேயே மனிதனாக வாழ்ந்தவன். பல போர்களில் வெற்றிகண்ட வீரனாகத் திகழ்ந்து வேங்கடவனின் தீவிர பக்தனுமானவன். எமனின் அம்சமான இவனைப் பார்த்த அன்றே உணர்ந்ததனா லேயே கோண (எருமை) மந்திரம் சொன்னேன்.
அது கனகனுக்கு சித்தியாகிவிட்டது. நான் மறுபடியும் சொல்கிறேன். இவன் நிச்சயம் மோட்சம் போவானென்பது உறுதி'' என்றார்.
ஒருமுறை உடுப்பி கிருஷ்ணரை தரிசிக்கச் சென்ற இவரை தாழ்ந்த குலத்தவன் என்று கோவில் பிராமணர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. மிகுந்த மனவலியுடன் மனத்துயரைப் பாட்டாக தம்பூராவில் இசைத்து மனமுருகி கோவிலின் பின்புறம் வந்துநின்று வேண்டிப்பாட, கிழக்கு நோக்கி மத்துடன் நின்ற கோலத்தில் ஸ்ரீமத்வர் பிரதிஷ்டை செய்திருந்த ஸ்ரீகிருஷ்ண விக்ரகம் மேற்கு நோக்கித் திரும்பி நின்று, அவர் தரிசிக்க சுவரை விரிசல் செய்தும் அருள்பாலித்தார். அப்போதைய உடுப்பி பீடாதிபதியும் இதுபற்றி அறிந்து, கனகரை அழைத்துச் சிறப்பித்தார். இன்றுகூட கனகதாசர் தரிசித்த சுவர் விரிசலை துவாரமாக்கி, மக்கள் வழிபடும் அப்பகுதி யினை கனககிண்டி (கனக துவாரம்) என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கிறார்கள். இவ்வளவு மகத்துவமான கனகரின் வரலாற்றுக்கும், ஸ்ரீராகவேந்திரர் வந்து தங்கிய மான்வி அனுமன் கோவிலுக்கும் என்ன தொடர்பிருக்கிறது என்பதை இனி நீங்கள் அறிந்துகொள்ளப் போகிறீர்கள்.
ஸ்ரீஸ்வாமிகள் காலை தனது நியம நிஷ்டைகள் அனைத்தும் முடித்து சிறு பிரசங்கமும், மக்களுக்கு அறிவுரை கூறும் உபதேசமும் செய்து கொண்டிருந்தார். அப்போதெல்லாம் கோவில்களில் உபன்யாசத்திற்கென்றே சிறப்பாக உயர்ந்த மேடையுடனான சிறு மண்டபம் ஆங்காங்கே விளக்கு மாடங்களுடன் அமைந்திருக்கும். ஸ்ரீராகவேந்திரர் அன்று மதியம் நெருங்குவதற்கு முன்பாகவே தனது அருளுரையை நிகழ்த்திக்கொண்டிருந்தார். அது சாதுர்மாஸ்ய விரத காலம். அவர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு நேரெதிரே கோவிலின் வாசற்பகுதி வெளியில், அழுக்கான வேட்டியுடனும், இடுப்பினில் செருகிய சிறு பையுடனும், கையினில் சிறு தடியுடனும் கருத்த திடமான உடலமைப்பு கொண்ட ஒருவன் இடுப்பு வளைந்து மரியாதை செய்யும் பாவனையுடன் சுவாமிகளை கும்பிட்டவாறு நின்றுகொண்டிருந்தான். தனது கும்பிடும் பாவனையை சற்றும் மாற்றாது, பக்தியுடன் இமைக்காது தரிசிப்பதே தனது பாக்கியம் என்ற நிலையில் வழுவாது ஸ்திரமாய் நின்றுகொண்டேயிருந்தான். ஸ்வாமிகள் உரை நிகழ்த்திகொண்டேயிருக்கையில் சில நிமிட இடைவெளிகளில் அவர் பார்வை வெளிச்சென்று இடறி நின்று பின் மறுபடி உள் திரும்புவதும், பின் வெளிச்செல்வதுமாக இருக்க, மேடை அருகே நின்றிருந்த பித்ருஹள்ளி சீனிவாசாச்சார்யார் என்ற பெயர் கொண்ட அந்த பிராமணர் இதைக் கண்ணுற்றார். அவர் மிகுந்த ஜாதி மற்றும் குலப்பிடிமானமுள்ள, முரட்டு கௌரவம் கொண்ட பிராமணர். உடன் வெளிச்சென்றவர் அவரைக் கோபமாய் விரட்டலானார். இருந்தும் அந்த கருத்த நிறத்தினன் நகரவேயில்லை. பிராமணருக்கு கோபம் அதிகரிக்க, ""இப்போது இங்கிருந்து போகப்போகிறாயா இல்லையா. உன்னை அடித்து அப்புறப்படுத்த வேண்டியிருக்கும்'' என்று சப்தமிட்டார்.
ஸ்வாமிகளின் உரை தடைப்பட்டது. விஷயமறிந்ததும், ""வெளியில் இருப்பவரை உள்ளே வர அனுமதித்து அழைத்து வாருங்கள்'' என்றார்.
""ஸ்வாமி, அவன் தாழ்ந்த குலத்தினன்.
அவனை கோவிலுக்குள் அனுமதிக்கக் கூடாது.''
""தாழ்ந்த குலத்தினன் என்றால்?''
""அவன் இடையன் ஸ்வாமி. யாதவன் அவன்.''
""யாதவன். ம்... ஸ்ரீகிருஷ்ணனும் இடையன்
தானே. வெளியில் இருப்பது யாதவனல்ல; மாதவம் செய்தவன். காலம் இப்போதுதான் அவனுக்கு கனிந்திருக்கின்றது. உள்ளே வரச்சொல்லுங்கள்'' என்றவுடன் அவர் மௌனமானார்.
மிகுந்த சங்கோஜத்துடனும் படபடப்பு டனும் உள்ளே வந்து முதுகு வளைந்து வணங்கி நின்றவனை புன்னகையுடன் நோக்கிய ஸ்வாமிகள், ""என்ன கனகா, நலமா? மோட்சம் வேண்டுமா இப்போது?'' என்றார்.
(தொடரும்)