12
இரண்டாம் பாகம்
மந்த்ராலய மகானின் சிலிர்ப்பூட்டும் தொடர்!
ஸ்ரீராகவேந்திரர் மெல்ல விழி மலர்ந்தார். தன்னரு கில் வெகுபவ்யமாய் சிரம்தாழ்த்தி முதுகு வளைந்து வணங்கியபடி நின்றிருந்த தஞ்சை மன்னரை இருகரம் தூக்கி வாழ்த்தினார். மன்னரது விழிகளில் கண்ணீர் பொங்கி வழிந்தது.
""மக்கள்மீது வாத்சல்யமான பாசம்காட்டும் மன்னவனைப் பார்க்கும்போது, உமது மென்மையின் விலாசம் வெகுவிசாலம்'' என்றார் ஸ்வாமி ராகவேந்திரர்.
""தாங்கள் கருணைகொண்டு கடாட்சித்தருள் செய்வித்தமைக்கு, மக்கள்மீது தாங்கள் எவ்வளவு ப்ரியம் கொண்டிருக்கின்றீர்கள்- சகல ஜீவன்களுக்கும் தங்களது அருள் பரிபூரணமாக விகசிக்க வேண்டும் என்பதை தாங்கள் கருத்தில் கொண்டிருக்கின்றீர்கள் என்பதை நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. தங்களது பீஜாட்சர அற்புதம் எமது தஞ்சை அரண் மனையில் நிகழ்ந்து அரண்மனை மேலும் புனித மடைந்துவிட்டது'' என்றார் மன்னர்.
""நல்லது. முதலில் மனிதம் காப்பாற்றப்பட்டு விட்டாலும், பிற ஜீவராசிகளுக்கும் ஆதாரமான நீர் இன்றியமையாததல்லவா? எனவே மழை வேண்டி யாகம் செய்தே தீரவேண்டும் சூழலில் தஞ்சை உள்ளது மன்னா! யாகத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைத் தொடங்குங்கள். நாளைக் கழித்து மறுநாள் சுபதினம். அன்றே யாகம் வைத்துக்கொள்வோம்.''
""ஆஹா! பாக்கியம் ஸ்வாமி'' என்றார் நெகிழ்ச்சியுடன் மன்னர்.
யாகம் அல்லது வேள்வி என்பது நன்மை பொருட்டும், தனிப்பட்டவர் வேண்டுதல் பொருட்டும் நடக்கும் புனிதமாகும். தீயினை ஏற்றி அந்த குண்டத்தினுள் பல்வேறு பொருட்களையிட்டு நெய்மூலம் நெருப்பு போஷிக்கப்பட்டு வளர்த்து இறைவனிடம் இறைஞ்சு வதே நோக்கமாகும். நெருப்பு சூரிய தேவதையின் பிரதிநிதியாகக் கருதப்படுகிறது. எந்த தெய்வம் அல்லது தேவதையைத் திருப்திப்படுத்த யாக வஸ்துகளை (சமித்துகளை) ஆகுதிசெய்து நெய் கொண்டு எரிக்க, அதை சூட்சுமமாக உரிய தேவதையிடம் சுமந்து செல்லும் யாகக் கடமையினை அக்னி தேவன் செய்விக்கிறான். மனிதருக் கும் இறைக்கும் நடுவே பாலமாயி ருந்து மகத்தான பணி செய்கிறான்.
ஸ்ரீராகவேந்திரர் யாக குண்ட மருகே அமர்ந்திருந்தார். குண்டத்தில் அர்ப்பணம் செய்யவேண்டியவை அனைத்தும் ஒன்றுவிடாமல் சேகரிக் கப்பட்டு பெரும் தாம்பாளங்களிலும் கூடைகளிலும் குவித்து வைக்கப் பட்டிருந்தன. உயர்தரமான பட்டு வஸ்திரமும் ஒரு தட்டில் இடம் பெற்றிருந்தது.
ஸ்வாமிகளைப் பார்க்கப் பார்க்க அங்கிருந்த ராஜபிரமுகர்களுக்கும் மக்களுக்கும் பெருமிதமாக இருந்தது. யாக குண்டத்தில் தீக் கொழுந்துகள் புகையில்லாது நிலையாக எரிந்துகொண்டிருந்தன. இடைவிடாது தொடர்ச்சியாக அறுந்து போகாத நூல்போன்று நெய்யினை ஸ்வாமி கள் தன் திருக்கரங்களால் வார்த்துக்கொண்டே இருந்தார். வாய் முணுமுணுத்துக்கொண்டே யிருந்தது. அவர் பார்வை குண்டத்திலேயே நிலைகுத்தி வேறெங்கும் பெயராதிருந்தது.
வெளியில் வானத்தில் மெல்ல மெல்ல கருமேகங்கள் திரளத் தொடங்கின. இத்தனை ஆண்டுகள் இல்லாத அதிசயமாகத் தெரிய மக்கள் உற்சாகத்துடன் வானம் பார்த்தனர்.
அரண்மனையில் யாகம் நடந்துகொண்டி ருந்தது. நேரமாக நேரமாக, நெய்த்தாரை அறுந்து போகாமல் தொடர, யாக கங்கு சிவந்து தீக்கொழுந்து இன்னும் உயர எழும்ப, வானம் மெல்ல குமுறியது. முதல்துளி நீர்முத்து மெல்லக் கிளம்பி, பின் வேகமெடுத்து பூமி தொட்டது. படிப்படியாக தூறல்கள் ஒன்றுசேர்ந்து பெருமழையானது. மழையுடன் காற்று கூட்டுசேர்ந்து கத்தியது. யாகத்தில் நெய்த்தாரை எப்படி அறுபட வில்லையோ அதேபோன்று நீர்த்தாரையும் அறுபடாது தனது பருமனை இன்றும் பெரிதாக் கிப் பெய்தது- பெய்தது- பெய்துகொண்டே யிருந்தது. வெடித்த பூமியில் நீர் உள்சென்று பலவீனமான அதன் நரம்பு களில் கலந்தது. எங்கெங்கும் நீர்.
மன்னருக்கு பேரானந் தம். தலைக்கு மேலாக தனது இரு கைகளை உயர்த்தி ஸ்வாமிகளை வணங்கினார்.
மெல்ல தன்னிலை திரும்பிய ராயர், கரமுயர்த்தி ஆசிர் வதித்தார். சந்தோஷ மிகுதி யில் தான் கழுத்தினில் அணிந் திருந்த விலையுயர்ந்த நவரத்தின ஆபரணத்தைக் கழற்ற, அருகிலிருந்த சேவகன் உடனடியாக அதனைத் தங்கத் தட்டினில் வாங்கினான். மன்னர் அதனை தட்டுடன் திரும்ப வாங்கி ஸ்வாமிகள் முன்பாக நின்றார்.
யாக குண்டம் முன்பு இன்னுமொரு யாக ஜுவாலையாக ஸ்ரீராகவேந்திரர் ஜொலித் துக்கொண்டிருந்தார். மன்னரது செய்கையில், "என்ன' என்பது போன்று ஸ்ரீராயரின் விழிகள் எழுந்து நிலை திரும்ப...
""எனது சிறு காணிக்கை. தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.''
""என்ன இது'' என்றார் ஸ்ரீராகவேந்திரர்.
""இந்த தஞ்சையையே இதற்கு ஈடாய் வைத்தாலும் காணாது. அப்படி விலையுயர்ந்த- எனக்குப் பிரியமான இந்த ரத்னாபரணத்தை நான் காணிக்கையாக்குகிறேன். தாங்கள் தயை கூர்ந்து ஏற்றுக்கொண்டு ராஜதம்பதிகளை ஆசிர்வதியுங்கள் ஸ்வாமி.''
ஸ்ரீராகவேந்திரர் மெல்ல புன்னகைத்தார்.
தனது கரங்களால் அந்த நவரத்தின மாலையை மெல்ல எடுத்தவர் சட்டென்று யாரும் யோசிக் கும் முன்னே யாகத்தீயில் விட்டெறிந்தார். மன்னரும் மகாராணியும் மற்ற பிரதானிகளும் யாருமிதை எதிர்பார்க்கவேயில்லை. அனைவரும் உறைந்தனர் அதிர்ச்சியில்.
மன்னருக்கு சட்டென்று கோபம் வந்தது.
"என்ன இது மரியாதைக் குறைவான செயல்! ஒரு மன்னன் என்ற மரியாதை கொஞ்சமும் இவரிடம் இல்லை. நம்மைப்போன்ற ஷத்திரியர் களுக்கு வீரப் போர்கள், உயிர்த்தியாகம், நாட்டு நலன் என்ற மேன்மையான போக்கினா லும், எப்போதும் உயிர் நிரந்தரமில்லை என்ற உணர்வினாலும் வாழ்க்கையும், அது சார்ந்த விலையுயர்ந்த எதுவுமே பெருமைப்படும் கௌரவத் தின் அங்கமாக மதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படி யிருக்கையில் இந்த சந்நி யாசி இதை கேவலப்படுத்தி விட்டாரே. செல்வத்தின் அருமை தெரியாத இந்த துறவியைப் பாராட்டி காணிக்கையாக்கினோமே?
ஆ... அந்த எனது ப்ரிய ஆபரணம் இந்நேரம் கருகி உருகிப் போயிருக்குமே. உயர்வான அந்த நவரத் தினக்கற்களும் கொதிக்கும் தீயினில் வெடித்திருக்குமே. போயிற்று போயிற்று. இனி வருந்தி என்ன பயன்!' என்று தன்னுள் தஞ்சை மன்னர் புலம்பலானார்.
மன்னரின் முகபாவம் மாறியதும், பிறகு சட்டென்று இருளடைந்ததும், பின் குழப்பமாக நிலைபெற்றுவிட்டதையும் ஸ்ரீராகவேந்திரர் பார்த்துக்கொண்டேயிருந் தார். பின் மறுபடியும் எதிர்பாராத நிகழ்வு ஏற்பட்டுவிட்டது.
ஆம்; ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள் சட்டென்று தனது கரத்தை யாக குண்டத்தில் விட்டார். சில நொடிகள் துழாவி கையை வெளியிலெடுக்க அதில் ரத்னாபரணம் மின்னியது. அது பழையது போலில்லாமல் புத்தம் புதியதாக மின்னியது. ஸ்ரீராகவேந்திரர் அதை மன்னரிடம் ஒப்படைத்தார்.
மன்னருக்கு என்ன செய்வதென்றே தெரிய வில்லை. "ஒரு தெய்வீகத்துறவியை அற்பனான நான் குறைவாய் மதிப்பிட்டுவிட்டேனே. எவ்வளவு பெரிய பாதகம் செய்துவிட்டேன்.' மன்னர் சடாரென்று ராயரை சாஷ்டாங்கமாக வணங்கினார்.
""அபச்சாரம் அபச்சாரம். என்னை மன்னியுங்கள் ஸ்வாமி. எப்பேற்பட்ட சக்தி படைத்த தங்களைப்போய் தவறாக எண்ணிவிட்டேனே. என்னை மன்னியுங்கள்'' என்று மன்னர் பதறினார். அவர் கண்கள் கலங்கிவிட்டன. கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது.
""எழுந்திரு மன்னா. முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். உலகத்தில் படைக் கப்பட்டவை அனைத்துமே ஆண்டவனின் உடமைகள். இடையில் வந்த மனிதர்கள் அவற்றை சொந்தம் கொண்டாடும் பேராசை குணத்தவராக விளங்குகின்றனர். நீ எப்போது உன்னிடமிருந்து எனக்களித்தாயோ அந்த கணமே அது உன்னுடையதல்ல. எனக்கு விருப்பமாய் நான் அதை ஆண்டவனுக்கு அர்ப்பணித்துவிட்டேன். உனது உள்ளத்தின் விபரீதப் போக்குணர்ந்ததனாலேயே அதை உன்னிடமே மீட்டுக் கொடுத்துவிட்டேன். ஆண்டவனுக்கே இதைப் பிடிக்கவில்லையோ என்னவோ?'' என்றவர் தன் முகப்பிரகாசம் மாறாது புன்னகைத்தார். மன்னர் அந்த பதிலில் நிலைகுலைந்தார். மறுபடி மறுபடி ஸ்வாமி களிடம் மன்னிப்புக்கேட்டார்.
""மன்னா, இதை மறந்துவிடுவதே நல்லது. போதும்; இந்த நிகழ்வு பற்றிய நினைவிற்கு இதோடு முற்றுப்புள்ளி வைப்பதே நன்று'' என்ற ஸ்வாமி மெல்ல எழுந்திருந்து வான் நோக்கி வணங்கினார்.
""தயைகூர்ந்து என்னை மன்னித்து மாலை யைத் தாங்கள் ஏற்றுக்கொண்டருள வேண்டும்'' என்ற மன்னரது கெஞ்சலுக்கு இணங்கி ஏற்றுக்கொண்டார். ஆறுகள், குளங்கள், ஏரிகள் என அனைத்து நீர்நிலைகளும் மழையால் நிரம்பி வழிந்தன. தஞ்சையின் பஞ்சம் தீர்ந்தது. ராகவேந்திரர் என்ற அந்த மகாசக்தியின் வியாபிப்பு தஞ்சையில் தண்ணீரின் ரூபத்தில் பரிபூரணமாக சூழ்ந்து மிளிர்ந்தது.
துங்கையில் அன்று நீரின் வேகம் அதிகமாயிருந்தது. பிச்சாலயா என்னும் அந்த கிராமத்தில், பனிசூழ்ந்த அந்த அதிகாலையில் அப்பண்ணா வெகு சீக்கிரமாய் எழுந்திருந்து, நதியில் நனைந்து மூழ்கி காலை சந்தியாவந்தனம் செய்து, பின் இரு கைகளாலும் நீரை அள்ளி சற்று உயர்த்தி, பின் நடுவில் கைகளை விலக்கி அர்க்கியம் விட்டார். மெல்ல நீரிலிருந்து மேலெழுந்து கரையேறினார். கடந்த இரவில் அவருக்கு சரியாக உறக்கமேயில்லை. மனதினில் அதீதமான ஏதோ ஏக்கமும் அழுத்த மும் இருந்துகொண்டேயிருந்தது. மனம் தன்னை ஆட்கொள்ளப்போகும் தனது குருவினை எதிர்நோக்குவதால் இந்த நிலையோ. "எங்கே இருக்கிறீர்கள் எனது குருவே. என்னை ஆட்கொண்டு என்னை சீடனாக்கி, அந்த ஸ்தானத்திற்கான லட்சணங்களை நான் எப்போது அடைவது?'
இப்போதெல்லாம் நித்திரை பூரணமாக அமைவதில்லை. பலவேளைகளில் நடுஜாமம் கடந்தும் நித்திரை வருவதில்லை. பிற சமயங் களில் தூக்கம் கலைந்தும், தொடர்பில்லாத சொப்பனங்களும் வந்துவிடுகின்றன.
காலைக்கடன்களும் ஜபதபங்களும் முடிந்து மாணாக்கர்களுக்கு போதிக்கும்போதும் ஆழ்மை வந்துவிடுவதில்லை. ஊன்றி கவனிக்கும் கனிந்த மாணாக்கர்கள் தனது முகத்தைக் கூர்மையாகப் பார்ப்பது கண்டு தன்னை சுதாரித்துக்கொண்டு மனதை பலவந்தமாய்க் கட்டுக்குள் கொணர்ந்து, மனதுள் ஆஞ்சனேயரின் தியான ஸ்லோகத்தைச் சொல்லி தன்னிலை வருவதும் வாடிக்கையாகிவிட்டது.
அதனாலேயே நேற்றிரவு முதலே தடுமாறும் மனதை காலைவரை கட்டுப்படுத்தி, இதோ நீரிலிருந்து அர்க்கியம் விட்டு கரம் குவித்து சேவித்து எழும்போது, கரங்களில் ஏதோ சேர்ந்ததைக்கண்டு கைகளைப் பிரித்துப் பார்க்க, ஒரு அழகிய சாளக்கிரமக்கல். இதென்ன விந்தை! சற்று பெரிதுமின்றி சிறிதுமின்றி நடுத்தரமாய் கருமை நிறத்தில் ந்ருசிம்ம ரூபத்தில் இருந்தது. அப்பண்ணாவுக்கு உடல் சிலிர்த்தது. முகமும் காது மடல்களும் சட்டென்று சூடாகி யது. "இறைவா! இது எதற்கான அறிகுறி? சொப்பனங்களின் விடையா அல்லது பின்னா ளில் நடக்கப்போகும் நிகழ்வுக்கு இது முன்னோட்டமா? அந்த இது என்பது என்ன? இறைவனே! எங்கோ பல்லாயிரம் மைல்கள் தாண்டி கண்டகி நதியில் இயற்கையாகக் கிடைக்கக்கூடிய இறை மூர்த்தங்கள் தண்ணீரில் அடித்துக்கொண்டு பயணப்பட்டு இங்குவர வாய்ப்பில்லையே. அங்ஙனமாயின் நரசிம்ம சாளக்கிரமம் எனது கரங்களுக்கு வர, இது எதையோ அல்லவா ஞாபகப்படுத்துவது போலுள்ளது. அதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு எனக்கு ஞானம் குறைவோ அல்லது...' என அவர் யோசித்தபடி படியேறி நடந்து நின்றபோது, அவரின் எதிரே நதி அருகில் ஸ்தாபிதம் செய்திருந்த நரசிம்மமூர்த்தியின் திருவுருவம் முன்பாய் தான் நின்றிருப்பதை உணர்ந்தார். அவர் உடல் சிலிர்த்தது. தனது கரங்களில் எடுத்துவந்த சாளக்கிரமத்தை மூலவரது பாதங்களில் சமர்ப்பித்து வணங்கி னார். "இறைவா, நீ எதையோ உணர்த்துகிறாய். என்னவென்று விளங்கவில்லை. ஆனால் ஏதோ ஒரு அற்புதத்திற்கு என்னைக் கருவியாக்குகிறாய் என்பது மட்டும் தீர்க்கமாக மனது நினைக் கிறது. அது நல்லதாகவும் சத்தியமானதாகவும் அமைய உன்னருள் வேண்டுமென்று பரிபூரணமாக வேண்டுகிறேன்' என உருகி வேண்டினார்.
அவர் கண் திறக்கவும், எதிரே ஆற்றருகில் குதிரையின் மீதிருந்து வெங்கண்ணர் இறங்கி இவரருகில் வந்து நின்றார். ""வாருங்கள் திவான் அவர்களே. நாம் மறுபடி உடனடியாய் சந்திப் பது ஏனோ மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
எனது உள்மனது உங்கள் வரவை எதிர்பார்த் ததோ என்னவோ'' என்றார் மகிழ்வுடன்.
""பொருத்தமாகவே சொன்னீர்கள். நான் இன்று சூரிய உதயம் முன்பாகவே எழுந்திருந்து அனைத்து ஜபதபங்கள் முடித்து படி ஏறினேன். இங்கு வரவேண்டுமென்று நான் சிறிதுகூட மனதளவிலும் எண்ணவில்லை. ஆனால் குதிரை எங்குமே நில்லாது, சொல்லி வைத்தாற்போன்று- நூல் பிடித்த பாதை போன்று இங்குவந்து நிற்கிறது.
வெகுநாள் காணாத- மறுபடி கண்டெடுத்த உறவைக்கண்ட மனநிறைவு. இதோ இப்போது உங்களைக் கண்டவுடன் நிறைவாயிருக்கிறது. நேற்றெல்லாம் எனது குரு ராகவேந்திர ஸ்வாமிகள் நினைவே இடைவிடாதிருந்தது'' என்றார் வெங்கண்ணா. ஸ்ரீராகவேந்திரர் என்ற திருநாமத்தை தனது காதால் கேட்டவுடனேயே அப்பண்ணா ரோமாஞ்சனமானார்.
""ஆஹா... அந்த மகானின் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே மனது நிம்மதி யுறுகிறது. உடலுள் மெல்லிய அதிர்வுகள் உண்டாகின்றன. ஏனோ கண்கள் அனிச்சை யாகக் கலங்குகின்றன. நானும் அவரை மானசீக மாக எனது குருவாக ஏற்று வணங்குகிறேன். அவரது திருமுகத்தைக் கண்ணுறும் பாக்கியம் எப்போது கிடைக்கும் என்று அந்த நன்னாளை நோக்கி மனது ஆவல் கூட்டி எதிர்நோக்கு கின்றது'' என்றார். அவரின் கண்கள் பரவசத் தில் பனித்தன. தனது கைகளுக்கு சாளக்கிரமம் வந்ததையும் அவரிடம் கூறினார்.
""ஆஹா... ஏதோ ஒரு நிகழ்வுக்கான ஆரம்பம் சூட்சுமமாக உங்களுக்கு உணர்த்தப்பட்டிருக் கிறது. ஏதோ ஒரு உன்னதம் நடக்க இருக் கிறதுபோல் தெரிகிறது. என்னைப் போன்றோ ரையும் இதில் இணைத்துக் காட்சிப் பிழையாக்காமல் காட்சிக்கான சாட்சியாக்க இறைவனின் விருப்பமோ என்னவோ? இல்லையெனில் இந்த நிகழ்வினை உங்களுக்கு உருவாக்கி இன்றே நம்மை சந்திக்க வைத்திருப் பதும் இறைவனின் விருப்பம் போலும். ஓம் ஸ்ரீராகவேந்திராய நமஹ...'' என மனதுருகி வணங்கினார்.
ஆட்கொண்டு விடுவதென்பது பவித்திர மான ஒன்று. உயர்ந்தவர்களுக்கும், ஞானவான்களுக்கும், புண்ணிய கர்த்தர்களுக்கும், ஊசி முனையளவும் எதிர்பார்ப்பில்லாத இறைதேடும் உன்னத ஆத்மாக்களுக்கும் மட்டுமே இது நிகழ்ந்துவிடும். இங்கு யாரிடமும் ஏதும் எதிர்பாராது, பிறந்திருப்பதே சேவை யின் பொருட்டு என்பதாய், தனக்கான பாதையினை நிர்மாணித்துக்கொண்ட அப்பண்ணாவுக்கு அதுபோன்ற உன்னதம் நிகழப்போவது அவருக்கே தெரியாது. வருங்காலத்தில் தான் ராயரின் ப்ரிய சீடராகி, அவரைப் பிரியாது நிழலாக இருந்து சேவை செய்து, உரிய காலத்தில் ஸ்ரீராகவேந்திரர் வரலாற்றில் தானே ஒரு அற்புதமாக முதலில் அருளப்படப்போவதும் தெரியாது. அந்த சுத்த பிராமணர் தனது தினக்கடமையைச் செய்யலானார்.
ஸ்வாமிகளின் கீர்த்தி வாயு வேகமாய் எங்கெங்கும் பரவியது. ஜகத்குருவல்லவா. மதகுருவான- வாயுகுமாரன் அம்சமான அனந்த தீர்த்தர் என்கின்ற ஸ்ரீமத்வரின் போதனைகளை இன்னும் செம்மைப்படுத்தி, மக்கள் மனதில் பதியும்படி செய்தார். மகாகுருவான ஸ்ரீராகவேந்திரின் புகழ் சூரியனைப் போன்று ஜெகமெங்கும் நீக்கமறப் பரவியது. தினம்தினம் ஸ்வாமிகள் அதிகாலை எழுந்திருந்து நீராடி தனது அன்றைய தின பூஜாக்கிரமங்களை வழுவாது செவ்வனே செய்யலானார். வெறுமனே அவரின் உதடுகள் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டேயிருந்தன. அவரின் ஜீவநயனங்களில் ஒளி கூடிக்கொண்டே இருந்தது. ஸ்ரீமடத்தில் மாலை வேளைகளில் தரிசனத்திற்கு வருகின்ற பக்தர்கள், பலபொழுதுகளில் ஸ்ரீஹரி வாயு ஸ்துதியினை உரக்கச் சொல்லியும், சகஸ்ர நாமாவளிகளையும் நின்று நிதானமாய் உச்சரிப்போர்கள் தங்கள் இருப்பை இதன்மூலம் ஸ்திரப்படுத்தவே முயன்றனர்.
அவர்களெல்லாம் தினசரி ஸ்ரீமடம் வரவர மனப் பக்குவப்பட்டனர். உரக்க உச்சரித்தவர்கள் பின்னர் சப்தம் குறைந்து மெதுவாகினர்.
பின்னர் இன்னுமின்னும் இளைத்து கடைசியில் மனதுள் மனனம் செய்து மௌனத்தை மடத்தில் கடைப்பிடித்தனர். ஸ்ரீராயர் மாலைப்பொழுதில் அனுஷ்டானம் முடித்து பல பொழுதுகளில் கண்மூடி தியானத்தில் அமர்ந்துவிடுவார். நன்கு மெழுகிட்ட விசாலமான கூடத்தில் ஓரடி உயர மர முக்காலியில், இருபக்கங்களிலும் சிறு குத்துவிளக்குகளின் ஒளியில் காவி போர்த்திய சூரியனாய் கண்மூடி அமர்ந்திருப் பதைக் காண கண்கோடி வேண்டும். அந்தக் கூடத்தில் இருட்டினில் தகதகத்து ஒளிரும் அந்தக் காட்சிக்காகவே- மாலை தரிசனத் திற்காக நிரம்ப பக்தர்கள் திரளாய் வரலாயினர்.
சாரங்கபாணி கோவிலின் மணியோசை மெல்ல காற்றில் கனமாய் வந்தபிறகே ஸ்ரீராகவேந்திரர் பலபொழுது தன் நிலை திரும்பியிருக்கிறார். இதேபோன்று அன்று வியாழன் மாலை மங்கியபொழுது ஸ்ரீராயர் தனது குருவின் திருமுகத்தினை மனதுள் இறுத்தி வணங்கி, பத்மாசனத்தில் அமர்ந்தவர் மெல்ல மெல்ல தன்னுள் ஆழ்ந்த சலனமற்று வெற்றுவெளியில் நிசப்தத்துடன் உருகிப் போய்க் கொண்டேயிருந்தார். எவ்வளவு மணி நேரம் ஆழ்ந்திருந்தார் என்பது தெரியவில்லை. நயனம் திறந்தவுடன் தனக்கு முன்பாக பவ்யமாக ஸ்ரீமடத்துப் பணியாள், கைகளால் வாய்பொத்தி நின்றிருந்தவனைக் கண்ணுற்றவர்,
அவன் நெடும்நேரம் நின்றிருக்கிறான் என்பதை அனுமானித்தார்.
""என்னப்பா கோவிந்த். நீ வந்து வெகுநேரம் ஆயிற்றோ? நான் உன்னைக் காக்கவைத்து விட்டேன் போலுள்ளது.''
கோவிந்த் பதட்டமடைந்தான். ""பெரிய வார்த்தைகள் ஸ்வாமிகள் உதிர்த்தது. தங்களது முக தரிசனத்தை இவ்வளவு நேரம் தனியொருவனாக தரிசனம் செய்து கொண்டிருந்தமைக்கு நான் எவ்வளவு பாக்கியம் செய்திருக்கவேண்டும். இதற்குத் தங்கள் அனுக்கிரகமும் பெற்ற நான் பெரும் பேறு பெற்றவனானேன். ஸ்வாமிகள் என்னை ஆசிர்வதிக்க வேண்டும். பிறகு...''
""சொல். என்ன விஷயமாய்க் காத்திருக்கின் றாய்?'' என்றார்.
""தங்கள் தரினத்திற்காக முக்கியஸ்தர்கள் வந்து காத்துக்கொண்டிருக்கின்றனர். யதிகள் தியானத்தில் இருப்பதைக் கூறியும், "கால தாமதமானாலும் பரவாயில்லை. நாங்கள் காத்திருக்கின்றோம்' என்கின்றனர் ஸ்வாமி களே.''
""சரி; அவர்களை அழைத்து வா. இரவு அவர்களுக்கும் சேர்த்து உணவு தயார் செய்துவிடுங்கள்'' என்றவர் தன்னுள் மெல்லிய படபடப்பை உணர்ந்தார்.
இருட்டினில் ஸ்வாமிகளின் அறையினுள் சிறிது தள்ளாமையுடன் கோலூன்றி நடந்து உள்வந்து, யதிகளின்முன் சாஷ்டாங்கமாக விழுந்து எழுந்த அந்த நெடிய உருவம் மறுபடி யும் இரு கரங்களைக் குவித்து வணங்கியது.
""தாங்கள் தாங்கள்...'' ஸ்வாமிகள் தன் படப்படப்பு கூடுவதை உணர்ந்தார். அந்த உயர்ந்த தேகம் கொண்ட வயது முதிர்ந்தவர் வெளிச்சத்தில் வரவும் ஸ்வாமிகளின் பார்வை யில் பட்டார்.
""யதிகள் என்னை நன்கறிவார். நான் தங்களது பூர்வாஸ்ரம தமக்கையின் கணவர். நரசிம்மாச்சார்யார்'' என்றார்.
""ஆஹா! தாங்களா? தாங்கள் என்னை வணங்கலாமா? எனது ஆசானுமல்லவா தாங்கள். இது அபச்சாரமல்லவா.''
""அல்ல யதிகளே. தாங்கள் மத்வ பீடத்தின் பீடாதிபதி. பீடாதிபதிகள் சந்நியாச தர்மத்தில் நிலைநின்று கடமைகளை மக்கள் பொருட்டு நிறைவேற்றும் ஞானிகள். தங்களை வணங்கு வது எனக்குப் பெருமையாக இருக்கிறது. மேலும் இது மரபும்கூட அல்லவா'' என்றார் நரசிம்மாச்சார்யார். தனது பூர்வாஸ்ரம மாணவன் இந்த மத்வ சாம்ராஜ்யத்து தலைமை பீடாதிபதியாகப் பார்க்கையில் பெருமிதமாக இருந்தது. என்னவென்று விளங்காத சந்தோஷ மௌனம் சிறு நிமிடங்கள் கடக்க... நரசிம்மாச் சார்யாரே மறுபடி பேசலானார்.
""தங்களைப் பார்க்க இன்னும் பல முக்கியஸ் தர்கள் ஆவலாய் இருக்கின்றனர்'' என்றார்.
""அவர்களும் உள்ளே வரலாமல்லவா'' என்றார் ஸ்வாமிகள்.
(தொடரும்)